எச்சூஸ்மி, இந்த அட்ரஸ் எங்கேயிருக்கு?
ஒரு கடைத்தெருவில் நுழையறேன். இரு பக்கத்திலும் இருக்கும் கடைகளை பார்த்தவாறே போகும்போது, ஏதோ வித்தியாசமாய் உணர்கிறேன். கடைகளில் பொருட்களை வாங்க வந்திருப்பவர்கள் அனைவரும் ‘குசுகுசு’வென்று ஏதோ பேசிக்கொண்டு என்னையே முறைத்துப் பார்ப்பதாகத் தெரிகிறது. ஏன்னு புரியல. திடீர்னு ஒருத்தர் கத்தறாரு. ‘இவன்தாண்டா. பிடிங்க பிடிங்க.’ அவ்வளவுதான். எல்லாரும் கையில் இருப்பதைக் கீழே போட்டுவிட்டு என்னைத் துரத்த ஆரம்பிக்கிறாங்க. நானும் ஓட, ஓட, ஓடறேன். இப்படியே ஒரு காத தூரம் (அப்படின்னா எவ்ளோ தூரம்? யாருக்குத் தெரியும். சும்மா சொல்றதுதான்!!) துரத்தியபிறகு, பக்கத்தில் வந்து, டக்குன்னு என்னை கீழே தள்ளி விட்டுடறாங்க. நான் அலர்றேன்.
“வேண்டாம். வேண்டாம்”.
”நீங்க என்னதான் வேண்டாம்னாலும், இன்னிக்கு உப்புமாதான். ஒழுங்கா போடறதை சாப்பிட்டு எழுந்திருங்க”.
அவ்வ். இவ்வளவு நேரம் கண்டதெல்லாம் கனவா?. ஆனா கனவில் வந்த ஒருவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்ததே? ரொம்ப நேரம் யோசித்தபிறகு டக்குன்னு நினைவுக்கு வந்துடுச்சு. இவருதான் நேத்திக்கு என்கிட்டே வழி கேட்டவரு.
வழி?
அது ஒரு பெரிய சின்ன கதை. கேளுங்க.
எப்படிதான் என்னை கண்டுபிடிக்கிறாங்களோ தெரியாது. நான் பாட்டுக்கு சிக்னலுக்காகவோ, பேருந்துக்காகவோ அல்லது சாலையை கடக்கவோ நின்றிருப்பேன். சாலையில் இருக்கிற எல்லாரையும் விட்டுட்டு, சரியா என்னைப் பார்த்து கேப்பாங்க. “எச்சூஸ்மீ, இந்த அட்ரஸ் எங்கேயிருக்கு” அல்லது “25வது தெருவுக்கு எப்படிப் போகணும்?”.
அவ்ளோ நேரம் சரியா வேலை செய்யும் இந்த மூளையானது (அப்படியா?), அந்த ஒரு நிமிடத்திற்கு ஸ்டாப் ஆயிடும். நாம எங்கே இருக்கோம்? இவரு கேக்குற இடம் எங்கே இருக்கு? இப்படி போகணுமா? அப்படி போகணுமா? என்று பல கேள்விகளை நானே கேட்டுக் கொள்ள, அதற்குள் ஒரு அரை நிமிடம் கடந்திருக்கும்.
வழி கேட்டவரு, நாம கேட்டது இவனுக்குக் கேட்டுச்சா இல்லையா? இவனுக்கு தமிழ் புரியுமா புரியாதா? ஏன், எதுவுமே சொல்லாமே இருக்கான்? தெரியலேன்னா, தெரியலேன்னு சொல்ல வேண்டியதுதான்னு யோசிச்சிக்கிட்டே நிப்பாரு. நானோ, அவர் படற கஷ்டத்தைப் பார்த்து, டக்குன்னு 'ஏதோ ஒரு' வழியை காட்டி, இப்படியே நேரா போனீங்கன்னா, வந்துடும்னு ஒரு வழி காட்டிடுவேன்.
ஒரு நாள் யோசிச்சிப் பார்த்தேன். எப்படியும் ஒரு ஐம்பது பேருக்காவது நாம (சரியா, தப்பான்னு தெரியாமலேயே!!) வழி சொல்லியிருப்போம். அவங்கள்ள யாராவது என்னிக்காவது நம்மள அடையாளம் கண்டுபிடிச்சி, சட்டையை பிடிச்சி, ஏண்டா எனக்கு தப்பான வழியைக் காட்டினே’ன்னு கேள்வி கேட்டா என்ன சொல்லி சமாளிக்கலாம்?
ஒருத்தர் வந்தா பரவாயில்லை, அவங்க ஐம்பது பேரும் சேர்ந்து வந்து ‘இவன்தாண்டா’ன்னு துரத்த ஆரம்பிச்சிட்டா?
யாராவது வழி கேட்டு, சரியாத் தெரியலேன்னா, என்ன சொல்லணும்? எனக்கு தெரியல சார். வேறே யாரையாவது கேட்டுக்கோங்க. அதோ, அந்த கடையில் கேளுங்கன்னு சொல்லிடலாம். ஆனா, அதுவும் முடியல. ஏன்? காரணம் எனக்கே தெரியல. நமக்கு ஒரு விஷயம் தெரியலேன்னு மத்தவங்களுக்குத் தெரியக்கூடாதுன்னு இருக்குமோ?
அதுக்காக, தப்பான வழியைக் காட்டலாமா? அப்படி செய்யறது தப்புதான். புத்திக்கு தெரியுது. மனசுக்கு தெரியலியே (இல்லே, மாத்தி சொல்லிட்டேனா?!?).
எப்படியோ அவங்களும் விடறதா இல்லை. நானும் வழி சொல்றதை நிறுத்தறதா இல்லை.
சரி விடுங்க. இவ்வளவு தூரம் படிச்சிட்டீங்க. பதிவோட இறுதிப் பத்தியையும் படிச்சிடுங்க. என்னது? அது எங்கே இருக்கா? அதுக்கும் நான்தான் வழி சொல்லணுமா?
சொல்றேன். மேலே முதலில் இருக்கு பாருங்க. அதுதான்.
***
2 comments:
நல்ல நகைச்சுவை! Profile இல் தொழில் என்ற இடத்தில் Consulting என்று சொல்லியிருப்பதை பொருத்திப் பார்த்தேன். தீராத விளையாட்டுப் பிள்ளை. வாழ்த்துக்கள்!
த.ம.1
நீங்க தான எனக்கு போனமுறை வழி சொன்னது? தெரியலை என்றால் தெரியலைன்னு சொல்லியிருக்கலாம்.. அந்த ஐம்பது பேர் துரத்தும்போது சொல்லுங்கள்.. நானும் சேர்ந்து கொள்கிறேன்!
Post a Comment