ஒரு சதுரங்கப் போட்டியில் கடைசி நிமிடங்கள்...
தேசிய சதுரங்கப் போட்டியில் இன்று இறுதிப் போட்டி. ஆட்டம் ஆரம்பிச்சி இருபது நிமிஷம் ஆயாச்சு.
அங்கே கண்ணாடி போட்டுட்டு ஆடறாளே, அவதான் என் பொண்ணு. அவளுக்கு இப்போ பதினைந்து வயசுதான் ஆகுது. அஞ்சு வயசுலே சதுரங்க விளையாட்டை கத்துக்க ஆரம்பிச்சவ, மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு ஏகப்பட்ட பரிசுகளை வாங்கியிருக்கா. அவ்ளோ பரிசுகளை அடுக்கி வைக்கவே எங்க வீட்லே இடமில்லை. எப்பவும் அவளுக்கு இந்த விளையாட்டை பற்றி சிந்தனைதான். அதனால் சரியா படிக்க மாட்டான்னு நினைச்சிக்காதீங்க. படிப்புலேயும் கெட்டிதான் அவ. எப்படியும் பத்தாவது ரேங்கிற்குள் வந்துடுவா. இந்த வெற்றி எல்லாத்துக்கும் அவளோட விடாமுயற்சிதான் காரணம்.
சரி. இந்த மேட்சுக்கு வருவோம்.
இந்த போட்டியின் தகுதிச்சுற்றுகள் எல்லாவற்றிலும் மிகச்சுலபமாக ஜெயித்துவிட்ட என் மகள், இறுதிப்போட்டியிலும் அப்படியே ஜெயித்து விடுவாள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு மிக அதிகமாகவே இருக்குது. கூடியிருக்கும் மக்கள் கூட்டம் மிக உன்னிப்பாக இந்த போட்டியை பாத்துக்கிட்டிருக்காங்க. எப்போதும் போலில்லாமல் இந்த தடவை தொலைக்காட்சிகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதால், இந்த போட்டியை இந்தியா முழுக்க லட்சக்கணக்கானோர் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
கடந்த சில நிமிடங்களாக எதிராளியை 'செக்-மேட்' செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். எதிராளி எப்படியோ தப்பித்து விடுகிறார். சற்றும் மனம் தளராமல் இதோ... இதோ... மறுபடியும் 'செக்' வைக்கிறாள். இப்போ பாப்போம். ஆஹா.. ஆஹா... இது 'செக்-மேட்'டேதான். முடிந்தது. ஆட்டம் முடிந்து விட்டது. எதிராளி தோல்வியை ஒப்புக்கொண்டு என் மகளிடம் கை கொடுக்கிறார்.
என் மகள் ஜெயித்தே விட்டாள்.
நாங்கள் இருக்கையை விட்டு எழுந்து உற்சாகத்தில் கத்திக் கொண்டிருக்கிறோம். எனக்கு கண்கள் பனிக்கிறது. இதயம் கனக்கிறது.பக்கத்தில் இருக்கும் நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் எனக்கு கை கொடுத்து வாழ்த்து சொல்கின்றனர். "டேய், ட்ரீட் எங்கேடா? என கேட்கின்றனர். அனைவரையும் பொறுமை காக்கச் சொல்லிவிட்டு நான் என் மகளிடம் ஓடிப்போக முயற்சி செய்கிறேன்.
பின்னாலிருந்து என் மனைவி, "ஏங்க பர்சை எடுத்து, காசு குடுங்க. இவங்க ட்ரீட் கேக்கறாங்க" என்கிறார். நானோ படபடப்பில் இருந்தேன் - "இப்போ என்னம்மா அவசரம், முதல்லே நம் பொண்ணைப் பாப்போம் வா" என்று அவளையும் இழுத்துப்போக முயற்சிக்கிறேன்.
என் அவசரத்தைப் புரிந்துகொள்ளாத அவளோ - "ஏங்க, பாக்கட்லேந்து பர்சை எடுத்து காசை கொடுங்க" - "ஏங்க, பாக்கட்லேந்து பர்சை எடுத்து காசை கொடுங்க" என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். "காசை கொடுக்கலேன்னா இவ விடமாட்டா" என்று சொல்லிக் கொண்டே நானும் எடுத்துக் கொடுக்கிறேன்.
அப்போதுதான் கவனித்தேன் - "யார் இந்த பொண்ணு? இவ எப்படி திடீர்னு என் முன்னாடி வந்தா? ஏன் இவளும் என்கிட்டே காசு கேக்கறா?"
"சதுரங்கம் வாங்க வந்த கடையிலே, காசை எடுத்துக் கொடுத்துட்டு சட்டுபுட்டுன்னு வீட்டுக்குக் கிளம்பற வழியை பாக்காமே -- 'பே'ன்னு கடைக்காரி மூஞ்சியை பாத்துக்கிட்டிருந்தா என்ன அர்த்தம்? -- பின்னாடி வரிசையில் நிக்கறவங்கல்லாம் கத்தறாங்க பாருங்க" - இது மறுபடியும் என் மனைவிதான்.
The End.
*****
பிகு - 1: வழக்கம்போல கனவு / பகல் கனவு மாதிரி கதையை முடிச்சதுக்கு மன்னிச்சிடுங்க.
பிகு - 2: இந்த வாரம்தான் கடைக்குப் போய் சதுரங்கம் வாங்கிட்டு வந்தோம். அதை சஹானாவுக்கு சொல்லிக் கொடுத்து பெரிய சாம்பியனாக்கணும்னு பேசிக்கொண்டோம். அதைத்தான் கதையா போட்டிருக்கேன்... ஹிஹி...
பிகு - 3: லேபிள்லே 'சொந்த கதை'ன்னு போட்டா கண்டுபிடிச்சிடுவீங்கன்னுதான், 'சிறுகதை'ன்னு போட்டிருக்கேன்!!!
Read more...