சொந்தங்கள் பலவிதம். ஒவ்வொருவரும் ஒருவிதம்...
சொந்தங்கள் பலவிதம். ஒவ்வொருவரும் ஒருவிதம்...
Read more...
அமெரிக்காவில் இருந்தவரை, இந்தியாவில் நடக்கும் எந்தவொரு குடும்ப நிகழ்ச்சிகளுக்கும் வரவேண்டிய அவசியம் இருக்காது. அன்றைக்கு ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு மட்டுமே. நீங்க மட்டும்தான் இங்கே இல்லை. We miss youன்னு இங்கேயிருந்து சொல்வாங்க. சரி சரின்னு அழைப்பை துண்டித்து, Seinfeld பார்க்க உட்கார்ந்துடுவோம்.
ஆனா, இந்தியா வந்தபிறகு நிலைமை வேற. நெருங்கிய / தூரத்து உறவினர்களின் சின்ன / பெரிய / மிகப்பெரிய நிகழ்ச்சிகளுக்கு (அவங்க கூப்பிட்டா!) போகவேண்டிய கட்டாயம். கூப்பிடாமல் எந்தவொரு நிகழ்ச்சிக்கும் போவதில்லைன்னு என் மாமனார் மேல் சத்தியம் செய்திருக்கேன். ஒரு வேளை கூப்பிட்டு போகாமல் இருந்துட்டா? அதைப் பற்றிய பேச்சு / பிரச்னை தனி.
சரி, நீ உன் வீட்டில் ஏதாவது நிகழ்ச்சி நடத்திருக்கியா? அதுக்கு எல்லாரையும் கூப்பிடுவியா? அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்கள்தானான்னு கேள்வி வரும். எல்லா கேள்விகளுக்கும் இந்தப் பதிவில் விடை காண்போம். மேலே (கீழே!) படிங்க.
அது சரி, நெருங்கிய / தூரத்து சொந்தங்கள் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் உன்னை கூப்பிடணும்னு அவசியம்தானான்னு கேட்பீங்க. மிகச்சரி. அவசியம் இல்லைதான். ஒரு திருமணம்னா, மாப்பிள்ளை, பொண்ணு & அந்த தாலி (அல்லது மோதிரம்) மட்டுமே இருக்கணும். நானெல்லாம் அநாவசியம் என்றே நினைப்பேன். ஆகவே, யாரும் கூப்பிடலேன்னா நமக்கு ஒன்றும் பிரச்னையில்லை.
ஒரு கசின். மிகவும் நன்றாகவே பேசுவார். ஏதாவது ஒரு பொது நிகழ்ச்சியில் பார்த்தால், நாள் முழுதும் பேசிக்கொண்டும் இருப்போம். ஆனால் அவர் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு நமக்கு அழைப்பு இருக்காது. ஏற்கனவே சொன்னாற்போல் நமக்கு ஒன்றும் பிரச்னையில்லை. அடுத்த சந்திப்பில் பார்க்கும்போது அவரும் நன்றாக பேசுவார், நானும்.
ஆனால், யாரேனும் என்னை அழைக்காமல் விட்டுவிட்டால் நமது இன்னொரு கசினுக்குப் பிடிக்காது. அவன் எப்படி உன்னை அழைக்காமல் விடலாம் என்று கிளம்பிவிடுவார். இவரும் நம் அண்ணன்தான். நல்லவர்தான். நம் வீட்டு நிகழ்ச்சிகளில் பற்பல உதவிகள் செய்தவர். நமக்கு அழைப்பு இல்லாத நிகழ்ச்சிகள் அவருக்கும் பிடிக்காது. அந்த நிகழ்ச்சி நடத்துபவரைக் கூப்பிட்டு, ஏன் இவனை மட்டும் கூப்பிடலை. இந்தா தொலைபேசி எண், கூப்பிடு அவனை என அவரிடம் சொல்லிவிடுவார்.
இது எப்படி எனக்குத் தெரியும்னா, ஒரு முறை ஒரு திருமண நிகழ்ச்சிக்கு நமக்கு அழைப்பு இல்லை. எல்லாம் நன்மைக்கேன்னு நாம சும்மா இருந்தாச்சு. திருமணத்திற்கு 2 நாள் முன்னால், அந்த மாப்பிள்ளையின் தந்தை தொலைபேசியில் அழைத்து, தப்பா நினைக்காதே. உன்னை கூப்பிடாமல் விட்டுப்போச்சு. கட்டாயம் மகன் திருமணத்திற்கு வந்துடுன்னுட்டார். சரி, பெரியவரே கூப்பிட்டபிறகு போகாமல் இருக்கமுடியுமான்னு போய் 2 நாளும் விழாவை சிறப்பித்து வந்தாச்சு. பிறகு சில நாட்கள் கழித்து அவரை இன்னொரு இடத்தில் பார்த்தபோது - உன் (மேற்சொன்ன நல்ல அண்ணன்) உன்னைக் கூப்பிடச்சொல்லி 4முறை சொல்லிட்டான். ஆகவே உன்னை கூப்பிட்டேன் - என்றார்.
அன்றிலிருந்து ஒரே ஒரு வழிதான் பின்பற்றுவது. சொந்தங்களில் ஏதாவது நிகழ்ச்சி வந்து, நமக்கு அழைப்பு இல்லைன்னா, இந்த அண்ணனிடம் - அந்த கடைசி ஒரு வாரத்தில் - பேசக்கூடாதுன்ற முடிவு. உன்னை கூப்பிட்டாங்களான்னு இவர் கண்டிப்பா கேட்பார். அதன்பிறகு நடக்கப்போவதுதான் நமக்குத் தெரியுமே.
நிற்க.
திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு முடிந்தவரையில் சொந்த பந்தங்கள் அனைவருக்கும் நேரில் போய் பத்திரிக்கை கொடுப்பது நல்ல பழக்கம்தான். ஆனால் நேரமேயில்லாமல் அனைவரும் வேகமாக ஓடுகிற இந்த காலத்தில், இதெல்லாம் சரிப்படுமா? எனக்கு உறவினர் யாரேனும் தொலைபேசி, உங்க விலாசம் சொல்லுங்க, அந்தப்பக்கம் வந்து பத்திரிக்கை கொடுக்கணும்னு சொன்னால், நான் சொல்வது இதுதான். ”உங்களை வரவேண்டாம்னு சொல்லலை. தலைக்குமேல் உங்களுக்கு எவ்வளவோ வேலை இருக்கும். பேசாமல் மின்னஞ்சலோ / வாட்சப்போ அனுப்பிவிடுங்க. நான் கண்டிப்பா வந்துடுவேன். சிரமம் வேண்டாம். எனக்குப் பிரச்னையில்லை”. சிலர் சரின்னு வாட்சப்பிடுவாங்க. அது போதும்னு நானும் போய் வந்துடுவேன்.
ஆனா, நமக்கு வாய்த்தவர்கள் அப்படியில்லை. ஒரு முறை அடியேன் செய்த புதுமனை புகுவிழா. அமெரிக்காவிலிருந்து வந்திறங்கிய 2 வாரத்தில் நடத்த நிச்சயிக்கப்பட்டது. வந்தவுடன் ஒரு சிறிய அறுவை சிகிச்சை வேறு. ஒவ்வொருவருக்கா தொலைபேசத் துவங்கினேன். இந்த மாதிரி பிரச்னை, நீங்க கண்டிப்பா வந்துடணும். எல்லாமே சுமுகமா போயிட்டா பிறகு எப்படி? நம் தூரத்து உறவினர் ஒருவர் பிரச்னை செய்தார். ”நேரில் வந்து கூப்பிட்டாதான் வருவோம். என்ன மரியாதை தெரியாம இருக்கீங்க?”. ”சார், இந்த மாதிரி இந்த மாதிரி ஆகவே..”. ”நோ நோ. ரிஜட்டட்”. கடைசியில் நான் சொல்லிட்டேன். ”நீங்க பெரியவங்க. நான் என் பிரச்னையை சொல்லிட்டேன். பெரியவங்களா வந்து ஆசிர்வாதம் செய்ய முடிந்தா நல்லது. இல்லேன்னா அங்கேயிருந்தே சொல்லிடுங்க. நன்றி”ன்னு வெச்சிட்டேன். மனுசன் வந்தாரான்னு கேட்பீங்களே? ஹிஹி. ஆள் வரவில்லை. சரி விடுங்க. இதெல்லாம் ஜகஜம்தான்னு விட்டாச்சு.
சரி கூப்பிட்ட மற்றவர்கள் வந்தாங்களான்னு கேட்டால், அது ஒரு தனி பிரச்னை. கேளுங்க.
RSVP என்னும் மேட்டர் நம்ம மக்களுக்கு என்றைக்கும் தெரியப்போவதில்லை. ஒரு நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்திருக்கு. நீங்க வர்றீங்களா இல்லையான்னு சொல்லணுமா வேண்டாமா? 500-600+ பேர் வரக்கூடிய திருமண நிகழ்ச்சிக்கு இந்த RSVP தேவையில்லை. ஆனா ஒரு சிறிய நிகழ்ச்சிக்கு?.
ஒரு முறை நம் வீட்டில் ஒரு நிகழ்ச்சி நடத்தினோம். வெறும் 20 பேர்தான் சாப்பாட்டுக்கு. அதில் அழைக்கப்பட்ட ஒரு குடும்பத்தில் 6 பேர். கண்டிப்பா வந்துடுவோம் ஜமாய்ச்சிடலாம்னு சொன்னவங்க யாருமே நிகழ்ச்சிக்கு + சாப்பாட்டுக்கு வரவில்லை. நிகழ்ச்சி அவங்க வீட்டிற்கு பக்கத்து தெருவில்தான். இதனால் எனக்கு அவமரியாதை, அவமானம் இதெல்லாம் கிடையாது. மீந்து போகும் சாப்பாட்டிற்கு என்ன கதி? வரலைன்னு சொன்னா தப்பா நினைச்சிப்பாங்களோ? சரி வர்றோம்னு சொல்லிடுவோம். பிறகு போகவேண்டாம். அடேய். சாப்பாடு வீணாயிடும்னு நினைச்சிப் பாருங்கய்யா!!
மறுபடி நிற்க. நாம் செய்த சில குளறுபடிகளையும் சொல்றேன்.
ஒரு கசின் சகோதரி. அவருடைய கணவர் நம்மிடம் நல்லா ஜாலியா பேசுவார். ஒரு காலத்தில், அவருடைய வட்ட திருமணங்களுக்கெல்லாம் எனக்கு பத்திரிக்கை வந்துகொண்டிருந்தது. ஒரு முறை என்ன ஆச்சுன்னா, வீட்டில் இருந்த ஒரு பரிசை Giftwrap செய்து வைம்மா என்று அம்மாவிடம் சொல்ல, அவரும் செய்து வைக்க, நாமும் அதைப் போய் அவருடைய சகோதரரின் திருமணத்தில் கொடுத்துட்டு வந்தோம். ஓரிரு நாட்கள் கழித்துப் பார்த்தால், கொடுக்கணும்னு நினைத்த பரிசு இன்னும் வீட்டிலேயே இருந்தது. அப்படின்னா, நாம் அவருக்கு எதை Giftwrap செய்து கொடுத்தோம்?. கண்டுபிடிக்கவே முடியவில்லை.
சில நாட்கள் கழித்து இன்னொருவர் மூலம் தெரியவந்தது. நம் வீட்டில் பழைய audio cassetteகள் போட்டு வைக்கும் ஒரு டப்பா. தவறுதலாக அம்மா அதைக் கொண்டு போய் Giftwrap செய்துவர, அதையே கொடுத்திருக்கிறோம். மிகப்பெரிய தவறுதான். அடுத்த ஒரு மாதத்தில் அந்த கசினின் கணவரிடம் போய் மன்னிப்பு கேட்டு வந்தேன். ஆனால், தவறு தவறுதானே. நடந்து பல ஆண்டுகள் கழிந்துவிட்டாலும் இன்றுவரை அந்த கசின் கணவர் அதை மறக்கவில்லை. மறக்கக்கூடிய தவறா நாம் செய்திருக்கிறோம்?.
வேறொரு நிகழ்ச்சி. இதே போல் இன்னொரு கசின் சகோதரி. அவர் கணவரின் குடும்பத்துடன் வசித்து வந்தார். நம் வீட்டு நிகழ்ச்சி. கசின் & அவர் கணவரைக் கூப்பிடணும். நான் என்ன செய்தேன்னா, கசின் கணவருடன் பேசிவிட்டு, அவர் பெயரிலேயே பத்திரிக்கையை அனுப்பிட்டேன். ஆனால் நிகழ்ச்சிக்கு அவர்கள் இருவரும் வரவில்லை. என்னடான்னா, வீட்டில் என் அப்பா அம்மா இருக்காங்க. அவர்களையும் கூப்பிட்டு, அவர்கள் பெயரிலேயே பத்திரிக்கை கொடுத்திருக்கணும். அப்படி குடுக்காததால் நான் அந்த நிகழ்ச்சிக்கு வரவில்லைன்னு இன்னொருவர் மூலமாக சொல்லியனுப்பினார்.
நான் கசின் சகோதரியை கூப்பிடணும். கணவருடன் இருக்காருன்னு அவரை கூப்பிட்டேன். அடுத்து அவர் வீட்டில் அனைவரையும் கூப்பிடணும்னா அது முடியுமா? நாம் செய்தது ஒரு சிறிய நிகழ்ச்சி. வந்தா வரட்டும் வரலேன்னா போகட்டும் நான் சொல்லிட்டேன். செய்தது சரியா தவறான்னு தெரியல. வழக்கம்போல் நம் வீட்டில் சிலர் அது தவறுன்னும் சிலர் அது சரிதான்னு சொல்லிட்டிருந்தாங்க. சரி விடுங்க.
இன்னொரு சம்பவம். நம் வீட்டுத் திருமணம். சொந்தங்களை ரெயில் / பேருந்து நிலையங்களிலிருந்து கூட்டி வர / கொண்டு போய் விட என்று ஒரு Vanஐ இரு நாட்களுக்கும் நிறுத்தி வைத்திருந்தேன். Transport-In-charge என்று ஒரு கசினையும் நியமித்து வண்டி வேணும்னா இவரைத் தொடர்பு கொள்ளவும் என்று அனைவருக்கும் சொல்லியிருந்தேன். முந்தைய நாள் இரவு ஒரு குழு வண்டி எடுத்துப் போயிருக்க, இன்னொரு உறவினர் குழு வண்டி இல்லை என்று கோபித்துக் கொண்டனர். இந்த கசின் நம்மிடம் சொல்லாமல் பிரச்னையை தீர்க்கப் பார்க்க, பிரச்னை தீரவில்லை. நாளை நாங்கள் திருமணத்திற்கு வரமாட்டோம்னு சண்டை போட்டு அந்தக் குழுவினர் போய்விட்டனர். பிறகு வந்தாங்கன்றது வேறு விஷயம். இந்த பிரச்னை தெரிந்து, திருமணம் ஆன ஒரு வாரத்தில், அந்த குழுத்தலைவருக்கு தொலைபேசி நான் மன்னிப்பு கேட்டேன். இதுவும் நம் தப்புதான். எல்லாம் ஒரு படிப்பினைதானே?
ஒரு தூரத்து சொந்தம். பல நாள் கழித்து ஒரு நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டாங்க. சந்தோஷமா போய் சாப்பிட்டு(!!) வந்தாச்சு. ஓர் ஆண்டுக்குப் பிறகு அவங்க வீட்டிலேயே இன்னொரு நிகழ்ச்சி (புமபுவி) வந்தது. அதற்கு நமக்கு அழைப்பில்லை. அது பரவாயில்லை. ஆனால், சில நாட்கள் கழித்து அந்த புது வீட்டிற்கே நாம் போக வேண்டிய நிலைமை. அப்போது அவங்க சொல்லிட்டாங்க. ”சாரிப்பா. உன்னை இந்த வீட்டு புமபுவி’க்கு கூப்பிடலை. மறந்துபோச்சு”. நானும் “அச்சச்சோ. சாரி எல்லாம் எதுக்கு? ஒண்ணும் பிரச்னையில்லை. இன்னும் கட்டப்போற அடுத்தடுத்த வீடுகளுக்கு மறந்துடாதீங்க”ன்னு ஒரு மொக்கை ஜோக் அடிச்சி நான் (மட்டும்!) சிரிச்சாச்சு. ஆனா பக்கத்தில் இருந்த ஒரு கசின் விடுவாரா? “ஆமா நீங்க போன ஆண்டு அந்த நிகழ்ச்சிக்கு கூப்பிட்டீங்க. இந்த நிகழ்ச்சிக்கு இவனை கூப்பிடலைன்னு என்னிடம் சொல்லி வருத்தப்பட்டான்”ன்னு சும்மா அடிச்சி விட்டுட்டாரு. நமக்கு வாய்த்த கசின்கள் இப்படிப்பட்ட ரகம். என்னத்த செய்றது.
தன் வீட்டில் எந்த நிகழ்ச்சிக்கும் நம்மைக் கூப்பிடாத கசின் ஒரு முறை என்னிடம் - ”என்னடா, கூப்பிட்டாதான் நிகழ்ச்சிக்கெல்லாம் வருவியா? நாம அப்படிதான் பழகியிருக்கோமா?” என்றெல்லாம் கேட்டார். சாதாரண நாள் என்றால் யார் வீட்டிற்கும் போவதற்கு தயங்காதவன் நான். வெறுமனே தொலைபேசிவிட்டு, ஒரு நல்ல காபி வேணும். வீட்டில் இருப்பீங்களா. இதோ வர்றேன்னு சொல்லி பல முறை பலர் வீட்டிற்கு சென்றிருக்கிறேன். ஆனா திருமணம், புமபுவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு? அவரிடம் நான் சொல்ல நினைத்தது - “அடேய். நான் என் நிகழ்ச்சிக்கு கூப்பிட்டும் நீங்க யாரும் வரவில்லை. பிறகு நிகழ்ச்சி எப்படி நடந்ததுன்னும் கேட்கவில்லை. அப்படியிருக்கும்போது கூப்பிடாமல் யார் வருவாங்க சொல்லு”. ஆனால் வழக்கம்போல் இதைக் கேட்கவில்லை.
இவ்வளவு பேசிவிட்டு ‘மொய்’ மறந்துட்டேன் பாருங்க. மக்கள் இந்த மொய் விஷயத்தில் ஏன் இவ்வளவு டென்சன் ஆகுறாங்கன்றது நமக்கு என்றைக்கும் புரியாத விஷயம். அவன் திருமணத்தில் அவன் எனக்கு இவ்வளவுதான் / இதுதான் கொடுத்தான். அதனால் நானும் இவ்வளவுதான் கொடுப்பேன். அவன் சக்திக்கு எவ்வளவோ கொடுக்கலாம். ஆனால் கொடுக்கவில்லை. திருமணங்கள் / நிகழ்ச்சிகள் முடிந்தும் எப்போதும் ஓயாத பேச்சுன்னா அது மொய் பற்றியதுதான்.
ஒரு நிகழ்ச்சிக்கு அழைப்பு / பத்திரிக்கை வருது. தவிர்க்க முடியாத காரணங்களால் நம்மால் போகமுடியவில்லை. அந்த சமயத்தில், மொய் மட்டும் யாரிடமாவது கொடுத்து அனுப்பணுமா? இதற்கு நம் சொந்தங்கள் பலர் சொல்லும் பதில் - யெஸ். நீ வரலேன்னாலும் பரவாயில்லை. மொய் கொடுத்து அனுப்பு. என் கேள்வி - ஏன்?. நான் போகாத நிகழ்ச்சிகளுக்கு நான் மொய் / பரிசு கொடுப்பதில்லை. தகராறு ஆனா ஆகட்டும்னு விட்டுடறது. மிடியல.
இப்போதைக்கு இங்கே நிறுத்திக்குவோம். சொல்வதற்கு இன்னும் பற்பல சம்பவங்கள் இருப்பதால், அடுத்த பாகம் வந்தாலும் வரும்.
***