ஓடிட்டிங் குறுங்கதைகள் : பகுதி ஒன்று.
மென்பொருள் துறையில் ஓடிட்டிங் (இனிமேல் தணிக்கை) பிரிவில் சிலபல ஆண்டுகளாக வேலை செய்ததில் பலரை சந்தித்து பேட்டி கண்ட அனுபவங்கள் சிலவற்றை சொல்லலாம்னு...
முதலில், அதிகம் பேசும் ப்ராஜெக்ட் மேனேஜர்கள்.
ஒரு ஸ்டாம்பை வடிவேலு காட்டியதும், இந்தியாவிலிருந்து இங்கிலாந்து வரை பேசும் மேனேஜர் சீனா போல், நம்மகிட்டே யாராவது பேசமாட்டாங்களான்னு சில PMs காத்திருப்பாங்க. அந்த சமயம் பார்த்து நாம (தணிக்கையாளர்) போய் மாட்டினா, அவ்வளவுதான். பேசிப் பேசியே நேரத்தை கழிச்சிடுவாங்க. நாமதான் சூதானமா இருந்து அப்பப்போ ‘Cut. Fast forward’லாம் சொல்லணும்.
உதாரணத்திற்கு: தணிக்கையில் முதல் கேள்வியாக - உங்க ப்ராஜெக்டைப் பற்றி ஓரிரு நிமிடங்களில் நல்லா விளக்கி சொல்லுங்கன்னு சொன்னா போதும். ஆதௌ கீர்த்தனாம்பரதரத்தில்னு ஆரம்பிச்சிடுவாங்க சில PMs.
1857ல் முதல் சுதந்தரப் போர் துவங்கியபோது என்ன நடந்ததுன்னா...
கட் கட்.. அவ்ளோ தூரம் போகவேண்டாம். இன்னும் கொஞ்சம் பக்கத்தில் வாங்க..
1889ல் நம்ம நேரு பிறந்தபோது...
சார் சார். இன்னும் கொஞ்சம் இறக்கம் காட்டுங்க...
1919ல் ஜாலியன் வாலா பாக் சம்பவத்தில்..
நோ நோ..
1947ல் இந்திய சுதந்தரம்?
இன்னும்..
1991ல் ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூருக்கு..
பக்கத்துலே வந்துட்டீங்க..
2002?
அய்யய்யோ. அந்த வருடம் மட்டும் வேண்டாம். மேலே மேலே
2014ல் பொதுத் தேர்தல் நடந்தபோது...
யெஸ். அதிலிருந்து வாங்கன்னு கதைச்சுருக்கத்தைக் கேட்டு தணிக்கையைத் தொடர வேண்டியிருக்கும்.
இரண்டு மார்க் கேள்விக்கு இரண்டு பக்கங்களில் எதையாவது எழுதி ரொப்பும் பசங்களைப் போலவே இவங்களும் அதிகமா பேசுவாங்க. 50+ கேள்விகள். 2 மணி நேரத்தில் முடிக்க வேண்டிய தணிக்கையை இவங்க பேசிப்பேசியே 3 மணி நேரத்துக்கு இழுத்துடுவாங்க. தேவையில்லாத இந்த தகவல் மழையினால், நமக்குத் தேவையான சில முக்கியமான தகவல்களை விட்டுவிடக்கூடிய அபாயம் இருப்பதால், அவங்க பேச்சையும் கவனத்துடன் கேட்கவேண்டிய கட்டாயம் வந்துடும். அதனால்தான் மேலே சொன்னதெல்லாம்...
இதுக்கு எதிர்ப்பதமாய் வேறு சிலர் இருப்பாங்க... வாயைத் திறந்து நம்ம கையை விட்டு பதிலை இழுக்க வேண்டியிருக்கும். அவர்களைப் பற்றியும் மற்றும் சில சுவாரசியமான சம்பவங்கள் குறித்தும் அடுத்தடுத்த பதிவுகளில்...
***
1 comments:
nimbal ki kalyanam 2002 ah?
Post a Comment