இவன் யாரோ, இவன் யாரோ, வந்தது எதற்காக?
இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக - இப்படி ஒரு அழகான பாடல் ஒலித்துக் கொண்டிருந்தபோது நடுநடுவே ட்ரிங்ட்ரிங்னு கைப்பேசி சத்தம். என்னடான்னு பார்த்தா, பாட்டு கனவில். கைப்பேசி ஒலித்தது நிஜத்தில். எவன்டா இந்த நேரத்திலேன்னா (மணி விடியற்காலை மணி மூன்று) - லோக்கல் நண்பரிடமிருந்து.
லோகல்னா ரொம்ப லோக்கல் - பக்கத்து வீட்டு நண்பர்தான் கூப்பிட்டது. என்ன பிரச்னைன்னு தெரியலேன்னு எடுத்துப் பேசினேன். "அவருக்கு ****** பிரச்னை வந்துடுச்சு. ரொம்ப அவஸ்தைப் படறாரு. உடனடியா மருத்துவமனை போகணும். கொஞ்சம் வரமுடியுமா" - பேசியது சகோதரி - நண்பரின் மனைவி.
சடார்னு எழுந்தேன். தங்ஸுக்கு சொல்லிவிட்டு, வண்டி சாவி எடுத்து வெளியே ஓடி, நண்பரை கூட்டிக்கிட்டு குளிரில் மருத்துவமனை அடைந்து அவரை சேர்த்தும்விட்டேன். டாக்டர் வந்து மருந்து மாத்திரை (ரெண்டும் ஒண்ணுதானே?) கொடுத்து பிரச்னையை தற்காலிகமாக தீர்த்து வைத்தார்.
இந்த ஊர் டாக்டர்கள் சும்மாவே இருக்க மாட்டாங்க. ஏதாவது ஜோக் அடிச்சிக்கிட்டு, வந்தவங்களோட லொடலொடன்னு பேசிக்கிட்டே இருப்பாங்க. நமக்கு வாய்ச்சவரும் அப்படியே. நம்ம நண்பரைப் பார்த்து சாதாரணமா கேட்டாரு.
”இவரு (என்னைக் காட்டி) உங்க சகோதரரா”?
அவரும் - ”இல்லீங்க டாக்டர்” அப்படின்னாரு.
அடப்பாவி, ஒண்ணுமண்ணா பழகினோமே, என் மனைவிகூட உன்னை அண்ணா அண்ணான்னு கூப்பிடுவாளே? அதை எப்படிடா மறந்தேன்னு
நினைக்கும்போதே, அடச்சே, என் மனைவிக்கு அண்ணன்னா நான் மச்சான்தானே, ஒரு தெய்வ மச்சானை எப்படி சகோதரன்னு சொல்றது என்பதால் நண்பர் மறுத்துட்டார்னு சமாதானம் சொல்லிக் கொண்டேன்.
அந்த டாக்டரும் விடமாட்டேன்றாரு.
”அப்படின்னா, கலீகா (கூட வேலை பார்ப்பவரா)”?
நான் எதுவாயிருந்தா இந்த டாக்டருக்கு என்னன்னு எனக்கு புரியல. ஆனாலும் நம்ம நண்பர் அசராமே பதில் சொல்றாரு.
”கூட வேலை பார்ப்பவரா - இல்லே இல்லே”.
அடப்பாவி, நேத்திக்கு சாயங்காலம் வரைக்கும் நானும் இவனும் ‘கலீக்’தானே. ஒருவேளை இவன் வேலையை விட்டுட்டானா அல்லது எனக்கு வேலை போயிடுச்சா, எதுவும் புரியலியேன்னு கைப்பேசியில் மின்னஞ்சலை பார்க்கிறேன். வேலையை விட்டு தூக்கினதா எதுவும் செய்தி இல்லை. அப்பாடான்னு இருந்தது.
சரி. இத்தோட நிறுத்திக்குவோம்னு நான் சொல்றதுக்குள்ளே டாக்டர் மறுபடி - ”அப்போ நண்பரா?”.
அப்பாடா. இதுக்கு கண்டிப்பா “ஆமாம்” என்று சரியான பதிலைச் சொல்லி நண்பர் பரிசை அள்ளிச் செல்வாருன்னு பார்த்தா - என் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு சொன்னாரு - “ம்ஹூம்”.
அட்றா அட்றா - இனிமே டாக்டருக்கு கேட்பதற்கு எந்த ‘ஆப்ஷனும்’ இல்லேன்னு நான் கணிச்சது சரியாப் போச்சு. டாக்டர் இப்ப டென்சனாகறாரு.
"அப்படின்னா இவர் யாரு? உங்களை இவரு ஏன் கூட்டிட்டு வரணும்?"
இப்பத்தான் நண்பர் தன் திருவாயைத் திறந்து பதில் சொன்னார்.
“இவரை சில வருடமா எனக்குத் தெரியும்.”
அதுக்கப்புறம் அந்த டாக்டர் கொட்டாவி விடக்கூட வாய் திறக்கலே. அவருக்கு என்ன புரிஞ்சுதோ எனக்குத் தெரியாது. ஆனா எனக்கு இன்று வரைக்கும் புரியாத விஷயங்களில் இதுவும் ஒண்ணு. நண்பர்(?) ஏன் அப்படி சொன்னாரு?
***
2 comments:
ஆமா நீங்க யாரு?
இது தொடர்பா என்(கிட்ட என் நண்பன் பட்ட) அனுபவம் ஒண்ணு இருக்கு.... பெறகு சொல்றேன்..
Post a Comment