தலைமுடி பிரச்னை. தீர்வு தேவை.
இந்த தலைமுடி இருக்கிறதே தலைமுடி. அதனால் எனக்கு வாழ்க்கையில் பலப்பல பிரச்னைகள். நானும் நிறைய நண்பர்களை பார்த்திருக்கிறேன். யாருக்கும் எந்தப் பிரச்னையும் வந்ததில்லை. எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆகுதுன்னு தெரியல. தொலைக்காட்சி அல்லது புத்தகங்களில் ஏதேனும் தீர்வு கிடைக்குதான்னு நானும் சல்லடை போட்டு தேடியாச்சு. சல்லடைதான் போச்சே தவிர, தீர்வு இல்லை. சரி, ஏதாவது மருத்துவர்கிட்டே போகலாம்னு போனேன். அனைவரும் இதுக்கு ஒண்ணும் பண்ணமுடியாது. அதுவா சால்வ் ஆனாதான் உண்டு. கடவுள் மேலே பாரத்தை போட்டுட்டு வேலையை பாருங்கன்னு சொல்லிட்டாங்க.
இதையே நினைச்சி நினைச்சி ராத்திரியெல்லாம் தூக்கமே வராது. தெருவிலே நடந்து போனா, அனைவரின் தலையை ஆசையோடு பார்த்துக் கொண்டே போவேன். நல்ல அழகான சின்னச்சின்ன தலைமுடியோட யாராவது போனா, கிட்டே போய் அந்த முடியை கோதி விடணும்போல தோணும். ஆனா கூடவே தங்ஸ் வருவதால், அந்த ஆசை கானல்நீராகவே போயிடுச்சு. எப்போதும் தலையை நினைச்சிக்கிட்டே இருந்ததால், காலப்போக்கிலே அஜித் ரசிகனாகூட ஆயிட்டேன்னா பாத்துக்குங்க.
வந்தா போயித்தானே ஆகணும். போனா வந்துதானே ஆகணும்ற விதிப்படி, தலைமுடின்னா உதிரத்தான் செய்யும். நிறைய பேருக்கு அந்தப் பிரச்ச்னை இருக்கே? இதுக்கெல்லாம் மனசை தளரவிடலாமான்னு கேக்கறவங்களுக்கு, ஹலோ, என் பிரச்னை அது இல்லீங்க.
என் பிரச்னை என்னன்னா, என் தலைமுடி வேகமா வளர்றதுதான். வேகமான்னா, ஒரு நாடகத்துலே எஸ்.வி.சேகர் சொல்றமாதிரி - இந்தப் பக்கம் ஷேவ் செய்தா, அந்தப் பக்கம் வளர்ந்துடுது - அவ்ளோ வேகமா இல்லே. உதாரணத்துக்கு, ஒண்ணாம் தேதி போய் முடிவெட்டிக்கிட்டு வர்றேன்னு வெச்சிக்குங்க. பதினைந்தாம் தேதி, மண்டை முழுக்க கருகருன்னு வளர்ந்து நிக்கும். மண்டைக்குள்ளே வளரவேண்டிது மட்டும் வளரவே மாட்டேங்குது, இந்த முடி மட்டும் எப்படின்னு தங்ஸ் ஆசையா கேப்பாங்க. கூடவே, உள்ளே நல்ல மண்ணு இருக்கறதால், செழிப்பா வளருதுன்னும் பாராட்டுவாங்க. எது எப்படியோ, இருபது நாளைக்கொரு தடவை கட்டிங் பண்ண வேண்டியதாயிடுது.
இந்த ஷாம்பூ பயன்படுத்தினா அதிகமா முடிகொட்டுது. அந்த எண்ணெய் தடவினேன், கையோடு முடி வந்திடுது - அப்படின்னு பலர் வருத்தத்தோடு சொல்லக் கேட்டிருக்கேன். அப்போது எனக்கு ஏற்படும் சந்தோஷ ரியாக்ஷனை அவங்களால் புரிஞ்சிக்கவே முடியாது. ஒரு மாதிரி பாத்துட்டு போவாங்க. நானும் ஓடிப்போய் அந்த ஷாம்பூ/எண்ணெய் வாங்கி ஆசைஆசையாய் (என்) தலையில் தடவுவேன். பலன்? நிறைய இருக்கும். என்ன? முடிதான். வேறென்ன. அன்று வந்ததும் அதே முடி... சேச்சேச்சே... இன்று வந்ததும் இதே முடி’ன்னு நானும் பாடிக்கிட்டே தலையை வாரிக்குவேன்.
இங்கேயாவது பரவாயில்லை, முடிவெட்ட சுமார் நூறு ரூபாய் ஆகுது. அமெரிக்காவில் இருந்தவரை, ஒவ்வொரு தடவையும் $18+$2 டிப்ஸ் கொடுத்துட்டு வரும்போது டென்சனாயிருக்கும். ஆண்டவா, என்னாலே ’முடி’யலன்னு கத்துவேன். ஆனா, எந்த பிரயோசனமுமில்லை. நாளொரு மேனியும் பொழுதொரு (பல!) முடிகளுமாய் அதுபாட்டுக்கு வளர்ந்துகிட்டே இருக்கு.
ஒருமுறை முடிவெட்டி விட்ட ஒரு சீனப்பொண்ணுகிட்டே - முடி இருக்கற மாதிரி இருக்கணும். ஆனா இருக்கக் கூடாது. அப்படி வெட்டி விடுங்கன்னு சொன்னேன். அதுக்கு அந்தப் பொண்ணு, உங்க மூஞ்சிக்கு(!) அப்படி செய்தா நல்லாவே இருக்காது. உங்க வீட்டுலே என்னை தேடி வந்து அடிப்பாங்க. அதனால், ஓரளவுக்கு வெட்டி விடறேன். சிரமம் பார்க்காமே முடி வளர்ந்தவுடன் மறுபடி இங்கேயே வந்துடுங்கன்னுச்சு. வீட்டுலே அனுமதி கிடைச்சாக்கூட கடைக்காரி அனுமதிக்க மாட்றா. எல்லாம் தலை(முடி)யெழுத்து. தவிர, மாசாமாசம் வர்றாமாதிரி அவருக்கு ஒரு பெர்மனெண்ட் கஷ்டமர் வேணுமே.
வெச்சா குடுமி, சரிச்சா மொட்டைன்ற பழமொழியின் அருமை தங்ஸுக்கு தெரியல. பங்க் (தமிழில் கூந்தல்) வெச்சிக்கவும் விடமாட்றாங்க. மொட்டை அடிக்கவும் அனுமதி இல்லை. சரி, முடிவெட்டிக்க மாசாமாசம் ஒரு மணி நேரம் ஒதுக்க ’முடி’யாதான்னு சுலபமா கேட்கலாம். ஆனா ஒரு சரியான கடை, கட்டிங் செய்துவிடற ஆள் கிடைக்கறவரை செய்கிற சோதனைகள் இருக்கே. ஒவ்வொருமுறையும் தலை ஒவ்வொருவிதமா இருக்கும். ஆபீஸில் என்னைப் பார்த்து ஏன் சிரிக்கிறாங்கன்னு கொஞ்ச நாள் கழிச்சிதான் என் மர(முடி)மண்டைக்கு புரிஞ்சுது. அப்புறம் ஒரு வழியா சென்னையில் ஒரு கடை/ஆள், பெங்களூருவில் ஒரு கடை/ஆள் கிடைச்சாங்க. இது செட் ஆகறதுக்குள்ளே நான் பட்ட பாடு இருக்கே.. என் நண்பனுக்குக்கூட இந்த மாதிரி பிரச்னை வரக்கூடாது.
ஓகே. இவ்ளோ தூரம் படிச்சிட்டீங்க. ஒழுங்கு மரியாதையா எனக்கு ஒரு தீர்வு சொல்லிட்டுப் போங்க.
***
7 comments:
தலைமுடியை வைத்தே ஒரு பதிவை எழுதி முடித்துட்டீங்க.......
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
ஹ்ம்ம்ம்... பல்லு இருக்கறவரு பக்கோடா பத்தி பேசறீரு...
எத்தனை பேரு வயித்தெரிச்சலை கொட்டிக்க போறீங்களோ?
ஹெல்மட் யூஸ் செய்யுங்க...கார்ல போனா கூட!!!
கறிவேப்பில்லை நிறைய சாப்பிட்டு, தினம் தலைக்கு நல்லெண்ணெய் தேய்து பார்க்கலாம் ...
Self service. Electric shaver/ Trimmer vaanki once a week iluthidunka. It will suit you better and convenient too, it wont take more than 10 mins. ;-) - Hari
ஆர்கானிக் உணவை சாப்பிடுங்கள் சாப்பிடும் உணவு பொருட்கள் யூரியா போட்டு வளர்வதால்கூட காரணமாக இருக்கலாம்.
எல்லாவற்றிக்கும் காரணம் மண் வளமே! மண்ணுக்கு பதில் மூளை வளர்ந்தா நீங்க ஆசைப்பட்டது சரியாயிடும்!
இருப்பது 'இந்தியா" என்றால், எதுக்கும் கடவுள் மேலே பாரத்தை போட்டு வைப்பது நல்லது...!
Post a Comment