முன்: இந்த பதிவு நம் நண்பர் கிரி அவர்களின் இந்த பதிவைப்போலவே இருந்தால் அது என் குற்றமல்ல!!!
நாங்க இந்த வீட்டுக்கு வந்து ஒரு வருடம் ஆகி விட்டது. அதனால் இந்த ஒரு வருடத்தில் இந்த வீட்டைப் பற்றி நான் தெரிந்து கொண்டவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். புதிதாக வருபவர்கள் என்னை போல பல விஷயங்கள் புரியாமல் சிரமப்படாமல் இருக்க ஓரளவுக்கு உதவியாக இருக்கும்.
அனைத்து அறைகளும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டவை, முன்பு கொஞ்சம் அறைகள் குளிர்சாதன வசதிகள் செய்யப்படாமல் இருந்தன அவற்றை தற்போது காணமுடிவதில்லை.
இந்த வீட்டில் நடத்துனர் மட்டும் உண்டு. அவர் பேர் குடும்பத்தலைவி.
அடிக்கடி ஷாப்பிங் செல்ல வேண்டியிருப்பதால், கடனட்டை (ATM அட்டை இருந்தால்கூட ஓகே) கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். கடனட்டை இல்லாதவர்கள் காசை வைத்துக்கொண்டும் செலவழிக்கலாம்.
இங்கேயும் பரிசோதகர்கள் அவ்வப்போது வருவார்கள், நாங்கள் ஷாப்பிங் செய்தவைகளை பரிசோதனை செய்வார்கள்.
வீட்டுக் கதவுகள் சாவி போட்டுவிட்டால் போதும், தானாகவே திறந்து கொள்ளும்.
நடத்துனருக்கு ஓய்வு பெறும் வயது என்ன என்று தெரியவில்லை. மிக மிக வயதானாலும் கூட அவரே நடத்துனராக இருப்பார் எனத் தெரிகிறது.
தமிழகத்தை சேர்ந்த அல்லது தமிழகத்தில் இருந்து இங்கு குடி ஏறியவர்களே இந்த வீட்டுக்கு குடி வந்துள்ளனர்.
குறிப்பிடத்தக்க அளவில் ஆண் நடத்துனர்களும் உண்டு.
வீட்டிற்குள் எங்கேயும் ஏற இறங்க முடியாது, ஏனென்றால் வீட்டிற்குள் படிக்கட்டுகளே கிடையாது.
பெரும்பாலான நேரங்களில் தொலைக்காட்சி ஓடிக்கொண்டே இருக்கும்.
வரும்போதும், போகும்போதும் முன்பக்க கதவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். குதிக்க வேண்டுமென்றால் பால்கனியிலிருந்து குதிக்கலாம்.
வரும்போதும், போகும்போதும் எந்த ஒரு தள்ளு முள்ளும் இருக்காது. பொறுமையாகவே வருவார்கள், போவார்கள்.
வரவேற்பறையில் வயதானவர்களுக்கு முடியாதவர்களுக்கு கர்ப்பிணிகளுக்கு என்று தனி இருக்கைகள் உண்டு.
கார் இருக்கும் தளத்திற்கு செல்ல படிக்கட்டை பயன்படுத்த முடியாதவர்கள் மின் தூக்கியை (lift) பயன்படுத்தலாம்
ஆட்சி மொழியில் ஆங்கிலம் இந்தி மற்றும் தமிழ் உள்ளது. எனவே தமிழிலும் ஒலி பெருக்கியில் அறிவிப்பு செய்வார்கள். சாப்பாடு ரெடி என்ற அறிவிப்பானாலும் 3 மொழியிலும் எழுத பட்டு இருக்கும் (எனக்கு இதை முதன் முதலில் பார்த்த போது
மற்றும் கேட்ட போது நான் அடைந்த சந்தோசத்திற்கும் ஆச்சர்யத்திற்கும் அளவே இல்லை)
தொலைக்காட்சிப் பெட்டிக்கருகே மற்றும் மிக அருகே எதையும் சாப்பிடக்கூடாது மீறினால் அபராதம். தொலைக்காட்சிப் பெட்டி இருக்கும் இடத்திற்கு ஒரு அடி முன்பு மஞ்சள் கோடு (படமெல்லாம் போடலை) இருக்கும் அதற்க்கு முன்பே அமர வேண்டும் அதை தாண்டி அமர்ந்தால் அபராதம். இந்த அறிவிப்புகள் சமையலறையில் ஒலித்துக்கொண்டே இருக்கும். சமையலறையிலும் சாப்பிடக்கூடாது எதையும் குடிக்க கூடாது என்று அறிவித்துக்கொண்டே இருப்பார்கள்.
ஒவ்வொரு சாப்பாட்டின்போதும் என்ன மெனு என்று அறிவிப்பு செய்யப்படும் அதே போல அடுத்த வேளை மெனுவும் கூறப்படும்.
விமான நிலையத்தில் இருந்து இந்த வீட்டுக்கு ரயில் மூலமே வந்து விடலாம்.
மண் தரையே கிடையாது முழுவதும் கார்பெட் இருக்கும் அதனாலேயே தரையில் மண்ணை எங்கும் காண முடியாது.
இங்கு அடிக்கடி மழை பெய்யும்,பல மணி நேரம் தொடர்ந்து மழை பெய்வது இங்கு சர்வசாதாரணம். பால்கனி கதவு சாத்தியிருந்தால் போதும். மழை பெய்ததற்கான அடையாளமே இருக்காது.
தோசை எந்த வித பாதிப்பும் இல்லாமல் தரமாக இருக்கும். புதிதாக தோசை போடப்படுகிறது என்றால் ஏற்கனவே தோசைக்கல்லில் இருக்கும் தோசையின் குறிப்பிட்ட பகுதி வெட்டி எடுக்கப்பட்டு புதிதாக போடப்படும். இதன் மூலம் ஓவ்வொரு முறை போடப்படும் தோசையும் ஒரே மாதிரி உயரத்திலேயே வரும்.
வீட்டை சுத்தம் செய்யும் (வாக்கூம்) பணியாளர்கள் பெரும்பாலும் இந்தியர்களே குறிப்பாக தமிழர்கள்.
வாக்கூம் போடுவது பெரும்பாலும் வாரயிறுதியில் நடைபெறும். பகலில் என்றால் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் எல்லோரும் அலுவலகத்திற்கு சென்றபின் போடப்படும்.
இதுவே அதிகம் ஆகி விட்டதால் இன்னும் பல சுவராசியமான விஷயங்கள், அக்கம் பக்கத்து வீட்டு மக்கள் பற்றி அடுத்த இடுகையில் கூறுகிறேன்.
பின் - 1: இன்னும் அடுத்த இடுகையா என்று பயப்பட வேன்டாம். அது ச்ச்ச்சும்மாதான்.....!!!
பின் - 2: பின் - 2 எல்லாம் இல்லை. அவ்ளோதான்...
Read more...