Monday, December 28, 2009

எல்லாம் அவன் செயல்?


நாளைக்கு வினாயகர் சதுர்த்தி.


வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த பிள்ளையார் கோயில் கடந்த ஒரு வாரமாகவே சிறப்பு பூஜைகள் மற்றும் பாட்டுக் கச்சேரி என பரபரப்பாக இருந்தது. கோயிலுக்குள்ளே நடப்பதை வெளியிலிருப்போரும் கேட்பதற்காக
தெரு முழுக்க ஒலிபெருக்கி வைத்து சத்தமாக ஒலி'படுத்தி'க் கொண்டிருந்தார்கள்.


கோயில் பக்கத்திலேயே வீடு இருக்கிறது எவ்வளவு பிரச்சினைன்னு ஏதாவது விழா வரும்போதுதான் தெரியும்னு மனைவிகிட்டே படிச்சி படிச்சி சொன்னேன். அவ கேக்கலை. இதோ விழா வந்துடுச்சு. பசங்களால்
படிக்க முடியல, தூங்க முடியல.. வீட்டில் சாதாரணமாக பேசும்போது கூட, பொதுக்கூட்டத்தில் 'மைக்' முன்னால் பேசும் தலைவர் போல் கத்திக்கத்திதான் பேச வேண்டியிருக்கு.


லட்சார்ச்சனைன்னு உண்டியல் எடுத்து வந்த கோயில் விழாக்குழுவினரிடம் ஒலிபெருக்கியின் சத்தத்தை குறைக்கும்படி சொல்லியும் பார்த்துவிட்டேன். அவர்களோ அதை காதிலேயே போட்டுக் கொள்ளாமல் - மனுசன்னா கடவுள் பக்தி வேணும் சார் - என்று ஒரு மினி பிரசங்கமே செய்துவிட்டு - மறக்காமல் ஆயிரம் ரூபாய் நன்கொடை (வற்புறுத்தி) வாங்கிச் சென்று விட்டார்கள்.


இப்படியெல்லாம் சொல்வதால், எனக்கு கடவுள் பக்தி இல்லையென்று நினைக்க வேண்டாம். கண்டிப்பாக உண்டு. தினமும் ஒரு ஐந்து நிமிடம் (மட்டும்) கடவுளுக்காக ஒதுக்குகிறேன். இன்னிக்கு ஆபீஸ் போகும்போதும் கோயில் வாசல்லே நின்னு வேண்டிக்கிட்டுதான் வந்தேன். "கடவுளே... இந்த மனிதர்களுக்கு நல்ல புத்தியை கொடுப்பா. இப்படி ஊரையே கூட்டி சத்தம் போட்டு பக்தியை காட்டினாதான் நீ ஒத்துப்பியா? இவங்க எல்லாரையும் ஒட்டுமொத்தமா உன்னால் மாத்தமுடியலேன்னா, எனக்காவது ஒரு வழி காட்டு".


****


"யப்பா சுரேஷ். மேனேஜர் ரொம்ப நேரமா தேடிட்டிருந்தாரு. போய் பாத்துடு ஒரு தடவை" - அலுவலகத்துக்குள் நுழைந்தவுடனேயே பக்கத்து சீட் ரமேஷ் சொல்லிட்டான்.


எதுக்கு இந்த ஆள் காலங்கார்த்தாலே என்னை தேடுறாரு? கணக்கு வழக்குலே ஏதாவது தப்பு கண்டுபிடிச்சிட்டாரா?. சரி போய்த்தான் பாப்போம் - கதவைத் தட் தட் தட்டி உள்ளே போனேன்.


"வாங்க சுரேஷ். உக்காருங்க".


"பரவாயில்லை சார். சொல்லுங்க. ஏதாவது பிரச்சினையா"?


"உங்க வேலையில் ஏதாவது பிரச்சினை கண்டுபிடிக்க முடியுமா என்ன? அதெல்லாம் ஒண்ணுமில்லே".


"பின்னே எதுக்கு என்னை தேடினீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா சார்"?


"இந்த ஆபீஸ்லே லஞ்சம் வாங்காத ஒரே ஆள் நீங்கதான். அது உங்களுக்கே தெரியும்".


"ஆமா சார். அதுக்கு"?


"அதுதான் பிரச்சினையே. இதோ பாருங்க சுரேஷ். நானும் உங்களை நிறைய தடவை ஜாடை மாடையா சொல்லிட்டேன். நீங்கதான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போகணும்".


"அதுக்காக என்னையும் லஞ்சம் வாங்கணும்னு சொல்றீங்களா சார்? அதெல்லாம் என்னால் முடியாது? நான் மான ரோஷம் உள்ளவன்".


"உங்களுக்கு நம்ம காண்ட்ராக்டர்களையெல்லாம் தெரியும். பெரிய அளவிலே தொடர்பு வைச்சிருக்கிறவங்க. உங்களை வேறு இடத்துக்கு ட்ரான்ஸ்பர் போடவும் முடியும் அவங்களாலே".


"அது எப்படி ட்ரான்ஸ்பர் செய்துடுவாங்கன்னு பாத்துடறேன் நானும்".


"இவ்ளோ சொல்லியும் நீங்க பிடிவாதம் பிடிக்கறது நல்லாயில்லே சுரேஷ். சரி ரொம்ப வருத்தமாத்தான் இருக்கு. இந்தாங்க உங்க ட்ரான்ஸ்பர் லெட்டர். நீங்க உடனடியா அங்கே போய் ஜாயின் பண்ணனும்னு கம்பெனியோட உத்தரவு".


"சரி. நான் போய்க்கறேன் சார். எனக்கு ஒண்ணும் பிரச்சினையில்லை. லஞ்சம் வாங்கறதவிட இது எவ்வளவோ பெட்டர். ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க. என்னை இந்த மாதிரி மாத்தினது யாருன்னு தெரிஞ்சிக்கலாமா"?


"உங்களுக்கு தெரிஞ்சவர்தான். கணேஷ் காண்ட்ராக்டர்ஸ் முதலாளி கணேஷ்".


*****



Read more...

Tuesday, December 22, 2009

ஈரோடு சங்கமம், டாக்டர் விஜய், FeTNA-2010 மற்றும் சில...

மறுபயனாகு கூறுகள் - மென்பொருள் துறையில் இருக்கும் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமான ஒன்றுதான் இது. ஆங்கிலத்தில் - Reusable Components.

ஒரே மாதிரி வடிவமைப்போ, மென்பொருள் ஆணைகளோ பலமுறை பயன்படுத்தும் நிலை வருமாயின், முன்னால் செய்து வைத்த வேலையிலேயே மிகச்சிறிய அளவுக்கு நகாசு வேலை செய்து - அப்படியே
பயன்படுத்துவதற்குப் பெயர்தான் மறுபயனாகு கூறுகள்.

புதிதாக ஒன்றை உருவாக்கும் நேரம், உழைப்பு அதற்காக ஆகும் செலவு இவை அனைத்தும் மிச்சமாகையால், இந்த மாதிரியான மறுபயனுக்கான வேலைகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பல நிறுவனங்களில் சிறப்பு
பரிசுகளைக் கொடுத்து ஊக்குவிக்கின்றனர்.

இப்படி ஒரு துறையில் ஊக்கப்படுத்தும் ஒரு வேலையை, இன்னொரு துறையில் ஒருவர் பயன்படுத்தினால் - அவரை இந்த உலகம் தூற்றுகிறது. வாருகிறது. சேற்றை அள்ளி பூசுகிறது.

யார் அவர்? அது என்ன துறை? விடை இடுகையில்.

*****

ஈரோடு சங்கமம் தொடர்பான இடுகைகளை படிக்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது. ஒரு மிக நல்ல ஆராக்கியமான கூட்டத்தை நடத்திய ஈரோடு மற்றும் தமிழக பதிவர்களுக்கு வாழ்த்துகள்.

இதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டியது நம் கடமை. நீண்ட நாள் நிலைத்து நிற்கும்படியான சிறுசிறு ப்ராஜெக்டுகளை கண்டுபிடித்தால் - உடலால் உதவிட முடியாத வெளிநாட்டிலிருக்கும் என் போன்றவர்கள் கண்டிப்பாக பொருளுதவி செய்வோம் என்று இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

********

குளிர் இங்கே வாட்ட ஆரம்பித்துவிட்டது. போன வாரயிறுதியில் 10"க்கு பனி வேறு.

வெளியில் போகும்போது அடுக்கடுக்கா ஆடைகளை போட்டுக் கொண்டு, கொலை செய்யப் போவதைப் போல், முகத்தை மூடும் மங்கி குல்லா (அதுக்கு சரியாத்தான் பேரு வெச்சிருக்காங்கன்னு வீட்லே சொல்றாங்க!), கையுறை இதையெல்லாம் மாட்டிக் கொண்டு - மறுபடி வீட்டுக்கு வந்து இதையெல்லாம் (எல்லாத்தையும்னா, எல்லாத்தையும் இல்லேப்பா!!!) கழட்றதுக்கே நேரம் சரியா போயிடுது. இதுலே எங்கே பதிவு, இடுகை, பின்னூட்டமெல்லாம்!!!.

குளிரினால் பெரிய உபயோகம் என்னன்னா (இதெல்லாம் போன வருடமே சொன்னேன்னு நினைக்குறேன்!!!) - சட்டையை நெருப்புப் பெட்டியில் தேய்க்க வேண்டாம், அங்கங்கே கிழிஞ்சி இருந்தாலும் பரவாயில்லே, சொல்லப் போனா சட்டையே வேண்டாம் - அட. மேலேதான் குளிராடை (ஸ்வெட்டர்) போட்டிருப்போமே!!!.

*****

ஃபெட்னா-2010னுக்கான (FeTNA-2010) திட்டமிடும் பணிகள் துவக்கப்பட்டிருக்கின்றன. பல்வேறு திட்டக்குழுக்களில் உதவிட தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர். இங்கிருக்கும் நண்பர்கள் - உதவிட
நினைத்தால் சொல்லுங்கள். (ஃபெட்னா பற்றிய விவரங்களுக்கு www.fetna.org பார்க்கவும்).

*****

மேலே கேட்கப்பட்ட கேள்விக்கு இன்னேரம் விடையை கண்டுபிடிச்சிருப்பீங்க. அது டாக்டர் விஜய். வேணும்னா முதல் பத்தியை மறுபடி படிச்சிக்கோங்க. நான் இங்கே அதை விளக்கவில்லை.

*****

வீட்டில் காபி என்று கொடுத்த டிகாக்ஷன்
காலை அலுவலகத்துக்கு புறப்படும் டென்ஷன்

முன்னால் செல்லும் வண்டியின் புகை
சடாரென்று கடக்கும் பாதசாரியின் கண்ணில் தெரியும் பகை

சரியாக நாம் வரும்போது மாறும் சிவப்பு
மேலே கூறிய எல்லாவற்றாலும் சரியான கடுப்பு

இவற்றிற்கெல்லாம் இருக்கு உங்ககிட்டே மாத்திரை
இந்த இடுகைக்கு நீங்க போடும் ஓட்டு முத்திரை

ஓட்டு போடுவோம்! பயன் பெறுவோம்!!!
(நான் என்னைச் சொன்னேன்!!!)

******

Read more...

Wednesday, December 16, 2009

கககா கிக்கீகூகூ கெகெக்கே குகூகெகே கவுஜ!!!

நண்பர்கள் குழாம் -
எனக்கு இரண்டு உண்டு.


இரண்டிலும்
எல்லாரையும்
நன்றாக கலாய்ப்பேன்
நானும்
கலாய்க்கப்படுவேன்.


இரண்டிலும்
இடியாப்பத்திலிருந்து
இத்தாலியன் பீட்ஸா வரை
அனைத்தையும்
ஒரு கை
பார்ப்போம்.


இரண்டிலும்
அறுவை ஜோக்கிலிருந்து
அடல்ட்ஸ் ஒன்லி
ஜோக்ஸ் வரை
எல்லாவற்றையும்
அலசுவோம்.


இரண்டிலும்
புத்தம் புதிய
படங்களிலிருந்து
பழைய படங்களை வரை
அனைத்தையும்
பார்த்து
விமர்சிப்போம்.


இப்படி இரு குழாமிலும்
இவ்வளவு ஒற்றுமை
இருக்கிறதே,
ஏதாவது ஒரு
வேற்றுமையாவது
இருக்கிறதா என்று
பார்த்தேன்.


பளிச்சென்று
தெரிந்தது ஒரு
வேற்றுமை.


ஒரு குழாமில்
நான் சகதமிழன்

மற்றொன்றில்
சாலா மதராஸி...

***********

Read more...

Sunday, December 13, 2009

FeTNA-2010 : ஊர் கூடி இழுக்கும் பிரமாண்ட தேர்...

நேற்று (12/12/2009), Connecticut Glastonbury-யில் வட அமெரிக்க தமிழ் சங்கப் பேரவையின் (FeTNA) கூட்டம் நடைபெற்றது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய கூட்டத்தில், கனெக்டிகட் தமிழ் சங்கத்தின் தலைவி திருமதி.ஸ்ரீமதி ராகவன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.



FeTNAவின் தலைவர் முனைவர் திரு.முத்துவேல் செல்லையா அவர்கள் - இந்த பேரவையின் வரலாற்றினையும், ஆண்டு விழாவின் சிறப்பினையும், சென்ற முறை அட்லாண்டாவில் நடைபெற்ற கூட்டத்தின் வெற்றியையும் சொல்லி, அதைவிட இந்த முறை இன்னும் சிறப்பாக செய்ய வேண்டிய அவசியத்தையும் கூறினார்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திரு.நல்லதம்பி (மறைந்த நடிகர் திரு.என்.எஸ்.கிருஷ்ணனின் புதல்வர்) தன் பெற்றோரின் வாழ்க்கையிலும், திரைப்படங்களிலும் நடந்த முக்கியமான நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார்.



விழாவில் பேசிய முனைவர் திரு.பழனி சுந்தரம் அவர்கள் - இந்த விழாவினை வெற்றிகரமாக நடந்த அனைத்து தமிழர்களும் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.




மேலும், ஜூலை மாதம் நடக்கவிருக்கும் விழாவில் பங்கேற்கவிருக்கும் சிறப்பு விருந்தினர்கள் இன்னும் முடிவாகவில்லையென்றும் கூறினார். ஆனாலும், பலரை இன்னும் தொடர்பு கொண்டு பேசிக்கொண்டிருப்பதாகவும் கூறி ஒரு பட்டியலை வாசித்தார்.


திரு.அப்துல் கலாம் அவர்கள் (இவரை மூன்று வருடங்களாக விழாவுக்கு வரவழைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்களாம்), பேரூர் ஆதீனம், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், HCL தலைவர் ஷிவ் நாடார், PepsiCo தலைவி இந்திரா நூயி, எழுத்தாளர் சிவசங்கரி, இறையன்பு IAS, இயக்குனர்கள் பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், நடிக/ நடிகையர் சூர்யா, ஜோதிகா, விக்ரம், விவேக், வடிவேலு, கஞ்சா கருப்பு, மதுரை முத்து - ஆகிய பலரும் வர வாய்ப்பு இருப்பதாக அறிவித்தார்.


முனைவர். திரு முத்துவேல் செல்லையா, முனைவர் திரு.பழனி சுந்தரம், FeTNAவின் முன்னாள் தலைவர் திரு. நாச்சிமுத்து சாக்ரடீஸ், தமிழ்மணம் சங்கரபாண்டி மற்றும் பலருடன் உரையாட வாய்ப்பு கிடைத்தது.

இதே மாநிலத்தில் இருக்கும் - பிரபு (இவரும் பதிவராம். ஆனால் கடந்த ஒரு வருடமாக ஒன்றும் எழுதவில்லையாம்!), சுகன் மற்றும் மோகன் என்று சில தமிழர்களின் நட்பும் கிடைத்தது.

குடி என்பது எனக்கு 'குடி'த்தனத்தில் மட்டுமே இருப்பது என்பதால் ஒன்றும் குடிக்காமல், அங்கிருந்த அருமையான உணவை மட்டும் சாப்பிட்டுவிட்டு, சுமார் 8.30 மணிக்கு புறப்பட்டு வந்துவிட்டேன்.


*****


(வந்திருந்த கூட்டத்தினரின் ஒரு பகுதி)


(இ-வ திரு. நல்லதம்பி, திரு.முத்துவேல் செல்லையா, திரு.பாலகிருஷ்ணன், திரு.பழனி சுந்தரம்).


(முனைவர் திரு.முத்துவேல் செல்லையா பேசுகிறார்).



(முனைவர் திரு.பழனி சுந்தரம் பேசுகிறார்).



Read more...

Tuesday, December 8, 2009

பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது...

பெண்களைப் பற்றிய செய்திகளில் நாம் பார்ப்பதுதான் இந்த வாக்கியம் - "சம்மந்தப்பட்ட பெண்ணின் பெயர்/வயது மாற்றப்பட்டுள்ளது). பேரு மட்டும்தான் மாத்தணுமா, அந்த செய்தியிலே இன்னும் எதையெல்லாம் மாத்தலாம்னு யோசிச்சப்போ உதிச்சதுதான்(!!) இந்த இடுகை. படிச்சிட்டு உதைக்க வராதீங்க.

*****

நேற்று காலை சுமார் 8 மணியிருக்கும் (நேரம் மாற்றப்பட்டுள்ளது).

திருவல்லிக்கேணியில் பெரிய தெரு (தெரு மாற்றப்பட்டுள்ளது).

தன் வீட்டில் சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இட்லி, கெட்டி சட்னியுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

"ஏண்டி, இது என்ன கெட்டி சட்னியா? இந்த இட்லியை மனுசன் சாப்பிடுவானா?" என்று மனைவியை பார்த்து கத்தினார். (சத்தம் அதிகரிக்கப்பட்டுள்ளது).

"ஏங்க. இதுக்கென்ன குறைச்சல்". உள்ளே ஒரே ஒரு பாத்திரம் உருளும் சத்தம் கேட்டது. (பாத்திரங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது).

"நீ இங்கே வாடி முதல்லே." (மரியாதை குறைக்கப்பட்டுள்ளது).

"நான் வர்றது இருக்கட்டும். முதல்லே இதுக்கு பதில் சொல்லுங்க." உள்ளேயிருந்து ஒரு ஸ்பூன் பறந்து வந்தது. (ஆயுதம் சைஸ்/எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது).

சுரேஷ் அதை தடுக்கும்முன் அந்த ஸ்பூன் அவர் தலையில் பட்டு, ச்சின்ன காயம் உண்டானது. (காய அளவு குறைக்கப்பட்டுள்ளது).

அந்த காயத்தைப் பார்த்த அவர் மனைவி, உள்ளேயே மெல்ல சிரிக்கும் ஓசை கேட்டது. (சிரிப்பொலி குறைக்கப்பட்டது).

சுரேஷ் வலிதாங்க முடியாமல் "ஆ" என்ற ஒரு எழுத்தையே நீளமாக சொன்னார். (டெசிபல் குறைக்கப்பட்டது).

"சாரிம்மா. இனிமே நான் இப்படி சொல்ல மாட்டேன். என்னை மன்னிச்சிடு" - சுரேஷ் தழுதழுத்தார். ( அழுகை குறைக்கப்பட்டது).

"சரி பரவாயில்லை விடுங்க. ஆனா, இப்போ என்னை திட்டினதுக்கு ஒரு பட்டுப் புடவை வாங்கித் தந்தே ஆகணும்". (புடவை எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது).

"அதுக்கு நீ என்னை இன்னும் நல்லாவே அடிச்சிருக்கலாம்" - மனதில் பேசினார் சுரேஷ் (குரலோசை குறைக்கப்பட்து).

"அப்போ இந்தாங்க." உள்ளேயிருந்து ஒரு குச்சி வெளிப்பட்டு சுரேஷை தட்டியது. (ஆயுதம் / எஃபெக்ட் குறைக்கப்பட்டது).

"ஐயய்யோ.. என்னை விட்டுடு". சுரேஷ் வீட்டை விட்டு வெளியேறி நடந்தார். (ஓட்டம் குறைக்கப்பட்டது).

*****

பின்குறிப்பு : இது என் டயரியில் எழுதவேண்டியது. (இடம் மாற்றப்பட்டுள்ளது).

Read more...

Sunday, December 6, 2009

கைப்பேசியில் கூப்பிடுபவர்களது மேட்டரை ‘கட்' செய்யுங்கள்!

1. ஆபீஸுக்குத்தான் பைக்குலே / கார்லே போயிட்டிருக்கேன். இன்னும் அரை மணி நேரம் ஆகும். பேசலாம். சொல்லுங்க.

2. இப்பத்தான் ரயிலிலிருந்து இறங்கினேன். தண்டவாளம் கடக்கறதுக்காக நிக்குறேன்.

3. வீட்டுக்குத்தான் வந்துட்டிருந்தேன். இப்போ பெட்ரோல் பங்க்லே பெட்ரோல் போட்டிட்டிருக்கேன்.

4. பஸ்லே / ரயில்லே போயிட்டிருக்கேன்.

5. பேங்க்லே / மருத்துவமனைலே இருக்கேன்.

*****

நண்பர்கள் யாரையாவது கைப்பேசியில் கூப்பிட்டால் நான் கேட்கும் முதல் கேள்வி - பிஸியாயிருக்கீங்களா?. அப்போ அவங்க மேற்கூறிய பதில்களில் ஏதாவது ஒன்றை கூறினால், மேற்கொண்டு பேசாமல் உடனடியாக அழைப்பை துண்டித்து விடுவேன்.

அதே போல், நான் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும்போது யாராவது கூப்பிட்டாலும் அதை எடுக்காமலும், அப்படியே எடுக்க வேண்டியிருந்தால் வண்டியை ஓரத்தில் நிறுத்தியே அந்த அழைப்பை எடுக்கும் பழக்கத்தை வைத்திருக்கிறேன்.

ஓட்டுனர் கைப்பேசியில் பேசிக்கொண்டு வண்டியை ஓட்டுவதுதான் பெரும்பான்மையான விபத்துகளுக்குக் காரணமாக அமைந்துள்ளது. இது எல்லாருக்கும் தெரியும். அதில் அந்த ஓட்டுனரது தவறு 50% என்றால் மீதி மறுமுனையில் பேசுபவரதாகும்.

வண்டி ஓட்டிட்டிருக்காரே, நாம் இப்போது பேசினால் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதுன்னு தெரிஞ்சி அழைப்பை துண்டித்தாலே, விபத்துகளின் எண்ணிக்கை கணிசமாக குறைய வாய்ப்புள்ளதுன்றது என் கருத்து.

*****

மேலே சொன்ன பதில்களில் முதல் இரண்டு - இவ்வகையானதே.

பேசுபவருக்கும், அவருடன் இருப்பவர்களுக்கும் பிரச்சினை வரக்கூடும் என்ற உணர்வு இருந்தால், அழைப்பவர் கண்டிப்பாக அழைப்பை துண்டித்து விடுவார். அது எத்தகைய விஷயமாக இருந்தாலும், அவர் வீடோ / அலுவலகமோ போய் சேரும் சிறிது நேரம் காத்திருத்தலில் ஒன்றும் குடி முழுகிப்
போய்விடாது என்று உணர வேண்டும்.

மூன்றாவது பதில் இன்னும் அபாயமானது. எல்லா பெட்ரோல் பங்கிலும் - கைப்பேசியை பயன்படுத்தாதீர்கள் என்று போட்டிருப்பார்கள். இங்கேயும் கவனமாக இருத்தல் அவசியம்.

கடைசி இரு பதில்களில் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு இல்லையென்றாலும், அந்தப் பக்கம் பேசுபவரால் மற்றவர்களுக்கு எவ்வளவு தொந்தரவு ஏற்படும் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

*****

தண்டனைகள் கடுமையானாத்தான் குற்றங்கள் குறையும்னு விவேக் சொன்னது போல், கைப்பேசியில் பேசிக்கொண்டே விபத்து ஏற்படக் காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனைகள் தரப்பட வேண்டும். அப்படியே, அழைப்பின் அந்தப்பக்கம் பேசியவருக்கும் தண்டனை தந்தா இன்னும் நல்லா இருக்கும். அழைப்பை ‘கட்' செய்யாத குற்றத்திற்காக, அவரது மேட்டரை ‘கட்' செய்துவிட்டால், மறுபடி வேறு யாராவது வண்டி ஓட்டும்போது அழைத்து பேசமாட்டார் என நம்பலாம்.

*****

Read more...

Wednesday, December 2, 2009

Fetna-2010 மற்றும் நொறுக்ஸ்...

குளிர் காலம் ஆரம்பிச்சிடுச்சு இங்கே. தங்ஸாலெ சஹானாவை பள்ளிக்கு நடத்தி கூட்டிட்டு போகமுடியல. காலையில் 9 மணிக்கு நாந்தான் போய் விடவேண்டியிருக்கு. அதுக்காக மேனேஜர்கிட்டே இனிமே காலையில் வர்றதுக்கு கொஞ்சம் நேரமாகும்னு சொல்லப் போனேன்.

மேனேஜர்: லேட்டுன்னா, எப்போ வருவே?

நான்: கரெக்டா 9.10க்கு தினமும் வந்துடுவேன்.

மேனேஜர்: ம்? (கோபத்தோடு என்னைப் பார்க்க...)

நான்: (பின்மண்டையை சொறிந்தவாறே) : கோபப்படாதீங்க. தினமும் சரியா 9.10க்கு வந்துடுவேன். வேலையை சரியா செய்துடறேன். பாவம் தங்ஸ் குளிர்லே நடக்க முடியல. அதனால்தான்...

மேனேஜர்: இவ்ளோ நாளா எத்தனை மணிக்கு ஆபீஸ் வந்துட்டிருந்தே?

நான்: அது வந்து.. அது வந்து..

மேனேஜர்: நான் சொல்றேன்... 9.30.. எனக்கு தெரியாதுன்னு நினைச்சிட்டிருந்தியா?... @#$%% @#%@@

(இன்னும் அங்கேயே நின்னுக்கிட்டிருக்க நான் என்ன லூஸா... எஸ்கேப்....)

***********

போன வாரம் இங்கே நன்றி சொல்லும் நாள். அதாங்க Thanksgiving day. அன்னிக்கு ஒரு நாளு தொலைக்காட்சிப் பெட்டி முதல் சாம்பார் கரண்டி வரை எல்லாம் விலை குறைப்பு (அப்படின்னு சொல்லி) செய்து விப்பாய்ங்க.

வைகுண்ட ஏகாதசி அன்னிக்கு விடியற்காலையில் சொர்க்க வாசல் திறக்கறதுக்கு முன்னாடி கோயில்லே மக்கள் கூடறா மாதிரி, இங்கேயும் எல்லா கடைகளுக்கு முன்னாடி கும்பல் சேந்துடுவாங்க. பொருட்களை வாங்க வர்றவங்களுக்கு நடுவே - வாங்கறவங்களை பாக்க வர்றவங்கன்னு சரியா கும்பல்.

நாங்களும் வருஷம் தவறாமே காலையில் 4.30 மணிக்கு குளிர்லே நண்பர்களோட எல்லா கடைகளுக்கும் ஒரு சுற்று சுற்றிவிட்டு வருவோம்.
அப்படி இந்த வருடம் வாங்கின பொருட்கள்.

ஒரு 42” வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி
ஒரு மைக்ரோவேவ் பெட்டி
ஆப்பிளின் பாட்டு கேட்கும் குட்டி பெட்டி
நாலைஞ்சு எலிக்குட்டி, விசைப் பலகை
மற்றும் பல பொருட்கள்.

இவ்வளவையும்... வெயிட் வெயிட்... நான் வாங்கலை. என் கூட வந்த நண்பன் வாங்கினான். அவன்கிட்டேந்து வாங்கி நான் கார்லே வைச்சேன். அவ்வளவுதான்...

**********

வட அமெரிக்கப் பேரவையின் 2010ஆம் ஆண்டுக்கான விழாவின் ஆரம்பம் வரும் டிசம்பர் 12ம் தேதி நடைபெறுகிறது. இடம், நேரம் மற்றும் விவரங்கள் கீழே.

அண்ணன் பழமைபேசி ஏற்கனவே விவரமா இடுகை இட்டுட்டாரு. ஒருக்கா படிச்சிக்கோங்க.

கூட்டத்திற்கு நான் போகலாம்னு இருக்கேன். மக்கள் யாராவது வர்றீங்கன்னா சொல்லுங்க. அட தப்பிச்சி போகறதுக்கு இல்லீங்க. பாக்கறதுக்கு வசதியா இருக்கும்னு சொல்ல வந்தேன்.

December 12 th, 2009

4.30 p.m

Bombay Grill [Address: 2333 Main St, Glastonbury, CT 06033, same as old 'Ambassador of India', now under new management]

CTVOC updates followed by a performance by Thiru Nallathambi, son of Late NS Krishnan and Tmt TA Mathuram

Wine and Dine : 7 p.m [South Indian Dinner]

Admission: Free for donors, $ 20 per head for non-donors*

RSVP: by Dec 5th 2009, by email [N Kuppuraj, nkuppuraj@gmail.com]

***********

இந்த சிச்சுவேஷனை உன்னிப்பா கவனிங்க..

இரவு சுமார் 8 மணி இருக்கும்.
அன்று முழு நிலவு நாள்.
நிலவு வெள்ளையா பிரகாசமா மேலே.
நல்ல இலையுதிர் காலம். எல்லா மரமும் மொட்டையா இருக்கு.
மொட்டையா இருக்குற மரக்கிளைகளுக்கு நடுவே நிலவின் வெளிச்சம் பாய்ந்து கொண்டிருக்கிறது.
முன்னே ஒத்தையடிப் பாதை.
காரில் நானும் தங்ஸும் தனியே போயிட்டிருக்கோம்.
பாதையில் எங்க காரைத் தவிர வேறு வண்டிகளே இல்லை.

இந்த சிச்சுவேஷன்லே உங்களுக்கு என்ன பாட்டு தோணும்?

எனக்கு...

ஒரு பழைய படத்துலே... சிவக்குமார் & சரிதா..சரிதாவுக்கு ஏதோ பிரச்சினை. சிவக்குமார் ஒரு பாட்டு பாடி அவங்களை தூங்க வைப்பாரு.அப்போ ஒரு வெள்ளையம்மா - மொட்டை மரங்களுக்கு நடுவே - சர்சர்ருன்னு சுத்தி வந்து ஆடுவாங்க.

ஒரு தடவை பக்கத்துலே உக்காந்திருந்த தங்ஸை திரும்பி பாத்தேன்.

அதுக்கப்புறம் வீடு வந்து சேர்றவரைக்கும் அவங்களை பாக்கலை...

***********

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP