Tuesday, March 30, 2010

சங்கத்தில் சங்கமிக்க பிரபல(!!) பதிவர் சென்னை வருகை!!!

சென்ற வாரம் சென்னையில் பதிவர்களின் சங்கத்துக்கான விழா நடைபெற்றதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். அதில் பங்கேற்பதற்காக பிரபல(!!) பதிவர் (ஒரு வாரம் தாமதமாக) சென்னை வருகை தருகிறார்.

அவரை தரிசனம் செய்ய விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

ஏப்ரல் 3ம் தேதி காலை முதல் 4ம் தேதி இரவு வரை -

சென்னை நங்கநல்லூர் -
தொடர்பு கொள்ள தொலைபேசி எண் : 99406 - 42029.

ஏப்ரல் 5ம் தேதி முதல் ஏப்ரல் 7ம் தேதி இரவு வரை -

சென்னை நங்கநல்லூர் -
தொடர்பு கொள்ள தொலைபேசி எண் : 99406 - 42029.

ஏப்ரல் 8ம் தேதி முதல் ஏப்ரல் 10ம் தேதி இரவு வரை -

சென்னை நங்கநல்லூர் -
தொடர்பு கொள்ள தொலைபேசி எண் : 99406 - 42029.

தரிசனம் செய்ய வருபவர்கள், வெளியே தெரியும் (அல்லது உள்ளே மறைந்திருக்கும்) நகர்படம் பிடிக்கும் கருவி எதையும் கொண்டு வரக்கூடாது என்பதை கண்டிப்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி..

வணக்கம்.

Read more...

Monday, March 29, 2010

FeTNA-2010 விழா மலருக்கு படைப்புகள் வரவேற்கப்படுகின்றன...


வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை தொடர்பான செய்திகளுக்கு FeTNA-2010 லேபிளுக்கு சென்று பார்க்கலாம். மேலும் விவரங்கள் http://www.fetna.org/ தளத்தில் கிடைக்கும்.

*****


சுமார் 3000 தமிழர்கள் கூடும் இவ்விழாவில் 'விழா மலர்' ஒன்று வெளியிடப்படும். அம்மலரில் பிரசுரிக்க படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

படைப்புகளுக்கான விதிமுறைகளாக விழாக்குழுவினர் தெரிவிப்பது என்னவெனில் :


*** கதை, கவிதை மற்றும் கட்டுரைப் படைப்புகள் தமிழில் இருக்கவேண்டும். சில ஆங்கிலப் படைப்புகள் தகுதி அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்படும்.

*** சமர்ப்பிக்கப்படும் படைப்புகள் ஒரு குறுந்தலைப்பும், பொருளடக்கம் பற்றிய சிறு விவரிப்பும் கொண்டிருக்கவேண்டும்.

*** 500 வார்த்தைகளுக்கும் குறைவான, முழுப்பக்கப் படைப்புகளுக்கு முன்னுரிமை தரப்படும்.

*** இவ்வாண்டுத் தமிழ் விழாவின் மையக்கருத்தைப் (செந்தமிழால் சேர்ந்திணைவோம் - செயல்பட்டே இனம் காப்போம்) பிரதிபலிக்கும் படைப்புகளுக்கு முன்னுரிமை தரப்படும்.

*** படைப்புகள் பொருள் பொதிந்தவையாகவும், கருத்தூட்டமும் கல்வித்தரமும் கொண்டவையாகவும் இருக்கவேண்டும்.

*** முன்னால் பிரசுரிக்கப்படாத, தனித்தன்மை வாய்ந்த, அசலான படைப்புகளை ஊக்குவிக்கிறோம். பிறர் படைப்புகளின் பிரயோகம் ஊக்குவிக்கப்படாது. அப்படி அவற்றை மேற்கோள் காட்டும்போது தயவுசெய்து மூலப்படைப்பையும் அதன் ஆசிரியரையும் குறிப்பிடவேண்டும்.

*** படைப்புகள் கண்டிப்பாக எவ்விதத்திலும் தவறான கருத்துக்களையோ, அவமதிப்பையோ, அல்லது அநாகரிகத்தையோ பிரதிபலிக்கக்கூடாது.

*** அனைத்துப் படைப்புகளும் மின்னஞ்சல் வாயிலாக malar@fetna2010.org என்ற முகவரிக்கு MS Word (.doc) அல்லது PDF வடிவில் அனுப்பப்படவேண்டும். தேவையான புகைப்படங்கள், ஓவியங்கள் மற்றும் வரைபடங்கள் அனைத்தும் .JPG வடிவில் இருக்கவேண்டும்.

*** அனைத்துப் படைப்புகளும் ஏப்ரல் 30, 2010 வெள்ளிக்கிழமைக்கு முன்னர் எமக்கு வந்து சேர வேண்டும்.

*** கெடு முடிந்தபின்னர் அனுப்பப்படும் படைப்புகள் பிரசுரிக்கப்படா.

*** எந்தப் படைப்பும் பிரசுரிப்புக்கேற்ப எங்களால் மாற்றியமைக்கப்படலாம்.

*** வந்து சேரும் நுழைவுகளின் எண்ணிக்கையைப் பொறுத்துத் தேர்வு செய்யப்பட்ட படைப்புகளே விழா மலரில் பிரசுரிக்கப்படும்.

*** படைப்புகள் குறித்த ஆசிரியர் குழுவின் முடிவுகளே இறுதியானவை.

*** இந்த ஆண்டு சமர்ப்பிக்கப்படும் படைப்புகளிலிருந்து சிறந்த ஆறு தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றுக்கு விழாவில் கலந்துகொள்ளும் தமிழறிஞர் கையால் பரிசுகள் (ஒரு முதல் பரிசு, இரு இரண்டாம் பரிசுகள், மூன்று மூன்றாம் பரிசுகள்) விழாவின் இறுதி நாளன்று வழங்கப்படும்.

*** இந்த அறிவிப்புக் குறித்த கேள்விகள் ஏதேனும் இருப்பின் அவற்றை மின்னஞ்சல் வாயிலாக malar@fetna2010.org என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டுகிறோம்.

*****

சென்ற ஆண்டுகளின் விழா மலர்களுக்கு இங்கே சுட்டவும்.

*****

Read more...

Tuesday, March 16, 2010

ஃப்ரான்ஸுக்கும் வெளிநாட்டுக்கும் போகமாட்டேன்!!!

நான் கடந்து வந்த வாழ்க்கையின் பக்கங்களை திருப்பி பார்த்துக்கிட்டிருந்தபோதுதான், எவ்வளவு பெரிய தவறு ஒன்றை செய்துகொண்டிருக்கிறேன்னு எனக்கு தெரிஞ்சுது. பல வருடங்களுக்கு முன் ஒரு அர்த்த ராத்திரியில் செய்து கொடுத்த சத்தியம் ஒன்றை காப்பாற்ற முடியாமல் போனதை எண்ணி எண்ணி... சரி போதும் விடுங்க. மொத்தம் ரெண்டே ரெண்டு சம்பவங்கள்தான். ஒண்ணொண்ணா படிங்க.

*****

நூலகம், நீச்சல்குளம் (ஒன்லி வேடிக்கை!!), காலை நேரப் படிப்பு, மாலை நேர விளையாட்டு இப்படி எல்லாத்துக்காகவும் மெரினா கடற்கரைப் பக்கமே இருந்த காலம் ஒன்று இருந்தது. அப்போ வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் தபால்தலைகள் சேகரிக்கும் பழக்கம் வேற இருந்தது. பாக்குறவங்க எல்லார்கிட்டேயும் புது தபால்தலைகள் இருக்கான்னு கேட்டுக்கிட்டே இருப்பேன்.

கடற்கரையில் அவ்வப்போது வெளிநாட்டினரையும் பார்க்கலாம். நாங்கள் (இரு/மூவர்) அவர்களை துரத்திச் சென்று “stamp?.. coin?"ன்னு ஆங்கிலத்தில் அவங்களை கேட்டு டெரர் பண்ணியிருக்கோம்.

ஒரு தடவை ஒருவரிடம் வெளிநாட்டு நாணயம் கேட்டு வாங்கி வந்தது ஒண்ணே ஒண்ணு. ஆனால் வீட்டில் முதுகில் கிடைத்தது - குறைந்த பட்சம் பத்து. என் ஆங்கிலப்புலமை மீது அப்பாவுக்கு பலத்த நம்பிக்கை. ச்சின்னப்பையன் பிச்சை கேக்குறான்னு பரிதாபப்பட்டுதான் காசு கொடுத்திருப்பான்னு பயங்கர திட்டு. அன்னிலேந்து காசு கேக்குறத விட்டு, தபால்தலையை கேக்க ஆரம்பிச்சோம்.

கொஞ்ச நாள் கழிச்சி இன்னொருவர் சிக்கினாரு. அவரிடம் போய் நான் எப்பவும் போல் - "sir, which country?"ன்னு கேட்க, அவரோ “france"ன்னு சொன்னாரு. நான் “you have stamp?"ன்னு கேட்க, அவரோ, ‘no no go go'ன்னு கத்த ஆரம்பிச்சிட்டாரு. எனக்கு பயங்கர ஏமாற்றம். வெளிநாட்டுக்கு வர்றவன்கிட்டே தபால்தலை இல்லாமே எப்படி இருக்கும்னு ஒரே கோபம் வேறே. ஒரு பத்தடி தள்ளிப் போய் நின்னுக்கிட்டு, அவரை பார்த்து - “I dont come to france"ன்னு சொல்லிட்டு ஓடி வந்துட்டேன்.

வீட்டுக்கு வந்ததும், அப்பாகிட்டே - வாழ்க்கையிலே நான் கண்டிப்பா ஃப்ரான்ஸுக்கு போகமாட்டேன்னு சொன்னேன்.

அந்த சபதத்தை இது வரைக்கும் காப்பாத்திட்டு வர்றேன்னா பாத்துக்குங்க!!!.

******

இனி அடுத்த சம்பவம். பக்கத்துலே ஏதாவது மிதிவண்டி இருந்தா அதில் ஏறி உக்காந்து சுர்ருன்னு சுத்துங்க. ஒரு பதினைஞ்சு வருடம் முன்னாலே போவோம்.

*****

நண்பர்கள் மொத்தம் மூணு பேரு, நோய்டாவில் வாரந்தோறும் சனிக்கிழமை இரவு இந்தி படத்துக்கு போவோம். ஷாருக், ஐஸ், ஏ.ஆர்.ரஹ்மான் - இந்த மூணு பேர்லே யாராவது ஒருத்தர் இருக்குற படமா பாத்து போவோம். அப்படி எதுவும் கிடைக்கலேன்னா, பாத்த படத்தையே மறுபடி பாக்கவும் தயங்க மாட்டோம். அப்படி பார்த்த ஒரு படம் - ஸ்வதேஸ்.

அமெரிக்கா நாசாவில் (போன வாரம் நம்ம பழமைபேசிகூட போய் ஹெல்மெட் மாட்டி படம் புடிச்சிக்கிட்டாரே, அங்கேதான்!!) வேலை செய்யும் ஷாருக், இந்தியாவில் தன் கிராமம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு, அந்த வேலையையே உதறிவிட்டு, இந்தியாவில் செட்டிலாவதாக படம்.

எங்களோட படம் பார்த்தவர்கள் அனைவரும் சீரியஸாக படத்தைப் பார்த்துக் கொண்டிருக்க, நாங்க மட்டும் படத்தோடு ஒன்றிப் போய், அழுதுகிட்டே உக்காந்திருந்தோம். இரவு சாப்பிட்ட சாப்பாட்டில் காரம் அதிகமாயிடுச்சு போல, அதனால்தான் அப்படின்னு தப்பா நினைக்காதீங்க. படத்துக்கு நேரமாயிடுச்சுன்னு சாப்பிடாமேயே இரவுக் காட்சிக்குப் போயிருந்தோம்.  பசி வேறே - ஷாருக் வேறே செண்டிமெண்டலா டச் பண்ணிட்டாரு. இது எல்லாமுமாக சேர்ந்து எங்களை அழ வெச்சிடுச்சு.

ஒரு வழியா படமும் முடிஞ்சுது. நடுராத்திரியில் நடந்து வீட்டுக்கு வரும்போது ஒரு நண்பர் மட்டும் தேம்பித் தேம்பி அழுதுட்டே வந்தாரு. ‘மச்சான், நாம எல்லாரும் சேர்ந்து ஒரு சத்தியம் செய்யலாமா'ன்னாரு. இந்த ராத்திரியிலா? அப்படி என்ன சத்தியம்னு கேட்டா - ஷாருக் மாதிரியே நாமும் வெளிநாட்டுக்கு போகாமே, இந்தியாவுலேயே இருந்து நம்ம தாய்நாட்டுக்கு சேவை செய்யணும்னு சத்தியம் எடுத்துக்குவோம்னாரு.

மத்த ரெண்டு பேரும் சம்மதிச்சதாலே, எங்க தெரு முனையில், மூணு (நிஜ) நாய்கள் முன்னாலே, நாங்க மூணு பேரும் மேற்படி சத்தியம் செய்துகிட்டோம்.

இது நடந்து இப்போ ஆறு வருஷமாயிடுச்சு. நாங்க மூணு பேரும் அஞ்சு வருஷமா வெளிநாட்டுலே இருக்கோம்.

*****

Read more...

Sunday, March 14, 2010

FeTNA-2010 : தேர் இப்பொழுது மூன்றாவது பல்லிணை சக்கரத்தில்..

பேரவையின் விழாவைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் இன்னொருமுறை இங்கே.

பெயர்:
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை ஆண்டு விழா

எங்கே :
வாட்டர்பரி, கனெக்டிகட் மாநிலத்தில்.

எப்போழுது :
ஜூலை 3 முதல் 5ம் தேதி வரை

இணையதளம் :
www.fetna.org

விழாவிற்கு முன்பதிவு செய்ய :
http://registration.fetna.org

முன்பதிவு தொடர்பான சந்தேகங்களுக்கு :
registration@fetna2010.org

இந்த ஆண்டு விழாவின் நோக்கம் :
செந்தமிழால் சேர்ந்திணைவோம் - செயல்பட்டே இனம் காப்போம்.

கலந்து கொள்ளும் பிரபலங்களின் பட்டியல் :
தற்போது இறுதி கட்டத்தில். கூடிய விரைவில் வெளியிடப்படும்.

*****

விழாவில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்கள் வருகையை மேற்கூறிய சுட்டியை அழுத்தி, இப்போதே முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். ஏப்ரல் 15ம் தேதிக்கு முன், பதிவு செய்பவர்களுக்கு சிறப்புப் பரிசும் காத்திருக்கிறது. தகவல்களுக்கு பேரவை இணையதளத்தைப் பார்க்கவும்.


விழாவில் பங்கேற்கும் அனைவரும் மகிழ்ச்சியுடன் நிகழ்ச்சிகளை கண்டுகளித்து - சுவையான உணவு உண்டு - திருப்தியுடன் திரும்பிப் போய், பல காலம் இவ்விழாவை நினைவு கூறவேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், 20க்கும் மேற்பட்ட குழுக்களாக பிரிந்து, தத்தமது வேலைகளை முனைப்பாக செய்து கொண்டிருக்கின்றனர்.


தன்னார்வலர்கள், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையில் எந்தவொரு சிறு விஷயத்தையும் மறந்துவிடக்கூடாதென்று எல்லாவற்றையும் ஆவணப்படுத்தி - அதை அவ்வப்போது சரிபார்த்து - வரும் சந்தேகங்களுக்கு வாரமொருமுறை கூட்டம் கூடி - மற்றவர்களை ஊக்கப்படுத்தி - ஜனவரி மாதம் முதல் பல்லிணை சக்கரத்திலிருந்த - ஊர் கூடி இழுக்கும் இந்தத் தேரை இப்போது மூன்றாவது பல்லிணை சக்கரத்தில் தள்ளியிருக்கிறார்கள். இன்னும் நாட்கள் செல்லச்செல்ல இந்த தேர் வேகமெடுத்து, ஜூலை மாதம் அனைவரது கூட்டு முயற்சியில் வெற்றிகரமாக ஓடி, தன் நிலையை அடையும் என்று நம்பிக்கை வலுக்கின்றது.

*****

தன்னார்வலர் குழுவில் சேர விருப்பமுள்ளவர்கள் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

*****

இந்த htmlஐ தங்கள் தளத்தில் ஏற்றி, இவ்விழாவைப் பற்றி அனைவரும் அறிந்திட உதவினால் மிக்க நன்றியுள்ளவன் ஆவேன்.

*****

பேரவைக்கான விளம்பரங்களுக்கு நன்றி.http://www.behindwoods.com/

*****

பல்லிணை சக்கரம் = gear.

*****

Read more...

Friday, March 12, 2010

நான் ஒரு சராசரி கணவனா?

ஸ்வாமி சத்யானந்தாவைப் பார்க்க சென்னை மக்களுக்கு இன்னுமொரு வாய்ப்பு கிடைக்கப் போகிறது. ஒரே ஒரு வாரத்திற்கான அந்த பயண விவரங்களை ஆசிரம வெளி'விவகார'த் துறை விரைவில் வெளியிடும்.
ஸ்வாமியை தரிசனம் செய்ய விரும்பறவங்க, வீடியோ காமிராவையெல்லாம் வீட்டிலேயே வெச்சிட்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


தன்மத்ரா, ப்ரமரம் - மலையாளப் படங்களில் இந்த ரெண்டை மட்டும்தான் பாத்திருக்கேன். இதே மாதிரி நம்மை கட்டிப்போடும் மலையளப் படங்கள் (அஞ்சரைக்குள்ள படங்கள் கிடையாது!!!) சிபாரிசு செய்யுங்க. சென்னை வரும்போது டிவிடி வாங்கறேன்னு ஒரு இணைய நண்பர்கிட்டே கேட்டிருக்கேன். நீங்களும் சொல்லுங்க. (அண்ணாச்சி?)

*****

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) ஜூலை மாத விழாவின் வேலைகள் பல்வேறு குழுக்களுக்கு பிரிக்கப்பட்டு தற்போது அனைவரும் முழுவீச்சில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். (அடியேனும்
அதில் ஒருவன். அதனால்தான் சமீபகாலமாக பதிவு போடுவதும் குறைஞ்சிடுச்சு. ட்விட்டர் பக்கமே போறதில்லை).

தமிழார்வலர்களை விழாவில் பங்கேற்குமாறும், அதற்காக இப்போதே இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ளுமாறும் விழாக்குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர். www.fetna.org தளத்தில் அதற்கான விவரங்கள் கிடைக்கும். விழாவைப் பற்றிய விரிவான இடுகை ஓரிரு நாளில்.

*****

தமிழ்ப்படம் - திரையரங்கில் மக்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறாங்க. பயங்கர அருமையா இருக்கு. அப்படி இப்படின்னு பதிவர் விமர்சனங்களைப் படிச்சிட்டு - சரி பாத்துடலாம்னு ஒரு வாரம் பிச்சிபிச்சிப் படத்தைப் பாத்து, மண்டை காஞ்சி போயிருக்கோம். ஓரிரு இடங்களில் சிரிக்க முயற்சித்தடோட சரி.

இதுக்கு டாக்டர் விஜயோட படத்தையோ, அவரது 'பேக்கரி' லொள்ளு சபாவையோ பாத்திருந்தாலே நல்லா சிரிச்சிரிக்கலாம்.

இவ்ளோ பேரு நல்லாயிருக்குன்னு சொல்லி, நான் மட்டும் நல்லாயில்லேன்னு திட்டினா, பிரச்சினை என்கிட்டேதானா? எனக்குதான் நகைச்சுவை உணர்வு குறைஞ்சிக்கிட்டே போகுதா? அடுத்த செய்திக்கும்
இதுக்கும் தொடர்பிருக்குதா? ஒண்ணுமே புரியல.

*****

இங்கே தொலைக்காட்சியில் AFV (Americas Funny Videos) அப்பப்போ போடுவாங்க. நாங்களும் பாத்து சிரிச்சிக்கிட்டே இருப்போம். சஹானா மட்டும் சிரிக்காமே உர்ருன்னு இருப்பாங்க. ஏம்மா சிரிக்கலியான்னு கேட்டா, அந்தப் பையனுக்கு கீழே விழுந்து எவ்வளவு வலிச்சிருக்கும், அந்த விபத்துக்கப்புறம் அந்தம்மா எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்க - அதனால் அது நகைச்சுவையே இல்லே. எனக்கும் சிரிப்பே வரலேன்னுட்டாங்க.

இனிமே விபத்துகளுக்கோ, மக்கள் தவறி விழுந்து அடிபட்டாலோ சிரிப்பதில்லைன்னு முடிவு செய்திருக்கோம்.

*****

ஒன்றுக்கு மேற்பட்ட எண்கள் இருந்தாதான் சராசரியை கண்டுபிடிக்க முடியும்னு எல்லோருக்கும் தெரியும். அப்போ சராசரி கணவனைக் கண்டுபிடிக்க ரெண்டு/மூணு/மூணு+ பொண்டாட்டிங்க இருந்தாதான்
முடியும்னு சொல்றது சரிதானா? அப்போ என்னாலே சராசரி கணவனா ஆகவே முடியாதா? 'அவரு' மட்டும்தான் அந்த கணக்குலே வருவாரா? யாராவது பதில் சொல்லுங்க.

*****

Read more...

Friday, March 5, 2010

கதவை திறக்கவே பயமா இருக்கு...!!!

இங்கே குளிர் காலம் முடியும் தருவாயில் - மதியத்தில் 45 டிகிரி F வெயில் அடிக்க - வீட்டிலிருக்கும்போது கொஞ்சமா ஜன்னல் கதவையும், காரில் போகும்போது கண்ணாடியையும் திறந்துக்குறேன்னா - வீட்டுலே அலர்றாங்க. எந்த கதவையும் நீங்க திறக்க வேண்டாம் - 'எல்லாத்தையும்' மூடிட்டு சும்மா இருங்கன்னு அதட்டல் வேறே.

என் வாழ்க்கை முழுக்க நான் இருட்டறையிலேயே இருந்துடுவேனோன்னு பயமா இருக்கு. கதவையும் திறக்க முடியல. அதனால் காத்தும் வரலே. இதுக்கெல்லாம் ஒரே வழி - ஜெய் ச்சின்னப் பையனானந்தாய நமஹ அல்லது ஜெய் சத்யானந்தாய நமஹ. எனக்கென்னவோ ரெண்டாவது பிடிச்சிருக்கு. உங்களுக்கு?

*****

நாலு வருடம் முன்னாடி என் நண்பர் ஒருவருடன் நடந்த உரையாடல்.

அவர்: வாழ்க்கையில் நிம்மதியே இல்லேப்பா. அதனால் நேத்து ஸ்ரீஸ்ரீஸ்ரீ சாமியார்கிட்டே போயிருந்தேன். இப்போ கொஞ்சம் பரவாயில்லை போலிருக்கு.

நான்: அட, ஒரே நாள்லேயே நிம்மதி வந்துடுச்சா. ஏதாவது காசு செலவழிச்சியா இல்லே இலவசமா நிம்மதி கொடுத்தாரா?

அவர்: இலவசமா யாரு நிம்மதி தர்றா? ரூ.25,000 செலவழிச்சேன்.

நான்: #$%##$%% அடப்பாவி, அங்கே போய் ரூ.25,000 செலவழிச்சதுக்கு, அந்த பணம் தேவையாயிருக்குற எவ்வளவோ பேர் இருக்காங்க. அவங்களுக்கு கொடுத்திருந்தா வாயார வாழ்த்தியிருப்பாங்க. அதுலேயே உனக்கு நிம்மதி வந்துருக்குமே.

அவர்: அவரு கடவுளை காட்டுறேன்னு சொன்னாரு. அதுக்காகத்தான் போனோம்.

நான்: (மறுபடி $%#$%%). அவர் சொன்னா, நீ நம்பிடுவியா?. சரி ஒரே ஒரு உதாரணம் சொல்றேன். தபால்காரர் ஒரு தந்தி வந்து கொடுக்குறாரு. "பாட்டி சீரியஸ். ஸ்டார்ட் இம்மீடியட்லி". தந்தி கிடைச்சவுடன், நீங்க பாட்டி வீட்டுக்கு போவீங்களா? இல்லே, தபால்காரர் வீட்டுக்கு போய் அழுவீங்களா?

அவர்: இதென்ன கேள்வி? தபால்காரர் வீட்டுக்கு எதுக்கு போகணும்? நான் என்ன லூசா?

நான்: அதை என் வாயால சொல்லணுமா? அந்த தபால்காரர் மாதிரி இந்த சாமியார்களும் ஒரு மிடில்மேன்தான். அவர் பாட்டியை காட்ட மாட்டாரு. நீயாதான் பாட்டி வீட்டுக்கு போகணும். புரியுதா?

*****

சென்னையில் வீட்டுலேயும் சரி, நண்பர்கள் சொன்னதும் சரி - ரெண்டு மூணு நாளா சன் டிவி போடவே பயமா இருக்கு - ஒரே மேட்டரா காமிச்சிட்டிருக்காங்க.

நான் சொன்னது - "இதுக்கு முன்னாடியும் அப்படித்தான். முன்னாடி ஏதாவது போட்டி, பாராட்டு விழான்னா குத்தாட்டம் காட்டுவாங்க. அதை ரசிச்சி பாத்துட்டிருந்தீங்க. இப்பொ நித்தி மேட்டரில் போட்டி எதுவும் இல்லேன்றதால், பயங்கர போரடிக்குது - பயமா இருக்குதுன்னு எதையாவது சொல்றீங்க. இன்னும் ஏதாவது ஒரு சாமியாரோட நகர்படமும் வந்துடுச்சுன்னா, அதை போட்டி மாதிரி செட் பண்ணி போடுவாங்க. அப்போ பாருங்க. நல்லாயிருக்கும்".

*****

எங்க வீட்டுலே தமிழ் சேனல்களை வாங்காமே இருக்க முன்னாடி தொலைக்காட்சி தொடர்கள் காரணமாயிருந்துச்சு. இப்போ சன் டிவி - மேட்டர் டிவி ஆனதிலிருந்து அடுத்த ஒரு வருடத்திற்கு அந்த முடிவில் மாற்ற்மில்லை. காசும் மிச்சம். நிம்மதிக்கும் பங்கமில்லை.

*****

சரி விடுங்க. எவ்ளோ மோசடி சாமியார் வந்தாலும் மக்கள் திருந்தப் போறதில்லே. காசை கொண்டு அங்கே கொட்டத்தான் போறாங்க. நான் ஸ்ரீஸ்ரீ சத்யானந்தாவாக ரெடி. கிளைகள் திறக்கணும்றவங்க மின்னஞ்சல் பண்ணுங்க. பதிவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஒவ்வொரு பில்லிலும் 10% கமிஷன். அப்படியே ஏதாவது ஒரு பல்கலைக் கழகத்தை பிடிங்கப்பா. நிறைய வேலை இருக்கு. நான் கிளம்பறேன். வர்ட்டா?

*****

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP