ஹாய் ச்சின்னப்பையன் - ஒரு கேள்வி/பதில் பதிவு!!!
முன் - 1: சின்ன வயசிலிருந்தே எனக்கு ஒரு கேள்வி/பதில் பதிவு போடணும்னு ஆசை. ஆனா, யாரும் கேள்வியே கேக்கமாட்டேன்றாங்க. (Tounge pulling கேள்விகூட கேக்கமாட்றாங்க!!!). எவ்ளோ நாள்தான் காத்திருக்குறது... அதான் 'கலைஞர்' பாணியில் நானே கேள்வி நானே பதில் பதிவு போடலாம்னு...
முன் - 2: சரி சரி.. நாலு சின்ன சின்ன மேட்டர் கையிலே இருக்கும். அதை ஒரே பதிவில் எப்படி போடறதுன்னு யோசிச்சிருப்பே... கேள்வி பதிலா போட்டுட்டே... அப்படின்றவங்க... all silent.
-----
கே: உங்களுக்கு கோபம் வருமா? யாரையாவது பிடித்துத் தள்ளியிருக்கிறீர்களா?
ப: கண்டிப்பாக தள்ளியிருக்கிறேன். ஆனால் கோபத்தில் அல்ல. சிரித்துக்கொண்டேதான். அது எப்படி என்கிறீர்களா?
ஒரு நாள் அலுவலகத்தில் ஓய்வறைக்குப் போவதற்கு, கதவைத் திறக்கப்போனேன். அப்பொழுது பார்த்து பக்கத்திலிருந்து ஒருவர் 'ஹலோ' என்றார். அவருக்கு சிரித்துக்கொண்டே 'ஹாய்' சொல்லிவிட்டு கதவைத் தள்ளப்போனால், அந்த கதவை ஏற்கனவே (உள்ளேயிருந்து) ஒருவர் திறந்துவிட்டார். பிறகென்ன, இவரைப் பார்த்து சிரித்துக்கொண்டே, அவரைப் பிடித்து தள்ளிவிட்டேன்.
கே: கையால் தள்ளியிருக்கிறீர்கள், சரி. யாரையாவது தலையால் முட்டி தள்ளியிருக்கிறீர்களா?ப: ஓ. அதையும் செய்திருக்கிறேன்.
ஒரு தடவை 'வால்மார்ட்'டில் பாப்பாவிற்காக ஒரு சிறிய மிதிவண்டி (இந்த ஊரில் மிதிவண்டியை, 'பைக்' என்கிறார்கள்) வாங்கப்போயிருந்தோம். ஒரு மிதிவண்டி எடுத்து பாப்பாவை ஓட்டிப்பார்க்கச் சொன்னோம். அதன் 'சங்கிலி' சுற்றாமல் அடம் பிடித்தது. நான் பெரிய மிதிவண்டியில் செய்வதுபோல், ஒரு காலை ஒரு 'பெடலில்' வைத்து கொஞ்சம் சுற்றலாம் என்றால், வண்டி 'சர்ரென்று' கொஞ்சம் முன்னே சென்றது.
நானும் நிலை தடுமாறி, நான்கடி தள்ளி முதுகு காட்டி நின்றிருந்த ஒருவர் மீது போய் தலையால் அவரை 'லேசாக' தள்ளி விட்டேன். அதற்கே அவர் 'டென்சன்' ஆகிவிட்டார் என்பது தனி கதை!!!
கே: புகைவண்டியில் போகும்போது, அதனுள்ளே நீங்கள் வேகமாக ஓடியிருக்கிறீர்களா?
ப: NY போய்விட்டு வரும்போது எங்கள் புகைவண்டி கிளம்புவதற்கு சில நொடிகளே இருந்ததால், கடைசி பெட்டியில் ஏறிவிட்டோம். ஒரு மணி நேரம் கழித்து எங்கள் இறங்கும் இடம் வந்ததும், இறங்க முயற்சி செய்தால், கதவு திறக்கவேயில்லை. கதவைத் தட்டி தட்டி பார்த்தோம். ம்ஹூம்.
அப்போது அங்கிருந்த ஒருவர் - இந்த இடத்தில் நடைமேடை சிறிதாக இருப்பதால், கடைசி 5-6 பெட்டிகளில் கதவு திறக்காது என்றும், வேகமாக முன்னால் ஓடி எங்கு கதவு திறந்திருக்கிறதோ, அங்கிருந்து இறங்கிக்கொள்ளவும் என்று கூறினார்.
அவ்வளவுதான். எல்லா பொருட்களையும் தூக்கிக்கொண்டு பெட்டி பெட்டியாக ஓடினோம். ஒரு 5 பெட்டிகள் கடந்த பிறகு, ஒரு பெட்டியில் கதவு திறந்திருந்தது. மூச்சிறைக்க அங்கிருந்து நடைமேடையில் இறங்கிவிட்டோம்.
இறங்கிய பிறகு தங்கமணி "அப்போதிலிருந்தே உள்ளே ஏதோ அறிவித்துக் கொண்டிருந்தார்கள். நீங்க கவனிக்காமே உங்க நண்பர்கிட்டே பேசிக்கிட்டிருந்தீங்க" என்றார். நற நற...
கே: 'இவர் முகத்தில் நான் மறுபடி எப்படி முழிப்பேன்?' - என்று யார் பற்றியாவது நினைத்ததுண்டா?
ப: ஆம்.சுமார் பத்து வருடங்களுக்கு முன் நடந்தது இது. என் தாயுடன் ஒரு வங்கிக்குச் சென்றிருந்தேன். அவர் வரிசையில் போய், அங்கிருந்த பணியாளரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, நான் சற்று தள்ளி உட்கார்ந்திருந்தேன். அந்த பணியாளர் அங்கிருந்தே என்னைப் பார்த்து சிரித்த மாதிரி இருந்தது.
வெளியே வந்தபிறகு கேட்டேன்.
"என்னைப் பற்றி ஏதாவது பேசினீர்களா?"
"ஆம், நீ என்ன வேலை செய்கிறாய் என்று கேட்டார். நானும் சொன்னேன்"
"ம். என்ன சொன்னீர்கள்"
" நீ Data Entry Operatorஆக வேலை பார்க்கிறாய் என்றேன்"
ஒரு சிறிய மென்பொருள் நிறுவனத்தில் 'குழுத்தலைவராக' இருந்த என்னை 'Data Entry Operator' என்று மிகவும் பெருமையாக அந்த பணியாளரிடம் சொல்லியிருக்கிறார் என் தாயார். (மென்பொருள் சம்மந்தப்பட்ட பதவிகளில் அப்போது என் தாயாருக்குத் தெரிந்தது 'Data Entry Operator' ஒன்றுதான்.)
"ஏன், நீ அந்த வேலைதானே செய்கிறாய்?"அய்யோ.. நீங்கள் அப்படி சொன்னது கூட எனக்கு பிரச்சினையில்லை. ஆனால் ஒரு வாரம் முன்னால்தான் நான் அவரிடம் கணிணி பற்றியும், 'Technology' பற்றியும் பயங்கர 'பிலிம்' காட்டியிருந்தேன். அதனால்தான் நீங்கள் அப்படி சொன்னதும், அவர் என்னை பார்த்து 'இதுக்கே' இவ்ளோ 'பில்டப்பா' என்று நக்கலாக சிரித்திருப்பார் என்று நினைக்கிறேன்.. இனிமேல் அவர் முகத்தில் நான் எப்படி முழிப்பேன்?".
அதன்பிறகு அவரை நான் பார்க்கவில்லை. Read more...