Wednesday, August 29, 2012

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்


சென்ற மாதம் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளானபோது ( :-(((( ) அந்த வண்டியில் பயணம் செய்த நாட்கள் நினைவில் வந்தன. அப்போ எழுத ஆரம்பிச்சது இந்த பதிவு, இன்னிக்குதான் முடிஞ்சது. ஒரு பத்து roundtrip அடித்திருப்பேன் அதில். அந்த நினைவுகள் bullet pointsஆக இங்கே இந்த பதிவில்.

** மத்தியப் பிரதேசத்தில் பல மலைக்குகைகள் [tunnels] வரும். அவை ஒவ்வொன்றையும் எவ்வளவு நொடிகளில் வண்டி கடக்கிறது என்ற கணக்கெடுப்பு எடுப்பேன். ஆனால் ஒரு முறைகூட முத்த சத்தம் செய்துவிட்டு, பக்கத்தில் இருப்பவரை அறைந்ததில்லை.

** மறுநாள் மதியம் சம்பல் பள்ளத்தாக்கை கடக்கும்போது, கொள்ளைக்காரங்க வருவாங்க, கல் எடுத்து வண்டியில் வீசுவாங்கன்னு ஒரு வதந்தி கேள்விப்பட்டிருந்ததால், பயந்துகொண்டே பயணம் செய்திருக்கிறேன்.

** பயந்துகொண்டே சீட்டு விளையாடும் மக்கள், அதே பெட்டியில் ராணுவத்தினர் யாராவது பயணம் செய்தால், பயமே இல்லாமல் (அவர்களையும் சேர்த்துக்கொண்டு!) தைரியமாக சீட்டு விளையாடுவார்கள். நான் வெறும் வேடிக்கை.

** சரியான கோடை காலத்தில், இரண்டாம் வகுப்பில் போகும்போது வெயிலின் தாக்கம் தெரியாமலிருக்க (என்) தலையில் தண்ணீர் ஊற்றிய காலமும் உண்டு; 2ACயில் செம குளிரால் போர்வையால் போர்த்தியவாறே உலாத்திய காலமும் உண்டு.

** பயணச்சீட்டை இணைத்தால்தான் ஆபீஸில் reimbursement கிடைக்கும் என்பது தெரியாமல், அதை நிலையத்துக்கு வெளியில் நிற்கும் டிக்கெட் செக்கரிடம் கொடுத்துவிட்டு நிதித்துறையில் கெஞ்சிக் கிடந்தேன் சில நாட்கள்.

** வண்டியில் வருவதையெல்லாம் எனக்கும் வாங்கிக் கொடுத்து பேசிக்கொண்டே வரும் மாந்தர்களையும்; அனைத்தையும் மூடிமூடி சாப்பிட்டு எனக்கு வெறும் சிரிப்பை மட்டுமே வழங்கிய நண்பர்களையும் பார்த்த நாட்கள் அவை.

** (சென்னைக்கு வரும்போது) போபால், ஜான்சி போன்ற நிலையங்களில் செய்தித்தாள் விற்பவர்கள், தங்கள் விற்பனையை அதிகரிக்க - ’சென்னையில் குண்டுவெடிப்பு. 20 பேர் பலி’ என்று கூவிக்கொண்டே விற்பார்கள். இது பொய்த் தகவல் என்று அறியாதவர்கள் அந்த செய்தித்தாளை விலை கொடுத்து வாங்குவார்கள். அப்படியும் அந்த செய்தித்தாளாவது சரியாக இருக்குமா என்றால், இருக்காது. உள்ளே இருக்கும் பக்கங்களெல்லாம் பழைய (முந்தைய தின) தாள்களாக இருக்கும். ஓரிரு முறை அனுபவப்பட்ட பிறகே எனக்கு புரிந்தது இந்த விஷயம்.

** நாக்பூரில் ஆரஞ்சு வாங்கிட்டு வான்னு ஒவ்வொரு முறையும் வீட்டில் சொல்வதால் ஒரு சின்ன கூடை வாங்கி வருவேன். ஒவ்வொருமுறையும் அதில் அஞ்சு ஆறுதான் நல்லா இருக்கும்.

சென்னை - தில்லி இடையே இரண்டாம் வகுப்பில் போக ஆரம்பித்து, 3AC, 2AC, விமானம் என்று படிப்படியாக முன்னேறினாலும், ஆபீஸ் பிரச்னையோ, அடிக்கடி, ‘என்னங்க, என்னங்க’ பிரச்னையோ இல்லாமல் நாள் முழுக்க தூங்கியவாறு, வேளாவேளைக்கு வண்டியில் கொண்டு வருவதை சாப்பிட்டு, மறுநாள் ஹாயாக ஊர் போய் இறங்குவதை மறுபடி ஒரு முறையாவது செய்யணும். அட, ஆபீஸ் விஷயமா போகும்போது குடும்பத்தை கூட்டிப் போகமுடியாதுல்லா?

***

 

Read more...

Thursday, August 23, 2012

எப்படி இருக்கீங்க? எப்படி இருந்துச்சு உங்க நாளு?


என்னோட நாள் எப்படி இருக்கும்னு யாராலும் சொல்லமுடியாது. ஒரு நாள் பயங்கர பிஸியா இருக்கும். சில நாட்கள் ஒரு (வாடிக்கையாளர்) அழைப்பும் இருக்காது. அட,  ஒரே நாள்லேயே காலையில் பிஸியா இருப்பேன். மாலையில் ஒண்ணுமே இருக்காது. ஆனா, எனக்கு இந்த வேலை சரியா பிடிச்சிருக்கு. ச்சின்ன வயசிலிருந்தே மார்க்கெடிங்தான் எனக்கு பிடிக்கும். அதே போல் இந்த வேலைக்கு வந்துட்டேன்.

மேற்கண்ட பாராவை படிச்சிட்டீங்களா? இது யார் சொன்னது? சொல்றேன். தற்போது தங்கியிருக்கிற Guesthouseலே கூட இருக்கற ஒருவரை நேற்று மாலை ஒரே ஒரு கேள்வி கேட்டேன் - எப்படி இருந்துச்சு உங்க நாள்?. அவ்வளவுதான். அதுக்கு அந்த மனுசர் படபடவென பொரிஞ்சி தள்ளியதுதான் அது. டேய், நான் என்ன கேட்டேன்? உன் நாள் எப்படி இருந்துச்சு? அதுக்கு என்ன சொல்லணும்? நல்லா இருந்துச்சு, நல்லா இல்லே - அவ்வளவுதானே? ஏன் நீ தேவையில்லாமே பேசிட்டே போறே? - இதெல்லாம் நான் மனசுக்குள்ளே கேட்டது.

இதை விடுங்க. தலைப்பில் இருக்கும் முதல் கேள்வியைப் பாருங்க. “எப்படி இருக்கீங்க?”. இதுக்கு மக்கள் சொல்லும் பதில்கள் இருக்கே.

காலை வேளையில் பல வேலைகளை செய்வதற்காக சுறுசுறுப்பாக ஆபீஸ் வந்து ஒருவரைப் பார்த்து இந்த கேள்வியைக் கேட்டா, அதுக்கு அவர் சொல்லும் பதில் - "ஏதோ போகுது. ஒண்ணும் சரியில்லே". அவ்வளவுதான். அவரு மூட்அவுட்டாக இருப்பது மட்டுமல்லாமல், நம்மையும் switchoff செய்துட்டு போய்விடுவார்.

அடுத்து இன்னொருத்தர். அவர் ஏதோ ஒரு யோசனையில் வந்திருப்பார். கேள்வி கேட்டவுடன், “அட அதை விடுப்பா. இந்த பிரச்னைக்கு ஒரு பதில் சொல்லு”ன்னு ஏதோ ஒரு விஷயத்தை தேவையில்லாமல் நம் தலையில் ஏற்றிவிட்டு போய்விடுவார். எனக்குத் தேவையா இது?

அடுத்தவர். "Fine". இதுதான் பதில். அஷ்டே. all silent. ஏன்யா, நீ என்னை திருப்பி கேட்கமாட்டியா?. சரி விடு. நாளைக்கு பார்க்கலாம்.

இனி அடுத்து வருபவர்தான் நிஜமாகவே டாப். இது ஐந்து வருடம் நான் வேலை பார்த்த என் அமெரிக்க பாஸ். காலை வந்தவுடன், ”குட்மார்னிங் ஸ்டீவ்,
எப்படியிருக்கீங்க”ன்னு கேட்டவுடன், சிரித்தபடியே பலமாக “Wonderful. Excellent. Cannot complain for such an awesome day" அப்படி இப்படியென்று உற்சாகத்துடன்
அவர் சொல்லும் பதில் இருக்கிறதே, தூக்கக் கலக்கத்துடன் ஆபீஸ் சென்று, அடுத்த வாரயிறுதி எப்போ வரும்னு சோம்பேறித்தனமாக காலண்டரை பார்க்கும் எனக்கு (மற்றும் பலருக்கு) செமையா ஊக்கத்தைக் கொடுக்கும். அந்த முழு நாள் இல்லேன்னாலும், கொஞ்ச நேரத்துக்காவது அவரது உற்சாகம் என்னிடம் வந்திருக்கும். வேலை பரபரவென நகரும். இதெல்லாம் அடுத்து ஒரு தேசியை பார்க்கிற வரைதான். அப்புறம் புஸ்ஸ்ஸ்....

அதற்குப் பிறகு, என்னை யார் கேட்டாலும் நானும், ”சூப்பர். அருமையா இருக்கேன். ஒரு பிரச்னையும் இல்லே”ன்னு உற்சாகமா சொல்ல ஆரம்பிச்சேன்.

அப்புறம், இதே கேள்வியை காலையில் வீட்டில் தூங்கி எழுந்ததும் சஹானாவிடம் கேட்க ஆரம்பித்தேன். “செல்லம். குட் மார்னிங். ஹௌ ஆர் யூ?”. நான் இவ்ளோ நேரம் உன்கூடதானேப்பா தூங்கிக்கிட்டிருந்தேன்னு ஆரம்பத்தில் சொன்னவங்க, இப்போல்லாம் ‘சூப்பர், அப்பா’ என்று உற்சாகமாக எழுந்து வரவும் ஆரம்பித்திருக்கிறார்.

அவ்ளோதாம்பா பதிவு. இப்போ சொல்லுங்க. நீங்க எப்படி இருக்கீங்க?

***

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP