நொறுக்ஸ் - வெள்ளி - 11/27/08
கார்லே போகும்போது என்னல்லாம் செய்யலாம் அப்படின்னு கொஞ்ச நாள் முன்னாலே பார்த்தோம். மக்களும் நிறைய ஐடியா சொன்னாங்க. ஆனா எதுவுமே செய்யாமே வெறும் சிந்தனை மட்டும் செஞ்சிண்டே போனா என்ன ஆகும்னு பாத்ததிலே, தனியா சிரிச்சிண்டு போனதுதான் மிச்சம். சரி, அப்படி என்னதான் சிரிக்கமாதிரி சிந்தனை பண்ணேன்னு கேக்கறீங்களா? கீழே படிங்க..
என் தம்பி ஆதர்ஷோட (தெரியாதவங்களுக்கு: குட்டி வெண்பூ) ஸ்கூலுக்கு போகணும். அந்த நடிகையை பாக்கறதுக்கு இல்லே.. ஸ்கூல் எப்படி நடத்தறாங்கன்னு பாக்கறதுக்காகத்தான்.
ஏதாவது பெரிய நடிகர் படம் வெளியாகுற அன்னிக்கு அடிச்சிபிடிச்சு கூட்டத்தில் போய் முதல் ஆளா டிக்கெட் வாங்க முயற்சி பண்ணனும். அப்படி போய், கவுண்டர் திறந்துவுடனே அவர்கிட்டே நூறு ரூபாய்க்கு சில்லறை இருக்கான்னோ அடையாறுக்கு எந்த பஸ்லே போகணும் அப்படின்னு கேக்கணும்.
சென்னையில் ஏதாவது ஒரு ட்ராபிக் போலீஸ்காரரிடம் போய் - "சார், நீங்க செய்ற சேவை மிக மகத்தானது. உங்களோட ஒரு போட்டோ எடுத்துக்கணும்" அப்படின்னு சொல்லிட்டு நண்பன் "சே, சீஸ்ஸ்ஸ்ஸ்" அப்படின்னு சொல்லும்போது, திடீர்னு ஒரு 50 ரூபாய் எடுத்து அந்த போலீஸ்கிட்டே "சார், இத பிடிங்க" அப்படின்னு குடுக்கணும்.
என் மாமனாரை ஒரு திரைப்படம் எடுக்கச் சொல்லணும். அந்தப் படத்துக்காக பாட்டு எடுக்கற சாக்குலே ஒரு 25 நாடுகளுக்கு போயிட்டு வந்துடணும்.
------------
எங்கேயோ கேட்ட ஜோக் ஒன்று:
மாட்டுச் சந்தையில் ஒருவர் மாடு வாங்க வருகிறார்.
ஏங்க, இந்த மாடு எவ்வளவு?
எது கேக்கறீங்க, வெள்ளையா அல்லது பழுப்பா?
வெள்ளை மாடே சொல்லுங்க.
அது 5000ரூ.
அப்ப பழுப்பு?
அதுவும் 5000ரு தான்.
இந்த மாடுங்க எவ்ளோ பால் கறக்கும்?
எது கேக்கறீங்க, வெள்ளையா அல்லது பழுப்பா?
வெள்ளை மாடே சொல்லுங்க.
அது நாளைக்கு ஒரு பத்து லிட்டர் கறக்கும்.
அப்ப பழுப்பு?
அதுவும் நாளைக்கு ஒரு பத்து லிட்டர் கறக்கும்.
இந்த மாடுங்களுக்கு எவ்ளோ வயசாச்சு?
எது கேக்கறீங்க, வெள்ளையா அல்லது பழுப்பா?
வெள்ளை மாடே சொல்லுங்க.
அதுக்கு ஆச்சு அஞ்சு வயசு.
அப்ப பழுப்புக்கு?
அதுக்கும் அஞ்சு வயசுதான் ஆகுது.
(இதே மாதிரி பல கேள்விகள் கேட்டபிறகு)
என்னங்க, எது கேட்டாலும் முதல்லே வெள்ளையா பழுப்பான்றீங்க... ஆனா பதில் ரெண்டுதுக்கும் ஒண்ணுதானே சொல்றீங்க?
ஏன்னா, வெள்ளை மாடுங்க என்னுது.
அப்ப பழுப்பு மாடுங்க?
அதுவும் என்னுதுதான்.
(கேள்வி கேட்டவர் அலறி அடித்துக்கொண்டு ஓடுகிறார்).
--------------
நாளைக்கு வட அமெரிக்கா பதிவர் சந்திப்பு நியூ ஜெர்ஸியில் திட்டமிட்டபடி நடைபெறுகிறது. அறிவிப்புக்கு இங்கே செல்லவும். இந்த பக்கம் இருக்கும் பதிவர்கள், அனானிகள் கண்டிப்பாக வரவும்.
------------
சென்ற வாரம் ஒரு குழந்தையின் பிறந்த நாள் விழாவுக்கு சென்றிருந்தோம். அங்கு வந்திருந்த இன்னொரு தமிழ் தெரியாத தமிழ் சிறுமியிடம் தங்ஸ் "கத்தக்கூடாதும்மா. பாப்பா தாச்சி" என்றார். அந்த சிறுமி "what is தாச்சி?" என கேட்க, தங்ஸோ "பாப்பா தாச்சி means பாப்பா sleeping" என்றார். அப்போது நான் "அப்போ புள்ள தாச்சின்னா?" என்று கேட்டேன். அது புரியாமல் அந்த சிறுமி ஓடிவிட, தங்ஸின் பார்வையை பார்க்க முடியாத நானும் வேறுபக்கம் ஓடினேன்.
----------