Thursday, January 31, 2008

மணிரத்னம் உயர்நிலைப் பள்ளி

ஆசிரியர் வரும்போது அறை மிகவும் இருட்டாக இருக்கிறது.
ஏன்?...என்ன ஆச்சு....?
ப்யூஸ் போயிடுச்சு....
வாங்கறோம்...பல்ப் வாங்கறோம்...
மங்கலா எரியற பல்ப் வாங்கறோம்..
சார்...ஒரு பல்ப்...10 ரூபாய் ஆகும்...
பரவாயில்லை...சுரேஷ்... பரவாயில்லை...
வாங்குறோம்.... 5 வாங்குறோம்...
50 ரூபாய் ஆனாலும் பரவாயில்லை...
நமக்காக மட்டுமே அது எரியும்...
சார்...நான் போய் வாங்கி வரேன்.
சுரேஷ்... உனக்கு ரோட் க்ராஸ் பண்ணி போக பயமாயில்லையா?
இல்லை சார்... நான் ஒரு இந்தியன். இந்தியாவிலே எந்த மூலைக்கு போகவும் எனக்கு பயமில்லை.
(அப்போது ஆசிரியரின் தொலைபேசி அடிக்கிறது... அவரது ரிங்டோன்..."தாயே உன் பெயர் சொல்லும்போதே, இதயத்தில் மின்னலை பாயுதே...ஆஆஆ")


(ஆசிரியர் attendance எடுத்துக் கொண்டிருக்கிறார்)
சூர்யா...சூர்யா...
உள்ளேன் ஐயா...
(ஆனால் அப்போதுதான் சூர்யா வகுப்புக்குள் வருகிறார்)..
யார் சொன்னது?... உள்ளேன் ஐயான்னு யார் சொன்னது... நீ பாத்தியா... நீ பாத்தியா...
நான் பாத்தேன்.. சார்... நான் பாத்தேன்...
யாரு?
தேவா...
தேவா...ஏன்? தேவா...ஏன்?
நண்பன் சார்... நண்பன்..
நண்பன்னா?
நண்பன்னா உயிரை கூட கொடுப்பேன்...
மொதல்லே கை...கையை கொடு...
ஏன் சார்... ஏன்.
கொடு..
ஆஆஆஆ.....

அசோகர்...ஏன் மரத்தை நட்டார்?
தெரியல...
ம்?
எனக்குத் தெரியல...
ஏன் தெரியல...
நான் படிக்கல...
ஏன் படிக்கல...சொல்லு... ஏன் படிக்கல....
படிக்கணும்னு புத்திக்கு தெரியுது... ஆனா மனசு கேக்கலியே...
கையெ நீட்டு....

ஆஆஆஆ......
என்கிட்டே ட்யூஷன் படிக்கிறாயா?
வேண்டாம்... எனக்கு வேண்டாம்..
சொல்றதை கேளு...நீ ஒண்ணுமே படிக்கலே...பெயிலாயிடுவேன்னு நினைக்கலே...ஆனா இதெல்லாம் நடந்திருமோன்னு பயமா இருக்கு... யோசிச்சு சொல்லு...
சரி சார்... சொல்றேன்... நாளைக்கு சொல்றேன்...

(அப்போது பள்ளி முடிவடைந்ததற்கான மணி அடிக்கிறது.மாணவர்கள் எல்லோரும் மெதுவாக (slow motion) பள்ளியை விட்டு வெளியேறுகிறார்கள்).

Read more...

Monday, January 28, 2008

தலைவிக்கு ஒரு ராஜ்ய சபா சீட் - ஒரு தொண்டனின் குமுறல்

மேடையில் உட்கார்ந்திருக்கும் நம் தலைவரே மற்றும் தலைவரின் மூன்றாவது மனைவியின் ஐந்தாவது புதல்வியே, தமிழகத்தைக் காப்பாற்ற வந்திருக்கும் தங்கத் தாரகையே, அனைவருக்கும் வணக்கம்.


நான் கேட்கிறேன். யார் யாருக்கோ அமைச்சர், எம்.பி பதவியை கொடுக்கத் தெரிந்த மத்திய அரசுக்கு, நம் இளைய தலைவியை தெரியவில்லையா... பல கவிஞர்கள் இருக்கும் ராஜ்ய சபாவிலே உறுப்பினர் ஆவதற்கு - ஒரு கவிஞராகிய நம் தலைவியும் தகுதி உள்ளவர்தான் என்று புரியவில்லையா...


பல வெளிநாட்டுப் பாடல்களையும், கதைகளையும் மொழி பெயர்த்து விட்டு, சொந்த கற்பனை என்று சொல்லித் திரியும் கவிஞர்களுக்கு மத்தியில், நம் தலைவி பிறந்ததிலிருந்தே கவிதை எழுதுகிறார் என்ற செய்தி அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் கொடுக்கும் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. பல பேச்சுப் போட்டிகளிலும் முதல் பரிசை தட்டிச் சென்றிருக்கிறார்.


உதாரணத்திற்கு, அவரது சில கவிதைகளையும் அவர் பரிசு பெற்ற பேச்சுப் போட்டிகளில் பேசிய சிலவற்றையும் இங்கு நான் வாசிக்கிறேன். முதல் வகுப்பில் அவர் படிக்கும்போது ஒரு பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்றார். அவரது பரிசுக்குரிய பேச்சு இதோ:

தமிழில் மட்டுமல்ல...
யாம் அறிந்த மொழிகளில் மட்டுமல்ல...
அகில உலக மொழிகளிலும் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை...
நூடுல்ஸ்


நூடுல்ஸ் பிடிக்காது என்பதை எவ்வளவு நாசுக்காக சொல்லியிருக்கிறார் என்பதை அகில உலகமே வியந்து பாராட்டியது.

அது மட்டுமல்ல, தலைவி எட்டாம் வகுப்பு படிக்கும்போது, இன்னொரு போட்டியில் 'எருமை மாடு' என்ற தலைப்பில் எழுதிய கவிதை இதோ:


பசுமையான புல்லைத் தின்று
வெண்மையான பாலைக் கொடுக்கும்
கருமையான எருமை
மனிதர்களுக்கு சிறுமை


நான் சவால் விடுகிறேன், எல்லோரும் திட்டும் எருமை மாட்டைப் பற்றி இப்படிப்பட்ட கவிதை எழுத நம் தலைவியை விட்டால் யாரால் முடியும்?

அவரது கவித்திறனுக்கு சிகரமாக அவரின் மகத்தான படைப்பு ' நட்பாச்சி காவியம்'. அந்தக் காவியத்திலிருந்து ஒரு பகுதியை நான் இங்கு படிக்கிறேன்.


ஏன் நண்பா... ஏன்?


சப்பாத்தி சிதைந்திருக்கிறது என்றேன்
அப்பளம் உடைந்திருக்கிறது என்றேன்


சிரித்துக் கொண்டே நீ சொன்னாய்


உள்ளே எல்லாம் சேரப் போகிறது - பிறகு
வெளியே போய் விழப் போகிறது


சிரிக்காமல் நான் சொன்னேன்


எப்படியும் வெளியே போகிறதென்றால் - பிறகு
ஏன் உள்ளே தள்ளுகிறாய் -
சமைத்து விட்டு நேராக
கொட்டிவிடு சீராக


வெந்ததை கொட்டு என்றேன் - நீயோ
வாயில் வந்ததை கொட்டி விட்டாய் -
என் முன்னோர்களையும் திட்டி விட்டாய்


ஏன் நண்பா.. ஏன்?


கத்தி பேசக்கூடத் தெரியாத நான்
கத்தி எடுத்து விட்டேன் - உன்னைக்
குத்தி குதறி விட்டேன்


ஏன் நண்பா... ஏன்?


இப்பொழுது சொல்லுங்கள்... நம் தலைவியின் கவித்தன்மையை...இவருக்கு ராஜ்ய சபா எம்.பி ஆகக்கூடிய முழுத் தகுதியும் இருக்கிறது என்று உலகம் முழுக்க இருக்கின்ற தமிழர்கள் அறிவார்கள்.


இந்த மேடையிலே நான் வேண்டுகோள் வைக்கிறேன். மரியாதையாக நம் இளைய தலைவியை,

இந்த வருடம் எம்.பி யாகவும்,
அடுத்த வருடம் மத்திய இணை அமைச்சராகவும்,
அதற்கடுத்த வருடம் மத்திய காபினட் அமைச்சராகவும் நியமிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.


நீங்கள் ஒரு கேள்வி கேட்கலாம். இரண்டாண்டுக்குள் மத்தியில் தேர்தல் வந்து விட்டால் என்ன செய்வது இந்த திட்டமெல்லாம் என்ன ஆவது?


நாங்கள் சொல்கிறோம். என்ன ஆனாலும் சரி, எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சரி, நாங்கள் ஆட்சிக் கூட்டணியில் இருப்போம். எங்கள் தலைவி கண்டிப்பாக மேற்சொன்ன ஏதாவது ஒரு பதவியில் இருப்பார் என்று உறுதியுடன் சொல்லிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.


என்னைப் பேச அனுமதித்த நம் கட்சித்தலைவர் வாழ்க!!! வளர்க!!!
நன்றி!!! வணக்கம்!!!

Read more...

Saturday, January 26, 2008

கிபி2030 - சென்னை கத்திப்பாரா மேம்பாலம்

கத்திப்பாரா மேம்பாலப் பணிகள் விரைவில் முடிவடையும். அமைச்சர் தகவல்.

இது செய்தி. இந்த செய்தியை, பல்வேறு தொலைக்காட்சிகளில் எப்படி சொல்லப்பட்டது என்று இப்போது பார்ப்போம். தொலைக்காட்சிகளின் பெயருக்குக் கீழே அவர்களது அரசியல் நிலையும் கூறப்பட்டுள்ளது.

சூரியன் டிவி:
அரசியல் நிலை: ஆட்சி செய்யும் கட்சியினுடையது

செய்தி: கத்திப்பாரா மேம்பாலப் பணிகள் இப்போது முழுவீச்சில் நடைப்பெற்றுக் கொண்டு வருகின்றது. இது நமது அரசின் நூற்றாண்டு கால கனவாகும். மக்களுக்காக இந்த அரசு பல நல்ல தொலைநோக்குத் திட்டங்களை வாரி வழங்கி வருகிறதென்பது எல்லோருக்கும் நன்றாகவே தெரியும்.


நிலா டிவி:
அரசியல் நிலை: எதிர்க்கட்சியினுடையது

செய்தி: நான் விசாரித்தவரையில் கமிஷன் கிடைக்காததால்தான், இந்த மைனாரிட்டி அரசு, இந்த மேம்பால பணிகளை துரிதமாக முடிக்காமல் இருக்கிறது. இந்த மைனாரிட்டி அரசு அடுத்த வருடத்தில் கவிழ்ந்துவிடும். அதற்குப் பிறகு என் தலைமையில் அரசு அமைத்து, மக்களுக்கு இந்த மேம்பாலப் பணியினை துரிதப்படுத்துவதுடன், பல நல்ல திட்டங்களையும் செயல் படுத்துவோம் என்று கூறிக்கொள்கிறேன்.


வானம் டிவி:
அரசியல் நிலை: ஆட்சி செய்யும் கூட்டணியில் உள்ள கட்சியினுடையது.

செய்தி: மேம்பால பணிகள் சரிவர நடக்கவில்லை என்ற எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டு சரியானதல்ல. பற்பல நடைமுறைச் சிக்கல்களினால்தான் இப்படி தாமதம் ஆகிறதென்றது சென்னை நகர மக்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளார்கள்.

மேகம் டிவி:
அரசியல் நிலை: எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள கட்சியினுடையது.

செய்தி: எங்கள் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, ஒரு வருடத்தில் 25 பாலங்கள் கட்டினோம். ஆனால் இந்த மைனாரிட்டி அரசு, ஒரே பாலத்தை 25 ஆண்டுகளாகக் கட்டி வருகின்றனர். இதிலிருந்தே, இந்த அரசின் செயல்திறனை மக்கள் புரிந்துக் கொள்ளலாம்.

விண்மீன் டிவி:
அரசியல் நிலை: ஆட்சி செய்யும் கூட்டணியில் உள்ள - ஆனால் கூட்டணி மாறும் மூடில் உள்ள கட்சியினுடையது

செய்தி: மக்கள் எதிர்ப்பார்த்தபடி இந்த மேம்பாலப் பணிகள் துரிதமாக நடக்கவில்லை என்று யாரைக் கேட்டாலும் சொல்வார்கள். என்ன இவர்கள் ஆட்சி கூட்டணியில் இருந்துகொண்டு இப்படி குற்றம் சொல்கிறார்களே என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். நாங்கள் அமைத்துக் கொண்ட கூட்டணி தேர்தலுக்கு மட்டுமே. அதற்குப் பிறகு நாங்கள் ஆட்சியில் தெரியும் குற்றம், குறைகளை சுட்டிக் காட்டுவோம் என்று மக்களுக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளோம்.

ஏவுகணை டிவி:
அரசியல் நிலை: எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள - ஆனால் கூட்டணி மாறும் மூடில் உள்ள கட்சியினுடையது

செய்தி: நாங்கள் எதிர்க்கட்சி கூட்டணியில் இருந்தாலும், நம் அரசு செய்யும் நல்ல செயல்களை பாராட்டாமல் என்றுமே இருந்ததில்லை. அதனால்தான், இந்த அரசுக்கெதிராக எதிர்க்கட்சி கூட்டணி கூட்டிய கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தோம்.

பால்வெளி டிவி:
அரசியல் நிலை: நடுநிலை கட்சியினுடையது.

செய்தி: இந்த வாரம் "நீங்களா, நாங்களா" நிகழ்ச்சியின் தலைப்பு "கத்திப்பாரா மேம்பாலப் பணிகள் முடியுமா, முடியாதா?". இந்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் பங்கேற்கிறார். 25 ஆண்டு கால மேம்பால பணிகளைப் பற்றி நேயர்களின் கருத்துக்களை கேட்டறிகிறார்.

உலகம் டிவி:
அரசியல் நிலை: அரசியலை வெறுப்பவர்களுடையது

செய்தி: (பழம்பெரும் நடிகர் கவுண்டமணி பாணியில் படிக்கவும்).
ஏண்டாப்பா, இது உங்களுக்கே நியாயமா இருக்கா?.. ஒரே வசனத்தை எப்படிடா 25 வருஷமா சொல்லிட்டிருக்கீங்க?.. ஆனா ஒண்ணு.. 5 வருஷத்திற்கு ஒரு தடவை, இவன் சொல்றத அவன் சொல்றான்... அவன் சொல்றத இவன் சொல்றான்.... மக்களே... நம்பாதீங்க... இந்த பாலத்தெ எங்கப்பா காலத்திலே கட்ட ஆரம்பிச்சாங்க...என் காலத்திலே கட்டறாங்க... என் பையன் காலத்திலேயும் கட்டுவாங்க... நாராயணா... இந்த அரசியல்வாதிங்க தொல்லை தாங்க
முடியலேடா...

Read more...

Wednesday, January 23, 2008

பகலவன் மேல்நிலைப் பள்ளி - சன் குழுமத்திலிருந்து

இன்று பல துறைகளிலும் கால் பதித்துள்ள சன் குழுமம் நாளைக்கே ஒரு பள்ளியை துவக்கினால், அந்த பள்ளிக்காக எப்படி விளம்பரப்படுத்துவார்கள் என்ற யோசனையில் உதித்த சிறு கற்பனை.

(சூரியன் எப்.எம். பாணியில் படிக்கவும்)

பகலவன் பள்ளி...

படிங்க... படிங்க... படிச்சிக்கிட்டேயிருங்க...
------


(சன் டி.வியில் வரும் திரைப்பட விளம்பர பாணியில் படிக்கவும்)

உலக வரலாற்றிலேயே முதல்முறையாக...
கருவுக்கு வந்து சில நாட்களேயான...
புத்தம் புதிய குழந்தைக்கு...
அட்மிஷன்.. இன்று பகல் 10,00 மணிக்கு....
நீங்களும் வாங்கத் தவறாதீர்கள்...
-----


(குங்குமம் விளம்பர பாணியில் படிக்கவும்)

இந்த மாதம்...பகலவனில்..

முதல் ரேங்க் யார் வாங்குவார்கள்?
பத்தாம் வகுப்பு மாணவர் பேட்டி...


ட்யூஷன் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் போட்டேனா?
பொருளாதார ஆசிரியர் பரபரப்பு பேட்டி...


பெண்கள் கழிப்பறையில் ஆபாசமாக எழுதியது யார்?
ஒரு துப்பறியும் ரிப்போர்ட்...


அத்துடன்..இந்த மாதம்...டெர்ம் பீஸுடன்..
ரூபாய் 5 மதிப்புள்ள அருமையான லேபில்கள் இலவசம்...

டெர்ம் பீஸ்... கட்டிவிட்டீர்களா...


-----

(திரை விமர்சனம் ரத்னா பாணியில் படிக்கவும்)

வணக்கம்..

இந்த மாதம் பள்ளி விமர்சனத்தில்...

பத்தாம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும்...
"தேர்வுக்குப் படிப்பு"...


வழக்கம்போல இந்த மாதமும் பெண்கள் மிக நன்றாக படித்துள்ளார்கள்.
சண்டைக் காட்சிகளில் ஆண்கள் அருமையாக அடித்துள்ளார்கள்.
மாதம் முழுக்க நகைச்சுவைக் காட்சிகளே நிறைந்துள்ளன.
ஆசிரியர்கள் இன்னும் பாடங்களில் கவனம் செலுத்தலாம்.


மொத்தத்தில் தேர்வுக்குப் படிப்பு....
வெறும் நடிப்பு

Read more...

Saturday, January 19, 2008

சென்னைப் பாலங்கள் - அமைச்சர் பரபரப்பு பேட்டி

சென்னை நகரில் இந்த ஆண்டு 10 புதிய பாலங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடத்தப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நேற்று தெரிவித்தார்.

கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் பணிகளை மேற்பார்வையிட வந்திருந்த அமைச்சர், இன்னும் இரண்டு ஆண்டுக்குள் மேம்பாலம் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுவிடும் என்று அறிவித்தார்.

நிருபர்: சைதாப்பேட்டை அருகில் அண்ணா சாலையில் இரண்டே நாளில் புதிய பாலம் (subway) கட்டியிருக்கிறீர்களே, அது எதற்காக என்று தெரிந்து கொள்ளலாமா?
அமைச்சர்: அது பாலம் இல்லை... நேற்று பெய்த மழையில் உண்டான பெரிய பள்ளம். அதை விரைவில் மூட ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம்.

நிருபர்: இப்போதெல்லாம், சாலைகள் போட்ட ஆறு மாதங்களிலேயே தரம் கெட்டு, உபயோகமில்லாததாகி விடுகிறதே? அதைப் பற்றி...
அமைச்சர்: மக்களுக்கு பல நல்ல திட்டங்களை அளித்த கழக ஆட்சியில் ஒரு புதிய சட்டம் கொண்டு வரப்போகிறோம். அதாவது, ஒரு சாலை/பாலம் கட்டப்பட்டால், முதல் ஆறு மாத காலத்திற்கு அதன் மேல் போக்குவரத்து தடை செய்யப்படும். அப்படி செய்துவிட்டால், இதுபோன்ற புகார்கள் வர வாய்ப்பே இல்லை.

நிருபர்: சென்னை தாம்பரத்தில் ஒரு புதிய பாலம் திட்டமிடப்பட்டு, பிறகு கைவிடப் பட்டுவிட்டதே?...
அமைச்சர்: அந்த புதிய பாலத்திற்கு என்ன பெயர் வைப்பது என்பதில், கருத்து வேறுபாடு நிலவுவதால், இப்போதைக்கு அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

நிருபர்: கருத்து வேறுபாடு யார் யாருக்கு என்று தெரிந்து கொள்ள முடியுமா?
அமைச்சர்: நம் மாண்புமிகு முதலமைச்சரின் மகன், மகள், பேரன், பேத்தி மற்றும் அவர் உறவினர்களுக்கிடையே நடைபெறும் கருத்து வேறுபாடுதான் காரணம்.

நிருபர்: இந்த ஆண்டு 10 புதிய பாலங்கள் கட்டுவோம் என்று தெரிவித்துவிட்டு, 9 பாலங்களின் இடத்தைக் கூறி விட்டீர்கள். அந்த 10வது பாலம் எங்கே கட்டப்படும் என்று சொல்லவில்லையே?
அமைச்சர்: விஜயகாந்த் இன்னும் அவரது புதிய கல்யாண மண்டபம் எங்கே கட்டுவார் என்றே தெரியவில்லையே. அவர் எங்கு கட்டுகிறாறோ, அந்த கல்யாண மண்டபத்தை ஒட்டி ஒரு பெரிய மேம்பாலம் அமைப்போம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு அவசரமாக ஒரு கூட்டத்திற்கு போகவிருப்பதால், இந்த பேட்டியை இத்துடன் முடித்துக்கொள்வோம். நன்றி.

Read more...

Sunday, January 13, 2008

தாய்ப் பாசம்

காட்சி 1 - காலை மணி ஆறு.

அம்மா...அம்மா...

அட..அதுக்குள்ள எழுந்தாச்சா? இப்போ என்ன அவசரம்னு 6 மணிக்கே எழுந்துட்டே? ... சமையல இன்னும் ஆரம்பிக்கவேயில்லை. இன்னும் காபி கூட குடிக்கல... இப்போ உனக்கு சேவை செய்யணும்... உங்க அப்பா வேறே இன்னும் எழுந்துக்கவேயில்ல. அப்படியும் எழுந்தார்னா, நேரா கம்பியூட்டர்லதான் போய் உக்காருவாரு. அவருக்கு காபி, டிபன், ஆபீஸ்க்கு சாப்பாடு இன்னும் எல்லாம் நாந்தான் செய்யணும். எனக்கு உதவி செய்ய யாராவது இருக்காங்களா?
எல்லாம் என் தலையெழுத்து. இன்னும் கொஞ்ச நேரம் படுத்துக்கோ. நான் வரேன்.


அம்மா...அம்மா...

ஏன்டி என் ப்ராணனெ வாங்குறே?...இன்னும் கொஞ்ச நேரம் தூங்கினா என்ன குடி முழுகிப்போயிடும்?.. இரு 5 நிமிஷத்திலே வரேன்..

காட்சி 2 - மாலை மணி 5

இடம்: விளையாட்டு மைதானம்.

ஆண்டி, மது இங்கேதான் எங்க கூட கண்ணாமூச்சி விளையாடிட்டிருந்தா... இப்போ திடீர்னு அவளை காணோம். எங்கே ஒளிஞ்சிருக்கான்னே தெரியல்லே...

(சிறிது தேடலுக்குப் பிறகு மது கிடைத்துவிட்டாள்)..

என் செல்லம்... எங்கேடி போய் ஒளிஞ்சிக்கிட்டே... உன்னெ பெத்து வெளியே கொண்டு வறத்துக்கு எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பேன்... ஒரு ரெண்டு நிமிஷம் நீ இல்லாமே எனக்கு ஒண்ணும் புரியவேயில்லெ. கை, காலெல்லாம் உதறலெடுத்து, தலை சுத்தற மாதிரி இருந்துச்சு. உனக்கு ஒண்ணும் இல்லாமே கிடைக்கணும்னு கடவுள்கிட்டே வேண்டிக்கிட்டேன். நாளைக்கே கோயிலுக்குப் போய் நெய் விளக்கு ஏத்தணும். ஊர்லே எங்கே பாத்தாலும் பிள்ளை பிடிக்கறவன் சுத்திட்டிருக்கான். இனிமே என்னை விட்டு ஒரு நிமிஷம்கூட போகமாட்டேன்னு சொல்லுடா கண்ணு...

காட்சி 3 - காலை மணி ஆறு.

(மீண்டும் காட்சி 1-ஐ படித்துக் கொள்ளவும்).

Read more...

ஒரு நேர்முகத் தேர்வில் நடப்பதும் நினைப்பதும்

ஒரு நேர்முகத் தேர்வில் தேர்வை எடுப்பவரும், கொடுப்பவரும் என்ன பேசிக்கொள்வர் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர்கள் தேர்வு சமயத்தில் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?..மேலே படியுங்கள்.

நே.தே.எ = நேர்முகத் தேர்வு எடுப்பவர்.
நே.தே.எ.மனம் = நேர்முகத் தேர்வு எடுப்பவர் மனதில் நினைப்பது.
நே.தே.கொ = நேர்முகத் தேர்வு கொடுப்பவர்
நே.தே.கொ.மனம் = நேர்முகத் தேர்வு கொடுப்பவர் மனதில் நினைப்பது.

இப்போது நேர்முகத் தேர்வு:

நே.தே.எ: வாங்க சுரேஷ். உட்காருங்க. உங்க ரெசுமை ஒரு தடவை பார்த்துவிடுகிறேன்.
நே.தே.எ.மனம்: என் தோழிக்கிட்ட கடலை போட்டுட்டிருந்தேன். வந்துட்டான் எங்கெயிருந்தோ!!!!
நே.தே.கொ: ஒகே சார்.
நே.தே.கொ.மனம்: என்னத்த பாக்கப்போறீங்க அதிலே? போட்டிருக்கிறது எல்லாமே போலி ப்ராஜக்ட்ஸ்தான்

நே.தே.எ: நிறைய நல்ல ப்ராஜக்ட்ஸ் செய்திருக்கிறீர்களே, எதாவது ஒரு ப்ராஜக்ட் பத்தி சொல்லுங்க, பார்க்கலாம்.
நே.தே.எ.மனம்: நான் இப்பொ பேசற மூடிலேயே இல்லே. நீயே ஏதாவது உளரிக்கிட்டிரு. நான் வரலே இந்த விளையாட்டுக்கு.
நே.தே.கொ: ஓகே சார். நான் வந்து அந்த ப்ராஜக்ட் பத்தி சொல்றேன்....
நே.தே.கொ.மனம்: ஏன்யா போரடிக்கிறே... நானே நௌக்ரி.காம் லேர்ந்து ஏதோ ஒரு ப்ராஜக்ட எடுத்து காபி/பேஸ்ட் பண்ணிருக்கேன். அத பத்தி கேட்டா எனக்கு என்ன தெரியும்.

நே.தே.எ: உங்க கம்பெனி நல்ல கம்பெனியாச்சே. அதை விட்டுட்டு எதுக்கு இப்பொ வேறே வேலை தேடுறீங்க?
நே.தே.எ.மனம்: நானே அங்கே ரெண்டு மூணு தடவை முயற்சி பண்ணேன். ஆனா, வேலை கிடைக்காமே போயிடுச்சு...
நே.தே.கொ: ஆமா சார். எனக்கும் இந்த கம்பெனியெ விடவே மனசில்லை.. ஆனா, என்னுடைய வருங்கால முன்னேற்றத்திற்கு, எனக்கு பெரிய ப்ராஜக்ட்ஸ் செய்யணும்னு ஆசை. அதனால்தான்...
நே.தே.கொ.மனம்: மகனே, நீ அங்கே வந்து வேலை பாரு. அப்போ தெரியும் உனக்கு... அவங்க பண்ற லொள்ளு தாங்காம நீ ஒரே வாரத்துல ஓடிப் போய்டுவே.

நே.தே.எ: இப்பொ நான் சில கேள்விகள் கேட்கிறேன். பதில் சொல்லுங்க.
நே.தே.எ.மனம்: நானும் எவ்வளவோ பேரெ கேட்டுட்டேன். எவனுக்கும் பதிலே தெரியல. நீயாவது சொல்லுடா ராசா..இந்த கேள்வியினாலதான், நான் அந்த கம்பெனியிலே சேரமுடியல.
நே.தே.கொ: கேளுங்க சார்.
நே.தே.கொ.மனம்: என்னத்த கேக்கப் போறானோ தெரியலையே..ஆண்டவா..

நே.தே.எ: இந்த கம்பெனியில் நீங்கள் சேர்ந்துவிட்டால், என்னிடம்தான் வேலை செய்ய வேண்டும். இந்த கம்பெனி ஒரு தட்டையான கம்பெனி (Flat Orgn). அதாவது, நீங்கள் எந்த மேலாளரையும் எந்த நேரத்திலும், எந்த பிரச்னையானாலும் சென்று சந்தித்துப் பேச இயலும். என்னைக்கூட நீங்கள் எந்த சந்தேகமானாலும், எப்போது வேண்டுமானாலும், என்னுடைய தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
நே.தே.எ.மனம்: மகனே, எப்போ வேண்ணா கூப்பிடுன்னவுடனே, ஆபீஸ் முடிஞ்சப்புறம் கூப்பிட்டே, தொலெஞ்சே. நான் என் தொலைபேசியையே எடுக்க மாட்டேன்.
நே.தே.கொ: ஓகே சார். கண்டிப்பாக. இதை கேட்பதற்கே மிகவும் சந்தோஷமாக உள்ளது.
நே.தே.கொ.மனம்: இருடி, ஒரு நாள் ராத்திரி தொலைபேசியிலே கூப்பிட்டு, லார்ட் லபக்தாஸ் மாதிரி சந்தேகம் கேக்குறேன்.

நே.தே.எ: ஓகே. இப்போ கடைசி கேள்வி. இங்கே வேலை கொடுத்தா, என்ன சம்பளம் எதிர்ப்பார்க்கிறீங்க?
நே.தே.எ.மனம்: என்ன வேணா கேளும்மா, நீ என்ன கேக்குறியோ, அதிலே 50%தான் கொடுப்பேன்.
நே.தே.கொ: சார், அதாவது, நான் இப்போ வாங்குற சம்பளத்திலேர்ந்து 30% அதிகமா கொடுத்தா நல்லா இருக்கும்.
நே.தே.கொ.மனம்: என்னமோ ஒரு 50 லட்சம், கார், இருக்க வீடு எல்லாமே தாராளமா கொடுக்கறாப்பலே கேக்குறானே..என்ன கேட்டாலும் அதிலே கொஞ்சம் கம்மி பண்ணத்தான் போறான்.. பாக்கலாம்..என்னத்த கழட்டறான்னு.

நே.தே.எ: ஓகே சுரேஷ். உங்களை வேலைக்கு எடுப்பதென்று முடிவெடுத்துவிட்டேன். உங்களுக்கு கேட்பதற்கு ஏதாவது இருக்கிறதா?
நே.தே.எ.மனம்: வாடி என் செல்லம்...ஒரு பலியாடு கிடைச்சாச்சு. இவனை விடக்கூடாது.
நே.தே.கொ: மிகவும் நல்லது சார். ஒரே ஒரு கேள்வி. எனக்கு ஏதாவது பயிற்சி தரப்படுமா? அதாவது இந்த கம்பெனியின் வேலைமுறைகளைத் தெரிந்துக்கொள்ள...
நே.தே.கொ.மனம்: ஏன்னா, எனக்கு எதுவுமே தெரியாது. ஏதாவது சொல்லித் தந்தாதான் நான் வேலையெ செய்ய முடியும்.

நே.தே.எ: கண்டிப்பாக சுரேஷ்.
நே.தே.எ.மனம்: நீ தப்பிச்சி போக முடியாதபடிக்கு என்னென்ன செய்ய முடியுமோ, நாங்க எல்லாம் செய்வோம்.
நே.தே.கொ: ஓகே சார். நான் அடுத்த வாரம் வந்து சேர்ந்து விடுகிறேன்.
நே.தே.கொ.மனம்: அப்பாடா, அந்த ஜெயிலிலிருந்து விடுதலை கெடெச்சிடுச்சு.

இருவரும் விட்டால் போதுமென்று அந்த அறையை விட்டு ஓடிப்போகிறார்கள்.

Read more...

Wednesday, January 9, 2008

அம்மா வீட்டருகே மர்ம நபர்கள்...

சமீபத்தில், அம்மா வீட்டருகே 2 (3?) மர்ம நபர்கள் நடமாட்டம் இருந்ததாகவும், பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்தன. ஏன் இப்படி நடக்கிறது என்று சிந்தித்தபோது உண்டான கற்பனை இது.

அம்மாவை பார்க்க வருகிற ஒருவருக்கும், அம்மா வீட்டிலிருக்கும் காவலாளி ஒருவருக்குமிடையே நடக்கும் உரையாடல் இது.

சார்...சார்..
வாங்க...என்ன வேணும்?
அம்மாவை பாக்கணும்.
அப்போ எதுக்கு சார்..சார்னு கத்தினீங்க? அம்மான்னே கூப்பிட்டிருக்கலாமே?
சாரி சார். அம்மாவை நான் பாக்க முடியுமா?
கண்ணிருக்கிற யாரும் அம்மாவை பாக்க முடியும்.
சார் ப்ளீஸ்...அம்மாவை எப்போல்லாம் பாக்க முடியும்?
எப்போல்லாம் நேர்ல் வர்றாங்களோ, அப்பொல்லாம் பாக்கலாம்.
அதில்லை சார்...அம்மாவை நான் இப்போ பாக்க முடியுமா?
இப்போ எப்படி பாக்க முடியும். அவங்கதான் உள்ளே இருக்காங்களே?
சார்...சீரியஸா பேசுங்க..என் பேர் சுரேஷ்.
சுரேஷ்னா சீரியஸா பேசணுமா?
ஹலோ...அம்மாவை பாக்க முடியுமா? முடியாதா?
முடியாது.
ஏன் பாக்க முடியாது? என் கிட்டேதான் கண் இருக்கே?
அம்மா தூங்கும்போதும், குளிக்கும்போதும் யாரும் பாக்க முடியாது
அப்போகூட எனக்கு கண் தெரியுமே?
ஆனா, அதுக்கப்புறம் கண் இருக்காது.
சரி. இப்பொ கடைசியா என்னதான் சொல்றீங்க?
ஆனா, அதுக்கப்புறம் கண் இருக்காது.
அட.. அந்த கடைசி இல்லேங்க...
நான் இப்பொ அம்மாவை பாத்தே ஆகணும்.
அம்மாயிண்ட்மென்ட் இருக்கா?
என்கிட்டே ஆயிண்ட்மென்ட்தான் இருக்கு.
அம்மாவெ பாக்கணும்னா அம்மாயிண்ட்மென்ட் இருக்கணும்.
நீங்க கண் இருந்தா போதும்னீங்க?
நக்கல்?..எங்கெயிருந்து வர்றீங்க?
அதோ அங்கேயிருந்து...
அதில்லேங்க....அதுக்கு முன்னாடி எங்கேயிருந்து வர்றீங்க?
எங்க வீட்டிலேர்ந்துதான்.
இதே மாதிரி பேசிட்டிருங்க...பார்வை நேரம் முடிஞ்சிடும்.
அப்புறம், எனக்கு கண் தெரியாதா?
அதில்லே, அதுக்கப்புறம் அம்மா பாக்க மாட்டாங்க.
ஏன், அப்புறம் அவங்களுக்கு கண் தெரியாதா?
என்ன விஷயமா அம்மாவை பாக்கணும்.
இதெ மொதல்லெயே கேட்டிருக்கலாமே?
ஏன், இப்பொ கேட்டா சொல்ல மாட்டீங்களா?
சொல்றேன்.
சொல்லுங்க.
அம்மாவை பாத்து 'குட் மார்னிங்' சொல்லணும்.
அதுக்கு நீங்க நாளைக்கு கார்த்தாலதான் வரணும்.
ஏன், இன்னிக்கு 'குட் மார்னிங்' கிடையாதா?
நீ இப்படி பேசி பேசியே, 'குட் மார்னிங்' போய் 'குட் ஆப்டர்னூன்' வந்துடுச்சு.
சரி.. நான் இப்போ போறேன். ஆனா, இங்கேயேதான் சுத்திட்டிருப்பேன். எப்பொ அம்மா வந்தாலும் அவங்களுக்கு 'குட் மார்னிங்' சொல்லிட்டுத்தான் போவேன்.
போயிட்டு வாடா சாமி...

இதனால்தான் அந்த நபர்கள் அங்கே நடமாடிக்கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீங்க என்ன நெனெக்கிறீங்க?

Read more...

Sunday, January 6, 2008

ஏதோ ஒரு நாட்டில், ஏதோ ஒரு மாநிலத்தில் ஒரு முதலமைச்சர்-கம்-கட்சித்தலைவரின் ஒரு நாள் அலுவல்

காலை
3.30 எழுந்து கொள்ளல்
4.00 உடற்பயிற்சி
5.00 அனைத்து கட்சியினரின் பத்திரிக்கைகளைப் படித்தல்
அவர்களது அறிக்கைகளுக்கு பதிலளித்தல்
சொந்தப் பத்திரிக்கைக்கு/கட்சியினருக்கு கடிதம் எழுதுதல்
7.00 சொந்த வேலை மற்றும் சிற்றுண்டி
8.00 அனைத்து கட்சியினரின் தொலைக்காட்சிகளில் செய்திகளைப் பார்த்தல்
10.00 சொந்த தொலைக்காட்சியினருடன் சந்திப்பு
தற்போதைய நிகழ்ச்சிகளில் மாறுதல் மற்றும் புதிய நிகழ்ச்சிகள் பற்றி விவாதித்தல்
12.00 மதிய உணவு
1.00 சிறிய ஓய்வு
2.00 சொந்த/கூட்டணி கட்சியினருடன் சந்திப்பு
3.00 தம் மகன், மகள், பேரன், பேத்தி, அண்ணன் பேரன், அக்காள் பேரன் ஆகியவர்களுக்கு அரசியல் பாடம் எடுத்தல் / குறிப்புகள் கொடுத்தல்
4.00 அனைத்துக் கட்சியினரின் மாலைப் பத்திரிக்கைகளைப் படித்தல்
5.00 தேனீர் மற்றும் சிறிது உடற்பயிற்சி
6.00 இலக்கிய, சினிமா அல்லது தொலைக்காட்சி சம்மந்தப்பட்ட கூட்டம் ஒன்றில் பங்கேற்பு
8.00 குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவிடுதல்
குடும்பத் தகராறுகளை அலசுதல்/விவாதித்தல்
9.00 இரவு உணவு
10.00 கதை, கட்டுரை, (திரைப்படத்திற்கான) திரைக்கதை மற்றும் இலக்கியம் சம்மந்தப்பட்ட வேலைகள் செய்தல்
இரவு 12.00 உறங்கச் செல்லுதல்

Read more...

கிபி2030 - சென்னை-செங்கல்பட்டு இடையே நதி நீர் பங்கீடு

சென்னை மாவட்டத்திற்கும், செங்கல்பட்டு மாவட்டத்திற்கும் இடையே சென்ற வருடத்திலிருந்து அடிக்கடி சிறுசிறு மோதல், தகராறு ஏற்படுவது தெரிந்ததே. பாலாறு நதி நீரை பகிர்ந்துகொள்வதில் இந்த இரு மாவட்டமும் இப்படி சண்டை போடுவது சமீபத்தில் அதிகரித்துவிட்டது.

சென்ற மாதம், சென்னை-செங்கல்பட்டு மாவட்ட எல்லையில், செங்கல்பட்டு மாவட்டத்தினர் ஒரு சிறு தடுப்பணை கட்டி, நீரை தேக்கி வைக்க முற்பட்டனர். அப்போது தென் சென்னை மக்கள், அவர்கள் எம்.எல்.ஏவுடன் சென்று அங்கு அடிதடியில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு எம்.எல்.ஏ அப்போது - என்ன தடை வந்தாலும், இந்த தடுப்பணை கட்டி முடிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், 2025ஆம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, சென்னைக்கு வருடா வருடம் செங்கல்பட்டு தண்ணீர் விடுவதாகவும், அதற்கு மேலும் தண்ணீர் கேட்டு தகராறு செய்வது கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.

தென் சென்னை எம்.எல்.ஏ கூறும்போது - இந்த தடுப்பணையை எதிர்த்து உயர் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருப்பதாகவும், விரைவில் தடை வாங்க முயற்சி செய்யப்படும் என்று தெரிவித்தார்.

கடந்த இரு நாட்களாக இரு மாவட்டத்திற்குமிடையே போக்குவரத்து தடை பட்டிருக்கிறது. அவ்வப்போது நடைபெற்ற கல்வீச்சில் மூவர் காயமடைந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தின் இந்த அராஜக செயலை சென்னை நடிகர் சங்க தலைவர் கண்டித்துள்ளார். நேற்று நிருபர்களிடையே பேசுகையில் - அடுத்த வாரம் செங்கல்பட்டு மாவட்டத்தின் தடுப்பணையை எதிர்த்து நடிக, நடிகையர் ஊர்வலம் போக இருப்பதாக அறிவித்தார். இந்த ஊர்வலம் சென்னை தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு எல்லைவரை செல்லும் என்று கூறினார்.

அவரின் இந்த அறிவிப்பிற்கு முன்னாள் நடிகர் சங்க தலைவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில் பிரச்சினையை தீர்ப்பதற்கு பதிலாக, ஊர்வலம் போவது, பிரச்சினையை இன்னும் வளர்த்துவிடும் என்று கூறினார். அதனால், அவர் ஊர்வலம் போவதற்கு பதிலாக, அதே தினத்தில், சென்னை கத்திப்பாரா அருகில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார்.

இது பற்றி மக்களிடையே பல்வேறு கருத்து நிலவுகிறது. முன்னாள் நடிகர் சங்க தலைவர் செங்கல்பட்டில் பல கல்லூரிகள் நடத்தி வருவதாகவும், அதனாலேயே இந்த பிரச்சினையில் அதிகம் கவனம் செலுத்தாமல், மக்களை திசை திருப்புகிறார் என்றும் பேசிக்கொள்கின்றனர்.

இந்த தண்ணீர் பிரச்சினை குறித்து முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து வந்த செய்திக் குறிப்பில் - முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் அனுப்பியிருப்பதாகவும், விரைவில் ஒரு நதி நீர் பகிர்வு ஆணையம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் இரு மாவட்டங்களும், அந்த ஆணையத்தின் தீர்ப்பை மதிப்போம் என்றும் அறிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP