Tuesday, October 12, 2010

ஒரு கால்-செண்டரில் 700 விடியல்கள்!

எ.பு. (எந்திரன் புறக்கணிப்போர்) சங்கத்தில் இருப்பவர்கள் கேட்கும் முக்கியமான கேள்வி - காலை 4 மணிக்கு வேலைக்குப் போவியா? ஹிஹி. நானும் அந்த சங்கத்தில் நிரந்தர உறுப்பினர் என்றாலும், அந்தக் கேள்வியை கேட்கமாட்டேன். ஏன்னா, நான் ஒரு காலத்துலே 2 மணி, 3 மணிக்கெல்லாம் வேலைக்குப் போனவன். அட மதியத்தில் இல்லேங்க.. விடியற்காலையில்.. அதுவும் ஒரு நாள் ரெண்டு நாள் இல்லே.. ரெண்டு வருஷம் இப்படி வேலை செய்தேன்.


சீனாலே யுவான் சுவாங் கூப்பிட்டாக, ஆஸ்திரேலியாவில் ஆப்பம் சுட கூப்பிட்டாகன்னு கசமுச கசமுசன்னு எல்லோரும் பேசிட்டிருக்கிற ஒரு கால் செண்டர். அதில் நாங்க மென்பொருள் நிபுணர்கள். சீனா, ஆஸ்திரேலியான்றதால் இந்தியாவில் விடியற்காலையிலேயே ஷிஃப்ட்.


நாங்க தங்கினது எங்க அலுவலக விடுதியில். ஒரே கட்டிடத்தில் 25-30 (ஆண்) பிரம்மச்சாரிகள். எல்லாரும் வெவ்வேறே வேலை நேரத்தில் அலுவலகம் போய் வருவோம். பகல் நேர வேலைக்குப் போனவர்கள் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு, தொகா பாத்துட்டு, மிட்நைட் ஸ்பெஷல்(!!) பார்த்துவிட்டு தூங்கப் போற நேரத்துலே, நானும் இன்னொரு நண்பரும் அலாரம் வெச்சி எழுந்துப்போம். பளிச்சுன்னு குளிச்சிட்டு 1 மணிக்கு கீழே வந்து குளிர்ல வெடவெடன்னு வண்டிக்காக காத்திருக்கணும்.


வெயிற்காலத்துலே தில்லி ராத்திரி நல்லாயிருந்தாலும், குளிரில் ’இரவுத்-தந்தி’தான். இதாவது பரவாயில்லை, ‘டெர்ரர்’ காலத்தில் (ஜன26, ஆக15, திச6) காவல்துறை தொந்தரவு வேறே. இந்த ராத்திரியில் எதுக்கு இங்கே நிக்கிற. ஐடி எங்கே. எந்த ஊர் உனக்கு?.. இப்படி. நமக்கு தெரிஞ்ச இந்தியில் பதில் சொன்னேன்னா, அடுத்த கேள்வி கேப்பாங்கன்னு நினைக்கிறீங்க? ம்ஹூம். ஓடியே போயிடுவாங்க.


அலுவலக வண்டி நம்மை ஏத்திக்கிட்டு, இன்னும் சிலரை பிக்கப் பண்ண அவங்க வீட்டுக்குப் போகும். சில தேவதைகள் காலையிலேயே குளிச்சிட்டு சுத்தபத்தமா வரும்போது, சில வில்லன்கள் குளிக்காமல் வந்துட்டு, வண்டியில் தனிவகை நறுமணத்தை பரப்புவார்கள்.


இப்படியாக அலுவலகத்தில் நுழைந்து, அவரவர் வேலையை பத்தே நிமிடத்தில்(!) முடித்துவிட்டு அக்கடான்னு அமரும்போது ஒரு நண்பர் கணிணியில் காதல் பாடல்கள் (சாஜன், ஏக் துஜே கே லியே etc) போடுவார். உடனே அனைவரும் தங்கள் ஒருதலை, பலதலை, தறுதலைக் காதலை நினைத்துக் கொண்டு சில நிமிடங்கள் சிலையாய் அமர்ந்திருப்பர்.
சிற்றுண்டிக்கான நேரம் வந்தவுடன் அனைவருக்கும் கனவு கலைந்துவிடும்.


ஐந்து மணிக்கு சிற்றுண்டி. இட்லி, பொங்கல், முட்டை, ப்ரெட், பால், பழம்னு எல்லாமே அட்டகாசமா இருக்கும். ஒரு கட்டு கட்டிவிட்டு - கொஞ்ச நேரம் கழிச்சி சாப்பிடறதுக்கு பார்சலும் கட்டிகிட்டு - கட்டிடத்தை சுற்றி நடைப்பயிற்சிக்குப் போனா ஒரு மணி நேரம் நல்லா பொழுது போகும்.


அப்புறம் மறுபடி மேஜைக்குத் திரும்பி கொஞ்ச நேரம் வேலை. அதையும் பாக்கணுமே...


இந்த விடியற்காலை ஷிஃப்டில் இன்னொரு நல்ல பயன் என்னன்னா - ஆஸ்திரேலியா / நியூசீலாந்து இங்கெல்லாம் கிரிக்கெட் நடந்தா நாங்க எந்த தொந்தரவுமில்லாமே(!) முழுசா பாத்துடுவோம். மேட்ச் முடிந்தவுடன் வீட்டுக்கு வந்துடுவோம்.


இப்படி எங்க உலகத்துலே அரை நாள் ஆனபிறகு, வெளியுலகம் விழிக்க ஆரம்பிக்கும். காலை 7 மணிக்கு எல்லாரும் தொலைபேச ஆரம்பிப்பாங்க. சில பேரு அவங்க வீட்டுக்கு, சில பேர் ‘அவங்க’ வீட்டுக்கு. ஹிஹி. அப்போதைய மிஸ்.தங்ஸும் எனக்காக காலையிலேயே எழுந்து ‘திட்ட’ ரெடியாயிருப்பாங்க.


அப்புறம் ஷிஃப்ட் முடிஞ்சி, காலையில் 10 மணிக்கு வீட்டுக்கு வந்துட்டா, மதிய உணவு சாப்பிட்டு மல்லாக்க விட்டத்த பாத்து படுத்தா.. ஆஹா.. சொர்க்கமா தூக்கம் வரும்.


மறுபடி இரவு எழுந்து வேலைக்குப் போக தயாராகி.. மறுபடி வீட்டுக்கு வந்து.. மறுபடி.. இப்படியாக சுமார் 700 விடியல்களை சந்தித்த அந்த கால்-செண்டர் நாட்களை இன்னிக்கு நினைச்சி பாத்தா, இந்த நாள் மட்டுமல்ல.. அந்த நாளும் இனிய நாளே!

*****

8 comments:

ILA (a) இளா October 12, 2010 at 11:25 AM  

நான் ’அந்த’ நாட்களை, டவுசர் கழண்ட நாட்கள்னே இன்னும் நினைக்கிறேன். கொடுமைடா சாமி

Prathap Kumar S. October 12, 2010 at 11:52 AM  

என்னாது இது வெறும் தயிர்சாதமா இருக்கு... கொஞ்சம் நான்வெஜ் அனுபவத்தையும் போட்டிருந்திருக்கலாம்....:))

Mahesh October 12, 2010 at 9:24 PM  

அட... வேலை'யும்' பாத்தீங்களா?

அமுதா கிருஷ்ணா October 13, 2010 at 1:32 AM  

திட்டு வாங்கியே முன்னேறி இருக்கீங்க...

முத்துலெட்சுமி/muthuletchumi October 13, 2010 at 4:56 AM  

ஒரு பாட்டுக்கு எவ்ளோ விதமான ஃபீலீங்க்ஸ் ;))

VIKNESHWARAN ADAKKALAM October 14, 2010 at 2:04 AM  

உங்களை நினைச்சா நெம்ப பெருமையா இருக்கு பாஸ்...

Ravi,  October 15, 2010 at 11:02 AM  

I still cherish those old golden days!! .. Playing cricket inside tech area.. World cup match in big screen in cafeteria (that was the first time i saw cricket match in theater like screen!).. etc..etc.. mm… we can’t get that ‘Guest House’ life again.. :(

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP