சிரி சிரி சிரி சிரி...
எங்கே, அதையே கொஞ்சம் சிரிச்சிக்கிட்டே சொல்லுங்கன்னு கவுண்ட்ஸ் மன்னனில் சொல்வதைப் போல் உங்களிடம் சொல்ல முடியாது. ஏன்னா, உங்களுக்கு எப்பவுமே சிரித்த முகம்தான்னு பலர் என்னிடம் சொல்லியிருக்காங்க. இதையே வீட்டில் DW வேறு மாதிரி சொல்வாங்க. அது இப்போ வேண்டாம். நாம மேலே போவோம்.
ஹெல்மெட் மாட்டிக்கிட்டு வண்டி ஓட்டும்போது, அது நமக்கான ஒரு தனி உலகம். உள்ளே பேசலாம், பாடலாம். நான் ஏதாச்சும் ஒரு பல்ப் வாங்கிய சம்பவத்தை - அதுதான் ஏகப்பட்டது இருக்கே - நினைச்சிக்கிட்டு சிரிச்சிக்கிட்டே போவேன். அப்படி சிரித்தவாறே ஓட்டும்போது, யாருடனாவது - பக்கத்தில் வண்டி ஓட்டுபவரோ அல்லது சாலையோரத்தில் நின்றிருப்பவரோ - கண்ணோடு கண் பார்க்க நேர்ந்துவிடும். அப்படி பலமுறை நேர்ந்திருக்கிறது. சில பேர் சிரிக்க முயல்வார்கள், சிலர் யார்றா இவன், நம்மை பார்த்து சிரிக்கிறான்னு தலை திருப்பிவிடுவார்கள். சிலர், பேருந்தில் நடக்கும் வடிவேலு காமெடியைப் போல், நம்மைப் பார்த்து சிரிக்கிறானா, இல்லே பின்னாடி யாராவது இருக்காங்களான்னு பின்னாடி திரும்பியும் பார்த்திருக்காங்க. இப்படி அண்ணலும் நோக்கி சிரித்து ‘அவளும்’ நோக்கிய உதாரணங்கள் இந்தப் பதிவிற்கு தேவையில்லாத விஷயங்கள்.
இப்ப போன வாரம் நடந்தது.
யாரோ ஆண்கள், சிலசமயம் பெண்களைப் பார்த்து சிரித்ததெல்லாம் பிரச்னையில்லை. போன வாரம் அலுவலகத்திலிருந்து வரும்போது - ஹெல்மெட்டுக்குள் சிரித்தவாறே - தூரத்தில் நின்றிருந்த ஒரு போக்குவரத்து காவல் போலீஸைப் பார்த்துட்டேன்.
டக்குன்னு சுதாரித்து, சிங்கம் சூர்யா போல் stiff ஆனாலும், அவர் பார்த்துட்டார். என்னடா, இவன் நம்மைப் பார்த்து சிரிக்கிறானேன்னு, நம்மை நிறுத்தி ஓரம் கட்டுங்கன்னுட்டார்.
சார், ஹெல்மெட் கழட்டுங்க. கைப்பேசியில் பேசிட்டு வர்றீங்களா?
இல்லை சார்.
DL, Insurance?
இதோ.
ஆதார் கார்டும் இருந்துச்சு. ஆனா அவர் கேட்கவில்லை.
சரி போங்கன்னு ஒரு சந்தேகத்துடனேயே அனுப்பி வைத்தார்.
டேய், இவன் எங்கெங்கே போறானோ, அங்கெல்லாம் ஒரு ஆள் போட்டு வைங்கடா. என்னைப் பார்த்து சிரிச்சிட்டான்னு சொல்வாரோன்னு திரும்பிப் பார்த்து (சிரிக்காமல்) போனேன்.
வீட்டில் போய் விஷயத்தை சொன்னா, நான்தான் சொன்னேனே, இனாவானா மாதிரி (அய்யய்யோ, சொல்லிட்டேனே!!)
சிரிச்சிக்கிட்டே போகாதீங்கன்னு, எங்கே கேட்டாதானேன்னாங்க.
சரிம்மான்னு சொல்லி சிரித்தேன்.
***