KBC - ஒரு கொசுவர்த்தி பதிவு.
KBCயின் அடுத்த சீசனுக்கான விளம்பரம் ‘Neighbours' மிகமிக அட்டகாசம். சரியான விடை சொல்லும் அந்த இஸ்லாமியரின் நடிப்புக்காக நிறைய முறை அந்த விளம்பரத்தை பார்த்தாகிவிட்டது.
இப்போது KBCயைப் பற்றிய ஒரு கொசுவர்த்தி.
கிமு. மன்னிக்க. கிபி 2000ம் ஆண்டெல்லாம் நான் வடஇந்தியாவில் குர்காவ்னில் இருந்த காலம். ஊரே மிட் நைட் மசாலா பார்த்துவிட்டு தூங்கப் போகும் நேரத்தில் (இரவு 1மணி) நாங்கள் 3-4 நண்பர்கள் மட்டும் அலாரம் வைத்து எழுந்து ஆபீசுக்குக் கிளம்பும் நேரம். ஆமாம். எங்கள் வேலை நேரம் இரவு 2 முதல் முற்பகல் 10மணி வரை. ஆஸ்திரேலியா மற்றும் சீனாவுக்கு மென்பொருள் சப்போர்ட் செய்யும் வேலை. ஹிஹி வேலையெல்லாம் அவ்வளவு இருக்காது. (அப்போதுமா? யெஸ். எப்போதுமேதான்!!).
பளபளவென குளித்து 2மணிக்கு ஆபீஸ் போனதும், அரை மணி நேரத்தில் வேலையை முடித்துவிட்டு, ராகா.காம் மற்றும் இதர தளங்களில் பாட்டு கேட்க ஆரம்பித்துவிடுவோம். (யூட்யூபெல்லாம் அப்போ கிடையாது). பெரும்பாலும் நண்பர்கள் கேட்டும் பாடல் சாஜன் (மற்றும் இதர) படத்தில் வரும் காதல் தோல்விப் பாடல்கள். (சிலருக்கு ஒரு தலைக் காதல்; பலருக்கு தறுதலைக் காதல். ஆனா, ரெண்டுமே தோல்விதான்!!). அப்படியே மற்ற இரவு நேர வேலையாட்களுடன் வம்பு பேசி பொழுதை ஓட்டிவிடுவோம்.
அப்போதான் வந்தது இந்த KBC. முதல் சீசனில் Registration செய்ய கடுமையான போட்டா போட்டி. அவர்கள் கொடுத்த எண்ணில் அழைத்து, கேட்கும் 1 கேள்விக்கு சரியான விடை அளித்துவிட்டால், நம் பெயரும் குலுக்கலில் சேர்த்துக் கொள்வார்கள். பிறகு போட்டுக்கு அழைக்க வாய்ப்பு கிடைக்கலாம், கிடைக்காமல் போகலாம். அது தனிக்கதை. ஆனால் அந்த எண்ணை எப்போது அழைத்தாலும் இணைப்பு கிடைக்கவே கிடைக்காது.
நாங்க ஆபீஸில் காலை 2.30 மணி முதல் சும்மாதானே இருப்போம். இருக்கும் 4-5 தொலைப்பேசிகளில் தொடர்ச்சியாக KBCன் எண்ணை அழைத்துக் கொண்டேயிருப்போம். அந்த நேரத்தில் கூட சில சமயங்களில்தான் இணைப்பு கிடைக்கும். அப்படி இணைப்பு கிடைத்த நேரங்களில் கேட்கும் கேள்விக்கு சரியான விடை தெரிந்திருக்க வேண்டும். ஸ்ஸப்பா. எவ்வளவு டென்சன்றீங்க. பல முறைகள் சரியான பதில் அளித்தும், ஒரு முறை கூட நேர்முகப் போட்டிக்கு நாங்கள் தேர்வாகவில்லை.
அந்த காலகட்டத்தில் நான் தொலைக்காட்சியில் பார்த்த இரண்டே இரண்டு தொடர்கள். மெட்டி ஒலி & KBC. KBC பொது அறிவு வளர்ச்சிக்காக. மெட்டி ஒலி? சரி சரி. அதுவும் பொது அறிவு வளர்ச்சிக்காகதான்.
அமிதாப் அங்கிளின் விசிறியாக நாங்கள் பல பேர் மறுபதிவு (Renew) செய்து கொண்ட காலம். அவரின் மேனரிசம், சிரிப்பு, பெண் போட்டியாளர்களிடம் வழியும் வழிசல்கள், போட்டிக்கு நடுவில் போட்டியாளர்களிடம் அவர் போட்டு வாங்கும் கதைகள் / சம்பவங்கள் எல்லாமே சூப்பர்ப். 90% கேள்விகளுக்கு (வீட்டில் உட்கார்ந்து) சரியான விடை தெரிந்ததால், (போட்டிக்கு அழைத்தால்!) ஒரு கோடி ஜெயித்து, சொந்தக் கார் வாங்கி அதில்தான் ஆபீஸ் போகணுமென்று (அதே வேலை செய்ய!!) சபதம் போட்ட இரவுகள்.
முதல் இரண்டு சீசன்களில் (அவை மட்டுமே நான் பார்த்தவை!) தமிழ்நாடு, தமிழ் சினிமா தொடர்பான கேள்விகள் பல கேட்கப்பட்டன. அதில் இன்றும் நினைவில் இருக்கும் ஒரு கேள்வி. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் விரும்பி, நடிக்க முடியாமல் போன பாத்திரம் என்ன? பதில்: அனைவருக்கும் முன்னர் நான் கத்திய சரியான விடை ‘பெரியார்’.
அதன் பிறகு ஊர், வேலை, விருப்பம் அனைத்திலும் மாற்றம். தொடர்ந்து ஷாருக், மறுபடி அமிதாப், இந்தப் பக்கம் சரத்குமார், பிரகாஷ்ராஜ், சூர்யா இப்படி பலர் இந்த (அல்லது இதே மாதிரியான) நிகழ்ச்சிகளை நடத்தினாலும், எதையும் ஒரு எபிசோட் கூட சரியாகப் பார்த்ததில்லை. காரணம்? அதில் அமிதாப் இல்லையே. அதுதான். யூட்யூப் வந்தபிறகும் பார்க்கத் தோன்றியதில்லை.
ஆனால்..
ஆனால்..
ஒரு முறை ட்விட்டரில் கிடைத்த இந்த ஒரு எபிசோட்’ன் லிங்க். இதை மட்டும் மறக்கவே முடியாமல், கடந்த 2 வருடங்களில் 4-5 முறை முழு 1மணி நேரத்தையும் பார்த்திருக்கிறேன். யாருக்காக? அது யாருக்காக? நம்ம சின்னக்குயில் சித்ரா’வுக்காகதான். அதுவும் மலையாள வெர்ஷன். நடத்துபவர் சுரேஷ் கோபி. அவர் நடத்தும் இதே நிகழ்ச்சியின் மற்ற எபிசோட்களையும் பார்த்ததில்லை. ஆனால் சித்ராவுடன் அவர் பேசி நடத்தும் விதம். Simply Wow. சித்ரா சேச்சியிடம் அவர் (மற்றும் மலையாளிகள்) வைத்திருக்கும் பாசம், அக்கறை, அதை அவர் சரியாக வெளிப்படுத்தும் விதம், அனைத்தும் Extraordinarily beautiful. நிறைய பேர் பார்த்திருக்கலாம். இல்லையென்றால், சித்ராவை பிடிக்குமென்றால் (பிடிக்காதவங்க யாராவது இருப்பாங்களா என்ன?) ஒரு முறை பார்க்கலாம்.
அவ்வளவுதான் பதிவு. இந்த நிகழ்ச்சியைப் போலவே நிஜ வாழ்க்கையிலும் இந்த மனைவி(கள்!), கேள்விகளைக் கேட்ட பிறகு, நமக்கு 4 ஆப்ஷன்களைக் கொடுத்தால் எப்படி இருக்கும்? ஆனா கொடுக்க மாட்றாங்களே? எதைக் கேட்டாலும் objective answerல்தான் பதில் சொல்லணுமாம். நம்மால் என்னதான் பதில் கொடுக்க முடியும்? எதைச் சொன்னாலும் திட்டு. ம்ம்ம்ம்.. மிடியல.
****
2 comments:
Just want to let you know I have been following your blog for the past 2-3 years and I thoroughly enjoy every post. Please continue it with your funny stories!!
Simply superb :-)
amas32
Post a Comment