தொலைபேசி லொள்ளுகள்!!!
வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் இருக்கும் நண்பர்கள் / உறவினர்களிடம் தொலைபேசுதலில் உள்ள பிரச்சினைகள் என்னன்னு இங்கே பாப்போம்.
*****
போட்டுக் கொடுத்தல்:
ஒரு உதாரணத்திற்கு, xம் yம் நம் உறவினர்கள். x கிட்டே சில தடவை பேசின நான், y கிட்டே பேசலைன்னு வைங்க - என்ன ஆகும், yயை பார்க்கும்போது x போட்டு வைப்பார். "என்ன, உங்க நெருங்கிய உறவினர்னு சொல்றீங்க. அவன் உங்ககிட்டே பேசவேயில்லையா? என்கிட்டேயே நிறைய தடவை பேசிட்டானே?". ஏதோ நம்மாலானதுன்னு பத்த வெச்சிட்டு போயிடுவாங்க.
பொகஞ்சிக்கிட்டே இருக்கற yயிடம் அடுத்த தடவை பேசும்போது - "நீங்கல்லாம் பெரிய
மனுசங்க. நம்மகூடல்லாம் பேச நேரமிருக்குமா?"ன்னுதான் பேச்சே ஆரம்பிக்கும்.
நமக்கும் காடுவெட்டி மாதிரி வாயிலே கெட்ட கெட்ட வார்த்தைகளா வரும். ஆனா, வெளிப்படையா பேசமுடியாது. ஹிஹின்னு வழிஞ்சிக்கிட்டு பேச்சை மாத்தி வேறே ஏதாவது பேச ஆரம்பிக்கணும்.
பயங்கர பிஸி:
நேரில் பார்த்தால் கண்டபடி பாசம் காட்டும் பயபுள்ளைங்க, கண்ணிலிருந்து மறைந்துவிட்டால், நம்மை அப்படி மறந்துடுவாங்க. மின்னஞ்சல் அனுப்பினால், அதற்கும் பதில் வராது. கேட்டால், "மாப்ளே - ஆபீஸ்லே பயங்கர பிஸிடா"ன்னுவாங்க.
மாசத்துக்கு ஒரு மின்னஞ்சல்கூட அனுப்பமுடியாமே அவ்ளோ பிஸியா இருக்கீங்களாடேன்னு கேக்க முடியாது. அப்போ நான் மட்டும்தான் இங்கே சும்மா உக்காந்திருக்கேனான்னும் கோபம் வரும்.
அப்புறம் உண்மை(!) தெரிஞ்சதும் மனம் தெளிவடைஞ்சிடும்(!).
நோ மேட்டர்:
இன்னும் சில பேர் இருக்காங்க. பேசி கொஞ்ச நாள் ஆனா போறும் - வீட்லே கம்ப்ளெய்ண்ட் பண்ணிடுவாங்க. "பையன் தொலைபேசி ரொம்ப நாளாச்சு. உங்ககிட்டே பேசும்போது எனக்கும் அடிக்கடி பண்ணச் சொல்லுங்க".
சரின்னு தொலைபேசினா - ஒரு நிமிடம்கூட இருக்காது - அதிலேயே பல தடவை - ம். அப்புறம், அப்புறம் என்ன விஷயம் - இப்படிதான் பேச்சு இருக்கும். மேட்டர் என்னன்னா, பேசறதுக்கு விஷயமே இருக்காது. அப்புறம் என்னதுக்கு வெங்காயம் என்னை தொலைபேசச் சொன்னே? இப்படி கேக்கமுடியுமா? கண்டிப்பா முடியாது.
மொக்கை படமாத்தான் இருக்கும்னு முன்னாடியே தெரிஞ்சாலும், நாமும் விடாமே டாக்டர் விஜய் படங்களையெல்லாம் திரையரங்கத்துக்குப் போய் பாக்கறதில்லையா, அதே போல இந்த மாதிரி ஆட்களுக்கும் அடிக்கடி தொலைபேசி மொக்கையை பொறுத்துக்கணும். அவ்ளோதான் விஷயம்.
ரிச்சி ஸ்ட்ரீட்:
சில பேருக்கு ரிச்சி ஸ்ட்ரீட்டோ அல்லது ஏதாவது எலக்ட்ரானிக்ஸ் கடைக்கோ போனாதான் எங்க நினைவே வரும். உடனே ஒரு மின்னஞ்சல் தட்டி விடுவாங்க - "அர்ஜண்ட் மேட்டர். உடனே தொலைபேசு".
நாமளும், பாசக்கார பய, நம்மள தொலைபேசச் சொல்றானேன்னு பேசினா - "எப்ப ஊருக்கு வர்றே. வரும்போது ஒரு எம்.பி3 ப்ளேயர், ஒரு லேப்டாப் இதெல்லாம் வாங்கி வரணும். இங்கே வந்ததும் காசு கொடுத்துடறேன். நீ கவலைப்படாதே" - அப்படி இப்படின்னு ஒரு பட்டியல் வெச்சிக்கிட்டு பேசுவாங்க.
தேர்தல் முடியற வரைக்கும்தான் நம்மகிட்டே தொங்குவாரு, அதுக்கப்புறம் இடம் மாறிடுவாருன்னு மருத்துவரைப் பத்தி தெரிஞ்சாலும் பொறுமையா அவரோட கேள்விக்கெல்லாம் பதில் சொல்ற அம்மா மாதிரி நாமும் சிரிச்சிக்கிட்டே பதில்
சொல்லணும் - "சரி வாங்கிட்டு வர்றேன்".
*****
இன்னும் இதே மாதிரி நிறைய பிரச்சினைகள் இருந்தாலும், நம்ம பாலிஸி
இன்னிக்கு _____
நாளைக்கு பால்
நாளன்னிக்கு தயிர்
அதுக்கடுத்த நாள் மோர்
அதுக்கடுத்த நாள் புளித்த மோருங்கறதாலே
அப்படியே துடைச்சிக்கிட்டு போக வேண்டியதாயிருக்கு.
*****