வாரயிறுதி பயணக் குறிப்புகள்.
ஒரு திருமண நிகழ்ச்சிக்காக திருக்கோயிலூருக்குப் போய் வந்தோம். அந்த பயணத்திற்கான சிறு குறிப்புகள்தான் இந்தப் பதிவு.
பெங்களூரிலிருந்து திருக்கோயிலூருக்கா? பேருந்திலா? சாலைகள் மோசமாக இருக்கும். பார்த்து போங்கன்னு சொன்னார் நண்பர். கிருஷ்ணகிரி வரை தேநெ7 வெண்ணெய். அதுக்கப்புறமும் நண்பர் சொன்ன மாதிரி மோசமெல்லாம் இல்லை. படுமோசம். 3+ ஆண்டுகளாகவே அப்படிதான் இருக்காம். பல இடங்களில் சாலை / பாலம் போடும் வேலைகள். முடிஞ்சிடுச்சுன்னா நல்லாயிருக்கும். அதுவரை கர்ப்பஸ்த்ரிகள் அந்தப் பக்கம் போவதை தவிர்க்கவும்.
பல ஆண்டுகள் கழித்து சஹானாவைப் பார்த்த உறவினர் ஒருவர், என்னம்மா படிக்கிறே, என்ன பள்ளி, எத்தனாவது ரேங்க் என பல கேள்விகள் கேட்டாரு. இவரும் எல்லாத்துக்கும் பொறுமையா பதில் சொன்னாரு. முடிஞ்சுதா? அடுத்த நாள் காலை. அந்த ஆளை மறுபடி சந்திக்க நேர்ந்தது. சஹானாவைப் பார்த்து அவர் கேட்ட முதல் கேள்வி - என்னம்மா படிக்கிறே?.
செங்கம் பேருந்து நிலையம். ஆத்திரத்தை அடக்கிவிட்டு, அடுத்ததை அடக்க முடியாமல் ஊர் மக்கள் எல்லாரும் இங்கே வந்துதான் போவாங்க போலன்னு நினைக்க வைக்கும் வாடை. நம் ஓட்டுநருக்கும் அந்த வாடை வந்ததால், உடனே வண்டியை கிளப்பிட்டாரு.
ஊருக்குப் போய், தென்பெண்ணையைப் பார்த்து பல்லாண்டுகள் ஆச்சு. திச2015ல் தமிழக மழை வெள்ளத்தில் இந்த நதியில் தண்ணீர் விட்டிருக்காங்கன்னு சொன்னாங்க. ஜன2016ல் இன்னும் தண்ணீர் இருக்கலாம்னு நினைச்சி போனா, கண்ணுக்கெட்டிய வரை அங்கங்கே மக்கள், மணலில் குந்தவெச்சி, அசிங்கம் செய்திங். மிகப்பெரிய திறந்தவெளி அசிங்கரங்கம்.
உலகளந்த பெருமாள். கோயிலில் ஆறஅமர வேடிக்கை பார்த்தவாறு தரிசனம் முடிச்சாச்சு. பெரும்பாலான கோயில்களைப் போலவே இங்கும் செக்யூரிட்டி முதற்கொண்டு அனைவரும் வணக்கம் வைக்கிறார்கள். கையில் பல பத்து ரூபாய் நோட்டுகள் இருந்தால் நலம்.
இன்னொரு உறவினர். ஏன் என் பையன் பூணலுக்கு வரலை. இந்தக் கல்யாணத்துக்கு மட்டும் வரத் தெரிஞ்சுதில்லை? அடேய். இப்போ நான் வந்தது பெங்களூரிலிருந்து. அப்போ நான் இருந்தது அமெரிக்காவில். அதெல்லாம் எனக்குத் தெரியாது. உன்மேல் எனக்குக் கோபம் இன்னும் தீரலை. பிறகு, பந்தியில் அவருக்கு ஒரு எக்ஸ்ட்ரா லட்டு வாங்கித் தந்தபிறகு சிறிது பேசினார்.
திருவண்ணாமலை பேருந்து நிலையம். 12வாழைப்பழம் 10ரூபாய்னு வாங்கியாச்சு. சிறிது நேரத்தில் ஒரு வயதானவர் பசிக்குது ஏதாவது காசு கொடுங்கன்னு கேட்டு பேருந்து ஓரமாக வந்தாரேன்னு, சீப்பிலிருந்து 6வாப பிச்சி அவரிடம் கொடுத்தோம். பேருந்து புறப்பட்டு ஒரு சுற்று சுற்றி, வெளிச்சுவர் ஓரமாக மறையும் வரை அவரைப் பார்த்திருந்ததால், அந்தப் பழங்களை அவர் சாப்பிடாமல் தூக்கியெறிந்ததை பார்க்க முடிந்தது.
ஒரு வழிக்கு 250கிமீ. இரண்டு வழிக்கும் த நா அதிவிரைவுப் பேருந்து. சரியா 6மணி நேரம் எடுத்துக்கறாங்க. பேருந்து நல்ல கண்டிஷனில்தான் இருந்தது. ஆனா தேநெ7ல் வரும் பாலங்கள் மேல் ஏற முக்கி முக்கி முக்குது. சரக்கு லாரிகளுடன் போட்டி. 7 தாண்டியபிறகு சாலைகள் சரியில்லைன்னு ஏற்கனவே பார்த்தாச்சு.
போகும்போது அமைதியாகப் போன பேருந்து, திரும்பி வரும்போது மாபியா மெம்பர்களோடு வந்தது. ஓட்டுநர் + நடத்துனர் இருவரும் மாபியா. கேட்கணுமா. மொத்த 6மணி நேரமும் 80-90 பாடல்கள். இவங்களும் கூடவே பாடிக்கிட்டு. சரின்னு நாமும் காதில் சொருகியிருந்த தாசர் பாடல்களை எடுத்துவிட்டு, ஆத்தா பெத்தாளே ஆம்பளயா என்னத்தான்னு பாடிக்கிட்டே வந்து சில்க்போர்டில் இறங்கியாச்சு.
நன்றி வணக்கம்.
***
0 comments:
Post a Comment