Monday, May 26, 2014

சங்கீத வாத்தியார்கள் பள்ளிக்கூடம் நடத்தினால்!!




அமெரிக்காவில் இருந்தபோது சஹானாவிற்கு வாய்ப்பாட்டு சொல்லிக் கொடுக்கவேண்டுமென்று ஒரு நல்ல ஆசிரியரைத் தேடினோம். கர்நாடக முறையிலான பாட்டு சொல்லிக் கொடுக்க எங்க கிராமத்தில் யாரும் இல்லாது போகவே, ஹிந்துஸ்தானி பாட்டு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரிடம் சேர்ந்தார். இரு வருடங்கள் பாட்டு கற்றும் கொண்டார்.

இதற்கிடையில் சென்னை திரும்பி வர நேர்ந்ததும் இங்கே அதே ஹிந்துஸ்தானிக்காக ஒரு வாத்தியைப் பிடித்தோம். இவரை பாடச் சொல்லிக் கேட்ட வாத்தி, நல்லாத்தான் பாடுறாங்க. ஆனா, அவர் (அமெரிக்க வாத்தி) சொல்லிக் கொடுத்த முறை வேறு. நான் சொல்லிக் கொடுக்கும் முறை வேறு. அதனால், முதல் இரு மாதங்கள் மறுபடி ஆரம்பத்திலிருந்துதான் சொல்லிக் கொடுப்பேன். சஹானாவின் வேகத்திற்கேற்ப அடுத்தடுத்த கட்டத்திற்குப் போய்விடலாம் என்றார். அப்போ இரண்டு வருடங்கள் கற்றுக் கொண்டது வேஸ்ட்தானா என்றதற்கு, அப்படி சொல்ல முடியாது. ஆனா அப்படிதான் என்று மழுப்பி பாடத்தை ஆரம்பித்தார். ஆனால், வேகமாகவும் பாடங்களில் முன்னேறினார்.

அதே வகுப்பில் கர்நாடக வாத்தி ஒருவரும் இருந்தார். சஹானா நல்லா பாடுறாங்க. நேரம் இருந்தால் கர்நாடக பாட்டு வகுப்பிலும் சேர்த்து விடுங்க. வேகமா பிக்கப் செய்துடுவாங்க என்று சொல்லி அதிலும் சேர்த்துக் கொண்டார்.

இதற்கிடையில் சஹானா, வயலின் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லவே, அதிலும் சேர்த்துவிட்டோம். இப்படியாக சென்னையில் இந்த மூன்று வகுப்பிலும் சேர்ந்து சஹானா பாடி / வாசித்து வந்தார்.

கால மாற்றம். காலச் சக்கரத்தில் சுழற்சி. எங்களை பெங்களூருக்கு தள்ளியது.

இங்கே பாட்டு வகுப்பில் சேர்ப்பதற்காகப் போனோம். எங்கே பாடுங்க? - இது வாத்தி. சஹானாவும் 2-3 பாடல்களைப் பாடிக் காட்டினார். எல்லாவற்றையும் கேட்ட வாத்தி இறுதியில் என்ன சொல்லியிருப்பார்? அதேதான். இதுவரை இவர் கற்றவை ஹிந்துஸ்தானி & கர்நாடிக் ஆனாலும், கற்றுக் கொடுக்கும் வகைகள் எல்லா இடத்திலும் வெவ்வேறாக இருப்பதால், மறுபடி முதலிலிருந்து துவக்க வேண்டும் என்றார். செம டென்சன் ஆனோம். மறுபடி - சரிகமபதநி என்று முதல் வகுப்பிலிருந்தா, அப்போ நான்கு ஆண்டுகளாக இவர் கற்றதெல்லாம் வீண்தானா என்று கேட்க - அப்படியில்லை ஆனால் அப்படித்தான் என்றார். ஆனால் கவலைப்படாதீர்கள் ஓரிரு மாதங்களில் நான் மறுபடி இதே நிலைமைக்குக் கொண்டு வந்து விடுகிறேன் என்று வாக்களித்தார்.

அடுத்து வயலின் வாத்தி. இதிலும் 1-2 பாடல்களை வாசித்துக் காண்பித்தார் சஹானா. மேலே உள்ள பத்தியில் பாட்டுக்கு பதிலாக வயலின் என்று போட்டுக் கொள்ளவும். சொந்தமாக பாடல்களை வாசித்துப் பழகி வரும் நிலையில் இருந்தாலும், அடிப்படை வகுப்பில் இந்த வாத்தி சொல்லிக் கொடுக்கும் முறை மாறுபடுகிறது என்று சொல்லி, ஓரிரு மாதங்கள் மறுபடி பாடங்களை கற்றுத் தருகிறேன். வேகமாக பிக்கப் செய்துவிடுவார் என்று சொல்லியுள்ளார்.

என்ன கொடுமை இது வாத்திகள்? புதிய பள்ளி, புதிய மொழி இப்படி எல்லாப் பிரச்னைகளையும் கடந்து ஒரு ஊரிலிருந்து வேறு ஊருக்கு மாறினாலும், இந்த பாட்டு / வயலின் வகுப்பு வாத்திகள் படுத்தும் ‘பாட்டுக்காக’ இனிமேல் அடுத்த முறை இடப்பெயர்வுக்கு பயங்கரமாக யோசிக்க வேண்டியிருக்கும்.

இப்படி இந்த சங்கீதம் சொல்லிக் கொடுக்கும் வாத்திகள், பள்ளிக்கூடம் நடத்தினால் என்ன ஆகும்? மூன்றாம், நான்காம் வகுப்பில் சேர வரும் மாணவ/விகளை மறுபடி முதல் வகுப்பிலேயே சேர்ந்து படியுங்கள் என்று சொல்லிவிடுவார்களோ? #மிடியல.

***


Read more...

Thursday, May 22, 2014

பிரச்னை புரியல. ஆனால் உங்க பதில் தேவை!!

தெரிஞ்சோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ, ஓட்டக்காரர்னு ஒரு பேரு எடுத்துட்டேன். நம்மை சுற்றி இருக்கும் நண்பர்களுக்கும், அலுவலகத்தில் அடிக்கடி பேசித் தொடர்பில் இருப்பவர்களுக்கும் அது தெரியும். ஆனால், அலுவலகம் முழுக்க எப்படி பரப்புவது? இதற்கு நான் எடுத்த சில முயற்சிகளும் அதன் பலன்களும் என்னன்றதுதான் இந்த பதிவு.


சென்ற அலுவலகத்தில் ஒரு நல்ல பதவி வந்தபோது, அதற்காக ஒரு அறிமுக மின்னஞ்சல் அலுவலகம் முழுக்க அனுப்பணும். உங்களைப் பற்றிய விவரங்களை இந்த டெம்ப்ளேட்டில் எழுதித் தாங்கன்னு கேட்டாங்க. அதில் ஒரு தலைப்பு - பொழுதுபோக்கு. அடிச்சாச்சு லக்கி ப்ரைஸ், இதில் நம்ம ஓட்டத்தைப் பற்றி எழுதி அனுப்புவோம் - அலு முழுக்க தெரியட்டும்னு எழுதி அனுப்பினேன். என்ன ஆச்சரியம்? இந்த குறிப்பிட்ட தகவல் மட்டும் வெட்டப்பட்டு, பாக்கி விவரங்கள் எல்லாம் மின்னஞ்சலில் வந்தது. என்னம்மா ஆச்சு? ஏன் அதை மட்டும் வெட்டிட்டீங்கன்னு கேட்டா, மின்னஞ்சல் ரொம்ப பெரிசா இருந்துச்சு, அதனால்தான். தப்பா எடுத்துக்காதீங்கன்னு சொன்னாங்க. சரின்னு விட்டுட்டேன்.


ஆனால், அதற்குப் பிறகு வந்த ஒரு திட்டத்தின் கீழ், உடல்நல அமைச்சராக நான் போட்டியிட்டு, என் ஓட்டத்தைப் பற்றி அலு முழுக்க நிறைய விளம்பரங்கள் செய்து, பலரை ஓட வைத்தது வரலாறு.


இங்கே கட் பண்றோம். அடுத்த வருடம். வேறொரு வேலை. வேறொரு அலு.


அதே பழைய டெம்ப்ளேட். அதே போல 'பொழுதுபோக்கு' பத்தி. ஆனால், அதே போல் ஓட்டத்தைப் பற்றி எழுதலாமா வேண்டாமான்னு ஒரு யோசனை. பிறகு, சேச்சே, அது வேறு அலு. இது வேறு அலு. அங்கேதான் லூஸ்தனமா சிந்திச்சி, அந்த ஒத்தை வரியை 'கட்' பண்ணினாங்கன்னா, இங்கேயும் பண்ணுவாங்களா என்னன்னு நினைச்சி, மராத்தான் பற்றியும் அதில் நம் பங்களிப்பு குறித்தும் சிறு குறிப்பு (2 வரிகள் மட்டுமே) வரைந்து அனுப்பி வைத்தேன்.


நம்ம குழுவிலேயே 150+ பேர் இருக்காங்க. எல்லாருக்கும் தெரியட்டும்னு அனுப்பிச்ச வெச்ச அந்த தகவல்கள் அடங்கிய மின்னஞ்சல், ஒன்றரை மாசம் கழித்தும் வெளிவரவில்லை. போன வாரம் தொலைப்பேசி கேட்டா, கொஞ்சம் எடிட் பண்ணனுமேன்னாங்க. ஏங்க, அதில் இருப்பது என் படிப்பு, சான்றளிப்புகள், அனுபவம் இவ்வளவுதான். இதில் எதை எடிட் செய்யணும்னு கேட்டேன்.


பதில்? இதைப் படிக்கற நீங்க நினைப்பது சரிதான். மறுபடி அதே 'பொழுதுபோக்கு' விவரத்தை எடுத்துடலாமான்னு கேட்டாங்க. எனக்கு செம குழப்பம். ஏம்மா, அதில் என்ன பிரச்னைன்னு கேட்டா, பொபோ'ன்னா - புத்தகம் படிப்பது, இசை கேட்பது, கிரிக்கெட் பார்ப்பது இப்படிதான் இருக்கணும். நீங்க ஓடறதுன்னு போட்டிருக்கீங்களேன்றாங்க. அவ்வ். வேண்டாம். அதை எடுக்க வேண்டாம். அப்படியே மின்னஞ்சல் அனுப்புங்கன்னா, முடியாது. அதை எடுக்கலேன்னா மின்னஞ்சலே வராதுன்னுட்டாங்க. நீங்க ஆணியே புடுங்க வேண்டாம். மின்னஞ்சல் அனுப்பலேன்னா பரவாயில்லைன்னுட்டேன்.


இந்த நிமிடம் வரை என் அறிமுக மின்னஞ்சல் வரவேயில்லை.


* ஏன் அந்த விவரத்தை மட்டும் இரு அலுவலகத்திலும் எடிட் பண்ணனும்னு சொல்றாங்க?


* இந்த நாட்டில் ஒரு தனி மனிதனுக்கு ஓடவும், அதை மற்றவரிடம் பகிர்ந்துக்கவும் அனுமதி இல்லையா?


இந்த இரு சம்பவத்திலும், மின்னஞ்சல் அனுப்பும் / அனுப்ப முடிவெடுக்க வேண்டிய இடத்தில் இருந்தது தமிழர்கள். அதுவும் பெண்கள் என்பது இங்கு தேவையில்லாத தகவல்.


***

Read more...

Wednesday, March 19, 2014

நொறுக்ஸ் - 3-19-2014


சென்னையில் வாகனங்கள் ஓட்டுபவர்கள் எப்போதெல்லாம் ஒலிப்பான் பயன்படுத்துகிறார்கள்? இந்தக் கேள்விக்கு 10 மதிப்பெண்கள் என்றால், விடை பின்வருமாறு:

* சாலையில் இடப்புறம் திரும்பும்போது; வலப்புறம் மற்றும் நேராகப் போகும்போது.
* வீட்டை விட்டு கிளம்பும்போது; மற்றும் வீட்டுக்கு வந்தபிறகு (உள்ளே இருப்பவர்களுக்கு சிக்னல் கொடுக்குறாராம்!).
• சிக்னலில் சிகப்பு, மஞ்சள் அல்லது பச்சை விளக்கு எரியும்போது; (கவுண்ட்டவுன் 5க்கு கீழ் வந்துவிட்டால், ஒலி exponentially கூடிக்கொண்டே போகும்).
* ஆடு, மாடு மற்றும் நாய்கள் சாலையில் நடுவே இருந்தாலோ, குறுக்கே வந்தாலோ அல்லது ஓரமாய் நின்றாலோ.
* சாலையில் மேடு, பள்ளம் இருந்தால்; அல்லது சமதரையாக இருந்தால்.
* சாலையில் அதிக போக்குவரத்து இருந்தால்; அல்லது யாருமே இல்லாமல் காலியாக இருந்தால்.
* தங்கள் வாகனத்தை விட சிறிய வாகனங்களின் பின்னால் போகும்போது (கார் பின்னால் வரும் பேருந்து, பைக் பின்னால் வரும் கார், மிதிவண்டி பின்னால் வரும் பைக் இவர்களெல்லாம் தைரியமாக ஒலிப்பான் பயன்படுத்துவார்கள்).

இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். ஆனால் நிறுத்திக்குவோம். மேற்கண்ட கேள்விக்கு 1 மதிப்பெண்தான்னு சொன்னா, அதற்கான விடை எப்படியிருக்கும்? விடை பதிவில்.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு போன வாரம் திருப்பதி போயிருந்தோம். நிறைய மாற்றங்கள். பக்தர்களுக்கு அதிக வசதிகள். மாணவர்களுக்கு தேர்வு நேரமாகையால் அதிக கூட்டம் இல்லாமல் இருந்தது. நம் மக்கள் சாமி கும்பிட தலங்களுக்குப் போனாலும், கட்டில், குளிர்சாதன வசதியுடன் கூடிய தனி அறை, வெந்நீர் குளியல் இன்னபிற வசதிகளை எதிர்பார்த்தே இருப்பார்கள். அப்படியில்லாமல், கடவுளை நினைத்து, கிடைத்த இடத்தில் உண்டு, உறங்கி அவன் தரிசனம் பெற முயற்சிக்கலாமே என்று வேளுக்குடி ஒரு சொற்பொழிவில் சொல்வார். அதே போல் நாங்களும் அறை எதுவும் எடுக்காமல், ஒரு பெரிய shed போன்ற இடத்தில் மக்களோடு மக்களாக உறங்கி (சூப்பர் குளிர்!), அதிகாலையில் தண்ணீர்க் குளியலுக்குப் பிறகு தரிசனத்திற்குச் சென்றோம். ஏழுமலையானின் தரிசனம் சில நொடிகளுக்கே கிடைத்தாலும், அதை நினைத்தவாறு சில மாதங்களை ஓட்டிவிடலாம் என்றும், இனி ஆண்டுக்கொருமுறை இங்கு வரவேண்டும் என்றும் நினைத்து மலையிறங்கினோம். மதுரை தூங்கா நகரம்னா, திருமலை தூங்கா மலை. 24x7 சாப்பாடு கிடைக்குது; ஷாப்பிங்கும் செய்யலாம். 

இந்த வாரம் படித்த புத்தகம் வைகோ’வின் பல பேச்சுக்களின் தொகுப்பு. வெல்லும் சொல். விகடன் பிரசுரம். பொன்னியின் செல்வன், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், மகாபாரதம் என பல தலைப்புகளில், பல்வேறு கூட்டங்களில் பேசிய பேச்சுக்கள் மிக அருமையாக தொகுக்கப்பட்டுள்ளன. திருவாசகம் விழாவில் இவரது பேச்சைக் கேட்டு (சூப்பர் ஸ்டாரைப் போலவே!) ரசிகனானேன். அதைப் போலவே மேற்சொன்ன தலைப்புகளில் மனிதர் சும்மா பின்னிப் பெடல் எடுத்திருக்கிறார். கண்டிப்பாக வாங்கி வைத்துக் கொள்ள வேண்டிய புத்தகம், ஆனால் நான் நூலகத்திலிருந்து எடுத்திருந்ததால், திருப்பிக் கொடுத்துவிட்டேன். 

பதிவில் முதலில் சொன்ன கேள்விக்கு 1 மதிப்பெண் மட்டுமே என்றால் அதற்கான விடை:

வண்டி Onல் இருக்கும்போதெல்லாம் ஒலிப்பானை ஒலிப்பார்கள்; Offல் இருக்கும்போது ஒலிப்பானை ஒலிக்கமாட்டார்கள்.

***

Read more...

Thursday, February 13, 2014

மாப்பிள்ளை பார்க்கும் படலம்!

நேற்று ஒருவர் publish செய்துவிட்டு, பிறகு எடுத்துவிட்ட பதிவுதான் இந்தப் பதிவுக்கு இன்ஸ்பிரேஷன்.

தூரத்து சொந்தக்கார பொண்ணுதான். பெங்களூர் ஜெய நகர்லே இருக்காங்க. அந்த பொண்ணுக்கு கல்யாணத்துக்கு வரன் பார்க்க ஆரம்பிச்சாங்க. என்ன ஆச்சுன்னு பதிவில் பாருங்க.

வயசு 23: பொண்ணு MBA முடிச்சி ஒரு நல்ல தனியார் வங்கியில் வேலைக்கும் சேர்ந்துடுச்சு. கிடைக்கும் மாப்பிள்ளை ஜெய நகர் / ஜெபி நகர் 5வது Phaseக்குள் இருக்க வேண்டும். மென்பொருள் நிபுணர்’ஆகத்தான் இருக்க வேண்டும் என்ற கண்டிஷன்கள் - அந்தப் பொண்ணுதான் போட்டது. (சிரிக்கக்கூடாது. இது நிஜமான சம்பவப் பதிவுதான்). ஆனா, கிடைத்த மாப்பிள்ளைகள் பெங்களூரில் வேறு பகுதிகளில் இருந்து வந்தார்கள். அதனால் - ரிஜெட்டட்.

வயது 24: பையன் பெங்களூரில் எங்கே வேணாலும் இருக்கலாம். ஆனால், ஜெய நகர் / ஜெபி நகருக்கு வீடு மாற்றிக் கொண்டு வந்துவிட வேண்டுமென்ற கண்டிஷன். ஆனால், கிடைத்த பையன்கள் பெங்களூருக்கு வெளியே ஹோசூர், மாண்டியா போன்ற பகுதிகளில் இருந்தார்கள். அதனால் - ரிஜெட்டட்.

வயது 25: பையன் பெங்களூர், மைசூர் அல்லது கர்னாடகாவில் எங்கே வேணாலும் இருக்கலாம். பெங்களூருக்கு ட்ரான்ஸ்பர் வாங்கினால் போதும். இதுதான் கண்டிஷன். இப்போ ஜாதகங்கள் சென்னையிலிருந்து வந்தன. சென்னையா? உவ்வே.. நோ. அதனால் - ரிஜெட்டட்.

வயது 26: சரிப்பா. பெங்களூர், சென்னை, ஹைதை. எங்கேயிருந்தாலும் ஓகே. ஆனா பெரிய நகரங்களில்தான் இருக்கவேண்டும். என்ன சொல்லப் போறேன்னு உங்களுக்கே தெரியும். இங்கிருந்தெல்லாம் எதுவும் கிடைக்கவில்லை. வந்தவை - ரிஜெட்டட்.

வயது 27: தென்இந்தியாவில் எங்கே வேணாலும் போறேன். வங்கிக் கிளை இல்லைன்னாலும் பரவாயில்லை. வேறு வேலை தேடிக்கறேன். யாராவது மாட்டுறானான்னு பார்ப்போம். நோப். யாரும் மாட்டவில்லை.

வயது 28: இந்தியாவின் எந்த மூலைக்கும் போகத் தயார். ‘நம்மளவா’வா இருந்தா போதும்.

வயது 29: ஆம்பளையா இருந்தா போதும்.

வயது 30: இன்னும் மாப்பிள்ளை தேடிக்கிட்டுதான் இருக்காங்க.

இந்த மாதிரி case studiesகளைப் பார்க்கும்போதுதான் பக்பக்ன்னு இருக்கு. ஆனா, நம்ம கையில் என்ன இருக்கு? நல்லதே நடக்கும்னு ஒரு நம்பிக்கையில் வாழ்க்கையை ஓட்டிப் போகலாம்.

நீங்க என்ன சொல்றீங்க?

***

Read more...

Monday, January 6, 2014

பொங்கலோ பொங்கல் காதலோ காதல்.



பொங்கல் மேலான என் காதல் எப்போ ஆரம்பிச்சதுன்னு நினைச்சிப் பார்க்கறேன். மஞ்சளா இருந்தாலும் வெண் பொங்கல்னு சொல்றோமே, அதைப் பத்தின பதிவுதான் இது. சின்ன வயசுலே திருவல்லிக்கேணியில் மார்கழி மாத விடியலில் அம்மாவுடன் 2-3 கோயில்களுக்குப் போகும்போது சுடச்சுட கிடைக்கும். அடி கிடையாது. பொங்கல்தான். பார்த்தசாரதி கோயிலின் பெரிய கதவு திறக்கும்முன்னே அதிலுள்ள சின்ன கதவின் வழியாக ‘பக்தர்கள்’ உள்ளே போவார்கள். நாங்களும். அங்கேயும் அதே பிரசாதம்தான். அப்போதான் பொங்கல் காதல் வந்திருக்கணும். இன்னிய தேதி வரை எந்த வேளையில் எந்த உணவகத்திற்குப் போனாலும், பொங்கல் இருக்கான்னு ஒரு தடவை செக் பண்ணிடறதுதான். 

வெண் பொங்கல் இப்படி இருக்கணும், அப்படி இருக்கணும்னு எந்தவித விதியும் எனக்குக் கிடையாது. எப்பொங்கலும் சம்மதம். இதுதான் என் கொள்கை. திரவமா இலையில் ஓடக்கூடிய வடிவில் இருந்தாலும், கல்லுமாதிரி வெட்டி சாப்பிடக்கூடியதா இருந்தாலும், அல்லது நடுவாந்திரமாக ஓடியும் ஓடாமலும் இருந்தாலும் எனக்கு ஓகேதான். ஆனால்... என்ன ஆனால்? விதியே இல்லைன்னுட்டு, இப்ப என்ன ஆனால்? ஒரே ஒரு விஷயம் இருக்கு. ஸ்ரீராமஜெயம் மாதிரி ஒரு நாளைக்கு 108 முறை டயட், டயட்னு சொல்லிவந்தாலும், பொங்கல்னு வந்துட்டா டயட்டுக்கு கட்’தான். நெய். இது கண்டிப்பா வேணும்னு சொல்லிடுவேன். ஒரு ஸ்பூன், ரெண்டு ஸ்பூனெல்லாம் கிடையாது. பரோட்டா தின்னும் போட்டியில் சால்னா பக்கெட்டை வெச்சிட்டுப் போன்னு சொல்றா மாதிரி, நெய்யை பக்கத்திலேயே வெச்சிடும்பேன். பொங்கல் மேல் கிரிப் பிரதிட்சணம் செய்றா மாதிரி நெய்யை சுத்திசுத்தி ஊத்திட்டு, வெள்ளி மலையில் தேன் மழைன்னு வர்ணிச்சா, கேட்க ஆளிருக்காது. நானேதான் மெச்சிக்கணும். 

பொங்கலிலே ஒரு குறையிருந்தாலும், தரத்தினில் குறைவதுண்டோன்னு அன்னிக்கே கவிஞர் பாடியிருப்பதை கேள்விப்பட்டிருப்பீங்க... அது கண்ணதாசா ஜேசுதாஸா?.. சரி விடுங்க. யார் சொன்னா என்ன, மேட்டர்தான் முக்கியம். உலகிலேயே அழகான உணவுப்பொருள் என்னன்னு கேட்டா, நான் என்ன சொல்வேன்? வேறென்ன. பொங்கல்தான். ஏன்? அவ்ளோ அழகா இருப்பதால்தானே, திருஷ்டிப் பொட்டு போல், அங்கங்கே மிளகு போடுறோம். அழகான குழந்தைகளுக்கே ஒரு திருஷ்டிப் பொட்டுதான். ஆனா, பொங்கலுக்கு பல பொட்டுகள். இப்ப புரியுதா?

அமெரிக்கா போய் சமைக்கக் கத்துக்கும்போது, நான் கத்துண்ட முதல் டிஷ் என்னவாக இருக்கும்? நோ. மதிப்பெண்கள் கிடையாது. அது பொங்கல்தான். எல்லாப் பொருட்களையும் குக்கரில் போட்டு மூடி, விசில் வந்தவுடன் இறக்கினா ஆச்சு, இது சுலபம்தானே, அதுக்காகதான் இதை முதலில் கத்துண்டியான்னு கேட்டீங்கன்னா, அது தப்பு. பதிவின் தலைப்பை இன்னொரு முறை பாருங்க.

இவ்வளவு அருமையா சமைச்ச கைக்கு தங்க வளைதான் செஞ்சு போடணும்னு தமிழில் ஒரு வசனம் இருக்கு. இதே போல் ஆங்கிலத்தில் எனக்கு பிடிச்ச வசனம் - Everybody loves raymondன்ற தொலைக்காட்சித் தொடரில் வரும் தாத்தா சொன்னதுதான். உணவுப்பொருள் பெயரை மட்டும் மாத்தியிருக்கேன். Anyone who can cook பொங்கல் like this deserves a hillside full of heavenly scented marigolds and daffodils. அது சரி, பொங்கல் செஞ்சு போட்ட கைக்கு நீ என்ன போடுவேன்னு கேட்டா, அந்த கை மேலேயே ரெண்டு போட்டு, இன்னொரு கரண்டி பொங்கல் போடுன்னு சொல்வேன். 

நாளைக்கே நான் ஆட்சிக்கு வந்தா, என்னென்ன செய்வேன்?

* கல்யாணத்திற்கு பெண் பார்க்கும் படலத்தில், பஜ்ஜி/சொஜ்ஜிக்குப் பதிலாக பொங்கல்தான் போடணும்னு 110 விதியின் கீழ் ஒரு ஆணை போடுவேன். 
* ‘பையன்’ உணவகத்தில் பொங்கல் மட்டும் இலவசம்.
* திரைப்படங்களின் தலைப்பில் பொங்கல் சொல் வந்தால், சிறப்பு வரிவிலக்கு. உதா: 1000 பொங்கல் தின்ற அபூர்வ சிகாமணி, பொங்கலை மீட்ட சுந்தரபாண்டியன், பொங்கல் உனக்காக, பொங்கல் தேசம் ஆகியன.

எனது ஆட்சியின் தாரக மந்திரம்:

பொங்கல் நாமம் வாழ்க!
நாளை நமதே. பொங்கலும் நமதே!

பொங்கல் உடனான உங்க அனுபவத்தையும் பின்னூட்டத்தில் பகிர்ந்துக்கோங்க.

***

Read more...

Tuesday, November 26, 2013

காபி குடிக்க தனியாகச் சென்ற மென்பொருள் ஊழியர் டிஸ்மிஸ்!

அதிர்ச்சியூட்டும் ஒரு செய்தியாக, நேற்று பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவன ஊழியர் வேலை நேரத்தில் காபி குடிப்பதற்காக, யாருடனும் செல்லாமல், தனியாகச் சென்ற காரணத்தினால் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இது மென்பொருள் துறையினரிடையே பலத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரி தெரிவிக்கையில் - மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தங்கள் வேலைக்கு நடுவே அவ்வப்போது காபி குடிக்க வெளியே செல்வதுண்டு. அவற்றை நாங்கள் கண்டுகொள்ள மாட்டோம். ஆனால், தனியாக சென்றதனால் டிஸ்மிஸ் என்பது கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கிறது - என்றார்.

மற்றொரு நிறுவனத்தைச் சார்ந்த ஒரு மென்பொருள் நிபுணர் கூறுகையில் - எந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்களும் காபி குடிக்க தனியாகப் போகவே மாட்டார்கள். புதிதாக சேரும் ஒரு ஆண் கூட உடனடியாக ஒரு பெண்ணையும், ஒரு பெண் ஒரு ஆணையும் துணையாகக் கூட்டிக்கொண்டே போவார்கள். அப்படி இல்லையெனில், தங்கள் குழுவில் இருப்பவர்களுடன் போவார்கள். ஒரு முறை போய் வந்த குழுவே, இன்னொரு நண்பர் கூப்பிட்டார் என்பதற்காக உடனடியாக மற்றொரு முறை காபிக்காகப் போவார்களே தவிர, யாரும் தனியாகப் போய் நான் கேள்விப்பட்டதே இல்லை. கண்டிப்பாக அந்த நபரை ஒரு முறை நாங்கள் பார்க்க வேண்டும் என்று எங்கள் நிறுவனத்தில் கேட்டுள்ளோம் - என்றார்.

குறிப்பிட்ட அந்த நண்பர் எந்த ஒரு குழுவிலும் வேலை செய்யத் தகுதியே இல்லாதவர் - என்று கோபத்துடன் மற்றொரு நிபுணர் குறிப்பிட்டார். Team Building என்பது ஒரு கலை. காபி குடிக்கையில் திரைப்படம், கிரிக்கெட், சதுரங்கம் இப்படி சிலரும், நேற்று பார்த்த தொலைக்காட்சி சீரியல்கள் பற்றிப் பலரும் பேசுவார்கள். அப்படியே அவர்களுக்குள் நட்பு உண்டாகி, அது நிறுவனத்தின் வேலைத்திறனை அதிகரிக்கவும் உதவும்.

வேறு சிலர் எப்போதும் தங்கள் மேலாளர்களுடன் காபி (மற்றும் இதர பானங்களைக்) குடிக்கச் சென்று அவரது நம்பிக்கையைப் பெறும் வகையில் நடந்து கொள்வார்கள். அப்படியே அந்த மேலாளர் வேலையை விட்டுச் சென்றால், தன்னுடன் காபி குடித்தவர்களையும் அந்தப் புதிய நிறுவனத்திற்கே கூட்டிச் சென்றுவிடுவார் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்ட சம்பவமாகும். அதனால் எதிலும், யாருடனும் சேராத இந்த நண்பரை டிஸ்மிஸ் செய்தது சரியே என்று வாதிட்டார்.

இறுதியாக, டிஸ்மிஸ் செய்த அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசியபோது - அந்த நண்பர் இனிமேல் காபி கடையிலேயே இருந்தாலும் ஒரு நண்பரோடுதான் போவேன், தனியாகப் போகமாட்டேன் என்று எழுத்துபூர்வமாக ஒத்துக் கொண்டதால், அவரது டிஸ்மிஸ் திரும்பப் பெறப்பட்டது என்று தெரிவித்தனர்.

***
***

Read more...

Sunday, October 13, 2013

ஒரே கல்லிலே பல மாங்காய் - இறுதிப் பகுதி

முந்தைய இரண்டு பகுதிகளையும் படிச்சிட்டீங்களா?

அந்த பொதுக் கூட்டத்தில் பேச நான் தயாராகிட்டிருக்கும்போது, எனக்கு முன்னால் பேசிய ஒரு பெண்ணும் Fitness துறைக்காகவே பேசி ஓட்டு சேகரித்துக் கொண்டிருந்தார். Fitஆக இருந்தால் என்னென்ன நன்மை, உடல் வலு, திறன் அப்படி இப்படியென்று எல்லாவற்றையும் பேசினார்.

அடுத்து தலைவர் வந்தார். சரி சரி. நான்தான் மேடையேறினேன்.

நானும் Fitenss துறைக்காகத்தான் பேச வந்திருக்கிறேன். எனக்கு முன் பேசிய செல்வி.____ அவர்கள் இந்த துறையின் நன்மைகளைப் பற்றி விரிவாகப் பேசி, எனக்கு உதவி புரிந்தார். அதற்கு அவருக்கு என் நன்றிகள். எனது தலைப்பு ‘Running'.

நன்மைகளைப் பற்றி முன்னரே பேசிவிட்டதால், Runningன் தீமைகளைப் பற்றி நான் பேசப் போகிறேன்.

தீமையா, Fitnessல் தீமைகளும் இருக்கா? என்று கூட்டத்தில் சலசலப்பு. இவ்வளவு நேரம் கசமுசகசமுச என்று பேசிக் கொண்டிருந்தவர்கள், இப்போது அமைதியாக கேட்க ஆரம்பித்தனர்.

யெஸ். தீமைகள்தான். ஓடுவதால் வரும் தீமைகள் என்னவென்றால்:
* நீங்கள் ஓட்டத்தை காதலிக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.
* வீட்டிலேயே இருக்க மாட்டீர்கள். இதனால் வீட்டில் திட்டு விழும்.
* It is Contagious / Infectious.
* உங்களால் ஓடுவதை நிறுத்த முடியாது.
* எல்லாரும் தூங்கிக் கொண்டிருக்கும்போது, நீங்கள் எழுந்து தயாராகி, எல்லாரிடமும் திட்டு வாங்குவீர்கள்.

முந்தைய பகுதியில் பார்த்த க.ப. தங்கவேலு காட்சி இங்கேதான் ஆரம்பித்தது!!

ஓட்டத்தின் நன்மைகள் எல்லாமே அதன் By-productsகள்தான். அவைகளுக்காக நாம் ஓடமாட்டோம். நம் விருப்பத்திற்காக, சந்தோஷத்திற்காக ஓட ஆரம்பித்து, அதன் விளைவால் வரும் by-productsகளை வாங்கிக் கொள்வோம். யாரெல்லாம் ஓடத் தயார்?

ஆங்காங்கே பல கைகள் (வளையல் அணிந்த மற்றும் அணியாத) கைகள் தூக்கப்பட்டன!

என்னுடைய இலக்கு, திசம்பரில் பெங்களூரில் இரண்டு ஓட்ட நிகழ்ச்சிகள் இருக்கின்றன. அதில் நம் நிறுவனம் சார்பாக குறைந்த பட்சம் 25 பேர் என்னுடன் 10கிமீ தூரம் ஓடவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். நிறுவனத்தின் பெயர் பொறித்த சட்டை, தொப்பி இவற்றை அணிந்து ஓடினால், நிறுவனத்திற்கும் ஒரு நல்ல விளம்பரம்தானே?

(இப்போது அங்கிருந்த பெரிய தலைகள் சிலர் கவனிக்கத் துவங்கினர்).

இதற்குத் தேவையான பயிற்சியை இந்த இரண்டு மாதங்களில் செய்வோம். முதல் ஓட்டம் ஓடியபிறகு எப்படி இருந்ததென்று சொல்லுங்கள். பிறகு நானே சொன்னாலும், நீங்கள் நிறுத்த மாட்டீர்கள்.

எனக்கு இந்த வாய்ப்பு அளித்தமைக்கு நன்றிகள். இப்போது ஏதேனும் கேள்விகள் இருந்தால் கேட்கலாம்.

(முந்தைய பதிவில் இருந்த கேள்விகள் இந்த சமயத்தில் கேட்கப்பட்டன).

***

இதைத் தவிர பிட் நோட்டீஸ் ஒன்று அடித்து அனைவருக்கும் கைப்பட விநியோகித்தேன். ஒரு பெரிய மின்னஞ்சல் தயார் செய்து அனைவருக்கும் அனுப்பினேன்.

பிரச்சாரம் முடிந்தது.

தேர்தல் நாள்.

அந்த நாளில் நான் ஓட்டுப் போட்டுவிட்டு, உடனே சென்னைக்கு வண்டியேற வேண்டும். கடைசி நேரத்தில் நான் இல்லாவிட்டால், ஓட்டு விழுமா என்ற சந்தேகம். என்ன ஆகுதோ ஆகட்டும் என்ற முடிவுடன், அந்த இடத்தை விட்டு வந்தாயிற்று.

***

முடிவுகள்.

யெஸ். நான் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

இப்போது வாக்குறுதிகளை செயல்படுத்தும் கட்டம். விரிவான திட்டங்கள், தெளிவான தகவல் தொடர்புகள் என, விருப்பப்பட்டு வரும் நண்பர்கள் அனைவரையும் ஓட வைக்க வேண்டிய வேலை.

எப்படி போகுதுன்னு ஓட ஓடத்தான் தெரியும்.

***

அனைவருக்கும் அனுப்பிய மின்னஞ்சல் இதுதான்:
https://docs.google.com/file/d/0B84c8UzuDzMeYWlSeEpUYjhMQlE/edit?usp=sharing.

அனைவருக்கும் வழங்கிய பிட் நோட்டீஸ்:
https://docs.google.com/file/d/0B84c8UzuDzMeRnNFV1pGejVETTQ/edit?usp=sharing

***

சுபம்.



Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP