Saturday, July 10, 2010

FeTNA-2010: ஊக்கம் கொடுத்த பாராட்டுகளுக்கு நன்றி...

முதல் நன்றி அண்ணன் பழமைபேசிக்குத்தான். அவரோட இந்த இடுகையைப் பார்த்து, விழாவில் என்னைத் தேடி வந்து பாராட்டியவர்கள் குறைந்த பட்சம் 15 பேர். அனைவருக்கும் நன்றி.

அடுத்தது நான் ஹோட்டல் அறை கொடுத்து, அதில் சுகமாய் தங்கியவர்கள், என்னைக் கண்டுபிடித்து நன்றி சொன்னவர்கள் பலர். அனைவருக்கும் நன்றி.



பிறகு கூட வேலை பார்த்த சக தன்னார்வலர்கள், நண்பர்கள், விழாவில் சந்தித்த பதிவர்கள் அனைவருக்கும் நன்றி.



அனைத்துக்கும் மேலாக இந்த அருமையான வாய்ப்பளித்து, இறுதியில் மேடையேற்றி சந்தன மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி, விருதும் கொடுத்த தலைவர்கள் திரு.முத்துவேல் செல்லையா மற்றும் திரு.பழனி சுந்தரம் அவர்களுக்கும் மிக்க நன்றி..



(இன்னுமொரு இடுகை புகைப்படங்களுக்காக போடலாம்னு நினைக்கிறேன். இதோட FeTNA-2010 இடுகைகள் முடிவுக்கு வரும்).






Read more...

Friday, July 9, 2010

FeTNA-2010: நான் வாங்கிய திட்டுகள்!!

வீட்டுலே திட்டு வாங்குறது நமக்கு பழக்கமானதுதான். ரெண்டு நாள் தொடர்ந்து திட்டு வாங்கலேன்னா, ஏதோ பிரச்சினைன்னு தோணும். இப்ப அதுவேண்டாம். நாம பேசப்போறது FeTNAவில் நான் வாங்கின திட்டுகளைப்பற்றி.

**********

இந்த விழாவில் என்னுடைய மற்றொரு முக்கிய வேலை சிறப்பு விருந்தினர்கள் மற்றும் கொடையாளர்களுக்கு தங்குமிட வசதி செய்து கொடுப்பது. தமிழ்லே சொன்னா hotel room booking.

1. ஒரு/இரு படுக்கைகள் கொண்ட அறைகள்
2. ஒரு/இரு/மூன்று இரவுகளுக்கான அறைகள்
3. குழுவினருக்கு ஒரே இடத்தில் அறைகள்
4. தனிப்பட்ட வேண்டுகோள்கள் (சக்கர நாற்காலியில் வருபவர், நாய்க்குட்டியோடு வருபவர் etc.,)

இதையெல்லாம் கருத்தில் கொண்டு அவரவர்களுக்கு அறை கொடுத்து, வந்து போக வழி, வண்டி நிறுத்த இடத்துக்கான வழி இப்படி எல்லாவற்றையும் அவர்களுக்கு தெரியப்படுத்துவதே என் வேலை.

தனிப்பட்ட முறையில் அனைவரும் கடிதம் போவதால், மிகவும் கவனமெடுத்து இதை செய்தாலும், என்னுடைய தவறால், ஒருவருக்கு நீங்க கூடுதல் இரவு எடுத்திருக்கீங்க, அதற்குண்டான பணத்தை நாளைக்கு வந்து கட்டிடுங்கன்னு அனுப்பிட்டேன்.

அதுக்கு இரவு 11.30 மணிக்கு தொலைபேசி கத்துனாரு பாருங்க.. ஹிஹி.. நமக்கெல்லாம் இது சாதாரணம்தானே.. என்னுடைய தவறுதான். என்னை மன்னிச்சிடுங்கன்னு எவ்வளவோ சொல்லியும் சமாதானமாகாத அவர், பிறகு விழாவில் நேரில் பார்த்தபொழுது மிகவும் நெருங்கிய நண்பராக மாறினார்.

*****

மேலே சொன்னது என்னுடைய தவறென்றால், ஹோட்டல்காரங்க செய்த தவறு நிறைய. அறையில் வெளிச்சம் போதலே, சுடுதண்ணி வரலே, குளிர்சாதனம் வேலை செய்யலே - அப்படின்னு என்கிட்டே புகார்கள் குவிந்தன. ஹோட்டல் அறைகளுக்கு என் தொலைபேசி எண்ணைக் கொடுத்திருந்ததால், இதெல்லாம்கூட என் காதில். மக்கா, அதெல்லாம்
அங்கேயே சொல்லுங்க. நான் வந்து எதுவும் செய்யமுடியாதுன்னு நிறைய பேருக்கு சமாதானம் சொல்ல வேண்டியிருந்தது.

*****

இதைப்போல், ரொம்ப மோசமாக கத்தினவர் இன்னொருத்தர். அவருக்கு இரு படுக்கைகள் கொண்ட அறைக்குப் பதில் ஓரு ப. கொ. அறைதான் கிடைச்சது. இந்த மாதிரி மாத்தி கொடுத்துட்டேன்னு என்கிட்டேயும் ஹோட்டல்காரங்க சொல்லலே.

நட்சத்திர அறிமுக கூட்டத்தில் நானும் இன்னொரு நண்பரும் சேர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கலாம்னு பேசவேண்டியதை தயார் செய்து வைத்திருந்தோம். சரியா அந்த நேரம் பார்த்து மேற்படி ஆளு தொலைபேசி கச்சாமுச்சான்னு கத்த, அவரை சமாதானப்படுத்தி வேறொரு அறை வாங்கிக் கொடுக்க ஆள் எதுவும் கிடைக்காமே நானே போக வேண்டியதாகி, இந்த தொகுத்து வழங்கும் வாய்ப்பு பறிபோனது.

நீங்கதான் இதை ( நிகழ்ச்சி தொகுப்பு) செய்திருக்கணும். திடீர்னு இந்த பிரச்சினை வந்தது எதிர்பாராததுன்னு தலைவர் இன்றளவும் சொல்லி வருத்தப்படும் சம்பவம். ரைட் விடுங்க அடுத்த தடவை பாத்துப்போம்னு சொன்னேன்.

*****

இப்படி திட்டினவங்களைத் தவிர பலர் நேரில் தேடி வந்து பாராட்டியது மிக மிக மகிழ்ச்சியடைய வைத்தது.

அப்படி கிடைத்த பாராட்டுக்களும், பரிசுகளும் அடுத்த இடுகையில்.

*****

Read more...

Wednesday, July 7, 2010

FeTNA-2010: திரைக்குப் பின்னால்.. நடந்தது என்ன?

இரண்டு நாட்களுக்கு தொடர்ச்சியாக பல நிகழ்ச்சிகள். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் வெவ்வேறு ஒருங்கிணைப்பாளர்கள், பங்கேற்பாளர்கள், ஒலி/ஒளி அமைப்பு இருந்தும் எப்படி இவை அனைத்தும் தங்குதடையின்றி (சிற்சில பிழைகளைத் தவிர) நடந்தேறின?

இவற்றுக்குக் காரணம் மேடைக்குப் பின்னால் 8 பேர் கொண்ட ஒரு குழு. இவர்கள் செய்தது என்ன?

ஒருவர் ஒலி.

ஒருவர் ஒளி.

ஒருவர் வெண்திரையில் விவரங்களைக் காட்ட.

ஒருவர் மேடையில் தேவையான பொருட்களை சேகரிக்க

ஒருவர் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பாளர்களை ஒருங்கிணைக்க

ஒருவர் தகவல் பரிமாற்றத்துக்கு

ஒருவர் அவசர தேவைகளுக்கு

இவர்கள் எல்லோருக்கும் மேலாளராக ஒருவர்

ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் இந்த 8 பேரும் ஒருவரையொருவர் (கம்பியில்லா சாதனத்தின் மூலம்) தொடர்பு கொண்டு - அனைவரும் தயாரா என்று கேட்டபிறகு - மேலாளர் "திரையைத் தூக்கலாம்" என்று சொன்னவுடன் அவரவர் வேலையைத் துவக்க வேண்டும்.

இதில் யாரேனும் ஒருவர் பிரச்சினை என்று சொன்னாலும், திரையைத் தூக்காமல், 'ஒலி'க்காரர் ஏதேனும் ஒரு பின்னணி இசையை போட்டுவிடுவார். ஏதேனும் அறிவிப்பு இருந்தால் அறிவிப்பு செய்ய மற்றொருவர் வந்துவிடுவார். அதற்குள் பிரச்சினை களையப்பட்டு திரையைத் தூக்க ஏற்பாடு செய்யப்படும்.

இதில் இன்னொரு தகவல் என்னன்னா, இந்த 8 பேரும் ஒரே அலைவரிசையில் இல்லை. அரங்கத்தின் கம்பியில்லா அலைவரிசையில் மூவரும், நம் (தனியார்) அலைவரிசையில் பாக்கி பேரும் இருந்தோம். அரங்க அலைவரிசையில் ஆங்கிலேயரும் இருந்ததால் அதில் ஆங்கிலத்திலும், நம் அலைவரிசையில் தமிழிலும் பேசவேண்டும்.

இந்த கூட்டுமுயற்சியில் என்னுடைய வேலை என்னவென்றால், இரண்டு அலைவரிசைக்கும் நடுவில் இருந்து, தகவல் பரிமாற்றம் செய்வது.

இக்குழுவில் ஓரிருவரைத் தவிர பாக்கி அனைவருக்கும் இந்த வேலை புதிதாக இருந்தாலும், ஆரம்ப சில பிழைகளுக்குப்பின், வேலைகள் கடகடவென நடந்தன.

அரங்கத்திலிருந்து நிகழ்ச்சிகளைப் பார்க்கும் யாருக்கும் கடைசிவரை இந்த 8 பேரைப் பற்றி தெரியாவிட்டாலும், இவர்களது ஒருங்கிணைப்பே இந்த இரண்டு நாட்கள் முழுவதும் நிகழ்ச்சிகள் நடைபெற வலுவானதொரு காரணமாகும்.

விழா சுமுகமாக முடிந்தபிறகு வேலை செய்த அனைவரும் பயங்கர திருப்தியாக உணர்ந்தோம். வாய்ப்பளித்த பேரவைக்கு நன்றி கூறி குழுவின் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டோம்.

Read more...

Tuesday, July 6, 2010

FeTNA-2010: மதுரை வீரன் தெருக்கூத்து..

பட்டையை கிளப்புறான், பட்டையை கிளப்புறான் அப்படின்னு போட்டி போட்டு கூவும் ‘அவரோட’ ரசிகர்களும், ‘இவரோட’ ரசிகர்களும் இந்த மதுரை வீரன் தெருக்கூத்தை பார்த்திருக்கணும். இவங்கதான் நிஜமா ப.கி.

நானெல்லாம் சென்னையில் பொறந்து வளர்ந்த ஆளு. கோவில் திருவிழான்னா தெரு முழுக்க ஒலிபெருக்கி வெச்சி பாட்டு போட்டு, பசங்களை படிக்கவே விடாமே தொந்தரவு பண்ணுவாங்க (ஹையா. ஜாலி!). கூத்து எல்லாம் பாத்தது இல்லை. திரைப்படங்களில் பாத்த மாதிரியும் தெரியல. அதனால் இந்த விழாவில் பாத்துடலாம்னு முடிவோட
இருந்தேன்.

முதலிலிருந்தே இந்த கலைஞர்கள் வருவதில் பிரச்சினை இருந்தது. முதலில் விசா பிரச்சினை. பிறகு பயணச்சீட்டு கிடைக்காமல் பிரச்சினை. பிறகு விமானம் தாமதமானதால் பிரச்சினை. பிறகு ஒரு வழியாய் விழாவின் முதல் நாளன்று வந்து சேர்ந்தனர். நிகழ்ச்சி நிரலில் கூத்து முதல் நாள் இரவென்று போட்டிருந்தது. இரண்டரை மணி நேர நிகழ்ச்சி. அவர்கள் அன்றுதான் வந்திருந்ததால், கடைசி நேரத்தில் நிகழ்ச்சிகள் மாற்றியமைக்கப்பட்டு, அன்று இரவு நட்சத்திரங்களின் அறிமுகம் என்றும், அடுத்த நாள் கூத்து என்றும் அறிவிக்கப்பட்டது.

அடுத்த நாள் மாலை 4.30௦ மணி நிகழ்ச்சிக்கு, மதியம் 12 மணியிலிருந்தே ஒப்பனை செய்யத் தொடங்குகிறார்கள். 4.30 மணியும் ஆயிற்று. அரங்கில் கூட்டம் அப்புகிறது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த கூத்து துவங்குகிறது.

ஆரம்பத்தில், சலசலவென மக்களிடமிருந்து வந்த சத்தம் சிறிது நேரத்தில் அடங்குகிறது. கலைஞர்கள் ஆடுகின்றனர். பாடுகின்றனர். குதிக்கின்றனர். சுழலுகின்றனர். சிரிக்கின்றனர். அழுகின்றனர். மக்களை அங்கிங்கு நகரவிடாமல் நாற்காலியில் கட்டிப் போடுகின்றனர். மக்களும் சும்மா உட்காரவில்லை, உணர்ச்சிவசப்பட்டு உட்கார்ந்திருக்கின்றனர்.

அப்புறம் வந்துச்சு பாருங்க, மதுரை வீரன் வருகை. அரங்க வாயிலிலிருந்து மேடை நோக்கி வரும் அந்த வீரனுக்கு - அடேங்கப்பா.. மக்கள் அனைவரும் எழுந்து நின்று மதுரை வீரனை வரவேற்கின்றனர். கைதட்டலும், விசில் சத்தமும் காதைப் பிளக்கின்றன. (அப்துல்லா அண்ணனின் விசில் சத்தம் ஒலிபெருக்கியே இல்லாமல் அரங்கம் முழுவதும் பரவுகிறது. நான் பாம்பு மாதிரி.. வெறும் புஸ் புஸ்!) .

ஒரு சிலர் வீரன் முன் நடனமாடத் துவங்க, பலர் அவர்களை பின்பற்ற, ஏகப்பட்ட பேர் முண்டியடிக்க, இவர்கள் எல்லோரையும் தாண்டி வீரன் மேடைக்கு வரவே 20 நிமிடங்களுக்கு மேலானது. மேடையிலும் பலர் (இரு பெண்கள் ஆவேசத்துடன் தலைவிரி கோலமாக) ஆட, நாங்கள் இருப்பது அமெரிக்காவா இல்லை தமிழகத்தின் ஏதோ ஒரு கிராமமா என்ற ஒரு சந்தேகம் வந்துவிட்டது. பிறகு அனைவரையும் கீழே அனுப்பிவிட்டு மறுபடி கூத்தை ஆரம்பிக்க சிறிது நேரம் பிடித்தது.

மதுரை வீரன் கதை பரபரவென்று நகர்கிறது. நாயகன் பிறப்பது, பெற்றோரை பிரிவது, நாயகி பிறப்பது, இருவரும் பெரியவர்களாவது என்று ஆடல் பாடல்களுடன் விவரிக்கின்றனர். அனைவரது நடிப்பையும் விவரிக்க அருமை, அட்டகாசம் போன்ற வார்த்தைகள் குறைவே.

ஒன்றரை மணி நேரம் ஒரு இடத்தில் அமர்ந்ததே பெரிய விஷயம்னு நினைச்சிக்கிட்டிருந்தபோதே, கடமை 'காலிங் சத்யா, காலிங் சத்யா' என்று காதில் ஒலித்தது. அதனால், கூத்தின் முடிவே பார்க்காமல் எழுந்து வெளியே வந்துவிட்டேன். கடைசிவரை பார்த்த நண்பர்கள் கூறியதைக் கேட்டு முடிவை தவறவிட்டதை எண்ணி வருத்தமுற்றேன்.

அடுத்த வாரம் காணொளி வரும்போது பார்க்கவேண்டும் என்று இருக்கும் பலரில் நானும் ஒருவன்.

ஒரு அருமையான கலையை இன்னும் காப்பாற்றிக் கொண்டிருக்கும் முனைவர் ஆறுமுகம் குழுவினருக்கு வணக்கங்களும், இந்த அற்புதமான அனுபவத்தை அளித்த பேரவை அமைப்பாளர்களுக்கு நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

*****

அடுத்த நாள் கூத்துக் குழுவினர் தங்கியிருந்த இடத்தில் வேறொரு வேலை செய்யப் போயிருந்தபோது அக்குழுவில் பங்குபெற்ற ஒரு கலைஞரிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் - இந்தியாவில் கூத்து நடத்தி முடித்தபிறகு மக்கள் மேடையேறி அவர்களுக்கு பணம் கொடுப்பார்கள் என்றும், அமெரிக்காவிலும் அப்படி கொடுப்பார்கள் என்று அவர் எதிர்பார்த்ததாகவும் கூறினார்.

இங்கிருந்த மக்களில் பெரும்பான்மையோருக்கு (என்னையும் சேர்த்து) கூத்து நிகழ்ச்சியே புதிதாக இருக்கும்போது, அப்படி பணம் கொடுக்கும் வழக்கம் இருக்கு என்பதே தெரிந்திருக்காது என்பதை விளக்கி, கையில் இருந்த சில நோட்டுக்களை கொடுத்து, கூத்துக்காக பாராட்டிவிட்டு வந்தேன்.

******

பிகு: படங்களை பழமை அண்ணனின் இடுகைகளில் பார்த்துக் கொள்ளுங்கள். (என் படங்களைப் பற்றி.. அது ஒரு பெரிய கதை.. தனி இடுகையில்!).

******

Read more...

Monday, July 5, 2010

FeTNA-2010 : பழமைபேசியையும், நசரேனையும் தோற்கடிச்சிட்டோம்ல!


பேரவைக்காக நான் செய்த பல்வேறு வேலைகளுக்கு நடுவில் (அவை தனித்தனி இடுகைகளில் வரும்!) இலக்கிய வினாடி வினாவில் பங்கேற்பதாகவும் பேர் கொடுத்திருந்தேன்.

பின்னர் தன்னந்தனியாக இருந்தவொரு நேரத்தில் - இலக்கியத்துக்கும் நமக்கும் என்ன சம்மந்தம்? அதில் நாம் என்ன பதில் சொல்ல முடியும்? - என்றெல்லாம் யோசித்துப் பார்த்தேன். கல்யாணம்ற ஒரு பெரிய சவாலையே ஏத்துக்கிட்டே, இந்த வினாடி வினா முடியாதான்னு எதிரே இருந்தவர் (கண்ணாடியில்) சொன்னார்.


சரி நானும் ஆட்டத்துக்கு வர்றேன்னு சொல்லிய அடுத்த நாளுக்குள் அண்ணன் பழமைபேசி, அணிகளெல்லாம் அறிவிச்சிட்டு பல்வழி அழைப்புகளுக்கான நேரம் காலத்தையெல்லாம் குறிச்சி அனுப்பிட்டார். நானும் இரண்டொரு அழைப்பில் கலந்துகொள்கிறேன். எனக்கு சில பாடத்திட்டங்களை ஒதுக்கி, நீ கண்டிப்பா இதை படிக்கணும்னெல்லாம் சொல்லிட்டாங்க.


அப்பதான் பேரவை விழாவுக்கான வேலைகள் சரியான சூடு பிடித்திருந்த நேரம். நானும் __யாக ஆரம்பித்த காலம். இந்த எனக்கான பாடத்தையும் படிக்க ஆரம்பிச்சேன். நல்லவேளை, செய்யுள், வெண்பா அப்படியெல்லாம் குடுக்காமே எனக்கு உரைநடைப்பகுதிகளை ஒதுக்கியிருந்தாங்க. ஜாலியா பல தடவைகள் படிச்சேன். கொஞ்சம் விட்டுப்(பி)படிப்போம்னு முடிவு செய்தேன். விட்டுட்டேன். ஹிஹி.. உங்களுக்குத்தான் தெரியுமே.. அப்புறம் (பி)படிக்கவேயில்லை.


அதற்குள் விழாவுக்கான நேரம் வந்துவிட்டது. நான் பயங்கர __யாயிட்டேன். நம்ம அணியிலிருக்கிற மத்தவங்க படிக்காமலா போயிருப்பாங்க. அவங்க நம்மளையும் ஜெயிக்க வெச்சிருவாங்கன்னு தைரியம் வந்துடுச்சு (வேறே வழி?). மேலும் எங்க அணியில் அண்ணன் அப்துல்லா இருந்தாருன்றது ஒரு யானையளவு தைரியத்தை கொடுத்திருந்தது. எதிரணியில் அண்ணன் பழமைபேசியும், தம்பி நசரேயனும்.

இங்கே ‘கட்’ பண்றோம். இப்போ விழாவில் இரண்டாம் நாள்.

வினாடிவினா துவங்குகிறது. அட்டகாசமான வடிவமைப்பு. பல்லூடத்தின் சிறப்பான பயன்பாடு. உருவாக்கியவர் திரு. நாஞ்சில் பீற்றர் ஐயா அவர்கள். பலவிதமான கேள்விகள். பதில்கள் கொட்டுகின்றன. மறுபடி ஒரு ஹிஹி. பதில்கள் கொட்டுறது என்கிட்டேயிருந்து இல்லே. என்னைத் தவிர மத்தவங்க எல்லார்கிட்டேயிருந்தும். இப்படி எல்லாக் கேள்விகளும் பாடத்திட்டங்களுக்கு வெளியே (out-of-syllabus) கேட்டா நான் எப்படி பதில் சொல்றதுன்னு, என்னையே நான் சமாதானப்படுத்திக்கிட்டேன்.

நடுவில் ஒரு கேள்வி கேட்டப்போ டக்குன்னு கையத் தூக்குறேன். பக்கத்திலிருந்த அண்ணன் அப்துல்லா, மைக்கை சத்யாகிட்டே கொடுங்க. கையத் தூக்குறாரு. பதில் அவருக்குத் தெரியும்போலங்கறாரு. சட்டை ரொம்ப ச்சின்னதானதால், அதைக் கொஞ்சம் தளர்த்திக்கலாமேன்னு கையைத் தூக்கியது பேராபத்துலே முடிஞ்சுடுச்சு. அப்புறம் வழியறது நமக்கென்ன புதுசா, உண்மையச் சொல்லிட்டு கையை இறக்கிட்டேன்.

கடகடன்னு பறக்குற வினாடிவினா கேள்விகள். எல்லாத்துக்கும் சடசடவென பதில்கள். தமிழார்வலர்கள், அறிஞர்கள் கலக்குறாங்க. அருமையான பதில்களுக்குப் பிறகு நிகழ்ச்சி முடிவடையுது. ஜெயிக்கப் போவது யாரு? வேற யாரு? எங்க அணிதான். 9 மதிப்பெண்கள் வித்தியாசத்தில் நாங்க ஜெயிச்சிட்டோம். எல்லோருக்கும் முனைவர் பர்வீன் சுல்தானா சான்றிதழ்கள் வழங்குறாங்க.


மத்தவங்க எல்லாரும் படிச்சி தெரிஞ்சிக்கிட்டு நிகழ்ச்சிக்கு வந்தாங்கன்னா, நான் மட்டும் நிகழ்ச்சிக்கு வந்துட்டு நிறைய தெரிஞ்சிக்கிட்டேன். அடுத்த வருடமாவது ஏதாவது உருப்படியா படிக்கலாம்னு ஒரு யோசனை. பாப்போம். டேய் அடுத்த வருடமும் இதே இடுகையை மறுவெளியீடுதான் செய்யப்போறேன்னு அவரு கண்ணாடியில் சொல்றாரு. (மொதல்லே வீட்டிலிருக்கிற கண்ணாடியையெல்லாம் தூக்கணும்...)





*****

பிகு-1 : எனக்குக் கொடுத்த சான்றிதழில் என் பேருக்கு முன்னால் இருக்கிற இரண்டு சொற்களைப் பாத்து சிரிக்கக்கூடாது சொல்லிட்டேன்.

பிகு-2 : இடுகையில் ரெண்டு இடத்தில் __ போட்டிருக்கிறேன். உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். ‘பி’யில் துவங்கி ‘ஸி’யில் முடியுற ஒரு சொல். அதை கொஞ்சம் ஓவராத்தான் சொல்லிட்டேன் போல. அவருக்குப் பிடிக்கலே. அவரு போட்டிருக்கிறது நீதானா பாருன்னு உரலைக் கொடுத்த நண்பருக்கு நன்றி..

*****

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP