Monday, February 25, 2008

தமிழகத்தில் ஒரு புதிய கட்சி தொடங்க என்னவெல்லாம் தேவை?

ஒரு அரசியல் கட்சி தொடங்கவேண்டும் என்று வந்த நண்பருக்காக ஒரு பட்டியல் தயார் செய்துள்ளேன். இந்த பட்டியல் சரியாக இருக்கிறதா என்று பார்த்து உங்கள் மேலான கருத்துக்களைக் கூறவும்.

கட்சிப் பெயர்:
கீழ்க்கண்ட சொற்களை முன்னும் பின்னும் இடம்மாற்றிக்கொள்ளவும்.
திராவிட, கழகம், முன்னேற்ற, அகில இந்திய, கட்சி, மக்கள்,

கட்சிக் கொடி:
கறுப்பு, மஞ்சள், சிகப்பு - இந்த வர்ணங்களில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

வாரிசு:
இது உன் வாரிசு/வாரிசுகளைப் பற்றி அல்ல. நீ யாருடைய வாரிசு என்று இப்போதே தீர்மானம் செய்து கொள்ளவும். ஏற்கனவே வேறு யாராவது - அந்த தலைவரின் வாரிசு என்று கூறிக்கொண்டிருந்தால் நலம். (அப்போதுதான் நீ விரும்பாமலேயே உனக்கு விளம்பரம் கிடைக்கும்).

கட்சி ஆரம்பிக்கும் நாள்:
மேற்கூறிய உன் வாரிசு-தந்தையின் பிறந்த/இறந்த நாளில் கட்சி தொடங்கலாம்.

மக்கள் தொடர்பு:
1 தொலைக்காட்சி
1 தொலைக்காட்சி - செய்திகளுக்காக மட்டும்.
1 செய்தித்தாள் (காலை)
1 செய்தித்தாள் (மாலை)
1 செய்தித்தாள் - கட்சித் தொண்டர்களுக்காக

மனித வளம்:
1 அமைச்சர் - எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் இருந்திருந்தால் நலம்.
1 கவிஞர்
1 கவிதாயினி
1 வாரிசு - (வாரிசுகள் 3 இருந்தால் நலம். 1-டெல்லிக்கு; 1-தமிழ் நாட்டுக்கு; 1-கட்சிக்கு)
1 பேச்சாளர் - (ஆபாசமாக பேசத் தெரிந்தால் நலம்)
மற்றும் சில நடிக, நடிகையர்.

கொள்கை:
நம் கட்சித்தலைவர், முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வேண்டும். இதுதான் ஒரே கொள்கை.

கூட்டணி:
இப்போதைக்கு இல்லை என்று கூறவும். பின்னர் ஒவ்வொரு தேர்தலுக்கும் வெவ்வேறு கூட்டணியில் இருக்கலாம். (அப்படி இருந்தாலும், யாரும் ஒன்றும் சொல்லபோவதில்லை என்று தெரிந்துகொள்).

எதிர்காலத் திட்டங்கள் (மாநிலத்துக்கு/ நாட்டுக்கு):
1. ஏதாவது ஒரு இடத்தின் பெயரை தமிழ்ப்படுத்த வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டு செய்தால் நலம். (இது தமிழுக்கு நீ என்ன செய்தாய் - என்று யாரும் கேட்டு விடாமல் இருக்க).

2. யாராவது ஒரு பழைய தலைவருக்கு ஒரு மணி மண்டபம் மற்றும் ஒவ்வொரு ஊரிலும் சிலை. (ஏதாவது ஒரு சிலையாவது சேதமாகாதா என்ன?.. அதை வைத்து கூட்டம் சேர்த்து பெரிய நிலைக்கு வந்து விடலாம்).

3. ஏதேனும் ஒரு மாவட்டத்தை இரண்டாக பிரிக்கச் சொல்லலாம். அல்லது சென்ற ஆட்சியில் சேர்ந்த இரு மாவட்டங்களை பிரிக்கச் சொல்லலாம். (இது அந்தந்த மாவட்ட மக்களை கவர்வதற்காக).

4. இலவசங்கள்: தற்போதைய கட்சிகள் தரும் இலவசங்களைக் குறித்து கொள்ளவும். அவற்றில் இல்லாத ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு அதை இலவசமாக தருவதாக அறிவிக்கவும்.

5. விடுதலைப்புலிகள் பிரச்சினை, சேது சமுத்திர விவகாரம் - இவைகளைப் பற்றி யாராவது கேட்டால் - 'செயற்குழு' கூடி முடிவெடுக்கும் என்று கூறவேண்டும். வருங்காலத்தில் நாம் அமைக்கப்போகும் கூட்டணியைப் பொறுத்துத்தான் நம் கருத்தும்/திட்டமும் அமையும் என்று உனக்குத் தெரியவேண்டும்.

எதிர்காலத் திட்டங்கள் (கட்சிக்கு) :
மேலே பார்க்கவும். அங்கே சொன்ன எல்லாம் நாட்டுக்கு என்றா நினைத்தாய்? அனைத்தும் கட்சி வளர்ச்சிக்காகத்தான்.

பணம்:
இது பற்றி என்னால் எழுத்தில் தர முடியாது. நேரில் பேசிக் கொள்ளலாம்.

பிகு:
நல்ல யோசனைகள் சொல்பவர்களுக்கு ஏதாவது ஒரு கட்சிப் பதவி தரப்படும் என்பதை கட்சியின் பொருளாளர் என்ற முறையில் தெரிவித்துக்கொள்கிறேன்.

4 comments:

Gnaniyar @ நிலவு நண்பன் February 25, 2008 at 1:46 PM  

ரொம்பத்தான் நக்கல்..பாருங்க ஆட்டோ வரப்போகுது. :)

துளசி கோபால் February 25, 2008 at 4:04 PM  

இந்தியாவுக்குத் திரும்பி வந்தால் என்ன செய்யலாமுன்னு ஒரு யோசனை இருந்தது.

ஆசிரமம்னு முடிவு செஞ்சுருந்தேன். இப்ப உங்க பதிவைப் படிச்ச பிறகு இதுவும் வரும்படிக்கு நல்ல ஐடியாவாத்தான் இருக்கு.:-))))

நன்றி.

சின்னப் பையன் February 25, 2008 at 5:38 PM  

நிலவு நண்பன்:
இல்லையே... நான் கால்-டாக்ஸிதானே கூப்பிட்டேன்?.. நன்றி...:-)

துளசி மேடம்:
வருகைக்கும் தொடரும் ஆதரவுக்கும் நன்றி....:-)

Anonymous,  February 25, 2008 at 5:56 PM  

பெயர்:திராவிட இடதுசாரி முன்னேற்றக் காங்கிரசு.
கொள்கை:பதவியும் பணமும்.
உறுப்பினர்:ஆளுயர மாலை போடுவோர் மட்டும்.
திறமை:சிரித்துக் கொண்டே பொய் சொல்ல வேண்டும்.
படிப்பு:பணம் கொண்டு வாருங்கள்,பட்டங்கள் தருகிறோம்.
மக்கள் :மண்ணாங்கட்டி.இலவசம் தந்தால் ஓட்டு போடுவார்கள்.
சினிமா:மார்க்கெட் குறைந்த உடன் வரவும்.பதவி உண்டு.
பேச்சு:பொய்,பொய் தவிர வேறு எதுவும் இருக்கக் கூடாது.
செயல்:பகலில் பல்லிளிப்பு,இரவில் பணம் எண்ணுதல்.
தேர்தல்:பதவிக்கு எது வேண்டுமானாலும் செய்யலாம்,சொல்லலாம்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP