Tuesday, June 29, 2010

FeTNA-2010 : 23ம் ஆண்டு விழா

1 சென்ற வருடம் எங்க ஊர் தமிழ்ச் சங்கத்தில் தீபாவளி விழா. முதல்முறையாக நாங்க போனோம். அப்பத்தான் சொன்னாங்க அடுத்த வருடம் பேரவை விழா இதே ஊரில்தான் நடக்குதுன்னு.


2 அடுத்த நாள் பழமைபேசி அண்ணனுக்கு முதல்முறையாக தொலைபேசறேன் - அண்ணே. நான் ஏதாவது உதவி செய்யமுடியுமா?


3 அடுத்த நாள் பேரவை செயலரிடமிருந்து தொலைபேசி வருது. - மிக்க மகிழ்ச்சி. இன்னும் வேலைகள் துவங்கலே. நான் உங்களுக்கு மின்னஞ்சல் செய்யறேன்.


4 ஜனவரி மாதம் - மெதுவா மின்னஞ்சல்கள் வரத் துவங்குகின்றது. தன்னார்வலர்கள் கூட்டத்திற்கு கூப்பிடுறாங்க. ஓரிரு நண்பர்கள் கிடைக்குறாங்க.


5 பிப்ரவரி மாதம் - குழுக்கள் அமைக்கப்படுகின்றன. என்னையும் இரு குழுக்களில் போடுகின்றனர். இரு வாரங்களுக்கொரு முறை தொலைபேசியிலும் மாதமொருமுறை சந்திப்பும் துவங்குகின்றன.


6 மார்ச் மாதம் - குழுக்கள் பரபரப்பாகின்றன. வாரநாட்களில் பல்வழி அழைப்புகள் ஆரம்பம். வாரயிறுதிகளிலும் வேலை வருகின்றது.


7 ஏப்ரல் மாதம் - இப்போது நான் மூன்று குழுக்களில். இரண்டில் தலைமை. வாரத்தில் மூன்று பல்வழி அழைப்புகள். அதில் பேசியவைகளை வைத்து வேலைகள் செய்கிறோம். மின்னஞ்சல்கள் பெருகுகின்றன.


8 மே மாதம்: அனைத்து நாட்களும் பல்வழி அழைப்புகள். ஒரு நாளைக்கு கு.ப 10 மின்னஞ்சல்களுக்கு பதில் போட வேண்டியிருக்கிறது. வாரயிறுதியில் ஒரு நாள் வேலை. வீட்டில் மெதுவாக 'ப்ச்' என முணுமுணுப்புகள் துவங்குகின்றன. அலுவலக வேலைகளுக்கு இதுவரை பங்கமில்லை.


9 ஜுன் மாதம்:அலுவலகம் பல நாட்கள் மட்டம் போட்டு இந்த வேலை செய்யவேண்டிய நிலை. வீட்டில் அன்றாடம் செய்யும் வேளைகளில் சுணக்கம். தினமும் பல்வேறு அழைப்புகள். ஏகப்பட்ட மின்னஞ்சல்கள். வாரமொருமுறை கூட்டம்.


10. ஜுலை 3, 4, 5: ஆறு மாத உழைப்புக்கு பலன் கிடைக்கும் மாதம். இன்னும் மூன்று நாட்களில் விழா. வேலைகள் உச்சக்கட்டத்தில். அனைத்து தன்னார்வலர்களும் தயார் நிலையில்.

**********

இதுக்கு மேல் அடிக்க நேரமில்லை எனக்கு. அதனால் விழாவுக்கு வாங்க. அங்கே சந்திப்போம்.

**********

Read more...

Thursday, June 24, 2010

சிகரெட் நாற்றம் எனக்குப் பிடிக்காது...


ச்சின்ன வயசிலேந்தே எனக்கு இந்த சிகரெட் நாற்றம் (சில பேரு வாசனைன்னு சொல்லுவாங்க!) பிடிக்காது. நல்ல வேளையா எங்க வீட்டுலே யாரும் சிகரெட் பிடிக்க மாட்டாங்க. ஆனா, மத்த பொது இடங்கள்லே சிகரெட் பிடிக்கறவங்களால் எப்பவும் பெருந்தொல்லைதான்.



அலுவலகத்தில் அப்பப்போ டீ குடிக்கப் போகும்போது, கூட வர்ற நண்பர்கள் தம் பத்த வைப்பாங்க. அவங்ககிட்டே ”ஏண்டா இப்படி சிகரெட் குடிச்சி உங்க உடம்பை கெடுத்துக்கறது பத்தாமே என் உடல்நலத்தையும் கெடுக்குறீங்க? இந்த கண்றாவியை விட்டுத் தொலையுங்களேன்" - அப்படின்னு நான் சொன்னா ஒருத்தனாவது கேட்டாதானே. சிரிச்சிக்கிட்டே "தம் அடிக்குறதால்தான் எங்களுக்கு மன நிம்மதியே கிடைக்குது. உனக்குப் பிடிக்கலேன்னா தள்ளி நில்லு".




சிகரெட் குடிக்கக்கூடாதுன்னு சிறுவர்கள் பள்ளியில் படிக்கும்போதே சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கணும். சிகரெட் குடிக்கறதால் வரக்கூடிய நோய்கள், சும்மா பக்கத்தில் நின்று அந்த புகையை சுவாசிக்கிறதால் வரக்கூடிய பிரச்சினைகள் - இதையெல்லாம் தெளிவா பசங்களுக்கு புரியற மாதிரி பாடம் நடத்தணும். இதெல்லாம் நான் சொன்னா யாரு கேக்குறாங்க?



நான் அடிக்கடி நினைச்சிக்குவேன். இந்த விமான நிலையத்துலே இன்னும் சில இடங்கள்லே, சிகரெட் பிடிக்கறவங்களுக்குன்னு தனியா இடம் ஒதுக்கியிருப்பாங்க. அதே மாதிரி ஒவ்வொரு ஊரிலும் இவங்களுக்கு தனியிடம் கொடுத்துட்டு - அங்கேதான் இனிமே தம் அடிக்கணும்னு சொல்லிடணும்னு.



முடிஞ்சா இவங்களுக்காக ஒரு தனி ஊரே உருவாக்கிட்டு - அதுக்கு தம்பரம் (தாம்பரம் மாதிரி!) அப்படின்னு பேரு வெச்சி எல்லாரையும் அங்கே அனுப்பிட்டா, மத்தவங்க இந்த சிகரெட் புகைலேந்து தப்பிக்க முடியும். நான் ஒரு நாள் முதல்வரானா போடும் முதல் கையெழுத்து இந்த தம்பரம் நகருக்குதான் இருக்கும். (அடுத்தது ஸ்விஸ் வங்கி கணக்கு அப்ளிகேஷன்!).




சரி விடுங்க. நாம எவ்வளவு சொன்னாலும் இவங்க யாரும் கேக்கப்போறதில்லே. நம்மாலே முடிஞ்சது இந்த சிகரெட் புகையிலேந்து தப்பிக்க அந்த கடைப்பக்கம் ஒதுங்கிக்குவோம்.




“தம்பி, காஜா பீடி ஒரு கட்டு எடுப்பா...”.




என்ன ஆச்சு? உங்களுக்கும் இருமலா? கொஞ்சம் தள்ளி நிக்கவேண்டியதுதானே?




*****




Read more...

Wednesday, June 23, 2010

நாலு பேர் ஆறு விதமா..

பணம் இன்னிக்கு வரும். நாளைக்கு போகும். அதுக்காக வராமே இருக்கறதா?

எப்போ அமெரிக்காவுக்கு போனானோ அப்பவே உறவினர்களையெல்லாம் மறந்துட்டான்.

வேலை என்ன பெரிய வேலை. இது இல்லைன்னா வேறே வேலையே கிடைக்காதா என்ன?

இரண்டு மூணு நாள் கூட விடுமுறை கிடைக்கலேன்னா, அலுவலகமே இவன் தலையில்தான் ஓடுதா என்ன?

வீட்டுக்கு பெரியவனா முன்னிருந்து நடத்த வேணாமா? இப்படியா தொலைபேசியில் விசாரிக்கறது?

எல்லாம் பணம் பண்ற வேலை. அந்த காலத்துலே எப்படி இருந்தோம்னு நினைச்சி பாக்க வேணாமா?

*****

இப்படி எல்லோரும் எதைப் பத்தி பேசறாங்க? விவரங்கள் இடுகையில்..

*****

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 23வது ஆண்டு விழாவில் மாபெரும் பதிவர் சந்திப்பு ஒன்று நடக்க இருக்கிறது. பதிவர்களும், அனானிகளும், மற்றும் அனைவரையும் வருமாறு அழைக்கிறேன்.

உள்ளூர் அண்ணன் விழாவின் பிரச்சார பீரங்கி (மாதிரி!) பழமைபேசியும், வெளியூர் அண்ணன் அப்துல்லா அவர்களும் பங்கேற்கிறார்கள். அனைவரும் வருக, ஆதரவு தருக!!!

*****

ஒவ்வொரு வருடமும் பள்ளி ஆண்டு முடிவடையும்போது சஹானாவின் வாத்திகளிடம் ஒரு சின்ன நோட்டு கொடுத்து, சஹானாவைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் எழுதுமாறு சொல்வோம்.

மூன்றாவது வருடமாக இந்த வருடமும் எழுதி வாங்கியிருக்கிறோம். கடந்த வருடங்களின் குறிப்புகளை இப்போது படித்தாலே பரவசமாய் இருக்கும்போது இன்னும் 15-20௦ வருடங்கள் கழித்துப் படித்தால் எப்படி இருக்கும்? ஏய் யாருப்பா அது பின்னாலே - 15 வருடம் கழிச்சி வா, எப்படி இருந்துச்சுன்னு சொல்றேன்னு சொல்றது?)

*****

ரொம்ப நாளைக்கு முன்னாடியே மின்னூல் கிடைத்தாலும், புத்தகம் வாங்கித்தான் படிக்கணும்னு இருந்தது - சேத்தன் பகத்தின் 2 States. பஞ்சாப் பையனுக்கும், தமிழ் பொண்ணுக்கும் நடுவே ஒரு ’இது’. பல தடைகளைத் தாண்டி ’அது’ எப்படி திருமணத்துலே முடியுதுன்னு புத்தகம்.

போன தடவை இந்தியா போயிருந்தபோது அந்த புத்தகத்தை வாங்கி வந்து - ஓய்வறையில் படிச்சி படிச்சி ஒரு வழியா படிச்சி முடிச்சேன். நிறைய பேர் ஏற்கனவே படிச்சிட்டிருப்பீங்க. கதையில் வர்ற தமிழ்க்குடும்பம் மூலமா தமிழர்களை நல்லா வாரியிருக்காரு சேத்தன்.

கதையில் வர்ற தமிழ் வார்த்தைகளுக்கெல்லாம் பொருள் கேட்கும் என் குழுவிலிருக்கும் (இந்தியப்) பெண்களுக்கு நான் சொல்லும் பதில் வெறும் ‘ஙே’தான். ஏன்னு கேக்குறீங்களா? அட. புத்தகத்தில் அங்கங்கே அக்மார்க் தமிழ் கெட்ட வார்த்தைகள். அதுக்கெல்லாம் பொருள் சொல்லமுடியுமா? அதுவும் பொண்ணுங்க கிட்டே போய்? இந்த விளையாட்டுக்கே நான் வரலேப்பா!!!

*****

இந்த வாரயிறுதியில் சென்னையில் என் கூடப்பிறந்த (கூடன்னா கூடவே இல்லை. ஒரு நாலு வருஷம் தள்ளி!) தம்பிக்கு திருமணம். பல்வேறு காரணங்களால் என்னால் போக முடியவில்லை. வரமுடியாதுன்னு பல மாதங்களாய் சொன்னாலும், கடைசி நிமிடத்தில் <இடுகைத் தலைப்பு> பேசத்தானே செய்வாங்க.

*****

Read more...

Thursday, June 17, 2010

வேலையை துவக்குறதுக்கு முன்னாடி என்ன செய்வீங்க?

தினமும் அலுவலகத்திற்கு போனவுடன் வேலையை துவக்குறதுக்கு முன்னாடி என்ன செய்வீங்க? மக்கள்கிட்டே இப்படி கேட்டா அவங்க என்ன சொல்வாங்கன்னு பாத்துட்டு, கூடவே நான் வேலை ‘பாத்த’ இத்தனை (எத்தனை?) வருட அனுபவத்தில் என்ன நடந்ததுன்னு ஒரு கொசுவத்தி...

*****

மக்கள்: காலையில் வந்ததும் நான் என் மேஜையில் இருக்கும் சாமி படங்களை கும்பிட்டுதான் வேலையை துவக்குவேன்.

கொசு: நான் முதன்முதல்லே வேலை செய்த அலுவலகத்தில் ஒரு வயசான மேனேஜர் இருந்தாரு. அவரு அறைக்குள் நுழைந்தாலே கோயிலுக்குள் நுழைந்த மாதிரி - ஏகப்பட்டு சாமிகளின் படங்கள் இருக்கும். காலங்கார்த்தாலே வந்தவுடன், ஒரு அஞ்சு நிமிடம் பூஜை செய்துட்டு - கற்பூரம் காட்டி, பாதாம் முந்திரி இதையெல்லாம் படைச்சிட்டு பிறகு
அதை எங்களுக்கு கொடுப்பாரு. என்னதான் அவசர வேலையிருந்தாலும் பூஜை செய்யாமே வேலையை துவக்க மாட்டாரு.

அப்போ நான் ரொம்ப வீக்கா இருந்தேனா, அதனால் அவரு இல்லாத நேரத்துலே கடவுளுக்காக வெச்சிருந்த பாதாம், முந்திரியெல்லாம் அப்படியே எடுத்து சாப்பிட்டிருந்தேன்னு அவருக்கு இந்த தேதிவரைக்கும் தெரியாது. நீங்களும் சொல்லிடாதீங்க.

*****

மக்கள்: காலங்கார்த்தாலே சூடா ஒரு காபி அடிச்சபிறகுதான் வேலை.

கொசு: இன்னொரு அலுவலகத்துலே 9 மணிக்கு போனவுடனேயே சுடச்சுட காபி கொண்டு வந்து கொடுத்துடுவாங்க. அதுலே சுக்கு அப்புறம் என்னத்தையோ போட்டு கொடுப்பாங்களா, நாள்முழுக்க நாக்கு அரிச்சிக்கிட்டே இருக்கும். அப்படியும் விடாமே ஒரு கையால் (என்) நாக்கை சொறிஞ்சிக்கிட்டு, இன்னொரு கையால் வேலை செய்துட்டிருப்பேன்னா, என் கடமையுணர்ச்சிக்காக பாராட்டு விழா ஏற்பாடு பண்ணவங்க நிறைய பேரு. (அவங்கல்லாம் யாருன்னு இப்ப கேக்காதீங்க!).

*****

மக்கள்: தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் விமர்சன வம்புதான் முதலில். அப்புறம்தான் வேலை.

கொசு: சென்னையில் வேலை செய்த அந்த சமயத்தில் 'மெட்டி ஒலி' ரொம்ப பரபரப்பா ஓடிட்டிருந்தது. கூட வேலை செய்த சில நண்ப / நண்பிகளுக்கு காலையில் வந்தவுடனேயே அதைப்பற்றி பேசலேன்னா வேலையே ஓடாது. ஒரு பத்து நிமிடம் குடுப்பா/ம்மா, மின்னஞ்சல் பாத்துட்டு வந்துடறேன்னு சொன்னா, ம்ஹூம் கேட்டாதானே..


மேனேஜருக்காக பயந்து எல்லோரும் தனித்தனியா கிளம்பி போய், காபி குடிக்குற இடத்துலே உக்காந்து 'மெஒ' பத்தி பேசிட்டம்னா.. ஹிஹி.. அடுத்த அரை மணி நேரத்துலே மறுபடி காபி குடிக்குற வரைக்கும் வேலை நல்லா ஓடும்.

*****

மக்கள்: வீட்டுலே செய்திகளை பார்க்க எங்கே நேரமிருக்கு? அதனால், அலுவலகத்தில் முதல் வேலை அதுதான்.

கொசு: இப்படித்தான் ஒரு நண்பன் இருந்தான். ஆங்கில, தமிழ் பத்திரிக்கைகளை (கணிணியில்) திறந்து வெச்சிக்கிட்டு செய்திகளை ஒப்பிட்டு, அலசி, படிச்சப்புறம்தான் வேலையை ஆரம்பிப்பான். ஏதாவது ஒரு நாள் பரபரப்பு செய்திகள் ஒண்ணுமில்லேன்னா, அன்னிக்கு முழுதும் ரொம்பவே கவலையா இருப்பான். இப்படித்தான் நிறைய பேரு பரபரப்புக்காகவே சுத்தறாங்க. சரிதானே?

*****

இன்னும் சில பேரு சொந்த மின்னஞ்சல், அப்புறம் சில பேரு ஓய்வறைக்குப் போய் ஒப்பனை ( நானில்லைங்கோ!) - இப்படியாக பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பிறகு ஒரு வழியா வேலையை துவக்க உக்காருவாங்க.

*****

அது சரி. இவ்ளோ சொன்னியே, வேலையை துவக்கறதுக்கு முன்னாடி நீ என்ன செய்வேன்னு கேக்குறீங்களா? அட சும்மா கேளுங்க..

சரி கேட்டாச்சா?...

போங்க பாஸு.. அதை யாராவது வேலை செய்யறவங்ககிட்டே போய் கேளுங்க. ச்சின்னப்புள்ளத்தனமா என்கிட்டே கேட்டுக்கிட்டு...

*****

Read more...

Tuesday, June 8, 2010

பாசம், பொறுமை, சண்டை மற்றும் தமிழ் விழா!

திடீர்னு எங்க வீட்டு பக்கத்தில் இருக்கிற ரெண்டு - மூணு பேரு எங்கிட்டே பேசறத நிறுத்திட்டாங்க. முன்னாடி மெதுவா புன்னகை புரிஞ்சவங்க, பின்னாடி பற்களை கடுகடுன்னு கடிக்கறாங்க. அப்படி என்னதான் ஆச்சு... கீழே படிங்க...

*****

அப்பா வந்துட்டாருடா செல்லம்.
குட் நைட்,
குட் மார்னிங்,
பசிக்குதாடா கண்ணு

அப்படின்னு "அவங்க"கிட்டேயும்

சத்தம் போடாதீங்க. "அவங்க" தூங்கறாங்க
விளக்கை அணைங்க. "அவங்களுக்கு" தொந்தரவா இருக்கில்லே

அப்படின்னு எங்க கிட்டேயும் சொல்லிட்டிருந்தாங்க சஹானா.

(நாங்க = நாங்க. அவங்க = மீன்கள்)

அவங்களுக்கு சாப்பாடு போடறது, தொட்டியை சுத்தம் பண்றது, தூசு தும்பு அவங்களை பாதிக்காமே பாக்குறது - அப்படி இப்படின்னு வேலைங்க கூடிப்போச்சு.

வாங்கின புதுசுலே தொட்டி பக்கத்துலே போனாலே அலறி அடிச்சி ஓடிட்டிருந்த ஸ்வீட்டியும், ப்யூட்டியும் - நாலு வாரத்துலே தைரியமா முன்னாடி வந்து நிக்க ஆரம்பிச்சாங்க.

திடீர்னு ஒரு நாள் ப்யூட்டி குப்புற கவுந்தடிச்சி படுத்திருந்தாங்க. ஒண்ணுமே புரியல. சஹானா அவங்களை மருத்துவர்கிட்டே கூட்டிட்டு போகணும்னு அடம் பிடிக்குறாங்க. அவங்க வாத்தி வீட்டுலேயும் இப்படித்தான் ஆகி, பின்னாடி மருத்துவர்கிட்டே போய் சரிசெய்தாங்கன்னு அழுகை.

நமக்கு இருக்கவே இருக்கு கூகிள். என்ன ஆச்சுன்னு ஆராய்ச்சி பண்ணினா - வயித்துலே காத்து போயிட்டா மீன் அப்படித்தான் கவுந்தடிச்சி படுத்திருக்கும்னும், 90% உயிருக்கு பிரச்சினையிருக்காதுன்னும்
போட்டிருந்துச்சு.

அங்கு போட்டிருந்தபடியே மறுபடியும் தண்ணியை சுத்தம் பண்ணிட்டு, கடவுளை வேண்டிக்கிட்டு இரவு படுக்கப் போனோம்.

காலை 5 மணி.

ப்யூட்டி நினைப்பிலேயே படுத்திருந்து, எழுந்து வந்து பார்த்தால் - ம்ஹூம். பேச்சு மூச்சு இல்லை. சஹானா எழுந்து வர்றதுக்குள்ளே அவங்களை எடுத்து அப்புறப்படுத்தியாச்சு.

மருத்துவர்கிட்டே கூட்டிட்டு போகலாம்னு நான் அப்பவே சொன்னேனேன்னு எழுந்து வந்த சஹானா அழ ஆரம்பிச்சாங்க.

இன்னும் பெரிய தொட்டி, கூடுதல் மீன்கள் வாங்கித் தர்றேன்னு சமாதானப்படுத்தியாச்சு.

இணையத்தில் போட்டிருந்த மாதிரியே - மூழ்கக்கூடிய சாப்பாடு, அடிக்கடி சுத்தம்னு எல்லாமே சரியா செய்தாலும், ப்யூட்டி போனதுலே மனசு ரொம்பவே கஷ்டமா போயிடுச்சு.

நாயை / பூனையை 'ஆம்புலன்ஸ்' வெச்செல்லாம் காப்பாத்த முயற்சிக்கிற அமெரிக்கர்களை கேலி செய்த மனம் - இப்ப மெல்ல மாறுது. அந்த பாசம் புரியுது.

*****

இ.கோ.மு.சிங்கம் அப்படின்னு ஒரு படத்தை பாக்க ஆரம்பிச்சோம். நகைச்சுவை இப்ப ஆரம்பிச்சிடும், அப்ப ஆரம்பிச்சிடும்னு ஒரு 20 நிமிடம் போயிடுச்சு. பொறுமை பொறுமைன்னு எழுந்து போகவிருந்த தங்கமணியை உக்கார வைக்கிறேன்.

படத்துலே வி.எஸ்.ராகவன் மெதுவ்வ்வ்வ்வ்வா நடந்து போய் அந்த தலைவன்கிட்டே ஏதோ கேட்டுட்டு மறுபடி மெதுவ்வ்வ்வ்வா நடந்து வரும்போதே ஏதோ மொக்கையா சொல்லப்போறாருன்னு தெரிஞ்சி போச்சு.

அவரும் "கு*" விட்டுக்கலாம்னு சொல்லிட்டாருன்னு சொன்னவுடனே - இருக்குற ஒட்டுமொத்த பொறுமையும் போய் இதுக்கு "சுறா"வே மேல்னு சொல்லி அதை பாக்க ஆரம்பிச்சிட்டோம்.

ஆரம்ப பத்து, இருபது நிமிடங்கள் மட்டும் பார்த்த தமிழ் படங்களின் எண்ணிக்கை கூடிக்கிட்டே போகுது.

*****

சஹானாவை பார்க்கிற அமெரிக்கர்கள் - எப்பவுமே ஏதாவது பேசுவாங்க. அப்புறம் - உங்க பொண்ணு ரொம்ப அழகா இருக்கான்னு சொல்லிட்டு போவாங்க.

அப்படி ஒரு நாள் நாங்க மின்தூக்கியில் போயிட்டிருந்தபோது - கூட நாலைஞ்சு பேர் இருந்தாங்க. அதில் ஒரு அம்மா - மேலே சொன்னதையே சொன்னாங்க.

அதுக்கு நான் சொன்னதைக் கேட்டுதான் - அதுக்கப்புறம் அவங்க யாருமே என்னை பாத்து பேசறத நிறுத்திக்கிட்டாங்க. அப்படி நான் என்ன தப்பா சொல்லிட்டேன்னு எனக்கு புரியல. நீங்களே நியாயத்தை கேளுங்க.

சரி - நான் என்ன சொன்னேன்னுதானே கேக்குறீங்க? நான் சொன்னது - "ஆமா. அவ என்னை மாதிரி".

*****

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 23ம் ஆண்டு விழா அடுத்த மாதம் வருது. விவரங்களுக்கு http://www.fetna.org/ பார்க்கவும். இங்கே வடகிழக்கில் இருக்கும் பதிவர் நண்பர்களை விழாவுக்கு வருமாறும், தன்னார்வலர்களாக செயல்புரிய முன்வருமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

அண்ணன் பழமைபேசியை முதல்முறையும், இந்தியாவிலிருந்து வரும் மாண்புமிகு அண்ணன் அப்துல்லா அவர்களை மறுபடியும், பார்க்க ஆவல் கொண்டுள்ளேன். விழாவுக்காக தன்னலம் கருதாமல் உழைக்கும் திரு.விஜய்
மணிவேல் பற்றிய பழமைபேசியின் இடுகை இங்கே.

*****

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP