Sunday, June 28, 2009

விருந்தினர்கள் - உரையாடல் சிறுகதைப் போட்டிக்காக

அன்றிலிருந்து 7 நாட்கள் முன்பு:

"ஏங்க, வெளிநாட்டிலேந்து என் கசின் குடும்பத்தோட லீவுலே வந்திருக்கா. நம்ம வீட்டுக்கும் அவங்களை சாப்பிட கூப்பிட்டிருக்கேன். அவங்க பெரிய்ய பணக்காரங்க. நம்மைப் பத்தி மட்டமா நினைச்சிக்கக் கூடாது. அதனால் என்ன பண்றோம்னா, நம்ம வீட்லே சில மாற்றங்களை பண்றோம். அவங்களை இம்ப்ரஸ் பண்றோம்".

"நாம நாமா இருக்கறவரைக்கும் எந்த பிரச்சினையும் இல்லே. எதுக்கு இந்த வெட்டி பந்தால்லாம்?"

"அதெல்லாம் கிடையாது. நான் எல்லாத்தையும் ப்ளான் பண்றேன். நீங்க வெறும் பணம் கொடுத்தா போதும். அவ வந்து போறவரைக்கும் வாயை மூடிக்கிட்டு சும்மா இருங்க பாப்போம்."

அன்றிலிருந்து 6 நாட்கள் முன்பு:

"ஹால் நடுவிலே இருக்கிற இந்த டிவியை உள்ளே எங்கேயாவது மாத்திடலாம்."

"ஏம்மா? டிவிக்கு என்ன ஆச்சு?"

"நாம எப்பவுமே டிவியே பாத்துக்கிட்டு உக்காந்திருப்போம்னு அவங்க தப்பா நம்மைப் பத்தி நினைச்சிடக் கூடாதில்லையா. அதனால்தான். டிவிக்குப் பதிலா அந்த இடத்தில் ஒரு மீன் தொட்டி வெச்சி, நிறைய மீன்களை வாங்கி விடலாம். எப்படி ஐடியா?"

"ஏம்மா. அது நிஜம்தானே. நீதான் நாள் முழுக்க உக்காந்து சீரியல் பாக்கிறியே. அது தவிர, இது என்ன அக்வேரியமா, மீன் தொட்டிய நடுவிலே வெச்சி, எல்லாரும் சுத்தி உக்காந்து வேடிக்கை பாக்க?"

"அது சரி. எப்படா என்னை திட்டலாம்னு இருங்க. மீன் தொட்டி வாங்க இன்னிக்கு போறோம்."

அன்றிலிருந்து 5 நாட்கள் முன்பு:

"இந்த சோஃபா அங்கங்கே கிழிஞ்சி அசிங்கமா இருக்கு. இன்னிக்கே போய் புதுசா ஒரு சோஃபா வாங்கறோம். கூடவே இந்த டைனிங் டேபிளும். அவங்க வந்தா, நாம எல்லாரும் ஒரே சமயத்திலே உக்காந்து சாப்பிட வேணாமா?"

"ஏம்மா.. சோஃபாக்கு ஒரு உறை மட்டும் வாங்கிப் போட்டோம்னா போதும். அவங்க ஒரே ஒரு வேளை சாப்பிட வர்றாங்க. ரெண்டு மூணு மணி நேரங்கள் மட்டுமே இங்கே இருக்கப் போறாங்க. அதுக்கு எதுக்கு புது டைனிங் டேபிள்? எவ்ளோ செலவாகும்னு யோசிச்சி பாத்தியா?"

"செலவானா பரவாயில்லை. நாளைக்கு அவ நம்ம வீட்டைப் பத்தி மத்தவங்ககிட்டே நல்லபடியா சொல்ல வேணாமா? எனக்கு அதுதான் முக்கியம்."

அன்றிலிருந்து 4 நாட்கள் முன்பு:

"அவ புருஷன் சைவமாம்."

"ஏம்மா, இருக்கிற பிரச்சினை போதாதுன்னு ஜாதி, மத பிரச்சினை வேறே கொண்டு வரப்போறியா? எனக்கென்னவோ பயமாயிருக்கு."

"ஐயோ.. அதில்லே... அவர் அசைவம் சாப்பிட மாட்டாராம். அதனால், நான் வெஜ்-பிரியாணியில் ஆரம்பிச்சி, நிறைய ஐட்டங்கள் பண்ணனும். "

"இதோ பாரும்மா. வெளிநாட்டுலேந்து வர்றவங்க நிறையல்லாம் சாப்பிட மாட்டாங்க. டயட், டயட்ன்னு இருப்பாங்க. நீ பாட்டுக்கு எக்கச்சக்கமா சமைச்சி எல்லாத்தையும் வேஸ்ட் பண்ணாதே. "

"சும்மா உளறாதீங்க. நம்ம வீட்டுக்கு வந்தவங்களுக்கு வயிறார சாப்பாடு போடவேணாமா. அதனால் விதவிதமா பண்ணித்தான் ஆகணும். நீங்க கொஞ்ச நேரம் வெளியே இருங்க. நான் சாப்பாட்டு மெனுவை யோசிக்கணும்."

அன்றிலிருந்து 3 நாட்கள் முன்பு:

"ஏங்க.. என்கிட்டே இருக்குற புடவையெல்லாமே ரொம்ப பழசாயிடுச்சு. இந்த சமயத்துலே இவங்க வேறே வர்றாங்க. அதனால் சாயங்காலம் கடைக்குப் போய் எனக்கு புதுசா ரெண்டு மூணு புடவை வாங்கறோம். நீங்களும் ஜல்லடை மாதிரி பனியன் போட்டுட்டு அவங்க முன்னாடி உக்காராதீங்க. புதுசா பனியன் சட்டை வாங்கிக்குங்க."

அன்றிலிருந்து 2 நாட்கள் முன்பு:

"இதோ பாருங்க. அவங்க எதிரே உம்மணாமூஞ்சி மாதிரி உக்காந்திருக்காதீங்க. ஏதாவது ஜோக்கு புத்தகங்களை வாங்கி படிச்சி, நாலைஞ்சி நல்ல ஜோக்குகளை தெரிஞ்சி வெச்சிக்கிட்டு, அப்பப்ப எடுத்து விடுங்க."

அன்று:

"ஹலோ... ஹேய் எப்படிம்மா இருக்கே.. சரி சரி.... எப்போ வர்றீங்க... உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டிருக்கோம். என்ன? அப்படியா? ஓ... சரி சரி... நோ ப்ராப்ளம்... ஆனா, அடுத்த தடவை ஊருக்கு வரும்போது முதல்லே எங்க வீட்டுக்குத்தான் வரணும்".

அன்றிலிருந்து 10 நாட்கள் கழித்து:

சொல்லச் சொல்ல கேட்காமே, ஏகப்பட்ட செலவுகள் பண்ணி, சமையலும் பண்ணி - கடைசியில் அன்னிக்கு அவ சொந்தக்காரங்க வீட்டுக்கு வரவேயில்லை.

இவளோட வெட்டி பந்தாவாலே இப்ப பத்து நாளா நான் பழைய்ய்ய்ய்ய சாதத்தை சாப்பிடுட்டு இருக்கேன். தினமும் ஆபீஸுக்கும் ஒரே புளியோதரையே எடுத்துட்டுப் போறதாலே, இப்ப எல்லாரும் என்னை - புளியோதரை சுரேஷ்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க.

அதனால் மக்களா - யார் வீட்டுக்காவது சாப்பிட வர்றேன்னு சொன்னீங்கன்னா, தலையே போனாலும் பரவாயில்லை, போய் மரியாதையா சாப்பிட்டு வந்துடுங்க. இல்லேன்னா, அந்த வீட்டுலே எப்படி கஷ்டப்படுவாங்கன்னு என்னைப் பாத்து தெரிஞ்சிக்கோங்க...

ஐயயோ.. இவ வர்ற சத்தம் கேக்குது. அதுக்குள்ளே இந்த டைரியை மறைச்சி வெச்....

*****

உரையாடல்: சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதிய சிறுகதை. போட்டியின் விவரங்கள் இங்கே இருக்கு.

Read more...

Thursday, June 25, 2009

நொறுக்ஸ் - வியாழன் - 6/25/09

போன வாரம் ஒரு நாள் எங்க ஊர் மாலில் சஹானாவை விளையாட விட்டுட்டு, சும்மா வேடிக்கை பாத்துட்டு உக்காந்திருந்தோம். திடீரென்று பின்னாலிருந்து ஒரு ஆள் வந்து என்னைக் கட்டி பிடித்து உலுக்கினார். திடுக்கிட்டு திரும்பி பார்த்தால், அது எங்க அலுவலக மேனேஜர்களில் ஒருவர் - சீனர்.

சிறிது நேரம் பேசிப் போனபிறகு, தங்ஸ் என்னிடம் - அது யாருங்க? உங்களுக்கு கட்டிங் (முடி திருத்துபவர்) பண்றவரான்னாங்க.

நல்லவேளை அவருக்கு தமிழ் தெரியாது.. தெரிஞ்சிருந்தா, முடியை இல்லே, என் தலையையே எடுத்திருப்பாரு. முடியிழையிலே தப்பிச்சேன் அன்னிக்கு....

********

போன வருடம் கூட வேலை பார்க்கும் நண்பரிடம் விளையாட்டாக பேசிக்கொண்டிருந்தபோது, ஊதிய உயர்வு கிடைத்த விஷயத்தை சொன்னேன். அவரோ, நேராக எங்க தலயிடம் போய் - ஒருத்தருக்கு மட்டும் உயர்வு கொடுத்துட்டு மத்தவங்களுக்கெல்லாம் கொடுக்காமே விட்டுட்டீங்களே? - அப்படின்னுட்டாரு.

நானும் ஒரு வருடமாக அந்த தலயை பார்த்தும் பார்க்காமலும் ஓடிக் கொண்டிருந்தபோது, இப்போ அவர் பக்கத்திலேயே எனக்கும் சீட் போட்டு உக்கார வெச்சிட்டாங்க.

உன் சம்பளத்தை எப்படி மத்தவங்ககிட்டே பகிர்ந்துக்கலாம்னு அவரும் கேட்டுடப்போறாருன்னு நான் பயந்து கொண்டிருக்க, அவரோ அதைப் பத்தி மட்டும் பேசாமல் மத்த விஷயங்களைப் பத்தியே பேசறாரு.

கேள்வி கேட்டு பதில் வாங்கறதை விட, கேள்வி கேக்காமலேயே தவிக்க விடுறதுன்றது நல்ல டெக்னிக்தான் - இது நாம எந்த பக்கத்தில் இருக்கோம்றத பொறுத்து... என்ன சொல்றீங்க?

********

ரொம்ப டென்சனா இருக்கும்போதெல்லாம், யூட்யூபில் சார்லி சாப்ளின் படங்களைப் பார்ப்பது வழக்கம். அப்படி பார்க்கும்போது, 1977ல் அவருக்கு கௌரவ ஆஸ்கர் பட்டம் வழங்கிய இந்த வீடியோவை பார்த்தேன். நிறைய பேர் ஏற்கனவே பார்த்திருப்பீங்க. பாக்காதவங்க ஒரு தடவை பாத்துடுங்க.

http://www.youtube.com/watch?v=J3Pl-qvA1X8

(யூட்யூப் வீடியோவை இங்கே இணைக்க முடியல... அதனால் உரலைப் பிடிச்சி அங்கேயே போய் பாத்துடுங்க!).

கிட்டத்தட்ட நூறு வருஷமா கோடிக்கணக்கான மக்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் சார்லிக்கு, அரங்கிலிருப்பவர்கள் ஒரு ஐந்து நிமிடம் தொடர்ச்சியாக கைத்தட்டி உற்சாகப் படுத்துவதும், அதுக்கு அவர் காட்டும் பாவனைகளும், யாரையும் மெய் மறந்து உணர்ச்சி வசப்படுத்தும்.

எப்படி என் தந்தை எனக்கு சார்லி சாப்ளின், லாரல் ஹார்டி இவர்களை அறிமுகப்படுத்தி வைத்தாரோ, அதே மாதிரி நானும் சஹானாவுக்கு இப்போது சார்லியை அறிமுகப் படுத்தியிருக்கிறேன். நகைச்சுவை உணர்வு இல்லாமல் யாராவது உயிர் வாழ முடியுமா என்ன?

வாழ்க சார்லி சாப்ளின்...

*******

இன்னும் ரெண்டு மூணு இடுகைகள் போட்டா, பூச்சாண்டியின் ஹிட்ஸ் 1 லட்சத்தை தொட்டு விடும்னு தங்ஸிடம் சொன்னேன்.

அவங்கதான் ஏதாவது முக்கிய நாள், milestone இப்படியெல்லாம் வராதா, ஏதாவது நகைகள் வாங்க மாட்டோமான்னு காத்திருக்காங்களே?. உங்க கிறுக்கல்களையும் லட்சம் தடவை யாரோ படிச்சிருக்காங்க. மரியாதையா எனக்கு ஒரு தங்க வளையல் வாங்கிக் கொடுத்துடுங்கன்னுட்டாங்க.

என்னம்மா, அவங்கவங்க அஞ்சு லட்சம், பத்து லட்சம்னு போயிட்டிருக்காங்க. நான் இப்பத்தான் - மாமா பிஸ்கோத்துன்ற மாதிரி முட்டிமோதி ஒரு லட்சம் வந்திருக்கேன். அதுக்கே இவ்ளோ செலவான்னு கேட்டாக்கா - காக்கைக்கும் தன் ஹிட்ஸ் பொன் ஹிட்ஸ்தானேன்றாங்க.

எனக்கு ஒரு லட்சம் வந்ததுக்கு சந்தோஷப்படறதா, இல்லே என்னை காக்கைன்னுட்டங்களேன்னு வருத்தப்படறதான்னு தெரியல.

*****

Read more...

Tuesday, June 23, 2009

பதவி உயர்வு - அரை பக்கக் கதை

"இங்கே பாருங்க சுரேஷ். இது ஒரு மென்பொருள் நிறுவனம். இங்கே தொழிற்சங்கமெல்லாம் கிடையாது. நீங்களும் சங்கத் தலைவர் மாதிரியெல்லாம் நடந்துக்காதீங்க".

"இது என்ன சார் அநியாயமா இருக்கு. கூட வேலை பாக்குறவங்களுக்காக குரல் கொடுத்தா தலைவர்னு சொல்லிடறதா? அப்படி நான் என்ன தப்பா கேட்டுட்டேன்? நம்ம குழுவில் இருக்கிற மாலா தன் திருமண நாளுக்காக லீவ் கேட்டப்போ, அதை நீங்க மறுத்துட்டீங்க. நானும் நம்ம வாராந்திர மீட்டிங்கில் எல்லார் எதிரிலேயும் அதை தட்டிக் கேட்டு - அவங்களுக்கு விடுப்பு வாங்கிக் கொடுத்தேன். அது தப்பா"?

"அந்த சமயத்தில் நம்ம ப்ராஜெக்ட் என்ன நிலைமையில் இருந்துதுன்னு உங்களுக்குத் தெரியும். டெலிவரி ரெண்டு நாள் தள்ளிப் போனாக்கூட, க்ளையண்ட் நம்மை குதறிடுவான்னும் உங்களுக்குத் தெரியும். அப்படி இருந்தும்கூட நீங்க அவங்களுக்காக பரிஞ்சு பேசினது நல்லாயில்லே".

"எனக்கு என் நண்பர்கள்தான் முக்கியம். அவங்களுக்காக நான் யாரை வேணா எதிர்த்துக் கேள்வி கேப்பேன். நீங்க என்னை தடுக்க முடியாது".

"சரி. அதைக்கூட மன்னிச்சி விட்டுடலாம். ஆனா நீங்களே அடிக்கடி சொல்லாமே மட்டம் போட்டுடறீங்க. அதுக்கு என்ன சொல்றீங்க"?

"இருக்கற லீவைத்தானே எடுக்கறேன்? அடுத்த நாள் வந்து எல்லா வேலைகளையும் விரைவா முடிச்சி கொடுத்திருக்கேனே"?

"உங்க வேலைத் திறமையை பார்த்து, உங்களையே இந்த ப்ராஜெக்டின் மேனேஜராக பதவி உயர்வு செய்யணும்னு இப்பத்தான் நம்ம கம்பெனி தலைவரை பாத்து சொல்லிட்டு வந்தேன். நீங்க என்னடான்னா, இப்படி பேசறீங்க"...

*****

"ஏம்மா மாலா. நாளைக்கு வெறும் உங்க பிறந்த நாள்தானே? நீங்க ஆஸ்பத்திரிக்குப் போய் மறுபடி ஒருதடவை பொறக்கப் போறதில்லையே? அப்புறம் எதுக்கு லீவ்? ஒரு மணி நேரம் பர்மிஷன் தர்றேன். கோயிலுக்கு போணும்னா போயிட்டு, நேரா ஆபீசுக்கு வந்துடுங்க. நிறைய வேலை இருக்கு".

மேனேஜர் சுரேஷின் காட்டுக் கத்தல், மூடப்பட்ட அவரது அறையிலிருந்து தெளிவாக கேட்கிறது.

*****

Read more...

Monday, June 22, 2009

கடையோட மாப்பிள்ளை - இறுதிப் பகுதி!!!

முன்குறிப்பு : ரொம்ப நாளாயிடுச்சு போன பகுதி போட்டு. அதனால, இந்த நாடகத்தை மறந்தவங்க, 'நாடகம் மாதிரி'ன்ற லேபிளை புடிச்சு - முன்னாடி போட்ட பகுதிகளை படிச்சிடுங்க.

******

மா.அப்பா: மாது, உங்கம்மா எப்போ கோயிலுக்கு வந்தாலும் அந்த மண்டபத்துலேதான் உக்காந்திருப்பா. வா. அங்கே போய் பாக்கலாம்... டேய். அங்கே பாரு அந்த தூணுக்குப் பக்கத்திலே... அது உங்க அம்மாதானே?

மாது : அப்பா. அது கோயில் தூண். அதுக்குப் பக்கத்துலே இருக்கறது கல் யானை. உனக்கு யானைக்கும் அம்மாவுக்கும் வித்தியாசமே தெரியல.

மா.அப்பா: டேய். யானை எந்த காலத்துலேடா புடவை கட்டிச்சு? அது உங்கம்மாவேதான்... வா போய் பக்கத்துலே பாக்கலாம்.

மாது : பக்கத்துலே நீ போய் பாத்துட்டு, அவங்க அம்மாவாயிருந்தா என்னைக் கூப்பிடு. அது அம்மாவா மட்டும் இல்லேன்னா, அவங்களே போலீஸைக் கூப்பிட்டு உன்னை ஈவ்டீஸிங்லே உள்ளே போட்டுடுவாங்க.

(பக்கத்தில் போகிறார்கள்)

மாது : அம்மா. என்னம்மா இங்கே வந்து உக்காந்திருக்கே. வா வீட்டுக்குப் போகலாம்.

மா.அம்மா : முடியாது. நீதான் ஜானகிய கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னியே. என்கூட பேசாதே.

மாது : நாந்தான் அப்புறமா ஓகே சொல்லிட்டேனே. இப்போ அவதானே என்னை வேணாம்னுட்டா. நியாயமா பாத்தா, அவங்கம்மாதான் ஓடிப்போயிருக்கணும். நீ தப்பா ஓடி வந்துட்டே.

மா.அம்மா : சரி. இப்ப கேக்கறேன். உனக்கு இந்த கல்யாணத்துலே இஷ்டமா? ஜானகியை சம்மதிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு.

மாது : என்னை வேணாம்னு சொன்னவ கிட்டே, எந்த மூஞ்சிய வெச்சிக்கிட்டு மறுபடி போய் கேப்பேன்?

மா.அம்மா : அதுக்காக எந்த மூஞ்சியையும் தேடவேண்டாம். இதே மூஞ்சியை வெச்சிக்கிட்டு கேட்டாலே போதும். கொஞ்சம் அந்தப்பக்கம் திரும்பிக்கிட்டு சத்தம் போட்டு - என்னை கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேளு. என்ன நடக்குதுன்னு பாரு.

மாது : அம்மா. இதுக்குதான் அதிகமா தொலைக்காட்சி பாக்காதேன்னு சொன்னேன். இப்ப பாரு. கிழக்கு பக்கம் பாத்து நில்லு. சத்தமா கத்தி பேசுன்னு தத்துப்பித்துன்னு உளர்றே. அப்பா. வீட்டுக்குப் போனவுடனே, அம்மாவை நல்ல டாக்டர்கிட்டே காட்டணும்.

மா.அம்மா : டாக்டர்லாம் வேணாம்டா. அம்மா சொல்றத கேளுடா மாது. தயவு செஞ்சி ஒரு தடவை நான் சொன்னதை கத்தி சொல்லு.

மாது : சரி. கல்யாணம் ஆறவரைக்கும் எல்லா ஆம்பளைகளும் அம்மா சொல்றத கேட்டுத்தானே நடக்கறாங்க.

மா.அம்மா : டேய். அப்போ கல்யாணம் ஆனப்பிறகு என் பேச்சை கேக்கமாட்டியா?

மாது : என்னம்மா இப்படி சொல்லிட்டே.. உன் பேச்சை கேக்காமே என்னாலே இருக்க முடியுமா?

மா.அம்மா : அதானே பாத்தேன்.

மாது : ஆனா - உன் பேச்சைக் கேக்கறதுக்கு முன்னாடி - அப்படி கேக்கலாமான்னு ஜானகிகிட்டே ஒரு வார்த்தை கேட்டுடுவேன்.

மா.அம்மா : சரி என்னமோ பண்ணித் தொலை. இப்போதைக்கு நான் சொன்னதை சொல்லப்போறியா இல்லையா?

மாது : ஐயயோ சொல்லிடறேம்மா.. அப்போ வீட்டை விட்டுட்டு ஓடினமாதிரி இப்போ கோயிலை விட்டுட்டு ஓடிடாதே. என்னாலே கோயில் கோயிலா ஒவ்வொரு தூணுக்குப் பின்னாடியும் உன்னை தேடமுடியாது. பாக்கறவங்கல்லாம் இப்பவே என்னை தப்பா நினைக்கறாங்க.

மா.அம்மா : இதுதான் உனக்கு லாஸ்ட் சான்ஸ்டா மாது...

மாது : சரி சரி... என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா ஜானகி...

ஜானகி: கண்டிப்பா பண்ணிக்கிறேன் அத்தான்...

(ஜானகி பக்கத்து தூண் மறைவிலிருந்து வெளியே வருகிறார்).

மாது : அட... நீயும்.. நீங்களும்... இங்கேதான் இருந்தீங்களா? எனக்கு அப்பவே சந்தேகம் வந்துச்சு. அம்மா இப்படி கத்தல்லாம் சொல்ல மாட்டாங்களேன்னு.

ஜானகி: பரவாயில்லை. என்னை நீங்க நீன்னே கூப்பிடலாம். இதெல்லாம் உங்க அம்மாவோட ப்ளான் தான். என்னை சம்மதிக்க வெச்சதும் அவங்கதான்.

மாது : சரி. இன்னும் 20 - 30 தூண் இருக்கே. யாரெல்லாம் ஒளிஞ்சிருக்காங்க. எல்லாரையும் ஒரே தடவையில் வெளியே வந்துடச் சொல்லும்மா. என்னாலே திரும்பத் திரும்ப கத்த முடியாது.

மா.அம்மா : அவ்ளோ பேரெல்லாம் கிடையாதுடா. எல்லாம் ஜானகியோட அப்பா, அம்மா அப்புறம் நம்ம ஜோசியர் அவ்ளோதான்.

(எல்லோரும் வெளியே வருகின்றனர்).

மாது : அப்படா இவ்ளோ பேர்தானா? நான் கூட இந்த வாத்தியக்காரங்க, கல்யாணம் பண்ணி வைக்கிற ஐயரு இப்படி எல்லாரும் ஒளிஞ்சிருந்திருப்பாங்கன்னு நினைச்சேன்.

ஜா.அப்பா: மாப்ளே, இப்ப சொல்லுங்க. ஜானகிய கல்யாணம் பண்ணிக்க உங்களுக்கு சம்மதம்தானே?

ஜானகி: அப்பா, மறுபடி மறுபடி அவரை தொந்தரவு பண்ணாதீங்க. அவர்தான் அப்பவே சரி சொல்லிட்டாரே. ஒரு நல்ல முஹூர்த்தம் பாருங்க. சட்டுபுட்டுன்னு கல்யாணத்தை முடிச்சிடலாம்.

ஜா.அப்பா: இரும்மா. இன்னும் அந்த கண்டிஷனுக்கு மாப்பிள்ளை ஓகே சொல்லவேயில்லையே?

மாது : அது என்ன கண்டிஷன்?

ஜா.அப்பா: கல்யாணத்துக்கு அப்புறம் வீட்டோட மாப்பிள்ளையா இருக்க சம்மதமா மாதுவுக்கு?

மாது : இது என்ன புது கண்டிஷன்? இதுக்கெல்லாம் என்னாலே ஒத்துக்க முடியாது.

மா.அம்மா : மாது.. என்னடா இப்படி சொல்லிட்டே?

மாது : அம்மா. வீட்டோட மாப்பிள்ளையால்லாம் என்னாலே இருக்க முடியாது. வேணும்னா...

மா.அம்மா : வேணும்னா..

மாது : கடையோட மாப்பிள்ளையா இருந்துட்டு போறேன்.

ஹாஹாஹா...

(அனைவரும் சிரித்துக் கொண்டே கடவுளை வேண்டுவதற்கு கோயிலுக்குள் போகின்றனர்).

*******சுபம்*************

Read more...

Monday, June 15, 2009

காலங்கார்த்தாலே எவ்ளோ டென்சன்?

காலங்கார்த்தாலே எழுந்து தயாராகி, போக்குவரத்தில் மாட்டி, அலுவலகத்திற்கு போய் அன்றைய வேலையை துவக்குறது எவ்ளோ கஷ்டம்னு வேலைக்குப் போற எல்லோருக்கும் தெரியும்.

இந்த அரைபக்கக் கதையிலேயும் ஒருத்தரு அலுவலகத்திற்கு போறாரு. என்ன பண்றாரு, எப்படி போறாருன்னு பாப்போம்.

சும்மா ஒரு ஜாலிக்காக - இங்கே அவரு பேசறத மட்டும் பாப்போம். மத்தவங்க பேசறதெல்லாம் உங்க கற்பனைக்கே.

*****

கார்த்தாலே சீக்கிரமா எழுப்பச் சொன்னேனே... ஏன் எழுப்பலே...

@#$@

ஏம்மா, சரியா 9 மணிக்கு ஆபீஸ்லே இருக்கணும்னு சொன்னேனே... என்னோட சாக்ஸ் எங்கே போச்சு??

@#$

இவ பால் குடிக்கலேன்னா பரவாயில்லே. முதல்லே ப்ரெட்டை கொடு. சாப்பிடட்டும்.

#$$$

வழியில் ஆயிரத்தெட்டு சிக்னல் வேறே. நான் வர்றேன்னு அவனுக்கு எப்படி தெரியுமோ? சரியா ரெட் போட்டுடுவான்.

@#%%

மீட்டிங்லே 5 நிமிஷம் லேட்டாச்சுன்னா, பிடிச்சு குதறிடுவாங்க. சாப்பாடு கட்ட லேட்டாச்சுன்னா விட்டுடு. நான் வெளியிலேயே சாப்பிட்டுக்கறேன்.

#%%@

இன்னிக்கு கார்த்தாலே சீட்டை விட்டு அங்கே இங்கே நகர முடியாது. அதனால் பக்கத்து பாங்க்லே இந்த செக்கை போட்டுடு.

@#%@

சொல்லிட்டே இருக்கேன்ல. நடுவிலே வெளியே வரமுடியாதுன்னு. மழை வந்தா என்ன, குடை பிடிச்சிண்டு போய் இவளை ஸ்கூல்லேந்து கூட்டிட்டு வா. முடியாதுன்னா இவ இன்னிக்கு ஸ்கூலுக்கு போகவே வேணாம்.

@#%@

நடுநடுலே ஃபோன் பண்ணி தொந்தரவு பண்ணாதே. மீட்டிங்லே பிஸியா இருப்பேன்.

(அலுவலகம் போகும் வழியில்)

சார்... முன்னாடி பாருங்க.. பச்சை போட்டு மூணு செகண்டாயிடுச்சு. வண்டிய எடுங்க... பப்பரப்பான்னு வேடிக்கை பாத்துட்டு நிக்கறீங்களே...

@#$

ஏண்டா டேய். சொல்லிட்டு வந்துட்டியா வீட்லே?

(அலுவலகத்தில் - மணி 9.05)

அடேங்கப்பா.. காலையிலே வீட்லேந்து ஒருவழியா கிளம்பி ஆபீஸ் வரதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுது. இதுலே அஞ்சு நிமிஷம் லேட்டு வேறே. மக்கள்லாம் என்னை ஆளைக் காணோம்னு தேடறதுக்குள்ளே, வேலையை ஆரம்பிச்சிடுவோம்.

www.thamizmanam.com

*****

Read more...

Sunday, June 14, 2009

அடுத்த 32 கேள்விகள் என்னவாக இருக்கும்?

சமீப காலமாக, இணையத்தில் தொடர் விளையாட்டாக உலவிக் கொண்டிருப்பது - 32 கேள்வி பதில்கள்.


அந்த கேள்விகளை தயாரிச்சவரு அதுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு யோசித்திருப்பார்னு நினைச்சிப் பார்த்தபோது, என் உடல் பயங்கரமாக சிலிர்த்தது. அப்புறம் பாத்தா, அது வேறே ஒண்ணுமில்லே - வீட்டு ஜன்னலிலிருந்து சாரல் அடிச்சிண்டிருந்தது. உடனே எல்லாத்தையும் மூடிட்டு, என் சொந்தக்கண் மற்றும் அறிவுக்கண்ணை மட்டும் திறந்து வெச்சிண்டு - கணிணியைப் பார்த்தேன்.


நம் பொது அறிவை வளர்த்துக் கொள்ள மிகவும் முக்கியமான கேள்விகள் அந்த 32ல் பல இருந்தன. நம் நண்பர்கள் பலர் படு சீரியஸாக அவற்றிற்கெல்லாம் பதில் சொல்லியிருப்பதால், நான் அந்த கேள்விகளை அடையாளம் காட்டப்போவதில்லை. ஆனா, அதே மாதிரி கேள்விகள் பலவற்றை அதன் தயாரிப்பாளர் விட்டுட்டார்னு மட்டும் புரிஞ்சுது. அதனால், நானும் - மல்லாக்க, பக்கவாட்டில், தலைகுப்புற - எப்படியெல்லாமோ படுத்து யோசிச்சி, அடுத்த 32 கேள்விகளை தயார் செய்யலாம்னு பாத்தேன். ஆனால் எவ்வளவு யோசித்தாலும் எனக்கு தோணினது வெறும் பத்து மட்டுமே.


இவற்றையும் யாராவது தொடராக எண்ணிக்கொண்டு பதிலளிக்க ஆரம்பித்தால், அதற்கு கம்பெனி பொறுப்பாகாது.

சரி.. கேள்விகளுக்குப் போகலாமா?

*****

உங்க மூக்கு உங்களுக்கு பிடிக்குமா?

உங்க பக்கத்துலே யாரு இருக்கறதுக்காக வருத்தப்படறீங்க?

கண்ணாடி முன்னாடி நின்னு உங்க பற்களை எண்ணியிருக்கீங்களா? எவ்வளவு தேறுது?

(திருமணமான ஆண்களுக்கு மட்டும்) நீங்க கடைசியா சிரித்தது எப்போது?

சுடுதண்ணீரில் குளிக்க விருப்பமா அல்லது ஜில் தண்ணீரிலா?

படிக்கட்டில் ஏறும்போதும் இறங்கும்போதும் - ஒவ்வொரு படிகளாக போவீர்களா அல்லது இரண்டிரண்டு படிகளாக தாண்டிப் போவீர்களா?

இட்லிக்கு எதை தொட்டுக்கொண்டு சாப்பிட பிடிக்கும்? (தரையை / சுவற்றை தொட்டுக் கொள்வேன் என்று அறுக்க வேண்டாம்!!).

மோதிரம் போட்டுப்பீங்களா? எந்த விரலில் போட்டுப்பீங்க?

உங்க தலையில் வகிடு எந்தப்பக்கம் எடுப்பீங்க? இடது, வலது அல்லது நடு?

எந்த விரலில் நகம் கடிக்க அதிகம் விரும்புவீர்கள்?

*****

Read more...

Tuesday, June 9, 2009

நொறுக்ஸ் - செவ்வாய் - 06/09/09

பின்தொடர்பவர்கள்

ரெண்டு நாளைக்கு முன்னாடி 90ஆ இருந்த பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை, திடீர்னு சரசரன்னு ஏறி இன்னிக்கு 102க்கு வந்துடுச்சு. நாம வழக்கமா போடற மொக்கையத்தானே போடறோம். அப்படியிருந்தும் எப்படி இப்படின்னு ராத்திரியெல்லாம் ஒரே சந்தேகம்.

எது எப்படியோ இருந்துட்டு போகட்டும், வந்தவங்களுக்கு நன்றி சொல்லலாம்னு முடிவு செய்து... பின்தொடரும் முதல் நண்பரிலிருந்து 102வது நண்பர் வரை அனைவருக்கும் - நன்றி நன்றி நன்றி. (மூணு தடவைதான் சொல்லியிருக்கேன். எல்லாரும் பி(ரி)ச்சி எடுத்துக்குங்கப்பா!).


*****

அலுவலகம்

ஒரு பாழடைஞ்ச கட்டிடத்தில் ஒரு ஓரத்தில் சும்மா(!!) உக்காந்திருந்தவனை, இன்னொரு பிஸியான கட்டிடத்துக்கு மாத்தினதோடில்லாமே, போற வர்றவங்க எல்லாரும் பாக்கறா மாதிரி நட்ட நடுவில் உக்கார வெச்சி, வேலையும் பாக்கச் சொன்னா எவ்ளோ கஷ்டமா இருக்கும்னு ஒரு பதினைஞ்சு நாளுக்கு முன்னால்தான் எனக்கு தெரிஞ்சுது. யாராச்சும் சொன்னாங்களான்னு கேக்காதீங்க. அப்படி உக்காந்தவன் நாந்தான்.


பள்ளியில் படிக்கும்போது பாடப்புத்தகத்தில் குமுதத்தை மறைச்சி வெச்சி படிச்சா மாதிரி, இப்போ அவுட்லுக்குக்கு பின்னாடி, தமிழ்மணத்தை திறந்து வெச்சி படிக்கவும், பூச்சாண்டி/ ப்ளாக்கரை திறந்து வெச்சி தட்டச்சவும் வேண்டியிருக்கு.


எதையாவது கிறுக்கணும்ற இந்த ஆர்வம் எப்போ குறையும்னு சொல்ல முடியாது. அப்படி குறையற வரைக்கும் கிறுக்கித்தான் பாப்போமேன்னு நானும் விசைப்பலகையை தட்டிக்கிட்டிருக்கேன். பாப்போம் எவ்ளோ தூரம் போகுதுன்னு.


*****

மென்பொருள் நிறுவனங்களில் மந்த நிலை எப்போ தீரும்னு தெரியல. போன மாசம் எங்க நிறுவனத்தில் (உலகம் முழுவதும்) 5% ஊதிய குறைப்பு செய்தவங்க, இந்த மாசம் முதல் (இந்தியாவில்) ஊழியர்களுக்கு அலுவலக வளாகத்தில் வண்டியை நிறுத்த கட்டணம் (பார்க்கிங் சார்ஜ்) வசூலிக்கிறார்களாம்.

இன்னும் கணிணியில் உட்கார்ந்து வலைமேய்வதற்கு, ப்ரௌசிங் செண்டர் போல் ஒரு மணி நேரத்துக்கு ஒரு குறிப்பிட்ட கட்டணம் கேக்காமே இருந்தா சரின்னு பேசிக்கிட்டிருந்தபோது - இன்னிக்கு டி.சி.எஸ் (TCS) உயரதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட ஊதிய உயர்வு பற்றிய செய்தியை பார்த்தோம். என்னத்த சொல்ல?

இதுக்குத்தான் நான் அப்பவே நேரடியா ‘டைரக்டர்' (சினிமா டைரக்டர் இல்லே!!) ஆயிடறேன்னு சொன்னேன். வீட்லே கேக்க மாட்டேன்றாங்க.

*****

அந்த மூணு வார்த்தைகள் - ஒரு சிறிய கதை

என் மனதை கவர்ந்த அவகிட்டே கொடுப்பதற்காக ஒரு கடிதத்தை எழுதி வெச்சிக்கிட்டு, ஒரு வாரமா முயற்சி பண்றேன். எப்பவும் வீட்லே யாராவது ஒருத்தர் அவகூடவே இருக்கறதால், அவளை தனியா சந்திக்கவே முடியல. அதிசயமா ஒரு தடவை அப்படி அவ தனியா வந்தப்போ, இந்த கடிதத்தைக் கொடுக்க எனக்கு தைரியம் வரலை.

மனசுலே இருக்கறதை அப்படியே பக்கம்பக்கமா கொட்டிடலாம்னுதான் முதல்லே நினைச்சேன். ஆனா, எல்லோரும் சொல்லும் அந்த மூணு வார்த்தைகளை மட்டும் சொன்னால் போதும் - அதுவே 'நச்'சுன்னு இருக்கும்னு முடிவு பண்ணி - கூடுதல் எஃபெக்டுக்காக மேலும் ஒரு வார்த்தையைக் கூட்டி கடிதத்தை எழுதி முடிச்சிட்டேன்.

கடிதத்தை பார்த்தபிறகு அவ என்ன சொல்வாளோன்னு பயமா இருந்தாலும், அதை கொடுக்காமே இருந்தா என் நிம்மதி போயிடும்ற நிலை வந்ததால் இன்னிக்கு எப்படியாவது கொடுத்திடணும்னு முடிவு பண்ணிட்டேன்.

அதோ அங்கே அவ தனியா வர்றா. இதைவிட்டா நல்லா சான்ஸ் திரும்ப கிடைக்கவே கிடைக்காது. சுத்திமுத்தி யாராவது இருக்காங்களான்னு ஒரு தடவை பாக்குறேன். நல்லவேளை யாருமில்லை.

எதுக்கும் ஒரு தடவை என் கடிதத்தை எடுத்து ஏதாவது எழுத்துப்பிழை இருக்கான்னு பாக்கறேன். கடித மேட்டரை ஒரு தடவை சொல்லி பாத்துக்கறேன்.

"ங்கொய்யாலே. வரவர சாப்பாடே சரியில்லே".


*****

Read more...

Monday, June 8, 2009

கணவனிடம் மனைவி அன்பா பேசினா????

மனைவி: என்னங்க, எப்ப பாத்தாலும் ஆபீஸ் வேலையாவே இருக்கீங்க. இன்னிக்கு ஒரு நாள், கொஞ்ச நேரம் என்கிட்டே பேசுங்களேன். நாம ரெண்டு பேரும் உக்காந்து பேசியே எவ்வளவு நாளாயிடுச்சு?

கணவன்: பேசறதுக்கு விஷயம் ஒண்ணுமேயில்லையே. நான் கொஞ்சம் வேலையா இருக்கேம்மா.

மனைவி: எப்ப கேட்டாலும் இப்படியே சொல்லுங்க. கல்யாணத்துக்கு முன்னாடியெல்லாம் ஃபோன் பண்ணி என்கிட்டே பேசிக்கிட்டேயிருப்பீங்க. இப்ப அந்த மாதிரியெல்லாம் இல்லே. ஒரு தடவை நான் ஆபீஸுக்கு ஃபோன் போட்டபோது - ராங் நம்பர்னு சொல்லி வெச்சிட்டீங்க.

கணவன்: அது ஆபீஸ் டென்ஷன்லே சொன்னதும்மா. சரி சொல்லு. என்ன பேசணும் இப்போ.

மனைவி: நம்ம பக்கத்து வீட்டுலே அந்தம்மா என்ன பண்ணாங்கன்னு தெரியுமா... அது....

கணவன்: இரு இரு... எனக்கு இந்த பக்கத்து வீட்டு, எதிர் வீட்டு வம்பெல்லாம் வேணாம். வேற ஏதாவது பேசு.

மனைவி: சரி. புதுசா வந்திருக்கிற விஷால் படம் இணையத்துலே பாத்தேன். அதோட கதை என்னன்னா...

கணவன்: வெயிட். தமிழ் படத்துக் கதையெல்லாம் சொல்லி என் நேரத்தை வேஸ்ட் பண்ணாதே. அதெல்லாம் ஒரே டெம்ப்ளேட் கதைதான். வேறே ஏதாவது இருக்கா பேசறதுக்கு?

மனைவி: நாளைக்கு என்ன சமைக்கட்டும்? பிஸி பேளா பாத் பண்ணி ரொம்ப நாளாச்சே, அது பண்ணட்டுமா?

கணவன்: சமையலைப் பத்தி என்கிட்டே கேக்காதேன்னு எவ்ளோ தடவை சொல்லியிருக்கேன்? நெக்ஸ்ட்.. நெக்ஸ்ட்...

மனைவி: அடுத்த தடவை விஜயகாந்த் வந்தா, தமிழகத்துக்கு நல்லதுன்னு நான் நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க?

கணவன்: அரசியல் பத்தி ஒண்ணுமே தெரியாத உன்கிட்டே நான் என்னத்த பேசறது? ஒரு நாள் உக்காந்து உனக்கு அரசியல் பாடம் எடுத்தாதான் சரியாயிருக்கும்.

மனைவி: சரி விடுங்க. உங்க ஆபீஸ்லே நடந்த ஏதாவது ஒரு தமாஷ் விஷயத்தைப் பத்தி சொல்லுங்களேன்.

கணவன்: என் ஆபீஸ் விஷயத்துலே தலையிடாதேன்னு சொன்னா கேக்கமாட்டியா? அதை விட்டுடு.

மனைவி: கோலங்கள் சீரியல்லே என்ன அநியாயம் பாத்தீங்களா? அவ...

கணவன்: அம்மா சாமி. ஆள விடு. சீரியல் கதை சொல்லி என்னை கொல்லாதே. சுவாரசியமா எதுவுமே பேசமாட்டியா?

மனைவி: சரி. நேத்து நான் தொலைபேசும்போது உங்கம்மா என்ன சொன்னாங்க தெரியுமா?

கணவன்: இதோ பாரு. யாரைப் பத்தி வேணா பேசு. எங்கம்மா பத்தி மட்டும் நீ பேச வேணாம். புரியுதா?

மனைவி: எதைப்பத்தியும் பேசாதே, பேசாதேன்னா நான் என்னதான் பேசறது? உங்க சொந்தக்காரங்க வந்தா மட்டும் அவங்க போடற மொக்கையெல்லாம் தாங்கிக்கிட்டு சிரிச்சிக்கிட்டே உக்காந்திருக்கீங்க. நான் பேசினா மட்டும் வந்துடுமே கோபம்...

கணவன்: @#%@%@

மனைவி: @$#@%%@###@@

Read more...

Sunday, June 7, 2009

நான் ரொம்ம்ம்ம்ப பிஸி!!!


முகு: இடுகையில் எங்கேயுமே முழுப்புள்ளியே கிடையாது. அதனால் நீங்களும் - மூச்சு விடாமே எஸ்.பி.பி பாட்டு பாடறா மாதிரி - முழு இடுகையையும் படிச்சிடுங்க.



*****



காலங்கார்த்தாலே எழுந்ததும்



என்னோட யாஹூவில்
மனைவியோட யாஹூவில்
எங்களோட ஹாட்மெயிலில்
மனைவிக்குத் தெரியாத என் ஜிமெயிலில்
எங்கள் நிறுவன மெயிலில்
வேலை பார்க்கும் க்ளையண்ட் மெயிலில்



இப்படி எல்லாத்துலேயும் ஏதாவது மின்னஞ்சல் வந்திருக்கான்னு பாத்துட்டு



செய்திகளுக்காக



தட்ஸ்தமிழ்
தினமலர்
தினமணி
யாஹூ தமிழ்
மைக்ரோசாஃப்ட் தமிழ்
சி என் என்



இங்கேயெல்லாம் ஒரு தடவை போய் பாத்துட்டு



அலுவலகம் வந்தபிறகு



இந்தியாவில் எங்கள் வீடு
மாமியார் வீடு
யாராவது நண்பர்கள் வீடு
ஏதாவது ஒரு ராங் நம்பர்



இப்படி எல்லோருக்கும் தொலைபேசி எல்லார் நலனையும் விசாரிச்சிட்டு



ரீடரில் இருக்கோ இல்லையோ ஒரு தடவை



இட்லிவடை
சாரு
ஜெயமோகன்
பாரா
எஸ்ரா
லக்கிலுக்



இங்கேயெல்லாம் ஒரு தடவை போய் தரிசனம் செய்துட்டு



நண்பர்களைத் தேடி

முதல் மாடி
ரெண்டாவது மாடி
மூணாவது மாடி
நாலாவது மாடி



ஆக மாடிமாடியா ஏறி இறங்கி மொக்கை போட்டுட்டு



இருக்கையில் வந்து உக்காந்தவுடன்,


கணிணியில்

சுடோகு
சதுரங்கம்
கோல்ஃப்
சாலிடைய்ர் (solitaire)
ஃப்ரீசெல் (freecell)
ப்ரிக் ப்ரேக் (brick break)



ஆகிய விளையாட்டுக்களை கொஞ்ச நேரம் விளையாடிவிட்டு



நடுநடுவே




தண்ணி
காபி
தண்ணி காபி
டீ



இதெல்லாம் குடிச்சிட்டு




சாயங்காலமா வீட்லே எல்லாரையும் கூட்டிட்டு



வால்மார்ட்
டார்கெட்
மால்
இந்திய மளிகைக் கடை



இப்படி எல்லா கடைகளுக்கும் போய் எதுவுமே வாங்காமே வெறும்னே பாத்துட்டு



வீட்டுக்கு வந்து சஹானாவுடன்



டோரா
பார்னி
எல்மோ
டாம் அண்ட் ஜெர்ரி
மேக்ஸ் அண்ட் ரூபி



ஆகிய எல்லாத்தையும் பாத்துட்டு




அக்கடான்னு படுத்தா போதும்னு இருக்கும்போது, புது இடுகைக்காக யோசிக்கறதுக்கு நேரம் எங்கே இருக்கு?



*****


Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP