Sunday, January 13, 2008

ஒரு நேர்முகத் தேர்வில் நடப்பதும் நினைப்பதும்

ஒரு நேர்முகத் தேர்வில் தேர்வை எடுப்பவரும், கொடுப்பவரும் என்ன பேசிக்கொள்வர் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர்கள் தேர்வு சமயத்தில் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?..மேலே படியுங்கள்.

நே.தே.எ = நேர்முகத் தேர்வு எடுப்பவர்.
நே.தே.எ.மனம் = நேர்முகத் தேர்வு எடுப்பவர் மனதில் நினைப்பது.
நே.தே.கொ = நேர்முகத் தேர்வு கொடுப்பவர்
நே.தே.கொ.மனம் = நேர்முகத் தேர்வு கொடுப்பவர் மனதில் நினைப்பது.

இப்போது நேர்முகத் தேர்வு:

நே.தே.எ: வாங்க சுரேஷ். உட்காருங்க. உங்க ரெசுமை ஒரு தடவை பார்த்துவிடுகிறேன்.
நே.தே.எ.மனம்: என் தோழிக்கிட்ட கடலை போட்டுட்டிருந்தேன். வந்துட்டான் எங்கெயிருந்தோ!!!!
நே.தே.கொ: ஒகே சார்.
நே.தே.கொ.மனம்: என்னத்த பாக்கப்போறீங்க அதிலே? போட்டிருக்கிறது எல்லாமே போலி ப்ராஜக்ட்ஸ்தான்

நே.தே.எ: நிறைய நல்ல ப்ராஜக்ட்ஸ் செய்திருக்கிறீர்களே, எதாவது ஒரு ப்ராஜக்ட் பத்தி சொல்லுங்க, பார்க்கலாம்.
நே.தே.எ.மனம்: நான் இப்பொ பேசற மூடிலேயே இல்லே. நீயே ஏதாவது உளரிக்கிட்டிரு. நான் வரலே இந்த விளையாட்டுக்கு.
நே.தே.கொ: ஓகே சார். நான் வந்து அந்த ப்ராஜக்ட் பத்தி சொல்றேன்....
நே.தே.கொ.மனம்: ஏன்யா போரடிக்கிறே... நானே நௌக்ரி.காம் லேர்ந்து ஏதோ ஒரு ப்ராஜக்ட எடுத்து காபி/பேஸ்ட் பண்ணிருக்கேன். அத பத்தி கேட்டா எனக்கு என்ன தெரியும்.

நே.தே.எ: உங்க கம்பெனி நல்ல கம்பெனியாச்சே. அதை விட்டுட்டு எதுக்கு இப்பொ வேறே வேலை தேடுறீங்க?
நே.தே.எ.மனம்: நானே அங்கே ரெண்டு மூணு தடவை முயற்சி பண்ணேன். ஆனா, வேலை கிடைக்காமே போயிடுச்சு...
நே.தே.கொ: ஆமா சார். எனக்கும் இந்த கம்பெனியெ விடவே மனசில்லை.. ஆனா, என்னுடைய வருங்கால முன்னேற்றத்திற்கு, எனக்கு பெரிய ப்ராஜக்ட்ஸ் செய்யணும்னு ஆசை. அதனால்தான்...
நே.தே.கொ.மனம்: மகனே, நீ அங்கே வந்து வேலை பாரு. அப்போ தெரியும் உனக்கு... அவங்க பண்ற லொள்ளு தாங்காம நீ ஒரே வாரத்துல ஓடிப் போய்டுவே.

நே.தே.எ: இப்பொ நான் சில கேள்விகள் கேட்கிறேன். பதில் சொல்லுங்க.
நே.தே.எ.மனம்: நானும் எவ்வளவோ பேரெ கேட்டுட்டேன். எவனுக்கும் பதிலே தெரியல. நீயாவது சொல்லுடா ராசா..இந்த கேள்வியினாலதான், நான் அந்த கம்பெனியிலே சேரமுடியல.
நே.தே.கொ: கேளுங்க சார்.
நே.தே.கொ.மனம்: என்னத்த கேக்கப் போறானோ தெரியலையே..ஆண்டவா..

நே.தே.எ: இந்த கம்பெனியில் நீங்கள் சேர்ந்துவிட்டால், என்னிடம்தான் வேலை செய்ய வேண்டும். இந்த கம்பெனி ஒரு தட்டையான கம்பெனி (Flat Orgn). அதாவது, நீங்கள் எந்த மேலாளரையும் எந்த நேரத்திலும், எந்த பிரச்னையானாலும் சென்று சந்தித்துப் பேச இயலும். என்னைக்கூட நீங்கள் எந்த சந்தேகமானாலும், எப்போது வேண்டுமானாலும், என்னுடைய தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
நே.தே.எ.மனம்: மகனே, எப்போ வேண்ணா கூப்பிடுன்னவுடனே, ஆபீஸ் முடிஞ்சப்புறம் கூப்பிட்டே, தொலெஞ்சே. நான் என் தொலைபேசியையே எடுக்க மாட்டேன்.
நே.தே.கொ: ஓகே சார். கண்டிப்பாக. இதை கேட்பதற்கே மிகவும் சந்தோஷமாக உள்ளது.
நே.தே.கொ.மனம்: இருடி, ஒரு நாள் ராத்திரி தொலைபேசியிலே கூப்பிட்டு, லார்ட் லபக்தாஸ் மாதிரி சந்தேகம் கேக்குறேன்.

நே.தே.எ: ஓகே. இப்போ கடைசி கேள்வி. இங்கே வேலை கொடுத்தா, என்ன சம்பளம் எதிர்ப்பார்க்கிறீங்க?
நே.தே.எ.மனம்: என்ன வேணா கேளும்மா, நீ என்ன கேக்குறியோ, அதிலே 50%தான் கொடுப்பேன்.
நே.தே.கொ: சார், அதாவது, நான் இப்போ வாங்குற சம்பளத்திலேர்ந்து 30% அதிகமா கொடுத்தா நல்லா இருக்கும்.
நே.தே.கொ.மனம்: என்னமோ ஒரு 50 லட்சம், கார், இருக்க வீடு எல்லாமே தாராளமா கொடுக்கறாப்பலே கேக்குறானே..என்ன கேட்டாலும் அதிலே கொஞ்சம் கம்மி பண்ணத்தான் போறான்.. பாக்கலாம்..என்னத்த கழட்டறான்னு.

நே.தே.எ: ஓகே சுரேஷ். உங்களை வேலைக்கு எடுப்பதென்று முடிவெடுத்துவிட்டேன். உங்களுக்கு கேட்பதற்கு ஏதாவது இருக்கிறதா?
நே.தே.எ.மனம்: வாடி என் செல்லம்...ஒரு பலியாடு கிடைச்சாச்சு. இவனை விடக்கூடாது.
நே.தே.கொ: மிகவும் நல்லது சார். ஒரே ஒரு கேள்வி. எனக்கு ஏதாவது பயிற்சி தரப்படுமா? அதாவது இந்த கம்பெனியின் வேலைமுறைகளைத் தெரிந்துக்கொள்ள...
நே.தே.கொ.மனம்: ஏன்னா, எனக்கு எதுவுமே தெரியாது. ஏதாவது சொல்லித் தந்தாதான் நான் வேலையெ செய்ய முடியும்.

நே.தே.எ: கண்டிப்பாக சுரேஷ்.
நே.தே.எ.மனம்: நீ தப்பிச்சி போக முடியாதபடிக்கு என்னென்ன செய்ய முடியுமோ, நாங்க எல்லாம் செய்வோம்.
நே.தே.கொ: ஓகே சார். நான் அடுத்த வாரம் வந்து சேர்ந்து விடுகிறேன்.
நே.தே.கொ.மனம்: அப்பாடா, அந்த ஜெயிலிலிருந்து விடுதலை கெடெச்சிடுச்சு.

இருவரும் விட்டால் போதுமென்று அந்த அறையை விட்டு ஓடிப்போகிறார்கள்.

1 comments:

குசும்பன் January 14, 2008 at 11:46 PM  

பதிவும் அருமை அதை விட எனக்கு சிரிப்பை வரசெய்தது

//எதையுமே சீரியஸாக எடுத்துக்கொள்ளாத ஜென்மம் - இது தங்கமணியின் அருள்வாக்கு//

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP