Thursday, March 6, 2008

தமிழக சட்டசபையின் புதிய கட்டடம் - தேவைப்படும் புதிய வசதிகள்

தமிழக சட்டசபைக்கு புதிய கட்டடம் கட்டப்போவதாக செய்தி வந்திருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஏகப்பட்ட நவீன வசதிகளை செய்து கொடுக்க வழிவகை செய்திருப்பார்கள்.


ஆனால் எவ்வளவு வசதிகள் செய்தாலும், நம் மக்கள் அங்கு போய் என்ன செய்வார்கள் என்று நமக்குத்தான் தெரியுமே? எதிர்க்கட்சிகள் எப்போதும் கத்தி கூச்சல் போட்டவாறே இருப்பர். எதிர்க்கட்சி தலைவர் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு வெளியே போய்விடுவார். இந்த மாதிரி இன்னும் பல பிரச்சினைகளை - கட்டப்போகும் புதிய கட்டடத்தில் எப்படி சமாளிக்கலாம் என்று ஒரு சிறிய கற்பனை.

பிரச்சினை: 9.15 மணிக்கு சபைக்கு வந்து 9.17 மணிக்கு வெளியேறுதல்:


சட்டசபை வளாகத்தில், வருகைப் பதிவேட்டுக்கு பதிலாக, மென்பொருள் நிறுவனங்களில் இருப்பதுபோல் இயந்திரக்கதவுகள் பொருத்திவிடவேண்டும். எல்லோருக்கும் ஒரு Swipe Card கொடுத்து அந்த அட்டையினாலே உள்ளே போவதும், வருவதுமாக இருக்க வேண்டும். உறுப்பினர்கள் சபைக்குள் வந்துவிட்டால், ஒரு குறிப்பிட்ட நேரம் (1 மணி நேரம்) உள்ளே இருந்தால்தான், வெளியே போவதற்கு கதவு திறக்குமாறு set செய்து விடவேண்டும்.


பிரச்சினை: பல நாட்கள் சபைக்கு வராமல் மட்டம் போடுதல்:

ஒரு நாள் மட்டம் போட்டால்கூட, உறுப்பினர்கள் அடுத்த நாள் வரும்போது, முழு நாளும் சபையில் இருக்குமாறு மேற்கூறிய இயந்திரக் கதவில் set செய்துவிட வேண்டும். பல நாட்கள் மட்டம் போட்டவர்கள், சபைக்கு வந்த நாட்களில் முழு நாளும் இருக்குமாறு செய்யலாம்.

பிரச்சினை: சட்டை / வேட்டி / புடவைகளை இழுத்துக் கிழித்தல்:

உறுப்பினர்கள் சபைக்குள் இருக்கும்போது - தீயணைப்பு வீரர்கள் அணியும் உடையைப் போல் சீருடை அணியுமாறு செய்து விட்டால் - வேட்டி புடவைகள் இழுக்கப்பட்டு கிழிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.

பிரச்சினை: நாற்காலி / மைக் - ஆகியற்றை தூக்கிப்போட்டு உடைத்தல்:

நாற்காலி / மைக் ஆகிய எல்லாவற்றையும் தரையில் / மேசையில் பொருந்தி இருக்குமாறு பார்த்துக் கொளளலாம்.

பிரச்சினை: சபையின் மையப்பகுதிக்கு சென்று கோஷம் போடுதல்:

சபையின் மையப்பகுதிக்கு ஆங்கிலத்தில் 'வெல்' என்று பெயர். அங்கு நிஜமாகவே ஒரு வெல்லை வைத்து விடலாம். அங்கு யாரும் சென்று நிற்க முடியாதவாறு அதில் தண்ணீர் நிரப்பி - அதையும் மீறி வருபவர்களுக்காக சில முதலைகளை அதில் விடலாம்.

பிரச்சினை: வெளிநடப்பு செய்யும் பெண் மற்றும் வயதான உறுப்பினர்கள்:

காவலாளிகளால் இவர்களை வெளியே கூட்டிப் போவது ஒரு பிரச்சினையாக இருக்கலாம். அதற்காக சபை நடுவிலிருந்து வெளியே போவதற்கு ஒரு நகரும் படிக்கட்டு (எஸ்கலேட்டர்) வைக்கலாம். மேற்படி உறுப்பினர்களை அந்த நகரும் படிக்கட்டுகளில் நகர்த்திவிட்டால், தானாகவே வெளியே போய்விடுவார்கள்.

ஏதோ, என்னாலான சில தீர்வுகளை கூறியிருக்கிறேன். ஆனால் கீழ்க்கண்ட பிரச்சினைகளுக்கு எனக்கு தீர்வு தெரியவில்லை. உங்களுக்கு ஏதாவது தீர்வு தெரிந்தால் சொல்லுங்களேன்:

அ. உறுப்பினர்கள் சபை நடைபெறும்போது தூங்குதல்.
ஆ. கும்பலோடு சேர்ந்து கோஷம் போடுதல்.
இ. சபையில் ஒரு நிமிடம் கூட பேசாமல் காலத்தை ஒட்டுதல்.

2 comments:

சிறில் அலெக்ஸ் March 6, 2008 at 4:19 PM  

//அதையும் மீறி வருபவர்களுக்காக சில முதலைகளை அதில் விடலாம்.//

முதலைகளுக்கு தேர்தல் வைக்கணுமாண்ணு சொல்லாலியே..

:)

அ. உறுப்பினர்கள் சபை நடைபெறும்போது தூங்குதல்.

நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு எல்லோரும் சேர்ந்து அவரைச் சுற்றி நின்றூ தாலாட்டு பாடலாம்

ஆ. கும்பலோடு சேர்ந்து கோஷம் போடுதல்.
எந்த பிரச்சனை குறித்து கோஷம் எழுப்பப்படுதோ அதை குறித்து ஒரு பக்க கட்டுரை வீட்டிலிருந்து எழுதி வரச்சொல்லலாம்.

இ. சபையில் ஒரு நிமிடம் கூட பேசாமல் காலத்தை ஒட்டுதல்.
Canteen மற்றும் MLA ஹாஸ்டலில் நடக்கும் விவாதங்களையும் அவைக் குறிப்பில் சேர்த்துக் கொண்டால் பிரச்சனை சால்வ்ட்.

சின்னப் பையன் March 6, 2008 at 5:57 PM  

வாங்க சிறில் அலெக்ஸ்:
அ. நல்லவேளை சுத்தி நின்னு எல்லோரும் கும்மி அடிக்கணும்னோ / கிச்சு கிச்சு மூட்டணும்னோ சொல்லுவீங்கன்னு நெனெச்சேன்...:-)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP