Cinema Paradiso
எச்சரிக்கை: இது ஒரு அக்மார்க் சுயபுராண (சோக கொசுவத்தி!) இடுகை. டமாஸ் 'மாதிரி'க்கூட இருக்காது.
*****
நண்பர் ஜாக்கி சிபாரிசு செய்யும் ஆங்கில / உலகத் திரைப்படங்களை எங்க ஊர் நூலகத்தில் தேடி வாங்கி பார்ப்பது வழக்கம். பார்த்தே ஆக வேண்டிய படம்னு அவர் சொன்னது எல்லாமே முற்றிலும் நிஜம்தான்றது இதுவரைக்கும் நான் கண்ட உண்மை. மிக்க நன்றி ஜாக்கி!
அவரு சிபாரிசு செய்யறதுலே 18+ படங்களை மட்டும் நான் தேடிப் பார்க்கிறேன்னு சிலர் நினைக்கலாம். ஆனா அது தவறு!!!.
அப்படி அவர் போன மாதம் சொன்ன படம் சி.பா. மூன்று வாரங்களாக முன்பதிவு செய்து வைத்து நேற்றைக்குத்தான் கைக்கு கிடைத்தது.
பார்த்தேன்...
ரசித்தே...
சிரித்...
அழு...
திரைப்பட விமர்சனத்தை ஜாக்கி அண்ணன் சொல்லிட்டாரு. அதுக்கு மேலே imdbயிலேயும் இருக்கு. நாம வேறே ஆங்கிள்லே இதைப் பத்தி பார்ப்போம்.
இந்த திரையரங்கத்திற்கு வெளியே ஒரு பெரிய உலகம் இருக்கு. இங்கேயே உன் வாழ்க்கையை கழித்து விடாதே. ரோமுக்குப் போ. உழை. பெரிய ஆளாக வேண்டும். திரும்பி வரவே கூடாது. அப்படி வந்தாலும் என்னைப் பார்க்காதே - என்றெல்லாம் சொல்லி நாயகனை ஊக்குவித்து, ஊரை விட்டு அனுப்புகிறார் ஆல்ஃப்ரெடோ. அப்படிப்போன அந்த நாயகன், ஒரு வெற்றிகரமான இயக்குனரா திரும்பி வர்றாரு.
மேற்கண்ட வசனங்களைக் கேட்ட பிறகு - இதே மாதிரி இதற்கு முன்னால் எங்கேயோ கேள்விப்பட்டிருக்கிறோமே என்று யோசித்துப் பார்த்தேன்.
சில வருடங்களுக்கு முன் படித்த - மைண்ட் ட்ரீ நிறுவனர் சுப்ரடோ பக்ஷியின் (Mindtree - Subroto Bakshi) ஒரு உரையென்பது நினைவுக்கு வந்தது. நோய்வாய்ப்பட்டிருந்த அவரது தாய் - என் பக்கத்தில் உட்கார்ந்து அழுதுகொண்டிருக்காமல், வெளியே போய் வேலையைப் பார் - Go kiss the world - என்றிருக்கிறார். அவரது முழு உரை இங்கே இருக்கிறது.
இப்படி நாயகனுக்கு அவனது நண்பன் ஆல்ஃப்ரடோவும், சுப்ரதோவுக்கு அவரது அம்மாவும் இருந்தமாதிரி நமக்கு யாராவது உந்துசக்தி கொடுத்தாங்களான்னு யோசித்தேன்.
உடனே நினைவுக்கு வந்தவர் - வேறு யார் - அப்பாதான்.
அப்போது டைப்பிஸ்டாக ஒரு ச்சின்ன அலுவலகத்தில் இருந்தேன். திடீரென்று ஒரு நாள் அலுவலகத்திற்கு வந்த அப்பா, என் டேபிளில் ரூபாய் பதினாராயிரம் வைத்து (4 பேரிடம் கடனாக வாங்கியது) - உடனே போய் ஒரு கணிணி பயிற்சிக்கு கட்டிட்டு வா, நாளையிலிருந்து போய் படி - என்றார். இந்த வேலை சரிப்படாது, எதிர்காலத்தில் கணிணிதான் எல்லாத்துக்கும் (சொன்ன வருடம் 1994).
உடனே இரண்டு வருட கணிணி பயிற்சியில் சேர்ந்தேன். அந்த பயிற்சி முடிக்கும் முன்னரே, குருவாக இருந்த பிதா, தெய்வத்திடம் போய்விட்டார்.
பிறகு உந்துசக்தியாக இருப்பார்கள் என்று எதிர்பார்த்த உறவினர்கள் சிலர் சற்று பிந்தி நின்றும், வேறு சிலர் பக்கத்து சந்தில் மறைந்து நின்றும் வேடிக்கை பார்த்தார்கள்.
சரி. மறுபடி சினிமாவுக்கு வருவோம்.
என் தந்தையுடன் (என்னுடைய) சிறிய வயதில் நிறைய சினிமா பார்த்திருக்கிறேன் - ஆங்கிலம் (சார்லி சாப்ளின், லாரல் ஹார்டி), இந்தி சினிமாக்களோட சில தமிழ் படங்களும். திருவல்லிக்கேணி ஸ்டார் திரையரங்கத்தில் 'முகல்-ஏ-ஆசம்' பார்க்கச் சென்ற போது நடந்த
சம்பவம் இன்னும் நினைவில் பசுமையாக உள்ளது.
அன்றைக்கு தியேட்டரில் சரியான கும்பல். படம் ஹவுஸ் ஃபுல்னா பாத்துக்குங்க. படத்தை முதல் ரீல்லேந்து பாக்கணும்னு அடிதடி செய்து உள்ளே போயிட்டோம். படமும் ஆரம்பிச்சுது. முதல் பாட்டு வந்துச்சு. (ஒரு 6 - 7 சூப்பர் ஹிட் பாட்டுகள் இருக்குன்னு நினைக்கிறேன்). எங்கப்பா - ஹீரோ, ஹீரோயினோட சேர்ந்து கத்தி பாட ஆரம்பிச்சிட்டாரு.
நானோ பயங்கர டென்சனாயிட்டேன். நான் இவரோட வரலை, இவர் யாரோ நான் யாரோன்னு சொல்லிடலாம்னு யோசனை பண்ணிட்டே இருந்தேன். திடீர்னு பாத்தா அரங்கத்தில் நிறைய பாடகர்கள் உருவாயிட்டாங்க. குறைந்த பட்சம் ஒரு 20 - 30 பேர் பாட ஆரம்பிச்சிட்டாங்க. ஒவ்வொரு பாட்டுக்கும் பயங்கர சத்தம். எல்லோருக்கும் எல்லாப் பாட்டும் மனப்பாடம். மதுபாலாவோட திரையில் சேந்து பாட முடியாத சோகத்தை பெரிசுங்க திரையரங்கத்துலே பாடி தீர்த்துக்கிட்டாங்க.
இடுகையை முடிச்சிட வேண்டியதுதான்.
இந்த திரைப்படத்தின் கடைசியில் நாயகன் - ஆல்ஃப்ரெடோ கொடுத்த பரிசைப் பார்ப்பது போல் ஒரு காட்சி. முதலில் புரியாவிட்டாலும், அந்த பரிசு என்னவென்று புரிந்தபிறகு - சான்ஸே இல்லே சான்ஸே இல்லேன்னு சொல்லிக் கொண்டு - ஒவ்வொரு தடவை என்னுடைய Aptech சான்றிதழைப் பார்க்கும்போது கண்கலங்குவது போலவே - நாயகனுடன் சேர்ந்து நானும் கண்கலங்கினேன்.
*****
17 comments:
:-)
உங்கள் நினைவுகள் எங்களையும் நெகிழ வைக்கின்றன சின்னப் பையன்!
முகல் ஏ ஆஜம்ல எல்லாப்பாட்டு ஹிட்டாச்சே. எங்கம்மா விவித்பாரதில அடிக்கடி கேப்பாங்க
நெகிழ்ச்சியான பதிவு சத்யா..
இந்த பதிவு என் மனதை நெகிழ வைத்தது உண்மை.இதே போல என் வாழ்விலும் நடந்ததால் இந்த பதிவு ஒரு Deja Vu போல இருந்தது.நன்றி.கொஞ்ச நேரம் நெகிழ்ச்சியான தருணங்களை நினைவு படுத்த உதவினீர்கள்.
அருமை சத்யா... நெகிழ்ச்சியா இருக்கு :)
சூப்பர் அப்பு...
அருமை.. அருண்.. ஒரு சிறந்த திரைப்படத்தின் வெற்றி. அவரவர் வாழ்க்கையை நினைவுக்கு கொண்டு வரும் போதுதான்.
மிக அருமையான பதிவு.
நெகிழ்வாகவும் எழுதுறீங்களே!
//குருவாக இருந்த பிதா, தெய்வத்திடம் போய்விட்டார்.
பிறகு உந்துசக்தியாக இருப்பார்கள் என்று எதிர்பார்த்த உறவினர்கள் சிலர் சற்று பிந்தி நின்றும், வேறு சிலர் பக்கத்து சந்தில் மறைந்து நின்றும் வேடிக்கை பார்த்தார்கள்.//
உங்களுக்கும் அப்படித்தானா?
அருமையான பதிவு.
A good one
நல்லா இருந்தது. எல்லாரும் அம்மா செந்திமெண்ட் போடும் போது..... நல்லாருக்கு!
/
வெளியே ஒரு பெரிய உலகம் இருக்கு. இங்கேயே உன் வாழ்க்கையை கழித்து விடாதே.
/
blogger-க்கு வெளியவும் ஒரு பெரிய உலகம் இருக்குல்ல
வர்ட்டா!
:))
பதிவு அருமை.
//அவரு சிபாரிசு செய்யறதுலே 18+ படங்களை மட்டும் நான் தேடிப் பார்க்கிறேன்னு சிலர் நினைக்கலாம். ஆனா அது தவறு!!!.//
நான் நம்பிட்டேன்னு சொன்னா நம்பவா போறிங்க!
உங்கள் தந்தையை குருவாக இருந்த பிதா என்று சொன்னது மிகச்சரி!
<< உந்துசக்தியாக இருப்பார்கள் என்று எதிர்பார்த்த உறவினர்கள் சிலர் சற்று பிந்தி நின்றும், வேறு சிலர் பக்கத்து சந்தில் மறைந்து நின்றும் வேடிக்கை பார்த்தார்கள்.>> என்னே ஒரு நிதர்சனம் ! இப்பதான் ட்வீட்டர் லின்க் மூலம் இந்த பதிவைப் பார்த்தேன்........மிகுந்த மகிழ்ச்சி!
2009 ல் போட்ட பதிவை இன்று காணும் சந்தர்பத்தை கொடுத்த உங்களுக்கு நன்றி.மனத்தை என்னமோ செய்கிறது.வழிகாட்டியா இருந்த அப்பா கடைசிவரைக்கும் கூடவரவில்லை என்றால், அவருடனான நம் காலங்கள் என்றைக்குமே நினைத்து நினைத்து நெகிழக்கூடியதுதான்.மறக்க முடியாத தந்தை மறக்கமுடியாத திரைப்படம். 7 வருடங்கள் காதல வாழ்க்கையின் பின் திலிப்குமாரும் மதுபாலாவும் பிரிகிறார்கள்.இருந்தாலும் மதுபாலா தொடர்ந்து முயர்ச்சித்துக்கொண்டிருக்கிறார். கடுமையான நோயால் படுத்த படுக்கையிலும் எழுந்துவந்து காதலுக்கு என்ன பயம் என்ற பாட்டில் வந்து அற்புதமாக ஆடிவிட்டு வேதனையில் போயபடுத்தார்.அவர்களின் வாழ்க்கையில் நடந்து கொண்டிருந்த உண்மை சம்பவம் படத்திலும் அமைந்ததை அன்றைய பத்திரிகைகள் வெகுவாக விவரித்திருந்தன. நன்றி வாழ்த்துகள்
Post a Comment