Friday, November 28, 2014

உலகின் மிக அழகான சாலைகள்.




மேலிருக்கும் Maze இன்னொரு முறை பார்த்துடுங்க.

ஒரு பக்கம் எலியும் இன்னொரு பக்கம் வெண்ணெயும் வெச்சிட்டு, எலியை வெண்ணெயிடம் கொண்டு சேருங்கள்னு சொல்வாங்க. இரண்டும் நேரெதிரில் இருந்தாலும், சந்து சந்தாக நுழைந்து, கடைசியில் வெண்ணெயை அடைவதே விளையாட்டு.

இதுவே எங்களுக்கு ஒரு காலத்தில் பொழுதுபோக்காக இருந்தது. அட, Maze விளையாடுவது கிடையாதுங்க. திருவல்லிக்கேணியில் இருந்த காலத்தில், வீடு ஒரு பக்கம். பேருந்து நிலையம் இன்னொரு பக்கம். இந்த இரண்டும், நேரெதிரில் இருந்தாலும், இதே Maze போல, ஊர் முழுக்க சுற்றிக்கொண்டே போவோம். காரணம்? வேறென்ன.. தோழிகள்தான்.

இந்த நேரத்தில் க க க க க க கல்லூரிச் சாலை.... பாடலையும் பார்க்கலாம். மூட் செட்டாவதற்காகத்தான் இந்த ஏற்பாடு.

பேதை, பெதும்பை காலத்திலிருந்து பேரிளம் பெண்ணாக மாறிய வரை, தெரிந்த பலர் அங்கே இருந்ததுதான் காரணம். அதாவது, பள்ளியில், தட்டச்சு / சுருக்கெழுத்து நிலையத்தில், இந்தி வகுப்பில் இப்படி பல இடங்களில் கூடப் படித்தவர்கள் எல்லாரும் அதே சுற்றுவட்டாரத்தில் இருந்ததால், எங்களுக்கு பொபோ வேறெதுவும் தேவையில்லை. வெறும் தெருத்தெருவாக - மேற்கண்டவர்கள் வீடு வழியாக - போய் வருவதே போதுமானதாக இருந்த காலம். (அப்பா/அம்மா அன்பாகச் சொல்வதுபோல் சொல்லணும்னா - வெட்டியா ஊர் சுற்றிட்டு வருது பாரு தண்டச்சோறு!).

வெறும் நாட்களிலேயே இப்படியென்றால், தீபாவளி போல் விழாக் காலங்களில் கேட்கவே வேண்டாம். அப்போதெல்லாம் எங்களுக்கு புதுத்துணி என்பது, இரண்டு ஆடிக்கு ஒரு முறை, 24 அமாவாசைக்கு ஒரு முறைதான். ஆனால், அதெல்லாம் ஒரு பொருட்டாக இருந்ததில்லை. பண்டிகையன்று, சீக்கிரம் வாடா’ன்னு அவசரப்படுத்தும் நண்பர்கள். பிறகென்ன.. நகர்வலம்தான்.

இப்போ, ஏப்ரல், மே’யிலே பசுமையே இல்லே - பாடலையும் சேர்த்துக்கலாம். பார்க்கவில்லை என்றாலும் தப்பில்லை.

Mazeல் முக்கியமான விதி என்னன்னா, எங்கும் சுவற்றில் போய் முட்டிக் கொள்ளக்கூடாது. பாதை இருக்கும் வழியாகவே போக வேண்டும். ஆனால் நிஜத்தில் அப்படி முடியுமா? நமக்குத் தெரிந்த சில மடந்தைகளும், அரிவைகளும் வேண்டுமென்றே அப்படி ஒரு சந்தில் - அதாவது முட்டுச்சந்தில், அதுவும் கடைசி வீட்டில்தான் இருந்தார்கள். அந்த சந்திற்கு மறுபுறம் போக வழியில்லை என்று தெரிந்தாலும், நம்மால் போகாமல் இருக்கமுடியுமா? அங்கே போவதெல்லாம் நாம் என்ன பெருமைக்கா செய்கிறோம்? ஒரு கடமைதானே? வாடா போகலாம்னு இழுத்துக் கொண்டு போவான் நண்பன். அவ்வளவு தூரம் போய், அவர்களும் வெளியே இருந்துவிட்டால் ஒரு வழி, வழிந்துவிட்டு - பம்மல் உவ்வே சம்மந்தம், ஏண்டி சூடாமணின்னு பாடிக்கொண்டே சுவற்றில் போய் முட்டி, திரும்பி சரியான பாதையில் வருவதைப் போல் வந்துவிடுவோம்.

இப்படியாக சிலபல வருடங்களைக் கழித்ததால், உலகின் மிக அழகான, மிகவும் பிடித்தமான சாலைகள்/தெருக்கள் எங்கேயிருக்குன்னு கேட்டால் என்ன பதில் வரும்? திருவல்லிக்கேணியின் எல்லா தெருக்களும் (முட்டுச்சந்துகள் உட்பட) அழகானவைகள்தான். எவ்வளவு முறை வேண்டுமானாலும்  ’நடைப்பயிற்சி’ செய்யத் தகுந்தவை என்று சொல்வேன். ரிடையர் ஆனபிறகு அதே ஊரில் போய் செட்டில் ஆகவேண்டும் - ஆனால் என்ன, எனக்குத் தெரிஞ்சவங்க எல்லாரும் கிழவி ஆயிருப்பாங்க என்று சொன்னால், நீங்க மட்டும்னு ஒரு கேள்வி வரும் வீட்டிலிருந்து. நமக்கு எப்பவுமே வாலிப வயசுதான்னு சமாளிக்க வேண்டியிருக்கும்.

ஆனால்.. ஆனால்..

மேற்சொன்ன அருமை / பெருமைகள் நிறைந்த திருவல்லிக்கேணியிலும் ஒரே ஒரு தெரு/சந்து மட்டும் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. கடந்த 20 வருடங்களாக பலமுறை அந்தப் பக்கம் சுற்றி வந்தாலும், அந்த தெருவுக்குள் மட்டும் நான் போகவே இல்லை. இனிமேலும் போக மாட்டேன்.

ஏன்? யார்கிட்டேயாவது திட்டு / அடி வாங்கினியா? எனி வம்பு / தும்பு? என்று கன்னாபின்னாவென மனசை அலைபாய விடுவதற்குமுன் சரியான காரணத்தைச் சொல்லி விடுகிறேன்.

<கடைசி பாரா சோகமான முடிவு என்பதால் 31.10.2024 அன்று நீக்கப்பட்டது. ஹேப்பி தீபாவளி>


***


3 comments:

chinnapiyan November 28, 2014 at 10:10 PM  

ஆஹா என்ன ஒரு அருமையான நடை. வாசிக்க வாசிக்க சுகமா இருந்தது. நல்லா அனுபவிச்சு எழுதியிருக்கீங்க. நீங்க ஒரு நல்ல ரசிகன். வாழ்க்கையில் உங்களுக்கு குறையேதும் வர வாய்ப்பில்லை. வந்தாலும் அதை ஒரு ஜூஜூபியாக்கிறுவீங்க. வாழ்த்துகள் :))

M.பழநியப்பன் November 29, 2014 at 4:47 AM  

I was also put up in Vengatrangam pillai st.
while I was studying in Presidency(1974-77) what about you?... You may accept the fact that Triplicane is one place in Chennai which keeps 'the old world charm'..How is Sahana?

சின்னப் பையன் November 29, 2014 at 9:01 AM  

chinnappiyan -> நன்றி ஜி :-)

Palaniappan -> அந்த வருடங்களில் அங்கேதான் இருந்தேன். ஆனால் பச்சைக் குழந்தையா..:-) 2001 வரை திருவல்லிக்கேணி தேரடித் தெருதான்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP