Sunday, December 9, 2012

பஜ்ஜியோ பஜ்ஜி!


நண்பர் ஒருவர் தொலைப்பேசினார். நம் வீட்டிற்கு பக்கத்தில் இருப்பவர்தான். மாலையில் அவர் வீட்டிற்கு தொலைதூர உறவினர்கள் இருவர் வரப்போவதாகவும், அவர்களுக்காக பஜ்ஜி செய்யப் போவதாகவும் கூறினார். நான் ஒண்ணுமே ஜொள்ளவேயில்லை. ஆனாலும், தொலைப்பேசியிலேயே அதை கண்டுகொண்ட நண்பர், பஜ்ஜிகளை செய்து முடித்ததும், சூட்டோடு சூடாக 10 பஜ்ஜிகளை கொடுத்தனுப்பினார். அவர் நாமம் வாழ்க!

மாலையில் மறுபடி கூப்பிட்டார். உறவினர்கள் வந்துவிட்டதாகவும், இருவருக்கு பதில் ஐவர் வந்திருப்பதாகவும், இப்படி திடீரென்று வந்துவிட்டதால் என்ன செய்வதென்றே தெரியவில்லை என்று புலம்பினார். நானும் டென்சனாகி விட்டேன்.

அமெரிக்காவில் பக்கத்து வீட்டிற்குப் போவதென்றாலும், முதலில் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி, சரியாக அந்த சமயத்தில், குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே போய் வருவர். திடீரென்று யார் வீட்டிற்கும் போய் கதவைத் தட்டமுடியாது. நண்பர் வீட்டில் டிபன், சாப்பாடு சாப்பிடும் நேரமாக போய் நான் பல நாட்கள் உட்கார்ந்ததெல்லாம் தற்செயலானதேன்னு சொன்னா யாரும் நம்பப் போவதில்லை. ஆகவே நானும் சொல்லவில்லை.

வேறு சில நண்பர்கள் இருந்திருக்கிறார்கள். ’இன்னிக்கு 2 டு 4 நான் ஃப்ரீயா
இருக்கேன். வந்தீங்கன்னா கொஞ்ச நேரம் பேசிட்டிருக்கலாம்’னு சொல்வாங்க. அப்போ சரியா சாப்பாடு நேரமும் முடிஞ்சிருக்கும். மாலை காபி/டிபன் நேரமும் வந்திருக்காது. அந்த கேப்புலே வெறும் பேசிட்டு அனுப்பிடலாம்னு நினைப்பாங்க. ஆனா, நாங்களும் விடாமே எதையாவது வாங்கி சாப்பிட்டுத்தான் வருவோம்னு வைங்க..

நிற்க. இன்றைய பிரச்னைக்கு வருவோம். அதிக விருந்தாளிகள் வந்தா, நண்பர்தானே டென்சனாகணும், நான் ஏன் டென்சன் ஆனேன்னு யாராச்சும் கேட்டீங்களா? முதலில் எங்களுக்கு பஜ்ஜி கொடுத்தாரே, நினைவிருக்கா, இப்போ அதிகம் பேர் வந்துட்டாங்கன்னு அந்த பஜ்ஜிகளை திரும்பிக் கேட்டுட்டா? எலி பிடிக்க வெச்ச மசால்வடையை எடுத்து கஸ்டமருக்கு கொடுக்கற மாதிரி ஒரு ஜோக்கு வருமே, அதைப் போல இவரும் பண்ணிட்டா? அதனால்தான் நான் டென்சனானேன்.

ஆனா பாருங்க, நண்பர் மறுபடி அவர் நண்பர்தான் நிரூபிச்சிட்டாரு. கொடுத்த வாக்கையும், பஜ்ஜியையும் திருப்பி வாங்கமாட்டேன்னு சத்தியமே பண்ணிட்டாரு. இருந்தாலும், மனசு மாறிட்டார்னா என்ன பண்றதுன்னு அவர்கிட்டே பேசி தொலைப்பேசியை வெக்கறதுக்குள்ளே அவற்றை சாப்பிட்டு ஏவ் விட்டாச்சு.

அடுத்த முறை இன்னும் கொஞ்சம் அதிகமா பட்சணங்களை செய்ங்கன்னு அறிவுரை கூறி, மறக்காமல், அடுத்த வாரம் அவர் வீட்டுக்கு யாராவது வர்றாங்களான்னு கேட்டு அழைப்பை கட் செய்தேன்.

***
 

Read more...

Friday, November 16, 2012

தலைமுடி பிரச்னை. தீர்வு தேவை.


இந்த தலைமுடி இருக்கிறதே தலைமுடி. அதனால் எனக்கு வாழ்க்கையில் பலப்பல பிரச்னைகள். நானும் நிறைய நண்பர்களை பார்த்திருக்கிறேன். யாருக்கும் எந்தப் பிரச்னையும் வந்ததில்லை. எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆகுதுன்னு தெரியல. தொலைக்காட்சி அல்லது புத்தகங்களில் ஏதேனும் தீர்வு கிடைக்குதான்னு நானும் சல்லடை போட்டு தேடியாச்சு. சல்லடைதான் போச்சே தவிர, தீர்வு இல்லை. சரி, ஏதாவது மருத்துவர்கிட்டே போகலாம்னு போனேன். அனைவரும் இதுக்கு ஒண்ணும் பண்ணமுடியாது. அதுவா சால்வ் ஆனாதான் உண்டு. கடவுள் மேலே பாரத்தை போட்டுட்டு வேலையை பாருங்கன்னு சொல்லிட்டாங்க.

இதையே நினைச்சி நினைச்சி ராத்திரியெல்லாம் தூக்கமே வராது. தெருவிலே நடந்து போனா, அனைவரின் தலையை ஆசையோடு பார்த்துக் கொண்டே போவேன். நல்ல அழகான சின்னச்சின்ன தலைமுடியோட யாராவது போனா, கிட்டே போய் அந்த முடியை கோதி விடணும்போல தோணும். ஆனா கூடவே தங்ஸ் வருவதால், அந்த ஆசை கானல்நீராகவே போயிடுச்சு. எப்போதும் தலையை நினைச்சிக்கிட்டே இருந்ததால், காலப்போக்கிலே அஜித் ரசிகனாகூட ஆயிட்டேன்னா பாத்துக்குங்க.

வந்தா போயித்தானே ஆகணும். போனா வந்துதானே ஆகணும்ற விதிப்படி, தலைமுடின்னா உதிரத்தான் செய்யும். நிறைய பேருக்கு அந்தப் பிரச்ச்னை இருக்கே? இதுக்கெல்லாம் மனசை தளரவிடலாமான்னு கேக்கறவங்களுக்கு, ஹலோ, என் பிரச்னை அது இல்லீங்க.

என் பிரச்னை என்னன்னா, என் தலைமுடி வேகமா வளர்றதுதான். வேகமான்னா, ஒரு நாடகத்துலே எஸ்.வி.சேகர் சொல்றமாதிரி - இந்தப் பக்கம் ஷேவ் செய்தா, அந்தப் பக்கம் வளர்ந்துடுது - அவ்ளோ வேகமா இல்லே. உதாரணத்துக்கு, ஒண்ணாம் தேதி போய் முடிவெட்டிக்கிட்டு வர்றேன்னு வெச்சிக்குங்க. பதினைந்தாம் தேதி, மண்டை முழுக்க கருகருன்னு வளர்ந்து நிக்கும். மண்டைக்குள்ளே வளரவேண்டிது மட்டும் வளரவே மாட்டேங்குது, இந்த முடி மட்டும் எப்படின்னு தங்ஸ் ஆசையா கேப்பாங்க. கூடவே, உள்ளே நல்ல மண்ணு இருக்கறதால், செழிப்பா வளருதுன்னும் பாராட்டுவாங்க. எது எப்படியோ, இருபது நாளைக்கொரு தடவை கட்டிங் பண்ண வேண்டியதாயிடுது.

இந்த ஷாம்பூ பயன்படுத்தினா அதிகமா முடிகொட்டுது. அந்த எண்ணெய் தடவினேன், கையோடு முடி வந்திடுது - அப்படின்னு பலர் வருத்தத்தோடு சொல்லக் கேட்டிருக்கேன். அப்போது எனக்கு ஏற்படும் சந்தோஷ ரியாக்‌ஷனை அவங்களால் புரிஞ்சிக்கவே முடியாது. ஒரு மாதிரி பாத்துட்டு போவாங்க. நானும் ஓடிப்போய் அந்த ஷாம்பூ/எண்ணெய் வாங்கி ஆசைஆசையாய் (என்) தலையில் தடவுவேன். பலன்? நிறைய இருக்கும். என்ன? முடிதான். வேறென்ன. அன்று வந்ததும் அதே முடி... சேச்சேச்சே... இன்று வந்ததும் இதே முடி’ன்னு நானும் பாடிக்கிட்டே தலையை வாரிக்குவேன்.

இங்கேயாவது பரவாயில்லை, முடிவெட்ட சுமார் நூறு ரூபாய் ஆகுது. அமெரிக்காவில் இருந்தவரை, ஒவ்வொரு தடவையும் $18+$2 டிப்ஸ் கொடுத்துட்டு வரும்போது டென்சனாயிருக்கும். ஆண்டவா, என்னாலே ’முடி’யலன்னு கத்துவேன். ஆனா, எந்த பிரயோசனமுமில்லை. நாளொரு மேனியும் பொழுதொரு (பல!) முடிகளுமாய் அதுபாட்டுக்கு வளர்ந்துகிட்டே இருக்கு.

ஒருமுறை முடிவெட்டி விட்ட ஒரு சீனப்பொண்ணுகிட்டே - முடி இருக்கற மாதிரி இருக்கணும். ஆனா இருக்கக் கூடாது. அப்படி வெட்டி விடுங்கன்னு சொன்னேன். அதுக்கு அந்தப் பொண்ணு, உங்க மூஞ்சிக்கு(!) அப்படி செய்தா நல்லாவே இருக்காது. உங்க வீட்டுலே என்னை தேடி வந்து அடிப்பாங்க. அதனால், ஓரளவுக்கு வெட்டி விடறேன். சிரமம் பார்க்காமே முடி வளர்ந்தவுடன் மறுபடி இங்கேயே வந்துடுங்கன்னுச்சு. வீட்டுலே அனுமதி கிடைச்சாக்கூட கடைக்காரி அனுமதிக்க மாட்றா. எல்லாம் தலை(முடி)யெழுத்து. தவிர, மாசாமாசம் வர்றாமாதிரி அவருக்கு ஒரு பெர்மனெண்ட் கஷ்டமர் வேணுமே.

வெச்சா குடுமி, சரிச்சா மொட்டைன்ற பழமொழியின் அருமை தங்ஸுக்கு தெரியல. பங்க் (தமிழில் கூந்தல்) வெச்சிக்கவும் விடமாட்றாங்க. மொட்டை அடிக்கவும் அனுமதி இல்லை. சரி, முடிவெட்டிக்க மாசாமாசம் ஒரு மணி நேரம் ஒதுக்க ’முடி’யாதான்னு சுலபமா கேட்கலாம். ஆனா ஒரு சரியான கடை, கட்டிங் செய்துவிடற ஆள் கிடைக்கறவரை செய்கிற சோதனைகள் இருக்கே. ஒவ்வொருமுறையும் தலை ஒவ்வொருவிதமா இருக்கும். ஆபீஸில் என்னைப் பார்த்து ஏன் சிரிக்கிறாங்கன்னு கொஞ்ச நாள் கழிச்சிதான் என் மர(முடி)மண்டைக்கு புரிஞ்சுது. அப்புறம் ஒரு வழியா சென்னையில் ஒரு கடை/ஆள், பெங்களூருவில் ஒரு கடை/ஆள் கிடைச்சாங்க. இது செட் ஆகறதுக்குள்ளே நான் பட்ட பாடு இருக்கே.. என் நண்பனுக்குக்கூட இந்த மாதிரி பிரச்னை வரக்கூடாது.

ஓகே. இவ்ளோ தூரம் படிச்சிட்டீங்க. ஒழுங்கு மரியாதையா எனக்கு ஒரு தீர்வு சொல்லிட்டுப் போங்க.

***

Read more...

Wednesday, August 29, 2012

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்


சென்ற மாதம் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளானபோது ( :-(((( ) அந்த வண்டியில் பயணம் செய்த நாட்கள் நினைவில் வந்தன. அப்போ எழுத ஆரம்பிச்சது இந்த பதிவு, இன்னிக்குதான் முடிஞ்சது. ஒரு பத்து roundtrip அடித்திருப்பேன் அதில். அந்த நினைவுகள் bullet pointsஆக இங்கே இந்த பதிவில்.

** மத்தியப் பிரதேசத்தில் பல மலைக்குகைகள் [tunnels] வரும். அவை ஒவ்வொன்றையும் எவ்வளவு நொடிகளில் வண்டி கடக்கிறது என்ற கணக்கெடுப்பு எடுப்பேன். ஆனால் ஒரு முறைகூட முத்த சத்தம் செய்துவிட்டு, பக்கத்தில் இருப்பவரை அறைந்ததில்லை.

** மறுநாள் மதியம் சம்பல் பள்ளத்தாக்கை கடக்கும்போது, கொள்ளைக்காரங்க வருவாங்க, கல் எடுத்து வண்டியில் வீசுவாங்கன்னு ஒரு வதந்தி கேள்விப்பட்டிருந்ததால், பயந்துகொண்டே பயணம் செய்திருக்கிறேன்.

** பயந்துகொண்டே சீட்டு விளையாடும் மக்கள், அதே பெட்டியில் ராணுவத்தினர் யாராவது பயணம் செய்தால், பயமே இல்லாமல் (அவர்களையும் சேர்த்துக்கொண்டு!) தைரியமாக சீட்டு விளையாடுவார்கள். நான் வெறும் வேடிக்கை.

** சரியான கோடை காலத்தில், இரண்டாம் வகுப்பில் போகும்போது வெயிலின் தாக்கம் தெரியாமலிருக்க (என்) தலையில் தண்ணீர் ஊற்றிய காலமும் உண்டு; 2ACயில் செம குளிரால் போர்வையால் போர்த்தியவாறே உலாத்திய காலமும் உண்டு.

** பயணச்சீட்டை இணைத்தால்தான் ஆபீஸில் reimbursement கிடைக்கும் என்பது தெரியாமல், அதை நிலையத்துக்கு வெளியில் நிற்கும் டிக்கெட் செக்கரிடம் கொடுத்துவிட்டு நிதித்துறையில் கெஞ்சிக் கிடந்தேன் சில நாட்கள்.

** வண்டியில் வருவதையெல்லாம் எனக்கும் வாங்கிக் கொடுத்து பேசிக்கொண்டே வரும் மாந்தர்களையும்; அனைத்தையும் மூடிமூடி சாப்பிட்டு எனக்கு வெறும் சிரிப்பை மட்டுமே வழங்கிய நண்பர்களையும் பார்த்த நாட்கள் அவை.

** (சென்னைக்கு வரும்போது) போபால், ஜான்சி போன்ற நிலையங்களில் செய்தித்தாள் விற்பவர்கள், தங்கள் விற்பனையை அதிகரிக்க - ’சென்னையில் குண்டுவெடிப்பு. 20 பேர் பலி’ என்று கூவிக்கொண்டே விற்பார்கள். இது பொய்த் தகவல் என்று அறியாதவர்கள் அந்த செய்தித்தாளை விலை கொடுத்து வாங்குவார்கள். அப்படியும் அந்த செய்தித்தாளாவது சரியாக இருக்குமா என்றால், இருக்காது. உள்ளே இருக்கும் பக்கங்களெல்லாம் பழைய (முந்தைய தின) தாள்களாக இருக்கும். ஓரிரு முறை அனுபவப்பட்ட பிறகே எனக்கு புரிந்தது இந்த விஷயம்.

** நாக்பூரில் ஆரஞ்சு வாங்கிட்டு வான்னு ஒவ்வொரு முறையும் வீட்டில் சொல்வதால் ஒரு சின்ன கூடை வாங்கி வருவேன். ஒவ்வொருமுறையும் அதில் அஞ்சு ஆறுதான் நல்லா இருக்கும்.

சென்னை - தில்லி இடையே இரண்டாம் வகுப்பில் போக ஆரம்பித்து, 3AC, 2AC, விமானம் என்று படிப்படியாக முன்னேறினாலும், ஆபீஸ் பிரச்னையோ, அடிக்கடி, ‘என்னங்க, என்னங்க’ பிரச்னையோ இல்லாமல் நாள் முழுக்க தூங்கியவாறு, வேளாவேளைக்கு வண்டியில் கொண்டு வருவதை சாப்பிட்டு, மறுநாள் ஹாயாக ஊர் போய் இறங்குவதை மறுபடி ஒரு முறையாவது செய்யணும். அட, ஆபீஸ் விஷயமா போகும்போது குடும்பத்தை கூட்டிப் போகமுடியாதுல்லா?

***

 

Read more...

Thursday, August 23, 2012

எப்படி இருக்கீங்க? எப்படி இருந்துச்சு உங்க நாளு?


என்னோட நாள் எப்படி இருக்கும்னு யாராலும் சொல்லமுடியாது. ஒரு நாள் பயங்கர பிஸியா இருக்கும். சில நாட்கள் ஒரு (வாடிக்கையாளர்) அழைப்பும் இருக்காது. அட,  ஒரே நாள்லேயே காலையில் பிஸியா இருப்பேன். மாலையில் ஒண்ணுமே இருக்காது. ஆனா, எனக்கு இந்த வேலை சரியா பிடிச்சிருக்கு. ச்சின்ன வயசிலிருந்தே மார்க்கெடிங்தான் எனக்கு பிடிக்கும். அதே போல் இந்த வேலைக்கு வந்துட்டேன்.

மேற்கண்ட பாராவை படிச்சிட்டீங்களா? இது யார் சொன்னது? சொல்றேன். தற்போது தங்கியிருக்கிற Guesthouseலே கூட இருக்கற ஒருவரை நேற்று மாலை ஒரே ஒரு கேள்வி கேட்டேன் - எப்படி இருந்துச்சு உங்க நாள்?. அவ்வளவுதான். அதுக்கு அந்த மனுசர் படபடவென பொரிஞ்சி தள்ளியதுதான் அது. டேய், நான் என்ன கேட்டேன்? உன் நாள் எப்படி இருந்துச்சு? அதுக்கு என்ன சொல்லணும்? நல்லா இருந்துச்சு, நல்லா இல்லே - அவ்வளவுதானே? ஏன் நீ தேவையில்லாமே பேசிட்டே போறே? - இதெல்லாம் நான் மனசுக்குள்ளே கேட்டது.

இதை விடுங்க. தலைப்பில் இருக்கும் முதல் கேள்வியைப் பாருங்க. “எப்படி இருக்கீங்க?”. இதுக்கு மக்கள் சொல்லும் பதில்கள் இருக்கே.

காலை வேளையில் பல வேலைகளை செய்வதற்காக சுறுசுறுப்பாக ஆபீஸ் வந்து ஒருவரைப் பார்த்து இந்த கேள்வியைக் கேட்டா, அதுக்கு அவர் சொல்லும் பதில் - "ஏதோ போகுது. ஒண்ணும் சரியில்லே". அவ்வளவுதான். அவரு மூட்அவுட்டாக இருப்பது மட்டுமல்லாமல், நம்மையும் switchoff செய்துட்டு போய்விடுவார்.

அடுத்து இன்னொருத்தர். அவர் ஏதோ ஒரு யோசனையில் வந்திருப்பார். கேள்வி கேட்டவுடன், “அட அதை விடுப்பா. இந்த பிரச்னைக்கு ஒரு பதில் சொல்லு”ன்னு ஏதோ ஒரு விஷயத்தை தேவையில்லாமல் நம் தலையில் ஏற்றிவிட்டு போய்விடுவார். எனக்குத் தேவையா இது?

அடுத்தவர். "Fine". இதுதான் பதில். அஷ்டே. all silent. ஏன்யா, நீ என்னை திருப்பி கேட்கமாட்டியா?. சரி விடு. நாளைக்கு பார்க்கலாம்.

இனி அடுத்து வருபவர்தான் நிஜமாகவே டாப். இது ஐந்து வருடம் நான் வேலை பார்த்த என் அமெரிக்க பாஸ். காலை வந்தவுடன், ”குட்மார்னிங் ஸ்டீவ்,
எப்படியிருக்கீங்க”ன்னு கேட்டவுடன், சிரித்தபடியே பலமாக “Wonderful. Excellent. Cannot complain for such an awesome day" அப்படி இப்படியென்று உற்சாகத்துடன்
அவர் சொல்லும் பதில் இருக்கிறதே, தூக்கக் கலக்கத்துடன் ஆபீஸ் சென்று, அடுத்த வாரயிறுதி எப்போ வரும்னு சோம்பேறித்தனமாக காலண்டரை பார்க்கும் எனக்கு (மற்றும் பலருக்கு) செமையா ஊக்கத்தைக் கொடுக்கும். அந்த முழு நாள் இல்லேன்னாலும், கொஞ்ச நேரத்துக்காவது அவரது உற்சாகம் என்னிடம் வந்திருக்கும். வேலை பரபரவென நகரும். இதெல்லாம் அடுத்து ஒரு தேசியை பார்க்கிற வரைதான். அப்புறம் புஸ்ஸ்ஸ்....

அதற்குப் பிறகு, என்னை யார் கேட்டாலும் நானும், ”சூப்பர். அருமையா இருக்கேன். ஒரு பிரச்னையும் இல்லே”ன்னு உற்சாகமா சொல்ல ஆரம்பிச்சேன்.

அப்புறம், இதே கேள்வியை காலையில் வீட்டில் தூங்கி எழுந்ததும் சஹானாவிடம் கேட்க ஆரம்பித்தேன். “செல்லம். குட் மார்னிங். ஹௌ ஆர் யூ?”. நான் இவ்ளோ நேரம் உன்கூடதானேப்பா தூங்கிக்கிட்டிருந்தேன்னு ஆரம்பத்தில் சொன்னவங்க, இப்போல்லாம் ‘சூப்பர், அப்பா’ என்று உற்சாகமாக எழுந்து வரவும் ஆரம்பித்திருக்கிறார்.

அவ்ளோதாம்பா பதிவு. இப்போ சொல்லுங்க. நீங்க எப்படி இருக்கீங்க?

***

Read more...

Thursday, June 21, 2012

நொறுக்ஸ் - June 21, 2012


மனப்பாடம். அமெரிக்காவில் இதை கேள்விப்பட்டே இராத சஹானா, இங்கே தினமும் ஆங்கிலக் கவிதைகள், அறிவியல் கருத்துகள் அப்படி இப்படின்னு பல விஷயங்களை மனப்பாடம் செய்யற நிலைமைக்கு வந்துட்டாங்க.

அடிக்கடி நடக்கும் வகுப்புத் தேர்வைப் பற்றி அவர் சொல்லும் ஒரு குறை என்னன்னா - விடைகள் எழுதும்போது, புத்தகத்தில் இருக்கும் அதே வார்த்தைகளை, அப்படியே பயன்படுத்தினால்தான் சரியான மதிப்பெண் கிடைக்குது. கொஞ்சம் முன்னே பின்னேயோ, சொந்தமாக அதே பொருள் தரக்கூடிய வேறு வார்த்தைகளை போட்டு எழுதினால் தப்பு'ன்னு சொல்லி மதிப்பெண்களை குறைச்சிடறாங்க. இது என்ன நியாயம்?

கரெக்ட். இது என்ன நியாயம்? பதில் என்னிடத்திலும் இல்லை. இன்னொரு முறை திட்டி, ஒழுங்கா மனப்பாடம் பண்ணுன்னு சொல்லியாச்சு.

***

#365Process பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். டிவிட்டரில் சரமாரியா வர்ற விளம்பரங்களை பொறுத்துக் கொள்ளும் நண்பர்களுக்கு நன்றி. பொறுத்துக் கொள்ளாமல் ம்யூட் செய்தவர்களுக்கும் நன்றி. (ம்யூட்'னா என்னன்னு கேக்கறவங்களுக்கு, அதெல்லாம் ஒண்ணுமில்லே. மறந்துடுங்க!).

ஆரம்பிச்சி 115 நாட்கள் ஆயிடுச்சு. இப்போ ஓடும் தொடர்கள்: CMMi, 6Sigma, ITIL & BS7799. கூடிய விரைவில் 6Sigmaவிற்கு தேவையான புள்ளியியலைப் பற்றி எளிய அறிமுகப் பதிவுகளும் வரும். சுட்டி : http://365process.blogspot.com

***

குறுக்குவழிகளை கண்டுபிடிப்பதில் தேசிகள் கில்லாடிகள்னு சும்மாவா சொன்னாங்க. இதோ இன்னொரு உதாரணம்.

ஊரிலிருந்து திரும்பும்போது என் காரை விற்கணும்னு முடிவாச்சு. ஒரு தேசி வந்தாரு. தென்னிந்தியர். எல்லாம் முடிவாயிடுச்சு. ஒரு ஏற்பாடு செஞ்சிக்குவோமான்னு கேட்டாரு. என் காசை கொடுத்துடு, அப்புறம் எதுவேணா செஞ்சிக்கோன்னு சொன்னா, ஒரே அடம். சரி என்னய்யா அதுன்னா, காரை எனக்கு 'பரிசா' (Gift option) தர்ற மாதிரி தந்துடு. நான் தொகையை ரொக்கமா கொடுத்துடறேன் - அப்படின்னாரு.

அதனால் என்னய்யா ஆகும்னா, ரெஜிஸ்ட்ரேஷன் செலவு எனக்கு மிச்சமாகும், உனக்கும் பணம் உடனடியா கிடைச்சிடும்னாரு. நான் இந்த மாதிரி மேட்டரை கேள்விப்பட்டதேயில்லை, என்ன பிரச்னை வருமோ எனக்குத் தெரியாது, ஊருக்கு போற சமயத்துலே ஏதாவது வம்பில் மாட்டிக்க விரும்பலைன்னு சொன்னா, மறுபடி கெஞ்சல். அதெல்லாம் முடியவே முடியாதுன்னு சொல்லி, ஒழுங்கா ரெஜிஸ்ட்ரேஷன் செய்து வெச்சி, பணத்தை இரண்டு / மூன்று தவணையில் தர்றேன்னு சொன்னதால் நான் ஊருக்கும் வந்துட்டேன்.

அடுத்த பிரச்னை, பணத்தை என் வங்கிக் கணக்கில் போடுவது. அதற்கும் இணையத்தில் பரிமாற்றம் செய்தா ஒருசில டாலர்கள் செலவாகுமாம். அதை மிச்சப்படுத்தணும். சரி, ஒரு காசோலையை தபாலில் அனுப்புய்யா, மேட்டர் முடிஞ்சிடும்னா, காசோலையை காசு கொடுத்து வாங்கறேன், அதை செலவழிக்க மாட்டேன்றாப்பல. ஒரு நடை போய் என் கணக்கில் நீயே காசு போடுய்யான்னா, அவர் இருக்கும் ஊரிலிருந்து கொஞ்ச தூரம் போகணும் என் வங்கிக்கு, அதுவும் முடியாதாம்.

இது வேலைக்காகாதுன்னு, என் இன்னொரு நண்பரை அவர் அலுவலகத்திற்கு போய் காசு வாங்கி வந்து, அவருடைய காசோலையை என் வங்கிக் கணக்கில் போடச் செய்து... ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்ப்பா... முடியலைடா.

***

அமெரிக்காவில் இருந்தவரை, இங்கிருந்து வந்து போகும்போது அல்லது தபாலில் தமிழ்ப் புத்தகங்களை வரவழைப்பேன். தபாலுக்கு டப்பு ஜாஸ்தியாயிடும். தவிர, புத்தகங்கள் சீக்கிரம் படிச்சி முடிச்சிட்டா அப்புறம் போர் அடிக்கும். அதனாலேயே, கொஞ்சம் கொஞ்சமா படிச்சி நாள் கடத்துவேன். இப்போதான் இங்கேயே வந்தாச்சேன்னு வாங்கி படிக்கலாம்னு ஒரு முடிவுக்கு வந்தாச்சு.

குட்மார்னிங் டு குட்நைட் எல்லாத்தையும் டிவிட்டரில் சொல்வதால், இப்படி படிக்கும் புத்தகங்களைப் பற்றியும் நம் அரும்பெரும் கருத்துகளை கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு இயம்பலேன்னா அவங்க கஷ்டப்படுவாங்க.

அதனால், http://sathyatv426.posterous.com ஒரு பக்கம் உருவாக்கிட்டேன். ஒரு சின்ன டிவிட்லாங்கர் அளவுக்குத்தான் பதிவுகள் இருக்கும்.

லிங்க்களை வழக்கம்போல் டிவிட்டரில் தர்றேன். இப்போதைக்கு முதல் புத்தக கருத்து : http://sathyatv426.posterous.com/139837098

***

Read more...

Tuesday, May 22, 2012

உட்காருங்க. உட்காருங்க.

முக்கிய டிஸ்கி: வழக்கம்போல் லேபிளை முதலில் படித்து விடவும். பின்னர் வருத்தப்படக் கூடாது.

அடடே. வாங்க வாங்க.

வந்துட்டேன். நலமா?

நலமே. நீங்க?

நானும் நலமே.

உட்காருங்க.

இல்லே முதல்லே நீங்க உட்காருங்க.

ம்ஹூம். நீங்கதான் முதல்லே உட்காரணும்.

அட சொல்ற பேச்சை கேளுங்க. மரியாதையா உட்காருங்க.

என்னங்க. நீங்க பெரியவங்க. நீங்கதான் முதல்லே உட்காரணும்.

எனக்கு வேலை வாங்கித் தந்த தெய்வம் நீங்க. நீங்கதான் முதல்லே உட்காரணும்.

வேலை சரி. எனக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்து என் வாழ்க்கையை மங்களகரமா துவக்கி வெச்ச நீங்கதான் முதல்லே உட்காரணும்.

இது சரிப்படாது. இப்ப உட்காரறீங்களா இல்லையா?

முடியாதுங்க. நீங்கதான் முதலில்.

இத பார்றா. சொன்னா கேளு.

டேய் @#, நீ கேளுடா மொதல்லே.

டேய் வெண்ணை, முன்னாடி இருந்த வேலையில் நான் நிம்மதியா இருந்தேண்டா. நீ வாங்கிக் குடுத்தே பாரு ஒரு வேலை, @#$ என் நிம்மதியே போச்சு. இவ்வளவும் பண்ணிட்டு இங்கே உட்காரவும் மாட்டேன்னா என்னடா அர்த்தம்?

வெளக்கெண்ணை, சிவனேன்னு தனியா இருந்த எனக்கு ஒரு பொண்ணை.. பொண்ணா அவ... கட்டி வெச்சியே, என்ன பாடு படுத்தறா தெரியுமா? அன்னிலேர்ந்தே நீ என்னிக்கு என்கிட்டே மாட்டுவேன்னு பார்த்துக்கிட்டு இருந்தேன். இப்போ இங்கே வந்து உட்காரவும் மாட்டேன்னு வம்பு பண்றே?

சரி சரி விடுங்க. சமாதானமா போயிடுவோம்.

ஆமா. நான் கொஞ்சம் அதிகமா பேசிட்டேன். மன்னிச்சிடுங்க.

சே. ச்சே. இதென்ன பெரிய பெரிய வார்த்தையா சொல்லிக்கிட்டு.

சரி. உட்காருங்க.

ம்ஹூம். நீங்கதான் முதல்லே உட்காரணும்.

***

Read more...

Wednesday, April 11, 2012

நிலநடுக்கம், சுனாமி, கடவுள் மற்றும் சில ட்வீட்டுகள்.


இன்று காலை ட்விட்டரில் நிலநடுக்கம், சுனாமி ட்விட்டுகளுக்கு நடுவே கடவுளைப் பற்றிய ஒரு விவாதமும் ஓடிக்கொண்டிருந்தது. யாரு கேக்கறாங்களோ இல்லையோ, யாரு படிக்கறாங்களோ இல்லையோ, ஒரு டுமீல் ட்விட்டராய் நம் கடமையை செய்ய வேண்டும் என்று எண்ணினேன். போட்டேன் பல ட்வீட்டுகள்.


ஆனா பாருங்க, ஒவ்வொரு முறையும் 140 எழுத்துகளை என்னால் எட்ட முடியல. அதனால், இந்த #365Process தளத்தைப் பற்றியும் நடுநடுவே எழுத வேண்டியதாயிடுச்சு.  படிச்சி பாருங்க, உங்களுக்கே புரியும் என் கஷ்டம். மற்றபடி இந்த பதிவின் தலைப்பில் உள்ளவற்றைப் பற்றிய ட்விட்டுகளே இவை. நம்புங்க.


***

கடவுள் உலகை அளந்தாரான்னு தெரிய வேண்டாம்; உங்க செயல்திறனை அளக்க தெரிஞ்சிக்குங்க. உதவிக்கு #365Process

கடவுள் இருந்தா நல்லா இருக்கும். செயல்முறை இல்லேன்னா நாறிடும். அதைப்பற்றி தெரிஞ்சிக்க படியுங்கள் #365Process

நிலநடுக்கம் ஏற்பட்டாலும், செய்யும் வேலையில் மனநடுக்கம் ஏற்படாமல் இருக்க படியுங்கள் #365Process

கடவுள் உண்டு/இல்லை என்பதற்கான காரணங்களை இஷிகாவா வரைபடத்தில் வரைய #365Process படியுங்கள்

12/21/12 அன்று உலகம் அழியாது. ஏன்னா 2/28/13 அன்றுதான் #365Process முடியும்

ஆக்கல், காத்தல், அழித்தல் - செயல்முறையில் இவற்றை சரியா செய்யணுமா? படியுங்கள் #365Process

ஆத்திகர்கள், நாத்திகர்கள் இருவரும் ஒப்புக் கொண்டு படிக்கும் ஒரே தளம்.. #365Process

இப்பவாவது அடுக்ககத்தில் அடுத்த வீட்டில் இருப்பது யார்னு தெரிஞ்சிக்குங்க. இப்பவும் வேணாமா? படிங்க #365Process

வதந்திகளை பரப்பாதீர்கள். உண்மையான செய்திகளை மட்டுமே சொல்லவும். இதையும் செய்தியாக பரப்பலாம். #365Process

பேரிடர் சமயங்களில் தொலைபேசி அலைவரிசைகளை கடலை போட்டு busy ஆக்காதீர்கள். படியுங்கள் #365Process

நிலநடுக்கம் வந்து போனபிறகு வெளியில் சும்மா நிற்பவர்கள் படிக்க சிறந்த தளம். #365Process

அடாது நிலநடுக்கம் வந்தாலும் விடாது பதிவு போடப்படும். #365Process

***


இப்போ உங்களுக்கும் அந்த தளத்தை பார்க்க ஆசை வந்திருக்குமே. இங்கே போங்க.
http://365process.blogspot.com

***

Read more...

Saturday, April 7, 2012

ஹிஹி.. ஒரு விளம்பரம்..


ஏண்டா. அந்த சினிமாக்காரங்கதான் தனக்குத்தானே விளம்பரம் அடிச்சிக்குவாங்க. உனக்கு எதுக்கு இதெல்லாம்?.. இப்படி கவுண்டர் சொன்னது காதில் விழுந்தாலும்.. ஒரு விளம்பரம் கொடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.


போன வாரம் அலுவலகத்தில் ஒரு நாள் முழுக்க உட்காரவைச்சி ஒரு கூட்டம் போட்டாங்க. அப்போ எல்லாரிடமும், மத்தவங்களைப் பத்தி என்ன நினைக்கிறீங்களோ, அதில் நல்லதை மட்டும் மூணு விஷயத்தை எழுதி அவங்கவங்க தாளில் ஒட்டுங்கன்னாங்க. நண்பர்கள் என்னைப் பற்றியும் ஏதோ சில விஷயங்களை எழுதியிருக்காங்க. கீழே இருக்கு பாருங்க.


நல்லவேளை நல்லதை மட்டும் எழுதச் சொன்னாங்க. இல்லேன்னா, பயபுள்ளைங்க என்னென்ன எழுதியிருப்பாங்களோ.. இப்ப நினைச்சாலும் கதி கலங்குது!!.


படத்தை க்ளிக் செய்து பெரிசா பாத்து, கவனமா படிங்க. ஏதாவது புரியலேன்னா கேட்கலாம். :-))


நன்றி.


Read more...

Friday, March 9, 2012

மென்பொருள் செயல்முறை பற்றி தெரிந்துகொள்ள ஒரு புதிய தளம்!


மென்பொருள் Process சம்மந்தப்பட்ட விஷயங்களை சொல்லலாம்னு ஒரு #365 தளம் துவக்கியிருக்கேன். தளத்தின் முகவரி: http://365process.blogspot.com. தினம் ஒரு பதிவாக 365 நாட்களுக்கு தொடர்ந்து எழுதலாம்னு ஒரு
எண்ணம். இதில் என்னவெல்லாம் சொல்லப்படும் என்பதை இந்த முதல் பதிவு சொல்கிறது.

http://365process.blogspot.com/#!/2012/02/365process.html

பார்த்து, தொடர்ந்து படித்து, ஆதரவு தருக. நன்றி.

***

டிவிட்டரின் பயன் மற்றொரு முறை தெரிய வந்தது. ஒரு நல்ல technical ஆங்கிலம் - தமிழ் அகரமுதலி சொல்லுங்கன்னு

கேட்டேன். படபடவென வந்து விழுந்தன விடைகள். அவை இங்கே. இவை தவிர வேறேதும் இருந்தால், அதையும் சொல்லவும்.

http://dictionary.tamilcube.com/index.aspx

http://www.tamilvu.org/library/technical_glossary/html/techindex.htm

http://www.lanka.info/dictionary/EnglishToSinhala.jsp

http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/

**

எப்படி துவங்கியதுன்னு தெரியல. ஆனா பின்வரும் ட்வீட்ஸ் போலவே பலரும் இன்று டிவிட்டரில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். என் பங்கு இங்கே.

சவுரி. #இழுத்ததில் வந்தது.

கங்குலி சட்டை. #கழட்டியதில் பிடித்தது.

இளவட்டக் கல். #தூக்கியதில் பிடித்தது.

திட்டு. #உடைத்ததில் கிடைத்தது

தவளை. #பிடித்ததில் கடித்தது

மாங்காய் பத்தை. #கடித்ததில் பிடித்தது

***

Read more...

Saturday, March 3, 2012

ட்விட்டர் லிஸ்ட் எப்படி உருவாக்கலாம்?




முக்கியமான டிஸ்கி : இது யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல. வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே. ஏன்னா, இதில் நானே சில பிரிவுகளில் வருவேன்!! அதனால், படிச்சிட்டு, டென்சனாகாமே மறந்துடுங்க. (லேபிளையும் ஒரு முறை பார்த்து விடவும்!)


***

ட்விட்டர் TL-ஐ லிஸ்ட் போட்டு பிரித்து வைத்தால், அனைத்து டிவிட்டுகளும் படிப்பதற்கு சுலபமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனா, அந்த லிஸ்ட்களை எப்படி உருவாக்குவது? கீழ்க்கண்டவாறு செய்தால், பலன் இருக்குமான்னு பாத்து சொல்லுங்க.

லிஸ்ட்களின் லிஸ்ட் :


1. இசை-ராசா

2. இசை-ரகுமான்


3. கிரிக்கெட்-சச்சின்

4. கிரிக்கெட்-அசச்சின்


5. கர்நாடக இசை

5a.கர்நாடக இசை-TMK மட்டும்


6. பண்பலையில் பாட்டு போடுபவர்கள் / கேட்பவர்கள் / பாட்டு போடச் சொல்லி கேட்பவர்கள்.

7. இணையத்தில் / யூட்யூபில் பாட்டு கேட்பதை அறிவிப்பவர்கள்.


8. யாஹூ chat (ரெண்டு பேர் மட்டும் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பர்.)

9. ரயில் வண்டி (ஒரு ஐந்தாறு பேர் தொடர்ந்து பேசுவர். வண்டி பெரியதாகிவிட்டால் twitlongerல் பேசுவர்).


10. போஸ்டர் பாய்ஸ் - புது பதிவு போட்டால் மட்டும் இங்கு வரும் விளம்பரம் ஒட்டுபவர்கள்.

11. Drupal - இதற்கு விளக்கம் தேவையில்லை.


12. தத்துவவாதிகள். (தத்ஸ் எண் போட்டு தொடர்ந்து தாக்குபவர்கள்).

13. இலக்கியவாதிகள் - ஒண்ணும் சொல்றதுக்கில்லை.


இது ஒரு சாம்பிள் பட்டியல்தான். மல்லாக்க விட்டத்தைப் பார்த்து யோசிச்சா இன்னும் பல லிஸ்ட்கள் தோன்றும். பிறகென்ன, அவற்றை உருவாக்கி, அனைத்தையும் படித்து ஜென்ம சாபல்யம் பெறுங்க. அஷ்டே.



***



Read more...

Monday, February 27, 2012

என் வாழ்க்கைப் பாதையை மாற்றிய அந்த சுடர்மணி!!



அப்போ எனக்கு பத்து வயசு இருக்கும்.(இப்போ மட்டும் என்ன, ஒரு ரெண்டு மூணு வயசு கூட, அவ்வளவுதான்..). குடும்ப நண்பர்கள் ஒரு இருபது பேர் கிளம்பி பிச்சாவரம் போனோம். போயிட்டு வர்ற வழியில் சிதம்பரம் கோயிலுக்கு போயிருந்தோம். அந்தக் கோயில் குளத்தில் குளிக்க அனைவரும் இறங்கினர். (இப்போ அந்த குளத்தில் குளிக்க அனுமதி இருக்கான்னு தெரியல).


அப்போ எனக்கு நீச்சல் தெரியாது. (இப்போ? ன்னு யாரும் கேட்கப்படாது). அதனால் 'தைரியமா' மேல் படிக்கட்டுலேயே உட்கார்ந்து சொம்புலே (சிம்பு'லே இல்லே) தண்ணி மொண்டு குளிக்க ஆரம்பிச்சேன். (கேவலமாதான் இருந்துச்சு. இதெல்லாம் பாத்தா முடியுமா!). திடீர்னு கால் வழுக்கி சில படிக்கட்டுகள் இறங்கி தண்ணிக்குள்ளே போயிட்டேன். சென்ற ஆட்சியில் குளங்களை சரியாக சுத்தம் செய்யாததால்தான் நான் அப்படி வழுக்கிவிட்டேன்னு எனக்கு இப்போ புரியுது. அம்மா வாழ்க.



இந்த மாதிரி சமயத்தில், 'தலைக்கு மேல் போயாச்சு, ஜான் போனா என்ன, முழம் போனா என்ன'ன்னு பழமொழியெல்லாம் சொல்லக்கூடாது. இன்னும் 'விவரம்' தெரியாது வயசு. 'பாக்க' வேண்டியது எவ்வளவு இருக்கு? அதனால், கையை காலை உதைச்சி (என்னோட கை கால்தான்) அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்யறேன்.



ஆனா முடியல. கீழே கீழே போறா மாதிரி இருக்கு. அந்த சிறு குளத்தில் இருக்கிற தண்ணி, ஒரு பெரிய கடல் மாதிரி இருக்கு. லியோ டி காப்ரியோ மாதிரி தண்ணிக்குள்ளே 'ஸ்லோ மோஷன்லே' போறேன். அந்த டைட்டானிக் இறுதிக் காட்சியே ஒரு சின்ன தண்ணித் தொட்டியில்தான் எடுத்தாங்கன்னு சமீபத்தில்தான் எனக்கு தெரிஞ்சுது. (யாருப்பா அது,
தண்ணித் தொட்டின்னவுடனே, தமிழக அரசின் புது சட்டசபையான்னு கேக்கறது? அது எண்ணைத் தொட்டி!!)



நீங்க இங்கே ஜாலியா படிச்சிட்டிருக்கீங்க. நானோ அங்கே தண்ணீரில் மூழ்கி மேலே வர கஷ்டப்பட்டுட்டிருக்கேன். அப்போ திடீர்னு என் கையில் ஏதோ தட்டுப்பட்டது. 'மூழ்கறவன் கைகளுக்கு மாட்டினதெல்லாம் தெய்வம்' என்கிற புதுமொழிக்கேற்ப (திடீர்னு நானே யோசிச்சது!), நான் அதை புடிச்சி மேலே வர முயற்சிக்கிறேன்.



ஆனால், யாரோ மேலேயிருந்து 'அதை' என்கிட்டேயிருந்து விடுவிச்சி, என்னை தள்ளி விடப் பாக்கறாங்க. ஆஹா, இது தற்கொலையோ விபத்தோ இல்லைடா சின்னபையா, இது ஒரு அப்பட்டமான கொலைன்னு நானே (மனசில்) சொல்லிக்கறேன்.



ஆனா, நான் விடலை. (பருவத்தை சொல்லலே. விடவில்லை என்பதை சுருக்கி சொன்னேன்). நல்லா புடிச்சி இழுக்கறேன். கூடவே பக்கத்தில் ஒரு 'கால்' தெரியுது. (ஏன் முழுசா தெரியலியான்னு கேக்கக்கூடாது, நான் சொன்னது நம் உடலின் ஒரு பாகம் - கால்).



நான் டக்குன்னு 'அதை' விட்டுட்டு 'காலை' புடிச்சிக்கறேன். தென்னை மரம் ஏறுவதைப் போல (உடனே மரம் ஏறத் தெரியுமான்னு கேட்ககூடாது, ஏன்னா, அதுவும் தெரியாது. அப்போ எதுதாண்டா தெரியும்னு நீங்க சொல்றது கேக்குது. ம்ம். ) ஏறி ஒருவழியா தண்ணிக்கு மேலே வந்துட்டேன். பிறகுதான் தெரிஞ்சுது, நான் புடிச்சி இழுத்தது, எங்க மாமாவோட ஜ**ன்னு.



இப்போ பதிவோட தலைப்பை ஒரு தடவை படிங்க. 'அது' மட்டும் இல்லேன்னா, நானும் இல்லே. இந்த பதிவும் இல்லே.


சரிதானே?



***



Read more...

Saturday, February 25, 2012

சென்னை பள்ளிகள் - பாகம் 3.


பாகம் 1

பாகம் 2
 

இந்திய பார்லிமென்ட் முதற்கொண்டு நம்ம போயஸ் கார்டனுக்கு உள்ளே கூட போய்விடலாம் (ஹிஹி. நான் அந்த தோட்டத்திலேயே - அம்மா/ ரஜினிகிட்டே இல்லே - ஒரு அலுவலகத்தில், ஆறு மாதம் வேலை பாத்திருக்கேன்!). ஆனால் இந்த பள்ளிகள் உள்ளே நுழைய நாங்க பட்ட பாடு இருக்கே. அப்பப்பா. "ஆமா, ஏகப்பட்ட பசங்க படிக்கிற பள்ளிகள், அதுக்கு பாதுகாப்பு இருக்க வேணாமா" என்று கேட்கலாம். அது சரிதான். அதுக்காக, ஆபீஸ் ரூம், முதல்வர் அறை இதுக்கெல்லாம் கூடவா அனுமதி மறுக்கணும்?



* பிரின்சிபல்தான் வரச்சொன்னாங்க,

* ஆபீஸ் ரூமில் விவரங்கள் விசாரிக்கணும்,

* அப்ளிகேஷன் பாரம் வாங்கணும்,



இப்படி எது சொன்னாலும், வாயிற்காப்போன்களுக்கு இடப்பட்டிருக்கும் கட்டளை ஒன்றே - 'யாரையும் உள்ளே விடாதே'.



ப்ரீகேஜி அட்மிஷங்களுக்கு மட்டுமே தேதிகள், விவரங்கள், படிவங்கள் அனைத்தும் கிடைக்கும். மற்ற வகுப்புகளுக்கு விவரங்கள் வேண்டுமா - யாருக்குமே தெரியாது. அந்த கடவுளுக்கே வெளிச்.. சாரி. அவருக்கே தெரிந்திருக்காது.



இந்த அட்மிஷன் வேட்டையில் தெரிந்து கொண்ட விஷயம் ஒன்றுதான். பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் - அவர்கள் அங்கேயே இருபது ஆண்டுகளாக வேலை பார்த்தாலும் - அவர்களுக்கு 'வாய்ஸ்' என்று ஒன்று கிடையாது. 'நான் சொன்னாலெல்லாம் கேக்க மாட்டாங்க. நீங்க ஏதாவது பெரிய ஆளோட ரெகமெண்டேஷன் லெட்டர் கொண்டு வாங்க'.


ஒவ்வொரு பள்ளியிலும் (மொத்தம் நான்கு) ஒவ்வொரு ஆசிரியரை பிடித்தோம். ஒருவராலும் உதவ முடியவில்லை. அதுகூட பரவாயில்லை. விவரங்களும் தெரியவில்லை. அட்மிஷன் கிடைக்குமா, கிடைக்காதா, யாரை பார்க்கணும் - எந்த விவரங்களும் தெரியவில்லை. 'ஆபீஸ் ரூமில் நான் சொன்னா ஒண்ணும் நடக்காது'.



தற்போதைய தமிழக முதல்வர் + அமைச்சரவை நிலைமை மாதிரியே இருக்குது இல்லையா? அனைத்து முடிவுகளும் முதல்வர்தான். ஆனால் அவரோ யாரையும் பார்க்கமாட்டார். எப்போதும் பிஸி. :-)


அட, ஆசிரியர்களை விடுங்க. ஒரு பள்ளியில் 'உதவி தலைமை ஆசிரியர்' கிட்டே பேச வாய்ப்பு கிடைத்தது. அவர்கிட்டே விவரங்கள் கேட்டபோது, என்ன சொல்லியிருப்பார்னு நினைக்கிறீங்க. கரெக்ட். மேலே சிகப்பு வண்ணத்தில் இருக்கு பாருங்க. அதேதான்.



இவற்றையெல்லாம் தாண்டி அலுவலர்களிடம் பேச வாய்ப்பு கிடைத்தபோது, அவர்கள் சொன்னவைகளில் சாம்பிளுக்கு சில கீழே:



* மாலை நாலு மணிக்கு தொலைபேசுங்க. கண்டிப்பா சொல்றேன். (மூன்றரை மணிக்கே தொலைபேசி சுவிட்ச் ஆஃப்).



* நாளைக்கு பத்து மணிக்கு வாங்க. முடிச்சிடுவோம். (நாளைக்கு அவர் கண்டிப்பாக மட்டம் போட்டிருப்பாரு).



* இவ்வளவு நேரம் பிரின்சிபால் இங்கேதான் இருந்தாரு. பத்து நிமிஷம் முன்னாடி வந்திருந்தீங்கன்னா பாத்திருக்கலாம் (மருத்துவமனைகளில் சொல்வதைப் போல் இருக்கா?)



* நான் ஆபீஸ்ரூமில் சொல்லி வெச்சிடறேன். நீங்க கரெக்டா வந்துடுங்க. (ஆபீஸ்ரூமில் - அப்படி யாரும் சொல்லலியே? நீங்க எதுக்கும் அடுத்த வாரம் வாங்க)



சரி விடுங்க. திட்டாமே இப்படியாவது மரியாதையா சொல்றாங்களேன்னு சொல்லாதீங்க. ஒரு இடத்தில் திட்டு கூட வாங்கியாச்சு.



" நாளை காலை பத்து மணிக்கு டாண்ணு(!!) வந்திடுங்க. அப்ளிகேஷன் பாரம் தர்றேன். கொண்டு போய், பூர்த்தி செய்து ரெண்டு நாட்களுக்குள் தந்துடுங்க" என்று சொன்னவரை நம்பி போனால், 'வெள்ளை பேப்பர் கொண்டு வந்தீங்களா? அதில் ஊர், பேர் எல்லாம் எழுதிக் கொடுங்க' என்றார். 'பேப்பர் கொண்டு வரலீங்க. பாரம் தர்றேன்னு சொன்னீங்களே' என்றால், நான் என்ன 'ஸ்டேஷனரி கடையா நடத்தறேன். போற வர்றவங்களுக்கெல்லாம் பேப்பர் கொடுக்க. பத்து நிமிடத்தில் கொண்டு வந்து தந்தா தாங்க. இல்லேன்னா ஒண்ணும் சொல்ல முடியாது'.



இதுவே நானாக இருந்தால், அங்கு நடந்ததே வேறாக இருந்திருக்கும். (யாருப்பா அது, 'வவாச கைப்புள்ள மாதிரியா'ன்னு கேக்கறது?!!). அங்கிருந்தது தங்க்ஸ் ஆகையால், ஒரு கடைக்கு போய், பேப்பர் வாங்கி, எல்லாவற்றையும் எழுதி போய் கொடுத்துவிட்டு வந்தார்.



இப்போதைக்கு இது போதும். தொடர்ந்து அடுத்த பகுதியில்...



Read more...

Saturday, February 18, 2012

நான் சின்ன பையனா இருந்தபோது!!!

டிவிட்டரில் ஏதாவது ஒரு தொடரில் பங்கு பெறுவதில் ஒரு பெரிய லாபம் - ஒரு பதிவை தேத்திடலாம். அப்படி சமீபத்தில் #wheniwasakid டேக்கில் யான் எழுதிய ட்வீட்டுகள் இதோ.



#wheniwasakid மிஸ், நான் நேத்து உங்களை மார்கெட் பக்கத்துலே பாத்தேனேன்னு சொல்லியிருக்கேன்

#wheniwasakid மிஸ் வீட்டை தாண்டி போகும்போதெல்லாம் பயந்து ஒதுங்கி போயிருக்கேன்

#wheniwasakid பாம்பை போஸ்ட்மேன் வேலைக்கும் பயன்படுத்தலாம்னு நினைச்சேன். (நன்றி இராம நாராயணன்)

#wheniwasakid உம்மாச்சி நிஜமாவே கண்ணை குத்திடுவாரோன்னு நினைச்சி கண்ணை இறுக்க மூடிக்குவேன்

#wheniwasakid அந்த அங்கிள் அந்த ஆண்டியை துரத்தும்போது எதுக்கு திடீர்னு புலியை காட்டுறாங்கன்னு யோசிச்சேன்

#wheniwasakid டாக்டரா, இஞ்சினியரா, வக்கீலா ஆகணும்னு நினைச்சேன். (நன்றி SV.சேகர்)

#wheniwasakid யாரோ கிளியை வளர்த்து என்கிட்டே கொடுக்கப் போறாங்கன்னு நினைச்சேன்.

#wheniwasakid வளரும் பையன் இவன். உயர உயரவே துள்ளுபவன்

#wheniwasakid வண்ணக் கோலங்கள். வண்ணக் கோலங்கள். விதவிதமான வண்ணக் கோலங்கள்.

#wheniwasakid சிறுகச் சிறுக சேமிக்கும் இந்த சிட்டுக் குருவியைப் பாருங்கள். TNSC Bank.

#wheniwasakid பெரியவனானதும் ரெண்டு பெரிய சைக்கிள், மூணு சின்ன சைக்கிள் வாங்குவேன்னு சபதம் செய்தேன்.

#wheniwasakid சைக்கிள் வாடகைக்கு குடுக்கமாட்டேன்னு சொன்ன கடைக்காரரிடம் சண்டை போட்டேன்.

#wheniwasakid இந்தியா இரண்டாவது முறையா கிரிக்கெட் உலகக் கோப்பை ஜெயிச்சுது.

#wheniwaskid தொல்ல மாத்தேன் போ..

****



Read more...

Sunday, February 12, 2012

காலிக்கடைஃபோபியாவும் கடை சார்ந்த விஷயங்களும்




ஹிஹி. வாடிக்கையாளர்கள் யாருமே இல்லாமல் காலியாக இருக்கும் கடைக்குள் நுழைய எனக்கு பயம். அதைத்தான் சொல்ல வந்தேன். ஏன் அப்படி?



நம்ம பர்சனாலிட்டியும், முழுக்கிற முழியும் வெச்சிண்டு எந்த கடைக்குள் நுழைந்தாலும், அங்கே எதையாவது ஆட்டைய போட வந்தவன் மாதிரியே இருப்பதால், அந்த கடைச் சிப்பந்தி யாராவது ஒருவர் பக்கத்தில் வந்து நின்று விடுவார். இதை பாக்கறீங்களா சார்? இது $xyz சார். எந்த ரேஞ்ச்லே வேணும் உங்களுக்கு - இப்படி கேக்க ஆரம்பிச்சிடுவார். அதனால், கும்பல் ஏராளமாய் உள்ள, கடைச் சிப்பந்திகள் மற்றவர்களோடு மல்லுக் கட்டிக்கொண்டிருக்கும் கடைக்குள் மட்டுமே செல்வேன்.



ஆப்பிள் ஸ்டோர் ஒரு நல்ல உதாரணம். தமிழக சட்டசபைக்கு வெளியே உள்ள இடம் போல் எப்போதும் கும்பலா இருக்கும். (த.ச'விலிருந்து வெளிநடப்பு செய்து வெளியே சத்தம் போட்டுக்கிட்டு கும்பலா நின்றிருப்பாங்கல்லே, அதைச் சொன்னேன்!). எதுவும் வாங்கலேன்னாலும் பரவாயில்லை. ஒண்ணும் சொல்லமாட்டாங்க. ஐபேட், அது இதுன்னு கொஞ்ச நேரம் விளையாடிட்டு வரலாம்.



இந்த ஃபோபியா என் குடும்பத்தில் உள்ள சிறிய மெம்பருக்கு சொன்னாலும் புரியாது. அவர் நினைத்த கடையின் உள்ளே போகவேண்டுமென்று அடம் பிடிப்பார். சமாதானம் செய்து இழுத்து வருவதற்குள் தாவு தீர்ந்துவிடும்.



இந்த பிரச்னைக்கு கொஞ்ச நாள் கழிச்சி ஒரு ஐடியா கண்டுபிடிச்சோம். எந்த கடைக்குள் போனாலும், உடனே சில பொருட்களை எடுத்து, தள்ளுவண்டியில் போட்டுக் கொள்ளணும். பிறகு ஆற அமர கடையை சுற்றிப் பார்த்துவிட்டு, வரும்போது அந்த பொருட்களை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு வெளியே ஓடி வந்துவிட வேண்டியதுதான்.



அப்படியும் சில கடைகளில் விடமாட்டாங்க. வேடிக்கை பார்க்கும்போதே பக்கத்தில் வந்து, சார், உங்க மின்னஞ்சல் முகவரி / தொலைபேசி எண் குடுங்க. நிறைய கூப்பன் அனுப்பறேன். இன்னிக்கு பொருட்கள் வாங்கினா அதிகமான தள்ளுபடி கிடைக்கும் அப்படின்னு மொக்கை போட ஆரம்பிச்சிடுவாங்க. இந்த மாதிரி சமயங்களில்தான் நண்பர்கள் கை கொடுப்பாங்க. எப்படின்றீங்களா? அவங்க வீட்டு முகவரி, அவங்க தொலைபேசி எண் இதெல்லாம் என் நினைவில் 'பளிச்'னு பதிய வைக்கிறாங்களே. பிறகென்ன? அதையெல்லாம் கொடுத்துட்டு எஸ்கேப் ஆகிட வேண்டியதுதான். அப்புறம், அந்த கடையின் பாடு, நண்பர்கள் பாடு. எனக்கு ஒண்ணும் தெரியாது.



அதையும் மீறி சில இடங்களில் நிஜமாகவே பொருட்களை வாங்கினால், பில் போடும்போது அந்தம்மா முறைத்துக் கொண்டே - டேய், இன்னிக்கு வாங்கறே. நாளைக்கு மறுபடி வந்து இதை திருப்பிடக் கூடாதுன்னு சொல்ற மாதிரியே இருக்கும். இதனால், கொஞ்ச நாளாவது பயன்படும் என்று நினைக்கும் பொருட்களையே வாங்குவது. இல்லேன்னா வெறும் வேடிக்கைதான். என்ன நான் சொல்றது?



ஆனா அதிலும் சில விதிவிலக்குகள் வந்துவிடும். சில தவிர்க்க முடியாத காரணங்களால் (பின்னே, தங்ஸ்'ஐ திட்டவா முடியும்?) பொருட்களை திருப்பிக் கொடுக்கப் போனால், நான் போகாமல் தங்ஸ்'ஐ அனுப்பிவிடுவேன். ஹிஹி.



கடைசியில் தங்க்ஸ் ஊருக்குப் போகும் தருணமும் வந்தது. முன்னர் நாங்கள் வேடிக்கை பார்த்தபோது முறைத்துப் பார்த்த கடைகளில் போய் பொருட்களை வாங்கினோம். கத்தி-செட் வாங்கும்போது ஒரு சிப்பந்தி முன் அதை ஆட்டிக் காட்டி, பெருமையாய் வண்டிக்குள் போட்டேன். (வாங்கிட்டேன் பாத்தியா!!).



ஆனால், விதி சிரித்தது.



பெட்டிகளின் எடை அதிகமாகி விட்டதால், சில புது பொருட்களை தங்க்ஸ் விட்டுச் சென்றுவிட, அவற்றை நான் தனியாக போய் கடைகளில் திருப்பிக் கொடுக்கணும்.



யாராவது என் கூட வர்றீங்களா, ப்ளீஸ்?



****



Read more...

Tuesday, February 7, 2012

சென்னை பள்ளிகள் - பாகம் 2


பாகம் 1

வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு வந்து பள்ளியில் சேருபவர்களுக்கு மிக முக்கியமான பிரச்னை - ஓய்வறையின் சுத்தம், சுகாதாரம். உடனே சிலர் -

ஆரம்பிச்சிட்டான்யா. இங்கே இருக்கும்போது இதே தூசி, சத்தம் மற்றும் சுத்தத்தில் இருந்தவன்தானே. கொஞ்ச நாள் அமெரிக்கா போயிட்டு வந்தா, இங்கே குப்பை, மாசு அதிகம்னு ஆரம்பிக்கறதா - அப்படின்னு சொல்லலாம். இரண்டு இடங்களிலும் இருந்ததால்தான் அந்த வித்தியாசம் தெரிஞ்சுது. இல்லேன்னா, எங்களுக்கும் தெரிஞ்சிருக்காது. சரிதானே?


மேலும் இன்னொரு பாயிண்ட். இப்பவும் நாங்க (adults) இந்தியாவுக்கு வந்தா, ஓரிரு நாளில் அந்த சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொண்டாலும், சிறுவர்/சிறுமியர்க்கு மிகவும் கடினம். சாலை, சுற்றுப்புறங்களில் அசுத்தத்தை அவர்கள் பொறுத்துக் கொண்டாலும், 'ஓய்வறை சுத்தம்' இந்த விஷயத்தில் கண்டிப்பாக பிரச்னை செய்வார்கள்.



சென்னையில் எங்க வீட்டின் மேல் குடியிருக்கும் ஒரு நண்பர், சென்ற வருடம் அமெரிக்காவிலிருந்து திரும்பி, தன் இரு குழந்தைகளுக்கு பள்ளி
வேட்டையாடியிருக்கிறார். நங்கநல்லூர், ஆதம்பாக்கம், வேளச்சேரி ஆகிய இடங்களில் குறைந்தது ஆறு பள்ளிகளை பார்த்து, அங்கே ஓய்வறையை பார்க்க முடியுமாவென்று கேட்டதற்கு அந்த பள்ளிகளில் அதெல்லாம் பார்க்க முடியாது என்றிருக்கின்றனர். அப்படி பார்க்க அனுமதித்த ஓரிரு பள்ளிகளில், குழந்தைகள் (அ)சுத்தம் காரணமாக குழந்தைகள் மறுத்துவிட (ஆஸ்ரம்'மும் இதில் சேர்த்தி) கடைசியில் நங்கநல்லூர் செல்லம்மாள் பள்ளியில் ஓய்வறை ஓரளவு சுத்தமாக இருந்ததால் அங்கு கொண்டு சேர்த்து விட்டார்.



போன பகுதி எழுதும்போது சொல்லாத செய்தி இப்போ. டிவிட்டரில் இருக்கும் நண்பர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். என் குடும்பமும் இந்தியா போயாச்சு. லீவுக்கு இல்லை. அங்கே போய் செட்டில் ஆவதற்கு. ஏன் அந்த முடிவு என்கிற கேள்விக்கு பதில் இன்னொரு பதிவில். இந்த காரணத்தால்தான் பள்ளி ஆராய்ச்சியே துவக்கினோம்.



மேற்படி சென்ற ஆண்டு அதே ஏரியாவுக்கு ஏறக்குறைய அதே வயது குழந்தைகளை சேர்க்கச் சென்ற நண்பர் ஒருவரின் அனுபவங்களை அப்படியே கேட்டு, சுட்டு, அதன்படியே நடக்கலாமென்ற முடிவுக்கு வந்தோம்.



சென்னையிலேயே பிறந்து பள்ளிக்குப் போகும் சிறுவர்/சிறுமியர்களுக்கு ஓய்வறை பிரச்னைகள் இல்லையா? அவங்களுக்கு மட்டும் சுத்தமா இருக்கான்னு கேட்டா அதுக்கும் ஒரு உதாரணம் இருக்கு.



எங்க ஏரியாவில் இன்னொரு பள்ளி. ரொம்ப வருடமா இருக்கு. நல்லா சொல்லித் தராங்கன்னு மக்கள் அங்கே போய் பசங்களை சேர்க்கறாங்க. ஆனா அங்கே இந்த ஓய்வறை சுத்தம் கொஞ்சம் பிரச்னை. இதை அந்த மாணவர்கள் ஓரிருவர் வீட்டில் போய் புகார் சொல்ல, நம் தமிழ் மக்கள் வழக்கம்போல் அவர்களை திட்டி, அட்ஜஸ்ட் பண்ணிண்டு போ என்று சொல்ல, ஒரே ஒரு தந்தைக்கு மட்டும் கோபம் வந்திருக்கிறது. அவர், தன் பையனின், நண்பர்களின், தந்தைகளை தொடர்பு கொண்டு, பள்ளிக்கு போய் கேட்கலாம் என்றதற்கு - என்ன சொல்லியிருப்பார்கள்னு நினைக்கிறீங்க. கரெக்ட். நமக்கெதுக்கு சார் வம்பு, நான் ரொம்ப பிசி, நான் ஊர்லே இல்லை - இந்த பதில்களில் ஒன்றுதான்.



சரின்னு நம்ம நண்பரும் பள்ளிக்குப் போய் புகார் செய்யலாம்னா, பள்ளிக்கு உள்ளேயே அனுமதிக்க வாயிற்காப்போன் மறுத்திருக்கிறார். ரொம்ப நேரம் கேட்டுப் பார்த்த நண்பர், வாயிலில் இருந்தபடியே உரத்த குரலில் சத்தம் எழுப்ப, 'உள்ளேயிருந்து' அனுமதி வந்திருக்கிறது. இவரும் போய் புகார் கூற, பிரச்னையை சரி செய்கிறேன் என்று சொல்லியிருக்கின்றனர். அவ்வப்போது தன் மகனிடம் அப்டேட் கேட்டுக் கொண்டு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப் போவதாக சொன்னார் நம் நண்பர். அந்த பள்ளியின் பேர் சொல்லவேயில்லையே? மாடர்ன்.



சுத்தம் சுகாதாரம் பற்றிய இன்னொரு பெரிய பிரச்னை இருக்கு. மேலே படிங்க.



பிரின்ஸ் என்றொரு பள்ளி எங்க ஏரியாவில் இருக்கிறது. அங்கு படிப்பவர்கள் குறைவாக மதிப்பெண் எடுத்தாலோ, ஓரிரு நாட்கள் விடுமுறை எடுத்துவிட்டாலோ, தண்டனை மிகக் கடுமையானதாக இருக்குமாம். (இந்த தகவல்கள் எல்லாம் இணையத்திலேயே - நிறைய விவாத தளங்களில் - இருக்குது). இதைவிட கொடுமை என்னன்னா, (எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்கும்) மாணவியருக்கு ஏற்படும் பிரச்னைகள். வகுப்புக்கு நடுவில் ஓய்வறைக்கு போகணும்னு சொன்னாலும் அனுப்ப மாட்டாங்களாம். ஏன்? இப்ப என்ன அவசரம்? அதெல்லாம் லஞ்ச் டைம்லே போயிக்கோன்னு சொல்லிடுவாங்களாம்.


இதெல்லாம் சும்மா, அப்படியெல்லாம் இருக்காது, அப்புறம் எப்படி அங்கே நிறைய பேர் (3000௦௦௦+) படிக்கறாங்கன்னு கேட்டா, நாங்க செய்த ஆராய்ச்சியில், பேசிய நண்பர்களிடமிருந்து கிடைத்த தகவல்கள்தான் இவை. அவ்வளவுதான்.



தொடரும்...




Read more...

Friday, February 3, 2012

எங்க அலுவலகமும் கருத்துக் கணிப்புகளும்!






எங்க அலுவலகத்தில் அப்பப்போ விதவிதமான கருத்துக் கணிப்புகள் நடக்கும். எல்லாரும் கட்டாயம் பதில் அளிக்க வேண்டுமென்று கூட்டம் போட்டு, தொலைபேசி, மின்னஞ்சல் அனுப்பியெல்லாம் கெஞ்சுவார்கள். நாங்களும் எங்க பொன்னான நேரத்தை செலவிட்டு அதில் பங்கு பெற்று பதிலளித்துவிட்டு, அந்த பதில்களுக்கேற்ப மாற்றத்தை விரும்பி
காத்திருந்தால்... காத்திருந்து காத்திருந்து காலங்கள் போய்விடும். அப்படி நாங்க எதிர்பார்ப்பது மதுரை கருத்துக் கணிப்பின் பின்விளைவுகளைப் போல மாற்றங்களை அல்ல. சிறுசிறு மேம்படுத்துகைகள் (enhancements) மட்டுமே. ஆனா அப்படி எதுவுமே நடக்காதுன்னு பல வருடங்கள் கழித்தே புரிந்தது. அலுவலகத்தில் இதெல்லாம் ஜகஜமப்பான்னு சொல்றீங்க. சரி.
மேலே (கீழே) படிங்க.


Support Departments என்று சொல்லக்கூடிய துறைகளின் வேலையை மதிப்பிடும்படியான ஒரு கக'வில் எப்போதும் ஒரு தமாஸ் நடக்கும். எங்க அலுவலகத்தில் வெளிநாட்டில் இருக்ககூடிய (ஏறக்குறைய) அனைவருக்கும் பிரச்னை தரக்கூடிய துறை ஒண்ணு இருக்கு - அதான் Visa எல்லாம் வாங்கித் தரும் துறை. நிறைய பேர் அந்தப் துறையின் மேல் செம கடுப்புலே இருப்பாங்க. ஆனா, வருடத்திற்கு இரண்டு முறை வரும் இந்த கருத்துக்கணிப்பில், அந்த துறையின் சார்பாக கேள்விகளே இருக்காது. பொத்தாம் பொதுவாக சில கேள்விகளை கேட்டுவிட்டு மிச்சத்தை சாய்ஸில் விட்டுவிடுவார்கள்.


அதுவும் நாம நீட்டி முழக்கி எழுத இடம் கொடுக்காமல், நான்கு பதில்களில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் கேள்விகளாக கொடுத்து டென்சனாக்கி விடுவார்கள். எதுக்கும் பதிலே கொடுக்காமல், வெளிநடப்பு செய்தாலும் பிரச்னைதான். அடுத்த அப்ரைசல் ->  ஆப்ரைசல்.



ஒரு ஐந்தாயிரம் பேரை கக'வில் பங்கு பெறச் செய்து பதில் பெறுவதும் சுலபமானதல்ல. கொடுத்ததை பூர்த்தி செய்தோமா, அடுத்த வேலையை பார்த்தோமான்னு இல்லாமல் நம்ம ஆட்களும் அதில் சந்தேகமா கேட்டு நோண்டுவாங்க.


ஒரு முறை நடந்த விஷயம். எங்க அலுவலகத்தில் ஒரு மிகப்பெரிய நிறுவனம் மூலமாக ஒரு கக நடத்தினாங்க.


அனைவருக்கும் மின்னஞ்சல் அனுப்பி, ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒரு கடவுச்சொல் கொடுத்து, அதை வைத்து தளத்தில் பதிலளிக்க வேண்டும். ஒருவருடைய கடவுச்சொல்லை இன்னொருவர் பயன்படுத்தக் கூடாது என்றும் சொல்லிவிட்டார்கள். வழக்கம்போல் பலருக்கு பலவிதமான பிரச்னைகள். ஒருவருக்கு தன் கடவுச்சொல்லை பயன்படுத்தினாலும், கக'க்குள் போகமுடியவில்லை. தன் மேனேஜரிடம் சொல்ல, அவர் தன்னுடைய மேனேஜரிடம் சொல்ல, அவரோ தன் கடவுச்சொல்லை அனுப்பிவிட்டார்.


நம் நண்பரும் அதை வைத்து உள்நுழைய, அந்த மேலாளர் கொடுத்துள்ள பதில்கள் அப்படியே தெரிய வந்திருக்கிறது. அதுவும் எப்படி? அலுவலகத்தை கன்னாபின்னாவென்று திட்டுவதைப் போல், அனைத்தும் மிகக் குறைந்த மதிப்பெண்களைக் கொண்ட / கடுமையான பதில்களை கொடுத்திருக்கிறார்.


நாட்டுப்பற்றைப் போல் அலுவலகப்பற்றைப் பற்றி அருமையாக பேசும் - மிகப் பெரிய பதவியில் இருக்கும் அவரே இப்படி திட்டும்போது நாமும் அப்படியே செய்தால் என்ன என்று அப்போதுதான் எங்களுக்குப் புரிந்தது. அப்படி செய்தாலும், ஒன்றும் மாற்றம் இருக்காது என்று அடுத்த வருடத்தில் தெரிந்தது.


அதனால் இப்பல்லாம் கக'ன்னாலே ஜாலியாயிடும். கண்ணை மூடிக்கிட்டு ஏதோ ஒரு பதிலைக் கொடுத்து மூடிவிட்டால், அடுத்த கக வரும்வரை பிரச்னையில்லை. நிஜமான தேர்வுகளிலேயே காசை சுண்டிப் போட்டு பதிலளிச்சவங்க நாங்க. எப்பூடி?


***


பிகு: பதிவு முழுக்க கக = கருத்துக் கணிப்பு. நீங்க வேறேதும் நினைச்சிடாதீங்க.


***



Read more...

Saturday, January 14, 2012

சச்சின் ராமாயணம்!



ஹிஹி. நீங்க நினைக்கிற மாதிரி இல்லே. இது ராமாயணம் மற்றும் சச்சின் ஆகிய இரண்டு தலைப்பில் நான் போட்ட ட்வீட்டுகளின் தொகுப்பே. இந்த ஆண்டு கணக்கை இப்படிதான் துவக்க வேண்டியிருக்கு. ஆன்மீகவாதிகளும், சச்சின் பக்தர்களும் டென்சனாகாமல் படித்து, மறந்துவிட வேண்டுகிறேன். நன்றி.


***

கும்பகர்ணனை எழுப்புவதற்கு ஆட்கள் தேவை. Use #WakeKumbarnan tag. Pls RT #140inRamayan

#Sachin100 Real god already done with 9 of 10 avatars. Cricket god is 99 of 100.

. @Kumbakarnan உங்க பேர் பெருசா இருக்கு. டிவிட்டருக்காக சுருக்கி @KKarnan வச்சிக்கலாம். ஒகே? #140inRamayan

தல அமெரிக்கா வந்தா எங்கே ஷாப்பிங் பண்ணுவாரு? வேறெங்கே. 99 சென்ட் கடையில்தான். #Sachin100

வாலி ரொம்ப மோசமானவன். வேணும்னா அவனோட activity பக்கத்தை பாரு, ராமா. By சுக்ரீவன். #140inRamayan

சார், உங்க தொலைபேசி எண் என்ன? எழுதிக்குங்க. 99... அவ்வளவுதான். #Sachin100

லக்ஷ்மணன் மயங்கிட்டாரு. உடனடியா மூலிகைகள் தேவை. சஞ்சீவி மலை பக்கத்தில் யாராவது இருக்கீங்களா? Pls RT #140inRamayan

என்ன 80தானா? காலையில் அடிச்ச 20? சார், அது நெட் ப்ராக்டீஸ்லே அடிச்சது. கணக்கில் வராது. #Sachin100

குகனோடு ஐவரானோம். குகா, உன்னை @ராமசகோதரர்கள் லிஸ்ட்லே சேர்த்துட்டேன்

என் பார்ட்னர் ரன் அடிச்சதுக்கெல்லாம் மூச்சிரைக்க ஓடினேனே. அதையும் என் கணக்கில் சேர்க்கக்கூடாதா? #Sachin100

ராமா, உனக்கு ரெண்டு பசங்க பொறந்திருக்காங்க. ச்சே. @ஒருபொண்ணைபெத்தவங்க லிஸ்ட்லே சேரமுடியாதா? #140inRamayan

அடச்சே. நான் book கிரிக்கெட் ஆடினாலும், 80 தாண்ட மாட்டேங்குது. ஏன்னு தெரியல. #Sachin100

ராமர் பெருமைகளை பேசுபவர்கள் #WhyRamaIsGod tagஐ பயன்படுத்தவும். #140inRamayan

போன மேட்சுலே 40௦ நாட் அவுட். இந்த மேட்சுலே 60 அவுட். மொத்தம் நூறு வருதில்லே. இதை கணக்குலே சேத்துக்குங்க. #Sachin100

வாலி, சுக்ரீவன் உங்க ரெண்டு பேர் DPயும் ஒரே மாதிரி இருக்கு. யாராவது ஒருத்தர் மாத்துங்கப்பா. #140inRamayan

உலக நாயகன் கொடுக்கற பேட்டியே ஒழுங்கா புரிஞ்சிடும் போலிருக்கு. #Sachin100

அண்ணா, ராவணன் அண்ணிய திடீர்னு follow பண்றாரு. அவங்க ட்வீட்களை fav பண்றாரு. ஜாக்கிரதை. #140inRamayan

நானே குடும்பத் தலைவன் ஆயிடுவேன் போலிருக்கு. #Sachin100

விபீஷணன் டு ராவணன் : மன்னிச்சிடுங்க அண்ணா. unfollowing you. #RamaRocks #WhyRamaisGod #140inRamayan

மருதநாயகமே ரிலீசாயிடும் போலிருக்கு. #Sachin100

லக்ஷ்மணன் : இந்த கொடுமையை கேளுங்க. similar to youவில் ராவணனை காட்டுது ட்விட்டர். WTK? #140inRamayan

மமோசி'கூட வாயை திறந்து பேசிடப் போறாரு. #Sachin100

***



Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP