Thursday, August 28, 2014

உட்கார்ந்து உட்கார்ந்து உட்காருதல்.

சினிமா போகலாம்னு யாராவது சொன்னாலே கிலி ஆயிடும் எனக்கு. ஏன்? இப்போ வர்ற (ஆங்கிலம் தவிர்த்த) படங்களெல்லாம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடுதே. (முதல் ஓரிரு நாட்கள் மட்டுமே 180 நிமிடங்கள். அடுத்தடுத்த நாட்களில் பத்து பத்து நிமிடங்களா குறைச்சி வெளியிடுறாங்கன்றது வேறு விஷயம்!!). அவ்வளவு நேரம் ஓர் இடத்தில் உட்காருதல்ன்றது என்னால் முடியாத காரியம். செமையா போர் அடிச்சிடும்.

மொதல்லேந்தே இப்படித்தானான்னா கிடையாது. (நாள் முழுக்க ஓடும் DDLJ படத்தையெல்லாம் பல முறை அரங்கத்தில் பார்த்ததுண்டு). நடுவில் எப்பவோ நடந்த மாற்றம்தான். அப்போ படங்களே பார்ப்பது கிடையாதான்னா அதுவும் கிடையாது. எப்போவாவது அத்தி பூப்பதுபோல் (அத்தி? ஆத்தி, இது என்ன? எப்போ பூக்கும்? யாருக்குத் தெரியும்!!) பார்ப்பது உண்டு.

அரங்கத்திற்குப் போய் படம் பார்ப்பது போர்னா, வீட்டில் தொடர்ச்சியா படம் பார்ப்பது அதைவிட போர். அமெரிக்காவில் இருந்தவரை (DW பார்த்ததால்) வாரம் ஒரு படம் பார்ப்போம். தினம் அரை மணி நேரம் வீதம் ஒரு வாரத்தில் படம் முடிந்துவிடும். இந்தியா வந்தபிறகு அதுவும் பார்ப்பது கிடையாது.

முக்கால் மணி நேரம் அல்லது அதிகபட்சம் ஒரு மணி நேரம். அதுக்கு மேல் என்னால் தொடர்ந்து உட்கார முடியாது. முதுகு வலி, பல் வலி இதெல்லாம் கிடையாது. எழுந்து நடக்கணும். அவ்வளவுதான்.

வெவ்வேறு சமயங்களில் எப்படி இப்படி உட்காராமல் சமாளிப்பது? அதுதான் இந்தப் பதிவு. (அப்பாடா, இப்பவாவது பதிவு ஆரம்பிச்சுதே!)

ஆபீஸில் வேலைன்னா பிரச்னையே இல்லை. அப்பப்போ தண்ணீர் குடிச்சாலே போதும். அதுவே என்னை எழுப்பி விட்டுடும். போய் ஒரு முறை போயிட்டு வரவேண்டியிருக்கும். போற வழியில் யாரையாவது பார்த்து பேசினா, அப்படியே பொழுதும் போயிடும்!!

ஆபீஸ் மீட்டிங்க்னா, ஒரு மணி நேரத்தில் நான் மட்டும் எழுந்து நின்றிடுவேன். என்னய்யா ஆச்சுன்னு மக்கள் கேட்பாங்க. ஒண்ணும் இல்லே, கால் வலிக்குது, கொஞ்ச நேரம் நிற்கப்போறேன்னு சொல்லிட்டு நின்றவாறே பேசுவதோ / கவனிப்பதோ (தூங்க மட்டும் இன்னும் பயிற்சி எடுக்கவில்லை. அதுவும் செய்துடணும்!) - ஒரு பத்து நிமிடம் கழித்து மறுபடி உட்கார்ந்து விடுவேன்.

பெங்களூர் வந்தபிறகு வீடு-அலுவலகம்-வீடு அலுவலகப் பேருந்தில். காலைப் பயணம் அரை மணி நேரம் மட்டுமே. ஆனால் மாலையில்? அது அந்த கடவுளுக்குமே தெரியாது. இதுவரையிலான அதிக பட்ச நேரம் ஒன்றரை மணி நேரம். இதிலும் சில நேரங்களில் தூங்கி விடலாம். தூங்கலேன்னா, ஒரு மணி நேரத்தில் எழுந்து நின்றுவிடுவேன். ஆரம்பத்தில் புதிதாகப் பார்த்த சக பயணிகள், பின்னர் பழகிக் கொண்டார்கள். பிறகு இன்னும் நீண்ட நேரம் பயணம் செய்பவர்களும் அவ்வப்போது பேருந்தில் நிற்கத் தொடங்கினார்கள். இன்னும் சில நாட்களில் எல்லாரையும் (தொடர்ச்சியாக உட்கார விடாமல்) நிற்க வைக்க வேண்டும். இதுவே என் குறிக்கோள்.

என்னை உட்கார வைத்து சோறு போடுவேன் என்று சத்தியம் செய்து என்னை மணம் செய்த DW, என் இந்தப் பிரச்னையைத் தெரிந்து கொண்ட பிறகு, வீட்டில் உட்கார விடுவதேயில்லை. என்னங்க, பத்து நிமிடம், இந்த பத்துப் பாத்திரங்களை தேச்சிக் கொடுங்க, ஒரு மணி நேரம் கழிச்சி இந்த துணிகளை மாடியில் போய் காய வெச்சிட்டு வந்துடுங்க. நீங்கதான் உட்கார்ந்துட்டே இருந்தா, போரடிக்குதுன்றீங்க. அதனால்தான் சொன்னேன். இல்லேன்னா, நானே செய்துட மாட்டேனா.

இந்த வாதம் சரியாயிருக்கிற மாதிரியும் இருக்கு, சரி இல்லாத மாதிரியும் இருக்கு. நீங்க என்ன சொல்றீங்க?

***


Read more...

Tuesday, August 19, 2014

குப்பை பக்கெட் சாலஞ்ச்!!

குப்பை பக்கெட் சாலஞ்ச்!!

ஷாப்பிங் போகலாமான்னு கேட்டாங்க DW. எங்கேம்மான்னு கேட்டா காய்கறிக் கடைக்காம். நல்லதாப் போச்சு. இன்னும் இவங்களுக்கு ஷாப்பிங்’க்கு அர்த்தம் தெரியலேன்னு கிளம்பியாச்சு. காய்கறி வாங்கிட்டு வரும்போது திடீர்னு நினைவு படுத்தி, ஒரு குப்பை பக்கெட்டும் வாங்கணும்னாங்க. சரி வாங்கிடுவோம்னு மூடி போட்ட ஒரு குப்பை பக்கெட்டும் வாங்கியாச்சு.

ஒரு கையில் காய்கறி. இன்னொரு கையில் குப்பை பக்கெட். எதுக்கு இரண்டையும் தனித்தனியா எடுத்துப் போகணும்னு கு.ப’ல் கா’யைப் போட்டாச்சு. அப்போதான் ஒரு நண்பர் குறுக்கிட்டார். அப்போது நடந்த உரையாடல்.

நண்பர் : ஏங்க, குப்பை போடறதுக்கு இவ்ளோ தூரம் வந்துட்டீங்க? உங்க வீட்டுப் பக்கத்திலேயே இடம் இருக்கே?

நான்: அட இது குப்பை இல்லீங்க. காய்கறி.

ஏன் காய்கறியை இதில் போட்டு எடுத்துப் போறீங்க? அதுலே எவ்ளோ அழுக்கு, கிருமிகள் இருக்குமோ?

இல்லீங்க. காய்கறிகளை நல்லா கழுவி சுத்தமாதாங்க வெச்சிருந்தாங்க.

நான் காய்கறியை சொல்லலீங்க. குப்பை பக்கெட்டை சொன்னேன்.

குப்பை பக்கெட்டையும் சுத்தமா கழுவிதாங்க.. அடச்சே.. இந்த குப்பை பக்கெட்டும் புதுசுதாங்க. இப்பதான் வாங்கிக்கிட்டு போறோம்.

இருந்தாலும் எனக்கு பிடிக்கலீங்க.

Fresh காய்கறிகள் பிடிக்காதுன்னு சொல்ற மனுசனை இப்பதான் முதல்முறையா பார்க்கிறேன்.

காய்கறி இல்லேங்க.

அப்போ குப்பை பக்கெட்டா? என்ன, கலர் பிடிக்கலியா?

அய்யோ.. ரெண்டுமே புதுசுன்னாலும், குப்பை பக்கெட்டில் காய்கறி எடுத்துப் போய், அதை சமைச்சி சாப்பிடறது பிடிக்கலைன்னேன்.

பிடிக்கலேன்னா எங்க வீட்டுக்கு வராதீங்க.

பிடிச்சிருந்தா?

அப்பவும் வராதீங்க. அவ்வ்’ன்னு சொல்லி ஓடி வந்துட்டோம்.

நிம்மதியா ஒரு குப்பை பக்கெட்டை வாங்கி வர முடியலியே மனுசனாலே. இதுக்கு அந்த ஐஸ் பக்கெட் சாலஞ்ச் எவ்வளவோ பரவாயில்லை போலிருக்கே!!

***

Read more...

Sunday, August 17, 2014

எச்சூஸ்மி, இந்த அட்ரஸ் எங்கேயிருக்கு?


ஒரு கடைத்தெருவில் நுழையறேன். இரு பக்கத்திலும் இருக்கும் கடைகளை பார்த்தவாறே போகும்போது, ஏதோ வித்தியாசமாய் உணர்கிறேன். கடைகளில் பொருட்களை வாங்க வந்திருப்பவர்கள் அனைவரும் ‘குசுகுசு’வென்று ஏதோ பேசிக்கொண்டு என்னையே முறைத்துப் பார்ப்பதாகத் தெரிகிறது. ஏன்னு புரியல. திடீர்னு ஒருத்தர் கத்தறாரு. ‘இவன்தாண்டா. பிடிங்க பிடிங்க.’ அவ்வளவுதான். எல்லாரும் கையில் இருப்பதைக் கீழே போட்டுவிட்டு என்னைத் துரத்த ஆரம்பிக்கிறாங்க. நானும் ஓட, ஓட, ஓடறேன். இப்படியே ஒரு காத தூரம் (அப்படின்னா எவ்ளோ தூரம்? யாருக்குத் தெரியும். சும்மா சொல்றதுதான்!!) துரத்தியபிறகு, பக்கத்தில் வந்து, டக்குன்னு என்னை கீழே தள்ளி விட்டுடறாங்க. நான் அலர்றேன்.

“வேண்டாம். வேண்டாம்”.

”நீங்க என்னதான் வேண்டாம்னாலும், இன்னிக்கு உப்புமாதான். ஒழுங்கா போடறதை சாப்பிட்டு எழுந்திருங்க”.

அவ்வ். இவ்வளவு நேரம் கண்டதெல்லாம் கனவா?. ஆனா கனவில் வந்த ஒருவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்ததே? ரொம்ப நேரம் யோசித்தபிறகு டக்குன்னு நினைவுக்கு வந்துடுச்சு. இவருதான் நேத்திக்கு என்கிட்டே வழி கேட்டவரு.

வழி?

அது ஒரு பெரிய சின்ன கதை. கேளுங்க.

எப்படிதான் என்னை கண்டுபிடிக்கிறாங்களோ தெரியாது. நான் பாட்டுக்கு சிக்னலுக்காகவோ, பேருந்துக்காகவோ அல்லது சாலையை கடக்கவோ நின்றிருப்பேன். சாலையில் இருக்கிற எல்லாரையும் விட்டுட்டு, சரியா என்னைப் பார்த்து கேப்பாங்க. “எச்சூஸ்மீ, இந்த அட்ரஸ் எங்கேயிருக்கு” அல்லது “25வது தெருவுக்கு எப்படிப் போகணும்?”.

அவ்ளோ நேரம் சரியா வேலை செய்யும் இந்த மூளையானது (அப்படியா?), அந்த ஒரு நிமிடத்திற்கு ஸ்டாப் ஆயிடும். நாம எங்கே இருக்கோம்? இவரு கேக்குற இடம் எங்கே இருக்கு? இப்படி போகணுமா? அப்படி போகணுமா? என்று பல கேள்விகளை நானே கேட்டுக் கொள்ள, அதற்குள் ஒரு அரை நிமிடம் கடந்திருக்கும்.

வழி கேட்டவரு, நாம கேட்டது இவனுக்குக் கேட்டுச்சா இல்லையா? இவனுக்கு தமிழ் புரியுமா புரியாதா? ஏன், எதுவுமே சொல்லாமே இருக்கான்? தெரியலேன்னா, தெரியலேன்னு சொல்ல வேண்டியதுதான்னு யோசிச்சிக்கிட்டே நிப்பாரு. நானோ, அவர் படற கஷ்டத்தைப் பார்த்து, டக்குன்னு 'ஏதோ ஒரு' வழியை காட்டி, இப்படியே நேரா போனீங்கன்னா, வந்துடும்னு ஒரு வழி காட்டிடுவேன்.

ஒரு நாள் யோசிச்சிப் பார்த்தேன். எப்படியும் ஒரு ஐம்பது பேருக்காவது நாம (சரியா, தப்பான்னு தெரியாமலேயே!!) வழி சொல்லியிருப்போம்.  அவங்கள்ள யாராவது என்னிக்காவது நம்மள அடையாளம் கண்டுபிடிச்சி, சட்டையை பிடிச்சி, ஏண்டா எனக்கு தப்பான வழியைக் காட்டினே’ன்னு கேள்வி கேட்டா என்ன சொல்லி சமாளிக்கலாம்?

ஒருத்தர் வந்தா பரவாயில்லை, அவங்க ஐம்பது பேரும் சேர்ந்து வந்து ‘இவன்தாண்டா’ன்னு துரத்த ஆரம்பிச்சிட்டா?

யாராவது வழி கேட்டு, சரியாத் தெரியலேன்னா, என்ன சொல்லணும்? எனக்கு தெரியல சார். வேறே யாரையாவது கேட்டுக்கோங்க. அதோ, அந்த கடையில் கேளுங்கன்னு சொல்லிடலாம். ஆனா, அதுவும் முடியல. ஏன்? காரணம் எனக்கே தெரியல. நமக்கு ஒரு விஷயம் தெரியலேன்னு மத்தவங்களுக்குத் தெரியக்கூடாதுன்னு இருக்குமோ?

அதுக்காக, தப்பான வழியைக் காட்டலாமா? அப்படி செய்யறது தப்புதான். புத்திக்கு தெரியுது. மனசுக்கு தெரியலியே (இல்லே, மாத்தி சொல்லிட்டேனா?!?).

எப்படியோ அவங்களும் விடறதா இல்லை. நானும் வழி சொல்றதை நிறுத்தறதா இல்லை.

சரி விடுங்க. இவ்வளவு தூரம் படிச்சிட்டீங்க. பதிவோட இறுதிப் பத்தியையும் படிச்சிடுங்க. என்னது? அது எங்கே இருக்கா? அதுக்கும் நான்தான் வழி சொல்லணுமா?

சொல்றேன். மேலே முதலில் இருக்கு பாருங்க. அதுதான்.

***

Read more...

Thursday, August 14, 2014

KBC - ஒரு கொசுவர்த்தி பதிவு.


KBCயின் அடுத்த சீசனுக்கான விளம்பரம் ‘Neighbours' மிகமிக அட்டகாசம். சரியான விடை சொல்லும் அந்த இஸ்லாமியரின் நடிப்புக்காக நிறைய முறை அந்த விளம்பரத்தை பார்த்தாகிவிட்டது.




இப்போது KBCயைப் பற்றிய ஒரு கொசுவர்த்தி.

கிமு. மன்னிக்க. கிபி 2000ம் ஆண்டெல்லாம் நான் வடஇந்தியாவில் குர்காவ்னில் இருந்த காலம். ஊரே மிட் நைட் மசாலா பார்த்துவிட்டு தூங்கப் போகும் நேரத்தில் (இரவு 1மணி) நாங்கள் 3-4 நண்பர்கள் மட்டும் அலாரம் வைத்து எழுந்து ஆபீசுக்குக் கிளம்பும் நேரம். ஆமாம். எங்கள் வேலை நேரம் இரவு 2 முதல் முற்பகல் 10மணி வரை. ஆஸ்திரேலியா மற்றும் சீனாவுக்கு மென்பொருள் சப்போர்ட் செய்யும் வேலை. ஹிஹி வேலையெல்லாம் அவ்வளவு இருக்காது. (அப்போதுமா? யெஸ். எப்போதுமேதான்!!).

பளபளவென குளித்து 2மணிக்கு ஆபீஸ் போனதும், அரை மணி நேரத்தில் வேலையை முடித்துவிட்டு, ராகா.காம் மற்றும் இதர தளங்களில் பாட்டு கேட்க ஆரம்பித்துவிடுவோம். (யூட்யூபெல்லாம் அப்போ கிடையாது). பெரும்பாலும் நண்பர்கள் கேட்டும் பாடல் சாஜன் (மற்றும் இதர) படத்தில் வரும் காதல் தோல்விப் பாடல்கள். (சிலருக்கு ஒரு தலைக் காதல்; பலருக்கு தறுதலைக் காதல். ஆனா, ரெண்டுமே தோல்விதான்!!).  அப்படியே மற்ற இரவு நேர வேலையாட்களுடன் வம்பு பேசி பொழுதை ஓட்டிவிடுவோம்.

அப்போதான் வந்தது இந்த KBC. முதல் சீசனில் Registration செய்ய கடுமையான போட்டா போட்டி. அவர்கள் கொடுத்த எண்ணில் அழைத்து, கேட்கும் 1 கேள்விக்கு சரியான விடை அளித்துவிட்டால், நம் பெயரும் குலுக்கலில் சேர்த்துக் கொள்வார்கள். பிறகு போட்டுக்கு அழைக்க வாய்ப்பு கிடைக்கலாம், கிடைக்காமல் போகலாம். அது தனிக்கதை. ஆனால் அந்த எண்ணை எப்போது அழைத்தாலும் இணைப்பு கிடைக்கவே கிடைக்காது.

நாங்க ஆபீஸில் காலை 2.30 மணி முதல் சும்மாதானே இருப்போம். இருக்கும் 4-5 தொலைப்பேசிகளில் தொடர்ச்சியாக KBCன் எண்ணை அழைத்துக் கொண்டேயிருப்போம். அந்த நேரத்தில் கூட சில சமயங்களில்தான் இணைப்பு கிடைக்கும். அப்படி இணைப்பு கிடைத்த நேரங்களில் கேட்கும் கேள்விக்கு சரியான விடை தெரிந்திருக்க வேண்டும். ஸ்ஸப்பா. எவ்வளவு டென்சன்றீங்க. பல முறைகள் சரியான பதில் அளித்தும், ஒரு முறை கூட நேர்முகப் போட்டிக்கு நாங்கள் தேர்வாகவில்லை.

அந்த காலகட்டத்தில் நான் தொலைக்காட்சியில் பார்த்த இரண்டே இரண்டு தொடர்கள். மெட்டி ஒலி & KBC. KBC பொது அறிவு வளர்ச்சிக்காக. மெட்டி ஒலி? சரி சரி. அதுவும் பொது அறிவு வளர்ச்சிக்காகதான்.

அமிதாப் அங்கிளின் விசிறியாக நாங்கள் பல பேர் மறுபதிவு (Renew) செய்து கொண்ட காலம். அவரின் மேனரிசம், சிரிப்பு, பெண் போட்டியாளர்களிடம் வழியும் வழிசல்கள், போட்டிக்கு நடுவில் போட்டியாளர்களிடம் அவர் போட்டு வாங்கும் கதைகள் / சம்பவங்கள் எல்லாமே சூப்பர்ப். 90% கேள்விகளுக்கு (வீட்டில் உட்கார்ந்து) சரியான விடை தெரிந்ததால், (போட்டிக்கு அழைத்தால்!) ஒரு கோடி ஜெயித்து, சொந்தக் கார் வாங்கி அதில்தான் ஆபீஸ் போகணுமென்று (அதே வேலை செய்ய!!) சபதம் போட்ட இரவுகள்.

முதல் இரண்டு சீசன்களில் (அவை மட்டுமே நான் பார்த்தவை!) தமிழ்நாடு, தமிழ் சினிமா தொடர்பான கேள்விகள் பல கேட்கப்பட்டன. அதில் இன்றும் நினைவில் இருக்கும் ஒரு கேள்வி. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் விரும்பி, நடிக்க முடியாமல் போன பாத்திரம் என்ன? பதில்: அனைவருக்கும் முன்னர் நான் கத்திய சரியான விடை ‘பெரியார்’.

அதன் பிறகு ஊர், வேலை, விருப்பம் அனைத்திலும் மாற்றம். தொடர்ந்து ஷாருக், மறுபடி அமிதாப், இந்தப் பக்கம் சரத்குமார், பிரகாஷ்ராஜ், சூர்யா இப்படி பலர் இந்த (அல்லது இதே மாதிரியான) நிகழ்ச்சிகளை நடத்தினாலும், எதையும் ஒரு எபிசோட் கூட சரியாகப் பார்த்ததில்லை. காரணம்? அதில் அமிதாப் இல்லையே. அதுதான். யூட்யூப் வந்தபிறகும் பார்க்கத் தோன்றியதில்லை.

ஆனால்..
ஆனால்..

ஒரு முறை ட்விட்டரில் கிடைத்த இந்த ஒரு எபிசோட்’ன் லிங்க். இதை மட்டும் மறக்கவே முடியாமல், கடந்த 2 வருடங்களில் 4-5 முறை முழு 1மணி நேரத்தையும் பார்த்திருக்கிறேன். யாருக்காக? அது யாருக்காக? நம்ம சின்னக்குயில் சித்ரா’வுக்காகதான். அதுவும் மலையாள வெர்ஷன். நடத்துபவர் சுரேஷ் கோபி. அவர் நடத்தும் இதே நிகழ்ச்சியின் மற்ற எபிசோட்களையும் பார்த்ததில்லை. ஆனால் சித்ராவுடன் அவர் பேசி நடத்தும் விதம். Simply Wow. சித்ரா சேச்சியிடம் அவர் (மற்றும் மலையாளிகள்) வைத்திருக்கும் பாசம், அக்கறை, அதை அவர் சரியாக வெளிப்படுத்தும் விதம், அனைத்தும் Extraordinarily beautiful. நிறைய பேர் பார்த்திருக்கலாம். இல்லையென்றால், சித்ராவை பிடிக்குமென்றால் (பிடிக்காதவங்க யாராவது இருப்பாங்களா என்ன?) ஒரு முறை பார்க்கலாம்.



அவ்வளவுதான் பதிவு. இந்த நிகழ்ச்சியைப் போலவே நிஜ வாழ்க்கையிலும் இந்த மனைவி(கள்!), கேள்விகளைக் கேட்ட பிறகு, நமக்கு 4 ஆப்ஷன்களைக் கொடுத்தால் எப்படி இருக்கும்? ஆனா கொடுக்க மாட்றாங்களே? எதைக் கேட்டாலும் objective answerல்தான் பதில் சொல்லணுமாம். நம்மால் என்னதான் பதில் கொடுக்க முடியும்? எதைச் சொன்னாலும் திட்டு. ம்ம்ம்ம்.. மிடியல.

****

Read more...

Sunday, August 10, 2014

வண்டி வண்டி மிதிவண்டி...


இந்த வருடம் ஏப்ரல் மாதம் வரை கிட்டத்தட்ட ஒரு வருடம் அலுவலகத்திற்கு மிதிவண்டியில் போன அனுபவத்தில் எழுதும் பதிவு. ஒரு வழியில் 5கிமீ ஆக தினமும் 10கிமீ அலுவலகத்திற்கு மட்டும். (காலையில் உடற்பயிற்சிக்கு ஓட்டியது தனிக் கணக்கு).

ட்விட்டரில் நாம் சும்மா ‘மேலே-கீழே’ arrow அழுத்தி படிச்சிட்டு போயிட்டேயிருந்தாலும், யாராவது ஒருவர் நம்மை ஏதாவது ஒரு வண்டியில் ஏற்றி தரதரன்னு இழுத்துக்கிட்டே போயிடுவாங்க. அதைப் போலவே, சாலைகளிலும் நடக்கும். நாம பாட்டுக்கு ‘ரண்டக்க ரண்டக்க’ பாடிட்டே போயிட்டிருந்தாலும், நம்மைத் தாண்டி Left turn  எடுப்பவர்கள், ஒரு நொடிகூட பொறுக்காமல், நமக்கு முன்னால் போய் டக்குன்னு திரும்பிடுவாங்க.

பலமுறை இப்படி திடீர்னு ப்ரேக் போடமுடியாமல் நானும் அவங்க கூடவே இடது பக்கம் திரும்பி, பக்கத்து கட்டிடத்தில் / கடையில் நுழைந்திருக்கேன். வெயிலில் வேர்க்க விறுவிறுக்க சைக்கிளோடு கட்டிடத்தில் நுழையும் என்னை, கூரியர்காரன்னு நினைச்சி அங்கிருக்கும் காவலாளி திட்டியிருக்கான். டேய், அந்த வண்டியினால்தான் இப்படி இங்கேல்லாம் நுழைய வேண்டியதாயிடுச்சுடான்னு சொல்லி, திரும்பி, வெளியே வந்து, வண்டி ஓட்டி.. ஸ்ஸ்ஸப்பா...!!!

மிதிவண்டி ஓட்டுவதால் இன்னொரு வசதி என்னன்னா, நீங்க 'Invisible' ஆயிடலாம். திகைக்காதீங்க. நிஜம்தான். மிதிமிதிமிதிச்சி வண்டி ஓட்டிவரும் உங்களை யாருக்குமே தெரியாது. பெரிய பேருந்து மட்டுமல்ல, சாலையைக் கடப்பவர்களும் உங்களை கண்டுக்க மாட்டாங்க. தூரத்தில் வரும்போதே தெரிஞ்சிடும், இவன் கடக்கப் போகிறான், ஆனா நாமதான் வேகமா வர்றோமே, நம்மை போகவிட்டுத்தான் அவன் போவான்னு நினைச்சி தைரியமா வந்தாலும், அதுவரை பெரிய வண்டிகளுக்காகக் காத்திருந்தவன், சடாரென்று சாலையில் இறங்கிவிடுவான். கடைசி நொடியில்தான் இப்படி ஒரு ஜந்து, இப்படி ஒரு மிதிவண்டியில் வருதுன்னு பார்த்து, அப்படி இப்படின்னு டான்ஸ் ஆடி முடிப்பதற்குள்.. டூ லேட். இதே போல் இது வரை நான் இடித்தவர்கள் எண்ணிக்கை - நான்கு.

பெங்களூரில் ( நான் இருந்த Whitefieldல்) கடற்கரை இல்லையே என்று மக்கள் கவலைப்படக்கூடாதென்று சாலையோரம் குவியும் மணலை BDA எடுப்பதேயில்லை. நானும் கிட்டத்தட்ட ஒரு வருடம் மிதிவண்டியில் அலுவலகத்திற்குப் போனேன். கடற்கரையில் வண்டி ஓட்டிய அனுபவம்தான். சாலையிலும் போகமுடியாது, ஓரத்திலும் போகமுடியாது. வேறு வழி? நடைபாதையில் ஏறிவிட வேண்டியதுதான். ஆனா, அங்கேயும் அடிதடிதான். பைக்கில் வர்றவன் ‘Right of way’ கேட்டு ஒலிப்பானை விடாமல் அடிப்பான். டேய். நடைபாதையிலுமாடா உங்க அட்டகாசங்கள்னா? பெங்களூரின் சிறப்பு அம்சமே நடைபாதையில் பைக் ஓட்டுவதுதான் என்றான்.

அப்பப்போ என்ன ஆகும்னா, கிட்டத்தட்ட அரை கிமீ நடைபாதையில் வண்டி ஓட்டி வந்தபிறகு, சரியாக சாலையில் இறங்குமிடத்தில் ஒரு காவலர் நின்றிருப்பார். எல்லாருக்கும் டிக்கெட். புடிங்க சார். புடிச்சி உள்ளே போடுங்க சார் அவங்களை. என்னை மட்டும் ‘போங்க, போங்க’ என்று அனுப்பிவிடுவார். வாழ்க மிதிவண்டி.

அதிகமான போக்குவரத்து
அலைபாயும் மக்கள்
சாலையில் கல், மண், தூசு

இப்படி எவ்வளவோ பிரச்னை இருந்தாலும்
மிதிவண்டி ஓட்டுபவர்களுக்கு

சிக்னல் கிடையாது
Wrongsideலும், Onewayயிலும் தைரியமாகச் செல்லலாம்
நடைபாதையில் போகலாம்
வண்டியை அநாயசமாக தூக்கி தடைகளைக் கடக்கலாம்
கொழுப்பு குறைப்பு

எல்லாவற்றிற்கும் மேலாக

வாரம்தோறும் விலையேற்றும் BMTC இருக்கும் நகரத்தில் மிதிவண்டி ஓட்டி அலுவலகம் போனது ஒரு நல்ல அனுபவமே.

***





Read more...

Sunday, August 3, 2014

நண்பர்கள் தின வாழ்த்துகள்.


அமெரிக்காவில் இருந்தபோது நடந்த ஒரு சம்பவம்.

ஒரே குழுவில் இருந்த நாங்கள் மூவரும் நண்பர்கள் ஆனோம். வாரயிறுதிகளில் சேர்ந்து ஊர் சுற்றுவது, கடை கண்ணிகளுக்குப் போவது என பொழுது போக்கிக் கொண்டிருந்தபோது, ஒரு நண்பர் வேலை & இடமாற்றத்தால் வேறொரு ஊருக்குச் சென்றார். அடுத்து வந்த ஒரு நீண்ட வாரயிறுதியில் எங்கள் இரு குடும்பத்தையும் அவர் ஊருக்கு அழைக்க, அவர் குழந்தைகளுக்கு பரிசுகள் வாங்கி நாங்களும் பயணப்படத் தயாராக இருந்தோம். இங்குதான் George Orwell வருகிறார்.

All Friends are equal, but some Friends are more equal than others-ன்னு சொன்னாரே, அவர்தான்.

இங்கிருந்த மற்றொரு நண்பரின் மனைவியும், போகவிருந்த ஊரிலிருந்த நண்பரின் மனைவியும் மிகச்சிறந்த நண்பிகள். தங்கள் நட்பை கற்பைப்போல எண்ணக்கூடியவர்கள். அதில் உண்டான Possessiveness, மற்ற எவரையும் தங்கள் நட்புக்கிடையில் சேர்க்காத பண்பினைக் கொண்டவர்கள். அப்படி இருக்கும்போது, less equalஆக இருந்த என்னை, இந்தப் பயணத்திலிருந்து எப்படி ‘கட்’ செய்வது? அதைத்தான் த்ருஷ்யம் போல் ஒரு MasterPlan செய்து முடித்தார்கள். அது என்ன ப்ளான் என்பதுதான் இந்தப் பதிவு.

நாள் முழுக்க நடந்த இந்த ஆபரேஷன் பற்றி, துவக்கத்தில் எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஒரு சில மணி நேரங்களிலேயே தெரிந்தது. (’திடுக்’ திருப்பங்களுடன் எவ்வளவு ராஜேஷ்குமார் பாக்கெட் நாவல் படித்திருப்போம்!!).

அடுத்த நாள் காலை 6 மணிக்குக் கிளம்பி 1மணிக்கு நண்பர் வீட்டில் மதிய உணவு என்று ப்ளான். முந்தைய நாள் நடந்தவை:

9மணி: லோக்கல் நண்பர் அழைத்து - ஏம்பா, நீ கண்டிப்பா வர்றேயில்லே?. அட ஆமாம்பா. கண்டிப்பா போறோம் - இது நான்.

10மணி: லோக்கல் நண்பர் மனைவி அழைத்து: நாளைக்கு போற வழியில் பனி பெய்யும் போலிருக்கு. எப்படிப் போறோம்னு தெரியல. நான்: அட 30% பனிதான். ஒண்ணும் பிரச்னையில்லை. போகலாம்.

11மணி: ஊரிலிருக்கும் நண்பர்: குழந்தைக்கு உடம்பு சரியில்லை. இங்கு வந்தால் உன் குழந்தைக்கும் அது பரவிவிடும். எதுக்கும் நான் மாலை confirm செய்றேன்.

12மணி: லோக்கல் நண்பர்: எனக்கு ஆபீஸ் வேலை வரும் போலிருக்கு. நாம் அடுத்த வாரம் போகலாமா? அல்லது நீ மட்டும் போறியா? நான்: போவதென்றால் சேர்ந்தே போகலாம். நீ போகலேன்னா நானும் போகலை.

1மணி: லோக்கல் நண்பர்: பனி, அவர் குழந்தையின் ஜுரம், ஆபீஸ் வேலை - இதெல்லாம் காரணங்கள். நாம் இந்த வாரம் போகவேண்டாம். நீ வாங்கின பரிசுகளை போய் அந்தந்த கடைகளில் ரிட்டர்ன் கொடுத்துவிடு. நானும் அதேதான் செய்யப் போகிறேன்.

2மணி: ஊரிலிருக்கும் நண்பருக்கு தொலைப்பேச, அவரின் அனைத்து தொலைப்பேசிகளும் switchoff.

3மணி: பரிசுகள் ரிட்டர்ன் செய்தாச்சு.

4மணி: மனைவியிடம் சொன்னேன். (ரமணா மருத்துவமனைக் காட்சியில் விஜயகாந்த் குரலில்) இப்போ எந்த நேரத்திலும் தொலைப்பேசி வரும். இவன் மட்டும் புறப்பட்டுப் போறேன்னு சொல்வான். அடுத்த முறை இருவரும் சேர்ந்து போவோம்னு சொல்வான் பாருன்னேன்.

5மணி: லோக்கல் நண்பர்: எவ்வளவு பனி இருந்தாலும், என்னை மட்டுமாவது வரச்சொல்லிட்டாங்க. நான் மட்டும் இப்பவே கிளம்பிப் போறேன். உன்னால் உடனடியா கிளம்ப முடியாதில்லே. அடுத்த முறை சேர்ந்தே போகலாம். பை.

பிறகு நாங்கள் அமெரிக்கா காலி செய்துவிட்டு வரும்போது ஊரிலிருந்த அந்த நண்பரிடம் அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து, சொல்லிவிட்டு வந்தேன் - அன்னிக்கு என்னை வரவேண்டாம்னு சொல்லியிருந்தாலே, நான் வந்திருக்க மாட்டேன். அதுக்கு அவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டாம். பரவாயில்லை. சென்னை வந்தால் கண்டிப்பாக என் வீட்டுக்கு வா.

***

‘நண்பேண்டா’ லேபிளில் இதே போல் வேறு சில சம்பவங்களும் உள்ளன.

***


Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP