ஒற்றுமையில் வேற்றுமை!!!
ஒருத்தரு கல்யாணம் பண்ணிக்கணும்னு பெண் பாக்கப் போறாரு. போன இடத்துலே பையனும் பொண்ணும் தனியா பேசிக்கட்டும்னு ஒரு அறையில் போட்டு தள்ளிடறாங்க. இதான் சீன். இனி கதை.
*****
"ஏதாவது பேசுங்களேன்"
"ம். என்ன பேசறது?"
"உங்களுக்கு பிடிச்சது, பிடிக்காதது இதெல்லாம் சொல்லுங்க. நானும் அதுக்கு பதில் சொல்றேன். நம்ம ரெண்டு பேரோட டேஸ்டும் ஒத்துப்போகுதான்னு பாப்போம்."
"ம். சரி. எங்கேந்து ஆரம்பிக்கறது. ம். நான் தமிழோடு நிறைய இந்திப் படங்களும் பாப்பேன்".
"அப்படியா. வெரிகுட். ஆனா எனக்கு இந்தி தெரியாது. அதனால் வெறும் தமிழ் படங்கள மட்டும்தான் பாப்பேன்".
"படத்துக்குப் போறதுன்னா, முதல்லே விமர்சனம் எல்லாத்தையும் படிச்சிட்டு நல்லா இருந்தாதான் படத்துக்கே போவேன் நான்".
"அது சரிப்படாது. விமர்சனத்தை படிச்சிட்டா அப்புறம் படம் பாக்கும்போது த்ரில்லே இருக்காது. அதனால் நான் முதல்லே படத்தைப் பாத்துட்டுதான் விமர்சனம் படிப்பேன்".
"ஒரு நல்ல புத்தகம் கிடைச்சுதுன்னா, சீக்கிரம் படிச்சி முடிச்சிடக்கூடாதேன்னு, மெல்ல அனுபவிச்சி படிப்பேன்".
"நான் அப்படியில்லேப்பா. நல்ல புத்தகமா இருந்துதுன்னா, அதை கீழே வெக்கவே தோணாது எனக்கு. ஒரே மூச்சிலே அதை கடகடன்னு படிச்சி தூக்கிப் போட்டுடுவேன்".
"பத்திரிக்கைகளை நான் பின்னாடியிருந்துதான் படிக்க ஆரம்பிப்பேன்".
"பின்னாடியிருந்தா? ச்சேச்சே! அப்படி படிச்சா, விடுகதை மாதிரியான மேட்டருக்கெல்லாம் முதல்லே பதில் தெரிஞ்சிடுமே. நான் அப்படி படிக்கமாட்டேன்".
"சாப்பிடும்போது எனக்குப் பிடிக்காத ஐட்டம் ஏதாவது போட்டாங்கன்னா, அதை தொடவே மாட்டேன்".
"அதுக்கு நேரெதிர் நான். மொதல்லே அந்த பிடிக்காத ஐட்டத்தை காலி பண்ணிட்டு, அப்புறம் இருக்கறதை ரசிச்சி ருசிச்சி சாப்பிடுவேன்."
(சிறிது நேரம் அமைதி)
ஆண்: "நமக்குள்ளே இவ்ளோ வேற்றுமை இருக்கே... நாம திருமணம் செய்துக்கிட்டா சந்தோஷமா இருப்போமா?"
பெண்: "அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினையில்லை. அப்பப்போ சிறுசிறு சண்டை போட்டால்தான் வாழ்க்கை இன்பமா இருக்கும். எனக்குள்ளே பட்சி சொல்லுது -- நாம வேற்றுமையில்தான் ஒற்றுமை காணப்போறோம்னு."
ஆ: "அதெல்லாம் சரி. ஆனா.. "
பெ: "ஆனா என்ன... சொல்லுங்க..."
ஆ: "ஒரே ஒரு ஒற்றுமை இருக்கு நம்மகிட்டே. ஆனா, அதுவே பெரிய பிரச்சினையாயிடக் கூடாதேன்னுதான் எனக்கு கவலையாயிருக்கு".
பெ: "என்ன சொல்றீங்க? ஒற்றுமை இருந்தா பிரச்சினை எதுக்கு வருது? சொல்றேனேன்னு தப்பா நினைக்காதீங்க. நீங்க கமலஹாசன் பேட்டிகள் நிறைய பாப்பீங்களா? ஏன்னா, நீங்க சொல்றது எனக்கு புரியவேயில்லே..."
ஆ: "சொல்றதை தெளிவா கேளுங்க. நீங்க ஒரு பொண்ணு. நீங்க யாரை கல்யாணம் பண்ணிப்பீங்க?"
பெ: "இது என்ன கேள்வி? ஒரு ஆம்பளையத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்."
ஆ: "அதேதான் நானும் சொல்ல வர்றேன். எங்க வீட்லே இதை தெளிவா என்னாலே சொல்ல முடியல. அதனால் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி கல்யாணம் நடக்காதுன்னு நீங்களே சொல்லிடுங்க. நான் வர்றேன். பை பை..."