Wednesday, September 22, 2010

தென்றல் என்னை வெண்ணை என்ற கதை...

அதுக்கு முன்னால் சென்னை - தில்லி, சென்னை - மும்பை மார்க்கத்தில் பல முறை விமான பயணம் மேற்கொண்டிருந்தாலும், அன்றுதான் என் முதல் முதல் முதல் வெளிநாட்டுப் பயணம்.

எங்க வீட்டு ஆட்களெல்லாம் கதவருகில் நின்றுகொண்டிருக்க, எதிர், பக்கத்து, பக்கத்து-பக்கத்து, எதிர்-பக்கத்து இப்படி எல்லா வீட்டுலேயும் அவங்கவங்க ஜன்னலில் நிக்குறாங்க. என்னை வழியனுப்ப எவ்ளோ பேர் நிக்குறாங்க பாருன்னு பெருமையா சொன்னா - பின்னாடியிருந்து ஒரு குரல் - "நீ எப்ப ஊரை காலி பண்ணுவேன்னு எல்லாரும் காத்திருக்காங்க. அவ்ளோதான்".
சரி சரின்னு சொல்லி ஒரு வழியா கிளம்பி விமான நிலையத்திற்குப் போனேன்.

ஒரே ஒரு ராஜ்ய சபா சீட்டுக்காக அண்ணா அறிவாலயத்திலிருந்து எப்போ கூப்பிடுவாங்களோன்னு காத்திருக்கும் மருத்துவர் போல், நானும் ‘பே’ன்னு வேடிக்கை பார்த்துக் கொண்டு, என்னைக் கூப்பிடுவாங்கன்னு செக்-இன் வரிசையில் நின்றிருந்தேன்.

சிறிது நேரம் கழித்து என் முறையும் வந்தது.

கவுண்டரில் (counter) அந்தப் பக்கம் அழகான பெண். அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் மொசைக் தரையில் ஊற்றிய நெய் மாதிரி அவ்ளோ வழுவழு.

கவுண்டரின் (counter) இந்தப் பக்கம் நான். அந்தப் பெண்ணைப் பார்த்து பேசிய ஒவ்வொரு வார்த்தையும் தென்றலைப் போல் தவழ்ந்து வந்தது. சரி சரி. ஒத்துக்கறேன். வெறும் காத்துதான் வந்தது.

அவங்க சொன்னாங்க - "குடுங்க".

ரொம்ப நாளைக்கு முன்னாடியே மனசிலிருந்த கசடுகளையெல்லாம் வெளியே போட்டுவிட்ட காரணத்தால், அதற்கு தப்பர்த்தம் எதுவும் செய்யாமே, பயணச்சீட்டை எடுத்து கொடுத்தேன்.

வெண்டைப் பிஞ்சு விரல்களால் அவங்க மெல்ல மெல்லமாய் கணிணியில் தட்டச்சிய பிறகு, ஒரு ரெண்டு நிமிஷம் கழிச்சு கேட்டாங்க.

"நீங்க சிட்டிசனா?"

பொறந்து, வளர்ந்து, படிச்சு (சரி சரி..) பள்ளிக்கு போய், (ஒரு வழியா) வேலைக்கும் போய் இப்படி வெளிநாட்டுக்குப போகும்போதுதானா இப்படிப்பட்ட சந்தேகம் வரணும்?

நல்லா நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு - நம்ம கேப்டன், அர்ஜுன், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பலருக்கும் மனசுக்குள் வந்தேஏஏஏ மாதரம் சொல்லிட்டு - "எஸ் மேடம். நான் சிட்டிசந்தான்".ன்னு சொன்னேன்.

மறுபடி ரெண்டு நிமிஷம் - அதே கீபோர்ட் - அதே வெண்டைக்காய்.

"நீங்க அமெரிக்கன் சிட்டிசனா?"

மனசிலிருந்த கேப்டனுக்கு கோபம் வர ஆரம்பிக்குது. மெல்லமா இடது காலை தூக்கி பக்கத்திலிருந்த சுவற்றில் வைத்து குதிக்க தயாராகிறார்.

அமெரிக்காவா... அந்த பறங்கியர் தேசத்துக்கு நான் சிட்டிசனா.. நெவர்.. நோ..

"இல்லை மேடம்"

"அப்போ க்ரீன் கார்ட் ஹோல்டரா?" - அடுத்த நெய் - வழுவழு.

அதுக்கெல்லாம் பத்து - பன்னெண்டு வருஷம் ஆகும்னு சொன்னாங்களே. இல்லையா? ஒரு வேளை அதுக்கு இங்கேயே விண்ணப்பம் கொடுக்கறாங்களோ என்னவோ? ஒண்ணும் புரியலியே? சரி ஏதோ ஒண்ணு. இல்லைன்னு சொல்லி வைப்போம்.

"இல்லை மேடம். எனக்கு பத்து - பன்னெண்டு வருஷமெல்லாம் அங்கே இருக்கற மாதிரி திட்டம் இல்லே. ஒரு வேளை அந்த பச்சை அட்டை சீக்கிரம் கிடைக்க நீங்க ஏதாவது ஏற்பாடு பண்ணீங்கன்னா, எனக்கு ஓகேதான்".

” நோ நோ. அதெல்லாம் இங்கே கொடுக்க முடியாது. ”

”சரி மேடம். பின்னே நான் ஊருக்கு போக இன்னும் வேறே ஏதாவது கொடுக்கனுமா? இல்லே நான் போகட்டா? விமானத்துக்கு நேரமாகுது.”

"பாஸ்போர்ட்டை குடுறா வெண்ணை"

******

ஹிஹி. அதுவரை உள்நாட்டிலேயே பயணம் செய்ததால், பாஸ்போர்டை எடுத்துக் கொடுக்கணும்றதே மறந்து போச்சு. பத்திரமா உள்ளே வெச்சிருந்தேன். அப்புறமென்ன, கடகடன்னு வேலையை முடிச்சிட்டு, விமானத்தைப் பிடிக்க உள்ளே ஓடிப் போனேன்.

இதுதாங்க தென்றல் என்னை வெண்ணை என்று சொன்ன கதை..

*****

7 comments:

Prathap Kumar S. September 22, 2010 at 11:54 PM  

ஹஹஹ வாங்குனது பல்பு அதுல இவ்ளோ பெருமையா...

கவுண்டரம்மா பத்தி இன்னும் கொஞ்சம் எழுதிருக்கலாம்...
க்யுரியாசிட்டி கொளுந்து விட்டு எரியுது..:)

Vignes,  September 24, 2010 at 7:50 AM  

நீண்ட இடைவேளையின் பின் மீண்டும் வந்து எம்மை மகிழ்விக்கும் உம் சேவை நாட்டுக்குத் தேவை. பதிவிலே இடைவெளி விட்டது ஏதேனும் இடைவெளி குறைப்புக்கா எனத் தெரியவில்லை!!

Thamira September 24, 2010 at 11:20 AM  

வெண்டைப் பிஞ்சு விரல்களால் அவங்க மெல்ல மெல்லமாய் கணிணியில் தட்டச்சிய பிறகு, //

குளிர்விட்டுப் போச்சுங்கிறது நன்னா தெரியுது ஓய்.! ஆமா நீங்க ஏன் லவ் சொட்டச் சொட்ட ஒரு கதை எழுதக்கூடாது.?

Thamira September 24, 2010 at 11:22 AM  

நிஜமான பின்னூட்டம் :

மெல்லிய விஷயங்களை அப்படியே நகைச்சுவை ததும்ப வழுக்கிக்கொண்டு எழுதிப்போக, போரடிக்குமுன்னே நிறுத்த உங்களை விட்டால் பதிவுலகில் ஆளே இல்லைன்னு அடிச்சுச் சொல்வேன் ச்சின்னப்பையன். தொடர்க, வாழ்த்துகள்.!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP