முத்தையா... முத்தையா...
சில நாட்களுக்கு முன் முத்தையா தொடர் ஓடிட்டிருந்தபோது, ஒரு நண்பர் சொன்னார் - இது வெறும் மொக்கை கொசுவத்தியா மாறப்போகுதுன்னு. ஹிஹி. இந்த இடுகையும் அதே போல்தான்... இல்லே இல்லே.. அதேதான்... மே 1ல் பிறந்த நாள் காணும் ஒரு நண்பரைத் தேடுவதற்காக இதை பதிகிறேன்.
வழக்கம்போல் நீங்க எதிர்பார்க்கிற தமாஷ் மேட்டர் எதுவுமே இருக்காது. மன்னிச்சிடுங்க. சப்-டைட்டில்ஸை மட்டும் படிச்சிக்கிட்டே போனாலும், நான் திட்ட மாட்டேன். கவலைப்படாதீங்க.
சுரேஷ்:
என்னுடைய பதிவுகளில் ஹீரோவாக வரும் கதாபாத்திரங்களுக்கு நான் சுரேஷ் என்றே பெயரிட்டு வந்திருக்கிறேன். அது நீதான் என்று சொல்லவும் வேண்டுமா நண்பா?
நான் அந்த நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்தபோது, முதன்முதலில் என்னுடன் பேசியவன் நீதான். எல்லோரிடமும் என்னை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி, உன் நண்பர்கள் வட்டத்தில் என்னையும் ஒரு ஆளாக நிறுத்தினாய். அன்றிலிருந்து அடுத்த மூன்று ஆண்டுகள் எனக்கு ஒரு நல்ல நண்பனாய், அண்ணனாய் இருந்து வழிகாட்டினாய்.
மெக்கானிகல் to மென்பொருள்:
மெக்கானிக்கல் துறையிலிருந்து மென்பொருளாளனாக மாறுவதற்காக நீ பட்ட கஷ்டங்கள் என்ன என்பது எனக்குத் தெரியும். சம்பளமில்லாமல் ஒரு சிறிய நிறுவனத்தில் வேலை பார்க்க ஒப்புக் கொண்டு, நிறைய புத்தகங்களைப் படித்து, மென்பொருள் பற்றிய உன் திறமையை வளர்த்துக் கொண்டாய்.
1998-99 காலங்களில், Y2K வேலைகளுக்காக ஏகப்பட்ட பேர் புறப்பட்டு அமெரிக்கா வந்துகொண்டிருந்தபோது, நீயும் ஏதோ ‘டகால்டி' வேலை செய்து, ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்து புறப்படுகிறேன் என்று சொன்னபோது, நான் எவ்வளவு சந்தோஷப்பட்டேன் என்று உனக்கு நன்றாகவே தெரியும். அப்படி புறப்பட்டு விமானம் ஏறப்போகும்போதுகூட பெட்டி படுக்கையோடு காரில் என்னுடைய வேலை செய்யும் இடத்துக்கு வந்து, எனக்கு டாட்டா சொல்லிவிட்டு மீனம்பாக்கம் போனாயே, உனக்கு நினைவிருக்கிறதா நண்பா?
மே 1 மற்றும் மே 25:
ஒரு வழியாக நானும் அமெரிக்கா வந்தபிறகு தவறாது உன் பிறந்த நாள் மற்றும் திருமண நாளுக்கு - முறையே மே 1, மே 25 - மின்னஞ்சல் வாழ்த்து தெரிவித்து - கூடவே உன் தொலைபேசி எண்ணையும் கேட்டேன். நீயும் அந்த மின்னஞ்சலுக்கு நன்றி தெரிவித்து பதில் போட்டாயே தவிர, உன் தொலைபேசி எண்ணைக் கொடுக்கவில்லை. நான் கொடுத்திருந்த
என்னுடைய எண்ணிற்கும் தொலைபேசவில்லை. அது ஒன்றும் பரவாயில்லை. வேலை அதிகமாயிருக்கும் என்றெண்ணி நானும் விட்டுவிட்டேன்.
பால் பண்ணை:
நம்முடைய நிறுவனத்தில் ஒரு தடவை விரிவாக்கம் செய்யப்போகிறோம் என்று, பால் பண்ணை ஒன்று அமைக்கப் போவதாக அறிவித்து, நம் இருவரையும் அதைப்பற்றிய தகவல்களை சேகரிக்கச் சொன்னார்கள்.
நாமும் மாதவரம் பால் பண்ணையிலிருந்து, பல்வேறு தனியார் பால் நிறுவனங்களுக்குச் சென்று, நாம் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் என்றும், ஒரு ப்ராஜெக்ட் சம்மந்தமாக சில தகவல்கள் வேண்டுமென்றும் சொல்லி, எல்லோரிடமிருந்தும் ஏகப்பட்ட விஷயங்களை 'கறந்து' கொண்டு வந்தோம். அது தொடர்பாக, பல நாட்கள் சென்னை முழுக்க சுற்றியது நல்ல அனுபவமாக இருந்தது.
ஆனால், நம் நிறுவனம் அந்த பால் பண்ணை அமைக்கவும் இல்லை, நாமும் அந்த நிறுவனத்தை விட்டு வந்துவிட்டோம். அந்த அனுபவங்களை மறக்க முடியுமா?
உ.பா:
நாம சேர்ந்து பணிபுரிந்த காலகட்டத்தில் எனக்கு உ.பா குடிக்கற பழக்கம் இல்லே. (அந்த பழக்கம் இப்பவும் இல்லை. இடைப்பட்ட சில நாட்கள்லே.... சரி இந்த பதிவை என் உறவினர்கள் சிலரும் படிப்பாங்க. நாம அதைப்பத்தி நேர்லே பேசிக்கலாம்!).
அலுவலக பார்ட்டிகளிலும், நாம் தனியே கழித்த மாலைப்பொழுதுகளிலும் - எல்லோரும் சொல்லும் - "நான் குடிச்சிட்டு சொல்றேன்னு நினைக்காதே. சுய நினைவோடுதான் சொல்றேன்" - அப்படின்னு நீ பேச ஆரம்பித்து நிறைய தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்துகொண்டும், அலுவலக நடப்புகளைப் பற்றி பேசி சிரித்துக்கொண்ட நாட்களும் அடிக்கடி என் நினைவுக்கு வருகிறது. உனக்கு?
மேடை நாடகங்கள்:
அந்த சமயங்களில் நான் ஏகப்பட்ட மேடை நாடகங்களைப் பார்ப்பேன். ஒரு முறை நானும் ஒரு நாடகம் பார்க்கிறேன் என்று சொல்லி, அண்ணியுடன் மயிலை பாரதிய வித்யா பவனில் நடந்த நாடகத்திற்கு வந்து பார்த்தாயே. நினைவிருக்கிறதா?
அதற்கு பிறகும் ஓரிரு நாடங்கள் நாம் பார்த்ததும், அதைப் பற்றி பேசி அலுவலகத்தில் பொழுதை ஓட்டிய காலங்களும் மறக்கவே முடியாதது அல்லவா?
உலகக் கோப்பை கிரிக்கெட்:
1996 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நம் அலுவலகத்தின் பக்கத்து வீட்டில் போய் பார்த்தோமே? முதலில் அவர்களிடம் ஸ்கோர் மட்டுமே கேட்கப் போய், பிறகு அவ்வப்போது மேட்ச் பார்க்கப் போய், அதற்குப் பிறகு இங்கு கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு, அங்கு போய் முழு மேட்சும் பார்த்துக் கொண்டிருந்தோமே? அந்த நாள் மறுபடி வராது அல்லவா?
பங்குச் சந்தை:
எனக்கு பங்குச் சந்தை பற்றிய அறிமுகம் செய்து வைத்தவன் நீதான். சுமார் ஒன்றரை வருடங்கள் தினமும் காலையில் பங்குகளை வாங்குவதும், விற்பதும் என அலுவலகமே பிஸியா இருக்கும். நாமும் பல்வேறு கம்பெனிகளைப் பற்றி ஆராய்ந்து, சந்தையில் விளையாடிக் கொண்டிருந்தோம்.
நண்பா, அதற்குப் பிறகு நான் பங்குகளை வாங்குவதே மிகவும் குறைந்து விட்டது. அதுவும் நல்லதுக்குதான் என்று இப்போது பணத்தை இழந்து தவிக்கும் நண்பர்களைப் பார்க்கும்போது தெரிகின்றது.
முடிவுரை:
இன்னும் பலப்பல நினைவுகள் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தாலும், இடுகையின் நீளம் காரணமாக இங்கேயே முடித்துவிடுகிறேன். நாளை மே 1ம் தேதி பிறந்த நாள் காணும் உனக்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். இந்த தடவை மின்னஞ்சலில் இந்த இடுகையின் உரலையும் இணைத்து அனுப்புகிறேன். படித்துப் பார்ப்பாய் என்ற நம்பிக்கையுடன்...
13 comments:
அப்ப அது அந்த சுரேஷ் கிடையாதா?
தமிழ்மணத்துல இணைச்சு ஓட்டும் போட்டாச்சு
அருமையான பதிவு நண்பரே :)
அவர்கிட்ட இருந்து பதில் வரலேன்ன சொல்லுங்க.. “ஈ-மெயில்” மொக்கை போட்டுடுவோம் :))
நிச்சயம் படிப்பாருங்க
உங்க மேல பயம் இல்லாம போச்சா? ஜே.கே.... சரி விடுங்க....
உங்க நண்பருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
சுரேஷ் னு பேர் இருக்கற எல்லாரும், ரொம்ப நல்லவங்களா இருக்கங்களே எப்படி..
உங்க நண்பருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
உங்க நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
என்ன சொல்றதுன்னே தெர்ல தல..
//அப்ப அது அந்த சுரேஷ் கிடையாதா?// :)))
மொக்கை போல தோற்றமளித்தாலும், சீரியசான பதிவு தான் இது. நல்லா வந்திருக்கு. உங்க நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் (சற்று தாமதமான)
அனுஜன்யா
வாங்க அறிவிலி -> அவ்வ்... பத்த வெக்கப் பாத்தியே பரட்டை!!!
வாங்க ஆளவந்தான், கார்க்கி, விக்னேஸ்வரன், வால் -> நன்றி...
வாங்க லோகு -> அவ்வ்.. உங்க பேர் சுரேஷ் லோகுவா????
வாங்க சிவா, நசரேயன், ஆதி, ஊர்சுற்றி, அனுஜன்யா -> மிக்க நன்றி...
உங்க நண்பருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
அருமையான பதிவு.
Post a Comment