Tuesday, November 26, 2013

காபி குடிக்க தனியாகச் சென்ற மென்பொருள் ஊழியர் டிஸ்மிஸ்!

அதிர்ச்சியூட்டும் ஒரு செய்தியாக, நேற்று பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவன ஊழியர் வேலை நேரத்தில் காபி குடிப்பதற்காக, யாருடனும் செல்லாமல், தனியாகச் சென்ற காரணத்தினால் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இது மென்பொருள் துறையினரிடையே பலத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரி தெரிவிக்கையில் - மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தங்கள் வேலைக்கு நடுவே அவ்வப்போது காபி குடிக்க வெளியே செல்வதுண்டு. அவற்றை நாங்கள் கண்டுகொள்ள மாட்டோம். ஆனால், தனியாக சென்றதனால் டிஸ்மிஸ் என்பது கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கிறது - என்றார்.

மற்றொரு நிறுவனத்தைச் சார்ந்த ஒரு மென்பொருள் நிபுணர் கூறுகையில் - எந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்களும் காபி குடிக்க தனியாகப் போகவே மாட்டார்கள். புதிதாக சேரும் ஒரு ஆண் கூட உடனடியாக ஒரு பெண்ணையும், ஒரு பெண் ஒரு ஆணையும் துணையாகக் கூட்டிக்கொண்டே போவார்கள். அப்படி இல்லையெனில், தங்கள் குழுவில் இருப்பவர்களுடன் போவார்கள். ஒரு முறை போய் வந்த குழுவே, இன்னொரு நண்பர் கூப்பிட்டார் என்பதற்காக உடனடியாக மற்றொரு முறை காபிக்காகப் போவார்களே தவிர, யாரும் தனியாகப் போய் நான் கேள்விப்பட்டதே இல்லை. கண்டிப்பாக அந்த நபரை ஒரு முறை நாங்கள் பார்க்க வேண்டும் என்று எங்கள் நிறுவனத்தில் கேட்டுள்ளோம் - என்றார்.

குறிப்பிட்ட அந்த நண்பர் எந்த ஒரு குழுவிலும் வேலை செய்யத் தகுதியே இல்லாதவர் - என்று கோபத்துடன் மற்றொரு நிபுணர் குறிப்பிட்டார். Team Building என்பது ஒரு கலை. காபி குடிக்கையில் திரைப்படம், கிரிக்கெட், சதுரங்கம் இப்படி சிலரும், நேற்று பார்த்த தொலைக்காட்சி சீரியல்கள் பற்றிப் பலரும் பேசுவார்கள். அப்படியே அவர்களுக்குள் நட்பு உண்டாகி, அது நிறுவனத்தின் வேலைத்திறனை அதிகரிக்கவும் உதவும்.

வேறு சிலர் எப்போதும் தங்கள் மேலாளர்களுடன் காபி (மற்றும் இதர பானங்களைக்) குடிக்கச் சென்று அவரது நம்பிக்கையைப் பெறும் வகையில் நடந்து கொள்வார்கள். அப்படியே அந்த மேலாளர் வேலையை விட்டுச் சென்றால், தன்னுடன் காபி குடித்தவர்களையும் அந்தப் புதிய நிறுவனத்திற்கே கூட்டிச் சென்றுவிடுவார் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்ட சம்பவமாகும். அதனால் எதிலும், யாருடனும் சேராத இந்த நண்பரை டிஸ்மிஸ் செய்தது சரியே என்று வாதிட்டார்.

இறுதியாக, டிஸ்மிஸ் செய்த அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசியபோது - அந்த நண்பர் இனிமேல் காபி கடையிலேயே இருந்தாலும் ஒரு நண்பரோடுதான் போவேன், தனியாகப் போகமாட்டேன் என்று எழுத்துபூர்வமாக ஒத்துக் கொண்டதால், அவரது டிஸ்மிஸ் திரும்பப் பெறப்பட்டது என்று தெரிவித்தனர்.

***
***

Read more...

Sunday, October 13, 2013

ஒரே கல்லிலே பல மாங்காய் - இறுதிப் பகுதி

முந்தைய இரண்டு பகுதிகளையும் படிச்சிட்டீங்களா?

அந்த பொதுக் கூட்டத்தில் பேச நான் தயாராகிட்டிருக்கும்போது, எனக்கு முன்னால் பேசிய ஒரு பெண்ணும் Fitness துறைக்காகவே பேசி ஓட்டு சேகரித்துக் கொண்டிருந்தார். Fitஆக இருந்தால் என்னென்ன நன்மை, உடல் வலு, திறன் அப்படி இப்படியென்று எல்லாவற்றையும் பேசினார்.

அடுத்து தலைவர் வந்தார். சரி சரி. நான்தான் மேடையேறினேன்.

நானும் Fitenss துறைக்காகத்தான் பேச வந்திருக்கிறேன். எனக்கு முன் பேசிய செல்வி.____ அவர்கள் இந்த துறையின் நன்மைகளைப் பற்றி விரிவாகப் பேசி, எனக்கு உதவி புரிந்தார். அதற்கு அவருக்கு என் நன்றிகள். எனது தலைப்பு ‘Running'.

நன்மைகளைப் பற்றி முன்னரே பேசிவிட்டதால், Runningன் தீமைகளைப் பற்றி நான் பேசப் போகிறேன்.

தீமையா, Fitnessல் தீமைகளும் இருக்கா? என்று கூட்டத்தில் சலசலப்பு. இவ்வளவு நேரம் கசமுசகசமுச என்று பேசிக் கொண்டிருந்தவர்கள், இப்போது அமைதியாக கேட்க ஆரம்பித்தனர்.

யெஸ். தீமைகள்தான். ஓடுவதால் வரும் தீமைகள் என்னவென்றால்:
* நீங்கள் ஓட்டத்தை காதலிக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.
* வீட்டிலேயே இருக்க மாட்டீர்கள். இதனால் வீட்டில் திட்டு விழும்.
* It is Contagious / Infectious.
* உங்களால் ஓடுவதை நிறுத்த முடியாது.
* எல்லாரும் தூங்கிக் கொண்டிருக்கும்போது, நீங்கள் எழுந்து தயாராகி, எல்லாரிடமும் திட்டு வாங்குவீர்கள்.

முந்தைய பகுதியில் பார்த்த க.ப. தங்கவேலு காட்சி இங்கேதான் ஆரம்பித்தது!!

ஓட்டத்தின் நன்மைகள் எல்லாமே அதன் By-productsகள்தான். அவைகளுக்காக நாம் ஓடமாட்டோம். நம் விருப்பத்திற்காக, சந்தோஷத்திற்காக ஓட ஆரம்பித்து, அதன் விளைவால் வரும் by-productsகளை வாங்கிக் கொள்வோம். யாரெல்லாம் ஓடத் தயார்?

ஆங்காங்கே பல கைகள் (வளையல் அணிந்த மற்றும் அணியாத) கைகள் தூக்கப்பட்டன!

என்னுடைய இலக்கு, திசம்பரில் பெங்களூரில் இரண்டு ஓட்ட நிகழ்ச்சிகள் இருக்கின்றன. அதில் நம் நிறுவனம் சார்பாக குறைந்த பட்சம் 25 பேர் என்னுடன் 10கிமீ தூரம் ஓடவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். நிறுவனத்தின் பெயர் பொறித்த சட்டை, தொப்பி இவற்றை அணிந்து ஓடினால், நிறுவனத்திற்கும் ஒரு நல்ல விளம்பரம்தானே?

(இப்போது அங்கிருந்த பெரிய தலைகள் சிலர் கவனிக்கத் துவங்கினர்).

இதற்குத் தேவையான பயிற்சியை இந்த இரண்டு மாதங்களில் செய்வோம். முதல் ஓட்டம் ஓடியபிறகு எப்படி இருந்ததென்று சொல்லுங்கள். பிறகு நானே சொன்னாலும், நீங்கள் நிறுத்த மாட்டீர்கள்.

எனக்கு இந்த வாய்ப்பு அளித்தமைக்கு நன்றிகள். இப்போது ஏதேனும் கேள்விகள் இருந்தால் கேட்கலாம்.

(முந்தைய பதிவில் இருந்த கேள்விகள் இந்த சமயத்தில் கேட்கப்பட்டன).

***

இதைத் தவிர பிட் நோட்டீஸ் ஒன்று அடித்து அனைவருக்கும் கைப்பட விநியோகித்தேன். ஒரு பெரிய மின்னஞ்சல் தயார் செய்து அனைவருக்கும் அனுப்பினேன்.

பிரச்சாரம் முடிந்தது.

தேர்தல் நாள்.

அந்த நாளில் நான் ஓட்டுப் போட்டுவிட்டு, உடனே சென்னைக்கு வண்டியேற வேண்டும். கடைசி நேரத்தில் நான் இல்லாவிட்டால், ஓட்டு விழுமா என்ற சந்தேகம். என்ன ஆகுதோ ஆகட்டும் என்ற முடிவுடன், அந்த இடத்தை விட்டு வந்தாயிற்று.

***

முடிவுகள்.

யெஸ். நான் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

இப்போது வாக்குறுதிகளை செயல்படுத்தும் கட்டம். விரிவான திட்டங்கள், தெளிவான தகவல் தொடர்புகள் என, விருப்பப்பட்டு வரும் நண்பர்கள் அனைவரையும் ஓட வைக்க வேண்டிய வேலை.

எப்படி போகுதுன்னு ஓட ஓடத்தான் தெரியும்.

***

அனைவருக்கும் அனுப்பிய மின்னஞ்சல் இதுதான்:
https://docs.google.com/file/d/0B84c8UzuDzMeYWlSeEpUYjhMQlE/edit?usp=sharing.

அனைவருக்கும் வழங்கிய பிட் நோட்டீஸ்:
https://docs.google.com/file/d/0B84c8UzuDzMeRnNFV1pGejVETTQ/edit?usp=sharing

***

சுபம்.



Read more...

Wednesday, September 25, 2013

ஒரே கல்லிலே பல மாங்காய்.. பகுதி 2 of 3


அலுவலகத்தில் எந்த ஒரு சிறிய வேலையை செய்து முடித்தாலும், அதைப் பற்றி மேலாளருக்கோ, கஸ்டமருக்கோ சரியானபடி விளம்பரம் செய்ய வேண்டியது நம் கடமை. வடஇந்தியர்கள் இந்த விஷயத்தில் சரியாக இருப்பதை பல முறை கண்டிருக்கிறேன். நம்ம ஆட்களிடம் சொன்னால், "போங்க சார், இது ஒரு ஜுஜுபி வேலை. இதைப் போய் பெருமையா சொல்லிக்குவாங்களா?" என்றுவிடுவர். "அடப்பாவி, உன் இந்த வேலையால், கஸ்டமருக்கு எவ்ளோ பணம் / நேரம் மிச்சமாயிருக்குன்னு தெரியுமா?. முதலில் ஒரு மின்னஞ்சல் போட்டு சொல்லு. அப்புறம் என்ன ஆகுதோ அதைப் பற்றி கவலைப்படாதே". என் குழுவில் இருப்பவர்கள் சாதித்ததை, அவ்வப்போது உலகிற்கே மின்னஞ்சல் அனுப்பி அவர்களுக்கான அங்கீகாரத்தைப் பெற்றுத் தருவது என் வழக்கம்.

போதும். இத்தோட நிறுத்திக்குவோம். இதனால் சொல்ல வர்றது என்னன்னா, சுய விளம்பரம் எப்போதும் அவசியம்.

முந்தைய பகுதி 1 பதிவைப் படிச்சிட்டீங்களா?

அறிவிப்புப் பலகைகளில் விளம்பரங்கள்:

முதல் கட்டமாக அலுவலகத்தில் இருக்கும் இரு அறிவிப்புப் பலகைகளில் விளம்பரங்கள் எழுதி / அச்சிட்டு வைக்கலாம் என்றனர். ஐந்து நாட்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படும். உடனே உங்க விளம்பர வாசகத்தை எழுதிக் கொடுங்க, அதில் போட்டுடுவோம்னு சொன்னாங்க. ஐந்து நாட்கள் இருக்குதானே, அப்புறம் எதுக்கு ஒரே வாசகம், நான் ஐந்து வாசகங்களை எழுதித் தர்றேன். அழகா வண்ண வடிவில் டிசைன் செய்து போடுவோம்னு டக்குன்னு கீழ்க்கண்டவற்றை எழுதிக் கொடுத்தேன்.

1. Bhaag "company name" Bhaag.. Stay Fit.. Stay Healthy. Select and Elect Sathya as Minister for Fitness

2. Burn Fuel. Bad for India. Burn Calories. Good for you.

3. Stop Dreaming. Wake up & Start Running.

4. No Freebies. No Money. But I Promise. You will get FIT.

5. Runners. Walkers. Joggers. Find a Group. Get Motivated. Set Goals. and GO.

இந்த வாசகங்களை அழகாக பெரிய எழுத்துக்களில் அச்சிட்டு, இரு அறிவிப்புப் பலகைகளிலும் மாறிமாறி ஒட்டி, விளம்பரம் செய்தாச்சு.

ஒரு நாள், பொதுவாக கூட்டப்பட்ட ஒரு அலுவலகக் கூட்டத்தில் திடீரென்று இந்த Fitness (மற்றும் இதர) விஷயத்திற்காக விளம்பரங்கள் செய்யலாம்; அமைச்சராக விண்ணப்பித்தவர்கள் ஒவ்வொருவராக வரவும் என்றனர். அந்தக் கூட்டத்தில் சுமார் 200 பேராவது இருந்தனர். நல்லவேளையாக, எனக்கு முன் 2-3 பேர் பேசியதால் எனக்கு யோசிப்பதற்கு ஒரு பத்து நிமிடங்கள் கிடைத்தன. அதன்படி ஐந்து நிமிடங்கள் பேசியும், ஐந்து நிமிடங்கள் கேள்விகளுக்கு பதில்களும் சொல்லி முடித்தேன். அதில் நான் பேசிய பேச்சின் விவரத்தை அடுத்த பதிவில் பார்க்கலாம். (இன்னொரு பதிவு தேத்தியாச்சு!). மக்கள் கேட்ட கேள்விகளில் சிலவற்றை இங்கு படியுங்கள்.

முதலில் ஒரு பெண் கேட்ட கேள்வி. நீங்க நிறைய மாரத்தான்களில் ஓடறேன்னு சொல்றீங்க, தினமும் ஓடறேன்னு வேறே சொல்றீங்க, அப்படின்னா எங்களுடன் யார் சொல்லிக் கொடுப்பாங்க? எங்களுடன் யார் ஓடுவாங்க?

என் பதில்: இப்போ தினமும் நான் தனியாத்தான் ஓடறேன். ஓடறதுக்கு ஒரு நல்ல கம்பெனி இருந்தா, இன்னும் நல்லா ஓடலாம். நீங்க ஓடறேன்னா சொல்லுங்க, எந்த இடத்தில் ஓடறீங்கன்னு சொல்லுங்க, நான் தினமும் அங்கே வர்றேன், தினமும் சேர்ந்து ஓடலாம். (பதிவைப் படிக்கும் நண்பர்கள் யாரும் என் வீட்டிற்குத் தொலைப்பேச வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்!!).

அடுத்த கேள்வி: ஓட்டம் மட்டுமே போதுமா? இந்த யோகா, சைக்கிள், நீச்சல், சால்சா (salsa ) இதுக்கெல்லாம் என்ன திட்டம் வெச்சிருக்கீங்க?

என் பதில்: யோகா, salsa இதெல்லாம் எனக்குத் தெரியாது. சைக்கிள் நான் தினமும் ஓட்டறேன். அதுவும் தேவைதான். நீச்சல் - எனக்குத் தெரிந்தது ஒரே ஒரு வகை நீச்சல்தான். அதற்குப் பெயர் - Drowning. அதனால் இதைப் பற்றியெல்லாம் நான் பேசவில்லை. (தட்றான், தட்றான், செமையா கையைத் தட்றான்! - கல்யாணப்பரிசு தங்கவேலு குரலில் படிக்கவும்!!).

OK, Now serious answer... முதலில் ஓடத் துவங்குங்க. அப்போதான் சரியான தூக்கம் கிடைக்கும். அதன் பலன், சரியான நேரத்துக்கு சாப்பிடுவீங்க. அதன் பலன், உங்க தினப்படி வேலைகள் அனைத்தும் ஒரு சரியான அட்டவணைக்குள் வரும். அடுத்து, உணவுப் பழக்க வழக்கங்களில் மாற்றம், வாழ்க்கைமுறையில் ஒரு முன்னேற்றம், தெளிவான சிந்தனை, அலுவலகத்தில் வேலைத்திறன் கூடுதல்... இப்படி எல்லாமே கிடைக்கும். ஆனா, இவை எல்லாவற்றிற்குமான முதற்படி ஓட்டம். ஓகே? (இந்த இடத்தில் மறுபடி தங்கவேலு வசனம்!!).

அடுத்த பதிவிலும் தொடரும்...

***

Read more...

Friday, September 20, 2013

ஒரே கல்லிலே பல மாங்காய்.. பதிவு 1 of 2

#365Process காலத்தில் ட்விட்டரில் தொடர்ந்து விளம்பரங்கள் கொடுத்தது பலருக்கு நினைவிருக்கலாம். பதிவுகள் படிக்காத பலரும் இந்த விளம்பரங்களை ரசித்தனர் (என்று நினைக்கிறேன்!). சிலர் அதேபோல் விளம்பர உதவிகளையும் செய்தார்கள். இரு பெரியோர் இந்த விளம்பரத் தொல்லைகள் பொறுக்காமல், என்னை block/unfollow செய்து, இன்று வரை அதை நீக்கவில்லை என்று சொன்னால், அத்தகைய விளம்பரங்களின் தாக்கத்தை என்ன சொல்ல!! அந்தத் தொடர் முடிந்து பல நாட்கள் ஆன நிலையில், எதைப் பற்றியும் விளம்பரங்கள் போடாமல் செம போர் அடித்தது. இந்த சமயத்தில்தான் லட்டுவாக ஒரு வாய்ப்பு வந்தது. நிற்க.

அலுவகத்தில் எங்கள் கிளையில் சுமார் 600 பேர் உள்ளனர். இதை செய்யாதே, அப்படி செய்யணும் என்று பல விஷயங்களில் குச்சி வைத்து மிரட்டுவதால், பல வேலைகளுக்கு என்னிடத்தில் Process அனுமதி வேண்டி வருவதால், பெரும்பாலானவர்களுக்கு என்னைத் தெரியும் என்றாலும், எனக்கு இன்னொரு பேர் இருக்கு என்பது வெகு சிலருக்கே தெரியும். ஹிஹி. அது வேற ஒண்ணுமில்லே. பல ஊர்களுக்குப் போய் ஓடறோமில்லே. அதைப் பற்றி பலருக்கும் தெரியாதுன்னு சொல்ல வந்தேன். நாம எவ்ளோ பெரிய ஆட்டக்.. சாரி.. ஓட்டக்காரருன்னு எல்லாருக்கும் எப்படிடா/டி சொல்றதுன்னு நினைக்கும்போதுதான்... அதே லட்டு... மறுபடி நிற்க.

அலுவலகத்திலிருந்து இரு வாரங்களுக்கு முன் ஒரு மின்னஞ்சல். வேலையல்லாத (யி கிடையாது, ய) பல வெளிவிவகாரங்களில் ஆர்வமுள்ளவர்களைக் கண்டுபிடித்து, அவர்களை அமைச்சராக்கி, பலரை உறுப்பினர்களாக்கி, அதன் மூலம், பணியாளர்களின் நலனை பேணுவதாகத் திட்டம். அதில் ஒரு துறை: உடல்நலன்/Fitness. இதில் என்ன அட்டகாசமான மேட்டர்னா, அந்த அமைச்சர்களுக்கான பதவிக்கு பொதுத் தேர்தல் நடக்கும். 600 பேரும் ஓட்டுப் போடுவர். அதற்கு தேர்தலில் குதிப்பவர்கள் பல வகைகளில் ஒட்டு சேகரிக்கலாம். பிட் நோட்டீஸ், பொதுக் கூட்டம், வீடுவீடாகப் போகுதல் இப்படி. பிரியாணி, ஆரத்தித் தட்டு, டாஸ்மாக் இதெல்லாம் கிடையாது.

ஓகேயா? இப்போ மேலே சொன்ன இரண்டு லட்டு விஷயத்தையும் பாருங்க. நான் fitness துறையில் அமைச்சராக விண்ணப்பிக்க முடிவு செய்துவிட்டேன். அதற்கு ஒட்டு சேகரிக்கணுமே? விளம்பரங்கள்? யெஸ்... இதற்குத்தானே ஆசைப்பட்டாய்... ஒரே கல்லில் பல மாங்காய்(கள்). அமைச்சர் ஆகிறோமோ இல்லையோ, அந்த இன்னொரு பெயரை அனைவருக்கும் தெரியப்படுத்த இதைவிட ஒரு நல்ல வாய்ப்பு வராது. சரிதானே? ஆட்டம் ஆரம்பம்... இசை துவங்கியது...

தொடரும்..

Read more...

Tuesday, August 27, 2013

இ பிநா வா ச!

2009ம் ஆண்டு. அமெரிக்கா. கடுங்குளிர்கால இரவு 2 மணி. புரண்டு படுக்கும்போது பார்த்தால், சஹானா (அப்போது வயது 5) அவருடைய படுக்கையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். இந்தப் பக்கம் பார்த்தால், தங்க்ஸ் காணோம். வெளியே ஏதோ சத்தம் கேட்க எழுந்து போய் பார்த்தால், ஹாலில் தங்க்ஸ் அழுதுகொண்டிருந்தார்.

என்னம்மா ஆச்சு? இந்தியாவிலிருந்து ஏதாவது தொலைப்பேசி வந்துச்சா? உடம்பு சரியில்லையா? எதுக்கு இப்படி அழுதுக்கிட்டிருக்கேன்னா - பயங்கர வயிற்றுவலின்னாங்க. ஒரு மணி நேரமா பொறுத்துப் பார்த்தும் அடங்கவில்லையாம். சரி, உடனே மருத்துவமனை போய்விடலாமென்று சொன்னேன். வெளியே செம குளிர். பாப்பா வேறே தூங்கிக்கிட்டிருக்கா. இப்படியே காலை வரை சமாளிச்சிடறேன். காலையில் பார்த்துக்கலாம்ன்றாங்க.

இது வேலைக்காகாது. பக்கத்து வீட்டில் இருக்கிற நண்பரை எழுப்பறேன். சஹானாவை தூக்கி அவங்க வீட்டில் படுக்கவெச்சிட்டு, நாம போவோம். உடனே போய் பார்த்துடுவோம், பிரச்னை பெரிசா ஆகிடப்போகுது என்றேன். சரி, நண்பரை எழுப்பும்முன் முதலில் சஹானாவை எழுப்பி சொல்லிடுவோம். அப்புறம் அவ அழுதான்னா கஷ்டம் என்றார். ஓகே.

கண்ணம்மா, செல்லக்குட்டி, எழுந்திரும்மா. அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். வயிறு பயங்கரமா வலிக்குதாம். நீ பக்கத்துலே *** வீட்டுலே படுத்துக்க. நாங்க மருத்துவமனை போயிட்டு வரும்போது உன்னை கூட்டிட்டு வந்துடறோம்.

அன்று வெள்ளியிரவு. அடுத்த நாள் பள்ளி விடுமுறை. அதனால், 8 மணிக்கு முன்னால் என்னை எழுப்பாதே என்று சொல்லிப் படுத்திருந்த சஹானா, சட்டென்று எழுந்து அமர்ந்தார். அம்மாக்கு உடம்பு சரியில்லையா? நானும் வர்றேன், மருத்துவமனைக்கு போகலாம் என்று படபடவென்று எழுந்து தன் ஜெர்கின், ஷூ என அனைத்தையும் போட்டுக் கொள்ள ஆரம்பித்தார். அவரது வேகத்திற்கு நாங்களும் ஈடுகொடுத்து கிளம்பி, குளிரில் வண்டியெடுத்து மருத்துவமனைக்கு வந்து சேரும்போது சுமார் 2.45am.

2.45 முதல் மருத்துவமனையை விட்டு வெளியே வரும் 5 மணி வரை ஒரு நிமிடம் கூட தூங்காமல், அம்மாவுடனேயே இருந்து, கொஞ்ச நேரம் வெளியே இருங்கள் என மருத்துவர் சொன்ன காரணத்தால், வெளியில் வந்து தொலைக்காட்சி பார்க்க ஆரம்பித்து, அவ்வப்போது உள்ளேயும் எட்டிப் பார்த்து.. அப்பப்பா.. அன்று நாங்கள் கண்டது ஒரு குழந்தையே அல்ல என்று நினைக்கும் அளவிற்கு எங்களை நெகிழ்ச்சி அடையச் செய்தார் சஹானா.

ஒரு வழியாக 5 மணிக்கு அனைத்தும் சரியாகி, வெளியில் வந்து, வண்டியில் திரும்பிக் கொண்டிருக்கும்போது சொன்னதைக் கேட்டு இன்றுவரை பெருமைபட்டுக் கொண்டிருக்கிறோம். "இப்போ நடந்தது எதையும் நாளை காலை இந்தியாவுக்குப் பேசும்போது சொல்ல வேண்டாம். என்னைக் கேட்டா நான் லேட்டாதான் தூங்கினேன் அதனால் லேட்டா எழுந்திருப்பேன்னு சொல்லிடுங்க. அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னா, பாட்டி அழுதுடுவாங்க".

5.30 மணி. வீட்டுக்கு வந்தாச்சு. இருவரையும் தூங்க வைச்சாச்சு. நடந்ததை நினைத்து எனக்கு தூக்கம் போச்சு. ஒரு நொடிகூட சிணுங்காமல், தூக்கக் கலக்கத்துடன் இருந்தாலும் தூங்காமல், அம்மாவுக்காக குளிரில் வெளியில் வந்து துணையிருந்த குழந்தையை நினைத்து அன்று இறைவனிடம் வேண்டியதையே இன்றும் - அவரது பிறந்த நாளில் - வேண்டுகிறேன்.

எனக்கு வேணும்னா, வருடத்திற்கு இரு ஆண்டுகளாக வயதைக் கூட்டிக் கொண்டே போ. சஹானாவின் வயதைக் கூட்ட அவ்வளவு அவசரப்படாதே.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சஹானா... Aug. 27th...

Read more...

Tuesday, July 9, 2013

அவன் ஓடிய ஓட்டம்.

அட்டகாசமான வானிலை. மெலிதான தூறல். மரங்களின் கீழ் சற்று அதிகமாக. சென்னையில் ஓடுவதற்கு இதைவிட ஒரு அருமையான நாள் இருக்கமுடியாது. இந்த சுபயோக சுபதினத்தில்தான் அவன் HM (Half Marathon - 21.1கிமீ) ஓட முடிவெடுத்தான்.

சென்ற வருட செப்டம்பரிலிருந்து அவன் ஒரு ஆறு மாரத்தான்களில் 10கிமீ ஓடியிருக்கிறான். அதற்கு முன்? பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து சற்று தள்ளி நின்றால்கூட, ஓடி அதைப் பிடிக்க சோம்பல்பட்டு அடுத்த பேருந்துக்காக காத்திருப்பவன் அவன். ஏதோ ஒரு நம்பிக்கையில் முதல் முறை 10கிமீயில் பங்கேற்றுவிட்டு, அடுத்த 2 நாட்கள் ’சாய்ந்து சாய்ந்து’ அவன் ஊர்ந்தது ஒரு தனிக்கதை. அடுத்தடுத்த மாரத்தான்களில் பங்கேற்றானே தவிர, ஓடுவதற்கு ஒரு முறையான பயிற்சியோ, தொடர்ச்சியான உடற்பயிற்சியோ செய்தவனில்லை. காரணம். அதேதான். சோம்பல்.

இந்த நிலையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறத் துணிந்தான். பாதி-மாரத்தான். 21கிமீ தூரம். வேகம் இப்போதைக்கு முக்கியமில்லை. பாதி மாரத்தானை பாதியில் நிறுத்திவிடாமல் முழுவதுமாக ஓடி முடிக்க முடியுமா என்று பார்த்திட விழைந்தான். முதலில் தினந்தோறும் ஓட்டப்பயிற்சி. 20 நாட்களுக்கு தினமும் காலையில் ஐந்து கிமீ ஓடினான். (20ம் நாளில் 20x5=100கிமீ தூரத்தில் இருந்தானா என்று கேட்கக்கூடாது!). இதைத்தவிர நாளொன்றுக்கு 10கிமீ மிதிவண்டிப் பயணம். எதிலும் வேகம் கிடையாது. கால் வலிக்காமல், நடுவில் நிற்காமல்/நிறுத்தாமல் ஓட/மிதிக்க முடிகிறதா என்று பார்க்க மட்டுமே செய்தான்.

இப்படியாக ஏதோ செய்து, ‘நான் தயார்’ என்று தனக்குத்தானே அறிவித்துக் கொண்டான். இன்று ஜூலை 7. காலை 5 மணி. ஓடினான். ஓடினான். பெசண்ட் நகர் பீச்சிலிருந்து, மெரினா பீச்சைத் தாண்டி ஓடிக்கொண்டே இருந்தான். 21.1 கிமீ தூரத்தை 2 மணி 50 நிமிடங்களில் கடந்து முடித்தான். இன்னும் சற்று வேகமாக ஓடியிருக்கலாமோ என்று எண்ணினான். பரவாயில்லை. அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் என்றும் சொல்லிக் கொண்டான். இதில் அவன் கற்றுக் கொண்ட பாடங்கள் என்னவென்று ஒரு பட்டியலிட்டான்.

* முதல் 45 நிமிடங்கள் நிறுத்தாமல் / நடக்காமல் ஓடியதே அவனைப் பொருத்தவரை ஒரு சாதனைதான். DRHM தளத்தில் வெளியிட்ட முடிவுகளின்படி முதல் 6கிமீ தூரத்தை 42 நிமிடத்தில் கடந்திருக்கிறான். (கிமீ சராசரி 7 நிமி.). இதனை (நிறுத்தாமல் ஓடுவதை) இன்னும் சற்று நீட்டிக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான்.

* (17வது கிமீ வரை) கால் வலியும் இல்லை; மூச்சு வாங்கவும் இல்லை. ஆனாலும் ஏன் ஓடாமல் அடிக்கடி நடக்க ஆரம்பித்தான்? ஓடு என்று புத்தி சொன்னதை மனது கேட்கவில்லை. ஏன் என்ற காரணம் தேட ஆரம்பித்தான்.

* கூட ஓடுபவர்கள் திடீரென்று நிறுத்தி, நடக்க ஆரம்பித்தால் நமக்கும் அப்படி தோன்றுகிறதோ என்று எண்ணினான். அதில் உண்மையும் உண்டு.
* தொடர்ந்து ஓடி, பின்னர் கால்வலி வந்துவிடுமோ என்று எண்ணியும் ஓட்டத்தை மட்டுப்படுத்தியிருக்கலாம்.
* இதே போல் பல காரணங்கள். அனைத்திற்கும் ஒரே ஒரு மூல காரணம். அதுதான் மனம்.

கால்களை பழக்கப்படுத்துவதுடன், மனதையும் பழக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அது எப்படி செய்வது? ஆராய்ச்சிதான் செய்ய வேண்டும்.

அதுவரை செய்யவேண்டியவை என்ன? அடுத்த ஓட்டத்திற்கு இன்னும் 40+ நாட்கள் உள்ளன.

* தினமும் ஓடும் ஓட்டத்தை 5கிமீ’யிலிருந்து அதிகப்படுத்த வேண்டும்.
* உடற்பயிற்சி என்னென்ன செய்யலாம் என்ற ஆராய்ச்சி + அவற்றைச் செய்தல்
* உணவுப் பழக்கவழக்கங்கள் பற்றி ஆராய்ச்சி + அவற்றைப் பின்பற்றுதல்

அதன் பிறகு? கடவுள் விட்ட வழி.

இதுவரை + இனிமேலும் அவன் ஓடுவதற்கு ஊக்கமளித்து வரும் நண்பர்கள் குழுவிற்கும், அந்தக் குழுவின் தலைவராகிய @JMR_CHNக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு இந்தக் கட்டுரையை முடிக்கிறான்.

நன்றி. வணக்கம்.

***

Read more...

Friday, March 29, 2013

@விவாஜி, எங்க வீட்டுக்கு வராதீங்க!



முதல் மேட்டர் அமெரிக்காவில் நடந்தது.

தண்ணீர் லாரியிலிருந்து கனெக்‌ஷன் மாறிப் போய் வடிவேலுவின் வாயிலிருந்தும் அங்கிருந்தும் தண்ணீர் வந்ததுபோல், அமெரிக்காவிலும் எங்க வீட்டில் கனெக்‌ஷன் மாறிப்போய் கேபிள் டிவி ஒளிபரப்பு வந்துகொண்டிருந்தது. நாங்களும் மாதா மாதம் $79.99 கட்டாமல் சுமார் 4-1/2 வருடங்கள் அதை ஓசியில் பார்த்து வந்தோம். அப்போ வந்தாரு பாருங்க எங்க வீட்டுக்கு, இந்த @விவாஜி. என்ன பண்ணாரோ தெரியாது, அடுத்த நாளே Comcastலிருந்து ஆள் வந்து, நீங்க ரொம்ப நாளா பணமே கட்டாமே டிவி பாக்குறீங்க, இனிமே அப்படி முடியாதுன்னு சொல்லிட்டு கட் பண்ணிட்டுப் போயிட்டாரு. அப்படி பணம் கட்டி, டிவி பார்க்கவேண்டிய அவசியமேயில்லைன்னு நாங்களும் சொல்லிட்டு, ஓசியில் ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் யூட்யூப்க்கு மாறிட்டோம்.

இந்த மேட்டரை நினைவில் வைச்சிக்கோங்க. அடுத்தது இந்தியாவில்.

இந்தியா வந்த புதிதில் சரியான வெயில் காலம். ஏசி, மின்விசிறி எல்லாம் பயன்படுத்த வேண்டியதாப் போச்சு. ஒரு வருஷம் கழிச்சி இப்பதான் எவ்வளவு வெயில் அடிச்சாலும், ஒரு கன்னத்தில் அடிச்சா, இந்தான்னு மறு கன்னத்தை காட்டுற அளவுக்கு பழகிப் போச்சு. அப்போ NRIதானே. அதனால்தான் வெயில் தாங்கமுடியல. அடுத்த மாசம் மின்கட்டணம் வந்தது. ரூ.50 மட்டுமே. சரி, புதுசா இந்தியா வந்ததுக்காக எனது மன தைரியத்தைப் பாராட்டி தமிழக அரசு, சோப்பு டப்பா தராமல் இப்படி மின் கட்டணத்துலே சலுகை தர்றாங்கன்னு நினைச்சி விட்டுட்டோம்.

மறுபடி அடுத்த தடவை. இப்பவும் அதே ரூ.50க்கு பில். அதெப்படி இவ்வளவு பயன்படுத்தறோம். ஆனா கட்டணமே வசூலிக்க மாட்றாங்கன்னு எங்களுக்கு செம கோபம். ஆனாலும், அரசு செய்தா எதுவுமே சரியாதான் இருக்கும்னு எதுவுமே பேசாமே கட்டிட்டோம். ஆனா, எங்க அபார்ட்மெண்ட் நண்பர்கள் சும்மா இருக்க மாட்டாங்களே. அவங்களுக்கு பயங்கரக் கடுப்பு. எங்களுக்காக அவங்களே புகார் செஞ்சாங்க. ‘எங்களுக்கு மட்டும் ரூ.1000க்கு மேல் போகுது. இவங்களுக்கு வெறும் ரூ.50தானா. உடனே சரிசெய்யவும்’. ஆனா, அது அரசு இயந்திரமாச்சே. கொஞ்சம் மெதுவாதான் செயல்படும்.

அடுத்த முறை மீட்டர் கணக்கிடவந்த நபரிடம் எங்க சார்பா மொத்த அபார்ட்மெண்ட் ஆட்களும் பேசினாங்க. (நாங்க அமைதியா பின்னாடி நின்றிருந்தோம்!). அவரும், நாளை காலை 11 மணிக்கு ஆபீஸ் வாங்க, சரி செய்துடுவோம்னு சொல்லிட்டுப் போயிட்டாரு.

அடுத்த நாள். எங்களைவிட எங்க நண்பர்கள்தான் பயங்கர பரபரப்பா இருந்தாங்க. இரவு 1 மணியிலிருந்து ஒரு மணிக்கொருதடவை ஒருத்தர் அலாரம் வைச்சிண்டு, எங்கே 11 மணி ஆயிடப்போகுதோ, எங்கே நாங்க மின் அலுவலகத்திற்கு போகாமே இருந்துடுவோமோன்னு பாத்துக்கிட்டே இருந்தாங்க. ஒரு சில குழந்தைகளும் வந்து, ‘அங்கிள், டைம் என்ன ஆச்சு?, 11 மணி ஆச்சான்னு அப்பா கேட்டு வரச்சொன்னாரு’ன்னு நடமாடும் அலாரமா மாறினாங்க.

மொத்த கட்டிடமே தெருவுக்கு வந்து, வெற்றியோடு வாருங்கள் என்று எங்களை வீரத்திலகமிட்டு அனுப்பி வெச்சாங்க. நாங்க திரும்பி வர்றவரைக்கும் யாரும் குளிக்காமே, சாப்பிடாமே, ஒரு நல்ல செய்திக்காக காத்திருந்தாங்க.

ஆனா EB ஆபீஸ்லே என்ன நடந்துச்சு? மீட்டர் கருவியை மாத்தணும். அதுவரைக்கும் உங்க வீட்டுப் பயன்பாடு இவ்வளவு (x) இருப்பதால், நீங்க இந்த கட்டணத்தை (y) கட்டிட்டு வாங்கன்னு ஒரு கட்டணத்தை சொன்னாங்க. வழக்கம்போல இந்த கட்டணம் எங்களுக்கு ஓகே. ஆனா, எங்க நண்பர்களுக்கு - ம்ஹூம். அவங்க மறுபடி ஆபரேஷன் புகாரை ஆரம்பிச்சாங்க. ஒவ்வொரு தடவையும் மின் அளவை குறிக்க வரும் நபரிடம் புகார் சொல்ல ஆரம்பிச்சாங்க.

ஆனா... ஆனா.. இன்றுவரைக்கும் அந்த பிரச்னைக்கு தீர்வே வரலை.

இந்த அருமையான சந்தர்ப்பத்தில், நண்பர் @விவாஜி நம்ம வீட்டுக்கு வந்து, அதனால் நம் மின்வாரியமும் வீறுகொண்டு எழுந்து எங்க பிரச்னையை தீர்த்துட்டாங்கன்னா, என்னை எங்க வீட்டுலே தீர்த்துடுவாங்க. ஆகவே, <தலைப்பு>.

****


Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP