எந்திரன் ரிலீஸன்று தினப்பலன்!
கலைஞர் குழுமத்தில் ஏதோவொரு தொலைக்காட்சி:
இன்று உலகெங்கிலும் உள்ள தமிழ் பேசும் நல்லுள்ளங்களுக்கு மிகவும் பொன்னான நாள். ஏழு கிரகங்களும் ஒரே வரிசையில் வந்தால் எப்படியொரு அதிசய, நல்ல தினமோ அதை விட மிகவும் அதிர்ஷ்டகரமான நாள். அதனால், ஒவ்வொரு ராசிக்கும் பலன் சொல்லாமல் இன்று மொத்தமாய் அத்தனை பேருக்கும் ஒரே பலன்தான்.
இன்று முழுவதும் நேர்மறையாக சிந்தித்து, நேர்மறையான வார்த்தைகளையே பேசவேண்டியது அவசியம். சூப்பர், அருமை, அற்புதம், வாய்ப்பே இல்லை - ஆகிய சொற்களை தொடர்ந்து சொல்வது சாலச்சிறந்ததாகும். அதை விடுத்து எதிர்மறையான வார்த்தைகளைப் பேசுபவர்களுக்கு கெட்டபயன் உடனேயே கிட்டும் என்பது உறுதி.
உங்களுக்கு உகந்த திசை - ‘மேல்’. மலை, மேடு, உயர்ந்த கட்டிடம் அல்லது கட்டவுட்டுகள் எதன் மீதாவது ஏறுவது நல்லது.
இன்று உங்களுக்கு உகந்த நிறம் - வெள்ளை. வெள்ளை நிறத்திலான பொருட்களை வாங்கி பயன்படுத்துவது மிகவும் நல்லது.
கற்சிலைகளுக்கு மட்டுமல்லாமல், மரச்சிலைகளுக்கும் அபிஷேகம் செய்ய அற்புதமான நாள் இன்று. உங்களுக்கு உகந்த வெள்ளை நிறத்திலுள்ள பால், தயிர், வெண்ணை ஆகியவற்றால் உயரமான மரச்சிலைகளுக்கு அபிஷேகம் செய்தால், ஏழேழு ஜென்மங்களுக்கும் உங்களுக்கு மோட்சம் கிட்டும். நீங்கள் தொலைக்காட்சியில் தோன்றும் வாய்ப்பும் அதிகமாகும்.
வெளியில் செல்ல முடியாத வயதானவர்கள், நோயாளிகள் வீட்டிலிருந்தபடியே சன் டிவி பார்த்தால் தனலட்சுமியின் அருள் கிட்டும்.
***********
ஜெயா டிவி:
இன்று உங்களுக்கு ரொம்பவே ஆகாத நாள். வரலாற்றில் கரித்துண்டினால் கூட பொறிக்கக்கூடாத நாள். இப்பேற்ப்பட்ட கெட்ட நாளில் தமிழர்கள் தங்கள் தோஷம் தீர்க்க செய்ய வேண்டிய செயல் - ஒன்றுமேயில்லை. வீட்டை விட்டு வெளியே வராமல், வீட்டிலேயே அடைந்து கடவுள் வழிபாடு செய்ய வேண்டியதுதான்.
அப்படி வீட்டிலிருக்கும்போது, தொலைக்காட்சி போன்ற மின்சார உபகரணங்களை பயன்படுத்தாமல் இருந்தால் உத்தமம்.
ஒரு வேளை கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் நோயாளிகளுக்காக தொலைக்காட்சி பயன்படுத்த வேண்டியிருந்தால், ஜெயா டிவியில் பக்திமாலை பார்த்தால், அடுத்த வருடம் தமிழர்களுக்கு நல்லாட்சி கிட்டும்.
********
மக்கள் டிவியில் ஒரு நிரந்தர அறிவிப்பு:
மக்கள் டிவி நேயர்கள் இன்றிலிருந்து ஒரு நாள் சன் டிவியும் ஒரு நாள் ஜெயா டிவியும் மாறிமாறி பார்க்கவும். அடுத்த தேர்தல் உடன்பாடு ஏற்படும்வரை இந்த அறிவிப்பு தொடரும். அதற்குப் பிறகே உங்களுக்கு நல்ல நேரமா, கெட்ட நேரமா என்பது கணித்து சொல்லப்படும்.
*****