Sunday, August 10, 2014

வண்டி வண்டி மிதிவண்டி...


இந்த வருடம் ஏப்ரல் மாதம் வரை கிட்டத்தட்ட ஒரு வருடம் அலுவலகத்திற்கு மிதிவண்டியில் போன அனுபவத்தில் எழுதும் பதிவு. ஒரு வழியில் 5கிமீ ஆக தினமும் 10கிமீ அலுவலகத்திற்கு மட்டும். (காலையில் உடற்பயிற்சிக்கு ஓட்டியது தனிக் கணக்கு).

ட்விட்டரில் நாம் சும்மா ‘மேலே-கீழே’ arrow அழுத்தி படிச்சிட்டு போயிட்டேயிருந்தாலும், யாராவது ஒருவர் நம்மை ஏதாவது ஒரு வண்டியில் ஏற்றி தரதரன்னு இழுத்துக்கிட்டே போயிடுவாங்க. அதைப் போலவே, சாலைகளிலும் நடக்கும். நாம பாட்டுக்கு ‘ரண்டக்க ரண்டக்க’ பாடிட்டே போயிட்டிருந்தாலும், நம்மைத் தாண்டி Left turn  எடுப்பவர்கள், ஒரு நொடிகூட பொறுக்காமல், நமக்கு முன்னால் போய் டக்குன்னு திரும்பிடுவாங்க.

பலமுறை இப்படி திடீர்னு ப்ரேக் போடமுடியாமல் நானும் அவங்க கூடவே இடது பக்கம் திரும்பி, பக்கத்து கட்டிடத்தில் / கடையில் நுழைந்திருக்கேன். வெயிலில் வேர்க்க விறுவிறுக்க சைக்கிளோடு கட்டிடத்தில் நுழையும் என்னை, கூரியர்காரன்னு நினைச்சி அங்கிருக்கும் காவலாளி திட்டியிருக்கான். டேய், அந்த வண்டியினால்தான் இப்படி இங்கேல்லாம் நுழைய வேண்டியதாயிடுச்சுடான்னு சொல்லி, திரும்பி, வெளியே வந்து, வண்டி ஓட்டி.. ஸ்ஸ்ஸப்பா...!!!

மிதிவண்டி ஓட்டுவதால் இன்னொரு வசதி என்னன்னா, நீங்க 'Invisible' ஆயிடலாம். திகைக்காதீங்க. நிஜம்தான். மிதிமிதிமிதிச்சி வண்டி ஓட்டிவரும் உங்களை யாருக்குமே தெரியாது. பெரிய பேருந்து மட்டுமல்ல, சாலையைக் கடப்பவர்களும் உங்களை கண்டுக்க மாட்டாங்க. தூரத்தில் வரும்போதே தெரிஞ்சிடும், இவன் கடக்கப் போகிறான், ஆனா நாமதான் வேகமா வர்றோமே, நம்மை போகவிட்டுத்தான் அவன் போவான்னு நினைச்சி தைரியமா வந்தாலும், அதுவரை பெரிய வண்டிகளுக்காகக் காத்திருந்தவன், சடாரென்று சாலையில் இறங்கிவிடுவான். கடைசி நொடியில்தான் இப்படி ஒரு ஜந்து, இப்படி ஒரு மிதிவண்டியில் வருதுன்னு பார்த்து, அப்படி இப்படின்னு டான்ஸ் ஆடி முடிப்பதற்குள்.. டூ லேட். இதே போல் இது வரை நான் இடித்தவர்கள் எண்ணிக்கை - நான்கு.

பெங்களூரில் ( நான் இருந்த Whitefieldல்) கடற்கரை இல்லையே என்று மக்கள் கவலைப்படக்கூடாதென்று சாலையோரம் குவியும் மணலை BDA எடுப்பதேயில்லை. நானும் கிட்டத்தட்ட ஒரு வருடம் மிதிவண்டியில் அலுவலகத்திற்குப் போனேன். கடற்கரையில் வண்டி ஓட்டிய அனுபவம்தான். சாலையிலும் போகமுடியாது, ஓரத்திலும் போகமுடியாது. வேறு வழி? நடைபாதையில் ஏறிவிட வேண்டியதுதான். ஆனா, அங்கேயும் அடிதடிதான். பைக்கில் வர்றவன் ‘Right of way’ கேட்டு ஒலிப்பானை விடாமல் அடிப்பான். டேய். நடைபாதையிலுமாடா உங்க அட்டகாசங்கள்னா? பெங்களூரின் சிறப்பு அம்சமே நடைபாதையில் பைக் ஓட்டுவதுதான் என்றான்.

அப்பப்போ என்ன ஆகும்னா, கிட்டத்தட்ட அரை கிமீ நடைபாதையில் வண்டி ஓட்டி வந்தபிறகு, சரியாக சாலையில் இறங்குமிடத்தில் ஒரு காவலர் நின்றிருப்பார். எல்லாருக்கும் டிக்கெட். புடிங்க சார். புடிச்சி உள்ளே போடுங்க சார் அவங்களை. என்னை மட்டும் ‘போங்க, போங்க’ என்று அனுப்பிவிடுவார். வாழ்க மிதிவண்டி.

அதிகமான போக்குவரத்து
அலைபாயும் மக்கள்
சாலையில் கல், மண், தூசு

இப்படி எவ்வளவோ பிரச்னை இருந்தாலும்
மிதிவண்டி ஓட்டுபவர்களுக்கு

சிக்னல் கிடையாது
Wrongsideலும், Onewayயிலும் தைரியமாகச் செல்லலாம்
நடைபாதையில் போகலாம்
வண்டியை அநாயசமாக தூக்கி தடைகளைக் கடக்கலாம்
கொழுப்பு குறைப்பு

எல்லாவற்றிற்கும் மேலாக

வாரம்தோறும் விலையேற்றும் BMTC இருக்கும் நகரத்தில் மிதிவண்டி ஓட்டி அலுவலகம் போனது ஒரு நல்ல அனுபவமே.

***





1 comments:

Thamira August 13, 2014 at 7:09 AM  

எப்படிய்யா.. நீர் மட்டும் இப்படி உடற்பயிற்சி, ஓட்டம், மிதிவண்டினு ஒரு உதாரண மனைவியாய் (எவ்ளோ நாள்தான் புருஷன்னே சொல்றது? ஒரு சேஞ்சுக்கு!) வாழமுடியுது? என்னவோ போங்க! :-)))

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP