Wednesday, September 30, 2009

யார் நீங்க? யார் நீங்க?

மருத்துவமனை. அறை எண் 46. ஒருவர் முழுவதுமாக போர்த்திக் கொண்டு படுத்திருக்கிறார். பக்கத்தில் ஒரு பெண் - கண்களில் கண்ணீரை துடைத்தவாறே அமர்ந்திருக்கிறார். அப்போது கதவைத்
தட்டியவாறே ஒருவர் அறைக்குள் நுழைகிறார். (இவரை பார்வையாளர் என்று அழைப்போம்).

பார்வை: என்ன ஆச்சு இவருக்கு?

பெண்: ஒண்ணும் ஆகலே. இப்பத்தான் போனாரு.

பார்வை: ஐயய்யோ. என்னங்க இவ்ளோ சாதாரணமா சொல்றீங்க? என்ன பிரச்சினை?

பெண்: அவரு ஒரு வாரமா போகாததுதான் பிரச்சினை. டாக்டர்கிட்டே சொல்லி, அவர்தான் மாத்திரை கொடுத்து இவரை போக வெச்சிருக்காங்க. நீங்க உக்காருங்க.

பார்வை: அடச்சே. மாத்திரை கொடுத்து மேட்டரை முடிச்சிட்டீங்களா? ஏங்க உங்களுக்கு இதயமே இல்லையா? கொடுத்துட்டு ஏன் இப்படி அழுதுட்டு உக்காந்திருக்கீங்க?

பெண்: ம். அதுவா. அது வேறே விஷயம்.

பார்வை: அப்படியா. கொஞ்சம் இருங்க. வெளியே போய் போலீஸை கூப்பிட்டு, உங்களையும், மாத்திரை கொடுத்த அந்த டாக்டரையும் பிடிச்சி உள்ளே போட வைக்கிறேன்.

பெண்: நீங்க என்னை தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க. நான் சொல்ல வந்தது என்னன்னா...

அவர் சொல்வதற்குள், அறைக்குள் டாக்டர் வருகிறார். எல்லோருக்கும் ஒரு ஹலோ சொல்லிவிட்டு, படுத்திருப்பவரின் கால் பக்க போர்வையை மட்டும் விலக்கி, ஒரு ச்சின்ன சுத்தியலால் முட்டியின் கீழ் தட்டிப் பார்க்கிறார்.

பார்வை: தட்டவேண்டியது அவரையில்லே டாக்டர். போலீஸ்கிட்டே சொல்லி, உங்களையும் இந்த பெண்ணையும்தான் முட்டிக்கு முட்டி தட்டச் சொல்லணும்.

சுத்தியல் அடி, கிச்சு கிச்சு மூட்டியதால், படுத்தவர் போர்வையை விலக்கி, எழுந்து உட்காருகிறார்.

பார்வை: (படுத்திருப்பவரைப் பார்த்து) : யார் நீங்க?

டாக்டர்: (படுத்திருப்பவரைப் பார்த்து): யார் நீங்க?

படுத்திருப்பவர்: (பெண்ணைப் பார்த்து, பார்வையாளரை காட்டி): யார் இவரு?

பெண் (பார்வையாளரைப் பார்த்து): ஆமா, யார் நீங்க?

டாக்டர் : இது என்னோட மருத்துவமனை. இங்கே நாந்தான் முதல்லெ கேள்வி கேப்பேன். (படுத்திருப்பவரைப் பார்த்து) உங்ககிட்டேந்து ஆரம்பிக்கிறேன். யார் நீங்க? இங்கே ஏன் படுத்திருக்கீங்க?

படு: டாக்டர், என் பேர் சுரேஷ். நான் ரமேஷை பார்க்க வந்தவன். ரொம்ப டயர்டா இருந்ததால், படுத்தவுடன் தூங்கிட்டேன். மன்னிச்சிடுங்க.

டாக்டர்: அப்போ பேஷண்ட் ரமேஷ் எங்கே?

பார்வை: ஆஹா.. ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்காதீங்க டாக்டர். ரமேஷை நீங்களும் இந்த பொண்ணும்தானே மாத்திரை கொடுத்து தீர்த்து கட்டினீங்க? மரியாதையா எல்லா உண்மையையும் சொல்லிடுங்க.

டாக்டர்: யாரு இவரு? வந்ததிலேந்து ஏடாகூடமா ஏதேதோ சொல்லிட்டு இருக்காரு?

பார்வை: யாரை ஏமாத்தப் பாக்குறீங்க? ஏம்மா, நீயாவது இவர்கிட்டே உண்மையை சொல்லிடு.

பெண்: டாக்டர், இவரு யாருன்னே எனக்குத் தெரியல. இப்பத்தான் உள்ளே வந்தாரு. வந்ததிலேந்து உளறிக்கிட்டே இருக்காரு.

பார்வை: நான் உளர்றேனா? அட்றா அட்றா... உங்க மேலே தப்பில்லேன்னா... ரமேஷ் எங்கே? நீங்க எதுக்கு அழுதுட்டிருக்கீங்க? அதையாவது சொல்லுங்க.

பெண்: நான் ஒண்ணும் அழலே. கண்ணுலே தூசி விழுந்து, போகவே மாட்டேங்குது. அவ்ளோதான்.

பார்வை: பாத்தீங்களா.. கடைசி வரைக்கும் ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லவே மாட்றாங்க. ரமேஷ் எங்கே? பாடியை என்ன பண்ணீங்க?

அறைக்குள் இருக்கும் ஓய்வறையின் கதவு திறந்து, ஒருவர் வெளியே வருகிறார்.

பார்வை: டாக்டர். இந்த சதியில் இன்னொருத்தருக்கும் பங்கு இருக்கா? இவருக்கு ஏன் பேஷண்ட் ட்ரஸ் மாட்டியிருக்கிங்க? ஆள் மாறாட்டம் பண்றீங்களா? எனக்கு இப்பவே எல்லா உண்மையும் தெரிஞ்சாகணும்.

டாக்டர்: இவரு இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே பேசிட்டிருந்தாருன்னா எனக்கு பைத்தியமே பிடிச்சிடும்.

சுரேஷ்: டாக்டர், இவரு யாரு?

டாக்டர், ரமேஷ், பெண் மூவரும்: (ஒரே குரலில்): அதைத்தான் நாங்க கடந்த பத்து நிமிஷமா கேட்டுட்டிருக்கோம். அவர் சொல்லவே மாட்டேங்குறாரு.

பார்வை: நான் யாருங்கறது இருக்கட்டும். (சுரேஷைப் பார்த்து) நீங்க யாரு? இந்த அறையில் என்ன பண்றீங்க?

சுரேஷ்: இது என்னோட அறை. நான் இந்த அறையில்தான் அட்மிட் ஆகியிருக்கிறேன். இப்ப சொல்லுங்க. உங்களுக்கு என்ன வேணும்?

பார்வை: (பாக்கெட்டை துழாவிக் கொண்டே) எனக்கு அப்பவே சந்தேகம் வந்தது. இருந்தாலும் ஒரு தடவை செக் பண்ணிடறேன். ஒரு நிமிஷம் இருங்க.

டாக்டர்: இதான் உங்களுக்கு லாஸ்ட் சான்ஸ். இப்பவாச்சும் நீங்க யாருன்னு சொல்லலேன்னா நடக்கறதே வேறே.

பார்வை: உங்க பேர் ரமேஷ்குமார்தானே? இது அறை 64தானே?

சுரேஷ்: இல்லே. என் பேர் ரமேஷ். இது 64 இல்லே... 46ம் அறை.

பார்வை: ஓ அப்படியா.. ஐ ஆம் சாரி. நாந்தான் அறை மாறி வந்துட்டேன்னு நினைக்கிறேன்...

ஆளாளுக்கு கையில் கிடைத்ததை எடுத்து அடிக்கும்முன், கதவைத் திறந்து பார்வையாளர் எஸ்கேஏஏஏப்.

*****

Read more...

Tuesday, September 29, 2009

நொறுக்ஸ் - செவ்வாய் - 09/29/09

இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது. ஜோதா அக்பர் திரைப்படம் பார்க்க வரமாட்டேன்னு சொல்லிட்டிருந்த நண்பரை மிகவும் வற்புறுத்தி அழைத்துச் சென்றேன். போகும்போது, போக்குவரத்து சிக்னலில் நின்றிருந்த நண்பர் கார் மீது மற்றொரு கார் இடித்து விபத்து. அன்றிலிருந்து, எங்கு சென்றாலும் என்னை அழைப்பதை குறைத்துக் கொண்டார் அந்த நண்பர். அந்த விபத்துக்கு நானும் ஒரு காரணம்தான் என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன்.


அதே போல், சென்ற மாதம் சஹானாவின் பிறந்த நாள் விழாவுக்காக, பக்கத்து ஊரிலிருந்து ஒரு நண்பரை அழைத்திருந்தோம். வர்றேன், வந்துட்டே இருக்கேன்னு சொன்ன நண்பர் கடைசி வரை வரவேயில்லை. பிறகு பார்த்தால், எங்கள் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும்போது - விபத்து. கவனக்குறைவால் இவர் வேறொரு வண்டியில் போய் இடித்துவிட்டாராம்.


இந்த விபத்துக்கு நீ பொறுப்பு கிடையாது. உங்க வீட்டுக்கு வரும்போது நடந்திருந்தாலும், என்னுடைய தப்புதான் அது - என்று நண்பர் கூறிக்கொண்டிருந்தாலும், மனதுக்கு மிகவும் கஷ்டமாயிருந்தது. சில நாட்களுக்கு என்ன செய்வதென்றும் புரியவில்லை...:-((


*********


தினமும் காலையில் நடக்கும் 5.30 மணி மீட்டிங்கில், கடந்த வாரத்தில் இரண்டு நாட்கள் கலந்து கொள்ளவில்லை. தூக்கத்தில் 6.15 மணியைப் பார்த்து, 5.15தானே ஆகுது, இன்னும் பத்து நிமிடம் தூங்கலாம்னு தூங்கி, எழுந்து பாத்தா, மணி 6.45 ஆகிவிட்டிருந்ததே காரணம்.


பஞ்சும் நெருப்பும் பக்கத்து பக்கத்துலே இருந்தாக்கூடப் பரவாயில்லே... இந்த அஞ்சும் ஆறும் ஒரே மாதிரி இருக்கிறதை - ஒரு அரசாணை போட்டு மாத்தமுடியுமான்னு கேட்டு சொல்லுங்கப்பா.... அவ்வ்வ்..


*********


ரொம்ப நாள் கழிச்சி தங்ஸுக்கு மிகவும் முக்கியமான ஒரு சந்தேகம் வந்தது. எங்களுக்கு தாலி, மெட்டி இந்த மாதிரியெல்லாம் இருக்குற மாதிரி, ஆம்பளைங்களுக்கு ஒண்ணும் இல்லையே? அவங்களுக்கு கல்யாணமாயிடுச்சுன்னு எப்படி கண்டுபிடிக்கிறதுன்னு கேட்டுட்டாங்க..


பொம்பளைங்க ஷாப்பிங் போனாலோ, அல்லது சும்மாவே வெளியே போனாலோ தனியா போறீங்க. அப்போ உங்களுக்கு கல்யாணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்கத்தான் அதெல்லாம். ஆம்பளைங்களை கொஞ்ச நேரமாச்சும் தனியா விடறீங்களா? இல்லையே? எங்கே போனாலும் கூடக்கூட வந்துடறீங்கல்லே... அப்புறம் எங்களுக்கு எதுக்கு தனியே ஒரு குறியீடு? பொண்டாட்டி கூட இருந்தா, கல்யாணமாயிடுச்சுன்னு நினைச்சிக்க வேண்டியதுதான் - அப்படின்னு சொன்னேன்.


சரிதானே?


*********


சஹானா பாட்டுக்கு பாடகி சின்மயிக்கு விருது கிடைத்திருக்காம். இதில் எனக்கு ஆச்சரியமேயில்லை. சஹானாவுக்குதான் பரிசு கிடைக்கும்னு முன்னாடியே தெரியும். பின்னே சத்யா இல்லேன்னா மகேஷ்னு பாட்டு எழுதியிருந்தா அதுக்கெல்லாம் பரிசு கிடைக்குமா என்ன?... :-))

என்ன மகேஷ் அண்ணே, சரிதானே?

********

இந்தியாவிலிருந்து திரும்பி வரும்போது பத்து கிலோவுக்கு புத்தகங்கள் வாங்கி வந்திருந்தேன். சுஜாதா, சாரு, ஜெயமோகன், பாரா, ஜெஃப்ரி ஆர்ச்சர் இவங்களையெல்லாம் விமானத்தில் படிக்க ஆரம்பித்து, இங்கே வீட்டில் ஓய்வறைக்கு உள்ளே, வெளியே, துணி துவைக்கப் போகும் இடத்தில் கிடைக்கும் ஒரு மணி நேரத்தில் - இங்கெல்லாம் படித்துப் படித்து, முடித்தேன்.

இனிமே 'உள்ளே' சுடோகுதான் போடணும்.... :-((

******

டாக்டர் விஜய் மட்டும்தான் அவரோட அரசியல் பிரவேச முடிவை மாத்திக்க முடியுமா என்ன?... நான்கூட சென்ற இடுகையில் கூறியபடி - நபோஒ - பதிவர்களின் பார்வையில் - இடுகையை நேரமின்மையால்
எழுதவில்லையென்று அதிகாரபூர்வமாக அறிவிக்கிறேன்.


இருந்தாலும், அடுத்த வருடம் தமிழக அரசின் சார்பில் சிறந்த படமாக உபோஒ தேர்ந்தெடுக்கப்படப்போவதால், அதைப் பற்றி எழுதலேன்னாலும், அதோட உல்டா நபோஒ -வைப் பற்றி ஏதாவது எழுதியே
ஆகவேண்டுமென்பதால் ... இப்படியெல்லாம் பின்னூட்டம் வந்திருந்தால் எப்படியிருக்கும்னு ஒரு சிறு கற்பனை...


**


இது ஒரு சிறந்த ஆணாதிக்கப் பதிவு. இதையேதான் நாங்க ஆட்டோகிராஃப் படத்துலேந்து சொல்லிட்டு வர்றோம். இதையே ஒரு பெண் தொலைபேசி, வீட்டிலே ஆம்பளை இருக்கறதா பதிவு எழுதக்கூடாதா... இல்லே அப்படி எழுதினாதான் நல்லா இருக்காதா...


ஹாஹா... நண்பா.. மத்தியானம் 12 மணிக்கு எந்த பெண் வீட்டு வேலை பாக்கறாங்க... அப்பதான் டிவிலே சீரியல் ஓடிட்டிருக்குமே.... ஒரு வேளை விளம்பர இடைவேளையில் அப்படி நடக்கும்னு எழுதியிருந்தீங்கன்னா... ஓகே...


சுத்தமா ஒத்துக்கவே முடியாத பதிவு... ஒரு புருஷன் எப்படிப்பட்ட கொம்பனா இருந்தாலும், எப்படித்தான் குரலை மாத்தி பேசினாலும், அவனோட மனைவியால் உடனடியா கண்டுபிடிக்கப் படுவான். இங்கே
அந்தப் பெண் அப்படி கண்டுபிடிக்கலேன்றதாலே, இந்த பதிவே டோட்டல் பீலா.... வர்ட்டா...


தலைவா... அவன் வீட்டு சமையல்லேந்து ஒரு நாளைக்கு தப்பிச்சிட்டான்... ஆனா மறுபடி அடுத்த நாள் மாட்டித்தானே ஆகணும்... என்னவோ போங்க...


அவரை எங்க வீட்டுக்கும் தொலைபேசி இப்படியே செய்யச் சொல்லுங்களேன்...


பொம்பளைங்கன்னாலே வீட்டு வேலை செய்யத்தான்னு முடிவு பண்ணிட்டீங்களா... இது வேலைக்காகாத பதிவு...


இந்த பதிவுலே அந்த எதிர் வீட்டு ஜன்னலுக்கு என்ன வேலைன்னே தெரியல. கடைசி வரை, அவங்களுக்கு இதனால் என்ன நன்மைன்னே புரியல... சும்மா அவங்க கால்ஷீட் கிடைச்சிடுச்சுங்கறதால் அவங்களையும் கதையில் சேத்துக்கிட்டிருக்கீங்கன்னு நினைக்கிறேன்.... சரிதானே?

************

Read more...

Wednesday, September 23, 2009

நம்மைப் போல் ஒருவன்...!!!


நண்பகல் 12 மணி. அந்த உயர்ந்த கட்டிடத்தின் மொட்டை மாடியில் ஒருவன் ஏறிக் கொண்டிருக்கிறான். கையில் மதிய உணவுப் பொட்டலம், தண்ணீர் பாட்டில், கைப்பேசி மற்றும் ஒரு சிறிய கணிணி. மாடியில் கிடக்கும் ஒரு கிழிந்த பாயில் உட்கார்ந்து - சுற்றும் முற்றும் பார்த்து - சோம்பல் முறித்தவாறே - கைப்பேசியில் எண்களை அழுத்துகிறான்.




அதே வேளையில், நகரில் ஒரு வீட்டில் ஒரு பெண் வீட்டுவேலை செய்துகொண்டிருக்கிறார். அப்போது தொலைபேசி அடிக்கிறது. எடுத்துப் பேசினால் - "உங்க புருஷனைப் பத்தி ஒரு விஷயம் சொல்லப் போறேன். அதை கேக்கறதுக்கு நீங்க தயாரா இருக்கீங்களான்னு நான் பாக்கணும். உங்க வீட்டு வேலையெல்லாம் முடிச்சிட்டு வாங்க. ஒரு பத்து நிமிஷம் கழிச்சி மறுபடியும் கூப்பிடறேன்". அந்தப் பெண் - ஹலோ, ஹலோவென்று சொல்லச் சொல்ல, தொலைபேசி வைக்கப்படுகிறது.




மொட்டை மாடி மனிதன், தண்ணீர் குடித்தவாறே தன் கைப்பேசியில் இணையத்தை மேய்ந்து கொண்டிருக்கிறான். பத்து நிமிடம் கழித்து - மறுபடி கைப்பேசியில் எண்களை அழுத்துகிறான்.



"நீ யாரு? என் புருஷனைப் பத்தி எனக்குத் தெரியாத எதை சொல்லப் போறே?"



"நான் யாருன்றது முக்கியமில்லே. நான் சொல்லப் போற விஷயம்தான் முக்கியம். ஆனா அதுக்கு முன்னாடி கவனமா கேளு. நான் சொல்ற இந்த நாலு பொருட்களை எடுத்து உங்க வீட்டு காம்பவுண்ட் சுவற்றுக்கு வெளியே வைக்கணும். உன்னுடைய கைப்பையிலிருந்து கைக்குட்டை, அலமாரியிலிருந்து உன் சென்ட் - அதாவது நாத்தமருந்து, இன்னிக்கு காலையில் நீ செய்த சாம்பார் மற்றும் உன் புருஷனோட ஒரு பழைய பனியன் - இந்த நாலு பொருட்களையும் வெளியே வெச்சிட்டு வா. அடுத்து 30 நிமிஷம் கழிச்சி மறுபடி கூப்பிடுறேன்."



"நீ சொல்றத கேக்கலேன்னா?"



"எனக்கு ஒண்ணும் நஷ்டம் கிடையாது. உன் புருஷனைப் பத்தி ஒரு நல்ல விஷயம் சொல்லலாம்னு பாத்தேன். அப்புறம் அந்த ரகசியம் உனக்குத் தெரியாமலேயே போயிடும். பரவாயில்லையான்னு முடிவு பண்ணிக்கோ."



டொக்.



"ஹலோ, ஹலோ"



*****



மொட்டை மாடி. இப்போது வேறொரு எண்ணை அழுத்துகிறான்.



"ஹலோ"



"உன் வாழ்நாளிலேயே உனக்குப் பிடிச்ச செய்தி ஒண்ணு சொல்றேன். கேட்டுக்க தயாரா இருக்கியா?"



"யார் நீ? என்ன செய்தி அது?"



"உடனே உன் வீட்டு ஜன்னலிலிருந்து வெளியே எட்டிப் பார். எதிர் வீட்டிலிருந்து ஒருவர் சில பொருட்களை எடுத்து வந்து வெளியே வைப்பாங்க. அடுத்த பத்து நிமிடங்களுக்கு அப்படியே பாத்திட்டு இரு. நீ ரொம்ப நாளா எதிர்பார்த்தது நடக்கும்."



*****



எழுந்து போய் வெளியே நகரத்தைப் பார்க்கிறான். மொட்டை மாடியிலிருந்து நல்ல வியூ. ஆனால், உச்சி வெயில் மண்டையை பொளக்கவே, மறுபடி வந்து நிழலில் உட்கார்ந்து - படபடவென்று நெட்டி முறித்தவாறே - மதிய உணவுப் பொட்டலத்தை பிரித்து நிதானமாக சாப்பிட ஆரம்பிக்கிறான்.



*****



முதலில் பார்த்த பெண் வீடு.



"தொலைபேசியிலே பேசினது யாருன்னே தெரிய்லியே. இவரோட பேசலாம்னா ஸ்விச்ட் ஆஃப்னு வருது. எங்கே போய் தொலைஞ்சாரோ தெரியலே. சரி, அவன் சொல்றத கேக்குறத தவிர வேறே வழி தெரியல. அந்த நாலு பொருட்களையும் எடுத்து வெளியில் வெச்சிடுவோம்."

பொருட்களை சேகரிக்க ஆரம்பிக்கிறார்.



*****



இரண்டாவதாக பார்த்த பெண் (எதிர்) வீடு:



"ஹலோ.."



"ஆமா. நீங்க சொன்ன மாதிரியே எதிர் வீட்லே அவங்க பொருட்களை எடுத்து வெளியே வெச்சாங்க. அந்த பொருட்கள் கிட்டே வந்த தெரு நாய்கள், வாசனை பார்த்தவுடன், அலறி அடித்து ஓடிடுச்சுங்க. இனிமே அதுங்க இந்த தெருவுக்கே வராதுன்னு நினைக்கிறேன்".



டொக்.



*****



மறுபடி முதல் வீடு:



"நான் சொன்ன மாதிரியே செஞ்சதுக்கு நன்றி".



"உனக்கு எப்படி தெரிஞ்சுது."



"ஹாஹா.. நடக்கறதை நான் பாத்துக்கிட்டே இருக்கேன்".



"நீ யாருன்னு சொல்லு. நாய்களை ஏன் இந்த தெருவை விட்டு துரத்தினே?"



"பொதுமக்களுக்கு பிரச்சினை பண்ணுதுன்னு நகராட்சியே நாய்களை பிடிச்சிட்டு போகுது. நானோ வெறும் துரத்தித்தானே விட்டேன். அவங்க பண்ணா சரி. அதுவே நான் பண்ணால் தப்பா?"



"அது சரிதான். நாய்ங்களால் எங்களுக்கு பிரச்சினைதான். அதுக்கு எதுக்கு எங்க வீட்டை செலக்ட் பண்ணே? நீ யாரு"



"கடைத் தெருவுலே, சூப்பர் மார்க்கெட்லே ஜோடியா ஷாப்பிங் பண்ணும்போது புருஷனை பொண்டாட்டி திட்டிக்கிட்டே வருவாங்களே - அவனை மாதிரி நானும் ஒரு அப்பாவி மனுஷந்தான். நாய்களால் நான் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கேன். அவங்களை துரத்த என்ன வழின்னு யோசிக்கும்போதுதான், இந்த ஐடியா எனக்கு தோணிச்சு. நான் யாருன்னு உங்களுக்கு தெரிய வேண்டியதில்லே. இனிமே நீங்க கொஞ்ச நாளைக்கு தெருவுலே பயமில்லாமே நடமாடலாம். சம்பவாமி யுகே யுகே..."



டொக்.



*****



"அப்பாடா. அந்த மூணு பொருட்களால் வீட்லே பயங்கர கப்பு. என்னாலேயே தாங்கவே முடியல. பாவம் அந்த நாய்ங்க என்ன பண்ணும். ஓடியே போயிடுச்சுங்க. ஒரே கல்லுலே ரெண்டு மாங்கா. எல்லாம் அவளோட பொருளாவே எடுத்துப் போட்டா, என் மேலே சந்தேகம் வந்துடும்னுதான், என்னோட பனியனையும் எடுத்துப் போடச் சொன்னேன். இனிமே நிம்மதியா வீட்டுலே இருக்கலாம். ஐயய்யோ.. லஞ்ச் அவர் முடிஞ்சிடுச்சே. கீழே மேனேஜர் கத்துவாரே. போய் வேலையை ஆரம்பிக்கணும்".



ட்ரிங்.. ட்ரிங்..



"என்னங்க. சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுவீங்கல்லே. வரும்போது உங்களுக்கு புது பனியன் வாங்கிட்டு வந்துடுங்க. இன்னிக்கு இன்னொரு சமாச்சாரம் நடந்துச்சு. சாயங்காலம் சொல்றேன். வெச்சிரட்டா"



டொக்.



மாடியிலிருந்து மெதுவாக கீழிரங்கிப் போக, காமிரா அவர் பின்னால் zoom out ஆகிறது.



சுபம்.



*****



பின்குறிப்பு : இந்த கதையை பதிவர்கள் விமர்சனம் பண்ணா எப்படி இருக்கும். அதுதான் என்னோட அடுத்த இடுகை.... விரைவில்...



*****

Read more...

Friday, September 18, 2009

ரெண்டு பேருக்கு கெட்டது பண்ணனும்னா, தோசைகூட சுடலாம்!!!

என்னோட நண்பர்கள் பலருக்கு (வட இந்தியர்கள்) அருமையா சமைக்கத் தெரியும். அடிக்கடி நடக்கும் வாரயிறுதி சந்திப்பு - அவங்க வீட்டிலே நடந்ததுன்னா, அவங்கவங்க மனைவிகளை சமையலறையிலேயே விடமாட்டாங்க. ஆண்களே விதவிதமா சமைச்சிக்கிட்டிருக்க,
மனைவிகள் வெளியே உட்கார்ந்து வம்படிச்சிக்கிட்டிருப்பாங்க.


எனக்கோ சமையல்னா - சிந்துபைரவி படத்துலே சுலட்சணா கேக்கறா மாதிரி - கத்திரிக்கா கிலோ என்ன விலைப்பா?. அதனால், ஒவ்வொரு முறை சந்திப்பிலிருந்து வந்தபிறகும் தங்ஸ் மெல்ல - பாத்தீங்களா உங்க நண்பர்களை. வீட்டுலே எப்படி வேலை செய்யறாங்கன்னு.
நீங்களும் இருக்கீங்களே? - ன்னு ஆரம்பிப்பாங்க.


எதையாவது சொல்லி சமாளிக்கணுமே? அதனால் நானும் - ஹேய். லூஸ்லே விடும்மா. பையன் உங்க எதிரே நல்லா வேஷம் போடுறான். நாமெல்லாம் போயிட்டா எந்த வேலையும் செய்ய மாட்டான். கணிணி,
தொலைக்காட்சின்னே இருப்பான். இதெல்லாம் கண்டுக்காதேன்னு சொன்னாலும் விடமாட்டாங்க.


ஆரம்பத்திலே மெல்லமா கேட்டவங்க, போகப்போக - மெல் - மெ - ச - சத் - சத்த - சத்தமா கேக்க ஆரம்பிச்சிட்டாங்க.


என்னடா இது வம்பா போச்சுன்னு உடனடியா ஒரு மினி சந்திப்பு போட்டு (ஆண்கள் மட்டும்!) - ஏம்பா, இப்படியெல்லாம் பண்றீங்க. உங்களாலே எனக்கு தினமும் வீட்டிலே மண்டகப்படி நடக்குது. கொஞ்சம் பாத்து பண்ணுங்கன்னு சொன்னேன். பயபுள்ளைங்க முடியாதுன்னாட்டாங்க. உன் நிம்மதியை பாத்துக்க, நாங்க எங்க நிம்மதியை கெடுத்துக்கணுமா? மனைவியை வேலை செய்னு சொல்லப்போய், இனிமே நீங்க வெளியேதான் படுக்கணும்னு வீட்டை விட்டு துரத்திட்டா என்ன பண்றது?... ஆள விடுடா சாமின்னு கெளம்பி
போயிட்டாங்க.


நானோ இதுக்கு ஒரு வழி கண்டுபிடிச்சே ஆகணும்னு முடிவோட இருந்தேன். வேலையை விட்டுட்டு வேறே ஊருக்குப் போயிடலாமான்னுகூட யோசிச்சேன். ஆனா அங்கேயும் சமையல் செய்யற ஆம்பளைங்க நண்பர்களா வந்துட்டா மறுபடி இதே பிரச்சினைதானே வரும்னு அந்த
முடிவையும் கைவிட்டேன். சாலையில் நடந்துபோகும்போது, எதிரே யாரோ எதுக்கோ சிரிச்சாக்கூட - ஐயோ, இவனுக்கு சமைக்கத் தெரியாதாம்னு சொல்லி, என்னைப் பார்த்து சிரிக்கறமாதிரியே தோணும். இவ்வளவு ஏன், கனவுலே நமீதா வந்து - வாப்பா ச்சின்னப் பையா, ஒரு பாட்டு பாடலாம்னு சொன்னாக்கூட, அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணும்மா... புளிக்குழம்பு வெச்சிட்டு வந்துடறேன்னு சொல்ற அளவுக்கு சமையல் பிரச்சினை என்னை வாட்டிக் கொண்டிருந்தது.


மெதுவா, சரி - சமையலுக்கு மனசளவுலே நான் இன்னும் தயாராகலை. கொஞ்சம் வயசாகணும். இப்போதைக்கு பாத்திரம் வேணா தேய்ச்சி தர்றேன். ஓகேவா? - அப்படின்னு தங்ஸ்கிட்டே கேட்டு அதை செய்ய ஆரம்பிச்சேன்.


ஆரம்பத்துலே அப்பப்போ செய்துக்கிட்டிருந்த அந்த வேலை, பிறகு அப்பப் - அப் - அடி - அடிக் - அடிக்கடி - தின - தினமும்னு ஆயிடுச்சு.


நீயும் பொம்மை, நானும் பொம்மைன்னு சோகமா பாடிக்கிட்டே பாத்திரம் தேய்ச்சிக்கிட்டு இருந்தவன் - தங்ஸின் குரல் குறைய ஆரம்பித்ததால், சந்தோஷத்தில் - ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறதுன்னு பாட ஆரம்பித்தேன்.


அவ்ளோதான். எல்லா பிரச்சினையும் முடிஞ்சிடுச்சு - சமைக்காமேயே தப்பிச்சிடலாம்னு மனப்பால் குடிச்சிக்கிட்டு நிம்மதியா இருந்தேன். பொறுக்குமா ஆண்டவனுக்கு.


எல்லா பாத்திரங்களையும் பளபளன்னு தேய்ச்சி முடிச்சிட்ட ஒரு நல்ல மாலை வேளையில், ஒரு நண்பன் தொலைபேசினான் - என்னய்யா. இப்படி பண்றே? நீ பண்றது கொஞ்சம் கூட நல்லாவேயில்லைன்னு கதற ஆரம்பிச்சிட்டான்.


இல்லையே.. எல்லாம் பளபளன்னு ஜொலிக்குதே? அங்கேந்து நீ எப்படி நல்லாயில்லேன்னு சொல்லலாம். வேணா இங்கே வந்து பாருன்னு - நானும் பதிலுக்கு கத்தினேன்.


அப்புறம்தான் புரிஞ்சுது - என் வீட்டுவேலையின் திறமைகளை தங்ஸ் - நண்பன் மனைவியிடம் சொல்லி - அங்கே அவனுக்கு பெண்டு நிமித்திட்டாங்க.


உன்னை காட்டி இது நாள்வரைக்கும் நான் தப்பிச்சிட்டிருந்தேன். இப்போ திடீர்னு நீ பாத்திரம் தேய்க்க ஆரம்பிச்சிட்டியாம். அது எனக்கு பிரச்சினையாயிடுச்சுன்னு ஒரே புலம்பல். பையனுக்கும் சமையல் நஹி. வீட்டு வேலையும் செய்யாமே தப்பிச்சிட்டிருந்தான். ஆம்பளையா
பொறந்துட்டு வீட்டு வேலையும் செய்யாமே இருக்கணும்னா முடியுமா? நாந்தான் அவனுக்கு அறிவுரை கூறினேன்.


அதெல்லாம் முடியாது. நீ பாத்திரம் தேய்க்கறத நிறுத்துன்னு கட்டளையிட்டான். நானும் - முடியாது. முதல்லே அவங்கள (மத்த நண்பர்களை) நிறுத்தச் சொல்லு. அப்புறம் நான் நிறுத்தறேன்னு நாயகன் பாணியில் சொன்னேன்.


இப்படியாக, நான் ஒருத்தன் ச்சின்னச்சின்ன வேலைகளை செய்யறதாலே, வேறெங்கேயோ இன்னொருத்தனுக்கு ஆப்பு கிடைக்குதுன்னு நினைச்சிப் பாத்தப்போ ரொம்ப, ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது.


நல்லா தூங்கிக்கிட்டிருந்த தங்ஸை தட்டி எழுப்பி - நாளையிலேந்து நான் தோசை சுட கத்துக்கப் போறேன்னு சொன்னேன்.


ரெண்டு பேருக்கு கெட்டது பண்ணனும்னா, தோசை சுடறதுலே தப்பேயில்லே!!!

*****

Read more...

Thursday, September 17, 2009

Cinema Paradiso

எச்சரிக்கை: இது ஒரு அக்மார்க் சுயபுராண (சோக கொசுவத்தி!) இடுகை. டமாஸ் 'மாதிரி'க்கூட இருக்காது.

*****

நண்பர் ஜாக்கி சிபாரிசு செய்யும் ஆங்கில / உலகத் திரைப்படங்களை எங்க ஊர் நூலகத்தில் தேடி வாங்கி பார்ப்பது வழக்கம். பார்த்தே ஆக வேண்டிய படம்னு அவர் சொன்னது எல்லாமே முற்றிலும் நிஜம்தான்றது இதுவரைக்கும் நான் கண்ட உண்மை. மிக்க நன்றி ஜாக்கி!


அவரு சிபாரிசு செய்யறதுலே 18+ படங்களை மட்டும் நான் தேடிப் பார்க்கிறேன்னு சிலர் நினைக்கலாம். ஆனா அது தவறு!!!.


அப்படி அவர் போன மாதம் சொன்ன படம் சி.பா. மூன்று வாரங்களாக முன்பதிவு செய்து வைத்து நேற்றைக்குத்தான் கைக்கு கிடைத்தது.


பார்த்தேன்...
ரசித்தே...
சிரித்...
அழு...


திரைப்பட விமர்சனத்தை ஜாக்கி அண்ணன் சொல்லிட்டாரு. அதுக்கு மேலே imdbயிலேயும் இருக்கு. நாம வேறே ஆங்கிள்லே இதைப் பத்தி பார்ப்போம்.


இந்த திரையரங்கத்திற்கு வெளியே ஒரு பெரிய உலகம் இருக்கு. இங்கேயே உன் வாழ்க்கையை கழித்து விடாதே. ரோமுக்குப் போ. உழை. பெரிய ஆளாக வேண்டும். திரும்பி வரவே கூடாது. அப்படி வந்தாலும் என்னைப் பார்க்காதே - என்றெல்லாம் சொல்லி நாயகனை ஊக்குவித்து, ஊரை விட்டு அனுப்புகிறார் ஆல்ஃப்ரெடோ. அப்படிப்போன அந்த நாயகன், ஒரு வெற்றிகரமான இயக்குனரா திரும்பி வர்றாரு.


மேற்கண்ட வசனங்களைக் கேட்ட பிறகு - இதே மாதிரி இதற்கு முன்னால் எங்கேயோ கேள்விப்பட்டிருக்கிறோமே என்று யோசித்துப் பார்த்தேன்.

சில வருடங்களுக்கு முன் படித்த - மைண்ட் ட்ரீ நிறுவனர் சுப்ரடோ பக்ஷியின் (Mindtree - Subroto Bakshi) ஒரு உரையென்பது நினைவுக்கு வந்தது. நோய்வாய்ப்பட்டிருந்த அவரது தாய் - என் பக்கத்தில் உட்கார்ந்து அழுதுகொண்டிருக்காமல், வெளியே போய் வேலையைப் பார் - Go kiss the world - என்றிருக்கிறார். அவரது முழு உரை இங்கே இருக்கிறது.


இப்படி நாயகனுக்கு அவனது நண்பன் ஆல்ஃப்ரடோவும், சுப்ரதோவுக்கு அவரது அம்மாவும் இருந்தமாதிரி நமக்கு யாராவது உந்துசக்தி கொடுத்தாங்களான்னு யோசித்தேன்.


உடனே நினைவுக்கு வந்தவர் - வேறு யார் - அப்பாதான்.


அப்போது டைப்பிஸ்டாக ஒரு ச்சின்ன அலுவலகத்தில் இருந்தேன். திடீரென்று ஒரு நாள் அலுவலகத்திற்கு வந்த அப்பா, என் டேபிளில் ரூபாய் பதினாராயிரம் வைத்து (4 பேரிடம் கடனாக வாங்கியது) - உடனே போய் ஒரு கணிணி பயிற்சிக்கு கட்டிட்டு வா, நாளையிலிருந்து போய் படி - என்றார். இந்த வேலை சரிப்படாது, எதிர்காலத்தில் கணிணிதான் எல்லாத்துக்கும் (சொன்ன வருடம் 1994).

உடனே இரண்டு வருட கணிணி பயிற்சியில் சேர்ந்தேன். அந்த பயிற்சி முடிக்கும் முன்னரே, குருவாக இருந்த பிதா, தெய்வத்திடம் போய்விட்டார்.
பிறகு உந்துசக்தியாக இருப்பார்கள் என்று எதிர்பார்த்த உறவினர்கள் சிலர் சற்று பிந்தி நின்றும், வேறு சிலர் பக்கத்து சந்தில் மறைந்து நின்றும் வேடிக்கை பார்த்தார்கள்.


சரி. மறுபடி சினிமாவுக்கு வருவோம்.


என் தந்தையுடன் (என்னுடைய) சிறிய வயதில் நிறைய சினிமா பார்த்திருக்கிறேன் - ஆங்கிலம் (சார்லி சாப்ளின், லாரல் ஹார்டி), இந்தி சினிமாக்களோட சில தமிழ் படங்களும். திருவல்லிக்கேணி ஸ்டார் திரையரங்கத்தில் 'முகல்-ஏ-ஆசம்' பார்க்கச் சென்ற போது நடந்த
சம்பவம் இன்னும் நினைவில் பசுமையாக உள்ளது.


அன்றைக்கு தியேட்டரில் சரியான கும்பல். படம் ஹவுஸ் ஃபுல்னா பாத்துக்குங்க. படத்தை முதல் ரீல்லேந்து பாக்கணும்னு அடிதடி செய்து உள்ளே போயிட்டோம். படமும் ஆரம்பிச்சுது. முதல் பாட்டு வந்துச்சு. (ஒரு 6 - 7 சூப்பர் ஹிட் பாட்டுகள் இருக்குன்னு நினைக்கிறேன்). எங்கப்பா - ஹீரோ, ஹீரோயினோட சேர்ந்து கத்தி பாட ஆரம்பிச்சிட்டாரு.

நானோ பயங்கர டென்சனாயிட்டேன். நான் இவரோட வரலை, இவர் யாரோ நான் யாரோன்னு சொல்லிடலாம்னு யோசனை பண்ணிட்டே இருந்தேன். திடீர்னு பாத்தா அரங்கத்தில் நிறைய பாடகர்கள் உருவாயிட்டாங்க. குறைந்த பட்சம் ஒரு 20 - 30 பேர் பாட ஆரம்பிச்சிட்டாங்க. ஒவ்வொரு பாட்டுக்கும் பயங்கர சத்தம். எல்லோருக்கும் எல்லாப் பாட்டும் மனப்பாடம். மதுபாலாவோட திரையில் சேந்து பாட முடியாத சோகத்தை பெரிசுங்க திரையரங்கத்துலே பாடி தீர்த்துக்கிட்டாங்க.


இடுகையை முடிச்சிட வேண்டியதுதான்.


இந்த திரைப்படத்தின் கடைசியில் நாயகன் - ஆல்ஃப்ரெடோ கொடுத்த பரிசைப் பார்ப்பது போல் ஒரு காட்சி. முதலில் புரியாவிட்டாலும், அந்த பரிசு என்னவென்று புரிந்தபிறகு - சான்ஸே இல்லே சான்ஸே இல்லேன்னு சொல்லிக் கொண்டு - ஒவ்வொரு தடவை என்னுடைய Aptech சான்றிதழைப் பார்க்கும்போது கண்கலங்குவது போலவே - நாயகனுடன் சேர்ந்து நானும் கண்கலங்கினேன்.

*****

Read more...

Monday, September 7, 2009

ஒரு நாடகம் போடறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?


நாடகம்னு சொன்னவுடன் - ஒரு முழு நீள நகைச்சுவை நாடகமோ அல்லது ஜவ்வாக இழுக்கப்படும் தொலைக்காட்சி சீரியலோ - போட்டேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க. ஒரு பத்து நிமிடமே வரக்கூடிய ஒரு சிறிய நாடகத்தை, ஒரு விழாவில் போட முயற்சி செய்து, எப்படியல்லாம் கஷ்டப்பட்டேன்னு இங்கே சொல்லியிருக்கேன்.



இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு எங்கள் நிறுவனத்தின் சார்பில் ஒரு விழா கொண்டாடலாம்னு தீர்மானிச்சாங்க. சரி நமக்குத்தான் (வீட்லே) சுதந்திரமில்லே, அட்லீஸ்ட் நாட்டோட சுதந்திரத்தையாவது கொண்டாடுவோம்னு திருமணமான ஆண்கள் எல்லாம் மேற்படி விழாவில் கலந்துக்கலாம்னு முடிவெடுத்தோம்.



விழான்னு சொன்னவுடனேயே - தங்ஸ், நீங்க எந்த போட்டியிலேயும் கலந்துக்காதீங்க. எங்க பேரையும் கொடுத்து தொலைச்சிடாதீங்க. வெறும்னே போய் சாப்பிட்டு வந்தா போதும்னு சொல்லிட்டாங்க. இனிமே அமைதியா இருந்து பிரயோஜனமில்லே. பொங்கி எழுடா ச்சின்னப்பையான்னு சொல்லி - நேரா விழாக்குழுவினர்கிட்டே போய் - எனக்கு ஒரு பத்து நிமிட
ஸ்லாட் கொடுங்க. ஒரு நாடகம் போடப்போறேன்னு சொல்லி நேரத்தை வாங்கிட்டேன்.



நாலு பேர் நடிக்கக்கூடிய அந்த நாடகத்துக்காக, மூணு பேரை தயார் செய்ய (ஹிஹி அந்த நாலாவது ஆள் நாந்தான்!) ஒவ்வொருத்தராய் கேட்க ஆரம்பித்தேன். அப்பத்தான் தெரிஞ்சுது... உலகத்திலே நிறைய பேர் என்னைப் போலவே கூச்ச சுபாவமுள்ளவங்கன்னு... மூணு பேர் கிடைக்கவேயில்லை. சரி வேறே வழியில்லாமே நானே நாலாவதாரம் ( நன்றி: உலக நாயகன்)
போட்டுடலாம்னு முடிவு செய்தேன். விழா ஏற்பாடு செய்தவரோ - இந்த ஊர்லே கடலே இல்லேன்னாலும், நீங்க நாலாவதாரம் போட்டா, கண்டிப்பா சுனாமிதான் - அப்படின்னு எச்சரிக்கை செய்தவுடன், முயற்சியை கைவிட்டேன்.



இப்படி நான் ஒரு நாடகம் போட முட்டி மோதிக் கொண்டிருக்கும்போது, போட்டியாக இன்னொரு குழு - மூணு பேர் நடிக்கக்கூடிய சிறிய நாடகம் போடப்போறோம்னு கிளம்பியது. மேட்டர் என்னன்னா அவங்களுக்கும் ஒரு ஆள் கிடைக்காமே, என்னை நடிக்க முடியுமான்னு கேட்டாங்க. என்னடா, நாமே தனி கம்பெனி வைத்து நாடகம் போடலாம்னு பாத்தோம்,
அப்படியிருக்கும்போது மத்தவங்க நாடகத்தில் நம்மால் நடிக்க முடியுமா - அப்படி நடிச்சா நம்ம திறமைக்கு ஏதாவது பங்கம் வந்துடுமா என்று ஆயிரமாயிரம் கேள்விகள் மனசுக்குள் சுழன்றி சுழன்றி அடித்தது. கடைசியில், என்ன ஆனாலும் பரவாயில்லை, அவங்க நாடகத்தில் நடித்துவிடலாம்னு முடிவு செய்தேன்.



அடுத்தது ஒத்திகை.


சொந்த வேலைகளைச் செய்வதற்கு ஏற்ற நேரம் - ராகு காலமோ, யமகண்டமோ கிடையாது - அலுவலக நேரம்தான்றது என் கொள்கை. சில பேருக்கு அது புரிவதேயில்லை. நாடக ஒத்திகையை மாலை நேரத்தில்தான் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.



அலுவலக நேரத்தையே குடும்பத்தோடு செலவு செய்யவேண்டுமென்ற உயர்ந்த கொள்கை உடைய நான், மாலை நேரங்களில் அவர்களை பிரிந்து எப்படி ஒத்திகைக்குப் போவேன்? ஆனாலும், பூனைக்கு வாழ்க்கைப்பட்டா மியாவ்னு சொல்லித்தானே ஆகணும்? ரெண்டு நாள் மாலையில் நண்பர் ஒருவர் வீட்டுக்குப் போய் நாடக ஒத்திகை பார்த்தோம். என் நடிப்பைப்
பார்த்த அந்த வீட்டு/பக்கத்து வீட்டுக் குழந்தைகள் பயத்தில் அரண்டு போய்விட்டதாய் அடுத்த நாள் நண்பர் சொன்னார். பாத்திரத்தில் ஒன்றிப் போயிருந்ததால், நான் எதையும் கவனிக்கவில்லை.



அந்த நாடகத்தின் ஸ்க்ரிப்ட் மேல் நாங்கள் வைத்த அபார (அவ)நம்பிக்கையால், விழாவின்போது உரக்க சிரித்து, கைதட்ட நாலைந்து பேரை தயார் செய்தும் வைத்திருந்தோம். ஆமா.. கரகாட்டக்காரன்லே - இவரு வாசிக்கறத பாத்தா தில்லானா மோகனாம்பாள் சிவாஜி மாதிரியும் - அந்தம்மா ஆடறத பாத்தா பத்மினி மாதிரியும்னு வருமே - அதே மாதிரிதான் ஆனா
இங்கே பணமெல்லாம் கொடுக்கலே. சும்மாவே கைதட்டுங்கன்னு சொல்லிட்டோம்.



ஆயிற்று. சுதந்திர தின விழா நாளும் வந்தது.


எங்கள் நாடகம் போட்டபிறகு அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு எல்லோரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்கள். ஒரே ஆரவாரம்தான். புகைப்பட வெளிச்சத்தில் அந்த மாலை நேரத்திலேயே முழு நிலவு வந்ததுபோல் அந்த அறை முழுக்க வெள்ளை வெளிச்ச மழை.


இப்படியெல்லாம் எழுதணும்னு எனக்கும் ஆசைதான். ஆனால், எங்கள் ஸ்லாட்டுக்கு முன்னர் இருந்த நிகழ்ச்சிகள் தாமதமாகிவிட்டதால், கடைசி நேரத்தில் எங்கள் நாடகத்தையே போடவிடாமல் விழாக்குழுவினர் தடுத்துவிட்டார்கள்.



சரி சரி.. .படிக்கிற எல்லாரும் உச்.. உச்.. என்று வருத்தப்படுவது எனக்கு தெரியுது. என்ன பண்றது சொல்லுங்க... அவங்க கொடுத்து வச்சது அவ்வளவுதான்.


இப்படியெல்லாம் நடக்கும்னு எனக்கு முன்னரே தெரியுமாததால், நான் இன்னொரு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்துகொண்டு, அதை வெற்றிகரமாக (!!) செய்தும் முடித்தேன்.


அது என்னன்றீங்களா, நம்ம கடை ஆரம்பிச்ச புதுசுலே நிறைய எழுதின - இன்னார் மென்பொருள் நிபுணரானால் - அதே மாதிரி வட இந்தியர்களுக்காக ‘முன்னாபாய் PMP'ன்னு பேர் மாற்றம் செய்து தயாரித்த ஒரு சிறிய கான்செப்ட் ( நன்றி க.போவது யாரு, அ.போவது யாரு...).



அந்த கான்செப்ட் செய்து முடித்தபிறகு தட்டினாங்க பாருங்க - தட்டோ தட்டுன்னு தட்டுறாங்க... கல்யாணப்பரிசு தங்கவேலு மாதிரி நினைச்சிக்காதீங்க. நிஜமாவே கைதான் தட்டினாங்க... நான் பேசினதுக்கு ஆதாரமா ஒரு புகைப்படத்தைப் போட்டுட்டு (அவங்க கைதட்டினதுக்கு ஆதாரம் கிடையாது. நீங்க நம்பித்தான் ஆகணும்!) இந்த சிறிய பதிவை முடிச்சிக்கிறேன்.



வருங்காலத்திலே நாடகம் போடணும்னா யாரையும் நம்பாமே நாலாவதாரமோ அஞ்சாவதாரமோ நானே போட்டுடலாம்னு முடிவு பண்ணிட்டேன். என்ன சொல்றீங்க?



Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP