Thursday, May 22, 2014

பிரச்னை புரியல. ஆனால் உங்க பதில் தேவை!!

தெரிஞ்சோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ, ஓட்டக்காரர்னு ஒரு பேரு எடுத்துட்டேன். நம்மை சுற்றி இருக்கும் நண்பர்களுக்கும், அலுவலகத்தில் அடிக்கடி பேசித் தொடர்பில் இருப்பவர்களுக்கும் அது தெரியும். ஆனால், அலுவலகம் முழுக்க எப்படி பரப்புவது? இதற்கு நான் எடுத்த சில முயற்சிகளும் அதன் பலன்களும் என்னன்றதுதான் இந்த பதிவு.


சென்ற அலுவலகத்தில் ஒரு நல்ல பதவி வந்தபோது, அதற்காக ஒரு அறிமுக மின்னஞ்சல் அலுவலகம் முழுக்க அனுப்பணும். உங்களைப் பற்றிய விவரங்களை இந்த டெம்ப்ளேட்டில் எழுதித் தாங்கன்னு கேட்டாங்க. அதில் ஒரு தலைப்பு - பொழுதுபோக்கு. அடிச்சாச்சு லக்கி ப்ரைஸ், இதில் நம்ம ஓட்டத்தைப் பற்றி எழுதி அனுப்புவோம் - அலு முழுக்க தெரியட்டும்னு எழுதி அனுப்பினேன். என்ன ஆச்சரியம்? இந்த குறிப்பிட்ட தகவல் மட்டும் வெட்டப்பட்டு, பாக்கி விவரங்கள் எல்லாம் மின்னஞ்சலில் வந்தது. என்னம்மா ஆச்சு? ஏன் அதை மட்டும் வெட்டிட்டீங்கன்னு கேட்டா, மின்னஞ்சல் ரொம்ப பெரிசா இருந்துச்சு, அதனால்தான். தப்பா எடுத்துக்காதீங்கன்னு சொன்னாங்க. சரின்னு விட்டுட்டேன்.


ஆனால், அதற்குப் பிறகு வந்த ஒரு திட்டத்தின் கீழ், உடல்நல அமைச்சராக நான் போட்டியிட்டு, என் ஓட்டத்தைப் பற்றி அலு முழுக்க நிறைய விளம்பரங்கள் செய்து, பலரை ஓட வைத்தது வரலாறு.


இங்கே கட் பண்றோம். அடுத்த வருடம். வேறொரு வேலை. வேறொரு அலு.


அதே பழைய டெம்ப்ளேட். அதே போல 'பொழுதுபோக்கு' பத்தி. ஆனால், அதே போல் ஓட்டத்தைப் பற்றி எழுதலாமா வேண்டாமான்னு ஒரு யோசனை. பிறகு, சேச்சே, அது வேறு அலு. இது வேறு அலு. அங்கேதான் லூஸ்தனமா சிந்திச்சி, அந்த ஒத்தை வரியை 'கட்' பண்ணினாங்கன்னா, இங்கேயும் பண்ணுவாங்களா என்னன்னு நினைச்சி, மராத்தான் பற்றியும் அதில் நம் பங்களிப்பு குறித்தும் சிறு குறிப்பு (2 வரிகள் மட்டுமே) வரைந்து அனுப்பி வைத்தேன்.


நம்ம குழுவிலேயே 150+ பேர் இருக்காங்க. எல்லாருக்கும் தெரியட்டும்னு அனுப்பிச்ச வெச்ச அந்த தகவல்கள் அடங்கிய மின்னஞ்சல், ஒன்றரை மாசம் கழித்தும் வெளிவரவில்லை. போன வாரம் தொலைப்பேசி கேட்டா, கொஞ்சம் எடிட் பண்ணனுமேன்னாங்க. ஏங்க, அதில் இருப்பது என் படிப்பு, சான்றளிப்புகள், அனுபவம் இவ்வளவுதான். இதில் எதை எடிட் செய்யணும்னு கேட்டேன்.


பதில்? இதைப் படிக்கற நீங்க நினைப்பது சரிதான். மறுபடி அதே 'பொழுதுபோக்கு' விவரத்தை எடுத்துடலாமான்னு கேட்டாங்க. எனக்கு செம குழப்பம். ஏம்மா, அதில் என்ன பிரச்னைன்னு கேட்டா, பொபோ'ன்னா - புத்தகம் படிப்பது, இசை கேட்பது, கிரிக்கெட் பார்ப்பது இப்படிதான் இருக்கணும். நீங்க ஓடறதுன்னு போட்டிருக்கீங்களேன்றாங்க. அவ்வ். வேண்டாம். அதை எடுக்க வேண்டாம். அப்படியே மின்னஞ்சல் அனுப்புங்கன்னா, முடியாது. அதை எடுக்கலேன்னா மின்னஞ்சலே வராதுன்னுட்டாங்க. நீங்க ஆணியே புடுங்க வேண்டாம். மின்னஞ்சல் அனுப்பலேன்னா பரவாயில்லைன்னுட்டேன்.


இந்த நிமிடம் வரை என் அறிமுக மின்னஞ்சல் வரவேயில்லை.


* ஏன் அந்த விவரத்தை மட்டும் இரு அலுவலகத்திலும் எடிட் பண்ணனும்னு சொல்றாங்க?


* இந்த நாட்டில் ஒரு தனி மனிதனுக்கு ஓடவும், அதை மற்றவரிடம் பகிர்ந்துக்கவும் அனுமதி இல்லையா?


இந்த இரு சம்பவத்திலும், மின்னஞ்சல் அனுப்பும் / அனுப்ப முடிவெடுக்க வேண்டிய இடத்தில் இருந்தது தமிழர்கள். அதுவும் பெண்கள் என்பது இங்கு தேவையில்லாத தகவல்.


***

0 comments:

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP