Monday, February 15, 2016

உட்கார்ந்தான், ஓடினான், கிடந்தான்.



ITPL to KRPuram ரெயில் நிலையம். முன்பெல்லாம் ஆட்டோவில் ரூ150 கேட்பாங்க. ரூ120க்கு வருவாங்க. சென்ற ஆண்டு நவம்பர் மழைக்குப் பிறகு எல்லா விலையும் கூடிப்போச்சு போல. இந்த முறை கேட்டதற்கு ரூ300ன்னாரு. சாமி, ரூ500க்கு நான் சென்னைக்கே போறேன். என்னை விட்டுடுங்கன்னு ஓலா ஆட்டோ பார்த்தால், ஒரே ஒரு நிமிடம் காட்டியது. Confirm செய்து நிமிர்ந்தால், அடடே, அவரே வந்துட்டாரேன்னு ஓலா வந்துடுச்சு. ரூ110 மீட்டர்+ரூ10 கொடுத்து ரெயில் ஏறியாச்சு.

நிமிர்ந்த முதுகும், நேர்கொண்ட பார்வையுமாய் உட்கார்ந்து போகணும் இந்த Double Deckerல். (அப்படின்னா, அந்தக் கட்சிக்காரங்க இந்த ரெயிலில் போக முடியாதான்னு கேட்கக்கூடாது!!). வாரயிறுதி வெள்ளி மாலைக்கு அதிக கும்பலில்லை. 3-seaterல் நான் ஒருவனே உட்கார்ந்து வந்ததால், கொஞ்சம் கால் நீட்டி கால் மடக்கி பிரச்னையில்லாமல் போக முடிந்தது.

Central to Triplicane பேருந்தில் ஏறியாச்சு. பெங்களூரு நிலைமையில் 4கிமீக்கு ரூ12ஆவது இருக்கும்னு காசு கொடுத்தால், ரூ4க்கு டிக்கெட் கொடுத்து, சரியான மீதி சில்லறையும் உடனே கொடுத்தார் நடத்துனர். கண்ணில் வந்த ஜலத்தை கஷ்டப்பட்டு அடக்கிண்டேன்.

85+ வயதான ஒரு சொந்தக்கார். நான்கைந்து சாக்லெட் கொடுத்தார். யாருக்கு இது? சஹானாவுக்கான்னா, அடேய் இது உனக்குதான். சாப்பிடுன்னார். எனக்கு எதுக்கு? சின்ன வயசில் தினமும் சாக்லெட் கேட்டு எங்க வீட்டுக்கு வருவே. உனக்கு எவ்வளவு வயசான என்ன? எங்களுக்கு நீ எப்பவுமே குழந்தைதான். அப்புறம் என்ன சொல்றது? போட்டேன் சாக்லெட்டை (என்) வாயில்.

அப்பா. எவ்ளோ நாளாச்சு இந்த லோக்கல் டாஸ்மாக் வாசத்தை நுகர்ந்து. பறக்கும் ரெயிலில் படுத்தபடியே (மட்டையாகி) வந்த இருவரிடம்தான் அந்த நறுமணம். ரூ5க்கு 15 நிமிடத்தில் திருவல்லிக்கேணியிலிருந்து கஸ்தூரிபாய் நகருக்கு வந்து சேர்த்துடுச்சு பறக்கும் ரெயில். (யஹ் கஸ்தூரிபாய் நகர் ஹை).

இறங்கியவுடன் தயாராக நின்றது புதுச்சேரிக்கான ஒரு குளிர்சாதன பேருந்து. லோக்கல் வெயிலில் காயணும்னு வந்தவனுக்கு, எதுக்கு குசாபே. வேண்டாம்னுட்டேன். (ஹிஹி. காசும் அதிகமா இருக்கும்லே!). பின்னாடியே இன்னொரு தநா விரைவுப் பேருந்து. ரூ97க்கு 3.30மணி நேரம் ஓட்டி (ஒரு சிறு தேநீர்க்கான நிறுத்தத்துடன்) புதுச்சேரி கொண்டு வந்து சேர்த்தார் ஓட்டுநர்.

ஆரோவில் ஓட்டம் துவங்கிடுச்சு. 9மணி வாக்கில் சரியான வெயில். சட்டையைக் கழற்றி கக்கத்தில் வைத்து ஓடிக்கொண்டிருந்தேன். அப்போ பக்கத்தில் வந்த ஒருவர், சட்டையை அவுத்திட்டீங்க சரி. அந்த பூணலையும் எடுத்துடுங்க. ரொம்ப தொந்தரவா இருக்கும். நான் அதுக்குதான் அதை கழற்றி Hotelலிலேயே வெச்சிட்டு வந்துட்டேன்னாரு. அடேய். அதுக்கு நீ ஊரிலேயே வெச்சிட்டு வந்திருக்காலாமேன்னு, சொல்ல நினைத்தேன். சொல்லவில்லை. சரி சார், அடுத்த முறை அப்படியே செய்றேன்னு கொஞ்சம் முன்னாடி ஓடிப்போனேன்.

சரி, 42கிமீ ஓட்டத்திற்கே சட்டையைக் கழட்டிட்டே, 75 அ 100 ஓடினா, இன்னும் எதையெல்லாம்.. ஐ மீன்.. என்னவெல்லாம் செய்வேன்னு ஏடாகூடமா கேட்காமல், அடுத்த பத்திக்குப் போங்க.

புதுச்சேரியில் தடுக்கி விழுந்தால்.. சரக்கு கடையல்ல. நான் சொல்ல வந்தது ஃப்ளெக்ஸ். கட்சிகளின் ‘தலைவர் வருகிறார்’ பேனர்கள் கூட இல்லை. திருமண வாழ்த்துகள் ப்ளெக்ஸ்கள். மணமக்களை ஓரமாக போட்டுவிட்டு, வாழ்த்தும் நண்பர்களின் படங்களுடன் ஏகப்பட்ட விளம்பரங்கள். டூ மச். இஅ23பு போல், ஒரு ஃப்ளெக்ஸ் மைதானம் அமைத்தாலும், அதுவும் நிரம்பிவிடும்.

இதுவும் புதுச்சேரியில்தான். ஞாயிறன்று அம்மா கட்சியினர் பட்டாசு வெடித்து சிறப்பு ஊர்வலம். இதனால் பேருந்துகள் ஒரு பத்து நிமிட நெரிசலில் சிக்கின. ஆனால் மக்கள் அதுக்காக திட்டவில்லை. ஏன்னா, எல்லா பேருந்துகளிலும் ஏறி ‘சார், லட்டு, அம்மா, லட்டு’ன்னு லட்டு விநியோகம் செய்து கொண்டிருந்தனர். எல்லாரும் ஆளுக்கு 2கூட வாங்கிக் கொண்டபோது, நான் லட்டு வேண்டாம்னு சொல்லிட்டேன். அதுக்காக, நான் அந்தக் கட்சி இல்லையோ? வேறெந்தக் கட்சியா இருக்கும்னெல்லாம் ஆராய்ச்சி வேண்டாம் மக்கழே.

Auroville to Puducherry பேருந்து நிலையத்திற்கு ஆட்டோ கேட்போம்னு எவ்வளவு ஆகும்னா, இவரும் சென்னை போகும் கட்டணத்தை விட அதிகமாக, ரூ200ன்னு சொல்லி, வண்டி எடுக்க வந்தார். சிரமப்படாதீங்க, நானே பார்த்துக்கிறேன்னு சொல்லி, ஒரு தனியார் பேருந்தில் ஏறி ரூ5க்கு டிக்கெட் எடுத்து, பேருந்து நிலையம் வந்து சேர்ந்தேன்.

Puducherry to Bangalore. படுக்கை வசதி கொண்ட குசாபே. இரவுக்குள் வீட்டுக்கு வந்து சேர்த்துட்டான்.

இப்படியாக ஆரோவில் பயணம் இனிதே நிறைவுற்றது.

***


0 comments:

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP