மாமனார் போட்ட மோதிரம்!!!
ச்சின்ன வயசிலேயிருந்தே நமக்கு இந்த விரலில் மோதிரம் அணிவது பிடிக்காது. கல்யாணத்துக்குப் பிறகு ஆண்களுக்கு எல்லாமே அவர்கள் விருப்பத்துக்கு எதிராகத்தான் நடக்கும் என்ற பொது விதிப்படி, எனக்கும் என் மாமனார் ஒரு மோதிரத்தைப் போட்டு விட்டார்.
"அட அதை எவன்பா கையிலே எல்லாம் போட்டுக்கிட்டு அசிங்கமா - உள்ளே வாங்கி வெளியே வித்துட வேண்டியதுதான்" - அப்படின்னு அண்ணன் கவுண்டமணி சொன்னதைப் போல் - அதை வெளியே விக்க முடியலேன்னாக்கூட கையில் மாட்டிக்கொண்டு அலைவது படு அவஸ்தையான விஷயம் எனக்கு.
பெரிய மனது பண்ணி தங்ஸ் என்னிக்காவது வற்புறுத்தி மோதிரத்தை போட்டுக்கச் சொன்னாலும், அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை - கை காட்டுங்க... கை காட்டுங்கன்னு சொல்லி - அந்த மோதிரம் பத்திரமாக இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்வார். அலுவலகத்தில் இருந்தால் தொலைபேசியில் ஸ்டேட்டஸ் அப்டேட் நடக்கும்.
அது ஏன் அப்படின்னு கேட்டீங்கன்னா - அட கேக்கலேன்னாக்கூட நான் சொல்லித்தான் ஆகணும்.
வீட்டிலோ அலுவலகத்திலோ உக்காந்து நான் யோசிச்சிண்டிருந்தேன்னு வைங்க - சரி சரி அலுவலக விஷயமா நான் என்னிக்கு யோசிச்சிருக்கேன் - எல்லாம் நம்ம பதிவு விஷயமாத்தான் - அந்த மோதிரம் ஒரு வழியாயிட்டிருக்கும்.
ஒரு விரல்லேந்து இன்னொரு விரலுக்கு மாற்றுவது, ஒரே விரலில் அதை சுற்றிக்கொண்டிருப்பது - அப்படி இப்படின்னு அதை ஒரு இடத்துலே உக்கார விடாமே விளையாடிட்டிருப்பேன். கு கையிலே பூ அப்படின்னு ஒரு பழமொழி இந்நேரத்துக்கு உங்களுக்கு நினைவுக்கு வரலாம். தப்பில்லை.
ஒரு சமயத்தில் என்ன ஆச்சுன்னா, தங்க மோதிரத்தை தொலைச்சிடுவேன்னு சொல்லி, எனக்கு வெள்ளியில் ஒரு மோதிரத்தை போட்டிருந்தாங்க. ஒரு நாள் வீட்டு வாசலில் நின்று தங்ஸுடன் பேசிக்கொண்டிருந்தபோது, வழக்கம்போல் மோதிரத்தை நோண்டிக்கொண்டிருக்க, டக்கென்று என் கையிலிருந்து குதித்து - அந்த மோதிரம் பக்கத்திலிருந்த ஒரு சாக்கடையில் விழுந்து சடாரென்று மறைந்தது.
அன்றிலிருந்து எந்த வகையான மோதிரத்தையும் என் கண்களில் காட்டாமல் வைத்திருந்த தங்ஸிடம், போன வாரம் ஒரு சிறப்பு நாளில் கெஞ்சிக் கூத்தாடி அந்த தங்க மோதிரத்தை வாங்கி மாட்டிக்கொண்டேன். ஆனால், அப்படி மாட்டிக்கொண்ட ஒரு மணி நேரத்திலேயே - அந்த மோதிரம் கொடுத்த அசௌகரியத்தாலும், தங்ஸ் கொடுத்த (அன்புத்!!) தொல்லையாலும் - வீட்டிலேயே அதை கழட்டி உள்ளே வைத்தாயிற்று.
மோதிரத்தை கழட்டிய அந்த நிமிடம், சந்தோஷத்தில் நான் சிறகில்லாமலேயே வானத்தில் பறந்து கொண்டிருந்தேன். லிட்டில் (இன்னுமா?) சூப்பர் ஸ்டார், நம்ம சிம்பு மாதிரி - கோலப்பொடி இல்லாமலேயே காத்துலே கோலம் போட்டு காட்டினேன்.
அப்பாடா, இப்பத்தான் என் விரல்களுக்கு விடுதலை கிடைச்சா மாதிரி இருக்கு - இனிமே பாரு, என் கையிலேந்து இடுகையா கொட்டப் போகுது - பின்னூட்டமா பின்னப் போகுது - அப்படின்னு ஆனந்தப் பட்டேன். ஆனா வழக்கம்போல கணிணியில் உக்காந்து, விசைப்பலகையில் கை வச்சபிறகு, தட்டச்சுவதற்கு எதுவுமே தோன்றவில்லை. கொஞ்ச நேரம் அப்படியே
திரையை முறைத்துப் பார்த்தபிறகு, கணிணியை அணைத்துவிட்டு தூங்கப் போய்விட்டேன்.
சரி, அவ்வளவுதான். இடுகையின் கடைசி பத்திக்கு வந்தாச்சு.
போன வாரம் ஒரு சிறப்பு நிகழ்ச்சின்னு சொன்னேனே - அது மட்டும் என்னன்னு சொல்லிட்டு முடிச்சிக்கறேன். மே 14ம் தேதி நமக்கு (எங்களுக்கு) திருமண நாள். அவ்வளவுதான்.
*****