இமேஜ் டோட்டல் டேமேஜ் (இது தமிழ் தலைப்புதானே!)
நாலு மணிக்கு வீட்டிலிருந்து தொலைபேசி - "என்னங்க. சீக்கிரம் வீட்டுக்கு வாங்க".
மூணு மணியிலிருந்தே நான் பாஸ் எப்படா போவாரு (வீட்டுக்குதாங்க!), நாம எப்படா கிளம்பலாம்னு இருந்தேன். (பாஸ் - அவரோட பாஸ் எப்போ கிளம்புவார்னு ரெண்டு மணியிலிருந்தே காத்திருந்தார்ன்றது இங்கே தேவையில்லாத தகவல்). இந்த டென்சன்லே(!) வீட்டிலேந்து தொலைபேசி வந்துச்சா, டக்குன்னு பாஸுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பிட்டு - என்ன ஆச்சோ ஏது ஆச்சோன்னு கிளம்பி வீட்டுக்கு வந்தேன்.
எப்பவும் வீட்டுலேந்து கிளம்பி ஆபீஸுக்கு போறதுக்கு பத்து நிமிடத்துக்கு மேலே ஆகுது.. ஆனா அதே ஆபீஸிலிருந்து வீட்டுக்கு வந்து சேர அஞ்சு நிமிடம் கூட ஆகமாட்டேங்குது. அது ஏன்னு தெரியல.
"என்னம்மா.. என்ன ஆச்சு? ஏன் என்னை அவசரமா ஆபீஸ்லேந்து வரச்சொன்னே? நான் கொஞ்ச நேரம் அங்கே இல்லேன்னா, அழகிரியை காணாத பாராளுமன்றம் மாதிரி எல்லாரும் கத்த ஆரம்பிச்சிடுவாங்க.
தெரியுமில்லே".
"உங்க மேனேஜரை தூக்கத்துலேந்து எழுப்பத்தானே உங்களை காசு கொடுத்து வெச்சிருக்காங்க. இதுக்கே இந்த பந்தா. ம்க்கும்".
"சரி சரி. அதை அப்புறம் பேசலாம். இப்ப என்ன பிரச்சினைன்னு சொல்லு".
"சஹானா, படம் பாக்கணும்னு சொல்றா".
"என்ன, சஹானா படம் பாக்கணும்னு சொல்றாளா? சுறா இன்னும் ரிலீஸே ஆகலியேம்மா? தமிழ்மணத்துலே நிறைய பேர் ச்சும்மா போட்ட விமர்சனத்தை பாத்து ஏமாந்துட்டியா? ஐய்யோ ஐய்யோ"..
"ஹலோ.. கொஞ்சம் (கையை தன் வாய் மேல் வைத்து மூடி சைகை காண்பிக்கிறார்). என்ன சொல்ல வந்தேன்னு கேட்டுட்டு பேசறீங்களா"?
"சரி. சாரி. சொல்லு. என்ன படம் பாக்கணுமாம்".
"அவளோட கார்ட்டூன் படம் ஏதோ பாக்கணுமாம்".
"பாக்கவேண்டியதுதானே? அதுக்கு ஏன் என்னை அவசரம் அவசரமா கூப்பிட்டே? நானும் ஏதோ புது சாமியார் மாட்டிக்கிட்டாரு - யூட்யூப்லே அவரோட படத்தை ரிலீஸ் பண்ணிட்டாங்க போலன்னு அரக்கபரக்க ஓடி
வந்தேன்".
"அதெல்லாம் ஒண்ணுமில்லே. டிவிடி ப்ளேயர்லே டிவிடி மாட்டிக்கிச்சாம். அதை கொஞ்சம் எடுத்துக் கொடுத்துட்டு எங்கேயாவது போங்க".
"அது சரி. டிவிடி ப்ளேயர்லே டிவிடி மாட்டிக்கிச்சு, துணி தோய்க்குற இயந்திரத்துலே துணி மாட்டிக்கிச்சுன்னு - இந்த மாதிரி ஏதாவது ஒரு சிச்சுவேஷன்லேதானே நான் ஒருத்தன் வீட்டுலே இருக்கேன்றதே
உங்களுக்கெல்லாம் நினைவுக்கு வரும். சரி. நகரு எடுக்கறேன்".
"சீக்கிரம் எடுங்க. இன்னும் அரை மணியில் அந்த டிவிடியை போய் நூலகத்தில் கொடுக்கலேன்னா, அஞ்சு ரூபா ஃபைன் கட்டணும்".
"இதோ பாரு. இந்த மாதிரி டென்சன் பண்ணினா எனக்கு வேலை ஓடாது. நிறுத்தி நிதானமா அலசி ஆராய்ஞ்சிதான் நான் எதையும் செய்வேன்".
" நி. நி. அ. ஆ செய்யறதுக்குள்ளே அங்கே பணத்தை அதிகமாக்கிட்டே போயிடுவான். உங்க பணம். உங்க இஷ்டம். எனக்கென்ன"?
"சரி சரி. கத்தாதே. இந்தா இருக்குற 20 ஸ்க்ரூவில் ஒரு அஞ்சு மட்டுமே கழட்டி, இந்த டிவிடியை எடுத்துட்டேன். மொதல்லே போய் கொடுத்துட்டு வாங்க. இனிமே இந்த டிவிடி வாங்கற வேலையெல்லாம் வேணாம்".
"ஓகே. எல்லா ஸ்க்ரூவையும் மறுபடி சரியா மாட்டிட்டீங்களா"?
"ஆயிடுச்சும்மா. ஆள விடு. நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கணும்".
"எங்கே போறீங்க? ஒரு டிவிடிதானே எடுத்தீங்க. இன்னொண்ணை யாரு எடுப்பாங்க? மறுபடி எல்லா ஸ்க்ரூவையும் கழட்டுங்க".
என்னது? இன்னொண்ணா? அதுதாம்மா இதுன்னு சொன்னாலும் - உள்ளே இருந்தது ரெண்டு டிவிடிங்கறதால் - மறுபடி பத்து நிமிடம் செலவழிச்சி அந்த இன்னொரு டிவிடியையும் எடுத்தாச்சு.
*****
"ஏம்மா ஒரே சமயத்துலே ரெண்டு டிவிடியை உள்ளே போட்டே? அப்படி போட்டா படம் தெரியாதுன்னு உனக்கு தெரியாதா"?
"நீ ஒரே சமயத்துலே ஐபாட்லே பாட்டு கேட்டுண்டு, கம்ப்யூட்டர்லே படம் பாத்துண்டு, டிவியில் டிராமா பாக்குறமாதிரி, நானும் ஒரே சமயத்துலே ரெண்டு படம் பாக்கலாமேன்னுதான் டிவிடி ப்ளேயரில் ரெண்டு
படத்தை போட்டேன். இது தப்பா"?
அவ்வ்வ்வ்..
*****