Friday, February 26, 2010

திருதராஷ்டிரருக்கு செலவு ரூ.50,000!!!

என்னடா இடுகை இது, சம்மந்தா சம்மந்தம் இல்லாமே இருக்கேன்னு நினைக்காதீங்க. சம்மந்தப்படுத்தி படிச்சி பாருங்க. புரியும்!!!

*****

அமெரிக்கா வந்த புதுசுலே, இங்கே இருக்கும் ஒரு நண்பர்கிட்டேயிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது - Its Blue! - அப்படின்னு. எனக்கு பேரதிர்ச்சி. அட, நேத்திக்கு நாம சுடர்மணி வாங்கினது இவருக்கு எப்படி தெரிஞ்சுது. அதுவும் கலர் வேறே சரியா சொல்றாரே? - போட்டுக்கும்போது ஒளிஞ்சிருந்து பார்த்திருப்பாரோன்னு சந்தேகப்பட்டு - நண்பருக்குத் தொலைபேசினா - அவருக்கு குழந்தை பொறக்கப் போகுதுன்னும் அது ஆண் குழந்தைன்னும் சொன்னாரு.


இங்கே இவங்களுக்கு கள்ளிப்பால் பிரச்சினை இல்லாததாலே, என்ன குழந்தைன்னு மொதல்லேயே சொல்லிடறாங்க. (மொதல்லேயேன்னா... மொதல்ல்ல்ல்ல்லேயே இல்லே. நாலைஞ்சு மாசம் ஆனப்புறம்தான்!!!). ஆண் குழந்தைன்னா blue; பெண் குழந்தைன்னா pink. மக்களும் அதுக்குத் தகுந்தாற்போல பொருட்களை தயாரா வாங்கி வெச்சிடறாங்க. அப்புறம் வாழ்க்கை முழுக்க - ஆம்பளைங்கன்னா ஆம்பள கலர், பொம்பளைங்கன்னா பொம்பள கலர்தான். மாத்தி வாங்கி வந்துட்டா ஒரே கலாட்டாதான் வீட்டுலே.


ஒரு தடவை சஹானா, நீலம் மாதிரி ஒரு குளிராடை போட்டு பள்ளிக்குப் போயிட்டு, பசங்கல்லாம் கிண்டல் பண்ணிட்டாங்களாம் - வீட்டுக்கு வந்து மொதல்லே அதை தூக்கிப் போட்டாதான் ஆச்சுன்னு அழுகை. இங்கே நிறைய இடத்துலே பழைய துணிகளை அன்பளிப்பா வாங்கிக்க கூண்டு வெச்சிருப்பாங்க. அன்னிக்கே போய், அந்த குளிராடையை ஒரு கூண்டுலே போட்டபிறகுதான் நிம்மதி ஆச்சு.


அதே மாதிரி விளையாட்டு பொருட்கள். பெண் குழந்தைகள்னா - டோரா. ஆண் குழந்தைங்கள்னா - டோராவோட ஒண்ணு விட்ட சகோதரன் டியகோ. இதுலேயும் மாத்தி விளையாட முடியாது. மாஆஆஆனப் (மாஆஆஆன = பெரிய மான) பிரச்சினையாயிடும். போன தடவை இந்தியா போயிருந்தபோது ஒரு பையனின் பிறந்த நாள் விழாவுக்குப் போயிருந்தோம். பிறந்த நாள் கேக்லே டோரா. சஹானாவோட கேள்வி - ராகுலோட பிறந்த நாளைக்கு டியகோ கேக் வாங்காமே ஏன் டோரா கேக் வாங்கறாங்க. அவன் திட்ட மாட்டானா?.


நிற்க. (ஏற்கனவே நின்றிருந்தால், உங்கள் வசதி எப்படியோ அப்படியே செய்க...) மறுபடி குழந்தை - மருத்துவமனைக்கே போவோம்.


இங்கே மருத்துவமனைக்கு போனால்லாம், 'டிப்ஸ்' கொடுக்கறது நம்ம இஷ்டம்தான். கட்டாய அன்பளிப்பு கிடையாது. சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் ஒரு அரசு மருத்துவமனையின் 'அன்பளிப்பு' பட்டியல் வெளிவந்ததை பாத்திருப்பீங்க. ஆம்பள புள்ள பொறந்தா ரூ.500, பொம்பள புள்ள பொறந்தா ரூ.400 - அப்படின்னு.


ஒண்ணு ரெண்டு பெத்து வெச்சிக்கிட்டிருக்கிற நமக்கே இவ்ளோ காசு கேக்கறாங்களேன்னு இருந்தா - நம்ம தல திருதராஷ்டிரருக்கு எவ்ளோ கஷ்டம் இருக்கும். ஒவ்வொரு தடவை மருத்துவமனை போகும்போதும்
காசு கொடுத்துக்கிட்டே வந்தா 100வது குழந்தை பொறந்தபிறகு அவரோட மொத்த அன்பளிப்பு ரூ.50,000 ஆயிருக்கும். அது சரி, அவரு ராஜா, தாராளமா கொடுக்கலாம். ஆனா, நம்ம மக்கள் - பாவம்தானே.


மறுபடி நிற்க. ஒரு ச்சின்ன கற்பனை - திருதராஷ்டிரர் அரசியல்வாதியானால்!!!


1. இணை அரசர், துணை அரசர், இணை-இணை, துணை-துணை அப்படின்னு ஒரு ஐம்பது பேராவது அரசர் பதவியில் இருந்திருப்பாங்களா ?


2. ஒவ்வொருத்தரா வரிசையா அரசராயிட்டே வந்தா, அந்த 100வது மகன் எந்தக் காலத்துலே அரசராவது?


3. இல்லே அஸ்தினாபுரத்தை 100ஆ பிரிச்சி எல்லோரும் அரசரா ஆயிடுவாங்களா?


4. ஸ்விஸ் பாங்க் கிளை ஒண்ணு அஸ்தினாபுரத்துலே திறந்திடுவாங்களா? தனித்தனியா 100 அக்கவுண்ட், அப்புறம் கண்டிப்பா சில பசங்க கூட்டா வேறே அக்கவுண்ட் வெச்சிருப்பாங்க. அதனால், குறைந்த பட்சம் 200 அக்கவுண்டாவது வெச்சிருப்பாங்களா?


5. 100 பசங்கன்னா, பேரப்புள்ளைங்க 200ன்னு வெச்சிக்குவோம். அப்போ, 200 திரைப்பட நிறுவனங்களா?


6. இவ்ளோ நிறுவனங்கள் இருந்தா, படம் எடுக்க கதைக்கு எங்கே போவாங்க? உல்டா, உல்டாவுக்கு உல்டா இப்படியே எடுத்திட்டிருப்பாங்களா?


7. கௌரவ நாடு கௌரவர்களுக்கே - அப்படின்னு ஒரு இயக்கம் ஆரம்பிப்பாங்களா? ஆரம்பிச்சாலும், அவங்க பசங்களை சண்டைப் பயிற்ச்சிக்காக பாண்டவர்கள் பள்ளியில் சேத்துடுவாங்களா?


அவ்ளோதாம்பா இடுகை. துவக்குக நல்லிசையை!

*****

Read more...

Friday, February 19, 2010

கலர் பாக்கத் தெரியாதது ஒரு பெரிய குற்றமா?

இந்த அநியாயத்தை நீங்களே கேளுங்க. எல்லோரும் அவங்க வீட்டு ஆம்பளைங்க கலர் பாக்கறாங்கன்னு தெரிஞ்சா உண்டு இல்லேன்னு பண்ணிடுவாங்க. இங்கே அதுக்கு உல்டா. எனக்கு கலரே பாக்கத் தெரியலேன்னு திட்டு விழுது. அப்படி ச்சின்ன வயசுலே என்னதான் பண்ணினீங்கன்னு கேள்வி கேக்குறாங்க.. விஷயம் என்னன்னா...

******

மூணு நாளைக்கு முன்னாடி நண்பர் ஆதி ஒரு இடுகையில் என் பேரை குறிப்பிட்டு எழுதியிருந்தாலும், இணைப்பு ஆரூராருக்கு கொடுத்திருந்தார். நண்பர்கள் சொல்லியும் திருத்தாதலே, எனக்கு வரவேண்டிய ஆயிரக்கணக்கான ஹிட்ஸை திசை திருப்பி விட்டுட்டாருன்னு நான் சொன்னா, அவர் பதில் என்ன என்பதை கனம் பதிவர்கள் முன் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

(ஹிஹி. ஆதி. நோ டென்சன். ச்சும்மா ஜாலிக்குதான். ஆனா இந்த வாரயிறுதியில் நிமிஷத்துக்கு ஒரு தடவைன்னு இரவு முழுக்க பூச்சாண்டியில் F5 தட்டி கணக்கை சரிப்படுத்திடுங்க. சரியா?.)

******

இந்த வருடம் பள்ளி ஆரம்பித்து 100 நாட்கள் ஆனதையொட்டி சஹானாவின் பள்ளியில் 100 பொருட்களை வைத்து ஏதாவது செய்து கொண்டுவாங்கன்னு சொல்லிட்டாங்க. அன்னிக்கு ஆரம்பிச்சு அடுத்த மூணு நாள் ஒரே குழப்பம்தான். என்ன பண்றதுன்னே தெரியல. இணையத்துலே / நண்பர்கள்கிட்டே / அங்கே இங்கேன்னு எல்லாத்திலேயும் கேட்டு / தேடிட்டோம்.

100 ஒரு பைசா காசுகளை வெச்சி ஏதாவதொரு படத்தை வரையலாம்.
100 ச்சின்ன வளையங்களை வெச்சி ஏதாவது செய்யலாம்.
100 பேப்பர் க்ளிப்களை வெச்சி ஒரு மிருகம் செய்யலாம்.

இப்படியெல்லாம் யோசிச்சிட்டிருந்தோம்.

இணையத்துலே ஒருத்தரு சொல்லியிருந்தாரு - 100 மனித உறுப்புகளை வரிசையா ஒரு அட்டையில் எழுதி கொடுத்துடலாம்னு. யோசனை
நல்லாதான் இருந்தது. ஆனா மனித உடம்புலே மொதல்லே 100 உறுப்புகள் இருக்கான்னே எங்களுக்கு தெரியல. எல்லா உறுப்புகளையும் சொல்லப் போய் பிறகு பள்ளியில் ஏதாவது ரசாபாசமாயிடப் போகுதுன்னு அதையும் வேணான்னு சொல்லிட்டேன்.

எனக்கு ஒரு ஐடியா வந்துச்சு(!!). பூச்சாண்டியிலிருந்து 100 இடுகைகளை அச்செடுத்து வரிசையா புத்தகம் மாதிரி அடிச்சி கொடுத்துட்டா, பள்ளியில் எல்லோரும் அதை படிச்சி தெளிவடைஞ்சிடுவாங்கன்னு சொன்னேன். அடுத்த நாள் வரைக்கும் வீட்லே யாருமே என்னோட பேசலே. ஏன்னு தெரியல.

பேசிக்கிட்டிருக்கும்போது தங்ஸ் ஒரு ஐடியா சொன்னாங்க. 100 மிருகங்கள்/ பறவைகள் படங்களை இணையத்திலிருந்து சுட்டு, வரிசையா ஒட்டி கொடுத்துடலாம்னாங்க. நிறைய நேரம் தேடியும் 100 விதமான மிரு/பற படங்கள் கிடைக்கவேயில்லை. சுமார் 75 வரைக்கும்தான் கிடைச்சது. என்ன பண்றதுன்னாங்க. பேசாமே 50 புலி மற்றும் 50 சிங்கம் இதோட படங்களை
ஒட்டிடலாம் - மொத்தம் 100தானேன்னு சொன்னேன். ம்ஹும். நோ பேச்சு. நோ மூச்சு.

இன்னொரு முழு நாள் செலவழிச்சி 100 மிரு/பற படங்களை சேகரித்து, அதை ஒரு பெரிய தாளில் ஒட்டி கஷ்டப்பட்டு முடிச்ச அந்த ப்ராஜெக்டை படமே எடுக்காமே பள்ளியில் கொண்டு கொடுத்துட்டோம். அதனால் இணையத்திலும் போட முடியல. :-((

*****

போன வாரம் ஒரு நாள் எங்க ஊர்லே நடந்தது இது. காலையில் கடுமையான பனிப்பொழிவு, மதியம் நல்ல வெயில், பிற்பகல் சூப்பரா மழை, மாலையில் புயற்காற்று. ஒரே நாள்லே நாலு விதமான வானிலை மாறுதல்கள்.

அடுத்த நாள் பேசும்போது நண்பர் ஒருத்தர் - 2012ம் ஆண்டுக்காக கடவுள் இப்போதே தயாராயிட்டாரு. அதுக்கான ஆயத்த வேலையாதான் நம்ம ஊருக்கு வந்து இப்படி ஒரே நாள்லே எல்லாத்தையும் கொடுத்து டெஸ்ட் பண்றாரு - அப்படின்னாரு.

அவ்வ்.. எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா... முடியல..

*****

பச்சை, மஞ்சள், சிகப்பு, கறுப்பு - இப்படி பல வண்ணங்கள் நம்ம அரசியல்வாதிகள் புண்ணியத்துலே தெரிஞ்சிக்கிட்டாலும், இந்த பர்பிள், ஆரஞ்ச், பிங்க் இப்படி சில வண்ணங்களை சஹானா கேக்கும்போது தப்புதப்பா சொல்லி திட்டு வாங்குவேன். அப்புறம், குழந்தைங்க புத்தகத்தை பாத்து இந்த மாதிரி நிறைய வண்ணங்கள் பேரை தெரிஞ்சிக்கிட்டேன்.

பிரச்ச்சினை இதோட முடிஞ்சுதுன்னு நீங்க நினைச்சா அது தப்பு.

அடுத்த கட்டமா - பச்சையும் மஞ்சளும் கலந்தா என்ன வரும், சிகப்பும், பிங்கும் கலந்தா என்ன வரும் - அப்படின்னெல்லாம் கேக்க ஆரம்பிச்சிட்டாங்க. இதையெல்லாம் எப்படி கண்டுபிடிக்கறது சொல்லுங்க. எதையாவது குத்து மதிப்பா சொன்னா, கண்டிப்பா அது தப்பாதான் இருக்குது. நான் என்ன செய்யறது? கலர் பாக்கத் தெரியாதது என் தப்பா?

*****

Read more...

Friday, February 12, 2010

தட்டச்சு நிலைய நினைவுகள்! (தொடர் பதிவு)

நம்மையும் ஒரு ஆளா மதிச்சி தொடர் ஆட்டத்தில் சேர்த்த அண்ணன் ஆதிக்கு நன்றி. எல்லாரும் காலச்சக்கரத்துலே ஏறி காலவண்டியில் உக்காந்துக்கோங்க. நாம பின்னோக்கி போறோம். ரெடியா?

******

அந்த காலத்துலே (உடனே 18ம் நூற்றாண்டான்னு கேக்கப்படாது. கொஞ்ச வருடத்துக்கு முன்னாலேதான்) பத்தாவது தேர்வு எழுதியவுடன் பசங்களை அன்றே தட்டச்சு பயிற்சிக்கு சேர்த்து விட்டுடுவாங்க. அப்படித்தான் என்னையும் ஒரு நல்ல நாள் மாலை 4 மணிக்கு சென்னை திருவல்லிக்கேணியில் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு இடத்துலே கொண்டு போய் சேத்தாங்க.


ஏற்கனவே ஸ்கூல் லீவு. அதிலேயும் மாலை நேரம். நானும் தூக்கக் கலக்கத்தில், பயிற்சிக்கு வர்றவங்களும் தூங்கி வழிஞ்சிக்கிட்டு - பின்னணியில் வயலின் வாசிக்கிட்டு திரைப்படங்களில் வரும் சோகக் காட்சி போல் அனைவரும் அமைதியா லொட்டு லொட்டுன்னு(!!!) தட்டிக்கிட்டே இருப்பாங்க. பக்கத்தில் இருக்கும் அக்காவோட(!) பேசலாம்னா, அங்கிருக்கும்
மேற்பார்வையாளர் - என்னப்பா, ஏதாவது பிரச்சினையான்னு பக்கத்துலே வந்துடுவார். இப்படியே பயங்கர போரடிச்சி, ஒரே வாரத்துலே வீட்டுலே சொல்லாமலேயே தட்டச்சுலேந்து நின்னுட்டேன்.


அந்த நிலைய உரிமையாளர் எங்கப்பாவுக்கு தோஸ்து - போட்டுக் கொடுத்தே பேர் வாங்கும் புலவர் போல பேர் வாங்கிட்டார். மறுபடி பயிற்சிக்கு போகச் சொல்லி வீட்டுலே சத்தம்.


இந்த முறை காலையில் 6 மணிக்கு. இப்போ வயலினுக்குப் பதிலா பியானோ. ட்ரொய்ங்ங்ங்ங்... எல்லா கீயையும் வரிசையா வாசிட்டுட்டு அப்படியே கொஞ்சம் மேலே அண்ணாந்து பாருங்க. மடை திறந்து தாவும் நதியலை நான் - மனம் திறந்து கூவும் சிறுகுயில் நான்.. அப்படின்னு பாடாத குறைதான்.


6 மணி வகுப்புக்கு 5.45 மணிக்கு கடை திறப்பாங்க. நான் 5 மணிக்கே எழுந்து 5.30 மணிக்கு போய் நின்றிருப்பேன். சொல்லிக் குடுக்குறது எதையும் மிஸ் பண்ணிடக்கூடாது பாருங்க. அதனால்தான்.

ஒரு வழியா 6 மணி ஆனவுடன், கண்ணு ரொம்ப குளிர்ச்சி அடைய ஆரம்பிச்சிடும். அட அதிகாலை பனிமூட்டத்துலே அப்படி ஆயிடும்னு சொல்ல வந்தேங்க. வேறொண்ணுமில்லே. அப்புறம் 9 மணியானாலும் வீட்டுக்கு வரவே மனசு வராது. ஆனா எதையாவது சாப்பிட்டாகணுமேன்னு வேண்டா வெறுப்பாக திரும்பி வருவேன்.


அஞ்சாவது வரைக்கும் என்கூட படிச்ச ஒரு பொண்ணும் அங்கே டைப் அடிக்க வந்திருந்தாங்க (தற்கால மரியாதை). அஞ்சு வருஷம் கழிச்சி பாத்ததுலே ரொம்ப நேரம் பேசினோம். பேசினோம். பேசிக்கிட்டே இருந்தோம். கூடவே சேர்ந்து தட்டச்சினோம். சேர்ந்து சுருக்கெழுத்து கற்றோம். ஒரு ரெண்டு வருஷம் ஜாலியா போச்சுது.


அந்த காலவட்டத்துலே (அல்லது கட்டத்துலே) வீட்டை விட்டு எங்கே போனாலும் சம்மந்தமேயில்லாமல் அவங்க தெரு வழியா போறது பழக்கமாச்சு. புது சட்டை, புது பேண்ட், புது கைக்குட்டை அப்படின்னு புதுசா எது வாங்கினாலும் மொதல்லே அதை காட்டறதுக்கு எங்கே போவேன்னு உங்களுக்கு சொல்ல வேண்டியதேயில்லே. நல்ல வேளை நான் சாதா மேனா இருந்தேன் - அதுவே சூப்பர் மேனா இருந்திருந்தேன்னா, இன்னும் எதையெல்லாம் காட்டியிருப்பேன்னு நினைச்சி... பாக்காதீங்க. நல்லாயிருக்காது!!!.


இதுக்கு மேலேயும் ஆர்வத்தில் நான் ஏதாவது சொல்லப்போக அப்புறம் வீட்டுலே டின்னுதான்னு நினைவுக்கு வர்றதால் நேரா முடிவுரைக்கு வந்துடறேன்.


அப்படியே வேக-முன்சுற்றி (ஃபாஸ்ட் ஃபார்வர்ட்) செய்துடுங்க. அதுக்கப்புறம் இவ்ளோ வருஷத்துலே நடுவில் அவங்களை ரெண்டு மூணு தடவை பார்த்து பேசினாலும், பழைய நட்பை மறக்காமல் ஒருமையிலேயே அழைத்து பேசினார் என்பது என்றைக்கும் மறக்க முடியாத விஷயமாகும்.

*****

Read more...

Thursday, February 11, 2010

ஃபெட்னா - முன்னேற்பாடுகள் குறித்து - 2/11/2010

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் ஆண்டு விழாக்கூட்டம் பற்றி முன்னாடியே சொல்லியிருக்கேன். வரும் ஜூலை மாதம் 3 - 5 வரை வாட்டர்பரி, கனெக்டிகட் மாகாணத்தில் நடைபெறுகிறது.

பேரவை பற்றிய ஒரு சிறு குறிப்பு:

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையானது - வட அமெரிக்காவில் இருக்கும் பல்வேறு தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைக்கும் லாப நோக்கமற்ற ஒரு கூட்டமைப்பு ஆகும்.

1987ம் ஆண்டு 5 உறுப்பினர்களுடன் துவக்கப்பட்ட இந்த பேரவை, தற்போது அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் 40 தமிழ்ச் சங்கங்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது.

பேரவை ஆண்டு விழாவின் நோக்கமானது - தமிழ் மக்கள் தமது தமிழுணர்வை மேம்படுத்திக் கொள்ளவும், உரிமையை நிலை நாட்டுவதற்கும், தமிழின் வளர்ச்சிக்கு உதவுவதே ஆகும். இதே நோக்கங்களுடன் பேரவை விழாக்கள் 1987 முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றது.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள பேரவையின் 23ம் ஆண்டு விழா, அமெரிக்கத் தமிழ் மக்களின் வரலாற்றிலேயே பெரியதொரு விழாவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்திற்கு 2,000க்கும் அதிகமான தமிழர்கள் வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விழாவை வெற்றியடையச் செய்யும் நோக்கத்துடன், 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் - 20க்கும் மேற்பட்ட குழுக்களாக பிரிந்து சுமார் ஆறு மாத காலம் உழைக்கிறார்கள். இந்த ஆண்டு விழாவிற்கான வேலைகள் தற்போது முழுவீச்சில் துவங்கியிருக்கின்றது.

அடிக்கடி நடக்கப்போகும் இந்த தன்னார்வலர்களின் முதல் கூட்டம் சென்ற மாதம் 31ம் தேதி நடைபெற்றது. அதைப் பற்றிய செய்திக்கு இங்கே சுட்டவும்.

தற்போது இந்த விழாவிற்கு இணையத்தில் பதிவு செய்யும் வசதி துவக்கப்பட்டிருக்கிறது. பதிவு / நன்கொடை கட்டண விவரங்களுக்கு இங்கே சுட்டவும்.

இன்றே முன்பதிவு செய்து - விழாவிற்கு பெருமளவில் வருமாறு பேரவையின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

Read more...

Wednesday, February 10, 2010

உப்புமா - ஒரு விமர்சனம்!

என்னங்க - உப்புமா சாப்பிடும்போது கூட கணிணியில் அப்படி என்னதான் அடிக்கிறீங்களோ? சாப்பிட்டு பிறகு அடிக்கக் கூடாதா?



ம்?



நான் பேசறதாவது காதுலே விழுதா? இல்லையா?



ம். ம். விழுதும்மா. அதான் சாப்பிட்டுட்டு இருக்கேன்ல. கணிணியில் அடிக்கறதும் அதைப் பத்திதான்.



அதைப் பத்திதான்னா? உப்புமாவைப் பத்தியா?



ஆமா.



என்னத்தையோ அடிச்சித் தொலைங்க. அதை சாப்டுட்டு அடிக்க வேண்டியதுதானெ? அப்படி என்ன அவசரம்?



விமர்சனமெல்லாம் லேட் பண்ணக்கூடாதும்மா. படம் பாக்கும்போது, ஏதாவது கூட்டத்தில் இருக்கும்போது, இப்படி ஏதாவது சாப்பிடும்போதெல்லாம் உடனுக்குடன் விமர்சனம் போட்டாதான் அந்த விமர்சனத்துக்கே ஒரு மரியாதை.



என் உப்புமாவைப் பத்தி ஊர் உலகத்துக்கு சொல்றதுக்கு முன்னாலே என்கிட்டே மொதல்லே சொல்லுங்க. நல்லாயிருக்கா? நல்லா இல்லையா?



இப்படி ஓரிரு வார்த்தையில் கேட்டா எப்படி? விரிவா கேக்க மாட்டியா?



விரிவாவா? இந்த உப்புமாலே விரிச்சு சொல்றதுக்கு என்ன இருக்கு? சரி. சொல்லுங்களேன். கேட்டுத்தான் பாப்போம்.



காலாட்டிக்கிட்டு மானாட மயிலாட பாத்துக்கிட்டு அப்பப்போ நீ எடுத்து சாப்பிடணும்ன்றதுக்காக பாவம் அந்த அரிசியும், உளுந்தும் கிரைண்டர்லே பாறாங்கற்களுக்கு நடுவிலே அடிபட்டு இடிபட்டு அரைபட்டு நசுங்கிப் போகுதே.. அதைப் பத்தி நாம ஒரு நாளாவது நினைச்சி பாத்திருப்போமா?



அதைப் பத்தியே நினைச்சிட்டிருந்தா இட்லி எப்படி கிடைக்கும்? அது சரி. உப்புமா பத்தி சொல்றேன்னுட்டு இட்லியை பத்தி சொல்றீங்களே?



பேசாமே நான் சொல்றத கேளு. ஒரு ஃப்ளோவா வரும்போது நடுவில் பூந்து கலைச்சிடாதே.



உங்களுக்கு என்னமோ ஆயிடுச்சு. ராத்திரி பூரா கண்முழுச்சி கம்ப்யூட்டர்லே கண்டதையும் படிக்காதீங்கன்னு சொன்னா கேட்டாதானே? நாளைக்கே அப்பாவை வரச்சொல்றேன்.



அடித்தட்டுலே இருந்தாலே வாழ்க்கை பிரச்சினைதானா? பாருங்க இந்த அடித்தட்டு இட்லியை. மேல்தட்டினால் அமுக்கி, சுருக்கி, தட்டி வைக்கப்படுகிறதே? கடைசியில், அதுவும் சரியில்லையென்று சொல்லி அதை பிசைந்து உப்புமாவாக மாற்றப்படும் கொடுமைக்கு முடிவே கிடையாதா?



ரைட்டு விடுங்க. இனிமே ஒரே ஒரு தட்டுலே மட்டும் மாவு ஊத்தி இட்லி வைக்கிறேன். எனக்கென்ன. சாப்பிடறதுக்கு நீங்கதான் ரொம்ப நேரம் வெயிட் பண்ணனும்.



அழுக்கா ரவா..



ஆமாங்க. எப்படி கண்டுபிடிச்சீங்க. ரவாலே பூச்சி வந்துடுச்சு. அதை சுத்தம் பண்ணனுமேன்னுதான் இட்லியை உப்புமாவா மாத்திட்டேன்.



அட. நான் உன்கிட்டே பேசலே. அடுத்த பதிவுக்கு ஒரு ஐடியா வந்துச்சு. அதைத்தான் சொல்லி பாத்துக்கிட்டேன். அழுக்காறு அவா வெகுளி... இது திருக்குறள்மா.



எனக்கு நாளைக்கு நிறைய வேலை இருக்கு. பக்கத்து ஆஸ்பத்திரியில் ஏதாவது ஒரு டாக்டர்கிட்டே உடனடியா அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்குதான்னு பாக்கணும். இப்போதைக்கு சீக்கிரம் தூங்கறதுக்கான வழியைப் பாருங்க.



ஏய் ஏய். ச்சே.. முழுசா கேக்காமே போயிட்டா. சரி. நீங்களாவது எனக்குத் தொலைபேசுங்க. இணையத்துலே போடறதுக்கு முன்னாடி உப்புமா விமர்சனத்தை உங்களுக்குப் படிச்சிக் காட்டுறேன். என்ன ஹலோ.. ஏன் பதிவை மூடுறீங்க? ஹலோ ஹலோ.



Read more...

Tuesday, February 2, 2010

என்னோட முகப்பு அட்டை வேணுமா?


நான் வேலை பாக்குற (நல்லா பாருங்க.. செய்யுற இல்லே!) கம்பெனியில் எனக்கு முகப்பு அட்டை(அட...விசிட்டிங் கார்டுதான்!) கொடுப்பாங்கன்னு நானும் பொறுத்து பொறுத்துப் பாத்தேன். அவங்க கொடுக்கறா மாதிரியே தெரியலே.



திடீர்னு ஒரு நாள் ஒரு இணைய தளத்துலே 250 அட்டைங்க இலவசமா அச்சடிச்சி தர்றேன்னு சொன்னாங்க. ஓசின்னா நம்ம என்ன செய்வோம்னு தெரியும்தானே? மொதல்லே போய் வாங்கினேன். அதோட மின்வடிவம்தான் இங்கன போட்டிருக்கேன்.



அட்டைங்க கைக்கு வந்தப்புறம் கால் கால் புரியல (தலைகால் புரியாததால் தலையையும் காலா நினைச்சிட்டேன்!). சாதாரணமா கை கொடுத்து ‘ஹலோ' சொல்றவங்களுக்கு - இடைத்தேர்தல்லே நம்ம அரசியல்வாதிங்க ஆரத்தி எடுக்குறவங்களுக்கு 1000 ரூபாய் நோட்டை மடிச்சி கொடுக்குறாப்பல - டக்குன்னு என்னோட முகப்பு அட்டையை எடுத்து நீட்டிக்கிட்டிருந்தேன். அதனால், அடிக்கடி குளம்பி சாப்பிட என் இடத்துக்கு வரக்கூடிய நண்பர்களெல்லாம், என் அட்டைத் தொல்லைக்கு பயந்து, அந்தப் பக்கம் வர்றதையே நிப்பாட்டிட்டாங்க.



ஏதோ ஒரு படத்துலே வடிவேலு கதை சொல்ல ஆரம்பிச்சி அதை முடிக்கும்போது கட்டிலோட எல்லாரும் காணாமே போற மாதிரி, என்னோட முகப்பு அட்டையோட அருமை பெருமைகளை பல நாட்கள் நான் தனியாவே பேசியிருக்கேன்!!!.



இதாவது பரவாயில்லை - வீட்டுலே சஹானாவே அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை - அப்பா, எனக்கு நீ அட்டை கொடுத்து ரொம்ப நேரமாயிடுச்சுன்னு சொல்லி என்னை ஓட்டிக்கிட்டிருந்தான்னா பாத்துக்குங்க.



ஒரு நாள் ஒரு நண்பர் வீட்டுலே குழுக்கூட்டம் நடந்துச்சு. மொத்தம் சுமார் 15 பேர் இருந்தாங்க. எல்லாருக்கும் ஒண்ணு கொடுத்துட்டு - மறக்காமே தொலைபேசுங்க.. நம்ம தளத்துக்கும் வந்துடுங்கன்னெல்லாம் சொல்லிட்டு வந்தேன். வீட்டுக்கு வந்துட்டு, நானும் பூச்சாண்டியிலே F5 அடிச்சி அடிச்சி பாக்குறேன் - ஒரே ஒரு ஹிட்டு கூட காணோம். அடப்பாவி பசங்களா - நான் என்ன துட்டா கேட்டேன் - வெறும் ஹிட்டுதானே கேட்டேன். அதுகூட தரலியேன்னு வருத்தப்பட்டு தூங்கப் போனேன். அடுத்த நாள் கூட்டம் நடந்த வீட்டு நண்பர் சொல்றாரு - எல்லாரும் போனப்புறம் வீட்டை சுத்தம் பண்ணா - என்னோட அட்டைங்க சுமார் 25 கிடைச்சுதாம். மக்கா எவனுமே வீட்டுக்கு எடுத்துப் போகலே. அந்த வீட்டுலேயே - நாற்காலி, சோஃபா இதுக்கு கீழேயும், அங்கங்கே கிடைச்ச சந்துலேயும் அட்டையை சொருவிட்டு போயிட்டிருக்காங்கன்னு அப்புறம்தான் தெரிஞ்சுது. இப்படியிருக்க F5 என்ன, F500 அடிச்சாக்கூட ஹிட்டு வராதுதானே?



தமிழ் நண்பர்கள்தான் மோசம் பண்ணிட்டாங்கன்னு எங்க வெள்ளைக்கார தலங்ககிட்டே அட்டையை கொடுத்தேன். அவங்களும் பூச்சாண்டி தளத்துக்கு வந்து பாத்துருக்காங்க. வந்தவங்க நம்ம தமிழகத்தின் விடிவெள்ளி - வருங்கால நிரந்தர முதல்வரின் படத்தைப் பாத்தும், ஜிலேபி ஜிலேபியா எழுத்தை பார்த்தும் பயந்து போய், தளத்துக்கு நாங்க வரலே. ஆனா அட்டையை மட்டும் வெச்சிக்கறேன்னு சொல்லி வெச்சிக்கிட்டாங்க. எப்படியோ, ரெண்டு பேரு அட்டையை பத்திரமா வெச்சிக்கிட்டாங்கன்னா சரிதான்னு நானும் சமாதானப் படுத்திக்கிட்டேன்.



நிலைமை இப்படியிருக்க, போன ஞாயிறு அன்னிக்கு, தமிழ்ச் சங்கப் பேரவை தன்னார்வலர்கள் கூட்டம் நடந்துச்சு. நம்ம நண்பர்கள்தான் நம்மை ஏமாத்திட்டாங்க - அந்த கூட்டத்திலேயாவது எல்லாருக்கும் கொடுப்போம்னு நிறைய அட்டைகள் கொண்டு போனேன். கேட்டவங்களுக்கு 1 வாங்கினா இன்னொண்ணு இலவசம்னு(!!) அள்ளி அள்ளி கொடுத்தேன். மிகச்சரியா கண்டுபிடிச்சிட்டீங்க. கூட்ட முடிவுலே மேஜை மேலிருந்த காகிதங்களையெல்லாம் சுத்தம் செய்துக்கிட்டிருந்தபோது - எனக்கு 2 அட்டைங்க கிடைச்சது.. :-((



அதனால், இனிமே நேர்லே கொடுத்தா வேலைக்காகாதுன்னு தெரிஞ்சிக்கிட்டு என்னோட முகப்பு அட்டையை இணையத்துலே பரப்பலாம்னு முடிவு பண்ணிட்டேன். உங்களுக்கு யாருக்காவது வேணும்னா சொல்லுங்க. என்னோட தபால் செலவுலேயே 5 அனுப்பி வைக்கிறேன். அட்டை உங்க கைக்கு கிடைச்ச அரை மணி நேரத்துக்குள்ளே வேறே அஞ்சு பேருக்கு கொடுத்தீங்கன்னா, உங்க தளத்துக்கு ஹிட்ஸும் உங்க காதுக்கு பட்ஸும் தங்கு தடையில்லாமே கிடைக்கும்.

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP