Saturday, January 1, 2011

மெதுவா, வேகமா, மெதுவா, மெதுவ்வ்வா!

இந்தியாவில் இருந்தவரை காரை வெறும் தொட்டு மட்டுமே பார்த்திருந்ததால், இங்கு வந்த புதுசில் நெடுஞ்சாலைகளில் வண்டி ஓட்டவே பயமாயிருக்கும். திருமணத்தின்போது ஜானவாசம் வைக்காமல் (ஏமாற்றி) விட்ட மனைவி குடும்பத்தினரை நினைத்தோ என்னவோ, வண்டி மெதுவாவே ஓட்டுவேன். தவிர, பெரிய பெரிய லாரிகள் (இந்த ஊர்லே ‘ட்ரக்குகள்’) நம்மை சர்வசாதாரணமாய் கடந்து செல்லும்போது - நயனிடம் ஒட்ட முயற்சிக்கும் பிரபுதேவா மாதிரி என் ச்சின்ன வண்டி அந்த லாரியின் பக்கத்தில் போகும். அந்த சமயத்தில் நான்தான் ரமலத் மாதிரி அந்த ஒட்டுற வேலை கூடாதுன்னு பிரிச்சி ஒழுங்கா என் பாதையில் ஓட்டுவேன்.

அப்புறம் கொஞ்ச கொஞ்சமா பயம் தெளிந்த பிறகு, வண்டி படுவேகமா ஓட ஆரம்பிச்சுது. உச்ச வேக வரம்பு 65 மைல்கள் இருக்கும்போது, வண்டி எப்பவும் 80லேயே போகும். மனைவியும், என்னங்க - 65தானே போட்டிருக்கு, நீங்க 80ல் போறீங்களேன்னுவாங்க. நானும் - அந்த 65 நமக்கில்லேம்மா. பச்சை அட்டை வெச்சிருக்குறவங்களுக்கும், அமெரிக்க நிரந்தர குடியுரிமை பெற்றவங்களுக்கு மட்டுமே 65 பொருந்தும். சும்மா வேலை செய்யற விசாவில் இருக்குற நமக்கெல்லாம் அது கிடையாதுன்னு சமாதானம் சொல்வேன்.

அப்புறம் ஒரு நாள் இரவு 11 மணி - வழக்கம்போல் 80ல் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறேன். பக்கத்தில் மனைவி. அருமையான காற்று. ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமேன்னு பாடியவாறே பின்னால் பார்த்தால், யாரோ ஒருவர் என்னை துரத்திக்கொண்டே வந்தார். என் வேகத்தை எட்டமுடியாமல் தோற்றபிறகு, விளக்கடித்து பின்னர் அபாயமணியும் ஒலிக்க ஆரம்பித்தார். சரிதான், ஏதோ ஆபத்தில் மாட்டிக்கிட்டாரு போல, போய் காப்பாத்தலாம்னு வண்டியை நிறுத்தினேன். கடைசியில் பார்த்தால், நம் சொந்தக்கார்தான், அமெரிக்க மாமா. எங்கே இவ்வளவு அவசரமா போறீங்கன்னார். நெடுஞ்சாலை I-87ல் 80யில்கூட போகமுடியாதான்னு நான் கேட்ட கேள்வி, என் தொண்டையை விட்டு வெளியே வராததால் அவருக்கு கேட்கவில்லை. என் வரலாற்றையே சோதித்தபிறகு, $150 கட்டிடுங்கன்னு சொல்லிட்டு போயிட்டார்.

அந்த சம்பவத்திற்குப் பிறகு, என் வண்டியில் ஒரு புது ப்ரேக் உருவானது. என் காலில் ஏற்கனவே இருந்த ஒன்றோடு, பக்கத்து இருக்கையிலும் ஒன்று உருவானது. அட, என் மனைவிதாங்க. ஒரு கண்ணை சாலையில் தெரியும் அதிகபட்ச வேக அறிவிப்பிலும் (a), இன்னொரு கண்ணை வண்டியின் வேகத்திலும் (b) வைத்தவாறே வருவார். (a)விட (b) அதிகமாகிவிட்டால், நெற்றிக்கண்ணை என் மேல் வைத்து எரிப்பார்.

இப்படியாக, மெதுவாக ஆரம்பித்து (முதல் பத்தி), வேகம் பிடித்து (இரண்டாம் பத்தி), பின்னர் மாமாவால் ஒரு தடவை நிறுத்தப்பட்டபிறகு (மூன்றாம் பத்தி), வண்டியின் வேகம் மனைவியால் குறைந்தது (நான்காம் பத்தி).

இதன் விளைவு, இப்போல்லாம் என்ன நடக்குதுன்னா -


நெடுஞ்சாலையில் நான் தனியா போயிட்டிருப்பேன். பின்னாடி பார்க்கும் கண்ணாடியில் பார்த்தால், நிறைய வண்டிங்க வந்துட்டிருக்கும்.


மெதுவா அவை எல்லாம் என்னைக் கடந்து முன்னாடி போயிட்டிருக்கும்.


கொஞ்ச நேரத்தில் எல்லாரும் கடந்துவிட, மறுபடி நான் மட்டும் தனியே போயிட்டிருப்பேன்.


*****

சரி எனக்கும் ஒரு காலம் வரும். மறுபடி வேகமெடுப்பேன்னு சபதம் போட்டுட்டு அதுவரை ‘ஆஹா இன்ப நிலாவினிலே...’.

*****

6 comments:

வடுவூர் குமார் January 1, 2011 at 11:31 AM  

நம்மூர் சாலைகளில் வண்டி ஓட்டிப்பாருங்க அங்கு கிடைக்கும் திரில் இங்கு வேறு விதத்தில் கிடைக்கும்!!
திருந்தவே முடியாத நிலமையை நோக்கி நாம் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறோம்.

பழமைபேசி January 1, 2011 at 11:31 AM  

அண்ணே... புத்தாண்டு வாழ்த்துகள்

பழமைபேசி January 1, 2011 at 11:32 AM  

//திருந்தவே முடியாத நிலமையை நோக்கி நாம் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறோம்.
//

அவ்வ்வ்.... எங்கு நோக்கினும் புலம்பல் நெடியாவே இருக்கு.... இஃகி!

Unmaivirumpi January 1, 2011 at 11:47 AM  

இது நடந்து பல வருஷம் ஆச்சே , நான் பின்னாடி இருந்தேன் அப்படின்னு போட்டு எனக்கு ஒரு பப்ளிக்கிட்டி கொடுத்திருக்கலாமே (எனக்கு விளம்பரமே பிடிக்காது)

Mahesh January 2, 2011 at 12:40 AM  

எது எப்பிடியோ..... 2011 புத்தாண்டு நிதானமாவே போகட்டும்.

முத்துலெட்சுமி/muthuletchumi January 2, 2011 at 7:37 AM  

நிதானத்துல ஒரு கேவலமும் கிடையாது.. நல்லது நிதானம்.:)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP