Saturday, November 27, 2010

சமீபத்தில் மறைந்த இன்னொரு தந்தை!

இந்த தொடரின் முதல் பகுதியில் மென்பொருள் தரக்கட்டுப்பாட்டின் தந்தை என்றழைக்கப்பட்ட Watts Humphrey சமீபத்தில்தான் (அக்.28,2010) மறைந்தார் என்று பார்த்தோம். அவரைத் தொடர்ந்து அடுத்த மாதமே - தரத்திற்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்த மற்றொருவர் காலமானார். அவர் யார்? அதுதான் இந்த பகுதி.

**

தர நிர்ணயத்தில் மென்பொருளின் திட்ட மதிப்பீடு (Estimation) செய்வது மிகவும் கடினமான ஒன்றாகும். ஒரு வேலை செய்ய எவ்வளவு நாளாகும்னு கணிக்க முடியலேன்னா - ரொம்ப கஷ்டம். உதாரணத்திற்கு, மென்பொருளில் பல வருட அனுபவம் உள்ளவர்கள் - ஒரு குறிப்பிட்ட வேலையை செய்ய 30 நாட்களாகும்னு குத்துமதிப்பா சொல்றதை யாராலும் ஏற்க முடியாது. அது 'தரம்' கிடையாது. சரியா? இந்த திட்ட மதிப்பீட்டை அறிவியல் ரீதியா செய்ய கண்டுபிடிக்கப்பட்ட முறைதான் - Function Point முறையாகும். ISOவால் அங்கீகரிக்கப்பட்ட முறை இது. இரண்டாம் (Repeatable) அல்லது மூன்றாவது (Defined) நிலையை அடைய எல்லா நிறுவனங்களுக்கும் CMMi வலியுறுத்தும் முறையும் இதுவே.

அப்படி இந்த முறையில் என்ன இருக்கு? அதையும் பாத்துடுவோம்.

*************

ஒரு மென்பொருளில் இருக்கக்கூடிய தகவல்கள் / வெளியேயிருந்து வரக்கூடிய தகவல் பரிமாற்றங்கள் ஆகியவற்றை கணக்கிட்டு, ஒவ்வொன்றிற்கும் தகுந்த புள்ளிகள் கொடுத்து, இறுதியாக அந்தப் புள்ளிகளை கூட்டினால் வரும் எண்ணிக்கையை அந்த மென்பொருளின் அளவு (size) என்பார்கள். இந்த புள்ளிகளை கணக்கிட பயன்படுத்தும் 5 காரணிகள்:

Inputs
Outputs
Inquiries
External Interface Files
Internal Logical file

அதாவது, பயனரின் தேவைகளை (Requirements) அக்குவேறு ஆணிவேராக பிரித்து, ஒவ்வொரு தேவைகளையும் மேற்கூறிய ஐந்தில் ஏதாவது ஒன்றில் பொருத்தி ’அளவை’ கண்டுபிடிக்க வேண்டும். அப்படி இந்த ‘அளவைக்’ கண்டுபிடித்துவிட்டால், பிறகு தேவைப்படும் மனித உழைப்பு, அதற்கான செலவு எல்லாமே சுலபமாக கணக்கிட்டு விடலாம்.

இதை ஓரிரு வரிகளில் படித்துவிட்டாலும், நல்ல மனிதவளம் நிறைந்த நிறுவனங்களுக்கே, Function Point முறையை பயன்படுத்தி திட்ட மதிப்பீட்டில் திறமையை வளர்த்துக் கொள்ள ஓரிரு ஆண்டுகள் பிடிக்கும். மேற்கூறிய ஒவ்வொரு காரணிகளையும் கவனமாக கணக்கெடுப்பதற்கு மிகுந்த திறமையும் பயிற்சியும் தேவைப்படும்.

**

இந்த Function Point முறையை கண்டுபிடித்தவர் பற்றி ஒரு சிறு குறிப்பு.

பெயர்: ஆலன் ஆல்ப்ரெக்ட் (Alan Albrecht).

** பிப்ரவரி 2, 1927ல் பிறந்த ஆலன், பல்வேறு ராணுவ கணினித் தொழில்நுட்பத்தில் பணிபுரிந்தவர்.

** IBMல் வேலை பார்த்தபோது, Function Pointsஐ கண்டுபிடித்தார்.

** இந்த கண்டுபிடிப்பை உலகம் முழுக்க பல்வேறு கூட்டங்களிலும் அறிமுகப்படுத்தி சொற்பொழிவு ஆற்றிய ஆலன், வேலையிருந்து ஓய்வு பெற்றபிறகுகூட இந்த Function Pointsக்கு ஆலோசகராக இருந்தார்.

** The International Function Point User Group (IFPUG) என்ற அமைப்பைக் கண்டுபிடித்து அதை உலகில் அனைத்து நிறுவனங்களும் பின்பற்றி அதனால் பயன்பெற உதவியாக இருந்தார்.

** இப்படி தன வாழ் நாள் முழுக்க 'Function Point'க்காக செலவழித்த ஆலன், திட்ட மதிப்பீட்டின் தந்தை (Father of Estimation) என்றழைக்கப்பட்டார்.

இந்த பகுதியோட முக்கியத்துவம் என்னன்னு கேட்டீங்கன்னா, ஆலன் சமீபத்தில் நவம்பர் 10, 2010 தேதி அன்று காலமானார்.

**

இந்தப் பகுதிக்கான கேள்வி:

1. Function Pointக்காகவே ஒரு தகுதிச் சான்றளிப்பு (certification) உள்ளது. அதன் பெயர் என்ன?

2. Function Point முறை புதிதாக உருவாக்கப்படும் மென்பொருளுக்கு மட்டும்தான் பயன்படுமா - அல்லது ஏற்கனவே இருக்கும் மென்பொருளில் நகாசு வேலை செய்தால், அதற்கும் பயன்படுமா?

*****

Read more...

Monday, November 22, 2010

நான் பார்க்கும் மெகாத் தொடர்கள்!!

ஆபீஸ் முடிந்து குர்காவ்ன்லே மாலை 6.10க்கு வண்டி. தில்லியில் வீட்டுக்கு வர 6.40௦ ஆயிடும். ஆனா 6.30க்கு மெட்டி ஒலி. பத்து நிமிஷ நாடகம் போயிடும். என்ன பண்றது? வீட்டுத் தொலைபேசியை ஸ்பீக்கர்லே போட்டுட்டு தொலைபேசியில் மெஒவை கேட்டுக்கிட்டே ஓடி வீடு வந்து சேருவோம்.

நண்பர்கள்/வீட்டுலே தொடர்ச்சியா நிறைய தொடர்களைப் பார்த்தாலும், நான் பார்த்தது மெஒ & கோலங்கள் மட்டும்தான் (அதுவும் 2006 பிப்ரவரி வரை!). அதுக்கப்புறம் அமெரிக்கா வந்தாச்சு. வந்தவுடன் இங்கேயும் மெகாத் தொடர்கள் பார்க்க ஆரம்பிச்சிட்டேன். ஆனா தமிழ்லே இல்லே. ஆங்கிலத்துலே. (தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பாத்து 4.5 ஆண்டுகள் ஆயிடுச்சுங்க!).

இங்கேயும் ஏகப்பட்ட தொலைக்காட்சித் தொடர்கள். அதுவும் 10-15 வருஷத்துக்கு மேல் ஓடிய தொடர்கள்லாம் இருக்கு. குழந்தையா நடிக்க ஆரம்பிச்சி அதே தொடரில் பெரியவங்க ஆனவங்களும் இருக்காங்க.

இருங்க இருங்க. நம்ம ஊர் தொடர் நாடகங்களுக்கும் இந்த ஊர் தொ.நா’க்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு.

** இங்கிருக்கும் தொடர்கள் எதுவும் தொடர்கதை கிடையாது. அதாவது ஒரு கல்யாணமோ / கரு**யோ, அதையே ஒரு வாரம் வரைக்கும் இழுத்து காட்டறா மாதிரி கிடையாது. ஒவ்வொரு எபிசோடும் ஒரு ச்சின்ன சம்பவம் - அவ்வளவுதான். அன்னிக்கி ஆரம்பிச்சி அன்னிக்கே முடிச்சிடுவாங்க. அதனால் ஒரு நாள் பாக்காமே போனா, அடுத்த நாள் புரியாதுன்னு இல்லே. (ஹிஹி. தமிழ்த் தொடர்களும் அப்படித்தான்னு யாரோ சொல்றது கேக்குது!).

** எந்தத் தொடரும் வருடம் முழுக்க நடக்காது. ஒரு வருடத்திற்கு 3-4 மாதங்கள் மட்டுமே நடக்கும். அப்புறம் அடுத்த வருடம்தான்.

** ( நான் பார்க்கும்) பெரும்பாலான தொடர்கள் நகைச்சுவைத் தொடர்களே. பட்பட்டென்று நிமிடத்திற்கு நிமிடம் வசனங்களாலும், நடிப்பினாலும் சிரிக்க வைக்கும் நாடகங்களையுமே விரும்பி பார்ப்பது வழக்கம்.

** ரொம்ப பழைய மேட்ச் போட்டாலும் அதை நாள் முழுக்க உக்காந்து பார்ப்பதுபோல், இந்த கீழ்க்கண்ட தொடர் நாடகங்களை ஏகப்பட்ட தடவைகள் பார்த்திருக்கேன் / பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்.

* Everybody loves Raymond - இதைத்தான் முதன்முதலில் பார்க்க ஆரம்பிச்சோம். இன்றைக்கும் என் ஃபேவரைட் இதுதான்.

* Friends - ஹிஹி. ஜெனிக்காக பார்க்க ஆரம்பித்தேன்.

* Seinfeld - மூணு / நாலு விதமான கதைப் பின்னல்கள் - கடைசியில் எல்லாத்தையும் ஒரே கோட்டில் சேர்த்துவிடுவார்கள். இவர்கள் கற்பனைத் திறனுக்கு ஒரு ஜே! வாத்தியாருக்கு மிகவும் பிடித்த தொடர். கற்றதும் பெற்றதும்லே இதை சொல்லியிருப்பார்.

* King of Queens

* Home Improvement

* Yes Dear

* Just Shoot me

* George Lopez

* Prince of Bel Air - நம்ம வில் ஸ்மித் சினிமாவில் நடிக்க வரும்முன்னே நடிச்ச தொடர். நகைச்சுவையில் பிச்சி உதறியிருப்பாரு.

* Hot in Cleveland

சஹானா பார்க்கும் சில சிறுவர்களுக்கான தொடர்களை வேறு வழியில்லாமே பார்க்க ஆரம்பித்து, இப்ப அவ தூங்கிட்டாலும் நாங்க பாக்கறதுதான்.

* Hannah Montana

* iCarly

* Victorious

சில 18+ வசனங்கள் வரும் தொடர்களும் இருக்கு. ஆனா நான் அதையெல்லாம் பாக்கறதில்லை. ச்சின்ன மனசு கெட்டுப் போயிடும்னு வீட்டுலே அனுமதிக்கமாட்டாங்க.

* Two and half men

* Family Guy

இதைத் தவிர நான் பார்க்கும் பிற தொடர்கள் (நாடகங்கள் அல்லாதவை).

* Are you smarter than a 5th Grader? - இதில் நிறைய தப்புதப்பா பதில் சொல்லிடுவேன். அப்புறம் நாந்தான் இந்த ஊரில் 5வது படிக்கலியே, அதான் பதில் தெரியலேன்னு சமாளிச்சிடுவேன்.

* Americas Funny Videos - இது என்னன்னு உங்களுக்கே தெரியும்.

இப்படியாக இங்கே பொழுது போகுதுங்க.


******

* ஒரு குடும்பம்.
* மொத்தம் நாலே பேர்.
* நகைச்சுவைதான் முக்கியம்
* சினிமா, அரசியல் மற்றும் இரட்டை அர்த்த வசனங்களுக்கு நோ

இந்த மாதிரி ஒரு சூழலுடன் தொடருக்கான கதைகள் தமிழில் எழுதணும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை. ஒரு குழுவா இருந்தா முயற்சி செய்யலாம். நீங்க யாராவது ரெடியா?

*****

Read more...

Tuesday, November 16, 2010

பேஸ்மென்ட் ஸ்ட்ராங்! பில்டிங்கும் ஸ்ட்ராங்!

தரத்தில் கவனம் செலுத்தும் அனைவருக்கும் இந்த ‘தர மேலாண் அமைப்பு’தான் (Quality Management System) பேஸ்மெண்ட். இது கண்டிப்பா ஸ்ட்ராங்கா இருக்க வேண்டியது அவசியம். இந்த தர மேலாண் அமைப்பைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன் இதில் இருக்கும் இரண்டு முக்கிய குழுக்களை பாத்துடுவோம்.

முதலாவது - தர நிர்ணயக் குழு (Quality Assurance). இவங்கதான் வேலையை எப்படி செய்யணும்னு சொல்லித் தர்றவங்க.

** திட்டப்பணி வரைவு (Project Planning)
** செந்தரங்கள் உருவாக்குதல் (Standards development)
** பயிற்சிகள் (Trainings)

இதெல்லாம் தர நிர்ணயக் குழுவின் வேலைகளில் சில.

அடுத்தது - தரக் கட்டுப்பாட்டுக் குழு (Quality Control). நடந்த தவறுகளை கண்டுபிடிச்சி, அதை திருத்தச் சொல்றவங்க.

** அகச்சோதனை (Unit Testing)
** அமைப்புச் சோதனை (System Testing)
** குறிமுறை மீள்பார்வை (Code Review)
** வடிவமைப்பு மீள்பார்வை (Design Review)

இதெல்லாம் தரக்கட்டுப்பாட்டுக் குழுவின் வேலைகளில் சில.

சரியா? இப்போ இந்த இரண்டு குழுவிற்கும் ஆதாரமான 'தர மேலாண் அமைப்பின்’ வேலையை விரிவா பாத்துடுவோம்.

** பொருளின் உற்பத்திக்கு என்ன பண்ணனும்?

** அதை செய்யக்கூடிய வழிமுறைகள் என்ன?

** அந்த வழிமுறைகள் சரியா பின்பற்றப்படுகின்றனவா?

** வேலை செய்கிறவர்களுக்கு அதை செய்யக்கூடிய தகுதி இருக்கிறதா? இல்லேன்னா, அவங்களை எப்படி தயார்படுத்துவது?

** உற்பத்தி செய்யப்பட்ட பொருள் நாம எதிர்பார்த்த மாதிரியே வந்திருக்கிறதா?

** வரலேன்னா, அதை எப்படி திருத்தணும்?

** நடந்த தவறுகளிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் என்ன?

** மறுபடி அதே தவறு செய்யாமலிருக்க, என்ன செய்யணும்? என்ன செய்யக்கூடாது?

அவ்ளோதாங்க. சிம்பிளா இருக்கில்லே.

இவ்வளவையும் செய்துட்டு, ‘பேஸ்மெண்டை’ ஸ்ட்ராங்காக்கிட்டா - அதனால் ஏற்படக்கூடிய பலன்கள் சிலவற்றை பாத்துடுவோம்.

** வேலைகளை துரிதப்படுத்தலாம். எல்லா வேலைகளுக்கும் செந்தரங்களை (standards) உருவாக்கிட்டதால், அவைகளை வேகமாக செய்ய முடியும். இது எப்படி பண்றது? அது எப்படி பண்றதுன்னு யாரும் யோசிக்கத் தேவையில்லை.

** ‘அதிர்ச்சி’களைக் குறைக்கலாம். எல்லா வேலைகளையும் ஒரு நிர்ணயிக்கப்பட்ட வழிமுறையில் செய்வதால், வருவிளைவு (output) எப்படியிருக்கும்னு யூகிக்க முடியும். என்ன இப்படி ஆயிடுச்சுன்னு அதிர்ச்சி அடைய வேண்டியதில்லை.

** நேரம் மிச்சம். என்ன செய்யப் போறோம், எப்படி செய்யப் போறோம்னு எல்லாருக்குமே தெரியுமாகையால், நேரம் மிச்சமாகும். நேரம்தான் பணம்றது உங்களுக்கு தெரியும்தானே?

** வாடிக்கையாளரின் திருப்தி அதிகரிப்பு.

மற்றும் பல.

***

இத்துடன் 'தரம்' பற்றிய முன்னுரை முடிந்தது. அப்போ அடுத்த பகுதியிலிருந்து???

***

இந்த பகுதிக்கான கேள்விகள்:

** இந்த பேஸ்மென்ட் வீக்கா இருந்தா என்னென்ன பிரச்சினைகள் வரும்?

** பல்வேறு தரச் சான்றிதழ் வாங்கிய நிறுவனங்களெல்லாம் நிஜமாவே ’பிழை’யில்லாமல் மென்பொருளை உற்பத்தி செய்கின்றனவா?

** எப்படியும் தரக் கட்டுப்பாட்டுத் துறை எல்லா தவறுகளையும் கண்டுபிடிச்சிடப் போகுது. அப்புறம் எதுக்கு மத்ததெல்லாம் (தர நிர்ணயக்குழு)?
** இந்தியாவிலேயே முதல்முறையா CMMi சான்றிதழ் யாரு வாங்கினாங்க?

*******

Read more...

Saturday, November 13, 2010

நான் ஒரு நாளும் தலைவன் ஆகமுடியாது!

நான் ஒரு நாளும் தலைவன் (leader) ஆகவேமுடியாதுன்றத இன்னிக்குதான் தெரிஞ்சிக்கிட்டேன். என்ன நடந்தது. வழக்கம்போல் பதில் - இடுகையில்.

****

போன வாரம் ஒரு நாள். சஹானாவை தூக்கி கீழே போடுவதைப் போல் விளையாடிக் கொண்டிருந்தேன். அவரோ கொஞ்சம் கூட பயப்படாமல் சிரித்துக் கொண்டே இருந்தார். பயமா இல்லையாம்மான்னு கேட்டதற்கு - ம்ஹூம். நீங்க என்னை கீழே போடமாட்டீங்கன்னு தெரியும். அப்புறம் நான் ஏன் பயப்படணும்னாங்க.

நான் ஜென் கத்துக்கும் ஒரு ஆசாமியாகவோ அல்லது (ஜோதா) அக்பராகவோ இருந்தால், அந்த நேரத்தில் என் தலைக்குப் பின்னால் ஒரு ஒளிவெள்ளம் வந்து எனக்கு ஞானம் வந்திருக்கும். ஆனா நான் ஒரு ஞான0 ஆகையால், வெறும்னே சிரித்துவிட்டு - பத்து நிமிஷமா பாக்காத ட்விட்டரைப் பாக்க உட்கார்ந்தேன்.

****

எங்க ஊர்லே இருக்கும் நூலகம் இலவசம்தான் என்றாலும், வாங்கிய புத்தகத்தை / குறுந்தகடை தாமதமா திருப்பிக் கொடுத்தா, அபராதம் மட்டும் வாங்கிடுவாங்க. என் மாதிரி சிலர் இருப்பதால், அபராதத்தொகையில் அவங்களுக்கு சரியான வசூல்!

ஒரு ஆறு மாதமா என் அட்டையில் ஒரு $10 அபராதத்தொகை இருந்தது. நானும் சரி, இப்ப கட்டலாம், அப்ப கட்டலாம்னு கட்டாமலேயே இருந்தேன். நமக்கு யாராவது பணம் கொடுக்கணும்னா ஞாபகம் இருக்கும் - அதையே நாம கொடுக்கணும்னா? ம்ஹும்.

இதற்கிடையில் ஒரு நாள் என் நூலக அட்டை காலாவதி ஆயிடுச்சு. அடுத்த தடவை போய் அதை புதுப்பிச்சிட்டு, என் அபராதத் தொகை எவ்ளோம்மான்னு கேட்டா - $0 ன்னு சொன்னாங்க.

இல்லையே, $10 பாக்கி இருந்ததே - அதை கட்டலாம்னுதான் வந்தேன்னு சொன்னேன்.

அப்போதான் சொன்னாங்க - அவங்க மென்பொருளில் ஒரு சிறு பிரச்சினை இருக்காம். அதாவது காலாவதியான அட்டையை புதுப்பிக்கும்போது அதிலிருந்த பழைய பாக்கியெல்லாம் போயே போச்!

இவங்க மென்பொருளை நம்ம கம்பெனிக்காரங்க பண்ணலியே? அப்புறம் எப்படி பிரச்சினை வந்துச்சுன்னு எனக்கு சந்தேகம் வந்துச்சு.

சரி அதை அப்புறமா பாத்துக்கலாம்னு சொல்லிட்டு - சரிம்மா. முன்னாடி $10 பாக்கி இருந்துச்சு. இந்தாங்க புடிங்கன்னு சொன்னா - நோ நோ! கணிணியில் காட்டாத பாக்கியை நாங்க வாங்கிக்க மாட்டோம். அடுத்த தடவையிலிருந்து பாக்கியை உடனுக்குடன் கட்டிடுங்கன்னு சொல்லிட்டாங்க.

கண்டிப்பா இனிமே பாக்கியை உடனே கட்டிடறேன்னு சொல்லிட்டு - அடுத்த தடவை என் அட்டை எப்போ காலாவதி ஆகும்னு ஞாபகமா கேட்டுட்டு வந்தேன்.

****

மென்பொருள் தரத்தைப் பற்றி ஒரு சின்ன தொடர் ஓடிட்டிருக்கு. தனித்தனியா படிச்சீங்கன்னா அப்பப்ப கேள்வி கேளுங்க. மொத்தமா கடைசியில் படிச்சிக்கிறேன்னு சொன்னீங்கன்னா, அதுவும் எனக்கு ஓகேதான். :-))

****

இப்பல்லாம் ஒவ்வொரு வாரயிறுதியிலும் ரெண்டு மணி நேர பயணம் செய்வதால் (பயணம் எதுக்குன்னு தெரியலியா? அதுக்குத்தான் ட்விட்டரில் என்னை பின்தொடரணும்னு சொல்றது!)
- Leadership பற்றிய ஒரு CD புத்தகத்தை நூலகத்திலிருந்து எடுத்தேன்.

நேற்று முதல் முறையா அந்த CDயை கேட்டபோதே - நான் எந்த காலத்திலும் தலைவனாக முடியாதுன்னு தெரிஞ்சிக்கிட்டேன்.

அப்படி அதில் என்ன சொன்னாங்கன்னா - “ரெண்டு நிமிடத்துக்கு கண்ணை மூடிக்கிட்டு, இது வரைக்கும் வேலையில் நீங்க என்ன சாதிச்சிருக்கீங்கன்னு யோசிங்க”.

கொய்யாலே. புயல் மாதிரி 80 மைல் வேகத்துலே வண்டி ஓட்டிக்கிட்டிருக்கேன் இதுலே ரெண்டு நிமிடம் கண்ணை மூடுனா என்ன ஆகும்?

அப்பவே தெரிஞ்சி போச்சு <தலைப்பு>.

****

Read more...

Sunday, November 7, 2010

சொன்னதையே செய்! செய்வதையே சொல்!!

நிறைய விளம்பரங்களில் - இது ஒரு தரமான பொருள் - அப்படின்னு சொல்லியிருப்பாங்க. இதுலே ‘தரம்’னா என்ன?

** தர நிர்ணயம்
** தரக் கட்டுப்பாடு
** தரப் பொறியியல்
** தர மேலாண் அமைப்பு -

இப்படி பல தொழில்நுட்ப வார்த்தைகளுக்குப் போவதற்குமுன், ‘தரம்’னா என்னன்னு தெரிஞ்சிக்க வேண்டியது அவசியம்.

ஒரு பொருளை வாங்க கடைக்குப் போறீங்க. அந்தப் பொருள்

** நீங்க எதிர்பார்த்த மாதிரியே இருக்கா?
** உங்க தேவைகளை பூர்த்தி செய்யுதா?
** உங்களுக்கு கட்டுப்படியான விலையில் கிடைக்குதா?
** நீங்க எதிர்பார்த்த வாடிக்கையாளர் சேவை கிடைக்குமா?

இந்த கேள்விகளுக்கெல்லாம் ‘ஆமா’ன்னு பதில் சொன்னீங்கன்னா, அதை நுகர்வோர் பார்வையிலான ‘தரம்’னு சொல்லலாம்.

இதையே இன்னொரு கோணத்திலிருந்து பாத்தா -

** சரியான பொருளை தயாரிச்சிருக்கோமா?
** சரியான வழியில் தயாரிச்சிருக்கோமா?
** முதல் தடவையே சரியா வந்திருக்கா?
** திட்டமிட்ட நேரத்திலேயே தயாரிக்க முடிஞ்சுதா?

இவை தயாரிப்பாளருக்கான கேள்விகள்னு பாத்தவுடனேயே தெரிஞ்சிருக்கும். எல்லாத்துக்கும் அவர் ‘ஆமா’ன்னு பதில் சொல்லிட்டாருன்னா, அதை தயாரிப்பாளர் பார்வையிலான ‘தரம்’னு சொல்லலாம்.

ஆனா, நடைமுறையிலே எல்லா கேள்விகளுக்கும் ‘ஆமா’ன்னு சொல்ல முடியுமா? எல்லாத்திலேயும் ஏதாவது ஒரு குறை இருக்குமில்லையா?

அதாவது -

தயாரிப்பாளர் தரப்பில் - செய்ய நினைத்த பொருளுக்கும் - உருவான பொருளுக்கும் உள்ள வித்தியாசம் -- (அ)

நுகர்வோர் தரப்பில் - வாங்க நினைத்த பொருளுக்கும் - வாங்கிய பொருளுக்கும் உள்ள வித்தியாசம் -- (ஆ)

(அ) மற்றும் (ஆ) - இந்த இரு வித்தியாசங்களையும் தவிர்ப்பது அல்லது குறைப்பதே - ஒவ்வொரு நிறுவனத்திலிருக்கும் தர நிர்ணயத்துறைக்கான (Quality Assurance) வேலையாகும்.

**

** சொன்னதையே செய
** செய்வதையே சொல்
** இந்த இரண்டையும் நிரூபி
** தொடர்ந்து தரத்தை உயர்த்து

மேலே சொன்ன இந்த நான்கும்தான் இந்தத் துறையின் தாரக மந்திரமாகும்.

இதை அடைய ஒவ்வொரு நிறுவனமும் நிறுவ வேண்டிய ஒன்றுதான் - தர மேலாண் அமைப்பு (Quality Management System).

இந்த தர மேலாண் அமைப்பையும், அதன் உள்கட்டமைப்பையும் அடுத்த பகுதியில் விரிவாக பார்ப்போம்.

**

இந்தப் பகுதிக்கான கேள்விகள்:

** நாய்களுக்கான பிஸ்கட்கள் தரமானவையென்று எப்படி தெரிந்து கொள்வது? (ஒரு பொருளின் தரத்தை நுகர்வோர்தான் தீர்மானிக்கிறார்கள்னு பாத்தோமே!)

** தரத்தை நிறுவுவதற்கும், அதை தொடர்ச்சியாக உயர்த்துவதற்கும் ஒரு நிறுவனத்திற்கு அதிக செலவாகுமே? அவ்வளவு செலவு செய்து தரத்தை எட்டித்தான் ஆகவேண்டுமா?

*****

Read more...

Wednesday, November 3, 2010

மென்பொருள் தர நிர்ணயம் - புதிய தொடர்!

ரொம்ப நாளா ரொம்ப ரொம்ப மொக்கையா எழுதறோமே - வாழ்க்கையிலே உருப்படியா ஏதாவது எழுதலாம்னு நினைப்பு இருந்துச்சு. அதனால் நாம ஏழெட்டு வருசமா வேலை பாத்துக்கிட்டிருக்குற ஒரு துறையைப் பத்தி - அதிலிருக்கும் ஒரே ஒரு விஷயத்தைப் பத்தி ஒரு மினி தொடர் எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

இடுகை போரடிக்காமே இருக்க என்ன செய்யணுமோ அதை கண்டிப்பா செய்வேன். வாங்க, நேரடியா மேட்டருக்கு போயிடலாம்.

*****

மென்பொருள் தர நிர்ணயத்துறைதான் (Software Quality Assurance) அந்தத் துறை.

ஐ.எஸ்.ஓ (ISO)
சி.எம்.எம்.ஐ (CMMi)
சிக்ஸ் சிக்மா (Six sigma)

இதெல்லாம்தான் அந்த விஷயங்கள்.

**

இதில் முதலாவதா இருக்கிற ISO பற்றியும், மூணாவதா இருக்கிற சிக்ஸ் சிக்மா பற்றியும் பலர் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனா நாம் இங்கே பாக்கப்போறது - எனக்கு மிகவும் பிடித்தமான - நடுவில் இருக்கும் CMMi (Capability Maturity Model Integration) பற்றித்தான்.

பொதுவா கொஞ்சம் மென்பொருள் தர நிர்ணயத்தைப் பற்றியும், கூடவே CMMi பற்றியும் எழுதலாம்னு நினைச்சி முதல் இடுகையை துவக்குற நேரத்துலேதான், தர நிர்ணயத்துறையில் இருக்கும் அன்பர்களுக்கு அதிர்ச்சி தரும் அந்த செய்தி வந்துச்சு. அது என்ன? சொல்றேன். சொல்றேன்.

**

பொருளின் தரம் எப்படி இருக்கணும்னு அதை பயன்படுத்தக்கூடிய வாடிக்கையாளர்தான் முடிவு பண்ணனும். இதுதான் நடைமுறை.

ஏய், யாருப்பா அது, உங்க வீட்லே நீ கேக்குற மாதிரி காப்பியோ அல்லது பிசிபேளா பாத்தோ கிடைக்குதான்னு கேக்குறது? சரி சரி. அதைப் பத்தி அப்புறம் பேசுவோம்.

அப்படி வாடிக்கையாளர் எதிர்பார்க்குற தரத்தை - குறைந்த நேரத்தில், குறைந்த செலவில் அடைய எல்லா மென்பொருள் நிறுவனங்களும் கடுமையா முயற்சி செய்து கொண்டேயிருக்கின்றன.

அப்படி என்ன முயற்சி செய்றாங்கன்னு நீங்க கேக்கலேன்னாலும், சொல்லவேண்டியது என் கடமை.

** செய்வதை திருந்தச் செய்றது (முதல்தடவையிலேயே தப்பில்லாமே செய்யறது)

** செய்ததையே திரும்பத் திரும்ப செய்யாமே இருக்கறது (Re-use)

** ஒரு வேலையை எப்படிச் செய்யனும்னு செந்தரங்களை (Standards) உருவாக்கி, அதன்படியே அனைவரும் வேலை செய்வது

** பிழைகளை குறைப்பது

இப்படி பல்வேறு வழிகளை எல்லா மென்பொருள் நிறுவனங்களும் பின்பற்றுகின்றன.

மேலே குறிப்பிட்டவற்றை எங்கே ஆரம்பிப்பது, எப்படி செய்வதுன்னு தெரியலேன்னா - அதுக்குத்தான் நாம முதல்லே பாத்த ISO, CMMi இதெல்லாம் இருக்கு.

**

** இந்த ISO, CMMi இதெல்லாம் ஒண்ணுதானா?

** ஏதாவது ஒன்றை எடுத்து பயன்படுத்தினா போறுமா?

** CMMiயில் எத்தனை நிலைகள் இருக்கு?

** இவற்றை மென்பொருள் நிறுவனங்கள் மட்டும்தான் பயன்படுத்தணுமா?

இந்த மாதிரி கேள்விகளுக்கு பதில் அடுத்தடுத்த இடுகைகளில்... நீங்களும் கேள்விகள் இருந்தா கேளுங்க..

**

இந்த CMMiஐ கண்டுபிடித்த - மென்பொருள் தரத்தின் தந்தை (Father of Software Quality) என்று அழைக்கப்பட்ட - வாட்ஸ் ஹம்ஃப்ரே (Watts Humphrey), சென்ற மாதம் - அக்டோபர் 28ம் தேதி, தனது 83வது வயதில் காலமானார்.

*****

தொடரும்...

*****

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP