Thursday, December 24, 2020

மேடை நாடகங்கள்

மேடை நாடகங்கள்

சாவிசி’யில் மௌலி & காத்தாடியின் பேட்டிகளைப் பார்த்தபிறகு, நானும் அந்தக் காலத்தில் நாடகங்களில் நடித்த....... பதறாதீங்க... நாடகங்களைப் பார்த்த நினைவுகள் வந்ததால்.. இந்த பதிவு. 

திருவல்லிக்கேணியில், (அப்பாடா, ஊர் பேர் வந்துடுச்சு!!) பார்த்தசாரதிஸ்வாமிசபா (ஒரே சொல் - நன்றி அலெக்ஸ்!) எங்க வீட்டிலிருந்து ஒரு 50 மீட்டர் தூரத்தில் இருந்தது. நான் (அப்போதும்) சின்ன வயசாக இருந்தப்போ, அது அரங்கமா இருந்தது. நாடகங்கள் தொடர்ச்சியாக நடக்கும். எங்க + அக்கம்பக்க பள்ளிகளின் ஆண்டு விழாக்களும் அங்கேதான் நடக்கும். பிறகு அந்த அரங்கத்தை இடித்து அபார்ட்மெண்ட்களாக கட்டிட்டாங்க. இப்போ அந்தந்த வீடுகளில், தொலைக்காட்சியில் மட்டும்தான் நாடகங்கள் வருது. ஆனா, அவற்றை பார்க்க வெளியாட்களுக்கு அனுமதியில்லை. சரி விடுங்க. 

ஏதோ ஒரு விசு படத்தில் ஒரு வசனம் வரும். ‘ஊரில் இருக்கும் 2 நாடக க்ளப்களில் நான் உறுப்பினர். மாதம் 4 நாடகங்களுக்கு டிக்கெட் வரும். ஆனா இவ எந்த நாடகங்களுக்கும் போக மாட்டேங்கறா’. தீபாவளி சீட்டு மாதிரி அப்போ இருந்த நாடக க்ளப்களில் எங்க மாமாவும் ஒரு மெம்பர். இல்லையில்லை. அவரே ஒரு பார்ட்னர் மாதிரி. 2-3 பேர் நண்பர்கள் சேர்ந்து ஒரு க்ளப் வைத்திருந்தனர். இந்த சபாவில் நடக்கும் நாடகங்களுக்கு மொத்தமாக டிக்கெட் வாங்கி, உறுப்பினர்களுக்கு கொடுக்கும் வேலை. 

வாராவாரம் நடக்கும் நாடகங்களுக்காக இவர் அந்த அரங்கத்தில் இருக்க, நாங்க சிறுவர்கள் அங்கேயே விளையாட்டிருப்போம். நாடகம் துவங்கும்போது, வாசலில் நின்று, சீட்டு கிழித்து அனைவரையும் உள்ளே அனுப்பும் வேலை இவருக்கு. என்னை ஒரு நாற்காலியில் அமர்த்தி, ‘நான் வந்து கூட்டிட்டுப் போறவரை எங்கேயும் ஓடிடாதே. இருட்டில் தேடமுடியாது’ன்னுட்டு போயிடுவார். நாமும் எதுவும் புரியாவிட்டாலும், நாடகங்களைப் பார்த்திருந்தது வழக்கமா இருந்தது. ஆர்.எஸ்.மனோகர், எஸ்.வி.சேகர், காத்தாடி... என இவர்களின் நாடகங்களெல்லாம் அங்கு பார்த்த நினைவு இருக்கு. 

அப்படி துவங்கிய நாடகங்களைப் பார்க்கும் படலம், பிறகு, நினைவு தெரிந்தபிறகு (அப்படின்னா?) கலைவாணர் அரங்கம், ராணி சீதை ஹால், வாணி மகால் இவற்றிலெல்லாம் தொடர்ந்தது. மேற்கூறியவர்களுடன் பிறகு ரசித்துப் பார்த்தது - கிரேசியின் நாடகங்கள்.

பல முறை பார்த்த நாடகம்னா நினைவுக்கு வருவது - எஸ்.வி.சேகரின் ஒன் மோர் எக்ஸார்சிஸ்ட். பேய் பிடித்த அவர், ஒரு கதவில் வெளியேறி, சில நொடிகளில் இன்னொரு கதவு வழியா வரும்போது, வேறு உடைகளை அணிந்து வருவதைப் பார்த்தெல்லாம் அந்த காலத்தில் கை தட்டியது, விசில் அடித்தது (சரி.. வெறும் காத்துதான்) இப்போ நினைத்தாலும்... ஒண்ணும் ஆகவில்லை... சும்மா சொன்னேன். 

LIVE நாடகங்கள் என்பதால், அதில் தெரியும் பிழைகள், அவற்றை சமாளிக்க அவர்கள் சொல்லும் வசனங்கள்னு அவையும் ரசிக்கும்படியா இருக்கும். 

ஒரு முறை ஒரு கேரக்டர் தன் சட்டைப்பையிலிருந்து எதையோ எடுக்கும்போது, சில காகிதங்கள் கீழே விழுந்துடும். அவர் அதை எடுக்காமல் திரும்பிவிட, சேகர் அவரைக் கூப்பிட்டு - ‘இந்த குப்பையை யார் அள்ளுவா? நானா? இப்படி குப்பை போட்டா, சபாகாரர் கொடுக்க வேண்டிய பணத்தை குறைச்சிடுவார். ஒழுங்கா எடுத்துப் போங்க’ன்னு அவரைத் திட்டுவார். 

இன்னொரு நாடகத்தில், ஒருவர் மைக்கிற்கு சிறிது தூரத்தில் நின்று பேச, மேடையிலேயே ‘உங்களுக்கு இங்கே நின்று பேசணும்னு மார்க் போட்டிருக்கில்ல. பின்னே ஏன் அங்கே நின்று பேசுறீங்க?’ன்னு ஒரு வசனம். 

இதெல்லாம் அந்தந்த நேரத்தில் சேர்க்கப்பட்ட வசனங்கள்னு புரியும். இதே போல பல சொல்லலாம். ஆனா மறந்துடுச்சு. ஆகவே சொல்ல முடியாது. 

1995-96 நினைக்கிறேன். இதுவே சோ இறுதியாக நடிக்கும் மேடை நாடகம்னு விளம்பரம் வந்திருந்தது. கலைவாணர் அரங்கில் தொடர்ச்சியாக ஒரு வாரம் அவருடைய நாடகங்கள். ஒரு 2 நாள் மட்டும் போய் பார்த்தோம். 

1999ல் சென்னையை விட்டபிறகு, தில்லியில் தமிழ்ச்சங்கத்திற்கு அருகிலேயே பல காலம் வசித்தாலும், பல நாடகங்கள் அங்கு நடந்திருந்தாலும், ஒருமுறைகூட போகவில்லை. (வாராவாரம் சனிக்கிழமை திரைப்படத்திற்கு மட்டும் சென்றுவிடுவோம்!!).

அந்த பழைய நாடகங்கள் பெரும்பாலும், யூட்யூப்பிலும், mp3யாக இப்போதும் கிடைக்குது. ஆனா, நேரில் பார்க்கும் அந்த அனுபவம் இதில் இல்லாததால், இவற்றைப் பார்க்கும் / கேட்கும் ஆர்வமே வரவில்லை. 

பல்லாண்டுகள் இத்தகைய நாடகங்களை பார்த்த பாதிப்பில் எழுதியதே இந்த ‘நாடகம் மாதிரி’ மினி தொடர். படிச்சிட்டு திட்டக்கூடாது. நோ பேட் வேர்ட்ஸ்.

http://boochandi.blogspot.com/2009/03/1.html


***


Read more...

Tuesday, July 21, 2020

புத்தகங்கள் (மொழிபெயர்ப்பு)


*** இவை அனைத்தும் கன்னடம் டு தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகங்களைப் பற்றியது மட்டுமே.
** இவை அனைத்தும் மாத்வ சித்தாந்தத்தைப் பற்றிய புத்தகங்கள் மட்டுமே.

* சுமார் 4 ஆண்டுகளுக்கு முன் விளையாட்டாய் சில கட்டுரைகளை மொழிபெயர்த்து ப்ளாக்கில் போட்டு, வாட்சப் லிங்க் மூலமா பலருக்கு அனுப்பிச்சேன்.
** பலர் தொலைபேசி, அருமையா இருக்கு, புத்தகமா போடுங்க நாங்க வாங்கறோம்னாங்க. (அதில் சிலரைப் பற்றிதான் இந்த பதிவே!!).

* சரின்னு புத்தகங்கள் போடத் துவங்கினேன். (இதுவரை 10). அவங்களிடம் சொன்னேன்.
** புத்தகம் படிக்க கஷ்டம், ஈ புக் போடுங்க. படிக்கறேன்னாங்க.

* சரின்னு கிண்டிலில் எல்லா புத்தகங்களையும் இறக்கினேன் (இதுவரை 28). அவங்களிடம் சொன்னேன்.
** புத்தகமெல்லாம் பெருசு பெருசா இருக்கு, சின்ன சின்னதா பிரிச்சி மாதா மாதம் படிக்கற மாதிரி செய்ங்கன்னாங்க.

* சரின்னு ஒரு மாத இதழ் துவக்கினேன். அவங்களிடம் சொன்னேன்.
** அந்த மாத இதழை ஈ-புக்கா போடுங்க. படிக்கறோம்னாங்க.

* சரின்னு அதை ஒரு appல் போட்டேன். அவங்களிடம் சொன்னேன்.
** பெரிய பெரிய கட்டுரைகள் படிக்க கஷ்டமாயிருக்கு. ஏதாவது கேள்வி பதில் தொகுப்பு மாதிரி இருக்கான்னாங்க?

* சரின்னு ஒரு app உருவாக்கி, அதில் 5,000 கேள்வி பதில் போட்டேன். அவங்களிடம் சொன்னேன்.
** நமக்கு எதுவுமே தெரியல. எங்களுக்கு புரியற மாதிரி ஏதாவது சொல்லுங்கன்னாங்க. (அல்லது) எனக்கு சில கேள்விகள் இருக்கு. அதுக்கு மட்டும் பதில் சொல்லுங்கன்னாங்க.

** OTOH, இந்த அனைத்தையுமே வாங்கி, படிச்சி, அடிக்கடி சந்தேகம் கேட்டு, நம்மை ஊக்குவிப்பவர்களும் உண்டு.

** So, இதிலிருந்து புரிஞ்சிக்கிட்டது என்னன்னா, ஒண்ணுமில்லே. அவ்வளவுதான். :-)

** இதில் யார் மீதும் கோபமோ, வருத்தமோ நமக்கு இல்லை. நாம் செய்வதெல்லாம் நம்ம திருப்திக்கு மட்டுமே. ப்ளஸ் கடமையை செய். பலனை எதிர்பார்க்காதே - இதுக்கும்தான்.

***

Read more...

Thursday, July 16, 2020

ராமாயணம் - கன்னடப் பாடல்கள்



சென்ற ஆண்டு அக்டோபர். சென்னையிலிருந்து ஒருவர் ஒரு 150 பக்க PDFஐ அனுப்பியிருந்தார். கையெழுத்துப் பிரதி. மிகவும் பழைய புத்தகம்னு புரியுது. கன்னட எழுத்துக்கள். எனக்கு கன்னடம் தெரியாது, ஆகவே, இதை படித்து தமிழில் தட்டச்சி கொடுக்க முடியுமான்னு கேட்டார். முதல் பக்கத்தை மேய்ந்தபோது, பல சொற்கள் புரிந்தும், சில புரியாமலும் இருந்தன. சரி நான் பார்த்து சொல்கிறேன்னு சொல்லி விட்டுட்டேன். 

நமக்கு ஏற்கனவே இருந்த சிலபல ப்ராஜெக்ட்ஸ்களை செய்து கொண்டேயிருக்க, அவரும் நடுநடுவே நிலவரத்தை கேட்டுக்கொண்டே இருந்தார். நானும் இதோ அதோன்னு சொல்லிட்டே. இந்த ஆண்டு மார்ச் அங்கிருந்து கூப்பிட்டார். அந்த டாகுமெண்ட் எனக்கு கொஞ்சம் தமிழில் கொடுங்க. எனக்கு 70 வயசு. நான் கண் மூடுவதற்குள் அதை தமிழில் புத்தகமாக பிரசுரிக்க வேண்டும். இதுவரை 10-15 கன்னடர்களை நான் கேட்டாச்சு. யாருக்கும் நேரம் இல்லை / முடியவில்லை / தெரியவில்லை / புரியவில்லை / ஆர்வம் இல்லை. நீங்க இதை முடித்துக் கொடுத்தால், இதை என் குடும்பம் என்றைக்கும் மறக்கவே மறக்காது.

என்னடா இது அவ்வளவு முக்கியமா? சரி, இதன் வரலாறு என்னன்னு கேட்டால்: 

1820-1890 வரை வாழ்ந்த இவருடைய தாத்தாவுடைய தாத்தா எழுதிய புத்தகம் (பாடல்) இது. பெயர் நரஹரி தாசர். அங்கிதம் (முத்திரை) நாமகிரீஷ. மைசூர் சமஸ்தானத்தில் புலவராக (கவிஞராக) இருந்திருக்கிறார். பிறகு ஏதோ ஒரு சமயத்தில் அவர்கள் தமிழகம் வந்துவிட, தமிழர்களாகிட்டாங்க. இப்போ இவருக்கு கன்னட கொத்தில்லா. 

சரி, இது என்ன புத்தகம்னு தெரியுமான்னா, ராமாயணம் - தீர்க்க கிருதி. (நீண்ட பாடல்). இதை தயவு செய்து... மறுபடி பழைய ராமாயணம்!!.

இப்போ இதில் ஆர்வம் வருது. ஆனா, நமக்கு அச்சிட்ட (printed) புத்தகங்கள் மட்டுமே வேகமாக படிக்க முடியும். கையெழுத்து படிக்க ரொம்ப தாமதம் / நேர விரயம் ஆகும். அதுவும் இதில் ஏகப்பட்ட அடித்தல், திருத்தல்.நம் கன்னட சந்தில் சில பேருடன் முன்னர் பேசியிருந்தாலும், மிகவும் மொக்கையான (சிறியதான) ஓரிரு உதவிகளை கேட்டு, அவர்கள் அதையே செய்யாமல் விட்டதால், அவர்களைக் கேட்காமலேயே செய்யணும்னு முடிவு. இதில் இருக்கும் சிக்கல், படிப்பவர் நேடிவ் கன்னடராகவும், சம்ஸ்கிருதம் & ராமாயணம் தெரிந்தவராகவும் இருக்கணும். அப்படி ஒருவரை தேடணும்னு பார்த்தேன். 

நம் அலுவலக நண்பர் ஒருவரைக் கேட்டு, அவரும் அவரது மனைவியும் சேர்ந்து ஒரு 40 பக்கம் வரை கடகடன்னு முடித்தனர். ஓரளவுக்கு சரியாகவே இருந்தாலும், சரி முடித்து விடலாம்னு நினைச்சா, அதன் பிறகு நீண்ட ப்ரேக் விட்டுட்டாங்க. இப்போ வேற யாரையாவது பிடிக்கணும். 

எதிர் வீட்டு சார் ஒருவர் கொரோனாக்கு முன்பாக சனி & ஞாயிறு விடுமுறையாக இருந்தாலும் தவறாமல் ஆபீசுக்குப் போய்விடுவார். ஒரே ஒரு நாள்கூட வீட்டில் இருந்தால் என்ன செய்வதென்றே தெரியல. செம போர் அடிக்குது. இப்படி சொன்னவரை கொரோனா வீட்டிலேயே பின் போட்டு அழுத்த, அவரிடம் போய் - சார் இப்படி இப்படி விஷயம். உங்க உதவி தேவைன்னு கேட்டு, வழக்கம்போல டிஸ்க்ளெய்மரும் சொன்னேன். முடியலேன்னா பரவாயில்லை. ஒன்றும் பிரச்னையில்லை. நீங்கதான் செய்யணும்னு கட்டாயமில்லை. சொல்லிடுங்க. நான் வேற ஆள் பார்த்துக்கறேன். 

இல்லேப்பா, ஒரே ஒரு வாரயிறுதி போதும். முடிச்சி கொடுத்துடறேன். ஒன்றும் வேலையெல்லாம் இல்லை. வழக்கம்போல சும்மாதான் இருப்பேன். -- அவ்வளவுதான், அடுத்து மூன்று வாரங்களுக்கு அவர் நம் பக்கம் திரும்பவேயில்லை. நேராக பார்த்தாலும், டேக் டைவர்ஷன் போட்டு திரும்பிடுவார். சரி இவரை நம்பி பிரயோஜனமில்லை. 

நம் பழைய வீட்டில் ஒரு அக்கா. பேராசிரியை. சரி அவங்களிடம் கேட்கலாம்னு கேட்டாச்சு. கண்டிப்பா செய்து தர்றேன்னு சொல்லி, ஒரே வாரத்தில் சுமார் 30-40 பக்கங்கள் வரை படித்தும் ரெகார்ட் செய்து கொடுத்தார். அவ்ளோதான் முடிஞ்சுது. வேற வேலை இருக்குன்னுட்டாங்க. பரவாயில்லை. மிக்க நன்றின்னு அந்த ரெகார்டிங்கை வாங்கினேன். 

அவங்க ரெகார்டிங்கில் ஒரே ஒரு பிரச்னைதான். வேகம் வேகம் அப்படியொரு வேகம். நமக்குத் தேவையே, சிலபல கடினமான சொற்கள், அடித்து திருத்திய இடங்களில் இருக்கும் வாக்கியங்கள் இப்படி. ஆனா இந்த அக்காவோ, 

* சிக்கலான சொற்கள் வந்தால் அதை படிக்காமல் விடுவது
* அடித்து திருத்தப்பட்ட சொற்கள் வரும் இடத்தில் மூச்சு வாங்கும் சாக்கில், அவற்றை முழுங்கிவிடுவது
* வாக்கியத்தின் கடைசி சொற்களை முழுங்கிவிடுவது.
* நடுநடுவே சில வரிகளையே விட்டுவிடுவது

என ரெகார்டிங்கைக் கொடுத்தார். 

ஆக, நம் தேவைகள் முழுமையா பூர்த்தி ஆகவில்லை. சரி மேடம், இது போதும் மிக்க நன்றின்னு சொல்லியாச்சு.

அடுத்து இன்னொருவர். அதே டிஸ்க்ளெய்மர். வாரயிறுதி மாலையில் நான் ஒரு அரை மணி ப்ரீயா இருப்பேன். அப்போ செய்யறேன். (வாரம் முழுக்க அப்படி என்னதான் செய்றார்னா, அது மிகப்பெரிய ரகசியம்!! சும்மாதான் இருப்பார்). அவரும் ஒரே ஒரு வாரம் ஒரு ஐந்து பக்கங்கள் படித்துக் கொடுத்தார். அஷ்டே.

இப்படியாக சுமார் 7-8 பேரை அணுகி, அதில் 3-4 பேர் கொஞ்சம் கொஞ்சமாக படித்துக் கொடுக்க, அவற்றைத் தொகுத்து, அலசி, அடுக்கி, ஆராய்ந்து, சிக்கெடுத்து, தட்டச்சி, தமிழில் கன்னடப் பாடல்களைப் படிக்கணும்னா போடவேண்டிய 1,2,3,4 ஆகியவற்றை போட்டு, சரிப்படுத்திக் கொடுத்து, முடிக்க வேண்டிய வேலை இந்த வாரயிறுதியுடன் முடிஞ்சிடும்(னு நம்பறேன்).

இது வரை வந்ததை படித்துப் பார்த்தால், ராமாயணத்தை - குட்டி குட்டி பாடல்களாக -  சுமார் 100 பாடல்கள் - வெவ்வேறு ராகங்களில், நல்ல எதுகை மோனை சந்தங்களுடன் இயற்றியிருக்கிறார் தாசர். அவர் கொள்ளு-கொள்ளு-பேரனின் ஆசைப்படி, தமிழில் புத்தகமாக வந்தால் நல்லது. நமக்கு அன்பளிப்பாக ஒரு தொகை தர்றேன்னு சொல்லியிருக்கார். நமக்காக இல்லைன்னாலும், நமக்கு மேற்படி உதவியவர்களுக்கு பகிர்ந்தளிக்கணும். 

ஜகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே
உங்கள் செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

ஸ்ரீராமார்ப்பணமஸ்து.

***

Read more...

Saturday, April 25, 2020

என்னிடம் ஏன் குறைவான சட்டைகளே இருக்கின்றன?


சிறிய வயதில்.. என்ன சிறிய வயதில்.. என்னுடைய 22 வயது வரையே என்னிடம் இருந்தது மொத்தம் 3-4 சட்டை பேண்ட்கள்தான். அதுவும் பம்மல் கமல் சொல்கிற மாதிரி சாயம் போனதாகதான் இருக்கும். சட்டை அளவு சிறியதாக இருந்தபோது தீவளிக்கு தீவளி அப்பா சட்டை வாங்கிக் கொடுத்த நினைவு. அளவு பெரிதானபிறகு அதுவும் கிடையாது. 

ஒரு முறை உறவினர் ஒருவர், அவருடைய உறவினர் யாருடைய திருமணத்திற்கோ போகவேண்டி, என்னை துணைக்கு வரச்சொல்லியிருந்தார். அது ஒரு பெரிய IAS அதிகாரி வீட்டுத் திருமணம். அதற்காக நல்ல சட்டை, பேண்டா போட்டுட்டு வான்னு சொல்லிட்டார். நல்ல சட்டை பேண்ட்க்கு நான் எங்கே போறது?. பக்கத்து வீட்டுப் பையனிடம் சட்டை மட்டும் கைமாத்து வாங்கிக்கிட்டு போய் வந்தாச்சு. பேச்சுவாக்கில் அவரிடம் இது இரவல் சட்டைன்னு சொல்ல, நான் உனக்கு வாங்கித் தர்றேன்னு சொன்னவர், மறந்துவிட்டு, இன்று வரை அதை நினைவுபடுத்தியும் அவர் வாங்கித் தரவேயில்லை. 

பிறகு, வேலைக்கு போகத் துவங்கும்போதே உருப்படியான சட்டை வாங்கியதாக நினைவு. ஆனால், அப்போதும் ஒரு சமயத்தில் 5-6 சட்டைகள், 2-3 டி-ஷர்ட்களுக்கு மேல் வைத்துக் கொள்வதில்லை. 

நினைவு தெரிந்தும் (அப்படின்னா என்ன?) சட்டை வாங்க வசதியில்லாமல் இருந்ததாலோ என்னமோ, எப்பவும் நமக்குன்னு சட்டை வாங்குவதில் / வைத்துக் கொள்வதில் ஒரு ஈடுபாடு / ஆர்வம் (இரண்டும் ஒண்ணுதானோ?) இருந்ததில்லை. வாரத்துக்கு ஐந்து நாளில் ரிப்பீட் செய்யாமல் இருந்தால் போதும். அவ்வளவே வைத்துக் கொண்டிருந்தேன். 

நாம் வாங்கும் சட்டைகள், வேறு ஏதாவது திருமணத்திற்கு நமக்கு பரிசாக வரும் சட்டைகள், மராத்தன்களில் கொடுக்கும் பனியன்கள் என எதையும் நாம் வைத்துக் கொள்வதில்லை. மனதில் என்னுடைய சிறுவயது கொசுவர்த்தி வர, அந்த நிலையில் இருந்த அண்ணன் பையன், அக்கா பையன் இவங்களுக்குக் கொடுத்துடுவேன். (இப்போ அந்த பசங்களும் நல்ல நிலைக்கு வந்து, கொரோனா பட்டியலில் டாப்-3யில் இருக்கும் நாடுகளில் டாப்பா, நலமா இருக்காங்க). அதைத்தவிர மாமனார் வரும்போதெல்லாம் பாசமாக ஒரு ட்-ஷர்ட் வாங்கித் தருவார். அதை அப்படியே பத்திரமா வைத்திருந்து, தம்பி வரும்போது அப்படியே பார்சல். கொஞ்ச நாள் கழித்து, எங்க அப்பா வாங்கித் தந்த சட்டை எங்கேன்னு DW கேட்க, எங்கேயாச்சும் மேலே பெட்டியில் இருக்கும், அப்புறம் தேடிக்கலாம்னு சொல்லி சமாளிச்சிடுவேன். 

ஒரு காலத்தில், அமெரிக்காவில் இருந்தபோதும் அதே நிலைதான். ஒரு கிழமைக்கு ஒரு சட்டை. கருப்பு திங்கள், வெள்ளை செவ்வாய்ன்னு சன் டிவி அறிவிப்புகள் போல அந்தந்த கிழமைக்கு அந்தந்த நிற சட்டைகள். ஊருக்குப் போன புதிதில் அனைவரையும் போல, ஊருக்கு புகைப்படங்களை அனுப்பணும்ற கட்டாயத்திற்காக பல வாரயிறுதிப் பயணங்களை மேற்கொண்டோம். அப்போது நம்மிடம் இருந்த 1-2 டீஷர்ட்களையே போட்டுட்டுப் போக, இங்கிருந்த DWவின் பாட்டி (85+ வயதிலும் அவங்க கண் அவ்ளோ ஷார்ப்) - என்ன மாப்பிள்ளை எப்போவும் ஒரே சட்டையே போட்டிட்டிருக்காரு? அவர்கிட்டே ஒரேயொரு சட்டைதான் இருக்கான்னு கேட்டுவிட, ஒரே களேபரம்தான். இன்னிக்கே நிறைய சட்டை வாங்கறோம்னு DW மேலுக்கும் கீழுக்கும் (அறைக்குள்ளேயேதான்) குதிக்க, சரின்னு போய் நிறைய (2தான்) வாங்கி வந்தோம். வந்ததும், பழைய சட்டைகளை ஃப்ரிட்ஜ், அவன் இவற்றைத் துடைக்க வைத்துவிட, மறுபடி டி-ஷர்களின் எண்ணிக்கை அதே 2-3 எட்டியது!!.

இருக்கும் 5-6 சட்டைகளை மேலும் எப்படி குறைப்பதுன்னு யோசித்தபோது, செமையான ஐடியா சிக்கியது. ஒரே நிற  சட்டை மட்டும் வைத்துக் கொண்டால் எண்ணிக்கையைக் குறைக்கலாம். கருப்பு-வெள்ளை மட்டும் போதும் இதில் 2 அதில் 2ன்னு முடிவெடுத்தா, வீட்டில் தடை. கருப்பு வேண்டாம். வேற வேறன்னு சொல்ல, சரி அப்துல் கலாம் மாதிரி தலைமுடிதான் மாத்திக்க முடியல. அவர்போல நீல சட்டை?ன்னு கேட்க, அப்ரூவ்ட். ஆக, இப்போ இருக்கிறது (50 shades of blue மாதிரி) 5-6 நீல சட்டைகள் மட்டுமே. 

சட்டை ரொம்ப பெரிசாயிடுச்சு. ஐ மீன் பதிவு ரொம்ப பெரிசாயிடுச்சோ? இத்தோட முடிச்சிக்கலாம். நன்றி.

***




Read more...

Monday, October 28, 2019

கைப்பேசி வழிப்பறியா?


சமீபத்தில் ஒரு நாள், நங்கநல்லூரில், மணிரத்னம் / பிசிஸ்ரீராம் படக்காட்சி போல இருந்த, வெளிச்சம் குறைந்த ஒரு சாலையில், ரண்டக்க ரண்டக்க என்று மனதில் பாடியவாறு நடந்து கொண்டிருந்தேன்.

ஆள் நடமாட்டமும் குறைவாகவே இருந்தது. ஒரு மிக முக்கிய தொலைபேசி அழைப்பை (மோடி இல்லை. அதற்கு முந்தைய நாள்தான் அவருடன் பேசியிருந்தேன்) எதிர்பார்த்திருந்ததால், கைப்பேசியை கையிலேயே வைத்து, அடிக்கடி எடுத்து பார்த்தவாறு போனபோது, எதிரில் ஒரு ஸ்கூட்டரில் ஒரு பெண் வண்டி ஓட்ட, பின்னாடி ஒரு பையன் அமர்ந்து வந்தார். ஜானவாசக் கார் மாதிரி இது ஜானவாச ஸ்கூட்டர் போலன்னு நினைத்தேன். மிகவும் மெதுவாக ஓட்டி வந்த அந்தப் பெண், வெயிலும் இல்லையே, ஏன் இப்படி முழுக்க மூடியவாறு வண்டியை ஓட்டிப் போறாங்கன்னு நினைத்தவாறு - ரண்டக்க...

நம்மைக் கடந்து போகும்போது, அந்தப் பெண் ‘மொபைல்’னு கத்தியது கேட்டது. சரி, அவங்க மொபைல் விழுந்துடுச்சு போல; இல்லையே எதுவும் விழுந்த மாதிரி தெரியலையேன்னு நினைத்து, நான் ’பாட்டு’க்கு போயிட்டிருக்கேன். நமக்குப் பின்னால், ’க்றீச்’சென்று தரையில் கால்களை தேய்க்கும் சத்தமும் (அந்தப் பெண் வண்டியை நிறுத்தறாங்க!!), அந்தப் பையன் இறங்கி என் பின்னால் வரும் சத்தமும், எனக்கு முன்னால் அவனுடைய நிழலும் (முறையே) கேட்டது / தெரிந்தது.

இந்த இடத்தில் 5 நொடிகள் freeze பண்றோம். எவ்வளவு செய்திகளைப் படிக்கிறோம். கைப்பேசி வழிப்பறி நம் நண்பர்களுக்கே ஆகியிருக்கு என்னும் தகவல்களெல்லாம் நினைவுக்கு வர, *Freeze முடிந்தது* கையில் இருந்த கைப்பேசியை உடனடியாக பேண்ட் பாக்கெட்டில் போட்டுட்டேன்.

என்னைக் கடந்து, எனக்கு முன் ஓடிய அந்தப் பையனை, ஸ்கூட்டரில் வந்து அந்தப் பெண் வண்டியில் ஏற்றிப் போயிட்டார்.

கேள்விகள்:
* மொபைல்னு ஏன் கத்தினாங்க?
* கீழே விழுந்திருந்தா, அதைத் தேடியது போலவும் இல்லையே?
* வீட்டிலேயே மறந்துட்டு வந்ததற்கான எச்சரிக்கைன்னா, அந்தப் பையன் இறங்கி ஓடி வந்தது ஏன்?
* என் கைப்பேசியைப் பார்த்துதான் மொபைல்னு கத்தினாங்களா?
* அதைப் பறிக்கத்தான் அந்தப் பையன் ஓடிவந்தானா?

இப்படி பல சந்தேகங்கள்.

கைப்பேசி போயிருந்தாலாவது, வீட்டில் சொல்லி, ஒரு புது கைப்பேசிக்கு அனுமதி வாங்கி, வாங்கியிருப்பேன். அதுவும் இல்லை. இந்த காலத்து பசங்க, எதைத்தான் ஒழுங்கா செய்றாங்க?

ம்ஹும்.

***


Read more...

Sunday, July 7, 2019

பிறந்த நாள் வாழ்த்துகள்!!



நண்பர்கள் / சொந்தக்காரர்கள் அப்படின்னு பல பேருக்கு தினம் தினம் பிறந்த நாள் / திருமண நாள்னு பல சிறப்பு நாட்கள் வருகின்றன. அதில் என்ன பிரச்னைன்றீங்களா? அதில் ஒண்ணும் பிரச்னையில்லை. அதுக்கு அந்தந்த வாட்சப் க்ரூப்பில் இருக்கும் பலர் வாழ்த்துகள் / வாழ்த்துக்கள்னு (அவங்கவங்க சார்புக்கேற்ப!!) வாழ்த்துவாங்க. சரி. இதில் என்ன பிரச்னைன்றீங்களா? ஹிஹி. இதிலும் ஒண்ணும் பிரச்னையில்லை. 

அப்போ எதுக்குடா இந்த பதிவுன்றீங்களா? விஷயத்துக்கு வர்றேன். இந்த வாழ்த்துக்கு  நன்றி சொல்றாங்க பாருங்க. அதுதான் விஷயம். 

இப்போ கல்யாண வீடுகளில் சாப்பாட்டுக்கு உட்கார்ந்திருப்போம். (சரி. மடங்களில் / கோயில்களில்!!). ஒரு இனிப்போ, பாயசமோ பரிமாறிக் கொண்டிருக்கும்போது, நமக்கு முன் இலைக்கு வரும்போது அது முடிஞ்சிடும். எடுத்துட்டு வர்றேங்கன்னு போவார். எடுத்துட்டும் வருவார். ஆனா, நம் இலையை விட்டுட்டு அடுத்த இலையிலிருந்து துவங்கிப் போயிடுவார். கேட்டால், ஒருவருக்கு ஒண்ணுதாங்க / ஒரு கரண்டிதாங்கன்னு சொன்னாலும் சொல்லிடுவாரோன்னு பக்கத்து இலையையே முறைச்சிப் பார்த்திருட்டிருப்போம். 

அதுபோலவே இந்த வாழ்த்துக்களுக்கு நன்றி சொல்வதும். முதலில் நான் இதை கண்டுகொள்ளவில்லை. நான் வாழ்த்து சொல்றதோட என் கடமை முடிந்ததுன்னு விட்டுட்டு வந்துடுவேன். நன்றி சொல்றாங்களோ இல்லையோ பார்ப்பதில்லை. 

போன ஆண்டு ஒரு புதிய குழுவில் சேர்ந்திருந்தேன். சரி. பேரும் சொல்லிடறேன். துவக்கப்பள்ளி 1-5 வகுப்பில் கூடப் படித்தவர்கள். ஆண்/பெண் என வகுப்பில் அனைவரையும் ஒருவர் கண்டுபிடித்து சேர்த்திருந்தார். நான் சேர்ந்தபிறகு, இன்னும் ஓரிருவரே பாக்கின்னு சொல்லிட்டிருந்தாங்க. 

சேர்ந்த புதிதில் அனைத்து பிநா, திநாக்கும் பறந்து பறந்து வாழ்த்து சொல்லிட்டிருந்தேன். ஒரு முறை ஒருவர் யாரோ ஒரு பொண்ணுக்கு நன்றி சொல்ல மறந்துட்டாரு போல. டக்குன்னு ஒரு கமெண்ட் வந்துச்சு. ’ஏண்டா, புதுசா வந்தவங்க வாழ்த்துக்கு நன்றி சொல்லுவே, எங்களுக்கு சொல்ல மாட்டியா?’. வந்த வேகத்தில் கமெண்ட் டெலீட்டும் ஆயிட்டுச்சு. ஆனாலும் நான் படிச்சிட்டேன். 

அன்றிலிருந்து அந்த க்ரூப்பும் ம்யூட்டில் போயிடுச்சு. யாருடைய பிநாதிநா’க்கும் வாழ்த்து சொல்வதில்லை. ஆனா வேறு பல குடும்ப க்ரூப்களில் சொல்ல வேண்டிய கட்டாயம். அந்த பொண்ணு மாதிரி, நமக்கு நன்றி சொல்றாங்களான்னு பார்ப்போம்னு சும்மா பார்க்கத் துவங்கினேன். (தேவையில்லாத ஆணின்னு பிறகே புரிந்தது!!)

ட்விட்டரிலாவது மக்கள் DMல் நன்றி / ட்வீட்டை Like போல செய்திடுவார்கள். ஆனா நமக்குன்னு வாய்ச்சிருக்கிறாப்போல வாட்சப் க்ரூப்களில்:

* நாம வாழ்த்து சொல்வதற்கு முன் தனித்தனியாக அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொண்டிருப்பவர், நமக்குப் பின் ‘அனைவருக்கும் மிக்க நன்றி’ன்னு முடிச்சிடுவார். நம்ம பேர் தனியா வராது. அவ்வ்..

* சுமார் 20-25 பேருக்கு தனித்தனியா நன்றி சொல்பவர், சரியாக நம்ம பேரை மட்டும் விட்டுடுவார். இது மட்டும் 3-4 தடவை நடந்திருக்கு. சரி, நாம நம் கடமையை செய்வோம் பலன் வேண்டாம்னு விட்டாச்சு. ம்ம்..

* நமக்கு முன் அனைவருக்கும் நன்றி சொல்பவர், நாம் சொன்னபின், காணாமலேயே போய்விடுவார். ஒன்லி அப்ளை நோ ரிப்ளை. சரி போகுது.

* ஓரிருமுறை நமக்கு மட்டும் நன்றின்னு சொல்லாமல், Sure / OK & இன்னபிற பதில்லாம் போடுவாங்க. அடேய்ஸ்.. எனக்கு மட்டும் ஏண்டா இப்படி...

இது மாதிரி பல வகைகள். ஓரிரு முறை நன்றிப்பான்னு தனியா குறிப்பிட்டும் பதில் போட்டிருக்காங்க. அதையும் சொல்லிடறேன். 

சரி இவ்ளோ சொல்றியே, உன் பிநாதிநா வாழ்த்துக்கு நீ நன்றி சொல்றியான்னு கேட்டா, ஹிஹி. என் பிநாதிநாவை நான் எங்கும் ரிஜிஸ்டர் செய்யவில்லை. FBயில் / ட்விட்டரில் வராது. ட்விட்டரில் ஒரே ஒருவர் மட்டும் நினைவில் வைத்து வாழ்த்துவார். 2 நாள் முன்னாடி அவருக்கும் ஒரு warning கொடுத்து, TLல் வாழ்த்த வேண்டாம்னு சொல்லிடுவேன். பிரச்னை சால்வ்ட். 

வெகு நெருங்கிய சொந்தங்கள் கூப்பிட்டு சொல்லிடுவாங்க. பிற சொந்தக்கார வாட்சப்பில் பலருக்கு என் பிநாதிநா நினைவிருந்தாலும் சரியா அந்தந்த நாட்களில் மறந்துடுவாங்க. பிறகு வேறொரு நாளில் நேரில் பார்த்தால் வாழ்த்திடுவாங்க. 

அவ்ளோதாங்க பதிவு. 
படித்த அனைவருக்கும் *தனித்தனியான* நன்றி.
வணக்கம்.

***

Read more...

Tuesday, May 21, 2019

10ம் வகுப்பு பிரச்னைகள்!


இந்தியாவுக்கு வரும்போது #மகளதிகாரத்தின் 4ம் வகுப்பு சேர்க்கைக்காக பள்ளிகள் தேடல் பிரச்னைகளைப் பற்றி எழுதிய மூன்று பதிவுகள் இங்கே. 


காலச்சக்கரம் கடகடன்னு உருண்டு இப்போ அவங்க 10வது வந்தாச்சு. இந்த வகுப்பில் வரும் பிரச்னைகள், அடுத்து 11க்கு வேறு பள்ளி பார்க்கணும். அதில் என்ன பிரச்னைகள்னு இங்கே பார்ப்போம். 

ட்யூஷன்:

9வது முடிந்த அடுத்த நாளிலிருந்தே பல நண்பர்கள் 10வதுக்கு ட்யூஷன் சேர்ந்துட்டாங்க. அவங்க கணிதத்தில் 3 பாடம் முடிச்சிட்டாங்க. கணினி முழுக்க கத்துக்கிட்டாச்சுன்னு ஒரே புலம்பல். அதெல்லாம் வேண்டாம். ஒழுங்கா விடுமுறையை எஞ்சமாய் பண்ணு. திட்டமிட்டபடி ஹரிபுத்தர் எல்லா புத்தகங்களும் படி / படங்களைப் பாரு. விடுமுறையில் கொடுத்த assignments மட்டும் முடிச்சா போதும். படிப்பது பிறகுன்னு சொல்லியாச்சு.

பள்ளி திறந்தபிறகு மறுபடி ட்யூஷனுக்கான peer pressure. சரி, ட்யூஷன் இல்லாமல் எவ்வளவு % எடுப்பே? ட்யூஷன் சேர்ந்தா எவ்வளவு கிடைக்கும்? இல்லாமல் 90% சேர்ந்தா 95%. சரி நமக்கு 90% போதும். என்ன வேணுமோ நானே சொல்லித் தர்றேன். Question Bank வாங்கிப் படிப்போம். சொல்லிக் கொடுக்கதானே பள்ளியில் வாத்திமாருங்க இருக்காங்க. எல்லாரின் வாட்சப் எண் வாங்கு. எந்நேரமும் சந்தேகம் இருந்தா கேட்பேன்னு (லார்ட் லபக் தாஸ்!!) சொல்லு. பிறகு பார்த்துக்கலாம்னு ட்யூஷன் பேச்சை நிறுத்தியாச்சு. 

வயலின்:

சாதாரண நாட்களிலேயே ஒரு நாளைக்கு 1மணி நேரம் வாசிக்க வைக்க படாதபாடு படுவோம். அதுவும் இப்போ Boardexam வேற. வயலின் வாசிக்க முடியுமா? வகுப்புக்கு போகமுடியுமான்னு பல கேள்விகள். என் கேள்வி. வயலின் வாசிப்பதால் எவ்வளவு % மார்க் போகும்?. அவர் பதில். வாசிக்கலேன்னா 95% வாசிச்சா 90%. போதும். 90% போதும். ஒழுங்கா வாசி.  இதை எக்காரணம் கொண்டும் நிறுத்தக்கூடாது. கிளம்பு, வயலின் வகுப்புக்குப் போகலாம்னு கிளப்பியாச்சு.

11வது:

இந்த பள்ளியில் 10வது வரைக்குமே உள்ளது. லுருவில் பெரும்பாலும் (அனைத்து?) பள்ளிகளிலும் இதே நிலைதான். 11வதுக்கு வேறொரு பள்ளி. அதுக்கு 10வது படிக்கும்போது அக்-நவம்பரில் போய் பேர் கொடுத்துட்டு (admission) வரணும். வெறும் பேர் மட்டும் கிடையாது, ஒரு நுழைவுத் தேர்வு எழுதிட்டு, token advance admission fees கட்டணும். ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்தபட்சம் ரூ.25,000. 

இப்போ மூன்று பள்ளிகளில் admission போடறோம்னு வைங்க, ரூ.75000 போச்சு. இதில் ஒரு பள்ளியில்தான் சேரப் போறோம். பாக்கி ரூ.50000 போயே போச்சு. நல்ல வியாபாரம் இல்லே!!. சரி ஒரே ஒரு பள்ளியில் மட்டும் register பண்ணுவோம்னா, பிறகு அங்கு நாம் கேட்கும் அறிவியல் பிரிவு கிடைக்கலேன்னா, வரலாறு / பொருளாதாரம்னு வேற ஏதாவது எடுக்கச் சொல்லிட்டா, பிடிக்காமல் படிக்க வேண்டியதாப் போயிடும்னு புலம்பல். சரி, இதுக்கு என்ன பண்றதுன்னு பார்ப்போம்னு சொல்லி வெச்சிருக்கு. 

Class test:

பள்ளி துவங்கி 2ம் நாளே class testஆம். அவ கூப்பிட்டு சொல்றா. நான் இப்ப படிக்கணுமே?. இப்போ நான். அதெப்படி இப்படி எதுவுமே சொல்லித் தராமல் test வைப்பாங்க. நாளைக்கு நான் வர்றேன் பள்ளிக்கு. டீச்சரைப் பார்த்து கேட்கறேன். இப்போ அவங்க. வேண்டாம். நானே பார்த்துக்கறேன். பல பேர் ட்யூஷன் போவதால், அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு அவங்க நினைச்சிருக்கலாம். எகொஇச? மறுபடி நான். அப்படி அவங்க test வெச்சி அதில் நீ ஒண்ணுமே எழுதலேன்னா பரவாயில்லை. நான் வந்து பிறகு பேசறேன்னு அடக்கியாச்சு. பிறகு அந்த testம் இல்லை. வசந்தியாம். 

அடுத்த அறிவுரை. இனி இந்த மாதிரி வசந்தியெல்லாம் பல வரலாம். எதையும் ஆராயாமல் நம்ப வேண்டாம். நம் இலக்கு boardexam மட்டும்தான். எதைப் பற்றியும் கவலைப்படாமல் அதுக்கு மட்டும் படின்னு சொல்லி அடக்கியாச்சு. வரவர பள்ளி வகுப்புகளிலும் fakenews வசந்திகள் பரவ ஆரம்பிச்சிடுப்பா!!

இப்பதான் வருசம் துவங்கியிருக்கு. இன்னும் அடுத்த ஆண்டு தேர்வு வரும்முன் வேறு என்னென்ன பிரச்னைகள் வருமோ? அதுக்கு இன்னொரு பதிவுடன் வர்றேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும். 

***

Read more...

Friday, January 26, 2018

Twitter Likes & RTs

Twitter Likes & RTs

Twitterல் Likeகள் Favஆக இருந்த காலத்தில் + நம் Favகள் அடுத்தவர்களின் TLல் வராமல் இருந்த காலத்தில், ‘இதை ஏன் Fav செய்திருக்கீங்க’ என்னும் கேள்வி ஒரு முறைகூட வந்ததில்லை. இத்தனைக்கும் அடுத்தவர் Fav Tlக்குள் போயும் பார்க்கமுடியும்.

ஆனால், எப்போ Fav என்பது Like ஆனதோ + நம் Likeகள் அடுத்தவர் TLல் வரத் துவங்கியதோ, அப்போதே கேள்விகளும் துவங்கிவிட்டன?

* இதை ஏன் Like செய்தீங்க?
* நீங்க இதை ஆதரிக்கிறீர்களா?
* உங்களுக்கு இது ஒப்புதல்தானா?
* தெரியாமல் Like செய்துட்டீங்களா?

அடியேன், ட்வீட்களை Like செய்வதற்கான காரணங்கள்.

1. பொதுவாக Likeஐ bookmarkகளாகவே பயன்படுத்துகிறேன். ஒரு காணொளி / fb சுட்டி இருக்கு. இப்போ படிக்க/பார்க்க முடியாது. பிறகு படிக்க/பார்க்கலாம்னு Like செய்துவைக்கிறேன். அந்த குறிப்பிட்ட ட்வீட், ஜாதி/மத/ரசிக/மாபியா/LGBT (இது ஒரு புதிய தலைப்பு!), இப்படி எந்த தலைப்பாகவும் இருக்கலாம். அந்தத் தலைப்பில் எந்தத் தரப்பாகவும் இருக்கலாம். பிறகு படித்துவிட்டு Unlike செய்துட்டாப் போச்சு. இது வெறும் அடியேனின் விருப்பம்தானே.

2. அடியேனைப் புகழ்ந்துவரும் (ம்கும்!!) ட்வீட்கள். காக்கைக்கும் தன் இது பொன் இதுன்ற மாதிரி இவை நிரந்தரமாக என் Likeல் இருக்கும்.

3. ஒரு Convoவை முடிப்பதற்காக + பதில் ஒன்றும் இல்லையென்றால் Like. இது அனைவரும் செய்வதே. இதெல்லாம் அடுத்தவர் Tlல் வந்தால், நான் என் செய்வது?

4. நம் காது ஆடும் ட்வீட்கள். அதாவது, கன்னட TLலிருந்து, மத்வ / ராகவேந்திர / ஹரிதாச ட்வீட்கள் இவையும் நிரந்தரமாக நம் Likeல் இருக்கலாம்.

இவ்வளவுதான் Like விஷயம். அடுத்து RT.

RT கண்டிப்பாக அனைவரின் Tlலும் வரும் என்பதால் இதில் கவனமாக இருக்கிறேன்.

1. சில விபுசி / நல்ல / தேவையான / பொதுஅறிவு வளர்க்கக்கூடிய (அப்படி ஏதாவது இருக்கா ட்விட்டரில்?!) ட்வீட்டுகளை RT செய்வது வழக்கம்.

2. குறிப்பிட்ட பிரிவினரை பழிக்கும் ட்வீட்கள் சில RT செய்து, தவறை உணர்ந்து, பின் அவற்றை RT செய்வதை விட்டுவிட்டேன்.

3. தமக்கு வரும் @களை எல்லாம் சிலர் RT செய்தவாறே இருப்பர். அடியேன் அப்படி செய்வதில்லை. (ம்கும்.. வர்ற 1-2 @க்கு இதுவேறயா).

4. வெறும் +ve ட்வீட்களை மட்டுமல்லாமல், சில -ve ட்வீட்களையும் RT செய்திருக்கிறேன். எனக்கு கருத்து இல்லையென்றாலும் / என்ன சொல்வதென்று தெரியாததாலும், நம் TLல் இருக்கும் சிலரின் கவனத்திற்குக் கொண்டு செல்வதற்காக செய்வது இது.

5. யாருடைய Tlஐயும் spam ஆக்கக்கூடாதுன்னு கவனம் செலுத்தறேன்.

அவ்வளவுதான். வேறு ஏதாவது சொல்றதுக்கு இருக்கா இதில்?

***


Read more...

Sunday, December 24, 2017

சொந்தங்கள் பலவிதம். ஒவ்வொருவரும் ஒருவிதம்...

சொந்தங்கள் பலவிதம். ஒவ்வொருவரும் ஒருவிதம்...


அமெரிக்காவில் இருந்தவரை, இந்தியாவில் நடக்கும் எந்தவொரு குடும்ப நிகழ்ச்சிகளுக்கும் வரவேண்டிய அவசியம் இருக்காது. அன்றைக்கு ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு மட்டுமே. நீங்க மட்டும்தான் இங்கே இல்லை. We miss youன்னு இங்கேயிருந்து சொல்வாங்க. சரி சரின்னு அழைப்பை துண்டித்து, Seinfeld பார்க்க உட்கார்ந்துடுவோம். 

ஆனா, இந்தியா வந்தபிறகு நிலைமை வேற. நெருங்கிய / தூரத்து உறவினர்களின் சின்ன / பெரிய / மிகப்பெரிய நிகழ்ச்சிகளுக்கு (அவங்க கூப்பிட்டா!) போகவேண்டிய கட்டாயம். கூப்பிடாமல் எந்தவொரு நிகழ்ச்சிக்கும் போவதில்லைன்னு என் மாமனார் மேல் சத்தியம் செய்திருக்கேன். ஒரு வேளை கூப்பிட்டு போகாமல் இருந்துட்டா? அதைப் பற்றிய பேச்சு / பிரச்னை தனி. 

சரி, நீ உன் வீட்டில் ஏதாவது நிகழ்ச்சி நடத்திருக்கியா? அதுக்கு எல்லாரையும் கூப்பிடுவியா? அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்கள்தானான்னு கேள்வி வரும். எல்லா கேள்விகளுக்கும் இந்தப் பதிவில் விடை காண்போம். மேலே (கீழே!) படிங்க. 

அது சரி, நெருங்கிய / தூரத்து சொந்தங்கள் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் உன்னை கூப்பிடணும்னு அவசியம்தானான்னு கேட்பீங்க. மிகச்சரி. அவசியம் இல்லைதான். ஒரு திருமணம்னா, மாப்பிள்ளை, பொண்ணு & அந்த தாலி (அல்லது மோதிரம்) மட்டுமே இருக்கணும். நானெல்லாம் அநாவசியம் என்றே நினைப்பேன். ஆகவே, யாரும் கூப்பிடலேன்னா நமக்கு ஒன்றும் பிரச்னையில்லை. 

ஒரு கசின். மிகவும் நன்றாகவே பேசுவார். ஏதாவது ஒரு பொது நிகழ்ச்சியில் பார்த்தால், நாள் முழுதும் பேசிக்கொண்டும் இருப்போம். ஆனால் அவர் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு நமக்கு அழைப்பு இருக்காது. ஏற்கனவே சொன்னாற்போல் நமக்கு ஒன்றும் பிரச்னையில்லை. அடுத்த சந்திப்பில் பார்க்கும்போது அவரும் நன்றாக பேசுவார், நானும். 

ஆனால், யாரேனும் என்னை அழைக்காமல் விட்டுவிட்டால் நமது இன்னொரு கசினுக்குப் பிடிக்காது. அவன் எப்படி உன்னை அழைக்காமல் விடலாம் என்று கிளம்பிவிடுவார். இவரும் நம் அண்ணன்தான். நல்லவர்தான். நம் வீட்டு நிகழ்ச்சிகளில் பற்பல உதவிகள் செய்தவர். நமக்கு அழைப்பு இல்லாத நிகழ்ச்சிகள் அவருக்கும் பிடிக்காது. அந்த நிகழ்ச்சி நடத்துபவரைக் கூப்பிட்டு, ஏன் இவனை மட்டும் கூப்பிடலை. இந்தா தொலைபேசி எண், கூப்பிடு அவனை என அவரிடம் சொல்லிவிடுவார். 

இது எப்படி எனக்குத் தெரியும்னா, ஒரு முறை ஒரு திருமண நிகழ்ச்சிக்கு நமக்கு அழைப்பு இல்லை. எல்லாம் நன்மைக்கேன்னு நாம சும்மா இருந்தாச்சு. திருமணத்திற்கு 2 நாள் முன்னால், அந்த மாப்பிள்ளையின் தந்தை தொலைபேசியில் அழைத்து, தப்பா நினைக்காதே. உன்னை கூப்பிடாமல் விட்டுப்போச்சு. கட்டாயம் மகன் திருமணத்திற்கு வந்துடுன்னுட்டார். சரி, பெரியவரே கூப்பிட்டபிறகு போகாமல் இருக்கமுடியுமான்னு போய் 2 நாளும் விழாவை சிறப்பித்து வந்தாச்சு. பிறகு சில நாட்கள் கழித்து அவரை இன்னொரு இடத்தில் பார்த்தபோது - உன் (மேற்சொன்ன நல்ல அண்ணன்) உன்னைக் கூப்பிடச்சொல்லி 4முறை சொல்லிட்டான். ஆகவே உன்னை கூப்பிட்டேன் - என்றார். 

அன்றிலிருந்து ஒரே ஒரு வழிதான் பின்பற்றுவது. சொந்தங்களில் ஏதாவது நிகழ்ச்சி வந்து, நமக்கு அழைப்பு இல்லைன்னா, இந்த அண்ணனிடம் - அந்த கடைசி ஒரு வாரத்தில் - பேசக்கூடாதுன்ற முடிவு. உன்னை கூப்பிட்டாங்களான்னு இவர் கண்டிப்பா கேட்பார். அதன்பிறகு நடக்கப்போவதுதான் நமக்குத் தெரியுமே.

நிற்க. 

திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு முடிந்தவரையில் சொந்த பந்தங்கள் அனைவருக்கும் நேரில் போய் பத்திரிக்கை கொடுப்பது நல்ல பழக்கம்தான். ஆனால் நேரமேயில்லாமல் அனைவரும் வேகமாக ஓடுகிற இந்த காலத்தில், இதெல்லாம் சரிப்படுமா? எனக்கு உறவினர் யாரேனும் தொலைபேசி, உங்க விலாசம் சொல்லுங்க, அந்தப்பக்கம் வந்து பத்திரிக்கை கொடுக்கணும்னு சொன்னால், நான் சொல்வது இதுதான். ”உங்களை வரவேண்டாம்னு சொல்லலை. தலைக்குமேல் உங்களுக்கு எவ்வளவோ வேலை இருக்கும். பேசாமல் மின்னஞ்சலோ / வாட்சப்போ அனுப்பிவிடுங்க. நான் கண்டிப்பா வந்துடுவேன். சிரமம் வேண்டாம். எனக்குப் பிரச்னையில்லை”. சிலர் சரின்னு வாட்சப்பிடுவாங்க. அது போதும்னு நானும் போய் வந்துடுவேன். 

ஆனா, நமக்கு வாய்த்தவர்கள் அப்படியில்லை. ஒரு முறை அடியேன் செய்த புதுமனை புகுவிழா. அமெரிக்காவிலிருந்து வந்திறங்கிய 2 வாரத்தில் நடத்த நிச்சயிக்கப்பட்டது. வந்தவுடன் ஒரு சிறிய அறுவை சிகிச்சை வேறு. ஒவ்வொருவருக்கா தொலைபேசத் துவங்கினேன். இந்த மாதிரி பிரச்னை, நீங்க கண்டிப்பா வந்துடணும். எல்லாமே சுமுகமா போயிட்டா பிறகு எப்படி? நம் தூரத்து உறவினர் ஒருவர் பிரச்னை செய்தார். ”நேரில் வந்து கூப்பிட்டாதான் வருவோம். என்ன மரியாதை தெரியாம இருக்கீங்க?”. ”சார், இந்த மாதிரி இந்த மாதிரி ஆகவே..”. ”நோ நோ. ரிஜட்டட்”. கடைசியில் நான் சொல்லிட்டேன். ”நீங்க பெரியவங்க. நான் என் பிரச்னையை சொல்லிட்டேன். பெரியவங்களா வந்து ஆசிர்வாதம் செய்ய முடிந்தா நல்லது. இல்லேன்னா அங்கேயிருந்தே சொல்லிடுங்க. நன்றி”ன்னு வெச்சிட்டேன். மனுசன் வந்தாரான்னு கேட்பீங்களே? ஹிஹி. ஆள் வரவில்லை. சரி விடுங்க. இதெல்லாம் ஜகஜம்தான்னு விட்டாச்சு. 

சரி கூப்பிட்ட மற்றவர்கள் வந்தாங்களான்னு கேட்டால், அது ஒரு தனி பிரச்னை. கேளுங்க. 

RSVP என்னும் மேட்டர் நம்ம மக்களுக்கு என்றைக்கும் தெரியப்போவதில்லை. ஒரு நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்திருக்கு. நீங்க வர்றீங்களா இல்லையான்னு சொல்லணுமா வேண்டாமா? 500-600+ பேர் வரக்கூடிய திருமண நிகழ்ச்சிக்கு இந்த RSVP தேவையில்லை. ஆனா ஒரு சிறிய நிகழ்ச்சிக்கு?. 

ஒரு முறை நம் வீட்டில் ஒரு நிகழ்ச்சி நடத்தினோம். வெறும் 20 பேர்தான் சாப்பாட்டுக்கு. அதில் அழைக்கப்பட்ட ஒரு குடும்பத்தில் 6 பேர். கண்டிப்பா வந்துடுவோம் ஜமாய்ச்சிடலாம்னு சொன்னவங்க யாருமே நிகழ்ச்சிக்கு + சாப்பாட்டுக்கு வரவில்லை. நிகழ்ச்சி அவங்க வீட்டிற்கு பக்கத்து தெருவில்தான். இதனால் எனக்கு அவமரியாதை, அவமானம் இதெல்லாம் கிடையாது. மீந்து போகும் சாப்பாட்டிற்கு என்ன கதி? வரலைன்னு சொன்னா தப்பா நினைச்சிப்பாங்களோ? சரி வர்றோம்னு சொல்லிடுவோம். பிறகு போகவேண்டாம். அடேய். சாப்பாடு வீணாயிடும்னு நினைச்சிப் பாருங்கய்யா!!

மறுபடி நிற்க. நாம் செய்த சில குளறுபடிகளையும் சொல்றேன்.

ஒரு கசின் சகோதரி. அவருடைய கணவர் நம்மிடம் நல்லா ஜாலியா பேசுவார். ஒரு காலத்தில், அவருடைய வட்ட திருமணங்களுக்கெல்லாம் எனக்கு பத்திரிக்கை வந்துகொண்டிருந்தது. ஒரு முறை என்ன ஆச்சுன்னா, வீட்டில் இருந்த ஒரு பரிசை Giftwrap செய்து வைம்மா என்று அம்மாவிடம் சொல்ல, அவரும் செய்து வைக்க, நாமும் அதைப் போய் அவருடைய சகோதரரின் திருமணத்தில் கொடுத்துட்டு வந்தோம். ஓரிரு நாட்கள் கழித்துப் பார்த்தால், கொடுக்கணும்னு நினைத்த பரிசு இன்னும் வீட்டிலேயே இருந்தது. அப்படின்னா, நாம் அவருக்கு எதை Giftwrap செய்து கொடுத்தோம்?. கண்டுபிடிக்கவே முடியவில்லை.

சில நாட்கள் கழித்து இன்னொருவர் மூலம் தெரியவந்தது. நம் வீட்டில் பழைய audio cassetteகள் போட்டு வைக்கும் ஒரு டப்பா. தவறுதலாக அம்மா அதைக் கொண்டு போய் Giftwrap செய்துவர, அதையே கொடுத்திருக்கிறோம். மிகப்பெரிய தவறுதான். அடுத்த ஒரு மாதத்தில் அந்த கசினின் கணவரிடம் போய் மன்னிப்பு கேட்டு வந்தேன். ஆனால், தவறு தவறுதானே. நடந்து பல ஆண்டுகள் கழிந்துவிட்டாலும் இன்றுவரை அந்த கசின் கணவர் அதை மறக்கவில்லை. மறக்கக்கூடிய தவறா நாம் செய்திருக்கிறோம்?.

வேறொரு நிகழ்ச்சி. இதே போல் இன்னொரு கசின் சகோதரி. அவர் கணவரின் குடும்பத்துடன் வசித்து வந்தார். நம் வீட்டு நிகழ்ச்சி. கசின் & அவர் கணவரைக் கூப்பிடணும். நான் என்ன செய்தேன்னா, கசின் கணவருடன் பேசிவிட்டு, அவர் பெயரிலேயே பத்திரிக்கையை அனுப்பிட்டேன். ஆனால் நிகழ்ச்சிக்கு அவர்கள் இருவரும் வரவில்லை. என்னடான்னா, வீட்டில் என் அப்பா அம்மா இருக்காங்க. அவர்களையும் கூப்பிட்டு, அவர்கள் பெயரிலேயே பத்திரிக்கை கொடுத்திருக்கணும். அப்படி குடுக்காததால் நான் அந்த நிகழ்ச்சிக்கு வரவில்லைன்னு இன்னொருவர் மூலமாக சொல்லியனுப்பினார். 

நான் கசின் சகோதரியை கூப்பிடணும். கணவருடன் இருக்காருன்னு அவரை கூப்பிட்டேன். அடுத்து அவர் வீட்டில் அனைவரையும் கூப்பிடணும்னா அது முடியுமா? நாம் செய்தது ஒரு சிறிய நிகழ்ச்சி. வந்தா வரட்டும் வரலேன்னா போகட்டும் நான் சொல்லிட்டேன். செய்தது சரியா தவறான்னு தெரியல. வழக்கம்போல் நம் வீட்டில் சிலர் அது தவறுன்னும் சிலர் அது சரிதான்னு சொல்லிட்டிருந்தாங்க. சரி விடுங்க. 

இன்னொரு சம்பவம். நம் வீட்டுத் திருமணம். சொந்தங்களை ரெயில் / பேருந்து நிலையங்களிலிருந்து கூட்டி வர / கொண்டு போய் விட என்று ஒரு Vanஐ இரு நாட்களுக்கும் நிறுத்தி வைத்திருந்தேன். Transport-In-charge என்று ஒரு கசினையும் நியமித்து வண்டி வேணும்னா இவரைத் தொடர்பு கொள்ளவும் என்று அனைவருக்கும் சொல்லியிருந்தேன். முந்தைய நாள் இரவு ஒரு குழு வண்டி எடுத்துப் போயிருக்க, இன்னொரு உறவினர் குழு வண்டி இல்லை என்று கோபித்துக் கொண்டனர். இந்த கசின் நம்மிடம் சொல்லாமல் பிரச்னையை தீர்க்கப் பார்க்க, பிரச்னை தீரவில்லை. நாளை நாங்கள் திருமணத்திற்கு வரமாட்டோம்னு சண்டை போட்டு அந்தக் குழுவினர் போய்விட்டனர். பிறகு வந்தாங்கன்றது வேறு விஷயம். இந்த பிரச்னை தெரிந்து, திருமணம் ஆன ஒரு வாரத்தில், அந்த குழுத்தலைவருக்கு தொலைபேசி நான் மன்னிப்பு கேட்டேன். இதுவும் நம் தப்புதான். எல்லாம் ஒரு படிப்பினைதானே?

ஒரு தூரத்து சொந்தம். பல நாள் கழித்து ஒரு நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டாங்க. சந்தோஷமா போய் சாப்பிட்டு(!!) வந்தாச்சு. ஓர் ஆண்டுக்குப் பிறகு அவங்க வீட்டிலேயே இன்னொரு நிகழ்ச்சி (புமபுவி) வந்தது. அதற்கு நமக்கு அழைப்பில்லை. அது பரவாயில்லை. ஆனால், சில நாட்கள் கழித்து அந்த புது வீட்டிற்கே நாம் போக வேண்டிய நிலைமை. அப்போது அவங்க சொல்லிட்டாங்க. ”சாரிப்பா. உன்னை இந்த வீட்டு புமபுவி’க்கு கூப்பிடலை. மறந்துபோச்சு”. நானும் “அச்சச்சோ. சாரி எல்லாம் எதுக்கு? ஒண்ணும் பிரச்னையில்லை. இன்னும் கட்டப்போற அடுத்தடுத்த வீடுகளுக்கு மறந்துடாதீங்க”ன்னு ஒரு மொக்கை ஜோக் அடிச்சி நான் (மட்டும்!) சிரிச்சாச்சு. ஆனா பக்கத்தில் இருந்த ஒரு கசின் விடுவாரா? “ஆமா நீங்க போன ஆண்டு அந்த நிகழ்ச்சிக்கு கூப்பிட்டீங்க. இந்த நிகழ்ச்சிக்கு இவனை கூப்பிடலைன்னு என்னிடம் சொல்லி வருத்தப்பட்டான்”ன்னு சும்மா அடிச்சி விட்டுட்டாரு. நமக்கு வாய்த்த கசின்கள் இப்படிப்பட்ட ரகம். என்னத்த செய்றது. 

தன் வீட்டில் எந்த நிகழ்ச்சிக்கும் நம்மைக் கூப்பிடாத கசின் ஒரு முறை என்னிடம் - ”என்னடா, கூப்பிட்டாதான் நிகழ்ச்சிக்கெல்லாம் வருவியா? நாம அப்படிதான் பழகியிருக்கோமா?” என்றெல்லாம் கேட்டார். சாதாரண நாள் என்றால் யார் வீட்டிற்கும் போவதற்கு தயங்காதவன் நான். வெறுமனே தொலைபேசிவிட்டு, ஒரு நல்ல காபி வேணும். வீட்டில் இருப்பீங்களா. இதோ வர்றேன்னு சொல்லி பல முறை பலர் வீட்டிற்கு சென்றிருக்கிறேன். ஆனா திருமணம், புமபுவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு? அவரிடம் நான் சொல்ல நினைத்தது - “அடேய். நான் என் நிகழ்ச்சிக்கு கூப்பிட்டும் நீங்க யாரும் வரவில்லை. பிறகு நிகழ்ச்சி எப்படி நடந்ததுன்னும் கேட்கவில்லை. அப்படியிருக்கும்போது கூப்பிடாமல் யார் வருவாங்க சொல்லு”. ஆனால் வழக்கம்போல் இதைக் கேட்கவில்லை. 

இவ்வளவு பேசிவிட்டு ‘மொய்’ மறந்துட்டேன் பாருங்க. மக்கள் இந்த மொய் விஷயத்தில் ஏன் இவ்வளவு டென்சன் ஆகுறாங்கன்றது நமக்கு என்றைக்கும் புரியாத விஷயம். அவன் திருமணத்தில் அவன் எனக்கு இவ்வளவுதான் / இதுதான் கொடுத்தான். அதனால் நானும் இவ்வளவுதான் கொடுப்பேன். அவன் சக்திக்கு எவ்வளவோ கொடுக்கலாம். ஆனால் கொடுக்கவில்லை. திருமணங்கள் / நிகழ்ச்சிகள் முடிந்தும் எப்போதும் ஓயாத பேச்சுன்னா அது மொய் பற்றியதுதான். 

ஒரு நிகழ்ச்சிக்கு அழைப்பு / பத்திரிக்கை வருது. தவிர்க்க முடியாத காரணங்களால் நம்மால் போகமுடியவில்லை. அந்த சமயத்தில், மொய் மட்டும் யாரிடமாவது கொடுத்து அனுப்பணுமா? இதற்கு நம் சொந்தங்கள் பலர் சொல்லும் பதில் - யெஸ். நீ வரலேன்னாலும் பரவாயில்லை. மொய் கொடுத்து அனுப்பு. என் கேள்வி - ஏன்?. நான் போகாத நிகழ்ச்சிகளுக்கு நான் மொய் / பரிசு கொடுப்பதில்லை. தகராறு ஆனா ஆகட்டும்னு விட்டுடறது. மிடியல. 

இப்போதைக்கு இங்கே நிறுத்திக்குவோம். சொல்வதற்கு இன்னும் பற்பல சம்பவங்கள் இருப்பதால், அடுத்த பாகம் வந்தாலும் வரும்.

***

Read more...

Thursday, September 21, 2017

சென்னை - பயணக் குறிப்புகள்

சென்னை - பயணக் குறிப்புகள்

திருச்சி கல்யாணத்துக்கு (கபடி விளையாட) நான் வேணா போறேனேன்னு விஜய் சொல்வதுபோல், எந்த ஒரு சின்ன வேலை இருந்தாலும், சென்னைதானே (எந்த ஏரியாவா இருந்தாலும் ஒரு ரவுண்ட் திருவல்லிக்கேணி போயிடலாம்னுதான்!!) நான் போறேன்னு கிளம்பிடுவேன். ஆகவே இரு மாதங்களுக்கு ஒரு முறையாவது சென்னை வந்து போய்விடுவது வழக்கம். 

சென்ற ஞாயிறும் இப்படிதான் (சில ஆண்டுகள் கழித்து) பிருந்தாவனில் கிளம்பிப் போனேன். வீட்டிலிருந்து ரெயில் நிலையம் BMTCல் போகும்போதே பிரச்னை துவங்கிடுச்சு. பேருந்தில் யாருடையதோ பணத்தை pickpocket அடிச்சிட்டாங்களாம். ஒரே கூச்சல். பேருந்தை காவல் நிலையத்துக்கு விடுங்கன்னு சத்தம். போக 2.50, வர 2.50, சாப்பிட தயிர் சாதம்னு த்ரிஷா ஆண்டி சொல்வதைப் போல், போக வர SMS ticket, ரெயிலில் சாப்பிட உப்புமா இதைத்தவிர சில சில்லறை மட்டுமே வைத்திருந்த நான், மறுபடி இன்னொரு பேருந்து பிடிக்கணுமா, காசு இருக்கான்னு பார்க்க நினைக்கையில் - பிரச்னை எப்படியோ தீர்வாகி வண்டி சரியாக ரெயில் நிலையத்துக்குப் போயிடுச்சு. 

பிருந்தாவனில் பயணம் <எப்படி இருக்கும்னு மக்கள் நினைப்பது>



பிருந்தாவனில் பயணம் <நிஜமாக எப்படி இருக்கும்>


பயணிகளை விட அதிகமாக இருக்கும் வியாபாரிகளை வேடிக்கை மட்டுமே பார்த்து - காதில் தாசர் பாடல்களுடன் சென்னை போய் சேர்ந்தாச்சு. 

விடியலில், திருவல்லிக்கேணி சந்து பொந்துகளில் & கடற்கரையில் ஒரு நடைப்பயிற்சி. பின்னர் ஒரு சில மடங்கள், கோயில்கள். மாலையில் பாரதி சாலையில் பழைய புத்தகக் கடைகளை ஒரு சுற்று பார்த்துவிட்டு, climaxஆக மீசைக்காரர் கோயில். இதற்கு நடுவே எந்த வேலைக்கு (விழாவிற்கு) சென்றோமோ அங்கே போய் தலைமை தாங்குவது - இதுவே நம் பொதுவான அட்டவணை. கோயிலில் புளியோதரை & வேறு ஏதாச்சும் வாங்கி சாப்பிடுவது பற்றிய தகவல் இங்கு தேவையில்லாதது.

நாம் முன்னர் இருந்த தெருக்களில் மற்றும் நமக்குத் தெரிந்தவர்கள் இருந்த தெருக்களில் (யாருன்னு கேட்டு பழைய autographகளை கிளறக்கூடாது!) சுற்றும்போது - cinema paradiso படத்தில் 30 ஆண்டுகள் கழித்து அந்த ஊருக்கு வரும் Directorஐ பழைய முகங்கள் பார்த்து அடையாளம் கொள்ளும் - அதே போல் நம்மையும் ஓரிருவர் பார்த்து சிரித்தால் (ஹாஹான்னு இல்லை. சும்மா புன்னகை மட்டுமே), நமக்கு ஒரு திருப்தி. 

கோயிலுக்குப் போய்வருவது ஒரு நண்பர் வீட்டிற்குப் போவதுபோல். என்ன, அடியேன் மகளோடு மட்டும் அங்கு போகமுடியாது. என்ன பிரச்னைன்றீங்களா? சென்ற கோடையில் இருவரும் கோயிலுக்குப் போய் மீசைக்காரரை பார்த்துவிட்டு வந்தபிறகு, பங்கேற்கப் போயிருந்த விழாவில் அனைவரிடமும் - அப்பா, கோயிலில் அழுகிறாரு. இனி அவரோடு கோயிலுக்குப் போகமாட்டேன்னு சொல்லிட்டாங்க. அவரை (மட்டும்) பார்த்தா அது தானா வருது. நான் என்ன செய்ய? 

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இருக்கும் இடம் ஆகையால் மாடுகள் ரொம்ப அதிகமா இருக்குன்னு சொல்வாங்க. சாணிகளை ஓரமா போய் போடுங்கன்னும் அவைகளிடம் சொல்ல முடியாது. ஆகவே எல்லா தெருக்களிலும் மாடுகள் மற்றும் சாணிகள். இதுகூட ஓகேதான்(?!?). ஆனா இந்த மனுசங்க போடுற குப்பைகளையாவது ஓரமா / தொட்டியில் போடலாமே? ம்ஹும். எங்கு பார்த்தாலும் குப்பைதான். கோயில் விழா / ரதம் ஆகிய நாட்களில் மட்டுமே சுத்தம் / ப்ளீச்சிங் பவுடர் போலிருக்கு. 

திருவல்லிக்கேணி சந்து பொந்துகளில் சுற்றியபோது கவனித்த இன்னொரு விஷயம். ஏகப்பட்ட மருத்துவர்கள் / மருத்துவமனைகள். மழை பெய்துகொண்டிருந்த அன்றைய விடியலில் ஏதாவது ஒரு மருத்துவர் கிடைத்திருந்தால் / மருத்துவமனை திறந்திருந்தால், தங்க நேரத்தை (Golden hour) தவறவிட்ட அடியேன் தந்தையாரை காப்பாற்றியிருக்கலாம். ம்ம்.

***


Read more...

Saturday, September 9, 2017

நானே நானா.. தனியாதான் பேசுறேனா..


நானே நானா.. தனியாதான் பேசுறேனா..

ட்விட்டரில் 3599 பேர் நம்மை பின்தொடர்ந்தாலும், 5க்கும் குறைவான ஆட்களே நம்மிடம் தொடர்ந்து பேசுவாங்க. மற்றவர்கள் ம்யூட்டில் போட்டு வைத்திருப்பார்கள்னு நம்புறேன். #BlockNarendraModi போல #MuteChPaiyanன்னு இதுவரை tag பார்த்ததில்லை. இது பிரச்னையில்லை. நிஜவாழ்க்கையிலும் நம் பேச்சை யாரும் கேட்பதேயில்லைன்னு நினைக்கிறேன்.

அட, எல்லார் வீட்டிலும் இதே பிரச்னைதான்பா. யார் வீட்டில்தான் குடும்பத்தலைவர் (ரேசன் அட்டையின்படி!!) பேச்சை கேட்குறாங்க? ம்ம். அதுவும் பிரச்னையில்லை. குடும்பத்துக்கு வெளியில் - உறவினர், நண்பர்கள் ஆகியோர் (எல்லாரும் அல்ல, பெரும்பாலும்) நாம் பேசறதைக் காது குடுத்து கேட்குறாங்களா இல்லையான்னே தெரிய மாட்டேங்குது.

அது எப்படி உனக்குத் தெரியும்ன்னு கேட்டா, சில பல உதாரணங்களைத் தர்றேன் பாருங்க. 

நம் சொந்தக்கார் ஒருத்தர். போன வாரம் நடந்த அண்ணன் பெண் திருமணத்தில் பார்த்தவர் - உனக்கு கன்னடம் எழுதப் படிக்க தெரியுமான்னார். அடியேனைப் பார்த்து அவர் இந்தக் கேள்வியைக் கேட்டது - கடந்த 4 ஆண்டுகளில் இது சுமார் 10வது முறை. செம கடுப்பு. முதலில் ஆமாங்க. தெரியும்னு சொல்ல ஆரம்பிச்சி - பிறகு ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் இதே கேள்வியால் கோபப்பட்டு - அந்த சமயத்தில் என்ன பதில் தோணுதோ அதைச் சொல்லத் துவங்கிவிட்டேன். 

சரி வயசானவர்னு இவரை மன்னித்து விட்டால், நம் சமகாலத்திய வாலிப வயதில் (சிரிக்க வேண்டாம்!) உள்ள ஆபீஸ் நண்பர்களும் அப்படிதான். முன் தின மாலைதான் சொல்லியிருப்பேன். அடுத்த நாள் நான் வர மாட்டேன். லீவ். அடுத்த நாள் காலை 9 மணிக்கு சரியாக அழைப்பு வரும். ஏன்பா பேருந்தில் வரலை? பைக்கில் வரியா? மறுபடி விளக்கவேண்டியிருக்கும். நான் இன்னிக்கு லீவ். 

சரி வாலிப வயதில்தான் இப்படி, சின்ன பசங்களாவது நாம் சொல்றதைக் கேட்கிறாங்களான்னா, அதுவும் இல்லை. 

பெரிய அண்ணன் பையர் ஒருத்தர். 30 வயதிருக்கும். நாங்க ஊரிலிருந்து (அமெரிக்காவிலிருந்து) வந்து சென்னையில் ஒரு 3-4 மாதம் இருந்து, இப்போ பெங்களூர் வந்து 5 ஆண்டுகள் ஆயிடுச்சு. எப்போ திருவல்லிக்கேணி போனாலும், அந்த அண்ணன் வீட்டிற்குப் போய் ஒரு காபி (ஹிஹி) குடிச்சிட்டு வருவது வழக்கம். 

அப்போ அந்தப் பையர் கேட்பார் - நங்கநல்லூரில்தானே இருக்கீங்க? தண்ணீர் பிரச்னை இல்லையே? முதல் 2-3 முறை சொல்லிப் பார்த்தேன். இல்லப்பா, நாங்க லுரு போய் நாளாச்சு. இங்க இல்ல. பையர் நம் பேச்சைக் கேட்பதாகவே தெரியல. அடுத்தடுத்த முறையும் அதே கேள்விதான். இப்பல்லாம் நான் மறுப்பு சொல்றதில்லை. ஆமாம்பா நங்கநல்லூர்தான். அந்தப் பக்கம் வந்தா வீட்டுக்கு வா. 

கண்டகண்ட தகவல்களை நாம்தான் நினைவில் வைத்திருக்கிறோமோ? (படையப்பாவில் ரஜினிக்கு எதிரே கால் மேல் கால் போட்டு உட்காரும் அந்த நடிகை பெயர் என்னன்னு கேட்கக்கூடாது) மற்றவர்கள் மேலே சொன்னாற்போல் தேவையானவற்றை மட்டுமே கேட்டு (அல்லது கேட்ட மாதிரி நடித்து) - கவனத்தை எப்போதும் எங்கேயோ வைத்து சுற்றுகிறார்களோ எனத் தோன்றுகிறது. இதில் வயது வித்தியாசம் கிடையாது. 

இவ்வளவு உதாரணங்களுப் பிறகு, இப்பல்லாம் யாரிடமும் அதிகம் பேசுவதில்லை (நம்புங்க!). அப்படி பேசினாலும், 

* அவங்க தன் கைப்பேசியைப் பார்த்தாலோ
* வேறெங்கோ நோட்டம் விட்டாலோ
* கொட்டாவி விட்டாலோ
* கேட்ட கேள்வியையே திரும்ப கேட்டாலோ

பேச்சை நிறுத்தி / அங்கிருந்து நகர்ந்து விடுவது வழக்கமாக்கிட்டேன். 

சரி நீங்களாவது ஒழுங்கா படிச்சீங்களா - இல்லே, முதல் பாராவிலிருந்து நேரா ஜம்ப் அடிச்சி கடைசி பாராக்கு வந்துட்டீங்களா? 

ஓம் சாந்தி.

***

Read more...

Thursday, August 24, 2017

மாணிக்கம் அலையஸ் பாட்ஷா

மாணிக்கம் அலையஸ் பாட்ஷா



நம் எதிர்வீட்டில் குடியிருக்கும் ஒருவர் வேறொரு இடத்தில் வீடு கட்டி, போன வாரம் புதுமனை புகுவிழா நடத்தியிருக்கிறார். அடிக்கடி பார்த்து சிரிப்பதால் - அவர்/ நம் வீட்டுப் பெண்கள் பேசிக்கொள்வதால் - அவர் / நம் வீட்டுச் சிறுமிகள் சேர்ந்து வேறொரு குழுவுடன் விளையாடிக்கொள்வதால், நம்மையும் விழாவிற்குக் கூப்பிடுவார், போய் ஒரு கட்டு கட்டிவிட்டு வரலாம்னு நினைச்சிருந்தா - மனுசன் நம்மை கூப்பிடவேயில்லை. நம் மாடி வீட்டு, பக்கத்து வீட்டு, நம் தெருவில் பலரைக் கூப்பிட்டும், நமக்கு அழைப்பு நோ. கூப்பிட்ட / கூப்பிடாத ஆட்களைப் பார்த்து ஒருவிதமாக ஊகித்தாலும், innocent until provenபடி பொறுமையாக இருந்தோம். 

இன்று அந்தச் சிறுமி சொன்னதாக, நம் வீட்டுச் சிறுமி சொன்னதும், சந்தேகம் தீர்ந்தது. Houseownersகளை மட்டும்தான் விழாக்கு கூப்பிட்டோம். வாடகைக்கு இருப்பவர்களை கூப்பிடவேணாம்னு அப்பா சொல்லிட்டார்.

நாம் ஒரு காலத்தில் பாட்ஷாவாக இருந்தாலும், தற்போது மாணிக்கத்தைவிட மோசமாக, 1BHKல் ஒரு மினிமலிஸ்டாக வாழ்க்கை நடத்துவதில் வெற்றி கண்டிருக்கிறோம்னு புரிஞ்சிடுச்சு. 

நாமாக எதையும் யாரிடமும் சொல்லிக்கொள்வதில்லை. ஜிம்பிளாக இருந்தாலும், எப்படியோ விஷயம் தெரிஞ்சிடுது. இப்படிதான் போன ஆண்டு நம் கடவுச்சீட்டு புதுப்பிக்கப் போனால், அப்படியே கொடுத்துடறாங்களா? காவலர் வந்து சரிபார்த்தபிறகுதான் கொடுப்போம்னு சொல்லிட்டாங்க. சரி அவராவது எங்க வீட்டுக்கு வரக்கூடாதா? நேராக மாடிக்குப் போய் நம் houseownerரிடம் போய் நம்மைப் பற்றி விசாரித்திருக்கிறார். 

அவர் போன பிறகு, நம்மாள் இறங்கி வந்து, எங்கேயாவது வெளிநாடு போகப்போறீங்களா? கடவுச்சீட்டுக்கு ஆள் வந்ததேன்னார். இல்லே சார், சும்மா புதுப்பிச்சி வெச்சிக்கலாம்னு - நமக்கு லுரு முகவரியிலும் ஒரு ஆவணம் வேணும். அதனால்தான் இதெல்லாம்னேன். அவரோ - நான் சிங்கப்பூர் போயிருக்கேன், அங்கே ஒரு வாரம் இருந்து ஊர் சுற்றிப் பார்த்திருக்கிறேன். கண்டிப்பாக எல்லாரும் ஒரு முறையாவது ஒரு வெளிநாடாவது போகணும். அப்பதான் நம் நாடு எப்படியிருக்குன்னு தெரியும்னு ஒரு 15 நிமிடம் பேசினார். நாம் எப்பவும்போல் நம் கதையை எதுவும் சொல்லிக்கவில்லை. 

பின்னர் ஒரு நாள் நம் மாமனாரிடம் இதைப் பற்றி houseowner பேசியபோது, இவர் ‘உண்மையைச் சொல்லிட்டாரு’. அவரோ உடனே நம்மிடம், என்ன, நீங்க அமெரிக்கால்லாம் போய் இருந்திருக்கீங்கன்னு சொல்லவேயில்லையேன்னார். நானோ, ஹிஹி. மறந்துட்டேன் சார்ன்னேன். ஒரு மாதிரி மேலும்கீழும் பார்த்தவாறு போனவர்தான், அதுக்குப் பிறகு பல நாட்கள் நம்மிடம் பேசவேயில்லை. 

நாமும் இப்படியே maintain செய்வோம்ற முடிவுக்கு வந்ததால், இப்போ அந்த புதுமனை புகுவிழா அழைப்பு வரவில்லை. நமக்கு குறைந்தபட்சம் ரூ500க்கான செலவு மிச்சம்.

***


Read more...

Saturday, May 27, 2017

சிரி சிரி சிரி சிரி...


எங்கே, அதையே கொஞ்சம் சிரிச்சிக்கிட்டே சொல்லுங்கன்னு கவுண்ட்ஸ் மன்னனில் சொல்வதைப் போல் உங்களிடம் சொல்ல முடியாது. ஏன்னா, உங்களுக்கு எப்பவுமே சிரித்த முகம்தான்னு பலர் என்னிடம் சொல்லியிருக்காங்க. இதையே வீட்டில் DW வேறு மாதிரி சொல்வாங்க. அது இப்போ வேண்டாம். நாம மேலே போவோம்.

ஹெல்மெட் மாட்டிக்கிட்டு வண்டி ஓட்டும்போது, அது நமக்கான ஒரு தனி உலகம். உள்ளே பேசலாம், பாடலாம். நான் ஏதாச்சும் ஒரு பல்ப் வாங்கிய சம்பவத்தை - அதுதான் ஏகப்பட்டது இருக்கே - நினைச்சிக்கிட்டு சிரிச்சிக்கிட்டே போவேன். அப்படி சிரித்தவாறே ஓட்டும்போது, யாருடனாவது - பக்கத்தில் வண்டி ஓட்டுபவரோ அல்லது சாலையோரத்தில் நின்றிருப்பவரோ - கண்ணோடு கண் பார்க்க நேர்ந்துவிடும். அப்படி பலமுறை நேர்ந்திருக்கிறது. சில பேர் சிரிக்க முயல்வார்கள், சிலர் யார்றா இவன், நம்மை பார்த்து சிரிக்கிறான்னு தலை திருப்பிவிடுவார்கள். சிலர், பேருந்தில் நடக்கும் வடிவேலு காமெடியைப் போல், நம்மைப் பார்த்து சிரிக்கிறானா, இல்லே பின்னாடி யாராவது இருக்காங்களான்னு பின்னாடி திரும்பியும் பார்த்திருக்காங்க. இப்படி அண்ணலும் நோக்கி சிரித்து ‘அவளும்’ நோக்கிய உதாரணங்கள் இந்தப் பதிவிற்கு தேவையில்லாத விஷயங்கள்.

இப்ப போன வாரம் நடந்தது.

யாரோ ஆண்கள், சிலசமயம் பெண்களைப் பார்த்து சிரித்ததெல்லாம் பிரச்னையில்லை. போன வாரம் அலுவலகத்திலிருந்து வரும்போது - ஹெல்மெட்டுக்குள் சிரித்தவாறே - தூரத்தில் நின்றிருந்த ஒரு போக்குவரத்து காவல் போலீஸைப் பார்த்துட்டேன்.

டக்குன்னு சுதாரித்து, சிங்கம் சூர்யா போல் stiff ஆனாலும், அவர் பார்த்துட்டார். என்னடா, இவன் நம்மைப் பார்த்து சிரிக்கிறானேன்னு, நம்மை நிறுத்தி ஓரம் கட்டுங்கன்னுட்டார்.

சார், ஹெல்மெட் கழட்டுங்க. கைப்பேசியில் பேசிட்டு வர்றீங்களா?
இல்லை சார்.

DL, Insurance?
இதோ.

ஆதார் கார்டும் இருந்துச்சு. ஆனா அவர் கேட்கவில்லை.

சரி போங்கன்னு ஒரு சந்தேகத்துடனேயே அனுப்பி வைத்தார்.

டேய், இவன் எங்கெங்கே போறானோ, அங்கெல்லாம் ஒரு ஆள் போட்டு வைங்கடா. என்னைப் பார்த்து சிரிச்சிட்டான்னு சொல்வாரோன்னு திரும்பிப் பார்த்து (சிரிக்காமல்) போனேன்.

வீட்டில் போய் விஷயத்தை சொன்னா, நான்தான் சொன்னேனே, இனாவானா மாதிரி (அய்யய்யோ, சொல்லிட்டேனே!!)

சிரிச்சிக்கிட்டே போகாதீங்கன்னு, எங்கே கேட்டாதானேன்னாங்க.

சரிம்மான்னு சொல்லி சிரித்தேன்.

***


Read more...

Wednesday, May 24, 2017

ஜொள் அங்கிள்

அடியேன் வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் 22 கிமீ தூரம். அலுவலகப் பேருந்தில்தான் போய் வருவது. அடியேன் வீட்டுப் பக்கத்திலேயே இன்னும் இருவர் (மகளிர்) அதே அலுவலகத்தில் வேலை செய்றாங்க. அலுவலகத்திற்கு தாமதமாகப் போகணும்னாலோ, வீட்டிற்கு சீக்கிரம் வரணும்னாலோ, மூவரும் ஒரு Ola book செய்து, 1/3 போட்டு போய் வருவது வழக்கம்.

திடீர்னு அலுவலகத்தில் ஒரு carpool app உருவாக்கி, மக்கள் எல்லாரும் அதை பயன்படுத்திக்கோங்கன்னு சொன்னாங்க. நாங்க மூவரும், நம்ம வீட்டு பக்கம் யாராவது காரில் போவோர் வருவோர் இருக்காங்களான்னு பார்க்கலாம்னு பார்த்தோம். அட, ஒருவர் இருந்தார். நமக்கு தோதான நேரத்தில் அலுவலகத்திலிருந்து கிளம்புபவராகவும் இருந்தார். சரி ஒரு நாள் இவர் வண்டியில் மூவரும் போவோம்னு முடிவு செய்தோம்.

அந்த நாளும் வந்தது. ஒருவருக்கு ரூ70. சும்மா போகும் வண்டியில் நாங்களும் போனால், அவருக்கு ரூ210 வரும். ஒவ்வொருவராக தம் கைப்பேசியிலிருந்து அந்த rideக்கு request கொடுத்தோம். Note the point. இரு மகளிர் மற்றும் நான். அவங்க ரெண்டு பேர் requestம் உடனே approve ஆயிடுச்சு. எனக்கு எதுவும் பதில் வரலை. Ofcourse, நாங்க மூவரும் ஒரே க்ரூப்ன்னு அங்கிளுக்கு தெரியாது.

வண்டி புறப்பட இன்னும் அரை மணி நேரம்தான் இருக்கு. புரியுதா, அந்த அங்கிளுக்கு நீங்க வர்றது பிடிக்கலை. ஜொள் அங்கிள்ன்றங்க மகளிர். சரி, நீங்க போங்க, நான் பேருந்திலேயே வர்றேன்னேன். வெயிட்டீஸ், அங்கிளுக்கு ஒரு பாடம் புகட்டுவோம்ன்றாங்க. இருவரும், அந்த requestஐ cancel செய்துவிட, உடனே அங்கிள் என் requestஐ approve செய்துவிட்டார். அதற்குள் நாங்க ஒரு ஓலா புக் செய்துவிட, நானும் அந்த அங்கிள் வண்டியை cancel செய்துவிட்டேன். ஒழுங்கா என்னையும் ஓகே சொல்லியிருந்தா ஒரு ரூ210 வந்திருக்கும். இப்போ ஜொள் அங்கிள் தனியா போகவேண்டியதாய் போச்சு. (அதன் பிறகு வேறு யாரும் request கொடுக்காத பட்சத்தில்). 

இனி மறுபடி இன்னொரு நாள் இவர் வண்டிக்கு request கொடுக்கலாமான்னு நான் கேட்க, அங்கிள் திருந்தியிருக்காரா இல்லையான்னு இன்னொரு வாய்ப்பு கொடுத்துப் பார்ப்போம்னு இருவரும் சொல்லியிருக்காங்க. பார்ப்போம். அதன் முடிவை இன்னொரு பதில் சொல்றேன். 

தொடரும்...

Read more...

Thursday, May 18, 2017

பாகுபலி2 - சில கருத்துகள்


பாகுபலி முதல் பகுதிக்கு இவ்வளவு அழுத்தம் வரலை. விடுமுறையில் வரலையோ? ஆனா, இந்த இரண்டாம் பகுதிக்கு... அன்றாட சாப்பாட்டுக்கு பிரச்னை வந்துடும்படியா ஒரு அழுத்தம். மேல் வீட்டில் பார்த்துட்டாங்க, கீழ் வீட்டில் பார்த்துட்டாங்கன்னு Tablemat விளம்பரம் போல் சொல்லத் துவங்கியதால், சரி பார்த்துடலாம்னா.. தமிழில் எங்கேயும் கிடைக்கலை அல்லது நேரம் சரிப்படவில்லை. நமக்குத் தெலுங்கு தகராறு. வெறும் சண்டைப் படம்தானே, வசனமாடா முக்கியம்,
இந்தியிலேயே பார்த்துடுவோம்னு போய் பார்த்து வந்தாச்சு.

நிறைய சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாங்க இது. ஏம்மா, நம்ம வீட்டில் நாம போடாத சண்டையா, அதில் கிழியாத சட்டையா? காசு குடுத்து அடுத்தவன் சண்டையை பார்க்கப் போகணுமா? பேசாம வாங்க. சரி. போயாச்ச்சு.

தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்பதில் ஒரு இணை-விதி - படம் 2 மணி நேரத்தில் இருக்கவேண்டும்னு சொல்லலாம். கவலையேபடாமல் 3 மணி நேரத்துக்கு படம் வைக்கிறாங்க. இதிலேயே நிறைய இடத்தில் ‘கட்’ செய்திருப்பது தெரியுது. அந்த கட் இல்லையென்றால், 4 மணி நேரம் கூட போயிருக்கலாம். ‘எப்போதாவது’ யூட்யூபில் பார்த்தால், ஒரு படத்தை ஒரு வாரம் / பத்து நாட்களுக்கு பார்க்கும் எனக்கு, 3மணி நேரம்லாம்... ம்ஹூம். மிடில.

படத்தில் நிறைய CG இருக்குன்னு DWவிடம் சொன்னது தப்பாப் போச்சு. தசாவதாரம் படத்தில், போவோர் வருவோர் (& சில அசையாப் பொருட்களைக் கூட) இது கமல்’ஆ இருக்குமோன்னு சந்தேகத்துடன் பார்த்தது போல், இந்தப் படத்தில், ஏங்க இந்த யானை, அருவி, இந்த குழந்தை? இதெல்லாம் நிஜமா அல்லது CGயான்னு கேள்வி கேட்டே, படம் பார்க்கும்போது என் தூக்கத்தைக் கெடுத்தாங்க.

தென்னை மரத்தை வளைத்து, angry birds போல் பறந்து செல்வதெல்லாம் செம ஐடியா. அதை அப்படியே லுரு சில்க்போர்ட் மேம்பால போக்குவரத்து நெரிசலுக்குப் பயன்படுத்தலாம். இரண்டு பக்கமும் இரண்டிரண்டு தென்னை மரத்தை நட்டு வைத்தால் போதும். பத்து பத்து பேராக பறந்து, சுலபமாக மேம்பாலத்தை தாண்டிவிடலாம். இதச்சொன்னா...

நடுவில் ஒரு காட்சியில், நீங்க சிவகாமிக்கு சொல்லலாமே என்று நாசரைப் பார்த்து கேட்க, அவர் நான் சொன்னால் சிவகாமி கேட்கமாட்டாள் என்பது போல் ஏதோ சொல்வார். அதைத் தொடர்ந்து, படையப்பா காலத்திலிருந்து நான் சொல்வதை அவள் கேட்பதேயில்லை என்று வசனம் வரும்னு பார்த்தால் - வரவில்லை.

ரோகிணி, தமன்னா - இவங்கல்லாம் திடீர்னு தலை காட்டினாங்க. முதல் பகுதியில் வந்திருப்பாங்களா இருக்கும். நமக்குத் தெரியல.

மாமா, மாமான்னு பாசத்துடன் கூப்பிட்டவரை கொன்னுட்டாரேன்னு வருத்தப்பட்டோம். படம் முடிந்து வரும்போது, மிஸ்ட் கால் வந்திருந்தது. ஏங்க, உங்க மாமான்னு கூப்பிட்டிருக்காருன்னாங்க. ஐயய்யோ, இங்கே வர்றேன்னு சொன்னார்னா, நாம வீட்டில் இல்லைன்னு சொல்லிடும்மா, நான் இன்னும் கொஞ்ச நாள் இந்த உலகில் இருக்கேன்னு சொல்லிட்டேன்.

சுபம்.

***

Read more...

Wednesday, September 21, 2016

ஒரு சிறிய பரிசோதனை முயற்சி

ஒரு சிறிய பரிசோதனை முயற்சி

நமக்குத் தேவைப்படும் என்று அவ்வப்போது வாங்கி வைத்த - எப்போதுமே பயன்படுத்தாத - சின்னச்சின்ன பொருட்கள் வீட்டில் நிறைய இருந்தன. தள்ளி விடணும்னு நினைத்தாலும், சோம்பல்பட்டு அது நடக்காமலேயே போனது. க்விக்கர் / ஓலா ச்சே.. ஓஎல்எக்ஸ் இதிதெல்லாம் போடக்கூடிய அளவுக்கு பெரிய பொருட்கள் இல்லை அவை. ஆகவே, எல்லாத்தையும் ‘விலையில்லா’ பொருட்களாகவே கொடுத்திடலாம்னு முடிவு செய்தேன்.

இதே அமெரிக்காவா இருந்தா, Garage Sale, Spring clearanceன்னு தட்டுமுட்டு சாமான்களைக் கூட விற்றிடலாம். இங்கே அப்படி முடியாதென்பதால், அலுவலகத்தில் இலவசமாக எடுத்துக்கோங்கப்பான்னு அறிவிப்பு வைத்து, எல்லாத்தையும் தள்ளிவிடலாம்னு நினைச்சா - இன்னொரு ஐடியா வந்தது்.

எப்போவோ பயன்படும்னு நாம் வாங்கின மாதிரி, தேவையேயில்லை என்றாலும் சும்மா கிடைக்குது என்பதற்காக பார்க்குறவங்க எடுத்துப் போறாங்களான்னு பார்க்கலாம் ஒரு பளிச்.

முதலில் என்னென்ன பொருட்கள்னு பார்த்துடுவோம்.

3 லேப்டாப் பைகள்
2 பைக் ஹெல்மெட்கள்
2 மிதிவண்டி ஹெல்மெட்கள்
2 செட் casual shoes
5 புதிய water bottle (decathlonல் வாங்கிய ரூ100 மதிப்புடையது)
2 Photo frames

இவ்வளவுதான்.

ஐடியா இதுதான். என் அலுவலகக் கட்டிடத்தில், மூன்று மாடிகளில், காபி குடிக்க ஒதுங்கும் இடங்கள் ஆறு உள்ளன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில், இலவசம்னு அறிவிப்பு போட்டு ஒரு பொருளை வைக்க வேண்டியது. யாராவது அதை எடுக்காமல் விடறாங்களா, இலவசம்னு பார்த்தவுடன் அள்ளிடறாங்களான்னு அங்கேயே காபி குடித்தவாறு பார்க்க வேண்டியது - எப்படி?

2 வாரங்களுக்கு முன் இதை செயல்படுத்தத் துவங்கினேன். நேற்றோடு எல்லா பொருட்களையும் தள்ளி விட்டாயிற்று. வீடு கொஞ்சம் சுத்தமாச்சு. சரி, அந்த பரிசோதனை என்ன ஆச்சு?

* 99% மக்கள் ‘இலவசம்’னு பார்த்தவுடன் பொருளைக் கையில் எடுத்து விடுகின்றனர். சில நிமிடங்கள் அந்தப் பொருளின் தரத்தைப் பார்த்துவிட்டு, எடுத்துப் போய்விடுகின்றனர்.
* கண்டதும் காதல் கொண்டு, லேப்டாப் பையை எடுத்துப் போன ஒருவர், சில நிமிடங்களிலேயே திரும்பக் கொண்டு வந்து வைத்துவிட்டார்.. (பையில் பிரச்னை இல்லை, நமக்குத் தேவையில்லைன்னு நினைச்சிருப்பார்). -- Good, sir.
* Water bottleகளைப் பார்த்ததும், குழுவாக அங்கே வந்த பெண்களுக்கிடையில் அடிதடி (அளவிற்குப் போகவில்லையென்றாலும், நிறம் தேர்வு செய்வதில் சிறு சச்சரவு!!) - குழாயடி மாதிரி காபியடிச் சண்டை!!
* எதிர்பார்த்த மாதிரியே, அளவு பிரச்னை என்ற காரணத்தினால், ஷூக்களை பலர் எடுக்கவில்லை. அரை மணி நேரம் ஆகியும் போணி ஆகாத பொருள்னா அது ஷூ மட்டும்தான்.
* ஆகவே, ஷூக்களைத் தவிர எல்லாப் பொருட்களும், அதைப் பார்த்த முதலாமவர் அல்லது இரண்டாமவரால் கண்டிப்பாக எடுத்துப் போகப்பட்டன.

எப்படியோ, எடுத்துப் போனவர்கள் அந்தந்த பொருட்களைப் பயன்படுத்தத் துவங்கினால் மகிழ்ச்சிதான். அப்படியில்லாமல், இன்னும் சில காலம் கழித்து, அவங்களும் இதே போல் இலவசம்னு அவற்றைத் தள்ளிவிடாமல் இருக்க எல்லாம் வல்ல அந்த கபாலியை வேண்டியவாறு... நன்றி வணக்கம்.

***


Read more...

Wednesday, September 7, 2016

நடு விரல் கிருஷ்ணாராவ்

நடு விரல் கிருஷ்ணாராவ்

போன வாரம் ஒரு நாள் பைக்கில் போய்க் கொண்டிருந்தபோது, என் முன்னால் போன பைக்கின் பின்னால் அமர்ந்திருந்தவர், எனக்கு தன் கையின் ‘நடு’ விரலைக் காட்டிட்டுப் போனார். அதை ஏன் எனக்குக் காட்ட வேண்டும்? இவரை எங்கோ பார்த்த மாதிரி இருக்கேன்னு சந்தேகம். பிறகு நினைவுக்கு வந்தது.

ப்ளாஷ்பேக். ஒரு ஐந்து நிமிடங்களுக்கு முன்:

சாலையோரம் எங்கேயோ வேடிக்கை பார்த்து நின்றவர், என் பைக் பக்கத்தில் வந்தவுடன் திடீர்னு தன் கட்டைவிரலை உயர்த்திக் காட்டி, Lift, Liftன்னார். ரொம்பவே பக்கத்தில் இருந்ததால், என்னால் வண்டியை நிறுத்த முடியலை. Sorryன்னு சொல்லி, நான் பாட்டுக்கு போயிட்டேன்.

ப்ளாஷ்பேக் ஓவர்.

இப்போ அதே மனிதர்தான், வேறொரு வண்டியில் ஏறி, என் முன்னே போய், எனக்கு அந்த விரலைக் காட்டினார்னு புரிந்தது. எனக்கு செம கோபம். அந்த வண்டியை துரத்திப் போய் (லுரு போக்குவரத்தில் யாரும் யாரையும் துரத்திக்கிட்டெல்லாம் போக முடியாது, ஏன்னா, எல்லாருமே ஊர்ந்துதான் போவாங்க!!), அவருக்கு நானும் இரு விரல்களைக் காட்டினேன். இரு விரல்கள்?

நான் ஹெல்மெட் போட்டிருந்ததால், அந்த 2விரல்களுக்கான விளக்கத்தை நான் சொன்னது அவருக்குப் புரிந்திருக்காது. ஆனா, இந்த ப்ளாக்கை படிப்பவராயிருந்தால், தெரிஞ்சிக்கட்டுமேன்னு இங்கே.

சார், நீங்க நினைக்கிற / காட்டின மாதிரி, நான் அத்வைதம் கிடையாது. அதனால் ஒரு விரல் காட்டாதீங்க. நான் த்வைதத்தை பின்பற்றுபவன். ஆகவே, இரு விரல்களே சரியானதாகும். இனி, எனக்குக் காட்டணும்னா, இரு விரல்களையே காட்டவும். புரியலேன்னா, இந்த படத்தைப் பார்க்கவும்.



இதுதான் நான் அவருக்கு சொல்ல வந்தது.

ஹிஹி..

***

Read more...

Tuesday, September 6, 2016

புலிப்பாண்டி கொடூரமானவன்தான்...


புலிப்பாண்டி கொடூரமானவன்தான்...

நம்ம ஊர் BMTC or Ashok Leyland நிறுவன ஊழியர்களின் சீருடை நிறம் தெரியும்தானே. நீல சட்டை + அதற்கு தகுந்தாற்போல ஒரு காற்சட்டை. அதே வண்ண உடை என்கிட்டே ஒண்ணு இருக்கு. எப்பவாவது சுழற்சி முறையில் அதை அலுவலகத்திற்கு போட்டுப் போகவும் நேரிடும். சரி? அதில் என்ன பிரச்னைன்றீங்களா? நம்ம அலுவலகத்தில் Housekeeping அணியின் சீருடையும் அதுதான்.

உங்களையும் யாராவது Housekeepingன்னு நினைச்சிக்கப் போறாங்கன்னு வீட்டில் கிண்டல் செய்வாங்க. அப்படியெல்லாம் நடக்காது. ஐடி கார்ட் பார்த்தா தெரிஞ்சிடும்னு சொல்லிட்டிருப்பேன்.

பிறகு ஒரு நாள்..

அதே ஆடை அணிந்து அலுவலகம் போயிருந்த நாள்.

சார்.. சார்.. பின்னாடியிலிருந்து ஒரு தேன் குரல்.

யெஸ்’னு திரும்பினா.. ஒரு பொண்ணு..

Housekeepingன்னு நினைத்து என்னைக் கூப்பிட்டு, பின்னர் தெளிவடைந்து..

சாரி சார்.. அந்த Tap வேலை செய்யலைன்னு சொல்லலாம்னு நினைச்சி கூப்பிட்டேன்னு..

எனக்கோ சரியான போபம். சரி, தப்பு அந்தப் பொண்ணு மேல் இல்லை. நாம அணிந்த உடை மேல்தானேன்னு - சரி சரி, இனிமே பார்த்து பேசும்மான்னு சொல்லி அனுப்பிட்டேன்.

புலிப்பாண்டி கொடூரமானவன்தான். ஆனா பொண்ணுங்ககிட்டே இல்லை.

***

Read more...

Monday, September 5, 2016

என்ன பரிசு வாங்கலாம்?

நண்பர்கள், உறவினர்கள் ஏதாவது ஒரு விழாவிற்குக் கூப்பிடுறாங்க. போய் சாப்பிட்டு வந்துடறோம். போகும்போது என்ன பரிசு வாங்கிப் போவது? யோசிச்சி ஒரே குஷ்டமப்பா.

இப்படிதான் பாருங்க. அமெரிக்காவில் இருக்கும்போது ஒரு நண்பர் தன் திருமண நாள் விழாவிற்கு கூப்பிட்டிருந்தாரு.  வீட்டில் தங்கமணி சொன்னாங்க. நீங்களே கடைக்குப் போய் ஏதாவது வாங்கிட்டு வாங்கன்னாங்க. சரின்னு வால்மார்ட் போய், ஒரு பெரிய அட்டைப்பெட்டி வாங்கி வந்தேன். விழா எல்லாம் முடிந்து வீட்டுக்கு வரும்போதுதான் கேட்டாங்க - என்ன பரிசு வாங்கினீங்க? என்ன இருந்துச்சு அந்தப் பெட்டியில்?

நான் பெருமையாக - கத்தி செட். ஒரு 10-12 கத்திகள் இருக்கும்னேன். வந்துச்சு பாருங்க கோபம். அவங்க என்ன கசாப்புக் கடையா வைக்கப் போறாங்க? இல்லே கிரிகாலன் மேஜிக் ஷோவில் வடிவேலுவை நிற்க வைத்து கத்தி எறிவது போல் எறிந்து விளையாடப் போறாங்களா? அடுத்த முறை பார்க்கும்போது நம்மை அதே கத்தியால் குத்தப் போறாங்க... நான்.. விடும்மா.. சமையலுக்கு உதவற மாதிரிதான் வாங்கிக் கொடுத்திருக்கேன்.

இப்படியே அடுத்த முறை இன்னொரு பரிசு வாங்க வேண்டி வந்தது. தேநீர் கப் அடங்கிய செட் வாங்கிக் கொடுக்கலாமா? - அவங்க என்ன டீக்கடையா வைக்கப் போறாங்க? பாத்திர செட்? பாத்திரக் கடை? இப்படி எதை எடுத்தாலும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி எனக்குத் திட்டு. விடுங்க. எனக்குப் பழகிப் போச்சு.

சரிம்மா. பரிசாக பொருள் எதுவும் வேண்டாம். பரிசு அட்டை (விசா டெபிட்) வாங்கிக் கொடுத்துடுவோம். அதை பயன்படுத்தி அவங்க எதையாவது வாங்கிக்கட்டும். முடியாது. மற்றவங்க எல்லார் பரிசும் பெரிசு பெரிசா இருக்கும்போது, நமது மட்டும் சின்னதா இருக்கும். ஆகவே இதுவும் ரிஜட்டட்.

இப்படியே போனா எதுவுமே குடுக்க முடியாது. சும்மா போய் சாப்பிட்டு வரவும் முடியாது. அதனால் என்ன செய்யலாம்னு முடிவு செய்து கடைசியில் ஒரு சுலபமான வழி + ஒரு அருமையான பரிசு கண்டுபிடிச்சிட்டோம்.

இனிமே யார் எந்த விழாவுக்குக் கூப்பிட்டாலும் இதே பரிசுதான். ‘இதை’ ஒரு டஜன் வாங்கியும் வெச்சிட்டோம். உங்க வீட்டில் ஏதாவது விழா இருந்தா சொல்லுங்க. இந்த பரிசு உங்களுக்கும் கிடைக்கும்.

அப்படி என்ன பரிசுன்றீங்களா?

Scroll down.

...

...

...

...







***

Read more...

Saturday, September 3, 2016

எனக்கு எதுவும் தெரியாது..


நான் சிந்திந்த
கவிதைகளை யாரோ
எழுதிவிடுகிறார்கள்.

நான் நினைத்த
கதைகளை யாரோ
புனைந்துவிடுகிறார்கள்.

நான் யோசித்த
ஜோக்குகளை யாரோ
சொல்லிவிடுகிறார்கள்.

இப்படியே சொல்லிட்டிரு
எதுவும் உருப்படியா
செய்யாதே என்றான் நண்பன்.

நீ இப்படிதான்
சொல்வாய் என
அதையும் நான்
முன்கூட்டியே
ஊகித்திருந்தேன் என்றேன்.

கேவலமா
திட்டினான்.

இப்படிதான் திட்டுவான்னு
எனக்கு முன்னாடியே
தெரியும்னு சொல்லலாம்.
எதுக்கு வம்பு.

எனக்கு எதுவும்
தெரியாது.

***




Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP