Thursday, April 30, 2009

முத்தையா... முத்தையா...

சில நாட்களுக்கு முன் முத்தையா தொடர் ஓடிட்டிருந்தபோது, ஒரு நண்பர் சொன்னார் - இது வெறும் மொக்கை கொசுவத்தியா மாறப்போகுதுன்னு. ஹிஹி. இந்த இடுகையும் அதே போல்தான்... இல்லே இல்லே.. அதேதான்... மே 1ல் பிறந்த நாள் காணும் ஒரு நண்பரைத் தேடுவதற்காக இதை பதிகிறேன்.

வழக்கம்போல் நீங்க எதிர்பார்க்கிற தமாஷ் மேட்டர் எதுவுமே இருக்காது. மன்னிச்சிடுங்க. சப்-டைட்டில்ஸை மட்டும் படிச்சிக்கிட்டே போனாலும், நான் திட்ட மாட்டேன். கவலைப்படாதீங்க.

சுரேஷ்:

என்னுடைய பதிவுகளில் ஹீரோவாக வரும் கதாபாத்திரங்களுக்கு நான் சுரேஷ் என்றே பெயரிட்டு வந்திருக்கிறேன். அது நீதான் என்று சொல்லவும் வேண்டுமா நண்பா?

நான் அந்த நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்தபோது, முதன்முதலில் என்னுடன் பேசியவன் நீதான். எல்லோரிடமும் என்னை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி, உன் நண்பர்கள் வட்டத்தில் என்னையும் ஒரு ஆளாக நிறுத்தினாய். அன்றிலிருந்து அடுத்த மூன்று ஆண்டுகள் எனக்கு ஒரு நல்ல நண்பனாய், அண்ணனாய் இருந்து வழிகாட்டினாய்.

மெக்கானிகல் to மென்பொருள்:

மெக்கானிக்கல் துறையிலிருந்து மென்பொருளாளனாக மாறுவதற்காக நீ பட்ட கஷ்டங்கள் என்ன என்பது எனக்குத் தெரியும். சம்பளமில்லாமல் ஒரு சிறிய நிறுவனத்தில் வேலை பார்க்க ஒப்புக் கொண்டு, நிறைய புத்தகங்களைப் படித்து, மென்பொருள் பற்றிய உன் திறமையை வளர்த்துக் கொண்டாய்.

1998-99 காலங்களில், Y2K வேலைகளுக்காக ஏகப்பட்ட பேர் புறப்பட்டு அமெரிக்கா வந்துகொண்டிருந்தபோது, நீயும் ஏதோ ‘டகால்டி' வேலை செய்து, ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்து புறப்படுகிறேன் என்று சொன்னபோது, நான் எவ்வளவு சந்தோஷப்பட்டேன் என்று உனக்கு நன்றாகவே தெரியும். அப்படி புறப்பட்டு விமானம் ஏறப்போகும்போதுகூட பெட்டி படுக்கையோடு காரில் என்னுடைய வேலை செய்யும் இடத்துக்கு வந்து, எனக்கு டாட்டா சொல்லிவிட்டு மீனம்பாக்கம் போனாயே, உனக்கு நினைவிருக்கிறதா நண்பா?

மே 1 மற்றும் மே 25:

ஒரு வழியாக நானும் அமெரிக்கா வந்தபிறகு தவறாது உன் பிறந்த நாள் மற்றும் திருமண நாளுக்கு - முறையே மே 1, மே 25 - மின்னஞ்சல் வாழ்த்து தெரிவித்து - கூடவே உன் தொலைபேசி எண்ணையும் கேட்டேன். நீயும் அந்த மின்னஞ்சலுக்கு நன்றி தெரிவித்து பதில் போட்டாயே தவிர, உன் தொலைபேசி எண்ணைக் கொடுக்கவில்லை. நான் கொடுத்திருந்த
என்னுடைய எண்ணிற்கும் தொலைபேசவில்லை. அது ஒன்றும் பரவாயில்லை. வேலை அதிகமாயிருக்கும் என்றெண்ணி நானும் விட்டுவிட்டேன்.

பால் பண்ணை:

நம்முடைய நிறுவனத்தில் ஒரு தடவை விரிவாக்கம் செய்யப்போகிறோம் என்று, பால் பண்ணை ஒன்று அமைக்கப் போவதாக அறிவித்து, நம் இருவரையும் அதைப்பற்றிய தகவல்களை சேகரிக்கச் சொன்னார்கள்.

நாமும் மாதவரம் பால் பண்ணையிலிருந்து, பல்வேறு தனியார் பால் நிறுவனங்களுக்குச் சென்று, நாம் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் என்றும், ஒரு ப்ராஜெக்ட் சம்மந்தமாக சில தகவல்கள் வேண்டுமென்றும் சொல்லி, எல்லோரிடமிருந்தும் ஏகப்பட்ட விஷயங்களை 'கறந்து' கொண்டு வந்தோம். அது தொடர்பாக, பல நாட்கள் சென்னை முழுக்க சுற்றியது நல்ல அனுபவமாக இருந்தது.

ஆனால், நம் நிறுவனம் அந்த பால் பண்ணை அமைக்கவும் இல்லை, நாமும் அந்த நிறுவனத்தை விட்டு வந்துவிட்டோம். அந்த அனுபவங்களை மறக்க முடியுமா?

உ.பா:

நாம சேர்ந்து பணிபுரிந்த காலகட்டத்தில் எனக்கு உ.பா குடிக்கற பழக்கம் இல்லே. (அந்த பழக்கம் இப்பவும் இல்லை. இடைப்பட்ட சில நாட்கள்லே.... சரி இந்த பதிவை என் உறவினர்கள் சிலரும் படிப்பாங்க. நாம அதைப்பத்தி நேர்லே பேசிக்கலாம்!).

அலுவலக பார்ட்டிகளிலும், நாம் தனியே கழித்த மாலைப்பொழுதுகளிலும் - எல்லோரும் சொல்லும் - "நான் குடிச்சிட்டு சொல்றேன்னு நினைக்காதே. சுய நினைவோடுதான் சொல்றேன்" - அப்படின்னு நீ பேச ஆரம்பித்து நிறைய தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்துகொண்டும், அலுவலக நடப்புகளைப் பற்றி பேசி சிரித்துக்கொண்ட நாட்களும் அடிக்கடி என் நினைவுக்கு வருகிறது. உனக்கு?

மேடை நாடகங்கள்:

அந்த சமயங்களில் நான் ஏகப்பட்ட மேடை நாடகங்களைப் பார்ப்பேன். ஒரு முறை நானும் ஒரு நாடகம் பார்க்கிறேன் என்று சொல்லி, அண்ணியுடன் மயிலை பாரதிய வித்யா பவனில் நடந்த நாடகத்திற்கு வந்து பார்த்தாயே. நினைவிருக்கிறதா?

அதற்கு பிறகும் ஓரிரு நாடங்கள் நாம் பார்த்ததும், அதைப் பற்றி பேசி அலுவலகத்தில் பொழுதை ஓட்டிய காலங்களும் மறக்கவே முடியாதது அல்லவா?

உலகக் கோப்பை கிரிக்கெட்:

1996 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நம் அலுவலகத்தின் பக்கத்து வீட்டில் போய் பார்த்தோமே? முதலில் அவர்களிடம் ஸ்கோர் மட்டுமே கேட்கப் போய், பிறகு அவ்வப்போது மேட்ச் பார்க்கப் போய், அதற்குப் பிறகு இங்கு கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு, அங்கு போய் முழு மேட்சும் பார்த்துக் கொண்டிருந்தோமே? அந்த நாள் மறுபடி வராது அல்லவா?

பங்குச் சந்தை:

எனக்கு பங்குச் சந்தை பற்றிய அறிமுகம் செய்து வைத்தவன் நீதான். சுமார் ஒன்றரை வருடங்கள் தினமும் காலையில் பங்குகளை வாங்குவதும், விற்பதும் என அலுவலகமே பிஸியா இருக்கும். நாமும் பல்வேறு கம்பெனிகளைப் பற்றி ஆராய்ந்து, சந்தையில் விளையாடிக் கொண்டிருந்தோம்.

நண்பா, அதற்குப் பிறகு நான் பங்குகளை வாங்குவதே மிகவும் குறைந்து விட்டது. அதுவும் நல்லதுக்குதான் என்று இப்போது பணத்தை இழந்து தவிக்கும் நண்பர்களைப் பார்க்கும்போது தெரிகின்றது.

முடிவுரை:

இன்னும் பலப்பல நினைவுகள் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தாலும், இடுகையின் நீளம் காரணமாக இங்கேயே முடித்துவிடுகிறேன். நாளை மே 1ம் தேதி பிறந்த நாள் காணும் உனக்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். இந்த தடவை மின்னஞ்சலில் இந்த இடுகையின் உரலையும் இணைத்து அனுப்புகிறேன். படித்துப் பார்ப்பாய் என்ற நம்பிக்கையுடன்...

Read more...

Wednesday, April 29, 2009

கலைஞர் உண்ணாவிரதம், சரத்பாபு மற்றும் பல...

டிஸ்கி - 1: எப்பவுமே ஏதாவது மொக்கையாதான் எழுதறோமே, ஒரு தடவையாவது உருப்படியா நம்ம அரசியல் நிலவரத்தைப் பற்றிய என் கண்ணோட்டத்தை எழுதலாமேன்னு ஆரம்பிச்ச இடுகைதான் இது.

டிஸ்கி - 2: நான் எல்லோரையும் நண்பனா மதிக்கறவன். யார்கூடவும் சண்டை போட விருப்பமில்லாதவன். என் கருத்தை மட்டும் இங்கே சொல்ல விழைகிறேன். கண்டிப்பா நிறைய பேருக்கு இதில் மாற்றுக் கருத்து இருக்கும். அதுக்கு நான் ஒன்ணும் பண்ண முடியாது. யாரையும் திருத்துறது என் வேலை இல்லை.

டிஸ்கி - 3: இந்த மாதிரி கருத்தை சொல்வதால், என்னை திமுக அனுதாபியாகவோ, அதிமுக அனுதாபியாகவோ நினைத்துக் கொள்ள வேண்டாம். நான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் இல்லை. போன தேர்தலில் திமுகவுக்கும், அதற்கு முந்தைய தேர்தலில் அதிமுகவுக்கும் ஓட்டு போட்டவன். (கட்சிகள் மட்டும்தான் ஒவ்வொரு தடவையும் மாத்தி மாத்தி கூட்டணி வெச்சிக்க முடியுமா என்ன?).

டிஸ்கி - 4: இந்த இடுகை முழுக்க முழுக்க என் சுய நினைவோடு எழுதிய இடுகைதான். எனக்கு உ.பா குடிக்கும் பழக்கமே இல்லை. ஊஊஊஊஊஊஊ (வாயை ஊதி காட்டினேன்!)

டிஸ்கி - 5: நான் சரத்பாபுவுக்காக பிரச்சாரம் செய்யவில்லை. என் இடுகையைப் பார்த்து யாரும் அவருக்கு ஓட்டுப் போடப்போவதும் இல்லை. எல்லோரும் ஏற்கனவே ஏதாவது தீர்மானம் செய்திருப்பார்கள். அவரைப் பற்றிய என் வாதத்தை எடுத்துச் சொல்லவே இந்த இடுகை.

டிஸ்கி - 6: ஏதாவது பரபரப்பு ஏற்படுத்தவோ, பின்னூட்டங்களை அள்ளவோ நான் பதிவு போடுவதில்லை. என்னுடைய திருப்திக்காகவே அவ்வப்போது பதிவிடுகிறேன். இந்த இடுகையும் யாரையும் திருப்திப்படுத்தவோ, யாருடனாவது சண்டை போடவோ அல்ல.

டிஸ்கி - 7: வெளிநாட்டுலே இருந்துக்கிட்டு இந்த விஷயங்களை பேசவே உனக்கு அருகதையில்லைன்னு சொல்லாதீங்க. எங்கே வெளியில் இருந்தாலும், என் உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்குன்னு நினைக்கிறவன் நான்.

டிஸ்கி - 8: கலைஞரின் இந்த வார உண்ணாவிரதத்தைப் பற்றி மட்டுமே இங்கு பேசுவோம். இப்படித்தான் 1972லே, 1989லே அப்படின்னு ஆரம்பிச்சி டாபிக்கை மாத்தி பேசாதீங்க. அப்படிப்பட்ட பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படும்.

டிஸ்கி - 9: அதே போல், அந்தம்மா செய்யாததா, மருத்துவரால் செய்ய முடியாததா என்று இடுகையின் நோக்கத்தை திசை திருப்ப வேண்டாம். அதற்கு நான் பதில் சொல்லப் போவதில்லை.

டிஸ்கி - 10: தனி மனித தாக்குதல், மற்ற பதிவர்களைத் தாக்கி வரும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படும்.

*****

அப்பாடா, ஒரு வழியா எல்லா டிஸ்கியும் முடிஞ்சிடுச்சு. இனிமே இடுகையை ஆரம்பிச்சிட வேண்டியதுதான்.

அச்சச்சோ, நான் சொல்ல வந்த விஷயமே மறந்து போயிடுத்தே... சரி விடுங்க. யோசிச்சி அப்புறமா இன்னொரு இடுகை போட்டுட்டா போச்சு.

இடுகையை முழுக்க படிச்சிக்கிட்டே வந்தவங்களுக்கும், நேரா இந்த கடைசி வரிக்கு வந்தவங்களுக்கும் மிக்க நன்றி...!!!

Read more...

Wednesday, April 22, 2009

உச்சத்தைத் தொட்ட தினம்...

அண்ணன் ஆதி அவர்களின் இந்த இடுகைதான் இதுக்கு முன்னோடி!

அவர் நம்மை அழைக்கலேன்னாலும், நாமளா போடறதுதானே சங்கிலி இடுகைக்கும், எதிர் இடுகைக்கும், நமக்கும் மரியாதை. அதனாலே என்ன சொல்ல வர்றேன்னா... கீழே படிங்க. உங்களுக்கே புரியும்.

***

அன்று ஆகஸ்ட் 27. சஹானாவின் பிறந்த நாள்.

வேறொரு இடத்தில் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தாலும், வீட்டிலும் அலங்காரம் செய்ய ஆரம்பித்திருந்தோம்.

அன்று மட்டும் சஹானா சமத்தாக இருந்ததால், எங்களுக்கு சந்தோஷம்.

நிறைய பரிசுகள் வரப்போகிறதென்று தெரிந்ததால், அவளுக்கும் சந்தோஷம்.

பார்ட்டிக்கு வரும் குழந்தைகளுக்கு பரிசுகள் வாங்கி வைத்தாயிற்று.

பெரியவர்களுக்காக குடிக்க (குளிர்பானம்தாங்க!), கொறிக்க - சில சாப்பாட்டுப் பொருட்கள் தயார்.

வண்ண வண்ண ரிப்பன் தோரணங்கள் கட்டியாகி விட்டது.

அவற்றை மேற்கூறையிலிருந்து பக்கவாட்டுச் சுவர்களில் ஒட்டவைத்து, ஒரு விழா மேடைக்கான தோற்றத்தை கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருந்தோம்.

பிறந்த நாள் புத்தாடை அணிவித்து, சஹானாவின் புகைப்படங்களை அங்கங்கே சுவற்றில் மாட்டியாயிற்று.

நாங்களும் பழைய ஆடைகளை துவைத்து, நெருப்புப் பெட்டியின் கீழ் தேய்த்து போட்டுக் கொண்டாயிற்று.

நடுநடுவே ஊரிலிருந்தும், நண்பர்களிடமிருந்தும் வாழ்த்து தொலைபேசிகள் வந்த வண்ணமிருக்கின்றன.

ஏற்பாடு செய்திருந்த பிறந்த நாள் கேக் தயாராகி விட்டதென்று தொலைபேசியும் வந்தாயிற்று.

எல்லோரும் வந்திருந்த பார்ட்டியில் குழந்தைகளுக்கான சிலபல நிகழ்ச்சிகள் நடைபெற்று, அனைவரும் விடைபெற்று சென்றனர்.

இப்படியாக ஒரு பிறந்த நாள் விழா மகிழ்வுடன் நிறைவேறியது.

*** The End ***

பின்குறிப்பு:

என்னடா, ஒண்ணுமே புரியல. அதுக்குள்ளே இடுகையும் முடிஞ்சிடுத்தேன்னு நினைக்கிறவங்க - ஒரு நிமிஷம்.

மேலே 'அவற்றை'ன்னு ஆரம்பிக்கும் வாக்கியத்தை மறுபடி படிக்கவும்.

இடுகையின் தலைப்பையும் ஒரு முறை படிக்கவும்.

புரிஞ்சிடுத்தோன்னோ?

Read more...

Tuesday, April 21, 2009

விமானத்தில் விமானிகள் தூங்காமலிருக்க...



இது போன வாரமே வந்திருக்க வேண்டிய இடுகை. அப்போ நம்ம கடை மூடியிருந்ததால் தாமதமாக வருகிறது.

*****

இந்தியன் விமானத்தில் விமானிகள் அடிக்கடி தூங்கிடறாங்கன்னு ஒரு செய்தி வந்திருந்தது. எல்லாருமேதானே தூங்கறாங்க. லூசுத்தனமா இது என்ன செய்தி. நான்கூடதான் நேத்திக்கு தூங்கினேன் அப்படின்றவங்க, கீழே இருக்கும் உரலில் ஒரு தடவை போய் பாத்துடுங்க. அவங்க வீட்டுக்குள்ளே தூங்கலே. விமானம் ஓட்டும்போது தூங்கிட்டாங்க.

http://thatstamil.oneindia.in/news/2009/04/15/business-pilots-have-slept-on-flight-admits-dgca.html

என்ன செய்தா அவங்கள தூங்காமே வண்டி ஓட்ட வெக்கலாம்னு, ராத்திரியெல்லாம் நான் தூங்காமே யோசிச்சதோட விளைவுதான் இந்த இடுகை. கீழே படிங்க.

கருத்துக்கணிப்பு:

கருத்துக்கணிப்புன்னாலே என்ன நடக்கும்னு எல்லோருக்கும் தெரியும். அடிதடி ரகளைதான். விமானம் போயிட்டிருக்கும்போது, ஏதாவது ஒரு தலைப்பு கொடுத்து, அதில் ஒரு கருத்துக்கணிப்பும் நடத்தணும். அதன் ரிசல்ட் வந்தபிறகு - யாரும் தூங்கவே முடியாது. எந்த நேரத்துலே என்ன நடக்குமோன்னு தெரியாமே எல்லாரும் நடுங்கிக்கிட்டே உக்காந்திருக்க வேண்டியதுதான். அப்புறம் விமானி மட்டும் எப்படி தூங்குவார்? கண்டிப்பா மாட்டார்.


மேகமாட முகிலாட:

மேலே பறக்கற கொஞ்ச நேரம்கூட ஏதாவது ஒரு நாட்டிய நிகழ்ச்சி, அதில் ஒரு போட்டி, கூடவே சில திட்டல், அழுகை இதெல்லாம் இல்லேன்னா மக்கள் ரொம்பவே கஷ்டப்படறாங்க. அதனால் என்ன பண்ணலாம்னா, விமானத்துலே 'மேகமாட முகிலாட'ன்னு ஒரு போட்டி நடத்தலாம். நம்ம விமானியையும் ஒரு ஜட்ஜா உக்கார வெச்சிட்டா, போட்டியாளர்கள் மேலே வெச்ச கண் வாங்காமே பாத்துக்கிட்டேயிருப்பாரு. அப்புறம் எங்கேந்து தூக்கம் வரும்?

அப்பப்ப விளம்பரதாரர் இடைவேளையிலே உள்ளே போய் - ஸ்டியரிங்க்லே வெச்ச குச்சியை அட்ஜஸ்ட் செய்துட்டு வந்துட்டார்னா (மெட்ராஸ் டு பாண்டிச்சேரியில் நாகேஷ் செய்வாரே, பாத்திருக்கீங்களா?), விமானம் பாட்டுக்கு ஜாலியா போயிட்டே இருக்கும்.


தேர்தல்:

பறந்துக்கிட்டிருக்கற எல்லோரையும் மிகவும் பரபரப்பா வெச்சிருக்கணும்னா, ஒரு மினி தேர்தல் நடக்கப்போகுதுன்னு சொல்லிட்டு, பெரிய பரிசு ஒண்ணு அறிவிச்சிடணும். மக்கள் பல குழுக்களா பிரிஞ்சி, கூட்டங்கள், கோஷங்கள், ஊர்வலங்கள், ஓட்டுப்பதிவு, எண்ணிக்கை இதெல்லாம் செய்வாங்க. அப்புறம் அந்த கலாட்டாலே விமானி எப்படி தூங்க முடியும்? விமானமும் நல்லபடியா பறக்கும்.


பாம்பு:

பாம்புன்னா ரஜினியே நடுங்குவார் - இந்த பழமொழியை தெரியாதவங்க யாருமே இருக்க முடியாது. அப்படி இருக்கும்போது விமானி நடுங்காமே என்ன செய்வார்? பேசாமே (அல்லது பேசிக்கிட்டே) ஒவ்வொரு விமானத்துக்கும் ரெண்டு பாம்பு வீதம் விட்டுட்டா, மொத்த மக்களும், விமானியும் அமைதியா தலைகுனிஞ்சிக்கிட்டே உக்காந்து வருவாங்க. (சீட் கீழே பாம்பை தேடுறாங்களாம்!).

இதிலேயும் ஒரு பிரச்சினை இருக்கு, விமானி கீழே பாத்துக்கிட்டே வண்டியை வேற எங்கேயாவது விட்டுட்டார்னா...


மாமியார் / மருமகள்:

இது எல்லாத்தையும் விட யாருமே தூங்காமலிருக்க ஒரு சூப்பர் யோசனை. ஒவ்வொரு விமானத்துலேயும் ஒரு மாமியார் ஒரு மருமகளை விட்டுட வேண்டியதுதான். அப்புறமென்ன, ஒரு மினி பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்க, எல்லாரும் அதை சுற்றி உக்காந்து பார்த்து ரசித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான். விமானியாவது, தூங்கறதாவது.


முக்கியமான அதிரடி தீர்வு:

இதுவரைக்கும் சொன்ன தீர்வுகள்லேயெல்லாம் தூங்கற பிரச்சினை தீருமாங்கறதுலே உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்துதுன்னா, அதை உடனடியா எச்சி போட்டு அழிச்சிட்டு, கீழே இருக்கற தீர்வை படிங்க. ரெண்டு கையையும் தூக்கிக்கிட்டு ‘ஜெய் ஹோ' பாட ஆரம்பிச்சிடுவீங்க.

அகிலாண்ட நாயகன், வருங்கால ஆஸ்கர் கதாநாயகன், என் அபிமான நடிகர், வருங்கால எம்.பி அண்ணன் ஜே.கே.ஆர் நடிச்ச, நடிக்கப் போற படங்கள் எல்லாத்தையும் முப்பரிமாண (3D) முறையில் மாத்திடணும். விமானத்தில் பறக்கும்போது திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப அந்த படங்களை போட்டு காட்டிக்கிட்டிருந்தா, எவன் தூங்கப் போறான். அண்ணன் மக்களைப் பார்த்து துப்பாக்கியை நீட்டும் போதும், எகிறி எகிறி குதித்து சண்டை போடும்போதும், பக்க்க்க்க்க்கத்தில் வந்து ‘பாபா ப்ளாக் ஷீப்' பாட்டு பாடும்போதும் - அவனவன் பேஸ்து (அப்படின்னா?) அடிச்சா மாதிரி நாற்காலியை இறுக்க பிடித்துக்கொண்டு உக்காந்திருக்க - தூக்கம் எங்கிருந்து வரும்?

*****

Read more...

Monday, April 20, 2009

கடையோட மாப்பிள்ளை - பகுதி 3


முதல் பகுதி இங்கே... இரண்டாம் பகுதி இங்கே...

*****

பெண் பார்க்கும் படலம். பெண்ணின் பெயர் ஜானகி.

*****
ஜானகி அப்பா: மொதல்ல காபி டிபன் சாப்பிடலாம்.

மாது: டிபன்லாம் வீட்லே பண்ணீங்களா? இல்லே ஹோட்டல்லேர்ந்து வரவழைச்சிட்டீங்களா?

ஜா.அப்பா: என்ன இப்படி கேட்டுட்டீங்க? ஜானகியே...

மாது: தனிய்ய்ய்யா கடைக்குப் போய் வாங்கி வந்துட்டாங்களா?

ஜா.அப்பா: இல்லே. ஜானகியே...

மாது: எல்லாத்தையும் தின்னு தீர்த்துட்டாங்களா? எங்களுக்கு எதுவுமே இல்லையா?

அப்பா: அட. மாது. அவரை கொஞ்சம் பேச விடுப்பா. நீங்க சொல்லுங்க சார்.

ஜா.அப்பா: ஜானகியே கூடமாட உதவி செஞ்சு, அவங்கம்மா செஞ்சதுன்னு சொல்ல வந்தேன்.

மாது: எனக்கு மானாட, மயிலாட தெரியும். அதென்ன கூடமாட?

அப்பா: சரி அதை விடுங்க. வந்த விஷயத்தை பத்தி பேசுவோம்.

ஜா.அப்பா: எனக்கு இருக்கறது ஒரே பொண்ணு ஜானகி. அவ பேர்லே ஜானகி ஹோட்டல் நடத்திண்டு வர்றேன். இனிமே மாதுதான் ஜானகியையும், ஹோட்டலையும் நல்லபடியா காப்பாத்தணும்.

மாது: ஜானகிய விடுங்க சார். நம்ம ஹோட்டலை முன்னேத்தறதுக்கு நான் நிறைய ஐடியாஸ் வெச்சிருக்கேன். ஒண்ணொண்ணா சொல்றேன் கேளுங்க.

அப்பா: ஷ்ஷு. மாது..

மாது: அட சும்மாயிருப்பா. கொஞ்சம் என்னை பேச விடு. அதாவது சார், நாள் வாடகையிலே நிறைய ஆட்களை பிடிச்சி வந்திரணும். சில பேரை சாப்பிடச் சொல்லிட்டு, மத்த பேரை டேபிள் சுத்தி நிக்க வெச்சி, “தம்பி, சாருக்கு மோரு”, “தம்பி,இன்னொரு அப்பளம்” அப்படி இப்படின்னு குரல் குடுத்துக்கிட்டு ஹோட்டல்லே நிறைய கும்பல் இருக்கறா மாதிரி காமிக்கணும். அப்பதான் சாப்பாடெல்லாம் நல்லா இருக்குன்னு நினைச்சி, மக்கள் நிறைய பேர் வருவாங்க. விலையைக்கூட அதிகமாவே வெக்கலாம். யாரும் கண்டுக்க மாட்டாங்க.

அப்பா: ஷ்ஷூ. மாது.

ஜா.அப்பா: ம். அப்புறம்?

மாது: இன்னும் என்ன பண்ணலாம்னா, ”உங்கள்லே அடுத்த அறுசுவை நடராஜன் யாரு?” அப்படின்னு ஏதாவது ஒரு டிவியிலே போட்டி ஒண்ணு நடத்தலாம். தமிழும் தெரியாத, சமைக்கவும் தெரியாத யாராவது மூணு பேரை ஜட்ஜஸா போட்டு, நம்ம ஹோட்டல் விளம்பரங்களுக்கு நடுநடுவே அந்த ப்ரோக்ராமையும் கொஞ்சம் காட்டலாம். அப்பதான் மக்கள் மனசுலே ஹோட்டல் பேரு நினைவிருக்கும்.

ஜா.அப்பா: இப்படியெல்லாம் செய்து ஹோட்டல் நல்லா பெரிசா வளர்ந்திடுச்சுன்னா, அப்புறம் அதை யாரு பாத்துக்கறது?

மாது: அதைப்பத்தி நீங்க கவலையேபடாதீங்க. நீங்க ஏதாவது ஒரு பிரச்சினையில் மாட்டிக்கிட்டு ஜெயிலுக்குப் போயிட்டாலும், நாந்தான் இருக்கேனே பாத்துக்கறதுக்கு.

அப்பா: ஷ்ஷு. மாது.

மாது: அட சும்மாயிருப்பா. இது என்ன பத்திரிக்கையாளர் சந்திப்பா? சும்மா ஷூ, ஷூன்னு சொல்லிக்கிட்டு. நான் ஷூ தூக்கிப் போடப்போறேன்னு சார் பயந்துடப்போறாரு.

அப்பா: அவரு எதுக்கு பயப்படணும்? நீ பேசற பேச்சுக்கு ஷு எடுத்து அவர் நம்மை அடிக்காமே இருந்தா சரிதான்.

ஜோசியர்: மாது, கல்யாணத்துக்கு முன்னாடியே மாமனார் ஆகப்போறவரை இப்படி கலாய்க்கிறியே... கல்யாணத்துக்கு அப்புறமா என்னல்லாம் பண்ணுவே?

மாது: சார். ஒண்ணு தெரிஞ்சுக்கோங்க. மாப்பிள்ளைன்ற ஸ்தானத்தை கடவுள் எதுக்கு உருவாக்கியிருக்கார்னா, மாமனார் அப்படின்றவரை கலாய்க்கத்தான். கொஞ்சம் வெளியே போய் நின்னு மாமனாரை கலாய்க்காதவங்க யாராவது இருக்காங்களான்னு கேட்டுப் பாருங்க. ஒருத்தன்கூட கிடைக்கமாட்டான் உங்களுக்கு.

(காபியுடன் ஜானகி என்ட்ரி)

ஜா.அப்பா: இதுதான் என் பொண்ணு ஜானகி.

(தம்தனனம்தன தம்தனனம்தன...)

மாது: அம்மா, எதுக்கு இப்ப திடீர்னு பாடறே?

அம்மா: டேய், நான் எங்கேடா பாடினேன்.

மாது: அதானே, குரல் அழகா இருந்ததேன்னு பாத்தேன்.

(தம்தனனம்தன தம்தனனம்தன...)

ஜோசியர்: மாது, பொண்ணை நல்லா பாத்துக்கப்பா. ஏதாவது கேள்வி கேக்கணும்னா இப்பவே கேட்டுக்கோ.

மாது: கல்யாணத்துக்கு அப்புறம் ஹனிமூனுக்கு எங்கே போகலாம்? ஊட்டியா? கொடைக்கானலா?

அப்பா: இன்னிக்கு உனக்கு ஷூதான். கன்ஃபர்ம்டா தெரிஞ்சி போச்சு.

மாது: சரி சரி. ஒழுங்காவே கேக்கறேன். உங்களுக்கு சமைக்கத் தெரியுமா?

ஜானகி: தெரியாது.

மாது: ரொம்ப நல்லது. எனக்கும் தெரியாது. அட்லீஸ்ட் மாவாட்டவாவது தெரியுமா?

ஜானகி: ஏன். நான் ஏன் மாவாட்டணும்?

மாது: ஹோட்டல்லே போய் சாப்பிட்டபிறகு காசு இல்லேன்னா மாவு ஆட்டிதானே ஆகணும்? நம்மாலே தர்ம அடி வாங்கமுடியாதும்மா.

ஜா.அப்பா: அப்பலேர்ந்து பாக்கறேன். மாப்பிள்ளை ரொம்ப தமாஷா பேசறாரு.

ஜானகி: அப்பா. அவரை மாப்பிள்ளைன்னு சொல்லாதீங்க. எனக்கு இந்த கல்யாணத்துலே இஷ்டமில்லை.

ஜா.அப்பா: என்னம்மா இப்படி சொல்லிட்டே? அவர்கிட்டே என்ன குறை கண்டே நீ?

ஜானகி: பெரியவங்கன்ற மரியாதையே இல்லாமே பேசறாருப்பா அவரு. உங்களை ஜெயிலுக்குப் போவீங்கன்னு வேறே சொல்றாரு. எனக்கு வேண்டாம் இந்த மாப்பிள்ளை. சார், என்னை மன்னிச்சிடுங்க. நீங்க போகலாம்.

அம்மா: சரி. பொண்ணு ரொம்ப கோவமா இருக்கறாப்பல தெரியுது. நாங்க போய் போன் பண்றோம். எதுக்கும் ஒரு தடவைக்கு ரெண்டு தடவை யோசிச்சி வெச்சிக்கம்மா. மாது, காபி குடிச்சது போதும். டம்ளரை வெச்சிட்டு வாடா. போகலாம்.

மாது: போறதுக்கு முன்னாலே கடைசியா ஒண்ணே ஒண்ணு சொல்லிக்க விரும்பறேன்.

ஜானகி: என் முடிவுலே எந்த மாற்றமும் கிடையாது.

மாது: அது எப்படியோ இருந்துட்டு போகட்டும். நான் சொல்ல வந்தது, காபியிலே சக்கரை கம்மியா இருக்கு. அடுத்த தடவையிலிருந்து எனக்கு மட்டும் கொஞ்சம் ஜாஸ்தியா போடுங்க. அவ்ளோதான். நான் வர்றேன்.

*****

Read more...

Sunday, April 19, 2009

நொறுக்ஸ் - ஞாயிறு - 4/19/2009


ஏதோ ஒரு பிரச்சினையால் கடையை மூடிவிட்டேன் என்று போன பதிவில் கூறியதற்கு, பின்னூட்டத்தில்/மெயிலில் விசாரித்த நண்பர்களுக்கும், அடாது பெய்த மழையில் விடாது நெடுந்தூரம் வண்டி ஓட்டி வந்து மூடை மாற்றிய அண்ணன் மருதநாயகத்திற்கும் எனது நன்றிகள் பல!


நான் தனி மனிதனில்லை. என் பின்னாடி ஆறு கோடி மக்கள் இருக்காங்கன்னு வருங்கால முதல்வர்கள் (நிகழ்கால நடிகர்கள்) மாதிரி சொல்ல முடியலேன்னாலும், நம் அலைவரிசையில் சில நல்ல நண்பர்களைக் கண்டுபிடிக்க உதவிய இணையத்திற்கு நன்றி.

சரி. வளவளன்னு பேசாமே மேட்டருக்கு வாப்பான்னு யாரோ சொல்றது கேக்குது.

காண்டாமிருகத்துக்கே கோன் ஐஸ்க்ரீம் கொடுத்தவனுக்கு எந்த பிரச்சினையும் ரொம்ப சாதாரணம்தான்னு சொல்லிட்டு... அட.. ரெண்டு வருஷம் முன்னாலே நடந்த அந்த ஐஸ்க்ரீம் கதையை உங்ககிட்டே சொல்லவேயில்லையா இதுவரைக்கும்.... சரி. விவரம் பதிவில்.

*****

பதிவுலக நண்பர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பும்போது, கடைசியில் 'சத்யா எ ச்சின்னப் பையன்' என்று அனுப்பிக் கொண்டிருந்தேன். யாரும் ஒன்றும் சொல்லாத நிலையில், ஒருவரிடம் பேசும்போது - பாத்துப்பா, அவசரத்துலே யாராவது 'எச்சிப் பையன்'னு படிச்சிடப் போறாங்கன்னு சொன்னாரு. அன்னிலேர்ந்து மாத்தி எழுத ஆரம்பிச்சிட்டேன் - 'ச்சின்னப் பையன் எ சத்யா'.

அப்படி சொன்னது யாருன்னா.....

வேலன் அண்ணாச்சி. வணக்கம்...

*****

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் அல்லது சித்திரை மாத ஒண்ணாம் தேதி நல்வாழ்த்துகள். அதுவும் கிடையாது - ஒத்துக்க மாட்டேன் - அப்படின்னா, சரி, சும்மாவே வாழ்த்துகள்.

*****

ஒரு(ரே) மாதிரி குறள்கள் சில...

எல்லா இட்லியும் இட்லியல்ல சான்றோர்க்கு
குஷ்பு இட்லியே இட்லி

எல்லா பொம்மையும் பொம்மையல்ல பாப்பாக்கு
நண்பனின் பொம்மையே பொம்மை

எந்த புடவையும் அழகல்ல பெண்களுக்கு
கடையிலில்லா புடவையே அழகு

எல்லா பல்டியும் பல்டியல்ல மாண்புமிகு
-----* அடிக்கும் பல்டியே பல்டி

* இந்த இடத்திலே கலைஞர், ஜெ, மருத்துவர், ரஜினி யார் பேர் வேணும்னாலும் போட்டு படிக்கலாம்.

*****

காலுறை நாற்றமடிக்காமல் இருக்க, டெட்டால் ஒரு சொட்டு போட்டுக்குங்கன்னு நண்பர் டாக்டர் புரூனோ ஒரு தடவை சொல்லியிருந்தார்.

போன வாரம் திடீர்னு அது நினைவுக்கு வரவே, கொஞ்ஞ்ஞ்சம் அதிகம் போட்டுக்கிட்டு போனேன் பாருங்க, அலுவலகத்துலே பயங்கர வாசனை. எவனோ ஒருத்தன் நல்ல நாத்த மருந்து போட்டுக்கிட்டு வந்திருக்கான்னு ஒருத்தரு, எனக்கு தலை வலிக்குதுன்னு ஒரு அம்மா, புதுசா யூகலிப்டஸ் செடி எங்கேயோ வெச்சிருக்காங்கன்னு ஒருத்தரு - அன்னிக்கு நாள் முழுக்க இதேதான் பேச்சு.

ஹிஹி. அதுக்கு நாந்தான் காரணம்னு நான் ஏன் சொல்றேன்? அவங்க பேச்சுலேயே கலந்துக்காமே படுபிஸியா(!!) வேலை செய்துக்கிட்டே இருந்தேன்.

அதுக்கப்புறம் காலுறை வழக்கம்போல் நாத்தம் அடிச்சாகூட பரவாயில்லை, யாருக்கும் தெரியாதுன்னு டெட்டால் போடறதை விட்டுட்டேன்.

*****

Read more...

Thursday, April 9, 2009

கடையை மூடிட்டிருக்கேன்ல... சைலன்ஸ்....



வலிகள், எதிர்ப்பார்ப்புகள், பிரச்சினைகள், நிராகரிப்புகள்...

வாழ்க்கையில் ஒருத்தனுக்கு இதெல்லாம் இருக்கலாம். ஆனா, இதுவே வாழ்க்கையானா??? நானும் எவ்ளோ நாள்தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது...

சரி விடுங்க...

ராமநாதபுரத்தில் போட்டியிடும் நம் தலயை ஆதரித்து அமெரிக்காவில் நான் பிரச்சாரம் செய்யவிருப்பதால், சில நாட்களுக்கு பூச்சாண்டி கடை மூடப்படுகிறது.

அப்பப்போ நண்பர்கள் கடைகளை பார்த்து பின்னூட்டம் போடறேன்..

நான் திரும்பி வரவரைக்கும் வேறே கடைகள்லே போய் சிரிச்சிக்கிட்டே இருங்க... பை பை...

Read more...

Monday, April 6, 2009

கடையோட மாப்பிள்ளை - பகுதி 2

முதல் பகுதி இங்கே இருக்கு.

காட்சி -2 : ஜோசியர் வருகை. (ஜோசியர் பேரு மோகன். இனிஷியல் கி. நாம ஜோசியர்னே கூப்பிடுவோம்.)

(மாது வீட்டில் அழைப்பு மணி அடிக்கிறது)

அப்பா: மாது, யாருன்னு பாரு வெளியே.

ஜோ: இது ஆறாம் நம்பர் வீடுதானே? நாந்தான் ஜோசியர் மோகன்.

மாது: ஜோசியர்ன்றீங்க.. ஆறாம் நம்பர் வீடுன்னு நீங்களாவே கண்டுபிடிச்சிக்க மாட்டீங்களா? இன்னொருத்தர் சொன்னாதான் தெரியுமா?

ஜோ: இது நல்லாயிருக்கே கதை!!! உங்களுக்கு வயித்து வலின்னு டாக்டரேவா கண்டுபிடிச்சி வைத்தியம் பாக்கறாரு? நீங்க சொன்னாதானே அவருக்கு தெரியும்? அதே மாதிரிதான் இதுவும்.

மாது: மாட்டு டாக்டர்கிட்டே எந்த மாடு போய் எனக்கு வயித்து வலின்னு சொல்லும்? அவர் தானாதானே கண்டுபிடிக்கறாரு.

ஜோ: சபாஷ். சரியான போட்டி! நான் மாட்டு ஜோசியர் இல்லையே? மனுசங்களுக்கு மட்டும் தானே பாக்கறேன். அதனால் என்கிட்டே வாயத் தொறந்து எல்லாத்தையும் சொல்லித்தான் ஆகணும். நேத்து ராத்திரி என்ன சாப்பிட்டீங்க... ச்சீ. டாக்டர்னவுடனே இந்த கேள்வி தானா வந்துடுச்சு. அம்மா இருக்காங்களா?

மாது: சரி சரி. ஏதோ சொல்லி சமாளிச்சிட்டீங்க. உள்ளே வாங்க... அப்பா யார் வந்திருக்காங்கன்னு பாரு. மனுசங்களுக்கு ஜாதகம் பாக்கற ஜோசியர் வந்திருக்கார்.

அப்பா: என்னடா தத்துபித்துன்னு உளர்றே? ஜோசியர்னாலே மனுசங்களுக்கு மட்டும்தான். மிருகங்கல்லாம் கல்யாணம் பண்ணிக்கறதுக்கு இன்னும் ஜாதகப் பொருத்தம் பாக்க ஆரம்பிக்கலை. வாங்க வாங்க ஜோசியரே. எப்படியிருக்கீங்க. தொழில்லாம் எப்படி போகுது?

ஜோ: நான் நல்லாயிருக்கேன். தொழில் வழக்கம்போல இந்த மாதிரி கல்யாணமாகாத பசங்க தயவுலே ஓடிட்டிருக்கு. அம்மா இல்லையா?

மாது: தேர்தல் வேறே வருதே. நிறைய பேர் ஜோசியம் கேக்க வருவாங்களே?

ஜோ: அதுக்கெல்லாம் பெரிய பெரிய ஜோசியர் இருக்காங்க. எனக்கு வழக்கமா வர்ற பத்து பேர்தான்.

மாது: நீங்க எப்போ அந்த மாதிரி பெரிய ஜோசியரா வருவீங்கன்னு யார்கிட்டேயாவது ஜோசியம் பாக்க வேண்டியதுதானே?

ஜோ: என்னை விடுப்பா. இப்போ நான் வந்தது உன் கல்யாண விஷயத்தைப் பத்தி பேசத்தான். அம்மா இல்லையா?

மாது: என்ன, வந்ததிலேந்து அம்மா இல்லையா, அம்மா இல்லையான்னு கேக்கறீங்க.. ஐயாகிட்டே பேசமாட்டீங்களா?

ஜோ: எல்லா இடத்திலேயும் அம்மாதானே முக்கியமான முடிவுகளை எடுக்கறது? அம்மான்னா சும்மாவா?

மாது: அது சரி. இப்போ ஐயாவும் அம்மாகிட்டேதானே இருக்கார். அதனால், அம்மாகிட்டே பேசினா போதும்றீங்க.

ஜோ: ஆமா. ஆனா அது இன்னும் கொஞ்ச நாளைக்குதான். அப்புறம் என்ன ஆகுமோ யாருக்கு தெரியும்?

(அம்மா, ஸ்வீட்டோட எண்ட்ரி)

அம்மா: ஜோசியரே. என்ன வார்த்தை சொல்லிட்டீங்க... அப்படின்னா, சீக்கிரத்துலே எனக்கு டைவோர்ஸ் வாங்கிக் கொடுத்திடுவீங்களா?. இந்தாங்க, ஸ்வீட் எடுத்துக்குங்க.

மாது: பாத்தீங்களா. கொஞ்ச நாள் கழிச்சி டைவோர்ஸ் வாங்கித் தர்றேன்னு சொன்னதுக்கே, ஸ்வீட் கொடுக்கறாங்க. இன்னிக்கே வாங்கித் தர்றேன்னு சொல்லுங்க, பஞ்சாமிர்த அபிஷேகமே பண்னுவாங்க.

ஜோ: அப்படியெல்லாம் சொல்லக்கூடாது மாது. அப்புறம் எனக்குத்தான் ஈ மொய்க்கும். உடம்பெல்லாம் வழவழ கொழகொழன்னு ஆயிடும்.

அப்பா: ஒரு பேச்சுக்கு சொன்னா, உடனே நம்பிடுவீங்களா? சரி. வந்த விஷயத்தை பேசவே மாட்டீங்களா?

அம்மா: ஆமா. ஜோசியரே. சொல்லுங்க. ஒரு ஜாதகம் கொண்டு வர்றேன்னு சொன்னீங்களே.

ஜோ: கொண்டு வந்திருக்கேன். அருமையான குடும்பம். ரெண்டு பேரோட ஜாதகமும் பொருந்தியிருக்கு. அவங்களோடையும் பேசிட்டேன். நாளைக்கே பொண்ணு பாக்க வரச்சொல்லிட்டாங்க.

மாது: ஏன், இன்னிக்கு அவங்க ரொம்ப பிஸியாமா?

அப்பா: அவசரப்படாதேடா. ஜோசியரே, பொண்ணோட அப்பா ஏதோ கடை வெச்சிருக்காருன்னீங்களே. என்ன கடை அது?

ஜோ: சாப்பாட்டுக் கடை ஒண்ணு வெச்சிருக்காரு. தமிழ்லே ஹோட்டல்னு சொல்லலாம். தன் பொண்ணை கட்டிக்கிறவன், அந்த கடையையும் சேத்து பாத்துக்கணும்னு விருப்பப்படுறாரு.

மாது: அப்பாடா.. இனிமே அம்மாவோட சமையல்லேந்து விடுதலை கிடைச்சிடும். தினமும் ஹோட்டல் சாப்பாடுதான். அப்பா, நீயும் சாப்பிட அங்கேயே வந்துடு. உனக்கு 50% டிஸ்கவுண்ட் தந்துடறேன். ஆனா, அதிலே இன்னொரு பிரச்சினையும் இருக்கு. ஹோட்டல் வெச்சிருக்கிறவங்க எல்லாம் பக்கத்து ஹோட்டல்லேதான் சாப்பிடுவாங்க. நானும் அந்த மாதிரிதான் ஏதாவது பண்ணனும்.

ஜோ: அதெல்லாம் ஒண்ணுமில்லே. பொண்ணோட அப்பா, தினமும் தன் ஹோட்டலிலேயேதான் சாப்பிடறாராம்.

மாது: தன் வீட்டு சாப்பாட்டை விட ஹோட்டல் சாப்பாடே மேல்னு நினைச்சிட்டாரோ என்னவோ? நமக்கென்ன தெரியும்?

அம்மா: சரி சரி. அதெல்லாம் நமக்கெதுக்கு. நாம நாளைக்கு பொண்ணு பாக்கப் போறோம். அவ்வளவுதான்.

மாது: ஆமாமா. எனக்கு நிறைய வேலை இருக்கு. பொண்ணுகிட்டே கேக்கறதுக்கு கேள்விகளை தயார் பண்ணனும். நான் என் ரூமுக்குப் போறேன்.

ஜோ: ஏதாவது கேள்வி கேக்கறேன்னு தத்தக்கா பித்தக்கான்னு உளறி காரியத்தை கெடுத்துடாதே. இதுக்கப்புறம் என்னாலே உனக்கு பொண்ணே தேடமுடியாது.

மாது: ஜோசியரே, இப்பதான் ஞாபகம் வருது. இன்னொரு சின்ன வேலை பண்ணனுமே எனக்கு.

ஜோ: நீ எதுக்கும் கவலைப்படாதே மாது. நான் எல்லாத்தையும் பாத்துக்கறேன்.

மாது: இந்த 'எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்', 'எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்'னு சொல்றதெல்லாம் நான் தாலி கட்டுற வரைக்கும்தான். அதுக்கப்புறம் நானே எல்லாத்தையும் பாத்துக்குவேன். நான் கேக்க நினைச்சது வேறே.

ஜோ: என்ன அது, சொல்லுப்பா.

மாது: இப்படி சும்மா இருந்து பயங்கர போரடிக்குது. நானும் அரசியல்லே இறங்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். என்னோட ஜாதகத்தை ராஜயோக ஜாதகமா மாத்திக் கொடுப்பீங்களா? நான் எம்.பி ஆனவுடனே உங்களுக்கு ஏதாவது காண்ட்ராக்ட் எடுத்து தர்றேன்.

ஜோ: என்னை விட்ருப்பா. நான் வரலே இந்த விளையாட்டுக்கு. ஆமா, ஜெயிச்சப்புறம் உன் ஜாதகம் தப்புன்னு கண்டுபிடிச்சுட்டா என்ன பண்ணுவே?

மாது: அதுக்கெல்லாம் பயப்பட்டா முடியுமா? வீட்லே எல்லா கலர்லேயும் துண்டு வெச்சிருப்பேன். ஒருத்தர்கிட்டே அடிவாங்கறா மாதிரி இருந்ததுன்னா, டக்குன்னு துண்டு கலரை மாத்திக்கிட்டு இன்னொருத்தர் கிட்டே போயிக்கிட்டே இருப்பேன். அவ்ளோதான்.

ஜோ: சரி சரி. நீ ஏதோ முடிவோடதான் இருக்கே. முதல்லே இந்த கல்யாணத்தை பண்ணிண்டுடு. அப்புறம் என்ன வேணா பண்ணிக்கோ. நாளைக்கு 4 மணிக்கு அவங்க வீட்டுக்கு வந்துடுங்கோ. நானும் அங்கே வந்துடறேன். இப்போ கிளம்பறேன்.

(காட்சி 2 முடிவு)

Read more...

Thursday, April 2, 2009

அமெரிக்கர்களின் மாமனார்/மியார் பிரச்சினைகள்!!!


அலுவலகத்தில் ஒரு முக்கியமான மீட்டிங்கின் நடுவில் ஒருவர் தன் மாமனாரைப் பற்றி ஏதோவொன்று பேச, உடனே அறையில் இருந்த எல்லோரும் தங்கள் மாமனார் / மாமியார் பற்றி பேச ஆரம்பித்துவிட்டனர். அவ்வளவுதான். அடுத்த அரை மணி நேரத்துக்கு மீட்டிங்கின் விஷயத்தை மறந்துவிட்டு, அனைவரும் இதைத்தான் பேசினர். பக்கத்து அறையில் நடப்பதையே ஒட்டுக் கேட்டு நேரத்தைக் கடத்தும் நான், என் அறையிலேயே நடப்பதை கவனிக்காமல் விட முடியுமா?

அவங்க பேசினதையும், நான் நினைச்சதையும்தான் (நீல வண்ணம்) இந்த பதிவில் சொல்லியிருக்கேன்.

*****

ஒருத்தர்: என் மாமனார் எங்க வீட்டுக்கு வந்துட்டார்னா, என் ஃப்ரிஜ்ட்லே இருக்கற பீர், ஸ்காட்ச் எல்லாத்தையும் ராத்திரியோட ராத்திரியா காலி பண்ணிடுவாரு. அதனால், அப்போ மட்டும் செலவு டபுள் ஆகுது.

எங்க ஊர்லே பெரியவங்க சின்னவங்கள, குடிக்காதீங்கன்னு சொல்லி பாட்டிலை எடுத்து உடைச்சிடுவாங்க. இங்கே அவங்களே எடுத்து குடிச்சிடறாங்க. அவ்ளோதான் வித்தியாசம்.

ஒரு வெள்ளையம்மா: என் மாமனார் அவர் வீட்டுக்கு எங்களை அடிக்கடி கூப்பிடுவாரு. என்னடா, பாசமா கூப்பிடறாரேன்னு போனாக்கா, அங்கே இவருக்கு புல்லு புடுங்கறது, மரம் நடறதுன்னு ஏதாவது வேலை வெச்சிருப்பாரு. ரெண்டு நாளு எனக்கும் பெண்டு நிமிந்துடும். பயங்கர கடி.

ச்சின்ன வயசிலே உங்க புருஷனுக்கு தலை வாரி விட்டு, பல் தேச்சியெல்லாம் விட்டாரே அவங்கப்பா. அவருக்காக புல்லு கூட புடுங்க மாட்டீங்களா??? நல்லா இருக்கே கதை!!!

இன்னொரு வெள்ளையம்மா: என் மாமியார் வீட்டுக்கு வந்துட்டா, என்னை சமைக்கவே விடமாட்டாங்க. அவங்க ஸ்டைல்லேதான் எல்லாமே இருக்கணும்னு விரும்புவாங்க. என் பொண்ணுக்குக்கூட அது பிடிக்காது.

ஏம்மா, வெறும் காஞ்சிப் போன பன்னை அடுப்புலே போட்டு திருப்பணும். காய்கறிகளை பச்சை பச்சையா அதுக்கு நடுவிலே வெச்சி சாப்பிடணும். அவ்ளோதானே? இதுக்கு என்னமோ பஞ்சபட்ச பரமான்னங்கள் (புரியுதா?) சமைக்கற மாதிரி அலுத்துக்குறீங்களே?

இன்னொருத்தர்: (வருத்தத்துடன்) என் மாமனார், முதியோர் காப்பகத்துலே ஜாலியா இருக்கார். எங்க வீட்டுக்கு வான்னாக்கூட வரவே மாட்டேங்குறார்.

ம்ஹும். நான் கேள்விப்பட்டது வேறே மாதிரியில்ல இருக்கு. போன தடவை அவரை வரச்சொல்லிட்டு, நீங்க வீட்டை பூட்டிட்டு எஸ்கேப் ஆனதுலேர்ந்துதான் அவர் வரமாட்டேங்குறாராமே.

ஒருத்தர்: என் மாமனார் இருக்கற காப்பகத்துலே வயசானவங்கல்லாம் சேந்து டூர் போறாங்க. நீச்சல், யோகா கத்துக்கறாங்க. நல்லா சமைக்கறாங்க.

இருடி. இன்னும் கொஞ்ச நாள்லே உனக்கும் அதே காப்பகம்தான். வேணும்னா இப்பவே முன்பதிவு செஞ்சி வெச்சிக்கோ. அப்புறம் சாதா நீச்சலென்ன, கடப்பாரை நீச்சலே அடிக்கலாம்.

அடுத்தவர்: என் பொண்டாட்டியும் எங்கம்மாவும் ஒரே அறையில் இருக்கறத என்னாலே தாங்கவே முடியாது. அடுத்து என்ன நடக்குமோன்னு பயம்மா இருக்கும்.

நோ டென்சன். அந்த அறையை விட்டு வெளியே வந்துட்டு கதவை வெளிப்பக்கமா பூட்டிடணும். கொஞ்ச நேரம் கழிச்சி உள்ளே போய் ஒரு அரை நாள் செலவு செய்து அறையை சுத்தம் செய்துட்டா, முடிஞ்சது வேலை.

*****

இவ்வளவும் பேசி முடிச்சிட்டு, கடைசியில் என்னய பாத்து கேட்டாங்க - உங்க ஊர்லேயும் இந்த மாதிரி மாமியார் மாமனார் பிரச்சினையெல்லாம் இருக்கா? எப்படி சமாளிக்கிறீங்கன்னு.

நான் என்னத்த சொல்றது. நம்ம தோட்டத்து மல்லிகை மணக்குதோ நாறுதோ - அது நமக்குள்ளே. அவங்ககிட்டே போய் அதை சொல்ல முடியுமா?. "கண்டிப்பா நிறைய வீட்லே அந்த பிரச்சினைகள் உண்டு"ன்னு மட்டும் சொல்லிட்டு உடனே அறையை விட்டு வெளியே வந்துட்டேன்.

எங்க ஊர்லே இந்த பிரச்சினைய வெச்சித்தான் நிறைய (எல்லா!) தொலைக்காட்சித் தொடர்கள், அதிலே வேலை பாக்குற நடிக நடிகையர், கலைஞர்கள் எல்லாருமே பொழைக்கறாங்க. அதனால், இந்த பிரச்சினைதான் எங்களுக்கு கடவுள் மாதிரி. இது இல்லேன்னா, எங்களுக்கு வாழ்க்கையே வெறுத்துப் போயிடும்.

அட, வாழ்க்கையில் இதெல்லாம் சாதாரணமப்பா!!!

*****

Read more...

Wednesday, April 1, 2009

e-சண்டை!!!


சமைக்க நேரமின்மையால் தங்ஸ் இன்று வெறும் ரசம் சாதம் செய்திருந்தார். இதையெல்லாம் மனுசன் சாப்பிடுவானா என்று கேட்டதற்கு, அதனால்தான் உங்களுக்குக் கொடுக்கிறேன் என்று 'ஜோக்' அடித்தார்.

கூட்டு செய்து ரொம்ப நாளாச்சேம்மா என்றதற்கு, கேப்டன் பாணியில் எனக்கு கூட்டு பிடிக்காது என்றும் கடித்தார்.

இதற்கு மேல் பேசிப் பயனில்லை என்பதால், புறப்பட்டு அலுவலகம் வந்துவிட்டேன்.

நிறைய வேலை இருப்பதால், இவ்வளவுதான் இன்றைய பதிவு.

Posted by சுரேஷ் at 9.00am

***********
Anonymous said...
மீ த பஷ்ட்...
9:05am
*****

அம்மா said...
ஏண்டா இப்படி கஷ்டப்படணும்னு என்ன தலயெழுத்து உனக்கு. இங்கே இருந்தா நான் நல்லா சமைச்சி கொடுத்திருப்பேன்ல?
9:10am
*****

கார்க்கி said...
சூப்பர் சகா.
9:15am
*****

அப்பா said...
எதுவாயிருந்தாலும் நாமதான் அட்ஜஸ்ட் செய்துகிட்டு போகணும்பா. பாத்து நடந்துக்க.
9:20am
*****

முரளிக்கண்ணன் said...
வழக் கலக்
9:25am
*****

தங்ஸ் said...
ஏங்க. ரசத்துலே உப்பு போட மறந்துட்டேன். ஆபீஸ்லே உப்பு இருக்கும்ல. கொஞ்சம் போல போட்டுக்குங்க.
9:30am
*****

நண்பன் said...
டேய். உனக்காவது ரசத்துலே உப்பு இல்லே. எனக்கு எதுவுமே இல்லே. லஞ்சுக்கு பக்கத்து ஹோட்டலுக்குத்தான் போகப் போறேன். நீயும் வரியா?
9:35am
*****

சுரேஷ் said...
வாங்க அனானி -> ஆமா. நீங்கதான் பஷ்டு... :-))
வாங்க அம்மா -> சரி விடும்மா. இன்னும் கொஞ்ச நாள்தான். அதுக்கப்புறம் அங்கேதான் வரணும்.
வாங்க கார்க்கி சகா -> நன்றி.
வாங்க அப்பா -> கண்டிப்பாப்பா. நன்றி..
வாங்க முரளிகண்ணன் -> மிக்க நன்றிண்ணே...
வாங்க தங்ஸ் -> இங்கே உப்பு இருக்கும்மா. நான் போட்டுக்கறேன்.. கவலைப்படாதே.. நன்றி..
வாங்க நண்பா -> நான் வரலேப்பா. எனக்கு இந்த சாப்பாடே போதும். நாளைக்கு முடிஞ்சா பாப்போம். சரியா?
9:40am
*****

பழமைபேசி said...
இஃகி இஃகி
9:45am
*****

தங்ஸ்-அம்மா said...
ஏண்டி. வேலைக்குப் போற மனுசனுக்கு வயிராற எதுவும் செஞ்சி போடமாட்டியா? ரசம் சாதம்தானா செய்ய முடிஞ்சுது உன்னாலே. போன இடத்துலே எனக்கு கெட்ட பேர் வாங்கிக் கொடுத்துடுவே போலிருக்கே.
9:50am
*****

பரிசல் said...
Present sir
9:55am
*****

தங்ஸ் said...
அம்மா. இதிலே நீ தலையிடாதே. கட்டி கொடுத்துட்டேல்லே. நானாச்சு அவராச்சு. நாங்களே பாத்துக்கறோம்.
10:00am
*****

தம்பி said...
அம்மா. அவங்களுக்குள்ளே என்னமோ செய்துகிட்டு சாப்புடறாங்க. உனக்கென்ன வம்பு? எதுக்கு அவங்க விஷயத்துலே போய் தலையிடறே?
10:05am
*****

அக்கா said...
தம்பி.. நீ அடங்கு.. உனக்குன்னு ஒருத்தி வராமலேயா போயிடுவா? அப்போ நீ என்ன பண்றேன்னு பாக்கறேன்...
10:10am
*****

நர்சிம் said...
நச்
10:15am
*****

சுரேஷ் said...
வாங்க பழமைபேசி -> இஃகி இஃகி..
வாங்க அம்மா (மாமியார்) -> அட பரவாயில்லை விடுங்கம்மா. எனக்கு ஒண்ணும் பிரச்சினையில்லை.
வாங்க பரிசல் -> உங்க தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி...
வாங்க தங்ஸ் -> அம்மாவை அப்படி சொல்லாதேம்மா. அவங்க என்ன பண்ணுவாங்க சொல்லு.
வாங்க தம்பி, அக்கா -> ஹாஹா.. பாப்போம் அவன் என்ன பண்ணறான்னு... :-))
வாங்க நர்சிம் அண்ணே -> நன்றி...
10:20am
*****

தங்ஸ் said...
என்னங்க. வரும்போது இணையத்திலிருந்து '30 வகை சாம்பார்', '30 வகை கூட்டு' இத மாதிரி புத்தகத்தையெல்லாம் ப்ரிண்ட் அவுட் கொண்டு வாங்க. நாளையிலிருந்து ஒழுங்கா சமைச்சி போடறேன்.
10:25am
*****

சுரேஷ் said...
வாங்க தங்ஸ் -> கண்டிப்பா கொண்டு வர்றேம்மா. மிக்க நன்றி...
எல்லோருக்கும் -> சாப்பாட்டுப் பிரச்சினை இனிதே முடிந்தது. பின்னூட்டத்தில் விவாதித்த அனைவருக்கும் நன்றி...
10:30am
*****

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP