Five Q - தங்கமணிகள் எப்படி பயன்படுத்தறாங்க?
நேத்து நம்ம நண்பர் வால்பையன் அஞ்சு கேள்விகள்னு ஒரு மிகவும் நல்ல, பயனுள்ள இடுகை போட்டிருந்தாரு. வர்ற பதில்களுக்கேற்ப வேறே கேள்விகளைக் கேட்டு, பிரச்சினையோட மூல காரணத்தை
கண்டுபிடிக்க உதவும் உத்தி. அலுவலகங்களிலெல்லாம் கண்டிப்பா பயன்படும்.
கட் கட் கட். அட ஷாட் மாறுதுங்க.
இதே உத்தியை தங்கமணிகள் வீட்டுலே எப்படி பயன்படுத்தறாங்கன்னு பாப்போம்.
அங்கேயாவது கேள்விகளைக் கேட்கணும். இங்கே இவங்க வாயே திறக்காமே - எப்படி உண்மையை கண்டறியறாங்கன்னு ஒரு உதாரணத்தோட பாப்போம். இதிலே வர்ற ரங்கமணி, தங்கமணியை வடிவேலு, கோவை சரளாவா நினைச்சிக்கூட பாக்கலாம். நல்லா இருக்கான்னு சொல்லுங்க...
****
ஒரு வீட்டுக்கு விருந்தினர்கள் வந்திருக்காங்க. எல்லோரும் உக்காந்து பேசிட்டிருக்கும்போது, அந்த வீட்டு ரங்கமணி மெதுவா பேச்சை ஆரம்பிக்கிறாரு.
போன வாரம் நம்ம நண்பர் சுரேஷ் குடும்பத்தினர் வந்திருந்தபோது, நாந்தான் அவங்களுக்கு என் கையாலே சமோசாவும், பால் பாயசமும் செஞ்சி கொடுத்தேன். சாப்பிட்டுட்டு ரொம்ப நல்லாயிருக்குன்னு பாராட்டினாங்க.
தங்ஸ்: ம்?
சரி. சமோசா நான் பண்ணல. ஆனா கடையிலேந்து வாங்கி வந்தது நாந்தானே.. வாங்கிண்டு வந்தாதானே உன்னாலே அதை செய்ய முடியும்?
தங்ஸ்: ம்? (இப்போ குரல் கொஞ்சம் ஜாஸ்தியாகுது!)
சரி சரி. இப்போ என்ன ஆயிடுச்சுன்னு இப்படி குரலை உயர்த்துறே? பால் பாயசமும் நான் செய்யலேதான். அது ரெடிமேட்தான். ஆனா ஃப்ரிட்ஜ்லேந்து எடுத்துக் கொடுத்தது நாந்தானே?
ம்? (இன்னும் கொஞ்சம் ஜா)
சரிம்மா. என்னை ஒருத்தர் பாராட்டிட்டாருன்னா உனக்குப் பிடிக்காதே? இதோ பாருப்பா, அவங்க என்னய பாராட்டலே. என் தங்ஸைதான் பாராட்டினாங்க. போறுமாம்மா? இப்போ திருப்திதானே?
ம்? (இன்னும் கொஞ்சம் ஜா)
அட என்னடா இது? உன்னைத்தான் பாராட்டினாங்கன்னு சொன்னேன். அது தப்பாவே இருந்தாலும் இப்படி கோபப்படலாமா? சரி உண்மைய சொல்லிடறேன். ஏதோ தகராறுலே வந்தவங்க கன்னாபின்னான்னு
எங்களை திட்டிட்டுதான் போனாங்க... இப்ப ஓகேவா?
ம்? (இன்னும் கொஞ்சம் ஜா)
இப்படி வீட்டுக்கு வந்தவங்க முன்னாடி என் மானத்தை வாங்கித்தான் ஆகணுமா? ஒரே ஒரு பொய் சொன்னா என்ன ஆகிடப்போகுது. இதோ பாருப்பா. நான் மறுபடி முதல்லேந்தே சொல்லிடறேன். எங்களுக்கு
சுரேஷ்னு ஒரு நண்பரே கிடையாது. யாரும் எங்க வீட்டுக்கும் வரலே. நாங்களும் அவங்களுக்கு எதுவும் செய்து தரலே.
போறும்மா. இனிமே ம்? சொல்லாதே. எனக்கு ரொம்ம்ம்ம்ப பயமாயிருக்கு. இப்ப நான் என்ன சொல்லிப்புட்டேன்னு என்னை ரொம்ப மிரட்டறே. இனிமே நான் இவங்க முகத்துலே எப்படி முழிப்பேன்? பொண்டாட்டி என்னை கத்தறதை வெளியேல்லாம் போய் சொல்லிடுவாங்களே? கடவுளே!!!
(அழுதுகொண்டே எழுந்து அறைக்குள் ஓடுகிறார்).
தங்ஸ் : 10, 9, 8, ...
வீட்டுக்கு வந்தவர், தங்ஸிடம் : என்னங்க, இப்படி அழுதுகிட்டே ஓடுறாரு. நீங்க என்னடான்னா, 10, 9, 8ன்னு எண்ணிக்கிட்டு இருக்கீங்க?
தங்ஸ்: (கையால் இருங்க இருங்கன்னு செய்கை காமிச்சிக்கிட்டே) : 4, 3, 2, 1 என்றபின் 'டொம்' எனவும், அறைக்குள்ளேயிருந்து 'டொம்' என சத்தம் கேட்கிறது.
விருந்தினர்: ஐயய்யோ. உள்ளே ஏதோ சத்தம் கேக்குது. என்ன விழுந்ததுன்னு போய் பாருங்க.
தங்ஸ்: விடுங்க. அது ஒண்ணுமில்லே.
விருந்தினர் : அட என்னங்க இப்படி சொல்றீங்க. உங்க கணவருக்கு ஏதாவது ஆகியிருக்கப்போகுது.
தங்ஸ்: அவருக்கு சினிமாலே வர்ற ஹீரோயின்னு நினைப்பு. அவங்கல்லாம் அழுதுகிட்டே உள்ளே ஓடிப்போய் கட்டில்லே 'தொம்'முன்னு விழுவாங்கல்ல. அதே மாதிரிதான் இவரும் அழும்போதெல்லாம் செய்வாரு. அதை கண்டுக்கிடாதீங்க.
விருந்தினர் : கட்டில்லே விழுந்தா இப்படி சத்தம் கேக்குமா? பயங்கரமா கேட்டுச்சே.
தங்ஸ்: நம்ம வீட்டுலே கட்டிலே இல்லேன்னு எவ்ளோ தடவை சொன்னாலும் இவரு கேக்க மாட்டேங்கறாரே. நான் என்ன செய்ய?
*****