Tuesday, October 26, 2010

கடவுள் கண்டிப்பா இருக்கார்..!!

ஆத்திகர்கள், நாத்திகர்கள், இருந்தா நல்லாயிருக்குமேன்னு சொல்றவங்க - இவங்க யாருக்குமே இந்த பதிவுலே தீனி எதுவும் கிடையாது. வழக்கம்போல் மொக்கைதான். அதனால்...

*****

வீட்டுலே நான் வேலை எதுவுமே செய்யாமே - கால் மேல் கால் போட்டு உக்காந்திருக்கேன்னு - நாக்கு மேல் பல்லு போட்டு பேசறவங்களுக்கு, அவங்க தப்புன்னு நிரூபிக்க ஒரு வலுவான ஆதாரம் கிடைச்சிடுச்சு. கீழே பதிவில்.

*****


ச்சின்ன வயசிலேந்து உலகத்தை வாங்கணும்னு ஆசை. ..ன்னா ..யே இல்லை. உலக உருண்டையைத்தான் சொன்னேன். பள்ளியில் தலைமை ஆசிரியர் மேஜையில் உ.உ ச்சும்மா
கொலுவிற்காக வெச்சிருந்ததை பாத்ததிலிருந்து - வீட்டிலேயும் ஒண்ணு வேணும்னு கேக்கணும்னு பாப்பேன். ஒண்ணு கேட்டா ரெண்டு கிடைக்கும் முதுகுலே. அதனால் கேக்காமே விட்டுடுவேன்.

சமீபத்தில் இங்கே பழைய பொருட்களை விற்கும் கடை ஒண்ணு. வெளியிலிருந்து பாத்தபோதே பெரிய உ.உ ஒண்ணு உள்ளே இருப்பது தெரிஞ்சுது. சரின்னு உள்ளே போனா அங்கே ஒரு தாத்தா உ.உ.வை சுத்தவிட்டு பாத்துட்டிருந்தாரு.

அங்கிருந்ததோ ஒரே ஒரு உ.உ.தான். அதையும் இந்த தாத்தா விடாமே சுத்திட்டிருந்தாரு. ச்சின்ன வயசிலே உலகத்தை சுத்தி வரணும்னு ஆசையோ என்னவோ.. அல்லது காணாமல் போன அவங்க ஊரு ஆண்டிலேண்ட் (like ஆண்டிப்பட்டி) தேடிட்டிருந்தாரோ தெரியல. ரெண்டு.. நாலு.. ஆறு நிமிஷமாச்சு. அவரும் நகர்ற மாதிரியில்லே. அதை வாங்கற மாதிரியும் தெரியல.

இது வேலைக்காகாதுன்னு அவர்கிட்டேயே போய் - ஐயா, நீங்க வாங்கப் போறீங்களா.. இது எனக்கு வேணும்னு கேட்டுட்டேன். மனுசன் அசராம - யெஸ். இது எனக்கு வேணும்னு சொல்லிட்டாரு.

இருந்தாலும் நப்பாசை. கடைக்குள்ளேயே சுத்திட்டிருக்கலாம்னு முடிவு பண்ணியாச்சு. தங்ஸ் ஒரு பக்கம், நான் இன்னொரு பக்கம்னு நின்னு அவரை கண்காணிச்சிண்டிருந்தோம். ஒரு நிமிஷம் தாத்தா நகர்ந்தாலும் டக்குன்னு அமுக்கிடலாம்னு ப்ளான்.

இன்னொரு பத்து நிமிடம் கழிச்சிதான் தாத்தாவோட 'உலக ஆராய்ச்சி’ முடிஞ்சி, கொஞ்சம் அந்தப்பக்கம் நகர்ந்தாரு.

பழைய படங்கள்லே 'அந்த' மாதிரி காட்சி வரும்போது காட்டுவாங்களே - மான் மேலே புலி பாயறா மாதிரி - அந்த மாதிரி பாய்ஞ்சி உலகத்தை கைப்பற்றினேன்.

அன்று முதல் அவ்வப்போது உலகத்தை சுற்றி சஹானாவுக்கு கண்டம் / நாடு / கடல் போன்ற பல விஷயங்களை சொல்லிக் கொடுப்பதால் - உலகம் சுற்றும் ச்சின்னப் பையன் என்று பெயர் பெற்றேன்.(ஹிஹி. எனக்கு நானே!).

*****

இந்த வார 18+ ஜோக்:

கொறுக்ஸ், மொறுக்ஸ் இந்த மாதிரியெல்லாம் போட்டா கண்டிப்பா 18+ ஜோக் ஒண்ணு போடணும்னு புது சட்டம் போடப் போறாங்களாம். அதனால் பல (சில?) பேர் படிக்கும் பூச்சாண்டியிலும் ‘இந்த வார 18+ ஜோக்’ போடறதா முடிவு பண்ணிட்டேன்.

நல்லா பாத்துக்குங்க.

இந்த வார 18+ ஜோக்.

போட்டாச்சு..

*****

சஹானாவின் பள்ளியில் தினம் ஒரு கடிதம்னு எழுதவைக்கிறாங்க. உங்க அப்பாவுக்கு கடிதம் எழுதுன்னு சொன்னதுக்கு, என்னமா அனுபவிச்சி எழுதியிருக்காங்க பாருங்க.

இதெல்லாம் மண்டபத்துலே யாரும் சொல்லிக் கொடுத்து எழுதினதில்லீங்க. நான் படற கஷ்டத்தைப் பாத்து தானா வர்றதுதான்.



நானா எப்படிடா சொல்றதுன்னு தெரியாமே இருந்தப்போ, இந்த மாதிரி சம்பவங்கள் நடப்பதால்தான், கடவுள் கண்டிப்பா இருக்கார்னு தெரியுது! (அப்பாடா, தலைப்பு வந்தாச்சு!).

*****

Read more...

Tuesday, October 19, 2010

வாரயிறுதி பயணத்தில் கற்றுக் கொண்டவை!

சென்ற வார இறுதியில் வகிமாவில் ஒன்றான நியு ஹாம்ப்ஷைர் (நியூ Hampshire) மாநிலத்துக்கு மரியாதை நிமித்தமாக (!!) பயணம் போயிருந்தோம். அந்த பயணத்தில் கற்றுக் கொண்ட விஷயங்கள்தான் இங்கே சொல்லப்பட்டிருக்கு. நான் கற்றுக் கொண்டதை மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கனும்ற உயர்ந்த நோக்கத்தில்தான் இந்தப் பதிவு.


*****

20 மைல் வேகத்தில் கடக்கவேண்டிய ஒரு கொண்டை ஊசி வளைவை 65 மைல் வேகத்தில் கடந்தால், வண்டியில் இருப்பவர்களும் / இருக்கும் பொருட்களும் நகர்ந்து ஒரே பக்கத்தில் வந்து விடுவர்/விடும்.


ஒரு பெரிய ட்ரக்கின் (லாஆஆஆரி) முன்னால் போய் திடீர்னு நிறுத்தினா (சடன் ப்ரேக் போட்டா), லாஆஆஆரியின் ஒலிப்பான் அதிக பட்ச சத்தத்தில் ஒலிக்கும்.



ஒரே அறையில் 8 பேர் மற்றும் 5 குழந்தைகள் "அமைதியாக" இருந்தால், பக்கத்து அறையிலிருந்தும், ஹோட்டல் வரவேற்பரையிலிருந்தும் தொலைபேசி - இன்னும் கொஞ்சம் அமைதியாக இருக்க சொல்வர்.



கும்பலா இருக்கும்போது மனைவியை கிண்டல் பண்ணிட்டா, பிறகு தனியா இருக்கும்போது பெண்டு நிமிர்ந்து விடும்.



65 மைல் வேகத்தில் செல்ல வேண்டிய சாலையில் - 92 மைல் வேகத்தில் போனாலும், காரின் சக்கரம் அந்தரத்தில் பறக்காமல் தரையில் உருண்டுதான் போகும்.



அமெரிக்காவில் எந்த மூலைக்கு சென்றாலும் குஜ்ஜூ மக்களின் சாப்பாட்டுக் கடை ஒன்று இருக்கும். சாப்பாடும் அருமையா இருக்கும்.



ஹோட்டல் செக்-இன் செய்து ஐந்தே நிமிடத்தில் வம்பு பேச வெளியே வந்தால், மாற்றுச் சாவி வாங்க கட்டிய துண்டோடு போக வேண்டி வரும்.



அலறிக்கொண்டிருக்கும் ஒரு அவசர ஊர்திக்கு வழி விடலேன்னா, அந்த ஓட்டுனரின் கெட்ட விரலை பார்க்க நேரிடும்.



ஒரே ஒரு காப்பி வாங்கிட்டு அதை by-3 (மூன்றாக பங்கிடுதல்) செய்து குடிச்சா, கடைக்காரி கேவலமா பார்க்கத்தான் செய்வா.



ரெண்டு மணி நேர பார்க்கிங்க்னு சொல்றது வண்டிகளுக்குத்தான், மனிதர்களுக்கில்லை.






*****

Read more...

Tuesday, October 12, 2010

ஒரு கால்-செண்டரில் 700 விடியல்கள்!

எ.பு. (எந்திரன் புறக்கணிப்போர்) சங்கத்தில் இருப்பவர்கள் கேட்கும் முக்கியமான கேள்வி - காலை 4 மணிக்கு வேலைக்குப் போவியா? ஹிஹி. நானும் அந்த சங்கத்தில் நிரந்தர உறுப்பினர் என்றாலும், அந்தக் கேள்வியை கேட்கமாட்டேன். ஏன்னா, நான் ஒரு காலத்துலே 2 மணி, 3 மணிக்கெல்லாம் வேலைக்குப் போனவன். அட மதியத்தில் இல்லேங்க.. விடியற்காலையில்.. அதுவும் ஒரு நாள் ரெண்டு நாள் இல்லே.. ரெண்டு வருஷம் இப்படி வேலை செய்தேன்.


சீனாலே யுவான் சுவாங் கூப்பிட்டாக, ஆஸ்திரேலியாவில் ஆப்பம் சுட கூப்பிட்டாகன்னு கசமுச கசமுசன்னு எல்லோரும் பேசிட்டிருக்கிற ஒரு கால் செண்டர். அதில் நாங்க மென்பொருள் நிபுணர்கள். சீனா, ஆஸ்திரேலியான்றதால் இந்தியாவில் விடியற்காலையிலேயே ஷிஃப்ட்.


நாங்க தங்கினது எங்க அலுவலக விடுதியில். ஒரே கட்டிடத்தில் 25-30 (ஆண்) பிரம்மச்சாரிகள். எல்லாரும் வெவ்வேறே வேலை நேரத்தில் அலுவலகம் போய் வருவோம். பகல் நேர வேலைக்குப் போனவர்கள் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு, தொகா பாத்துட்டு, மிட்நைட் ஸ்பெஷல்(!!) பார்த்துவிட்டு தூங்கப் போற நேரத்துலே, நானும் இன்னொரு நண்பரும் அலாரம் வெச்சி எழுந்துப்போம். பளிச்சுன்னு குளிச்சிட்டு 1 மணிக்கு கீழே வந்து குளிர்ல வெடவெடன்னு வண்டிக்காக காத்திருக்கணும்.


வெயிற்காலத்துலே தில்லி ராத்திரி நல்லாயிருந்தாலும், குளிரில் ’இரவுத்-தந்தி’தான். இதாவது பரவாயில்லை, ‘டெர்ரர்’ காலத்தில் (ஜன26, ஆக15, திச6) காவல்துறை தொந்தரவு வேறே. இந்த ராத்திரியில் எதுக்கு இங்கே நிக்கிற. ஐடி எங்கே. எந்த ஊர் உனக்கு?.. இப்படி. நமக்கு தெரிஞ்ச இந்தியில் பதில் சொன்னேன்னா, அடுத்த கேள்வி கேப்பாங்கன்னு நினைக்கிறீங்க? ம்ஹூம். ஓடியே போயிடுவாங்க.


அலுவலக வண்டி நம்மை ஏத்திக்கிட்டு, இன்னும் சிலரை பிக்கப் பண்ண அவங்க வீட்டுக்குப் போகும். சில தேவதைகள் காலையிலேயே குளிச்சிட்டு சுத்தபத்தமா வரும்போது, சில வில்லன்கள் குளிக்காமல் வந்துட்டு, வண்டியில் தனிவகை நறுமணத்தை பரப்புவார்கள்.


இப்படியாக அலுவலகத்தில் நுழைந்து, அவரவர் வேலையை பத்தே நிமிடத்தில்(!) முடித்துவிட்டு அக்கடான்னு அமரும்போது ஒரு நண்பர் கணிணியில் காதல் பாடல்கள் (சாஜன், ஏக் துஜே கே லியே etc) போடுவார். உடனே அனைவரும் தங்கள் ஒருதலை, பலதலை, தறுதலைக் காதலை நினைத்துக் கொண்டு சில நிமிடங்கள் சிலையாய் அமர்ந்திருப்பர்.
சிற்றுண்டிக்கான நேரம் வந்தவுடன் அனைவருக்கும் கனவு கலைந்துவிடும்.


ஐந்து மணிக்கு சிற்றுண்டி. இட்லி, பொங்கல், முட்டை, ப்ரெட், பால், பழம்னு எல்லாமே அட்டகாசமா இருக்கும். ஒரு கட்டு கட்டிவிட்டு - கொஞ்ச நேரம் கழிச்சி சாப்பிடறதுக்கு பார்சலும் கட்டிகிட்டு - கட்டிடத்தை சுற்றி நடைப்பயிற்சிக்குப் போனா ஒரு மணி நேரம் நல்லா பொழுது போகும்.


அப்புறம் மறுபடி மேஜைக்குத் திரும்பி கொஞ்ச நேரம் வேலை. அதையும் பாக்கணுமே...


இந்த விடியற்காலை ஷிஃப்டில் இன்னொரு நல்ல பயன் என்னன்னா - ஆஸ்திரேலியா / நியூசீலாந்து இங்கெல்லாம் கிரிக்கெட் நடந்தா நாங்க எந்த தொந்தரவுமில்லாமே(!) முழுசா பாத்துடுவோம். மேட்ச் முடிந்தவுடன் வீட்டுக்கு வந்துடுவோம்.


இப்படி எங்க உலகத்துலே அரை நாள் ஆனபிறகு, வெளியுலகம் விழிக்க ஆரம்பிக்கும். காலை 7 மணிக்கு எல்லாரும் தொலைபேச ஆரம்பிப்பாங்க. சில பேரு அவங்க வீட்டுக்கு, சில பேர் ‘அவங்க’ வீட்டுக்கு. ஹிஹி. அப்போதைய மிஸ்.தங்ஸும் எனக்காக காலையிலேயே எழுந்து ‘திட்ட’ ரெடியாயிருப்பாங்க.


அப்புறம் ஷிஃப்ட் முடிஞ்சி, காலையில் 10 மணிக்கு வீட்டுக்கு வந்துட்டா, மதிய உணவு சாப்பிட்டு மல்லாக்க விட்டத்த பாத்து படுத்தா.. ஆஹா.. சொர்க்கமா தூக்கம் வரும்.


மறுபடி இரவு எழுந்து வேலைக்குப் போக தயாராகி.. மறுபடி வீட்டுக்கு வந்து.. மறுபடி.. இப்படியாக சுமார் 700 விடியல்களை சந்தித்த அந்த கால்-செண்டர் நாட்களை இன்னிக்கு நினைச்சி பாத்தா, இந்த நாள் மட்டுமல்ல.. அந்த நாளும் இனிய நாளே!

*****

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP