Tuesday, August 27, 2013

இ பிநா வா ச!

2009ம் ஆண்டு. அமெரிக்கா. கடுங்குளிர்கால இரவு 2 மணி. புரண்டு படுக்கும்போது பார்த்தால், சஹானா (அப்போது வயது 5) அவருடைய படுக்கையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். இந்தப் பக்கம் பார்த்தால், தங்க்ஸ் காணோம். வெளியே ஏதோ சத்தம் கேட்க எழுந்து போய் பார்த்தால், ஹாலில் தங்க்ஸ் அழுதுகொண்டிருந்தார்.

என்னம்மா ஆச்சு? இந்தியாவிலிருந்து ஏதாவது தொலைப்பேசி வந்துச்சா? உடம்பு சரியில்லையா? எதுக்கு இப்படி அழுதுக்கிட்டிருக்கேன்னா - பயங்கர வயிற்றுவலின்னாங்க. ஒரு மணி நேரமா பொறுத்துப் பார்த்தும் அடங்கவில்லையாம். சரி, உடனே மருத்துவமனை போய்விடலாமென்று சொன்னேன். வெளியே செம குளிர். பாப்பா வேறே தூங்கிக்கிட்டிருக்கா. இப்படியே காலை வரை சமாளிச்சிடறேன். காலையில் பார்த்துக்கலாம்ன்றாங்க.

இது வேலைக்காகாது. பக்கத்து வீட்டில் இருக்கிற நண்பரை எழுப்பறேன். சஹானாவை தூக்கி அவங்க வீட்டில் படுக்கவெச்சிட்டு, நாம போவோம். உடனே போய் பார்த்துடுவோம், பிரச்னை பெரிசா ஆகிடப்போகுது என்றேன். சரி, நண்பரை எழுப்பும்முன் முதலில் சஹானாவை எழுப்பி சொல்லிடுவோம். அப்புறம் அவ அழுதான்னா கஷ்டம் என்றார். ஓகே.

கண்ணம்மா, செல்லக்குட்டி, எழுந்திரும்மா. அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். வயிறு பயங்கரமா வலிக்குதாம். நீ பக்கத்துலே *** வீட்டுலே படுத்துக்க. நாங்க மருத்துவமனை போயிட்டு வரும்போது உன்னை கூட்டிட்டு வந்துடறோம்.

அன்று வெள்ளியிரவு. அடுத்த நாள் பள்ளி விடுமுறை. அதனால், 8 மணிக்கு முன்னால் என்னை எழுப்பாதே என்று சொல்லிப் படுத்திருந்த சஹானா, சட்டென்று எழுந்து அமர்ந்தார். அம்மாக்கு உடம்பு சரியில்லையா? நானும் வர்றேன், மருத்துவமனைக்கு போகலாம் என்று படபடவென்று எழுந்து தன் ஜெர்கின், ஷூ என அனைத்தையும் போட்டுக் கொள்ள ஆரம்பித்தார். அவரது வேகத்திற்கு நாங்களும் ஈடுகொடுத்து கிளம்பி, குளிரில் வண்டியெடுத்து மருத்துவமனைக்கு வந்து சேரும்போது சுமார் 2.45am.

2.45 முதல் மருத்துவமனையை விட்டு வெளியே வரும் 5 மணி வரை ஒரு நிமிடம் கூட தூங்காமல், அம்மாவுடனேயே இருந்து, கொஞ்ச நேரம் வெளியே இருங்கள் என மருத்துவர் சொன்ன காரணத்தால், வெளியில் வந்து தொலைக்காட்சி பார்க்க ஆரம்பித்து, அவ்வப்போது உள்ளேயும் எட்டிப் பார்த்து.. அப்பப்பா.. அன்று நாங்கள் கண்டது ஒரு குழந்தையே அல்ல என்று நினைக்கும் அளவிற்கு எங்களை நெகிழ்ச்சி அடையச் செய்தார் சஹானா.

ஒரு வழியாக 5 மணிக்கு அனைத்தும் சரியாகி, வெளியில் வந்து, வண்டியில் திரும்பிக் கொண்டிருக்கும்போது சொன்னதைக் கேட்டு இன்றுவரை பெருமைபட்டுக் கொண்டிருக்கிறோம். "இப்போ நடந்தது எதையும் நாளை காலை இந்தியாவுக்குப் பேசும்போது சொல்ல வேண்டாம். என்னைக் கேட்டா நான் லேட்டாதான் தூங்கினேன் அதனால் லேட்டா எழுந்திருப்பேன்னு சொல்லிடுங்க. அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னா, பாட்டி அழுதுடுவாங்க".

5.30 மணி. வீட்டுக்கு வந்தாச்சு. இருவரையும் தூங்க வைச்சாச்சு. நடந்ததை நினைத்து எனக்கு தூக்கம் போச்சு. ஒரு நொடிகூட சிணுங்காமல், தூக்கக் கலக்கத்துடன் இருந்தாலும் தூங்காமல், அம்மாவுக்காக குளிரில் வெளியில் வந்து துணையிருந்த குழந்தையை நினைத்து அன்று இறைவனிடம் வேண்டியதையே இன்றும் - அவரது பிறந்த நாளில் - வேண்டுகிறேன்.

எனக்கு வேணும்னா, வருடத்திற்கு இரு ஆண்டுகளாக வயதைக் கூட்டிக் கொண்டே போ. சஹானாவின் வயதைக் கூட்ட அவ்வளவு அவசரப்படாதே.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சஹானா... Aug. 27th...

2 comments:

அமுதா கிருஷ்ணா August 27, 2013 at 2:16 AM  

சூப்பர் பொண்ணு..வாழ்த்துக்கள் சஹானா...

Raju August 27, 2013 at 2:31 AM  

வாவ்...பிறந்தநாள் வாழ்த்துகள் சஹானா! :-)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP