கும்பகர்ணனும் நானும் தோஸ்து..
அமெரிக்காவில் பேச்சிலராக இருந்த நாட்களில் ஓர் இரவு. 11 மணி. கூட இருந்த ஒரு நண்பன் இந்தியாவுக்கு தொலைபேசறேன்னு தவறுதலா 911 அடிச்சிட்டான். பத்து நிமிடத்தில் போலீஸ் வந்துடுச்சு. வெளியில் அழைப்பு மணி அடிச்சி, உள்ளே வந்து, வீட்டிலுள்ளவர்களை விசாரித்து, வீட்டில் யாராவது பதுங்கியிருக்காங்களான்னு இண்டு இடுக்கு முழுக்க பாத்துட்டு, அரை மணி கழிச்சி போயிருக்காங்க. இதெல்லாம் எனக்கு காலையில் நண்பன் சொல்லித்தான் தெரியும். ஏன், அப்போ நீ வீட்டில் இல்லையான்னு கேக்காதீங்க. ஹிஹி. நானும் அதே வீட்டில்தான் இருந்தேன். ஆனா தூங்கிட்டு இருந்தேன். அதனால் எனக்கு எதுவும் கேக்கலே. தெரியலே.
இப்ப புரியுதா? தூங்கணும்னு படுத்தா 5ஏ நிமிஷத்தில், என் சொந்த மாயக்கம்பளத்தில் ஏறி கனவுலகில் பறக்க ஆரம்பிச்சிடுவேன். அப்புறம் யார் வந்து எழுப்பினாலும், ம்ஹூம். தங்ஸ் கேப்பாங்க. இப்படி தூங்கும்போது ஆத்திர அவசரத்துக்கு உங்களை எப்படி எழுப்பறது? ஜெமினியை கமல் அப்படியே அலேக்கா தூக்கிட்டு போவதுபோல் தூக்கிட்டுப் போயிடு. 7 மணி நேரம் ஆனதும், நானே முழுச்சிப்பேன். ஒண்ணும் பிரச்சினையில்லேன்னு சொல்லி திட்டு வாங்கறது என் வழக்கமா ஆயிடுச்சு.
ஆனாலும் அம்மாவுக்கும் பொண்ணுக்கும் என் தூக்கத்தில் மேல் பொறாமையாதான் இருந்துச்சு. என்ன பண்ணலாம்னு யோச்சிட்டே இருக்கும்போதுதான், அந்த பிரச்சினை வந்தது. கும்பகர்ணனே வந்து எழுப்பினாலும் எழுந்துக்காத நான், அந்த கும்பகர்ணனின் தூக்கத்தையே கெடுக்கற மாதிரி ‘கொர் கொர்’ விட ஆரம்பித்தேன்(னாம்). நான் நம்பவில்லை. தங்ஸும் பொண்ணும் ஆமா.. பயங்கர சத்தமா இருக்கு. எங்களால் தூங்கவே முடியலே.. நிறுத்துங்கன்னு கதற ஆரம்பிச்சாங்க.
ஏதாவது சொல்லி சமாளிச்சாகணுமே.
இப்போ கஷ்டமாயிருக்குன்னு சொல்வீங்க. நான் கொர்கொர்ரை கஷ்டப்பட்டு நிறுத்தினபிறகு, இந்த சத்தம் இல்லாமே தூக்கமே வரலேன்னுவீங்க. அதனால், பேசும்படம் கமல் மாதிரி இப்பவே இதை ரெகார்ட் பண்ணி வெச்சிக்குங்க. அப்புறம் உதவும்னு சொல்லிட்டு ஓடிடுவேன்.
இந்த கொர்கொர்ரை நிறுத்துவதற்கு என்ன செய்யறதுன்னு 2 பேரும் கூகுளிட்டு பார்க்க ஆரம்பிச்சாங்க. தலையணை உசரமா இருந்தா கொர் வராதுன்னு போட்டிருந்தானாம். உடனே வால்மார்ட் போய் 4 ஸ்பெஷல் சாதா தலையணை பார்சல்.4 தலையணைகளை வெச்சிக்கிட்டு ’படுத்து’ தூங்க முடியுமா. உக்காந்துதான் தூங்கணும். அவ்வளவு உசரத்திலிருந்து பக்கத்தில் உன் மேல் விழுந்தா என்னை சத்தம் போடக்கூடாதுன்னு அபாயமணி அடிச்சிட்டேன். உங்க கொர்ருக்கு அது எவ்வளவோ பரவாயில்லை. ஒரு கையால் தள்ளிவிட்டு(!) மறுபடி படுத்துடுவேன்னு சொல்லி 4ஐ கொடுத்துட்டாங்க. சரி ரெண்டு நாளைக்கொரு தடவை ஒவ்வொண்ணா குறைச்சிக்கலாம்னு சொல்லி 4 - 3 - 2லே வந்து நிக்குது. இப்ப கொர்கொர் இல்லையாம். அவங்க நிம்மதியா தூங்கறாங்க.
என் கொர்கொர்ரை நிறுத்திவிட்டு அவங்க எப்படி நிம்மதியா தூங்கலாம்? இப்பவே கூகுளுக்கு போறேன். எப்படி குறட்டை விட ஆரம்பிப்பதுன்னு யாராவது எழுதாமேயா இருக்கப் போறான்? இல்லேன்னா 30 நாட்களில் குறட்டை விடுவது எப்படின்னு யாராவது (அவங்க?) புத்தகம் போட்டிருக்காங்களான்னு பாக்கணும். நீங்க யாராவது உதவி பண்ணுவீங்களா?
நன்றி.