Wednesday, December 28, 2011

கடைசியில் என்னையும் அரசியல்வாதி ஆக்கிட்டாங்க!



பலமான டிஸ்கி & எச்சரிக்கை:


சில நாட்களுக்கு முன் நடந்த ஒரு தகராறைக் குறித்து எழுதும் சுயவிளக்கப் பதிவு இது. சிரிப்பதற்கு விஷயம் ஒண்ணும் இருக்காது. இதை படிக்கலேன்னாலும் ஒண்ணும் ஆயிடாது. நல்ல மூடில் இருக்கிறவங்க, நல்ல பதிவு எதிர்பார்த்து வந்தவங்க நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. தயவு செய்து இந்த பதிவை படிக்காமல் மூடிவிடவும். நன்றி.


இந்த மாதிரி இன்னொரு பதிவும் வராது. அதனால் பயந்து 'unfollow' செய்துடாதீங்க.


***


ஒரு நண்பர் ஒரு நாள் டிவிட்டரில் யாரையோ திட்டிக்கிட்டே இருந்தாரு. திட்டினார்னா பத்து நிமிஷம், இருபது நிமிஷம் இல்லே - நாள் முழுக்க பல ட்வீட்கள் போட்டு திட்டிக்கிட்டே இருந்தாரு. இந்த திட்டல் எதுக்கு / யாருக்குன்னு யாருக்கும் தெரியாததால், TLல் இருந்த பலர் அந்த திட்டுகளை RT செய்தும், அவரை ஏற்றி விட்டுக் கொண்டும் இருந்தனர். நானும் புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க, அந்த திட்டுகள் அனைத்தும் எனக்குதான் விழுந்ததுன்னு மாலையில் புரிந்தது.

சரிதான், மனுஷனை இவ்வளவு டென்சன் செய்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டு, அவரை டிவிட்டரில் ப்ளாக் / அன்பாலோ செய்துவிட்டேன். அதோடு பிரச்னை தீர்ந்ததென்று நினைத்தேன். அது எவ்வளவு தப்புன்னு பிறகு புரிந்தது.

என்ன தப்புன்னு யோசிக்கிறீங்களா - அவர் நாள் முழுக்க என்னை திட்டியது தப்பில்லையாம். அதை நான் பப்ளிக்கா சொல்லிட்டு, அவரை ப்ளாக் செய்ததுதான் தப்பாம். அதாவது அந்த திட்டுகளை நான் கண்டுக்காமே இருந்திருக்கணுமாம். இப்போ நான் மன்னிப்பு கேட்டுவிட்டதால், அவரை அனைவரும் கேள்வி கேக்குறாங்களாம். அது அவருக்கு கஷ்டமா இருக்காம். சாமி, முடியல என்னாலே.

இருங்க. இன்னும் முடியல(!). இன்னொரு நண்பர் இது விஷயமா பஞ்சாயத்து செய்ய வந்தபோது சொன்னது - உங்களை திட்டிட்டோமேன்னு அவர் ரொம்ப வருத்தப்படறாரு. என்ன பண்றதுன்னு தெரியல.

எப்படி எப்படி? திட்டறது என்னை. வருத்தப்படறது அடுத்தவன்கிட்டேயா? நல்லா இருக்குல்லே நியாயம்? இத கேட்டா இன்னும் கதை வளருது.

உங்ககிட்டே மன்னிப்பு கேட்க வந்தா, நீங்க டக்குன்னு மூஞ்சி திருப்பிக்கிட்டு போயிடறீங்களாம். அப்புறம் அவரால் எப்படி பேச முடியும்?. இந்த இடத்தில் நிஜமாவே என்னால் முடியல. பாஸ். இந்த நடிப்பையெல்லாம் நாங்க தங்கப்ப-தக்கம் படத்திலேயே பாத்துட்டோம். தொலைபேசி, கைப்பேசி, மின்னஞ்சல் - இதிலெல்லாம்கூட பேசலாம்னு தெரியுமா? தெரியாதா?.

இப்படி கோபமாவே இருந்தா, உலகத்தில் நட்பு எப்படி மலரும்? அமைதி எப்படி பூக்கும்?. நீங்கதான் விட்டுக் கொடுத்து அட்ஜஸ்ட் செய்து போகணும். - இந்த அறிவுரை எனக்கு.

யப்பா சாமி. நாள் முழுக்க திட்டு வாங்கினவன் நான். அதுக்கு பிறகு எல்லா தப்பும் என் மேலேதானா?. சரி. ஒரே ஒரு தீர்வுதான் இதுக்கு.

தினமும் காலையில் எழுந்து என் தலையை தடவி பாத்துக்கறேன். என்னிக்கு என் தலையில் வடியறது ரத்தம் கிடையாது - தக்காளி சட்னின்னு தோணுதோ, அன்னிக்கு நானே வந்து 'திட்டு வாங்கினதுக்கு' மன்னிப்பு கேட்குறேன்.

எப்பூடி?

***

பல மாதங்களாக draftல் இருந்த பதிவை போட்டாச்சு. நிம்மதி ஆச்சு. இனி அடுத்த பதிவு புது வருடத்தில்.

அனைவருக்கும் இனிய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2012.

***



Read more...

Saturday, December 24, 2011

சென்னை பள்ளிகள் - பாகம் 1

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் வந்துட்டா எங்க ப்ராஜெக்ட் நீட்டிக்கப்படும். அப்படி நீட்டிக்கப்படுவதில் ஒன்றும் பிரச்னை/சந்தேகம் இல்லையென்றாலும் ஒரு திக்திக்தான். ஆனா, அதே சமயத்தில் இன்னொரு கேள்வியும் வந்து நிற்கும். ஒரு சில வாரங்கள் விவாதங்களுக்குப் பிறகு, அடுத்த ஒரு வருடத்திற்கு ஒத்தி வைக்கப்படும். அது என்ன கேள்வி?



"போதும் இந்த நாடு. நம்ம ஊருக்கே போயிடலாமா?". பின்னணியில் பாட்டு ஒலிக்கும் - 'சொர்க்கமே என்றாலும்.. அது நம்மூரைப் போல வருமா?"


நான் பெங்களூர், ஹைதை, குர்காவ்ன், நொய்டா இப்படி எல்லா ஊரிலிருந்தும் relocate செய்திருக்கேன். ஆனா அப்போல்லாம் நிலைமை வேறு. இப்ப மிக முக்கியமான பாயிண்ட் - சஹானாவின் பள்ளி. சரியா அவங்க சொல்ற நேரத்தில் போய் அப்ளிகேஷன் வாங்கணும். ஒரு நுழைவுத் தேர்வு. அப்புறம்தான் பள்ளியில் சேர்க்கை. கொடுமை என்னன்னா, இதெல்லாம் தொடர்ச்சியா நடக்கற விஷயங்களும் இல்லை. சில பள்ளிகளில் அப்ளிகேஷனுக்கும், பள்ளியில் சேர்க்கைக்கும் நடுவில் ஆறு மாத காலங்களும் ஆகும். அதுக்காக, இந்தியா போயிட்டு வந்து, திரும்ப பள்ளி துவங்கும்போது போகணும். இப்படியெல்லாம் நிறைய மக்கள் செய்திருக்காங்க. (இணையத்தில் தேடும்போது தெரிந்தது). அடங்கப்பா, நாமும் இதேதான் செய்வோமா என்று எண்ணி, ஆராய்ச்சியை துவக்கினோம். நிறைய ஆட்களிடமும் ஆலோசனை கேட்டோம். அவர்களின் கருத்துகளும், பள்ளிகளின் அராஜகங்களும் பகீர் ரகம்.


நிறைய பேருக்கு தெரிந்திருக்கலாம். இங்கு அமெரிக்காவில் அரசு பள்ளிகளில் - அந்தந்த ஏரியாவில் இருப்பவர்களை அந்தந்த பள்ளிகள் கட்டாயமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். தனியார் பள்ளிகளிலும் அவ்வளவு தள்ளுமுள்ளு இருக்காது. (தனியாரில் காசுதான் மிகமிக அதிகம்).


ஊருக்கு வர்றோம். பக்கத்தில் எந்த பள்ளி இப்போ நல்லாயிருக்குன்னு கேட்டா, ஒரே குரலில் அனைவரும் சொல்வது - அமெரிக்காவிலிருந்து வர்றே. நீ சாதாரண பள்ளியிலெல்லாம் சேர்க்கக் கூடாது. பத்மாசேஷாத்ரி / DAV இந்த மாதிரி இடத்தில்தான் சேர்க்கணும்.


ஏன்யா, அமெரிக்காவிலிருந்து வந்தா பெரிய கொம்பா? அதுக்காக, பெரிய பள்ளியில்தான் சேர்க்கனுமா? ஏன், லோக்கல் பள்ளியில் படித்தால் படித்தா படிப்பு வராதா? அல்லது அங்கே படிக்கறவங்க நல்லா படிக்கலியா? ஏன், இப்படி கொலவெறியோட சுத்தறீங்கன்னு கேட்டா, அதுக்கு பல்வேறு காரணங்களை அடுக்குறாங்க.


அமெரிக்கா வரும்போது நான் lower-middleclassதான். ஆறு வருடத்தில் சிவாஜி ரஜினி மாதிரியெல்லாம் அப்படி சம்பாதித்து விட முடியாதுடான்னா எவன் கேக்கறான்? சரி விட்டுத்தள்ளுங்க. பெரிய பள்ளிகளுக்கான பாயிண்ட்கள் இவைதான்.


நமக்கு சென்னை. நங்கநல்லூர்.


வீட்டு பக்கத்திலேயே (சின்னமலையில்) PSBB Millenium இருக்குன்னு சொல்லி ஒரு கிலி ஏத்தினாரு. பிறகு இணையத்தில் தேடித் பார்த்தால் - அந்த இடத்தில் இரண்டாம் வகுப்பு வரை மட்டும்தான். மூன்றாம் வகுப்புக்கு போரூர் போகணும். அது ரொம்ப தூரம்னு தெரிஞ்சுது. (சஹானா மூன்றாம் வகுப்பு சேரணும்.) நல்ல வேளைன்னு நினைச்சிக்கிட்டேன்.


ஆனா, அப்படியும் அடங்காமே திரியற மக்கள் நம்ம மக்கள்னு அப்புறம்தான் தெரிஞ்சுது. என்னடான்னா, நங்கநல்லூரில் இருக்கற ஒரு பய, PSBB போரூரில் பையனை சேர்க்கணும்னு, சொந்த வீட்டையே வித்துட்டு, போரூர்லே வீடு வாங்கி பள்ளிக்குப் பக்கத்தில் போயிட்டானாம். அடப்பாவிகளா, எங்கே என் வீட்டையும் வித்துடுன்னு சொல்வாங்களோன்னு நினைச்சேன். இதுவரை அப்படி யாரும் கேட்கலை.



அடுத்து இன்னொருத்தர். உறவினர்தான். அவர் மாதச் சம்பளம் ரூ.இருபதாயிரம். அவர் தன் பையனை ஆதம்பாக்கம் DMVயில் சேர்த்திருக்கிறாராம். அங்கே வருடத்திற்கு ரூ.நாற்பதாயிரம் கட்டணமாம். இதெல்லாம் கொஞ்சம் ஓவராயில்லே. பள்ளிக்கே தன் இரண்டு மாத சம்பளத்தை கொடுத்துட்டா, அப்புறம் மத்ததெல்லாம் எப்படி நடக்கும்? கேட்டா, நல்ல கல்வி. பையன் வருங்காலம் நல்லா இருக்க வேணாமா?. அவர் முடிவை மாத்தறது நம்ம கையில் இல்லே. ஆனா இது ரொம்ப டூ மச்னு பார்த்தாலே தெரியுது. சரிதானே?



இன்னொரு நல்ல செய்தி. பெரிய பள்ளிகளில் சேர்க்கை குழந்தைகளுக்கு (PreKG) மட்டும்தான். மூன்றாம் வகுப்புக்கெல்லாம் அனுமதி கிடையாதாம். இதுக்கு என்னடா காரணம்னா, சின்ன வயசுலேந்து அவர்களை நல்லா தயார் செய்கிறார்களாம். நடுவில் வர்றவங்க தகுதி எப்படி இருக்கும்னு தெரியாதாம். அடங்கொப்பா முடியல என்னாலே. ஆனா என்னைப் பொறுத்தவரை அது ஒரு நல்ல விஷயம். என்னை யாரும் அந்த பள்ளியில் சேர்க்கலைன்னு சொல்லமுடியாது. அவங்கதான் சேர்க்கமாட்டாங்கன்னு சொல்லிடலாம்.



இப்படியாக பெரிய பள்ளிகள் எதுவும் பக்கத்தில் கிடையாது, சேர்க்கவும் முடியாதுன்னு தெரிந்த பட்சத்தில் (அப்பாடா!), அடுத்த ரக பள்ளிகள் பட்டியல் எடுக்க ஆரம்பிச்சோம்.



தொடரும்...



Read more...

Thursday, December 1, 2011

மடக்கவுஜ!




நீதான் வீட்டுக்குப் பெரியவன்
நீதான் சின்னவங்களை
அனுசரிச்சி போகணும்

அவங்க உன்னை விட
பெரியவங்க - நீதான்
அவங்ககிட்டே
மரியாதையா நடந்துக்கணும்

ச்சின்னச்சின்ன
விஷயங்களுக்காக
நண்பர்களோட
சண்டை போடாதே
அவங்க தயவு
பிறகு தேவைப்படும்

எவ்ளோ பெரிய
தவறு செய்திருந்தாலும்
நண்பர்களை
மன்னித்துவிடு
பிற்காலத்துலே
அவங்க உதவியாயிருப்பாங்க

உன் மேனேஜர்
திட்டினாரா
நீதான் ஏதாவது
தப்பு செய்திருப்பே

உன் குழுவில்
யாரேனும் சரியா
வேலை செய்யலியா -
உனக்கு வேலை
வாங்கத் தெரியல

எல்லாமே நான்தான்
செய்யணும்னா
எல்லா தப்பும்
என்னுது மட்டும்னா

ங்கொய்யாலே..

இந்த உலகத்துலே
மத்தவங்கல்லாம்
எதுக்காக வந்துருப்பாங்க?

***

பிகு: மடக், மடக்கி எழுதியால் இதை மடக் கவுஜ'ன்னு யாரும் திட்டும்முன் நானே தலைப்பில் சொல்லிட்டேன்!!

***





Read more...

Monday, November 21, 2011

புகைப்படக் கருவி.




இந்தியாவில் இருந்தவரை புகைப்படக் கருவியை காகிதத்தில் எழுதி வைத்துதான் பார்த்திருக்கிறோம். குடும்ப விழாக்களில் மத்தவங்க படம் எடுக்கும்போது டக்குன்னு அவங்க பக்கத்திலேயோ பின்னாடியோ போய் நின்னுக்கிட்டு ஈஈஈன்னு சிரிக்கிற நல்ல பழக்கம் மட்டும் இருந்தது.

அப்புறம் காலச்சக்கரம் சுழன்று ஒரு நாள் அமெரிக்கா வந்து சேர்ந்தோம். நம்ம மக்கள் காட்டிய பாதையில் உடனடியாக ஒரு பு.கருவி வாங்கினோம். அதைக் கொண்டு வந்து கொடுத்த தபால்காரரை க்ளிக் செய்ய ஆரம்பித்து, படம் எடுத்தோம், எடுத்தோம் - வாழ்க்கையில் ஓரத்திற்கே போய் எடுத்தோம். (பிறகு SD கார்ட் தீர்ந்துவிட்டதால் திரும்பி வந்துவிட்டோம்!).

அதன் பிறகு வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறிப் போனது அந்த அருவி ச்சே கருவி.

ஒரு நாள் / பல நாள் பயணமாக வெளியே கிளம்பும்போதெல்லாம் என் குடும்ப உறுப்பினர்கள் (ஆமா. அவங்க ரெண்டு பேர்தான்!) என்னென்ன பொருட்கள் கொண்டு போகணும்னு பட்டியல் போட ஆரம்பிப்பாங்க. அந்த பட்டியலில் முதலில் இடம்பெறுவது - அதேதான்.

வெயிட். பட்டியல் போடறது மட்டும்தான் அவங்களது. பு.கருவியும் அதற்குண்டான சாமான்களும் பொறுப்பா எடுத்து வைப்பது என் வேலை. ’பொறுப்பா’ன்னு படிச்சீங்கல்லே. அதுதான் நம்மகிட்டே இல்லேன்னு தெரியுமே. பல தடவை சிலபல மேட்டர்களை மறந்து திட்டு வாங்குவதுண்டு.

இப்படிதான் போன வருடம், FeTNA மூணு நாள் விழாவுக்கு போயிருந்தோம். நிறைய நடிகைகள் வர்றாங்க. எல்லாருடனும் படம் புடிச்சிக்கணும்னு தங்ஸோட ஆசை. சரியா படிங்கப்பா. என் ஆசை இல்லை. சரிதான்’னு சொல்லி கிளம்பி போயாச்சு.

நடிகைகளோட படம் பிடிக்க, புது ட்ரெஸ், குளிர் கண்ணாடி இதெல்லாம் எடுத்துப் போனேன் பாருங்க, ஒரே ஒரு பொருளை மறந்துட்டேன். என்ன பு.கருவியோட பேட்டரி மறந்துட்டியான்னு கேக்கப்படாது. அப்படியெல்லாம் நான் செய்வேனா? ஹிஹி. பு.கருவியையே மறந்துட்டேன். லட்சுமிராய் பக்கத்துலே போய் நின்னு (சரி சரி. எல்லாரும் உக்காருங்க) பு.கருவி இருக்கிற தோல்பையை திறந்து பார்த்தா, உள்ளேயிருந்து வெறும் காத்துதான் வருது. கருவியை காணோம். அவங்களும் பெரிய மனசு செய்து ரெண்டு நிமிஷம் பேசிட்டு அனுப்பிட்டாங்க!!. (அப்புறம் நடந்த லட்சார்ச்சனையைப் பற்றி நான் சொல்ல மாட்டேன்).

இப்படியில்லாமே எல்லாத்தையும் சரியா எடுத்துப் போன நிகழ்வுகளும் உண்டு. ஆனா அப்பல்லாம் இவங்க ரெண்டு பேரும் செய்யற ரப்சர் தாங்கவே முடியாது.

உதாரணத்துக்கு ஒண்ணு: பூ, புஷ்பம், புய்ப்பம் எது மாட்டினாலும், அதை ஐந்து வித கோணங்களில் படம் பிடிச்சிப்பாங்க. ஐந்து கோணமா அப்படின்னு கேக்குறவங்களுக்கு. இடது, வலது, முன்னே, பின்னே மற்றும் மேலே. அந்த பூ-க்கு கீழே போய் படம் பிடிக்கமுடியாததால் அதை விட்டுடுவாங்க. அது மட்டுமில்லாமே எக்கச்சக்க படங்க எடுப்பாங்களா, அதையெல்லாம் slideshowவில் போட்டு வேகமாக ஓட்டினால், ஒரு காணொளியே ரெடி.

சரி போயிட்டு போகுதுன்னு வீட்டுக்கு வந்தா, ஒரு பத்து நிமிடம் உக்கார விடமாட்டாங்க. உடனே அதை கணிணியில் போட்டு, இணையத்தில் ஏத்தி, ஊருக்கு சொல்லி - அப்பப்பா.. முடியலடா சாமி.

இப்பகூட பாருங்க, வெளியே போயிட்டு வந்து, புகைப்படங்களை இணையத்தில் ஏற்றிக் கொண்டிருக்கிறேன். இருங்க. உள்ளேயிருந்து ஏதோ சொல்றாங்க. என்னன்னு கேட்போம்.

”ஏங்க இங்கே கொஞ்சம் வாங்க. ச்சின்ன கரப்பான்பூச்சி ஒண்ணு போகுது. இந்த ஊர் க.பூ இந்தியாவில் யாரும் பாத்திருக்கமாட்டாங்க. டக்குன்னு காமிரா எடுத்துட்டு வாங்க.”

ஐயய்யோ. மறுபடி காமிராவா? நான் கொஞ்ச நேரத்துக்கு தலைமறைவாகிடப் போறேன். நீங்களும் எஸ்கேப்பாயிடுங்க. என்ன?

***

Read more...

Saturday, October 29, 2011

நீங்க குடுமியெல்லாம் வைக்கத் தேவையில்லை!


சஹானாவை பள்ளியிலிருந்து கூட்டிவர எப்போதாவது நானும் போவேன். ஹிஹி ஆபீஸை கட் அடித்துதான். யாரும் போட்டுக் குடுத்துடாதீங்க. பள்ளிக்கதவு திறக்கும்வரை பெற்றோர்கள் வெளியே தவம் கிடக்க வேண்டிவரும். அப்போது பெரும்பாலும் மக்கள் தங்கள் கைப்பேசியை நோண்டிக் கொண்டிருப்பர்.

அன்று ஒரு நாள் நானும் அங்கே காத்திருந்தபோது கூட சில தேசிகளும். நாம்தான் தேசியை ஏறெடுத்து பார்க்கமாட்டோமே (விவரம் இப்போதான் போன பதிவில்!), அதனால் தலைகுனிந்தவாறே கைப்பேசியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, பக்கத்தில் ஒருவர் வந்து - ஹலோ!.

ஆஹா, கிளம்பிட்டாங்கய்யா. இன்னிக்கு நான் மாட்டிக்கிட்டேன்னு நினைச்சி பார்த்தா, அவர் தேசியில்லை. ஏதோ ஒரு தென் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்.

“நீங்க இந்தியாவா?”

இல்லை. சத்யா - ன்னு சொல்ல வந்து பிறகு நாட்டை கேட்கிறார் போலன்னு நினைச்சி - யெஸ் என்றேன்.

“பிருந்தாவன் போயிருக்கீங்களா?”

பிருந்தாவன்? நமக்குத் தெரிந்தது எல்லாம் இவையே:

பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் - சென்னை - பெங்களூர் மார்க்கத்தில் நிறைய முறை போயிருக்கிறேன். ஆனா அந்த வண்டி பற்றி இவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பிருந்தாவன் தோட்டம் - பழைய தமிழ், இந்தித் திரைப்படங்களில் பாட்டுன்னா கண்டிப்பா அது இங்கேதான் நடக்கும். நான் போனதில்லை. ஆனா இவருக்குத் தெரிந்திருக்குமோ? போயிருப்பாரோ? - தெரியல.

இதைத் தவிர வேறெதும் பிருந்தாவன் எனக்குத் தெரியவில்லை.

அதனால், அவரிடமே கேட்டேன் - ”எந்த பிருந்தாவன்?”

”பகவான் கிருஷ்ணர் பிறந்த இடம். மதுரா? பிருந்தாவன்?”

ஆஹா. சரி சரி. “ஆமா. போயிருக்கிறேன். நல்ல இடம். நீங்க இந்தியா வந்திருக்கீங்களா?”

“இல்லை. நான் Ecuador நாட்டைச் சேர்ந்தவன். பிருந்தாவன் போகணும்னு பலவருட விருப்பம். அடுத்த வருடம் கண்டிப்பா போவேன். நான் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தில் இருக்கிறேன். இங்கே பாருங்க குடுமி”ன்னு திரும்பி குடுமியை ஆட்டிக்(!!) காண்பித்தார்.

”என் பொண்ணுங்க ரெண்டு பேர் இந்த பள்ளியில்தான் படிக்கிறாங்க. பேரு ராதா மற்றும் சுபத்ரா”.

”வாவ். அருமையான பெயர்கள். ரொம்ப அழகா பேர் வைச்சிருக்கீங்க”.

”அடுத்து பையன் பொறந்தா கிருஷ்ணான்னுதான் பேர் வைப்பேன்”.

”ஆஹா. ரொம்ப அட்வான்ஸ்டா பேரெல்லாம் ரெடி பண்ணிட்டீங்க”. இதை நான் சொல்லவில்லை. நினைத்தேன். (எப்படா இந்த கதவைத் திறப்பாங்க?)

“நீங்க பகவான் கிருஷ்ணரை கும்பிடுவீங்களா?” - இது அவர்.

“ஆமா” - நான்.

“அப்போ நீங்களும் வரலாமே. இங்கே பக்கத்தில்தான் ஒரு வீட்டில் பஜனைகள் நடக்குது. அடுத்த தடவை பார்க்கும்போது நான் உங்களுக்கு சில புத்தகங்கள், CDக்கள் தர்றேன். நீங்க குடுமியெல்லாம் வைக்கத் தேவையில்லை.”

அந்த நாளுக்குப் பிறகு கடந்த ஒரு மாசமாய்  சஹானாவை பள்ளியிலிருந்து கூட்டிவர நான் போகவில்லை.

*****

Read more...

Sunday, October 16, 2011

நொறுக்ஸில் இரு விடயங்கள்.



ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்தவுடன் சஹானா சொன்னது.

“இன்னிக்கு என் டீச்சர், மொத்த வகுப்பிற்கும் நான்தான் rolemodelனு சொன்னாங்க. அதுக்கு சில நண்பர்கள் கை தட்டினாங்க”.

”அப்படியா?. வெரி குட். என்ன ஆச்சு?”

”வகுப்பில் இருக்கும்போது திடீர்னு யாரோ உள்ளே வந்தாங்க. டீச்சர் அவங்ககிட்டே பேசும்போது, இங்கே நண்பர்கள் எல்லாரும் கசமுச கசமுசன்னு அவங்களுக்குள் பேசிக்கிட்டாங்க. நான் மட்டும் யாரிடமும் பேசாமல் எழுதிக் கொண்டிருந்தேன். அதனால் டீச்சர் - சஹானா மட்டும்தான் பேசாமல் நல்ல புள்ளையா எழுதிட்டிருக்கா. அவதான் இந்த வகுப்பிற்கே rolemodel. நீங்களும் அவளை மாதிரியே இருக்கணும்.”னு சொன்னாங்க.

”சூப்பர். அப்படித்தான் இருக்கணும். அதுக்கு நீ டீச்சருக்கு நன்றி சொன்னியா?”

“இல்லை”

“ஏன்? யாராவது உன்னை பாராட்டினா அவங்களுக்கு நன்றி சொல்லணும். அதுதான் நல்ல பழக்கம்.”

இதுக்கு இவங்க சொன்னதைக் கேட்டு நான் - வேதம்புதிதில் அடி வாங்கிய சத்யராஜ் தலையை அப்படி இப்படி திருப்பியமாதிரி திருப்பிக் கொண்டேன். அப்படி என்ன சொன்னாங்க? பதில் கடைசியில்.

***

ஒரு ஒருவழிப்பாதையில் சரியாக போகும் திசையில் பார்த்தவாறு இருக்கும் வண்டி, அப்படியே பின்னாடி வந்தால் எப்படி இருக்கும்?

ஒண்ணும் புரியலியா? கவலைப்படாதீங்க. இந்த ஒளித்துண்டை பாருங்க. பிறகு பேசுவோம்.



எங்க ஊர் நூலகத்திலிருந்து வெளியே வந்தவுடன் ஒரு ஒருவழிப்பாதையில் வலது திரும்பணும். அந்த வலதிலிருந்து வண்டி எதுவும் வராது என்பதால், இடது பக்கம் மட்டும் பார்த்துக்கொண்டு திரும்பிவிடுவேன்.

அன்றும் அப்படியே திரும்பியவுடன் பார்த்தால், ஒரு வண்டி ‘ரிவர்ஸில்’ படுவேகமாக என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. பதற்றத்தில் என்னால் ஒலி எழுப்பவும் முடியவில்லை. சரக்கென்று சாலையோரத்தில் வண்டியை ஓட்டி நிறுத்தினேன்.

எந்த வெண்ணைய் இப்படி போகக்கூடாத பாதையில் நேராக போகமுடியாததால், ரிவர்ஸில் ஓட்டிப்போவது என்று பார்த்தால், அது ஒரு தேசி வெண்ணைய். அப்போதான் என் மனம் சமாதானமடைந்தது. நம்மைத் தவிர வேறு யாரால் இப்படி செய்யமுடியும்?

ஒழுங்கா போகணும்னா, நாலு தெரு சுத்தி வரணும். அதுக்கு இப்படி குறுக்கு வழி கண்டுபிடித்த அந்த தேசி வாழ்க.


****

”நான் யாரிடமும் பேசவில்லை என்பதால்தான் என்னை rolemodelனு சொன்னாங்க. அதுக்கு நான் நன்றின்னு சொல்லணும்னா பேசியாகணும். அப்படி பேசிட்டேன்னா, rolemodel இல்லேன்னு அர்த்தமாயிடும். அதனால்தான், நான் அப்பவும் பேசவில்லை.”

எப்பூடி?

***

Read more...

Thursday, October 6, 2011

நானும் ஒரு தேசிதான்.



நான் பார்த்தவரை அமெரிக்காவில், தேசிகளைப் பார்த்து ஒரு அமெரிக்கரோ, மக்கு'வோ (மெக்சிகன்ஸ் - எங்க ஊர்லே அதிகம்), கூட ஹாய் சொல்லிடுவாங்க. ஆனா ஒரு தேசி இன்னொரு அறிமுகமாகாத தேசியை பார்த்தவுடன் ஹாய் சொல்லவே மாட்டாங்க. டக்குன்னு தலையை திருப்பி வேறெங்கோ பார்த்துக்கிட்டே போயிடுவாங்க. அப்படியும் ஒரு தேசி நம்மைத் தேடி வந்து ஹலோ சொல்றான்னா, அதுக்கு ஒரே ஒரு அர்த்தம்தான் இருக்க முடியும். அது என்ன? கீழே படிங்க.


கடனட்டையை காரிலேயே வைத்துவிட்டு, வால்மார்ட்டில் ச்சும்மா சுற்றிக் கொண்டிருந்த நேரம். எதிரில் ஒரு தேசி. என் கட்டிடத்தில்தான் வேலை பார்க்கிறார். ஆனாலும் ஒரு தடவைகூட பேசியதில்லை. அதனால், நேற்றும் நான் பார்த்தும் பார்க்காத மாதிரி அவரைக் கடந்து சென்றேன்.


திடீரென்று, ஹலோ என்று கை நீட்டினார். சரின்னு நானும். என்ன பேர், ஊர், குடும்பம், குழந்தைகள் அப்படின்னு எல்லாம் பேசி முடித்தபிறகு, முக்கியமான விஷயத்துக்கு வந்தார். நான் ஒய்வு நேரத்தில் ஒரு தொழில் செய்கிறேன். என்கிட்டே நிறைய பேர் வேலை செய்றாங்க என்றார். அப்பத்தான் எனக்கு மண்டையில் பல்பு எரிஞ்சுது. உங்களுக்கு தொழில் செய்ய ஆர்வமிருக்கா என்று கேட்டார்.


நானும், என்ன தொழில் என்று கேட்க, ஒரு மினி அமேசான் நடத்துறேன். நிறைய பணம் கிடைக்குது. உங்களுக்கும் நல்லதுதான் என்றார். என்னை விட்டுடுங்க. நான் வரலே இந்த விளையாட்டுக்கு என்றவுடன், டக்கென்று கேட்டார் - "அப்ப எந்த தொழில்னு ஏன் கேட்டீங்க?"


சமீபகாலமா சிலபல நண்பர்களால்(!) அடைந்த மனஉளைச்சலால் நான் மீனாக மாறிவிட்டேன். இதை என் குழுவினரும், குடும்பத்தினருமே கண்டு சொல்லியிருக்கின்றனர். மீன்? அதாவது, I have become very meanன்னு சொன்னேன். :-)


ஏங்க, நானா வந்து தொழில் பற்றிய பேச்சை எடுத்தேன்? நீங்க சொன்னதால், பேச்சை வளர்ப்பதற்கு என்ன தொழில்னு கேட்டேன்னு சொன்னேன்.


அவரும் விடாமல் - சரி, இந்த தொழிலை ஏன் உங்களால் செய்ய முடியாது? என்றார்.


எனக்கு நேரமே கிடையாது.


இப்படித்தான் எல்லாருமே சொல்றாங்க. அப்படி என்னதான் செய்யறீங்க ஓய்வு நேரத்தில்?


இந்த இடத்தில் நான் சுறாமீனாகிவிட்டேன்.


யோவ், அடுத்தவன் நேரமில்லேன்னு சொன்னா, அவனைப் போய் கேளு. என்கிட்டே வராதே. நான் ஓய்வு நேரத்தில் என்ன செய்யறேன்னு உனக்கு சொல்லத் தேவையில்லை - என்றேன்.


சரி சரி. இப்போ நேரம் சரியில்லை. நான் உங்களை ஆபீஸ்லே சந்திச்சி பேசறேன் - என்றவாறு ஓடிவிட்டார் அந்த தொழிலதிபர்.


இப்போ நிஜமாவே யார் என்னைப் பார்த்து சிரிச்சாலும், எனக்கு சந்தேகமாவே இருக்கு. என்னையும் தொழிலதிபர் ஆக்காமே விடமாட்டாங்களோன்னு. அதனால் நானும் எந்த தேசியைப் பார்த்தாலும், டக்குன்னு வெக்கப்பட்டு தரையை பார்க்க ஆரம்பிச்சிடறேன்.


சரிதானே?


***

Read more...

Thursday, September 8, 2011

இவன் யாரோ, இவன் யாரோ, வந்தது எதற்காக?



இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக - இப்படி ஒரு அழகான பாடல் ஒலித்துக் கொண்டிருந்தபோது நடுநடுவே ட்ரிங்ட்ரிங்னு கைப்பேசி சத்தம். என்னடான்னு பார்த்தா, பாட்டு கனவில். கைப்பேசி ஒலித்தது நிஜத்தில். எவன்டா இந்த நேரத்திலேன்னா (மணி விடியற்காலை மணி மூன்று) - லோக்கல் நண்பரிடமிருந்து.

லோகல்னா ரொம்ப லோக்கல் - பக்கத்து வீட்டு நண்பர்தான் கூப்பிட்டது. என்ன பிரச்னைன்னு தெரியலேன்னு எடுத்துப் பேசினேன். "அவருக்கு ****** பிரச்னை வந்துடுச்சு. ரொம்ப அவஸ்தைப் படறாரு. உடனடியா மருத்துவமனை போகணும். கொஞ்சம் வரமுடியுமா" - பேசியது சகோதரி - நண்பரின் மனைவி.

சடார்னு எழுந்தேன். தங்ஸுக்கு சொல்லிவிட்டு, வண்டி சாவி எடுத்து வெளியே ஓடி, நண்பரை கூட்டிக்கிட்டு குளிரில் மருத்துவமனை அடைந்து அவரை சேர்த்தும்விட்டேன். டாக்டர் வந்து மருந்து மாத்திரை (ரெண்டும் ஒண்ணுதானே?) கொடுத்து பிரச்னையை தற்காலிகமாக தீர்த்து வைத்தார்.

இந்த ஊர் டாக்டர்கள் சும்மாவே இருக்க மாட்டாங்க. ஏதாவது ஜோக் அடிச்சிக்கிட்டு, வந்தவங்களோட லொடலொடன்னு பேசிக்கிட்டே இருப்பாங்க. நமக்கு வாய்ச்சவரும் அப்படியே. நம்ம நண்பரைப் பார்த்து சாதாரணமா கேட்டாரு.

”இவரு (என்னைக் காட்டி) உங்க சகோதரரா”?

அவரும் - ”இல்லீங்க டாக்டர்” அப்படின்னாரு.

அடப்பாவி, ஒண்ணுமண்ணா பழகினோமே, என் மனைவிகூட உன்னை அண்ணா அண்ணான்னு கூப்பிடுவாளே? அதை எப்படிடா மறந்தேன்னு
நினைக்கும்போதே, அடச்சே, என் மனைவிக்கு அண்ணன்னா நான் மச்சான்தானே, ஒரு தெய்வ மச்சானை எப்படி சகோதரன்னு சொல்றது என்பதால் நண்பர் மறுத்துட்டார்னு சமாதானம் சொல்லிக் கொண்டேன்.

அந்த டாக்டரும் விடமாட்டேன்றாரு.

”அப்படின்னா, கலீகா (கூட வேலை பார்ப்பவரா)”?

நான் எதுவாயிருந்தா இந்த டாக்டருக்கு என்னன்னு எனக்கு புரியல. ஆனாலும் நம்ம நண்பர் அசராமே பதில் சொல்றாரு.

”கூட வேலை பார்ப்பவரா - இல்லே இல்லே”.

அடப்பாவி, நேத்திக்கு சாயங்காலம் வரைக்கும் நானும் இவனும் ‘கலீக்’தானே. ஒருவேளை இவன் வேலையை விட்டுட்டானா அல்லது எனக்கு வேலை போயிடுச்சா, எதுவும் புரியலியேன்னு கைப்பேசியில் மின்னஞ்சலை பார்க்கிறேன். வேலையை விட்டு தூக்கினதா எதுவும் செய்தி இல்லை. அப்பாடான்னு இருந்தது.

சரி. இத்தோட நிறுத்திக்குவோம்னு நான் சொல்றதுக்குள்ளே டாக்டர் மறுபடி - ”அப்போ நண்பரா?”.

அப்பாடா. இதுக்கு கண்டிப்பா “ஆமாம்” என்று சரியான பதிலைச் சொல்லி நண்பர் பரிசை அள்ளிச் செல்வாருன்னு பார்த்தா - என் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு சொன்னாரு - “ம்ஹூம்”.

அட்றா அட்றா - இனிமே டாக்டருக்கு கேட்பதற்கு எந்த ‘ஆப்ஷனும்’ இல்லேன்னு நான் கணிச்சது சரியாப் போச்சு. டாக்டர் இப்ப டென்சனாகறாரு.

"அப்படின்னா இவர் யாரு? உங்களை இவரு ஏன் கூட்டிட்டு வரணும்?"

இப்பத்தான் நண்பர் தன் திருவாயைத் திறந்து பதில் சொன்னார்.

“இவரை சில வருடமா எனக்குத் தெரியும்.”

அதுக்கப்புறம் அந்த டாக்டர் கொட்டாவி விடக்கூட வாய் திறக்கலே. அவருக்கு என்ன புரிஞ்சுதோ எனக்குத் தெரியாது. ஆனா எனக்கு இன்று வரைக்கும் புரியாத விஷயங்களில் இதுவும் ஒண்ணு. நண்பர்(?) ஏன் அப்படி சொன்னாரு?



***



Read more...

Monday, September 5, 2011

ஆங்கிலப் படப் பாடல்கள்.




ஆங்கிலப் படங்களோட பாடல்கள் பற்றிய பதிவு இல்லை இது. தமிழ்ப் பாடல்கள்தான். அதை ஆங்கிலத்தில் ’முழி’பெயர்த்து ட்விட்டரில் விளையாடிய விளையாட்டு.


மக்கள் நிறைய பேரு சரமாரியா விளையாடி, இந்த tagஐ இந்திய அளவில் ட்ரெண்டில் கொண்டு வந்துட்டாங்கன்னா பாத்துக்குங்க.


ட்விட்டரில் இல்லாத நண்பர்களுக்காக என்னுடைய முழுபெயர்ப்பு பாடல்கள் இங்கே.


எல்லா பாட்டும் தெரியுதான்னு பாருங்க. ஏதாவது பாட்டு தெரியலேன்னா கேளுங்க.


***

With the Top-like eye, love matter she told me #englishpadamsongs

Gem-time-chain, me touching touching doing lullaby #englishpadamsongs

Yesterday you were a small girl. Today you are a fatherfather. #englishpadamsongs

I love you love you love you love you she told. my heart pick pick she went. In eye she has love camera #englishpadamsongs

To tell one word, I waited for one year. To see your eyes, I blossomed day and night. #englishpadamsongs

Dont pick the flowers. Dont break the love. #englishpadamsongs

khaki-shirt wearing brother-in-law. to do a steal, kept his cheek. #englishpadamsongs

Dont know to sing; Dont know to read; Dont even know the school; Dont know the book; Dont know the letters. #englishpadamsongs

o butterfly, butterly; why did you spread your wings? #englishpadamsongs

shell is available; gem is also available; there is no time to open it sweety #englishpadamsongs

One day is enough? is today is enough? For me singing, is today enough? #englishpadamsongs

Cucumber, tender cucumber, chandrika is going without seeing me. #englishpadamsongs

Saw a lady, after that saw the moon, there is no light in the moon #englishpadamsongs

Is it your fault? Is it my fault? who should I put the blame on? #englishpadamsongs

kakaka kikikuku kekeke kukukeke pls sing. #englishpadamsongs

Shall I keep only you inside of my heart; I promise you nothing is there inside my heart. #englishpadamsongs

In the may month of 1998, I became Major. after becoming major, I became totally bejaar. #englishpadamsongs

Oh heart. why silence? flowers. will they speak? #englishpadamsongs

Me the autodriver; autodriver; all the 4 routes I now; also a good singer. born in the same country as Gandhi. #englishpadamsongs

before stoneage; before sandage; before sea-age; the love came which is a surprise. #englishpadamsongs

papapa papapari papapa papari. New brigegroom, came good luck. New bride. came good time. #englishpadamsongs

dripping dripping getting wet Tajmahal, pls come and dry it out #englishpadamsongs

Is it me? Is somebody else? Slowly slowly am I changing? #englishpadamsongs

New sky. New land. everywhere it is snowing. whenever I came to welcome me. colorful flowers are falling hohohoho #englishpadamsongs

mustafa mustafa dont worry mustafa #englishpadamsongs

small small wish. wish to spread my wings #englishpadamsongs

OOO kick is coming up. OOO shy is gone. #englishpadamsongs

I asked for soundless pricavy. I asked for battleless world. #englishpadamsongs

why you born as a lady? why did you fall in my eyes? #englishpadamsongs

***



Read more...

Saturday, September 3, 2011

வெதர்.காம் சொன்னா வெங்கடேச பெருமாள் சொன்னா மாதிரி.


நாலு நாள் முன்னாடியிருந்தே அனைவரும் 'ஐரீன்' ஜெபத்தை துவக்கியிருந்தனர். நம்மாளு ஒருத்தர் மிக கவலையாக இருந்தார்.
சனி, ஞாயிறு ரெண்டு நாள் மட்டும் ஐரீன் வருதாம். திங்கள் மறுபடி வெயிலாம். என்ன கொடுமை இது என்றார். அவரவர் கவலை அவரவருக்கு.

நானோ, இவங்க எப்பவுமே இப்படிதான். ஐரீனால் நமக்கு ஒண்ணும் ஆகாதுன்னு சூனாபானா வடிவேல் மாதிரி கண்டுக்காமே போயிட்டிருந்தேன். நாம ஸ்டெடியா இருந்தா மத்தவங்களுக்கு பொறுக்காதே. பயமுறுத்த ஆரம்பிச்சாங்க.

இந்த தடவை புயல் பயங்கரமா இருக்கும். மின்சாரம் போயிடும். குடிதண்ணீர் கிடைக்காது. எதுவுமே செய்யமுடியாதுன்னு ஒரே டார்ச்சர்.

ஹிஹி. இதெல்லாம் ஜுஜுபி. நாங்க சென்னையிலேயே இதை விட அதிகமா பாத்துட்டோம்னா கேக்க மாட்டேன்றாங்க. மரியாதையா எல்லா முன்னேற்பாடும் செய்து வெச்சிக்கோ. அவ்வளவுதான் சொல்வேன்னு பாசமழை.

கூடவே ஒரு பழமொழி வேறே. வெதர்.காம் சொன்னா வெங்கடேச பெருமாள் சொன்னா மாதிரி.

சரி இனிமே இவங்களை சமாளிக்க முடியாதுன்னு கடைக்குப் போனா, பயபுள்ளைங்க எல்லாத்தையும் சூறையாடியிருக்காங்க. குடிதண்ணீர், பால், பழம், சூப், சிப்ஸ், பழரசம் - இப்படி எதுவும் கிடைக்கலை. இரண்டு மூன்று கடைகள் ஏறி இறங்கி கடைசியில் ஒரு கடையில் கிடைத்தது.

சனி மதியம் அனைத்திற்கும் நாங்கள் தயார்.

மெழுகுவர்த்தி/தீப்பெட்டி எடுத்து வைங்க என்றார் தங்க்ஸ். நம்ம வாய் சும்மா இருக்குமா? மெழுகுவர்த்திக்கு எகனைமொகனையா ஊதுவத்தியும் வேணுமான்னு கேட்டேன். சிறிது நேரம் காதை மூடிக் கொண்டேன்.

சனி மாலை ஆறு மணி.

மழை சீராக பெய்ய ஆரம்பித்தது. காற்று பலமாக இல்லை.

டிவிட்டரில் நம்ம ஊருக்கு கீழே இருக்கும் நியூயார்க்/ நியூஜெர்சி மக்கள் பயமுறுத்த ஆரம்பித்திருந்தார்கள். மழை பிச்சி உதறுது. மின்சாரம் போயிடுச்சு. மரங்கள் விழுது - அப்படின்னு.

சரிதான். நிஜமாவே புயல் வரப்போகுது போலன்னு நினைத்தோம்.

சனி இரவு 12 மணி:

மழை மட்டும் பலமாக பெய்தது. காற்று அவ்வளவாக இல்லை.

ஞாயிறு காலை 7 மணி:

எங்க ஊர் மேயர் ட்விட்டர், Facebook, தொலைபேசின்னு எல்லாத்திலேயும் - யாரும் வெளியே வராதீங்க. 11 மணிக்கு புயல் வருது அப்படின்னு பயமுறுத்திக்கிட்டே இருந்தாரு.

11 மணியாச்சு; 12 மணியாச்சு; 1 மணியாச்சு; புயலும் இல்லை. ஒரு பயலும் வரவில்லை.

எங்க மாநிலத்தில் கடற்கரையோரம் பிரச்னைகள் இருந்தாலும், ஊருக்குள் பெரிதாக எதுவும் ஆகவில்லை.

எங்க வீட்டு முன்னாடி சிறியதும் பெரியதுமாய் ஒரு பத்து மரங்கள் இருக்கு. அதில் ஒண்ணாவது விழும்னு நினைச்சோம். ஆனா, வெறும் குச்சி மாதிரி நிற்கும் மரங்கள் கூட விழவில்லை.

அடுத்த தடவை சென்னையில் புயல், மழைக் காலத்தில் இவங்களை கூட்டிப் போய் காட்டணும்.

*****

கீழிருக்கும் படம் எங்க பாஸ் வீட்டுக்குப் பக்கத்தில். கடல் ஒரு நூறு அடி ஊருக்குள்ளே வந்திருக்கு. அந்த ஸ்டாப் கம்பத்திற்கு பக்கத்தில் எங்க பாஸ் வீடு. பயந்துட்டே இருந்தாங்களாம். கடைசியில் ஒண்ணும் ஆகலை.


Read more...

Friday, August 26, 2011

விஜய்க்கு கதை சொல்லியவாறு காங்கிரசை வீழ்த்துவோம்.


அது எப்படி விஜய்க்கு கதை சொல்வதால், காங்கிரஸ் வீழும்னு நினைக்கிறீங்கதானே?

மேற்சொன்ன இரண்டும் சில நாட்கள் முன்னாள் டிவிட்டரில் ஓடிய தொடர்கள். பல பேர் புகுந்து விளையாடியதை அறிந்திருக்கலாம்.

அப்படி இரண்டு தொடரிலும் அடியேன் எழுதிய ட்வீட்டுகள் இங்கே.

படித்து பலன் அடையுங்கள்.

***

உறுப்பினர்களைவிட அதிக கோஷ்டிகள், அதைவிட அதிக குழப்பங்கள் கொண்ட காங்கிரஸை வீட்டில் ஓய்வெடுக்க அனுமதியுங்கள். #defeatCongress

ஐபேட்லே பிரச்னைன்னு கூப்பிடறாங்க. இந்த ஆப்பிளை யாரோ கடிச்சிட்டாங்க. அதான் பிரச்னைன்றீங்க. உடனே ஒரு பாட்டு. #StoryToVijay

அதிக வேட்டி விற்பனைக்கு அவர்கள் உதவினாலும், பொதுமக்களுக்கு காலணா பிரயோசனப்பட மாட்டார்கள். #defeatCongress

யாரோட சிகரெட் புகை மேலே போய் நீராவியாகி மழை பெஞ்சி பூமியில் வெள்ளமாய் ஓடுதோ, அவன்தான் தமிழ்னு சொல்றீங்க. #StoryToVijay

We dont expect the PM to react strongly to anything. Atleast REACT, you moron. #defeatCongress

ஹீரோயின் உங்க முன்னாடி நடக்கறா. உங்க சைக்கிள்ளே உலகத்தை சுத்தி வந்து அவ முன்னாடி நிக்கறீங்க. #StoryToVijay

வேட்டி கிழிச்சி சண்டை போடறவங்களை வெட்டி ஆபீஸர்களாக்குவோம். #defeatCongress

Graphics உதவியால் நீங்க நடிக்கறா மாதிரியே காட்டுறோம். #StoryToVijay

காங்கிரஸை ஆரம்பிச்சது ஆங்கிலேயன். அதை அழிப்பது தமிழனாக இருக்கட்டும். #defeatCongress

யாரு அடிச்சி கில்லி பறந்துபோய் நிலாவுலே முட்டி fuse போயி உலகம் இருட்டாவுதோ, அவன்தான் தமிழ்னு வசனம் பேசறீங்க. #StoryToVijay

அடுத்தவன் வேட்டியை கிழிக்கறவன் பைத்தியக்காரன். அவன் கையில் ஆட்சியை கொடுக்கக்கூடாது. #defeatCongress

ஐயா, உங்க வேட்டியை உருவிக்கிட்டு ஓடறான்//பொறுங்க. தலைமைகிட்டே கேட்டு சொல்றேன். #defeatCongress

சார். புதுசா ஒரு கதை சார். கார் விபத்து ஆகும்போது பாரசூட்லே பறந்து போய் விமானத்துலே உக்காந்துடறீங்க. #StorytoVijay

காமராஜர் ஆட்சியை கொடுப்போம். ஏண்டா, உங்களுக்கே சிரிப்பு வரலை. #defeatCongress

ஒரு பழைய மாருதி 800௦௦ வண்டியை ஒட்டிக்கிட்டு நீங்க F1 பந்தயத்துலே ஜெயிக்கிறீங்க சார். #StoryToVijay

சிரிப்பு போலீஸ் மாதிரி சிரிப்பு காங்கிரஸ் ஜோக்குகளை உருவாக்குவோம். #defeatCongress

பச்சை சட்டை, மஞ்ச சட்டை மாத்தி மாத்தி போட்டு, ரெண்டு வேடத்திற்கும் வித்தியாசம் காட்டுறோம் சார். #StoryToVijay

நாம உப்பு போட்டு சாப்பிடறவங்களா இருந்தா, ஆட்சி செய்ய துப்பில்லாத காங்கிரஸை ஒழிப்போம். #defeatCongress

We dont expect the PM to react strongly to anything. We just need a person who can atleast REACT. #defeatCongress

இப்பவாவது இலங்கையில் எண்ணையை கண்டுபிடிங்க. அடுத்த ஒரு வருடத்தில் அமெரிக்காகாரன் இலங்கையை அழிச்சிடுவான். #defeatCongress

***

Read more...

Sunday, August 21, 2011

பிக்கப் செய்வது எப்படி?


பிக்கப் - இந்த தமிழ்ச்சொல்லை சொன்னாலே, மெரினாவில், கொதிக்கிற வெய்யிலில், சூடான மணலில், குடை பிடித்தவாறு உட்கார்ந்து மாத்தி மாத்தி ‘ம். அப்புறம்?’ என்று கேட்டுக் கொண்டே இருக்கும் ஆட்களே நினைவுக்கு வரும். (நன்றி: நடிகர் விவேக்). அப்படிதான் சொல்வாங்கன்னு உனக்கு எப்படி தெரியும்னு கேக்காதீங்க. அது வேறொரு பதிவில். இப்போ பாக்கப்போற பிக்கப் வேறே.

ஊரிலிருந்து ரெயில் / விமானத்தில் வர்றவங்களை ‘பிக்கப்’ செய்வதற்காக வந்து தேவுடு காத்திருப்பதைப் பற்றியதே இப்போ பார்க்கவிருப்பது.

முதல்முறையாக அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்புகிறார் தங்ஸ். சென்னை விமான நிலையத்தில் விடியற்காலையில் சரியான கூட்டம். ஹிஹி. அனைவரும் தங்ஸை வரவேற்க வந்தவர்கள்தான். கட்டில் போட்டுக்கொண்டு பாட்டிகள் ரெஸ்ட் எடுக்க, தாத்தாக்கள் காபி குடித்துக் கொண்டிருக்க, பலர் செய்தித்தாள் பார்த்திருக்க, சிலர் ’Exit'ல் நின்றுகொண்டு,
‘இன்னும் வரலே, இன்னும் வரலே’ என்று நேரடி ஒலிபரப்பு கொடுத்துக் கொண்டிருந்தனர். நாங்கள் வெளியில் வந்ததுதான் தாமதம் - 'குலுகுலுகுலுகுலு’ன்னு குலவி சத்தம். அனைவரும் ஓடி வந்து கை கொடுத்து, கட்டிப் பிடித்து ஒரே களேபரம்தான். ஊர் கண்ணு, உறவு கண்ணுன்னு யாரோ பாடியதா நினைவு.

மற்றவர்களை பிக்கப் செய்ய வந்தவர்கள் அதை மறந்துவிட்டு, ஏதோ திரைப்பட ஷூட்டிங் நடக்குதுன்னு நினைச்சி எங்களையே
பாத்துக்கிட்டிருந்தாங்க. வீட்டுக்குப் போய் போட்ட சத்தத்தில், அடுத்த முறையிலிருந்து யாருமே வருவதில்லை. நாங்களே வெளியே வந்து ஒரு ஆட்டோ பிடிச்சி வீட்டுக்குப் போற நிலைமைக்கு வந்துட்டோம். ஆனாலும், அந்த முதல் ‘பிக்கப்’பை என்னால் மறக்கவே முடியாது.

இந்த கும்பல் பிக்கப் ஒரு மாதிரின்னா, ரொம்ப வருஷம் முன்னாடி நடந்தது வேறொரு மாதிரி.

வேலைக்காக நண்பனும் நானும், சென்னை-தில்லி விமானத்தில் அடிக்கடி போய்வந்த காலம். தில்லி வி. நிலையத்தில் இறங்கி வெளியில் வரும்போது, வரவேற்க நிறைய பேர் வந்திருப்பாங்க. அட, அவங்கல்லாம் மற்றவர்களை வரவேற்க வந்தவங்க. எங்களுக்கு தெரிஞ்சவங்க யாருமே கிடையாது.

ஆனாலும் நண்பன் விடமாட்டான். கையை உயர்த்தி, குதித்து குதித்து யாருக்கோ ‘ஹாய்’ சொல்லிக்கொண்டே நடந்து வருவான். டேய், யாருக்குடா கையை காட்டுறே? யாராவது தெரிஞ்சவங்க இருக்காங்களான்னா, அதெல்லாம் ஒண்ணுமில்லை சும்மா நானே கைகாட்டிக்கிட்டு இருக்கேன் - என்பான். ஏண்டா இப்படின்னா, பின்னே இவங்களுக்கெல்லாம் பிக்கப் செய்ய இவ்வளவு பேர் வந்திருக்கும்போது நாம மட்டும் தனியா ஏன் வரணும்? தவிர, நான் யாருக்கு கைகாட்டுறேன்னு யாருக்குமே தெரியாது. அப்புறம் எதுக்கு பயப்படணும்? நீயும் டாட்டா காட்டிக்கிட்டே வா என்பான். வெளியே வந்து ஆட்டோ பிடிக்கற வரை அவன் ‘ஹாய்’ நிற்காது.

Flash-front.

இந்தியாவில் வந்து இறங்கும்போது நிறைய பேர் பிக்கப் செய்ய வருவாங்க. ஆனா, அமெரிக்கா வந்து இறங்கும்போது யாருமே இருக்கமாட்டாங்க. அந்த நண்பனின் ‘ஹாய்’தான் கைகொடுக்கும். இந்த பிரச்னையை தீர்க்கவும் ஒரு வழி செய்தோம்.

நண்பர் x வரும்போது y போய் பிக்கப் செய்யவேண்டும். அடுத்த தடவை y ஊரிலிருந்து வரும்போது x போய் அழைத்து வருவார். இந்த முறையில் சில தடவைகள் பிக்கப் நடைபெற்றது.

என்ன இருந்தாலும், கிட்டத்தட்ட 20 மணி நேரம் விமானத்தில் பேச, சிரிக்க ஆளில்லாமல் உட்கார்ந்து, வந்து இறங்கியதுமே, ஒருவர் பிக்கப்பிற்கு வந்து, எப்படி இருந்துச்சு பயணம்? ஜன்னல், கின்னலை திறந்துடலியே? பறக்கும்போது ட்ராபிக் ஜாம் ஒண்ணும் இல்லையே? என்று மொக்கை ஜோக் போட்டா, ஊரு விட்டு ஊரு வந்திருக்கோம்ற நினைப்பை கொஞ்சம் குறைக்கலாம். அவ்வளவுதான்.

***

பிகு: ரயில் பிக்கப் பற்றிய நினைவுகள் இன்னொரு பதிவில்.

***

Read more...

Thursday, August 18, 2011

இது ஒரு குப்பை மேட்டர்!


அமெரிக்கா வந்து இறங்கியதும் எங்களுக்குப் பிடிச்சது - சுத்தம். தெரு, பூங்கா, கடைகள் எங்கு பார்த்தாலும் சுத்தம் x 3. குப்பைகளை கண்ட கண்ட இடங்களில் போடமுடியாது. அதுமட்டுமல்லாமல், அந்த குப்பைகளை தரம் பிரித்து வெவ்வேறு தொட்டிகளில் போடவேண்டியிருக்கும்.

1. மக்கும் பொருட்கள் தனியாக
2. காகிதங்கள், அட்டை பெட்டிகள் தனியாக
3. இதர குப்பைகள் தனியாக

இப்படி 3 தொட்டிகள் வைத்திருப்பாங்க. அதில்தான் போடணும். ஒவ்வொரு தொட்டிக்கும் அதற்குண்டான குப்பை வண்டிகள் வந்து காலி செய்து எடுத்துட்டு போயிடுவாங்க. இப்படித்தான் 4+ வருடமா நடந்திட்டிருந்தது. ஆனா 2 மாதத்திற்கு முன் திடீர்னு ஒரு மாற்றம். மேலே சொன்ன 1, 2, 3 எல்லாத்தையும் ஒரே தொட்டியில் போட சொல்லிட்டாங்க. காலையில் 5 மணிக்கு ஒரு வண்டி வந்து மொத்தமா அள்ளிக்கிட்டு போயிடும்.

ஏம்மா இப்படி ஆயிடுச்சுன்னு, எங்க வீட்டுக்காரம்மாகிட்டே (house owner!) கேட்டேன். ஒப்பந்தக்காரர் சொன்னபடிதான் செய்யறோம். இந்த குப்பைகளை அவங்க இடத்தில் போய் தரம் பிரிச்சிப்பாங்கன்னு சொன்னாங்க. ஏம்மா, இங்கே பிரித்து எடுத்துட்டு போறது சுலபமா, இல்லே ஊர் குப்பைகள் எல்லாத்தையும் ஒரு இடத்துலே போட்டு அங்கே பிரிக்கறது சுலபமா? யோசிச்சி சொல்லுங்கன்னேன்.

அவங்களுக்கு சுர்ர்ன்னு கோபம் வந்துடுச்சு. ஊர் முழுக்க இப்படித்தான் பண்றாங்க. உனக்கு என்ன போச்சு? சொல்றதை செய்ன்னு சொல்லிட்டாங்க.

சரிதான், எப்படியும் எல்லாத்தையும் ஒரே கண்டெய்னர்லே போட்டு, தூத்துக்குடிக்குதான் அனுப்ப போறாங்க. அதை எதுக்கு இங்கே உட்கார்ந்து வெட்டியா பிரிச்சிக்கிட்டு, செலவு செஞ்சிக்கிட்டுன்னு அந்த செலவையும் குறைச்சிட்டாங்க போலன்னு நினைச்சிண்டேன். அந்தம்மாகிட்டே சொல்லவில்லை.

டிஸ்கி: நிஜம் என்னன்னு எனக்கு தெரியாது. உண்மையாகவே ஓரிடத்தில் குப்பைகளை தரம் பிரித்து அதை உரியமுறையில் சுழற்சி செய்யலாம். ஆனா, அமெரிக்காவிலிருந்து தூத்துக்குடிக்கு இப்படி நிறைய குப்பைகள் வந்து சேர்கின்றன என்று செய்திகளில் பலமுறை படித்துள்ளதால், இப்படி நினைக்கத் தோன்றியது.

***

பலப்பல வருடங்களுக்கு முன் பதிவு துவக்கும்போது ஆர்வக்கோளாறில் ‘ச்சின்னப்பையன்’னு பேர் வெச்சி ஆரம்பிச்சேன். இந்த மாதிரி ‘ச்’ முதலில் வரக்கூடாதுன்னு சிலர் சொன்னாங்க. அப்புறம் மறந்துட்டாங்க. நானும் விட்டுட்டேன். ஆனா இன்னிக்கு ட்விட்டரில் திடீர்னு என் பெயர் பிரச்சினை ’அடி’பட்டிருக்கு.

நண்பர் @tamilravi இப்படி ஒரு ட்விட் போட்டிருந்தாரு.

”@TPKD_ @nchokkan @karthi_1 சோளி சரி.ச்சின்னப்பையன் என்று தமிழ்ச் சொல்லையே சிதைக்கும் கொடுமையையும் பார்த்திருக்கிறேன்.”

இதை படிச்சதும் மனசுக்கு ரொம்ப கஷ்டமா போயிடுச்சு. அதனால், இன்றிலிருந்து என் பேரை மாத்திக்கிட்டேன். முழுசா இல்லீங்க. அந்த ‘ச்’ மட்டும் எடுத்துட்டேன். அவ்வளவுதான்.

ஆனா நீங்க உங்க ஆதரவை மாத்தாமே தினமும் வந்து போயிட்டிருங்க.

***

Read more...

Monday, August 15, 2011

ஏக் காவ்ன் மே ஏக் கிசான்...


இந்தி பிரசார் சபாவின் ப்ரவேஷிகா தேர்வில் ஒரு நேர்முகத் தேர்வும் உண்டு. கேள்விகள் இந்தியில். பதிலும் இந்தியில் சொல்லணும். இதுக்கு என்னை தயார்படுத்தறேன்னு சொல்லி, வீட்டில் இருந்தவங்க கண்ட கண்ட கேள்வியெல்லாம் கேட்டு பதில் வாங்கினாங்க. தேர்வு நாள் வந்தது. என் முறையும் வந்தது. உள்ளே போனேன்.

ஒரு தாத்தா அமர்ந்திருந்தார். முதல் கேள்வி. இந்தியில்தான்.

”எதுக்கு நீ இந்தி படிக்குறே?”

தேர்வுன்னாலே நாம படிக்காத கேள்விதான் வரும் என்கிற பொதுவான விதி இங்கேயும் பொருந்திவிட்டது. எனக்கு பதில் தெரியல. மேலே கீழே பாக்குறேன். இடம் வலம் பாக்குறேன்.

அவரோ நக்கலாக - ம்? என்கிறார்.

டக்குன்னு எனக்கு பதில் தெரிஞ்சிடுச்சி. சொல்றேன்.

“பூத் கால் மேன் உபயோக் ஹோகா“. (Booth kaal mein upayog hoga).

திடீர்னு பறவைகள் பறப்பதை நிறுத்தின. காற்று வீசுவதை நிறுத்தியது. அலைகள் நின்றுவிட்டன. மனிதர்கள் சிலையாயினர். எங்கும் பேரமைதி. தாத்தா கண்ணைத் திறந்துகொணடே, குண்டலினியை டக்குன்னு மேலே தூக்கிட்ட மாதிரி என்னை அப்படியே பாத்தாரு. அந்த கண்களில் ஆனந்தம், அதிர்ச்சி, சந்தோஷம், சந்தேகம் - இப்படி எல்லாவித உணர்ச்சிகளும்
அப்படியே கொப்பளிக்குது.

நான் அப்படி என்ன சொல்லிட்டேன்னு இப்படி நவரசத்தை காட்டுறீங்கன்னு நானும் கண்களாலேயே கேக்குறேன். (அந்த அறையில் இருக்கும்போது இந்தியில்தான் பேசணும் ; ஆனால் இந்த கேள்வியை எப்படி கேட்பதுன்னு எனக்கு தெரியல. அதனால் கண்ணாலேயே கேட்டேன். எப்பூடி!).

அவரு ‘ம்ஹூம்’ அப்படிங்கறாரு. அடுத்த கேள்விக்கு நான் என்னை தயார் படுத்திக்கறேன். அவரோ, தேர்வு முடிஞ்சிடுச்சு. நீங்க போகலாம். நான் மதிப்பெண் போட்டாச்சுங்கறாரு. ஒரு குக்கர் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்கிற பழமொழி எனக்கு ஞாபகம் வந்துச்சு. ‘தன்யவாத்’ (நன்றி) சொல்லிட்டு, நான் வெளியே வந்துட்டேன்.

வீட்டுக்கு வந்து நடந்ததை சொன்னேன். வடிவேலு கதையைக் கேட்டு அனைவரும் ‘எஸ்’ஸாவதைப் போல, நான் சொன்ன பதிலைக் கேட்டு இங்கேயும் அனைவரும் ‘எஸ்’ஆக, ஒருவர் மட்டும் நின்று - வெண்ணை, நீ சொன்னது ‘நான் இந்தி எதுக்கு கத்துக்கறேன்னா, இறந்த (கடந்த) காலத்தில் நன்றாக பயன்படும் என்பதால்தான்’ன்னு சொல்லியிருக்கே. @#$$@
@#$$ அப்படின்னு திட்டிப்புட்டாரு. எதிர்காலத்தில்னு சொல்வதற்கு பதில் இறந்த காலத்தில்னு சொல்லியிருக்கேன். அப்பாவாச்சே. திருப்பி எதுவும் சொல்ல முடியல.

ஆனாலும், அந்த தாத்தாவுக்கு என்மேல் தனி பாசம் இருக்கும்போல. தாத்தா, நான் பாசாயிட்டேன்.

அன்னிக்கு ஒரு சபதம் போட்டேன். என் கதி, என் வாரிசுக்கு வரக்கூடாது. அவங்க இந்தி நல்லா படிச்சி பெரிய்ய ஆளாகணும். தப்பில்லாமே பேசணும், எழுதணும்னு. அதுக்காக என்னல்லாம் பண்ணனுமோ, அதை பண்ணனும்னு முடிவு பண்ணேன்.

***

நிற்க. இப்போ சஹானாவுக்கு இந்தி சொல்லிக் கொடுக்கணும். இப்பல்லாம் சென்னை பள்ளிகளில் நிறைய பேர் இரண்டாம் மொழிக்கு தமிழுக்கு பதிலா இந்தி அல்லது சமஸ்கிருதம்தான் எடுக்கறாங்களாமே. அதுலேதான் 100க்கு 100 கிடக்குமாம்.

அந்த இரண்டுக்கும் எழுத்து ஒண்ணுதாங்கறதால், நானும் இவங்களுக்கு இந்தி(யும்) சொல்லிக் கொடுப்பதுன்னு முடிவாயிடுச்சு.

உலகத்தில் எங்கே வேணா 'outsourcing' வேலைக்காவும், ஆனா தங்ஸ்கிட்டே மட்டும் ஆகாது. நீங்கதான் சொல்லிக் கொடுக்கணும். அதனால், மரியாதையா உக்காந்து வேலையை பாருங்கன்னு சொல்லிட்டாங்க.

ஒரு checklist உருவாக்கலாம்னு முடிவாச்சு. அதை சுவரில் ஒட்ட வெச்சி, தினமும் போகவர பாத்துட்டிருந்தா, எல்லாம் நினைவில் இருக்கும்னு யோசனை (நான் எனக்குச் சொன்னேன்!). ஒரு நாள் முழுக்க உட்கார்ந்து, பல இணையதளங்களை பார்த்து இதை உருவாக்கினேன். நான் நானேதான்.

இதோ இங்கிருப்பதுதான் அந்த checklist. பார்த்து பயன்பெறுங்க.


***


















***

Read more...

Saturday, August 13, 2011

தமிழர்னா தமிழ்லேதான் பேசணுமா?


எங்க ஊரே மொத்தம் 10 கிமீ சுற்றளவுதான் இருக்கும். தமிழர்கள் (எனக்குத் தெரிந்து) சுமார் 15 குடும்பங்கள் இருக்கலாம். இது ஒரு தகவலுக்காக சொல்கிறேன்.

***

நாங்க இந்த ஊருக்கு வந்த புதுசு.

அந்த நண்பரை பார்த்தாலே தமிழர் என்று தெரிந்துவிடும். தெரிந்தது. போய் பேசினேன். அட, நீங்களும் தமிழ்தானா என்று பேசினார். தொலைபேசி எண்கள் / மின்னஞ்சல் முகவரிகள் பகிரப்பட்டன. பிறகு சிறிது நாட்கள் இருவரும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தோம்.

இரண்டாவது சந்திப்பும் நடந்தது. ஒரு பேரங்காடியில் இருந்தவரை சென்று, ஹலோ என்றேன். உடனே ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். நானோ - அட என்னங்க, என்னைத் தெரியலியா, நாம்தான் அன்னிக்கு பாத்துக்கிட்டோமே என்றேன் தமிழில். ஓ சாரி சாரி, மறந்துட்டேன் - என்றவாறு தமிழில் பேசினார். சரி போகுதுன்னு விட்டுட்டேன்.

உலகம் உருண்டைன்னா, எங்க ஊரும் உருண்டைதானே. மூன்றாவது முறையும் பார்த்துக் கொண்டோம். இப்போதும் ஆங்கிலத்தில் கதைத்தார். எனக்கு சரியான கோபம். நான் தமிழில் பேசப்பேச, அவர் ஆங்கிலத்தில் பதில் அளித்துக் கொண்டிருந்தார். அது கூட பரவாயில்லை, அவர் கடைசியாக சொன்னது - ஒரு நாளைக்கு 100 பேரை பார்க்கிறோமா, அதனால், யாரு தமிழ்? யாரு ஆங்கிலம்னு தெரியல என்றார்.

இப்போது ஒரு முறை பதிவின் முதல் பத்தியை படிக்கவும். இருப்பதே 10-15 பேர்தான். அதிலும் ரெண்டு தடவை பார்த்து தமிழ்லே பேசியிருக்கோம். அதெப்படி அதுக்குள்ளே என் மூஞ்சி மறக்கும்? இனிமே இவன்கூட பேசப்போறதேயில்லை என்று தங்ஸிடம் கோபத்துடன் கூறினேன்.

இதுக்கு போய் எதுக்கு இப்படி கோவிச்சிக்கிறீங்க என்ற தங்ஸுக்கு நான் சுற்றிய கொசுவர்த்தி இதோ.

தில்லியில் இருக்கும்போது நாங்க 30 பேர் [கன்னிப்பசங்க] ஒரே வீட்டில் இருந்தோம். தமிழ், தெலுங்கு, ஒரியா இப்படி பல மாநிலங்களைச் சேர்ந்தவங்க அங்கே இருந்தோம். ஒரே ஒரு தொலைக்காட்சிப் பெட்டி. தெலுங்கர்கள் சமாதானமடைந்தாலும், அந்த ஒரியாக்காரர் ’இந்தி’தான் பாக்கணும்னு அடம் பிடிப்பார். இதுக்காகவே, அவருக்கு தமிழ் கற்றுக் கொடுத்து, மெட்டிஒலி
பார்க்கும் அளவுக்கு கொண்டு வந்து விட்டோம்.

அப்படி ஒரியாக்காரரையே தமிழ் பேச வைத்த காலம் போய், இந்த தமிழரை தமிழ் பேச வைக்க வேண்டியிருக்குதே என்று வருந்தினேன்.

கொசுவர்த்தி முடிந்தது.

பிறகு அந்த தமிழரை பார்ப்பதையே தவிர்த்தேன். நம்ம மூஞ்சி மறந்தவங்ககிட்டே நமக்கு என்ன பேச்சு?

அப்புறம் ஒரு நாள் - ஒரு படத்தில், கேப்டனும் சிம்ரனும் ஒரு ஆற்றுப்பாலத்தில் நேருக்கு நேர் சந்தித்ததைப் போல் நானும் அவரை சந்தித்தேன். மாட்டிக் கொண்டேன். ஆனால், இன்ப அதிர்ச்சி. இப்போது தமிழில் பேச ஆரம்பித்தார்.

சிரித்துக்கொண்டே நான் கேட்டது - ஏங்க, இன்னிக்கு 99 பேரைத்தான் பாத்தீங்களா? நான் தமிழ்னு எப்படி தெரிஞ்சுது?

கோபம் வரும்னு நினைத்தாலும், அப்படியில்லை. பகபகவென்று சிரித்த நண்பர் - சரி சரி. மறுபடி மன்னிச்சிடுங்க. இனிமே மறக்கவே மாட்டேன் என்று சத்தியம் செய்தார்.

பிறகு தமிழ் தமிழ் தமிழ்தான்.

வேலை மாறி வேறொரு ஊர் போனபிறகு மின்னஞ்சல் அனுப்ப ஆரம்பித்தார். ஆங்கிலத்தில்.

இப்போது மறுபடி தகராறு செய்ய ஆரம்பித்திருக்கிறேன். தமிழில் தட்டச்சி அனுப்புங்க. இல்லேன்னா பதில் போடமாட்டேன்.

அனுப்பறேன்னு சொல்லியிருக்கார். அனுப்புவார்.

***

Read more...

Monday, August 1, 2011

நன்பேண்டா - 1

சிலபல ஊர்களில், பலசில வருடங்களாக வேலை செய்வதால், வாழ்க்கையில் நிறைய நண்பர்கள் வந்து போவதுண்டு. ஓரிரு வருடங்கள் நட்பு பாராட்டியவர்களும் உண்டு - ஓரிரு நாட்களில் துண்டித்துப் போனவர்களும் உண்டு. பல துன்பமான நேரங்களில் மிகப்பெரிய உதவி செய்தவர்களும் உண்டு - இன்பமான நேரங்களில் காதுக்கினிய(!) வார்த்தைகளால் துன்புறுத்திவிட்டு சென்றவர்களும் உண்டு.

அப்படிப்பட்ட சில (எனக்கு) இன்பமான கணங்களையும், பல (அவர்களுக்கு) இன்பமான கணங்களையும் வரப்போகிற பதிவுகளில் பார்க்கலாம்.

***

ஒரு நெருங்கிய நண்பர். இவரை x என்றழைப்போம். தமிழர்தான். இருவரும் சேர்ந்து ஊர் சுற்றுவது, கலாட்டா செய்து பேசிக்கொள்வது என்று நன்றாக பொழுது போய்க் கொண்டிருந்தது.

ஒரு நாள் மதியம், ஒரு கடையில் நாங்கள் மேய்ந்து கொண்டிருந்தபோது, xம் குடும்பத்துடன் வந்திருந்தார். பேச்சுவாக்கில் நான் கேட்டேன் - ”இன்னிக்கு சாயங்காலம் என்ன ப்ரோக்ராம்?. சும்மா இருந்தீங்கன்னா வீட்டுக்கு வாங்களேன்”.

அந்த ஊருக்கு வந்த புதிதில் அதிகப்பிரசங்கித்தனமாய் (நன்றி: தங்ஸ்) எல்லோரிடமும் எங்கே போறீங்க, எங்கே வர்றீங்க, அது என்ன பையிலே - இப்படி ஏதாவது கேட்டுக் கொண்டிருப்பேன்.

அவர் உடனே மறுத்து - ”இல்லேப்பா. இன்னிக்கு ஒரு டின்னர் இருக்கு. நாளைக்கு வேணா வர்றேன். சேர்ந்து சாப்பிடுவோம்” என்றார்.

நான் (மறுபடி அ.பி.) - ”ஹை. வெளியில் சாப்பாடா? ஜாலிதான். எங்கே டின்னர்?”

அவர் - ”அந்த நண்பரை உனக்குத் தெரியாது. ஊருக்கு புதுசா வந்திருக்கார். இன்னொரு நாள் அறிமுகப்படுத்தி வைக்கிறேன்".

பிறகு சிறிது நேரம் பேசிவிட்டு போனார்.

அதற்குப்பிறகுதான், எனக்கு என் இன்னொரு நண்பர் (y), இரவு தன் வீட்டுக்கு சாப்பிடக் கூப்பிட்டிருப்பது நினைவுக்கு வந்தது. ஆனா, அது அன்றைக்குத்தானா, அடுத்த நாளான்னு ஒரு ச்சின்ன சந்தேகம். வீட்டுக்கு ஓடி வந்து மின்னஞ்சல் பார்த்தா - அன்றைக்கேதான். நல்லவேளை, நமக்கும் ஒரு டின்னர் மாட்டிக்கிச்சு. சாப்பாடும் ஆச்சு (அதுதானே முக்கியம்!) பொழுதும் போன மாதிரி ஆச்சுன்னு சந்தோஷமா அந்த வீட்டுக்குப் போனோம்.

நிறைய தமிழ் சினிமா / தொலைக்காட்சி தொடர்கள் பார்க்கிற எல்லோரும் இப்பவே கண்டுபிடிச்சிருப்பீங்க. கரெக்ட்.

நண்பர் xம் அதே வீட்டுக்கு வந்திருந்தார். y என்பவர், எனக்கும் xக்கும் தெரிந்த பொதுவான நண்பர்தான்.

பிறகென்ன, ஹிஹிதான். நான் இல்லேப்பா. அவரு.

இரவு வீட்டுக்குத் திரும்பி வந்த தங்ஸுக்கு அடுத்த 2 நாள் வரை கோபம் போகவில்லை. ”நம்மகிட்டேயே எப்படி பொய் சொல்றாங்க பாருங்க. உண்மையை சொல்லியிருந்தா, நான் என்ன கூடவே வர்றேன்னா சொல்லியிருப்பேன். இப்படி அல்பமா இருக்காங்களே”.

ஹிஹி. தங்ஸுக்கு தெரியாது - y வீட்டுக்குத்தான் போறேன்னு x சொல்லியிருந்தா, நானும் வர்றேன்னு கூடவே கிளம்பியிருப்பேன் - அல்பம் மாதிரி!

*****

Read more...

Saturday, July 23, 2011

#P10KS

ட்விட்டரில்தான் இதை தினமும் போட்டு அறுத்தாச்சே, மறுபடி ப்ளாக்கிலுமான்னு கேக்காதீங்க. இது ரொம்ப நாள் முன்னாடியே அடிச்சி வெச்ச பதிவு. அதனால் தயவு செய்து படிச்சிடுங்க. நன்றி.

***

ஐதராபாத், தில்லி, நொய்டா, இப்போ இருக்கிற டேன்பரி - இப்படி வேலைக்காக போன இடங்களிலெல்லாம், போனவுடனேயே நான் தேடும் இடங்கள் இரண்டு. 1. முடிதிருத்தகம். 2. ஜிம். முதலாவது எதுக்குன்னு உங்களுக்கே தெரியும். இப்போ நாம் பேசப்போவது இரண்டாவதைப் பற்றி மட்டும்.

ஜிம்மை தேடுகிறேன்னு சொன்னவுடன், நான் பீமபுஷ்டி லேகிய விளம்பரத்தில் வருபவரைப் போலவோ, biceps, triceps காட்டியவாறு சஞ்சீவி மலையை தூக்கிக்கொண்டு ABT பார்சல் சர்வீஸில் பறந்துபோறவரைப் போல் (நன்றி: அணில்) இருப்பேன் என்று நினைக்க வேண்டாம்.

என்னுடைய ‘பலத்திற்கு’ ஒரே ஒரு சான்று இதோ.

சென்னையில் டிவிஎஸ்-ஐம்பது என்னை ஓட்டிக் கொண்டிருந்த காலம். வேகமாய் போய்க் கொண்டிருக்கும் பல்லவன் பக்கத்தில் அடிக்கடி வண்டியோடு போவேன். உள்ளேயிருந்து நடத்துனர் - தம்பி, வண்டியோட இதில் ஏறக்கூடாது, அதை விட்டுட்டு வாங்கன்னு சொல்ற அளவுக்கு பேருந்தில் உரசுவேன்.

அட, நானா வரலேங்க. அந்த பேருந்தின் ஈர்ப்பு விசையில் என் ச்சின்ன
வண்டி ஈர்க்கப்பட்டு, நான் ஒருவன் அதன் மேல் இருப்பதையே கணக்கில் கொள்ளாமல், அது பாட்டுக்கு போவதால் வந்த விளைவுன்றது நீங்க புரிஞ்சிக்கணும்னு சொல்லுவேன்.

ஓகே. இப்ப புரியுது. அப்புறம் உனக்கு ஏன் ஜிம் மேல் இந்த அக்கறை? உங்க வீட்டில் யாருக்குமே இல்லாத அக்கறைன்னு பராசக்தி வக்கீல் பாணியில் கேட்டீங்கன்னா? -- ஹிஹி. ஜிம் எந்த தெருவில் இருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டா, பிறகு அந்த தெருவிலேயே போகாமல், மாற்றுப்பாதையில் போகலாம் பாருங்க அதனால்தான்.

ஆனா அப்படி நடக்கலை. என் வாழ்விலும் விதி விளையாடியது.

கூட இருந்த நண்பர்கள் அன்புத் தொல்லையால் எல்லா ஊரிலும் ஜிம்மில் சேர்ந்தேன். பிறகு சொந்த முயற்சியில், கஷ்டப்பட்டு, அரும்பாடுபட்டு, ஒரே மாதத்தில் போகாமல் நிறுத்தினேன்.

***

இந்த ஊரிலும் ஒவ்வொரு கோடை காலத்திலும் ஏதாவது உடற்பயிற்சி செய்ய ஆரம்பிப்பது வழக்கம். பிறகு அதை நிறுத்த ஏதாவது சாக்கு தேடுவதும் வழக்கம்!.

இப்படியாக இருக்கும்போது இணையத்தில் நண்பர் @nchokkan #P10KS என்ற இயக்கத்தை துவக்கினார். நானும் அதில் இணைந்தேன்.

போங்க போங்க, ஒரு பத்து நாள்கூட நடக்க மாட்டீங்கன்னு ஆசிர்வதித்த தங்ஸின் மூக்கை உடைத்து 51 நாட்கள் நடந்தேன்.

எப்படி இப்படின்னு அவர் ஆச்சரியத்துடன் - வீட்டு வேலைகளைக் கூட மறந்து - (தன்) கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்து விட்டதால், நானும் என் நடைப்பயிற்சியை முடித்துக் கொண்டேன்.

***

ஆனால், நான் நடந்ததற்கான உண்மையான காரணத்தை இணைய நண்பர்களுக்காக இதோ சொல்கிறேன். அது, காலை நேரத்தில் என்னுடன் கூடவே நடந்த சக நடைப்பயிற்சியாளினிகள்தான். முதலில் கண்ணோடு கண் நோக்காமல் - பிறகு, நோக்கினாலும் முறைத்து நோக்கி நடந்த அந்த இளம்பெண்கள், போகப்போக நன்றாக சிரிக்க ஆரம்பித்தார்கள்.

கடைசி நாளன்று, நாளை முதல் நான் வரமாட்டேன் என்று சொல்லிவிடலாம் என்று பார்த்தேன். பிறகு அவர்கள் நடு ப்ளாட்பாரத்தில் புரண்டு புரண்டு அழுதால், அதைக்கண்டு என் பிஞ்சு மனம் தாங்காது என்பதால், சொல்லிக்கொள்ளாமலேயே விடைபெற்றேன்.

நான் போகாத நாளில், அவர்கள் எப்படி வருத்தப்படுவார்கள் என்றெண்ணியே நான் வருத்தம் கொள்கிறேன்னு சொன்னால், நீங்க வருத்தப்படுவீங்க என்பதால்.. ஸ்ஸப்பா.. இத்தோட முடிச்சிக்கறேன்.

***

பாருங்க, கடைசியில் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லவே மறந்துட்டேன். அந்த இளம்பெண்கள்னு சொன்னேனே,

அவர்கள் இப்பத்தான், சமீபத்தில் ஒரு 30-35 வருடம் முன்னாடி இளம்பெண்களா இருந்தவங்க.

இப்ப திருப்திதானே?

***

Read more...

Friday, February 11, 2011

சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

அது என்ன சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...?

பெருசா ப்ரேக் போட்டா அப்படித்தானே சத்தம் வரும்?
அதே மாதிரிதான் பூச்சாண்டியிலும் ஒரு பெரிய ப்ரேக்.

கொஞ்ச நாள் கழிச்சி பாக்கலாம். அதுவரை என்ஜாய் மாடி.

****

தெரிஞ்சது மறந்து போயிடக் கூடாதுன்னு இன்னொரு இடத்தில் பதிய ஆரம்பிச்சிருக்கேன்.

இங்கே பாருங்க. பிடிச்சிருந்தா மறுபடி வந்து பாருங்க.

****

Read more...

Sunday, January 16, 2011

கும்பகர்ணனும் நானும் தோஸ்து..



அமெரிக்காவில் பேச்சிலராக இருந்த நாட்களில் ஓர் இரவு. 11 மணி. கூட இருந்த ஒரு நண்பன் இந்தியாவுக்கு தொலைபேசறேன்னு தவறுதலா 911 அடிச்சிட்டான். பத்து நிமிடத்தில் போலீஸ் வந்துடுச்சு. வெளியில் அழைப்பு மணி அடிச்சி, உள்ளே வந்து, வீட்டிலுள்ளவர்களை விசாரித்து, வீட்டில் யாராவது பதுங்கியிருக்காங்களான்னு இண்டு இடுக்கு முழுக்க பாத்துட்டு, அரை மணி கழிச்சி போயிருக்காங்க. இதெல்லாம் எனக்கு காலையில் நண்பன் சொல்லித்தான் தெரியும். ஏன், அப்போ நீ வீட்டில் இல்லையான்னு கேக்காதீங்க. ஹிஹி. நானும் அதே வீட்டில்தான் இருந்தேன். ஆனா தூங்கிட்டு இருந்தேன். அதனால் எனக்கு எதுவும் கேக்கலே. தெரியலே.

இப்ப புரியுதா? தூங்கணும்னு படுத்தா 5ஏ நிமிஷத்தில், என் சொந்த மாயக்கம்பளத்தில் ஏறி கனவுலகில் பறக்க ஆரம்பிச்சிடுவேன். அப்புறம் யார் வந்து எழுப்பினாலும், ம்ஹூம். தங்ஸ் கேப்பாங்க. இப்படி தூங்கும்போது ஆத்திர அவசரத்துக்கு உங்களை எப்படி எழுப்பறது? ஜெமினியை கமல் அப்படியே அலேக்கா தூக்கிட்டு போவதுபோல் தூக்கிட்டுப் போயிடு. 7 மணி நேரம் ஆனதும், நானே முழுச்சிப்பேன். ஒண்ணும் பிரச்சினையில்லேன்னு சொல்லி திட்டு வாங்கறது என் வழக்கமா ஆயிடுச்சு.

ஆனாலும் அம்மாவுக்கும் பொண்ணுக்கும் என் தூக்கத்தில் மேல் பொறாமையாதான் இருந்துச்சு. என்ன பண்ணலாம்னு யோச்சிட்டே இருக்கும்போதுதான், அந்த பிரச்சினை வந்தது. கும்பகர்ணனே வந்து எழுப்பினாலும் எழுந்துக்காத நான், அந்த கும்பகர்ணனின் தூக்கத்தையே கெடுக்கற மாதிரி ‘கொர் கொர்’ விட ஆரம்பித்தேன்(னாம்). நான் நம்பவில்லை. தங்ஸும் பொண்ணும் ஆமா.. பயங்கர சத்தமா இருக்கு. எங்களால் தூங்கவே முடியலே.. நிறுத்துங்கன்னு கதற ஆரம்பிச்சாங்க.

ஏதாவது சொல்லி சமாளிச்சாகணுமே.

இப்போ கஷ்டமாயிருக்குன்னு சொல்வீங்க. நான் கொர்கொர்ரை கஷ்டப்பட்டு நிறுத்தினபிறகு, இந்த சத்தம் இல்லாமே தூக்கமே வரலேன்னுவீங்க. அதனால், பேசும்படம் கமல் மாதிரி இப்பவே இதை ரெகார்ட் பண்ணி வெச்சிக்குங்க. அப்புறம் உதவும்னு சொல்லிட்டு ஓடிடுவேன்.

இந்த கொர்கொர்ரை நிறுத்துவதற்கு என்ன செய்யறதுன்னு 2 பேரும் கூகுளிட்டு பார்க்க ஆரம்பிச்சாங்க. தலையணை உசரமா இருந்தா கொர் வராதுன்னு போட்டிருந்தானாம். உடனே வால்மார்ட் போய் 4 ஸ்பெஷல் சாதா தலையணை பார்சல்.4 தலையணைகளை வெச்சிக்கிட்டு ’படுத்து’ தூங்க முடியுமா. உக்காந்துதான் தூங்கணும். அவ்வளவு உசரத்திலிருந்து பக்கத்தில் உன் மேல் விழுந்தா என்னை சத்தம் போடக்கூடாதுன்னு அபாயமணி அடிச்சிட்டேன். உங்க கொர்ருக்கு அது எவ்வளவோ பரவாயில்லை. ஒரு கையால் தள்ளிவிட்டு(!) மறுபடி படுத்துடுவேன்னு சொல்லி 4ஐ கொடுத்துட்டாங்க. சரி ரெண்டு நாளைக்கொரு தடவை ஒவ்வொண்ணா குறைச்சிக்கலாம்னு சொல்லி 4 - 3 - 2லே வந்து நிக்குது. இப்ப கொர்கொர் இல்லையாம். அவங்க நிம்மதியா தூங்கறாங்க.

என் கொர்கொர்ரை நிறுத்திவிட்டு அவங்க எப்படி நிம்மதியா தூங்கலாம்? இப்பவே கூகுளுக்கு போறேன். எப்படி குறட்டை விட ஆரம்பிப்பதுன்னு யாராவது எழுதாமேயா இருக்கப் போறான்? இல்லேன்னா 30 நாட்களில் குறட்டை விடுவது எப்படின்னு யாராவது (அவங்க?) புத்தகம் போட்டிருக்காங்களான்னு பாக்கணும். நீங்க யாராவது உதவி பண்ணுவீங்களா?

நன்றி.

Read more...

Monday, January 10, 2011

ISO 9000 - நானே கேள்வி நானே பதில்!

ISO - ஒரு முன்குறிப்பு?

** ISOவின் விருவாக்கம் - 'International Organization for Standardization'.
** உலகளவில் செந்தரங்களை உருவாக்குவதற்காக ஜெனிவாவில் 1947ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
** 1987ம் ஆண்டு முதல் ISO 9000௦௦௦ செந்தரங்கள் உருவானது.
** 1994, 2000, 2008 ஆண்டுகளில் அந்த செந்தரங்கள் மேம்படுத்தப்பட்டன.

ISO 9000 - யாருக்கெல்லாம் பொருந்தும்?

** தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்திற்கும் பொருந்தும். அதாவது சோப்பு டப்பாவிலிருந்து விமானம் வரைக்கும் தயாரிக்கும் அனைவருக்கும் ISO பொருந்தும்.
** மென்பொருள் நிறுவனங்களும் "Product" தயாரிப்பதால் அவர்களுக்கும் பொருந்தும்.
** இதைத்தவிர, (தகவல், தொழில்நுட்ப) சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கும் ISO பொருந்தும்.

ISO 9000, 9001, - இவை இரண்டும் ஒன்றுதானா? வெவ்வேறா? 9000ஐப் போல் இன்னும் என்னென்ன சான்றிதழ்கள் உள்ளன?

ISO 9000 குடும்பத்தில் சில கிளைகள் உள்ளன.

** ISO 9000 - Fundamentals and Vocabulary
** ISo 9001 - QMS - Requirements
** ISO 9004 - QMS - Guidelines for performance improvements

நிறுவனங்கள் இந்த 3 கிளைகளையும் தெரிந்து கொண்டு, பின்பற்ற வேண்டிய அவசியம் இருந்தாலும், 9001க்குதான் சான்றிதழ் கொடுப்பார்கள்.

9000௦௦௦ஐப் போல் இன்னும் பல சான்றிதழ்கள் உள்ளன. அவற்றில் சில:

** ISO 14000 - Environment Management Systems
** ISO 15000 - Hazards Analysis and Critical Control Point
** ISO 18000 - Occupational Health and Safety Management

ISO 9001ஐ ஒரு நிறுவனத்தில் எப்படி நிறைவேற்றுவது (implement)?

** மேற்கூறிய 9000, 9001 மற்றும் 9004ல் கூறப்பட்டுள்ள முறைகளை நன்கு படித்து தெரிந்து கொள்ளவேண்டும்.

** நம் நிறுவனத்தின் நடவடிக்கைகள், முறைநெறிகளை நன்று அறிந்து கொண்டு அதை, 9001ல் கூறப்பட்டுள்ள தேவைகளுக்கேற்ப பொருத்த வேண்டும். இந்த வேலைதான் இந்த சான்றிதழ் வாங்கும் வேலையில் மிகவும் கடினமானதும், மிகுந்த நேரம் தேவைப்படும் வேலையுமாகும்.

** அப்படி 9001ல் கூறப்பட்டுள்ள சில விதிமுறைகள் நம் நிறுவனத்திற்கு பொருந்தாது போனால், ஏன் பொருந்தாது என்ற காரணங்களை (exclusions) தனியாக ஆவணப்படுத்த வேண்டும்.

** மேற்கூறிய பொருந்தி வந்த நடவடிக்கைகளை, முறைநெறிகளை நம் நிறுவனத்தில் சரியாக நிறைவேற்ற வேண்டும் (Implement).

** இந்த நிறைவேற்றம் திருப்திகரமாக இருக்குன்னு நினைத்தாலோ, அல்லது நிறுவனத்தில் அனைவருக்கும் ISOவில் பயிற்சி தேவைப்படுமென்று நினைத்தாலோ, சான்றிதழுக்கு பரிந்துரைக்கும் நிறுவனங்கள் ஏதேனுமொன்றை தொடர்பு கொள்ளலாம்.

** அப்படி வரும் நிறுவனங்கள், நம் நிறுவனத்தின் முறைநெறிகளை தணிக்கை செய்து, அதன் வெளியீட்டைப் பொறுத்து மேற்கொண்டு நடவடிக்கைகளை பரிந்துரைப்பார்கள்.

ஒரு தடவை ISO 9001 தரச்சான்றிதழை வாங்கிட்டா, அப்புறம்?

** தரம் - எப்படி ஒரு தரம் (தடவை) மட்டும் செய்யும் வேலையில்லையோ, அதே போல்தான் தரச்சான்றிழும்.

** ISOவைப் பொறுத்தவரை, தணிக்கைகள் ஒவ்வொரு வருடமும் செய்யப்பட வேண்டும்.

** அந்த தணிக்கையில் ஏதேனும் குறைகள் கண்டறியப்பட்டால், உடனடியாக அவை களையப்பட வேண்டும்.

ISOவின் நன்மைகள் என்னென்ன?

இந்த நன்மைகளை நாம் ஏற்கனவே நிறைய தடவை பாத்துட்டோம். இருந்தாலும் இன்னொரு தடவை இங்கே.

** நம் முறை நெறிகளின் வெளியீட்டின் தரம் உயரும்.
** வாடிக்கையாளரின் திருப்தி அதிகரிப்பு.
** சட்ட / ஒழுங்குமுறைகளின் தேவைகள் நிறைவேற்றம்.
** ஒட்டுமொத்த மேலாண்மையில் முன்னேற்றம்.

*****

Read more...

Sunday, January 9, 2011

கழுகுப் பார்வை - தர நிர்ணயம் - பகுதி 5


கீழே இருக்கிற படத்தை ஒரு தடவை பாத்துடுங்க. ஒரு கட்டிடம் மாதிரி தெரியுதா. ஒரு அடித்தளம்; நான்கு தூண்கள்; ஒரு கூரை இருக்குதா. இதுதான் 'தர'த்தின் கழுகுப்பார்வை.

ஒரு நிறுவனத்தின் அடித்தளம், அதனுடைய 'தர மேலாண் அமைப்பு'தான். அந்த அமைப்பை சரியா நிறுவியிருக்கோமான்னு அடிக்கடி பாத்துக்கதான் ISO, CMMi போன்ற வழிமுறைகள் இருக்கு.

அடுத்து நான்கு தூண்கள். நம்ம தரத்தை தொடர்ச்சியா எப்படி முன்னேற்றலாம்னா இந்த நான்கு தூண்களை வெச்சித்தான்.

(1) Tools - நமக்குத் தேவையான மென்பொருட்களை தயாரித்தோ, சந்தையில் வாங்கியோ பயன்படுத்தினால், நம் வேலைகள் சுலபமாவதோடு வெளியீடுகளிலுள்ள வேறுபாட்டையும் களையலாம்.

(2) Six Sigma - தவறுகள் எதனால் ஏற்படுதுன்னு கண்டுபிடித்து அவற்றை குறைக்க வழி செய்யும் ஒரு முறைதான் இது. புள்ளியியல் (Statistics) முறைகளைப் பயன்படுத்தி மாறும் தன்மையை (Variation) கண்டுபிடிக்கும் இந்த முறை மோட்டரோலா நிறுவனம் கண்டுபிடித்ததாகும்.

(3) Training - புதிய தொழில்நுட்பமோ, மென்பொருட்களோ அல்லது ஏற்கனவே இருக்கும் முறைவழிகளில் (Process) மாற்றங்களோ, எதுவாக இருந்தாலும் - பணியாளர்களுக்கு பயிற்சி அவசியமாகும். இதனால் தவறுகள் குறைவதோடு, தரமும் மேம்படும்.

(4) Metrics - தரத்தில் நாம முன்னேறுகிறோமா இல்லையான்னு பார்க்க எல்லா நிறுவனங்களிலும் நிறை பகுப்பாய்வு (Quantitative Analysis) செய்வார்கள். அதனுடைய வெளிப்பாடுதான் மெட்ரிக்ஸ். உதாரணத்துக்கு : Defect variance, Effort variance. இதுக்கெல்லாம் நிறுவனத்தில் ஒரு இலக்கை நிர்ணயித்து - இந்த மெட்ரிக்ஸ் மூலமாக அந்த இலக்கை எட்டுகிறோமா இல்லையான்னு பார்ப்பார்கள்.

இந்த நான்கு தூண்களின் உதவியுடன் பொருட்களின் தரத்தை மேன்மேலும் உயர்த்திக் கொள்ள முடியும்.

இப்போ அடுத்து இன்னொரு படத்தை பாருங்க.


தர மேலாண் அமைப்பில் என்னென்ன இருக்கணும்னு சொல்றதுதான் இந்த படம்.

கீழிருந்து மேலாக:

1. பொருளை உற்பத்தி செய்வதிலுள்ள பல்வேறு நிலைகளை எப்படி செய்வதுன்ற முறைவழிகளை (Process) தெளிவா ஆவணப்படுத்தணும்.

2. அந்த முறைவழிகளை செய்ய உதவும் படிமங்கள் (Forms), படிம அச்சுகள் (Templates), செந்தரங்கள் (Standards) போன்றவற்றை ஆவணப்படுத்தணும்.

3. மேற்கண்ட முறைவழிகளை எப்படி வகுப்பதுன்ற வழியையும் கண்டுபிடிக்கணும்.

4. எல்லாவற்றுக்கும் மேலாக தரக் கையேடு (Quality Manual) ஒன்று உருவாக்கணும். இதுதான் ஒரு நிறுவனம் எப்படி செயல்படுதுன்னு சொல்லக்கூடிய ஆவணமாகும். ஒவ்வொரு நிறுவனத்திலும் ISO பார்க்க விரும்பும் முதன்மையான ஆவணம் இது.

*****

இன்னும் அடுத்த பகுதிகளில் ISO மற்றும் CMMi பற்றி பாக்கப் போறோம். அத்துடன் இந்த தொடர் முடிந்து விடும். அதனால் கேள்விகள் இருந்தா இப்பவே கேட்டுடுங்க.

*****

Read more...

Wednesday, January 5, 2011

டென்சனை குறைங்க! டென்சனை குறைங்க!!

நேற்றைக்கு ரொம்ப நேரம் விவேக் ஜோக்குகளை பார்த்துக்கிட்டிருந்ததால் நானும் ஏதாவது கருத்து சொல்லலாம்னு கிளம்பிட்டேன். படிச்சிட்டு டென்சனாகாதீங்க. ஏன்னா, பதிவே டென்சனைக் குறைப்பது எப்படின்றதுதான்.

நீங்க கடவுள் இல்லை!

உங்களால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்கள் நிறைய இருக்குன்னு தெரிஞ்சிக்கோங்க. அப்படிப்பட்ட விஷயங்களுக்காக நீங்க வருத்தப்படாமல், பேசாமே அந்த வருத்தங்களை outsource பண்ணிடுங்க. அதுதான் உடம்புக்கு நல்லது. உதா: வடநாட்டுப் பெண்மணியும் தென்நாட்டுப் பெண்மணியும் தொலைபேசியதை உங்களால் வெறும் கேட்கத்தான் முடியும். வேறெதாவது செய்ய முடியுமா?

தமிழக அரசுக்கு உதவாதீங்க.

டென்சனைக் குறைக்க தண்ணி அடிக்காதீங்க. அதனால் டென்சன் குறையாது. அப்படின்னா, தம் அடிக்கலாமான்னு கேக்காதீங்க. மூச். கூடவே கூடாது. எனக்குத்தான் ஓவியம் வரையத் தெரியாதே. அப்புறம் சுவர் எதுக்குன்னு கேக்காதீங்க. 'சுவர்' கண்டிப்பா தேவை. பாத்துக்குங்க.

மிட்நைட் மசாலா வேண்டாம்.

சீக்கிரம் படுத்து தூங்கற வழியைப் பாருங்க. டென்சனைக் குறைக்கறதுக்கு நீண்ட இரவுத் தூக்கம்தான் நல்ல மருந்துன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. அதுக்காக ஆபீஸ்லே தூங்காதீங்க. தூங்கினாலும் வேலை போகாமே இருக்க நீங்க ஒண்ணும் பாராளுமன்றத்தில் வேலை செய்யலே!

மிருகமா மாறிடுங்க!

சாப்பிடுற விஷயத்துலே மிருகமா மாறிடுங்கன்னு சொல்ல வந்தேன். பசி எடுத்தபிறகு சாப்பிடுங்க. overload பண்ணாதீங்க. ஆத்துலே போடும்போதே அளந்து போடும்போது, ஆத்துலே (வீட்டுலே) உக்காந்து வயித்துக்குள் போடும்போது அளந்து போடாமே இருக்கமுடியுமா.

நாயைப் பாத்து கத்துக்குங்க.

ஏதாவது ஒரு நாய்க்கு தொப்பை இருந்து பாத்திருக்கீங்களா? ஏன்? அது நாள் முழுக்க ஓடிட்டே இருக்கு. உங்களையும் அதே மாதிரி நாள் முழுக்க ஓடச் சொல்லலே. ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது ஓடுங்க. உடற்பயிற்சி செய்யுங்க.

சைட்லே பாக்காதீங்க!

நேர்மறைன்னு ஒரு வார்த்தை இருக்கான்னு கவலைப்படாமே நேர்மறையா இருங்க / பேசுங்க / யோசிங்க. அப்பத்தான் யார்கிட்டே என்ன (பொய்) சொன்னோம், என்ன பேசினோம்னு நினைவில் வெச்சிக்க வேண்டாம். Excel கோப்பில் நிறைய ஃபார்முலா இருந்தா, சேமிக்கறது கஷ்டம். ஜிம்பிளா இருங்க.

பைத்தியமாயிடுங்க.

தனக்குத்தானே பேசிக்கோங்க. அட, வாய் விட்டு இல்லேங்க. மனசுக்குள்ளே. அப்படி பேச முடியலியா, அமைதியா உக்காருங்க. எவ்ளோ புலன் முடியுதோ அவ்ளோ புலன்களை அடக்கி தினமும் கொஞ்ச நேரம் அமைதியா இருங்க.

ஒரு வேலை ஒரே வேலை

தொகா பெட்டியில் சன் டிவி, ஜெயா டிவின்னு நூறு சேனல்கள் இருந்தாலும், ஒரு சமயத்தில் ஒரு டிவி பாத்தாதான் நல்லாயிருக்கும். அதே மாதிரி ஒரு சமயத்தில் ஒரே ஒரு வேலையை செய்யுங்க. டென்சனை குறைங்க.

*****

Read more...

Tuesday, January 4, 2011

தொ(ல்)லைபேசி - அரைபக்கக் கதை

நேரம்: விடியற்காலை 4 மணி
இடம்: அமெரிக்காவில் எங்க வீடு
செய்துகொண்டிருப்பது : காலையில் 4 மணிக்கு என்ன செய்வாங்க, தூக்கம்தான்.

***

ட்ரிங் ட்ரிங்..

”என்னங்க, தொலைபேசி அடிக்குது பாருங்க. போய் எடுங்க”.

”யாரும்மா இந்த நேரத்துலே. நீயே போய் எடு”.

”என்னங்க. இந்தியாவிலேந்து வருது. ஆனா நம்பர் யார்துன்னு தெரியல. உங்க அம்மாவா இருக்குமோ.. அவங்கதான் இப்படி நேரம்காலம் தெரியாமே தொலைபேசுவாங்க”.

”ச்சேச்சே.. அதெல்லாம் ரொம்ப முன்னாடிம்மா. இப்போதான் அவங்களுக்கு நேர வித்தியாசம் தெரிஞ்சிடுச்சே”.

”சரி. ஆனா எனக்கு இந்த அழைப்பை எடுக்க பயமா இருக்கு”.

”கட்டாயிட போகுது. ஆமா. நீ உங்க பாட்டிகிட்டே பேசினியோ”?

”மொதல்லே வாயை கழுவுங்க. நேத்துதான் பாட்டியோட பேசினேன். அவங்க நல்லாதான் இருக்காங்க”.

(இதற்கிடையில் தொலைபேசி அழைப்பு நின்றுவிடுகிறது).

”ஒரு வேளை உங்கப்பா புறப்பட்டு அமெரிக்கா வர்றேன்னு சொல்ல தொலைபேசறாரோ என்னவோ? கட்டானதும் நல்லதுதான்”.

”ம்கும். அவரை வம்பு இழுக்கலேன்னா உங்களுக்கு தூக்கம் வராதே. அந்த விஷயத்துக்கு எதுக்கு இவ்ளோ சீக்கிரம் கூப்பிடப்போறாரு. யாருக்கு என்ன ஆச்சுன்னு தெரியல. ஆண்டவா.. எதுவும் கெட்ட செய்தியா இருக்கக்கூடாது. இந்தியா வரும்போது, உன் கோயிலுக்கு வந்து நெய் விளக்கு ஏத்தறேன்”.

”சரி சரி புலம்பாதே. அழைப்பை எடுக்கவும் இல்லே. இப்போ தூக்கமும் போச்சு”.

”உங்களுக்கென்ன. ஆபீஸ் வேலையிருக்குன்னு போயிடுவீங்க. நான்தானே வீட்டில் உக்காந்து யார் போன் பண்ணாங்களோன்னு பயந்துட்டே இருக்கறது”.

”அதுக்கென்ன இப்போ, காலையில் எல்லாருக்கும் நீயே போன் பண்ணி பேசிடு. இப்போ வந்து தூங்கற வழியைப் பாரு”.

(மறுபடி ட்ரிங் ட்ரிங்...)

”ஹலோ. ஹலோ”.

”...”

”யெஸ்.. ஆமா. சொல்லுங்க”.

“...”

“நீங்க யார் பேசறீங்க? உங்களுக்கு யார் வேணும்?”

“...”

டொக்.

“காலங்கார்த்தாலே ரோதனையா போச்சு இந்த ராங் நம்பரோட. நாடு விட்டு நாடுகூடவா பண்ணுவாங்க இந்த ராங் நம்பர்காரங்க.”

*****

Read more...

Monday, January 3, 2011

தலைகால் புரியாமல் - சிறுகதை மாதிரி!

அமெரிக்காலிருந்து வந்த என் நண்பன் ஒரு பல்லி மிட்டாய் கொண்டு வந்து கொடுத்திருந்தாகூட சந்தோஷப்பட்டிருப்பேன். இப்படி சொதப்புவான்னு நான் நினைக்கவேயில்லை. அப்படி என்னதான் கொடுத்தான்னு கேக்கறீங்களா? நமக்கு நாமே திட்டத்துலே தலைமுடி வெட்டிக்கிற ஒரு கருவியை கொண்டு வந்திருக்கான். அங்கே நம்மவங்க நிறைய பேர் இப்படித்தான் அவங்களே (தலைமுடியை) வெட்டிப்பாங்களாம். எனக்கு வேண்டாம்டான்னு சொன்னாலும் கேக்காமே, வெச்சிக்கோன்னு சொல்லிட்டு போயிட்டான்.

என் அறை நண்பர்கள் ரொம்பவே த்ரில்லாயிட்டாங்க. மாதா மாதம் 60-70 ரூபாய் மிச்சம். வருடத்தில் 750 ரூபாய் வரைக்கும். கண்டிப்பா இதை நாம எல்லோர் தலைக்கும் பயன்படுத்தறோம்னு சொல்லிட்டாங்க.

இப்போதான் பிரச்சினையே. முடிதிருத்தகத்துக்குப் போய் தலைய கொடுத்துட்டு, ஒரு குட்டி தூக்கம் போட்டே பழக்கமாயிடுச்சே தவிர, எப்படி முடி வெட்டறதுன்னு யாருக்கும் தெரியல. எந்த தலையை வெச்சி சோதனை பண்றது? சுத்திமுத்தி பாத்து, விரோதிகள் (நண்பர்களுக்கு எதிர்ப்பதம்) மூவரும் என் தலையை பார்த்தார்கள். நான்தான் வீட்டிலும் எலி, சோதனைக்கும் எலி. உடனடியா சோதனை பண்றதுன்னு முடிவு பண்ணிட்டாங்க.

குரங்கு ஒண்ணு, ரொட்டித்துண்டை ரெண்டு பேருக்கு பிரிச்சி கொடுத்த கதை தெரியும்தானே? அதே மாதிரி, இங்கே எடுத்தா அங்கே குறையுது, அ எ இ குறையுதுன்னு - இவங்க என் தலையை ஒரு வழியாக்கிட்டாங்க. ஆபரேஷன் சக்ஸஸ் - கத்தினான் ஒருவன். எல்லோருக்கும் பரம திருப்தி. என் தலைதானே, அவங்களுக்கென்ன.


இருந்தாலும் வெளியில் பாக்கறவங்க என்ன நினைக்கிறாங்கன்னு தெரியணும்லே. இரவு சாப்பிட வெளியே போனோம். வழக்கமா சாப்பிடற ஹோட்டலில் பரிமாறுபவர் என்னை மட்டும் ரெண்டு தடவை திரும்பி பார்த்த மாதிரி இருந்தது. நண்பர்களோ, அதெல்லாம் ஒண்ணுமில்லேடான்னு சமாளிச்சிட்டாங்க. நான் இன்னும் சமாதானமடையவில்லை. இருட்டில் சரியா தெரியாது. நாளை காலை வெளிச்சத்தில் அலுவலகம் போனாதான் தலையப் பத்தி மக்கள் என்ன நினைக்கிறாங்கன்னு தெரியும்னு சொல்லிட்டே வீட்டுக்கு திரும்பி போனேன்.

**

அடுத்த நாள் காலை.

இன்னிக்குன்னு பாத்து எல்லாரும் என் தலையை பாக்கறமாதிரியே இருக்குது. ஆனா நான் அவங்களை பாக்கும்போது, டக்குன்னு குனிஞ்சிடறாங்க.

ட்ரெயினில் தினமும் பார்க்கும் பொண்ணுங்க சிரிக்கிறா மாதிரியே இருக்குது. இதே இன்னொரு நாளா இருந்தா, நானும் அவங்கள பாத்து.. சரி விடுங்க. இப்போ எனக்கு அழுகை அழுகையா வருது. அடுத்த நிறுத்தத்தில் இறங்கி திரும்ப வீட்டுக்கே போய் ஒரு வாரம் மறுபடி தலைமுடி வளர்ற வரைக்கும் லீவ் போட்டுடலாமான்னு ஒரு யோசனை திடீர்னு வந்து போனது.

ஆனா அதுக்குள் அலுவலகமே வந்துடுச்சு.

உள்ளே போனவுடன், ஒரு நண்பனை கூப்பிட்டு கேட்டேன் - "டேய். என்னை சரியா பாரு. ஏதாவது வித்தியாசமா தெரியுதா"?

என்னை மேலே கீழே பார்த்தவன், பகபகன்னு சிரிக்க ஆரம்பிச்சிட்டான்.

"டேய். ஒழுங்கா சொல்லு. என் தலை அப்படி கேவலமாவா இருக்கு. எல்லாரும் ஏண்டா என்னையே பாக்கிறீங்க"?

அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. என்னால் கோபத்தை.

"டேய்ய்ய்".

"என்னடா? உன்னால் மட்டும் எப்படி இப்படி செய்ய முடியுது"?

"மரியாதையா சொல்லு. எதுக்கு சிரிக்கிறே? தலைய பாத்துதானே"?

"என்னது. தலையா? உன் தலைய யார்றா பாத்தா"?

"அப்புறம் வேற எதுக்கு எல்லாரும் லூசு மாதிரி பாக்கறாங்க? நீ ஏன் சிரிக்கிறே"?

"ரெண்டு காலிலும் வெவ்வேறே ஷூ போட்டிருந்தா முறைச்சி பாக்காமே, என்ன கொஞ்சுவாங்களா"?


**

ஹிஹி. தலைகால் புரியாம நடந்துக்கறான்னு கேள்விப்பட்டிருக்கீங்கல்ல. அதே மாதிரிதான். தலையப் பத்தியே யோசித்துக் கொண்டிருந்ததால், இந்த ஷூவை கவனிக்காமே மாத்திப் போட்டுக்கிட்டேன் போல. போதும் ரொம்ப சிரிக்காதீங்க. ஏன், நீங்க இந்த மாதிரி செய்ததே இல்லையா? போங்க சார், போய் வேலை ஏதாவது இருந்தா பாருங்க.

*****

Read more...

Sunday, January 2, 2011

ச்சின்ன ஒற்றி... பெரிய ஒற்றி...


எங்களை ஒரு தடவையாவது உங்க அலுவலகத்துக்கு கூட்டிப் போங்கன்னு அம்மாவும் பொண்ணும் (பெரிய ஒற்றி & ச்சின்ன ஒற்றி) சொல்லிட்டே இருப்பாங்க. அது என்ன, சும்மா விளையாடற இடமா? ரத்த பூமிம்மா.. உள்ளே வந்துட்டா ரத்த காயம் இல்லாமே வெளியே போகமுடியாதுன்னு சொன்னாலும் கேட்டாதானே?

இது போதாதுன்னு, குடும்ப சந்திப்புகளில் நண்பர்கள் என்னைப் பற்றி தவறாமல் சொல்வது - இவரு எங்கே வேலை செய்யறாரு? எப்ப பாத்தாலும் பக்கத்துலே கடலை, இல்லே ட்விட்டர்/இணையம் இதிலேதான் இருப்பாரு.

இப்படி சொன்னதுக்கப்புறம் விடுவாங்களா? சன் டிவியில் எந்திரன் விளம்பரம் போல், மேலே சொன்னதையே தொடர்ச்சியா சொல்லிட்டே இருந்தாங்க.

கடைசியா அந்த நாளும் வந்தது.

**

ச்சி.ஒ க்கு பள்ளி விடுமுறை. எனக்கு அலுவலகம் இருந்தது. அதனால் அவரை கூட்டிப் போகவேண்டுமென்று அரச கட்டளை. கூடவே ச்சி.ஒ விடம் - அப்பா ஆபீஸ்லே வேலை பாக்கறாரா இல்லே கணிணியில் விளையாடறாரான்னு பாத்து எனக்கு உடனே தொலைபேசி சொல்லுன்னு சொல்லி அனுப்பிட்டாங்க.

அந்த ச்சின்ன ஒற்றியும் என்கூடவே அலுவலகம் வந்து - பக்கத்தில் உட்கார்ந்து - இது என்ன? அது என்னன்னு கேக்க ஆரம்பிச்சிட்டாங்க.

மறைந்தவை கேட்கவற்(று) ஆகி, அறிந்தவை
ஐயப்பா(டு) இல்லதே ஒற்று.- (587)

அவருக்கு தெரியக்கூடாதுன்னு சொல்லாமே / காட்டாமே மறைக்கற விஷயங்களை எப்படியாவது தெரிஞ்சிப்பவர்தான் நல்ல ஒற்றன்(றி)னு ‘அவரே’ சொல்லிட்டாரே.


அம்மா, இந்த linkedinன்னா என்ன? ரொம்ப நேரமா இதைத்தான் பாத்துக்கிட்டிருக்காரு.

எப்படியாவது வேலை செய்யற மாதிரி ’நடிச்சி’ நேரத்தை ஓட்டிடணும்னு - பழைய, செய்ய விரும்பாத வேலைகள் ரெண்டு மூணை எடுத்து செய்ய ஆரம்பிச்சேன்.

நடுநடுவே வீட்டிலிருந்து தொலைபேசி அழைப்புகள் வருது.

"என்ன நடக்குது அங்கே?"

"என்னன்னு தெரியலேம்மா. என்னவோ கணிணியில்தான் பாத்துட்டே இருக்காரு. நான் கேட்டுட்டு சொல்றேன்".

டொக்.

போற போக்கைப் பாத்தால், என்னை ‘ஃபெயில்’ பண்ணிடுவாங்கன்னு - தொலைபேசியில் இன்னொரு நண்பரை அழைத்து - (அலுவலக வேலையைப் பற்றி பேசுவதைப் போல்!) ஆங்கிலத்தில் சீரியஸாக பேச ஆரம்பித்தேன்.

ஒரு பத்து நிமிடம் பேசியபிறகு, அடுத்த ஸ்டேடஸ் ரிப்போர்ட்டில் கொஞ்சம் அதிகமாக மார்க் கிடைத்தது. - யார்கிட்டேயோ ஆங்கிலத்தில் பேசிட்டிருந்தாரு. ட்விட்டரை திறக்கவில்லை.

(ட்விட்டர் எப்படி இருக்கும்னு ச்சி.ஒ.க்கு தெரியுமாகையால், அந்த மூணு மணி நேரம் ட்விட்டரை திறக்கமுடியவில்லை). சிபிஐகிட்டே மாட்டிக்கிட்ட ராசா நிலைமை ஆகிப்போச்சு எனக்கு.

இதுக்கு நடுவில், அலுவலகத்தை சுத்திப் பாக்கணும்னு விருப்பப்பட்டாங்க. சரின்னு நண்பர்கள் அறைகள், காபி/டீ குடிக்குமிடம் - எல்லாத்தையும் கொண்டு போய் காட்டினேன்.

அன்னிக்குன்னு பாத்து நேரம் ஓடவே மாட்டேங்குது. கடிகாரத்தை தட்டித் தட்டி ஓடவைக்கிறேன்.

ஒரு மூணு மணி நேரம் கழிச்சி - கிரிக்கெட் மேட்சுலே பெவிலியனிலிருந்து டிக்ளேர் செய்யும் அணித்தலைவர் போல் - கடைசி அழைப்பும் வந்தது. - "போதும். புறப்பட்டு வந்துடுங்க".

வைக்கப்பட்ட தேர்வில் தேர்ச்சி அடைந்து விட்டேன்னுதான் நினைக்கிறேன். அன்னிக்கு அர்ச்சனை எதுவும் நடக்கலை.

கூட இருக்கும் நண்பரில் ஒருவரே சிறப்பு ஒற்றராக மாறும்வரை இப்படியே ஓபி அடிப்பதில் பிரச்சினை இருக்காதுன்னு நினைக்கிறேன். அந்த் ஆண்டவன்தான் காப்பாத்தணும்.

*****

Read more...

Saturday, January 1, 2011

மெதுவா, வேகமா, மெதுவா, மெதுவ்வ்வா!

இந்தியாவில் இருந்தவரை காரை வெறும் தொட்டு மட்டுமே பார்த்திருந்ததால், இங்கு வந்த புதுசில் நெடுஞ்சாலைகளில் வண்டி ஓட்டவே பயமாயிருக்கும். திருமணத்தின்போது ஜானவாசம் வைக்காமல் (ஏமாற்றி) விட்ட மனைவி குடும்பத்தினரை நினைத்தோ என்னவோ, வண்டி மெதுவாவே ஓட்டுவேன். தவிர, பெரிய பெரிய லாரிகள் (இந்த ஊர்லே ‘ட்ரக்குகள்’) நம்மை சர்வசாதாரணமாய் கடந்து செல்லும்போது - நயனிடம் ஒட்ட முயற்சிக்கும் பிரபுதேவா மாதிரி என் ச்சின்ன வண்டி அந்த லாரியின் பக்கத்தில் போகும். அந்த சமயத்தில் நான்தான் ரமலத் மாதிரி அந்த ஒட்டுற வேலை கூடாதுன்னு பிரிச்சி ஒழுங்கா என் பாதையில் ஓட்டுவேன்.

அப்புறம் கொஞ்ச கொஞ்சமா பயம் தெளிந்த பிறகு, வண்டி படுவேகமா ஓட ஆரம்பிச்சுது. உச்ச வேக வரம்பு 65 மைல்கள் இருக்கும்போது, வண்டி எப்பவும் 80லேயே போகும். மனைவியும், என்னங்க - 65தானே போட்டிருக்கு, நீங்க 80ல் போறீங்களேன்னுவாங்க. நானும் - அந்த 65 நமக்கில்லேம்மா. பச்சை அட்டை வெச்சிருக்குறவங்களுக்கும், அமெரிக்க நிரந்தர குடியுரிமை பெற்றவங்களுக்கு மட்டுமே 65 பொருந்தும். சும்மா வேலை செய்யற விசாவில் இருக்குற நமக்கெல்லாம் அது கிடையாதுன்னு சமாதானம் சொல்வேன்.

அப்புறம் ஒரு நாள் இரவு 11 மணி - வழக்கம்போல் 80ல் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறேன். பக்கத்தில் மனைவி. அருமையான காற்று. ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமேன்னு பாடியவாறே பின்னால் பார்த்தால், யாரோ ஒருவர் என்னை துரத்திக்கொண்டே வந்தார். என் வேகத்தை எட்டமுடியாமல் தோற்றபிறகு, விளக்கடித்து பின்னர் அபாயமணியும் ஒலிக்க ஆரம்பித்தார். சரிதான், ஏதோ ஆபத்தில் மாட்டிக்கிட்டாரு போல, போய் காப்பாத்தலாம்னு வண்டியை நிறுத்தினேன். கடைசியில் பார்த்தால், நம் சொந்தக்கார்தான், அமெரிக்க மாமா. எங்கே இவ்வளவு அவசரமா போறீங்கன்னார். நெடுஞ்சாலை I-87ல் 80யில்கூட போகமுடியாதான்னு நான் கேட்ட கேள்வி, என் தொண்டையை விட்டு வெளியே வராததால் அவருக்கு கேட்கவில்லை. என் வரலாற்றையே சோதித்தபிறகு, $150 கட்டிடுங்கன்னு சொல்லிட்டு போயிட்டார்.

அந்த சம்பவத்திற்குப் பிறகு, என் வண்டியில் ஒரு புது ப்ரேக் உருவானது. என் காலில் ஏற்கனவே இருந்த ஒன்றோடு, பக்கத்து இருக்கையிலும் ஒன்று உருவானது. அட, என் மனைவிதாங்க. ஒரு கண்ணை சாலையில் தெரியும் அதிகபட்ச வேக அறிவிப்பிலும் (a), இன்னொரு கண்ணை வண்டியின் வேகத்திலும் (b) வைத்தவாறே வருவார். (a)விட (b) அதிகமாகிவிட்டால், நெற்றிக்கண்ணை என் மேல் வைத்து எரிப்பார்.

இப்படியாக, மெதுவாக ஆரம்பித்து (முதல் பத்தி), வேகம் பிடித்து (இரண்டாம் பத்தி), பின்னர் மாமாவால் ஒரு தடவை நிறுத்தப்பட்டபிறகு (மூன்றாம் பத்தி), வண்டியின் வேகம் மனைவியால் குறைந்தது (நான்காம் பத்தி).

இதன் விளைவு, இப்போல்லாம் என்ன நடக்குதுன்னா -


நெடுஞ்சாலையில் நான் தனியா போயிட்டிருப்பேன். பின்னாடி பார்க்கும் கண்ணாடியில் பார்த்தால், நிறைய வண்டிங்க வந்துட்டிருக்கும்.


மெதுவா அவை எல்லாம் என்னைக் கடந்து முன்னாடி போயிட்டிருக்கும்.


கொஞ்ச நேரத்தில் எல்லாரும் கடந்துவிட, மறுபடி நான் மட்டும் தனியே போயிட்டிருப்பேன்.


*****

சரி எனக்கும் ஒரு காலம் வரும். மறுபடி வேகமெடுப்பேன்னு சபதம் போட்டுட்டு அதுவரை ‘ஆஹா இன்ப நிலாவினிலே...’.

*****

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP